10.14.2007

காணாமற் போகும் அழகன்கள்


“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”
“ஆந்திர அழகிகள் பொலிசாரிடம் சிக்கினர்”
“கைது செய்யப்பட்ட அழகிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்”

வ்வாறான தலைப்புகளைத் தாங்கிவராத பத்திரிகைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. மனிதருள் இருக்கும் விலங்கினைத்(மனிதனும் விலங்குதான் என்ற விவாதத்தை சற்றைக்கு மறந்து)திருப்திசெய்வதே சில செய்தி ஊடகங்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. யன்னல் வழியாக அடுத்த வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் சுவாரசியத்திற்குச் சற்றும் குறையாத ஆர்வத்துடன் வாசகர்களும் அந்தச் செய்திகளை வாசிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களது விழிகள் பரபரப்புடன் தரிப்பது, இச்சமூகத்தில் விலக்கப்பட்ட கனியாகிய பாலியல் செய்திகளிலேயே. மேற்கண்ட தலைப்புகளில் ‘இனங்காணப்பட்ட’ அழகிகளுடன் சுகித்திருந்த அழகன்கள் எங்கே என்பது இப்போது பரவலாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. அண்மையில் ஆழியூரானின் பதிவிலும் செல்வநாயகியின் பதிவிலும் இந்தப் பாரபட்சம் குறித்துப் பேசப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அழகன்களை விடுதியறைகளின் சுவர்கள் உள்ளிழுத்து மறைத்துவிட்டனவா? அல்லது ஆண்துணையற்று பாலியல் தொழில் நடத்தக்கூடிய அளவுக்கு இந்த ‘அழகிகள்’கைதேர்ந்த சாகசக்காரிகளாகிவிட்டார்களா?
விடை நமக்குத் தெரிந்ததே! விபச்சாரம் என்று ஊடகங்களால் சுட்டப்படும் செய்திகளின் கதாநாயகர்களான ஆண்கள் அவ்விடங்களிலிருந்து எங்ஙனமோ காணாமற்போய்விடுகிறார்கள். பணத்தையோ அதிகாரத்தையோ அன்றேல் ஆண் என்ற பிறப்பு வழி வந்த தகுதியையோ பயன்படுத்தி அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். ஆக, கூடா ஒழுக்கமாக இச்சமூகத்தினால் கற்பிக்கப்பட்டிருக்கிற ‘கூடும்’ பாவத்தின் தண்டனை முழுவதும் பெண்களையே சென்றடைகிறது. சமூகத்தின் எச்சிலையும், தவிர்க்க முடியாதபோது குழந்தையையும் அவர்களே சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ளைய தலைமுறையினரில் பலருக்கு குடும்பம் என்ற அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவருவதற்கு அது கொண்டிருக்கும் பாரபட்சமான உரிமைப்பகிர்தலும் ஒரு காரணமாகும். குடும்பம்,அரசியல்,இலக்கியம் என எங்கெங்கிலும் பரந்திருக்கும் ஆணாதிக்கம், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பங்களிலும் தனது கோரமுகத்தைக் காட்டி ஆண்களைப் புனிதர்களாகப் பிரகடனப்படுத்த முயல்வது அருவருப்பூட்டுகிறது. உதாரணமாக, பெண்கவிஞர்களுள் சிலர் ‘முலை’என்றும் ‘யோனி’என்றும் கவிதைகளுள் வலிந்து இடம்பெறச் செய்வதற்கு கவனஈர்ப்பே முக்கிய காரணம் என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. அதே ‘முலை’யும் ‘யோனி’யும் ஆண் கவிஞர்களுடைய பேனா வழியாக எழுதப்படும்போது புனிதசொற்களாகிவிடுவது நகைப்பிற்குரியதே. பெண்ணிலிருந்து ஆணை வந்தடைவதற்கு இடையில் ஏதாவது குடமுழுக்கு,கும்பாபிசேகம் நடத்தி அந்தச் சொற்களைக் கழுவிவிட்டார்களா தெரியவில்லை.
நான் வசிக்கும் திருவான்மியூர் கடற்கரையோரத்திற்குப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், மதியமொன்றில் அந்த இடத்திலிருந்து பலத்த ஆரவாரம் கேட்டது. எட்டிப் பார்த்தபோது நிலத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு பெண்ணை சில ஆண்களும் பெண்களும் சேர்ந்து காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தப் பெண் கையெடுத்துக் கும்பிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. எங்கள் வீட்டில் வம்பு அறிவதில் ஆர்வமும் சம்பவம் நடக்கும் இடங்களுக்குத் துணிந்து சென்று துப்பறிவதில் வல்லவருமான ஒரு 'வீரர்' இருக்கிறார். அவர் மிதிவண்டியில் விரைந்து போய் அறிந்து வந்து சொன்ன செய்தி இதுதான்.

"அது ஒரு கூடாத பொம்பிளையாம்"

அதை அவன் மிகச் சாதாரணமாக 'அவளுக்கு வேண்டியதே'என்ற தோரணையில் சொன்னான். அவனளவில் அது முடிந்துவிட்டது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பிள்ளையின் மனதில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளே என்ற கருத்து எவ்விதம் ஆழமாகவும் உறுதியாகவும் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேதனை கலந்த வியப்பு எழுந்தது.

லையைக் குனிந்துகொண்டு, துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பத்திரிகைகளில் காண்பிக்கப்படும் பெண்களின் புகைப்படங்களைப் பார்க்குந்தோறும் மனக்கொதிப்பே எஞ்சுகிறது. அவர்களைப் பார்த்தால் சுட்டெரிக்கும் காமத்தீயைத் தணிக்க விடுதிகளுக்கு வந்தவர்களாகத் தெரியவில்லை. உடலை மூலதனமாக்கும்படியான நிலைக்குத் தள்ளி வாழ்க்கை அவர்களைத் தண்டித்துவிட்டது. அவ்வளவே! மனிதனின் மிருகவேட்கையை கட்டுக்குள் வைத்திருக்கவே கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் திருமணத்தின் மூலமான கலவியில் வேண்டுமானால் பெண்ணுக்குச் சுகம் கிடைக்கலாம். (அதுவும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை) ஆனால், வாதையும் வக்கிரம் பொருந்தியதும் கொடுத்த பணத்திற்குக் கூடியளவு கறந்துவிட முனைவதனால் வலி தருவதுமான கொடுமையை அவர்கள் வயிற்றுக்காகச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாவற்றையும் தாங்கிக்கொண்டு தம்முடலை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதற்கான காரணத்தை ஆராயப்புகுந்தால், அவர்கள் கூறும் கதைகள் மனப்பிறழ்வில் கொண்டுவிடும். ‘வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துவந்து இங்கே தள்ளிவிட்டார்கள்…’எனத் தொடங்கி ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். எந்த உயிரும் தான் வாழும் சமூகம் தன்னை மதிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கும். புழுவென இகழும் பார்வைகளை எதிர்கொள்ளும் எந்தவொருத்தியும் ‘நான் ஒரு விபச்சாரியாக்கும்-இன்னிக்கு நாலு பேரோடு படுத்தேன்’என்று பீற்றிக்கொள்ள மாட்டாள்.

ண்டுபிடிக்கப்படாதவரை சுத்தப்பூனைகளாயிருக்கும் நமது ‘புனித’சமூகம் அத்தகையோரை எப்படி நடத்துகிறது? ‘வேசிமகன்’என்ற வசைச்சொல் நம்முள் பிரபலமானதும் விளிக்கப்படுபவரின் உக்கிரத்தைத் தூண்டக்கூடியதுமாக இருக்கிறது. (ஏற்கெனவே பேசப்பட்டதுதான்) தெருவோரம் ‘வாடிக்கை’பிடிக்க அலையும் பெண்களின் மீது கண்களால் காறியுமிழ்ந்துவிட்டுப் போகிறவர்கள்தான் நம்மில் அநேகர். திறந்த வெளிகளில் கௌரவம் பார்த்துக் காறியுமிழ்ந்து போகும் அதே ஆண்களுக்கு, பூட்டிய அறைகளுக்குள் நிகழ்த்தும் சுயமைதுனத்தின்போது அதே வேசிகளின் ஆடையகற்றப்பட்ட சித்திரங்கள் வேண்டியிருக்கிறது என்பது பேசத்தகாத தேவரகசியம்.
வேசிகள் என்றொரு சமூகக்குழு பிறப்பிலிருந்து உருவாவதில்லை. பாலியல் தொழிலாளர்களை சமூகம்தான் உருவாக்குகிறது. சமூகம் என்பது நானும் நீங்களும் நீங்கலான ஒன்றல்ல. தன்மீது ஒருவனைப் படரவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவள் ஒரு குழந்தையின் தாயாக இருக்கலாம். அந்தக் குழந்தையின் வயிறு, தனது தாயின் வயிற்றுக்குக் கீழிருக்கும் உறுப்பினை ஒருவன் நிறைப்பதன் வழியாகத்தான் நிறையுமென்றால் அது எத்தகைய குரூரம்!

ரு உயிரின் இருண்ட பக்கங்கள் எங்ஙனம் உருவாகின என்பதைக் குறித்து நம்மில் யாருக்கும் கவலையில்லை. நம்மில் பெரும்பாலானோர் பொதுப்புத்தியின் வழி இயங்குபவர்களே! சுயமாகச் சிந்திக்க நேரமற்ற இவ்வியந்திர உலகில் நமது மூளையில் கருத்துருவாக்கம் செய்பவை ஊடகங்களே. விபச்சாரிகள் சாக்கடைப் புழுக்களிலிருந்து உருவானவர்கள் எனக் கற்பித்திருப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியம். அழகிகளையும் அவர்களை ‘நெறிப்படுத்திய’தரகர்களையும் கனகாரியமாகப் புகைப்படமெடுத்துப் போடுபவர்களது கண்களில் பாவமெனப்படுவதில் பங்குகொண்ட ஆண்கள் தென்படுவதேயில்லையா…? திரைப்படங்களும் தம் பங்கிற்குத் தாலியறுக்கின்றன. கைதாகும் பாலியல் தொழிலாளிகள் கலகலவெனச் சிரித்தபடி காவல் வண்டிகளில் ஏறுபவர்களாகவும் தமக்கு அருகிலிருக்கும் பொலிசாரை வம்பிற்கு இழுப்பவர்களாகவும் கைதானது தமது வாழ்வின் உன்னத தருணங்களில் ஒன்றெனக் கொண்டாடுபவர்களாகவுமே திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள்.

பான்பராக் விற்பவனிலிருந்து பங்குவணிகம் வரை சக உயிரைச் சுரண்டிப் பிழைக்கும் பொதுவிதியின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது இவ்வுலகம். இட ஒதுக்கீடு என்கிறார்கள்@ இல்லத்தில் வேலைப் பங்கீடு புழக்கத்தில் வந்துவிட்டது என்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் இல்லவே இல்லையென்றுகூடச் சாதிக்கிறார்கள் சிலர். இருளடர்ந்த தெருவொன்றில் இரவு ஒன்பது மணிக்குப் பிறகு நடந்துசெல்லும் ஒரு பெண், எந்தக் கணமும் ஓடத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள நியதி. இத்தகு நீதிமிகு சமூகத்தில் அழகிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அழகன்கள் காணாமற் போவதும் வியப்பளிக்கும் ஒன்றல்ல.

சில குறிப்புகள்:-

1.விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்ற மசோதா விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

2.ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் விருப்பப்பட்டு ஒன்றாகத் தங்கியிருப்பது விபச்சாரமாகாது என்றொரு தீர்ப்பு அண்மையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொலிசார் கலாசார காவலர்களாக செயற்படலாகாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாக அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

3. இந்தக் கட்டுரை ‘தங்கம்’ என்ற சஞ்சிகையில் வெளியானது. இணையத்தில் தங்கத்தை வாசிக்க விரும்புவோர் இங்கு செல்லவும்.










22 comments:

Anonymous said...

நட்புடன் நதி,

தங்களுடைய கட்டுரை வாசிக்கப்பெற்றேன். அதன் புலப்பாட்டுக் கோணம் நன்று. ஆணழகன்கள் எப்போதும் இம்மாதிரியான சமயங்களில் தப்பிவிடுவது ஆச்சரியப்படத்தக்கதல்ல. நீங்கள் கூறி இருக்கிறபடி ஆண் சமூகம் ஆணாதிக்கம் ஆகியன காரணங்கள். நீங்கள் மேற்சொன்ன கூற்றுகளில் சிலவற்றைக் குறித்து எனது கருத்துகளை பகிரலாம் என எண்ணுகிறேன். நீங்கள் கூறிய பெண்கள் அனைவருமே ஏமாற்றப்பட்டவர்கள், ஏமாறுபவர்கள் என்றால், இதில் அவர்களின் பங்கு எதுவும் இருந்ததில்லையா? தாங்கள் ஏமாந்த நிலைக்கு ஒரு விதத்தில் அவர்களும் பொறுப்பாளிகள் தானே?


நீங்கள் கூறியவாறு சமூகத்தின் கண்ணாடிகளாக தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் பெரும்பாலான ஊடகங்கள் இவ்வகையான பொதுப்படுத்தல்களில் தங்களின் இழிந்த மனப்போக்கை காட்டத்தவறுவதே இல்லை. ஆனால் திரைப்படங்களில் என்று நீங்க பொத்தாம் பொதுவாக கூறியதை நான் மறுக்கிறேன். உங்களுக்கு "மகாநதி" என்ற படத்தின் குறுந்தகடு கிடைக்கப்பெற்றால் கண்டிப்பாக பார்க்கத்தவறாதீர்கள். அதில் நாயகன் தன்னுடைய மகளை வேசியின் இல்லத்தில் இருந்து மீட்கும் காட்சியில், அவர்களை மனிதாபிமானத்தின் உருவங்களாக, தாய்மையின் சித்திரங்களாக காட்டியிருந்த விதம் அந்த படைப்பாளிக்கான பொறுப்பையும் சமூகக்கடமையையும் வெளிக்காட்டியது. நன்றி.

தமிழ்நதி said...

பாம்பாட்டிச்சித்தன்!முதற்தடவையாக எனது வலைப்பூவிற்கு வந்து கருத்துக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

இந்தக் கட்டுரையின் சாரம், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் (இந்த வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடில்லை) இருவருக்குமே அதில் சமபங்குண்டு. ஆனால், ஆண்கள் தப்பித்துவிடுவதும் பெண்கள் தண்டனைக்காளாவதுமே வழக்கமாக இருக்கிறது. அந்தப் பாரபட்சத்தின் மீதுதான் கேள்வி எழுப்புகிறேன். பெண்களும் பொறுப்பாளிகள்தான். ஆனால், 'கெளரவமான' இந்த சமுதாயத்தில் உடலை விற்றுப் பிழைப்பதற்கு அவர்களைத் தள்ளியது எது என்பது கேள்வியாகிறது. சகலதையும் நிர்ணயிக்கும் பிதாமகர்கள் இவ்விசயத்தில் எங்கு போயினர்? 'இந்தப் பாவத்தில் எனக்குச் சம்பந்தமில்லை' என்று கைகழுவிவிடுவதைத்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

மேலும், விபச்சாரிகள் 'மனிதாபிமானத்தின் உருவங்களாக, தாய்மையின் சித்திரங்களாக' சித்தரிக்கப்பட வேண்டியதில்லை. சந்தர்ப்பத்தில் வீழ்ந்துவிட்ட சகமனிதர்களாகப் பார்த்தால் போதும். பாருங்கள். நீங்களே 'மகாநதி'என்று ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விதமாகத்தான் நிலைமை இருக்கிறது. நாம் விதிவிலக்குகளைப் பேச வேண்டியதில்லை. இந்த சமூகத்தால் இயற்றப்பட்டிருக்கும் விதிகளைப் பற்றிப் பேசவேண்டிய தேவையில் இருக்கிறோம்.

cheena (சீனா) said...

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள சில கட்டற்ற சுதந்திர வேறுபாடுகள், ஆணுக்குப் பெண் சமம் என்பதில் உள்ள மனஒவ்வாமை, ஆணுக்கும் பெண்ணுக்கும் அளிக்கும் நீதியில் கூட வேறுபாடு - இதற்கெல்லாம் முடிவே இல்லை.தொடர்ந்து கொண்டே தானிருக்கும். காலம் கனியக் கனிய, இதெல்லம் குறைய வாய்ப்புண்டு.

Indran said...

தமிழ் நதி,
சில நாட்களின் முன்பு நான்கு சாமங்கள் என்னும் கவிதையை எழுதியிருந்தேன்.அக்கவிதைக்கான தூண்டுதல் உங்கள் பதிவுக்கான தூண்டுதலை ஒத்தாகும்.
கிழக்கைரோப்பாவிலிருந்து தந்திரமகவும் வஞ்சகமாகவும் கடத்தி வரப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணைப்பற்றியது அக்கவிதை.
அதை எழுதும் போது எனக்குள்ளிருந்த பயம் அதனை எழுதுவது ஒரு ஆண் என்பதாகும்.
ஏராளமான விடையங்களை ஆண்களால் பெண்ணின் நிலையிலிருந்து புரிந்து கொள்ள முடியாது.பிரக்ஞையற்ற ஆணாதிக்கத்திற்கு இதுவுமொரு காரணம்.பெண்ணிலைப்பட்டுப் புரிந்து கொள்ள முடியாவிடினும் பெண்நிலை என்றொன்று இருப்ப¨தை அங்கீகரிப்பது முக்கியமானது. ஊடகங்களூம் சட்டவாக்க நிறுவனமும் இதை முதலில் உணர வேண்டும் . மேலை நாடுகள் பலவற்றில் இப் பிரக்ஞை நிலையுள்ளது. இந்தப் பிரக்ஞை நிலையை கீழத்தேச சமூக அமைப்பு வெளிப்படையாகவே மறுக்கிறது. மற்றப்படி ஆண்கள் உலகம் பூராகவும் ஆண்களாகவெயிருக்கிறோம்.ஆண் தன்னை சுயவிசாரணைக்கு உட்படுத்தி நடைமுறையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் இது இலகுவானதும் விரைவானதுமல்ல. பல நேரங்களில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும்.இது சுயவிமர்சனமும் கூட.
நீங்கள் உங்கள் பத்தியில்
பாலியல் தொழிலின் தேவையை ஊக்குவிற்கும் சமூகக்கட்டமைப்பு
பாலியல் தொழில் பற்றிய ஆணாதிகக்கச்சமுக மதிப்பீடுகள்
பாலியற்றொழில் பற்றிய சட்டவாக்கம் மற்றும் அமுலாக்கம்
என்பனவற்றில் உள்ள குறைப்பாடுகள்
பாலியல் சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகங்களின் அளிக்கை செய்யும் முறைமை
ஆகிய நான்கு விடையங்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறீர்கள்.
இன் நான்கு விடையங்கள் தொடர்பான தகவல்களும் உணர்வுகளும் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன.
பத்தி புலப்படுத்துகிற தார்மீகக்கோபம் என்னைத்தொற்றுகிறதெனினும் உங்கள் பத்தியின் கட்ட்டமைப்பு- அளிக்கை சிதறிக்கிடக்கிற தணலின் துண்டுகள் போலவுள்ளது.
தணலைச் சுவாலையாக்குவதற்கு விறகுகளை உரிய முறையில் அடுக்கவேண்டும் என்பது என் கருத்து

Anonymous said...

திரைப்படங்களும் தம் பங்கிற்குத் தாலியறுக்கின்றன. கைதாகும் பாலியல் தொழிலாளிகள் கலகலவெனச் சிரித்தபடி காவல் வண்டிகளில் ஏறுபவர்களாகவும் தமக்கு அருகிலிருக்கும் பொலிசாரை வம்பிற்கு இழுப்பவர்களாகவும் கைதானது தமது வாழ்வின் உன்னத தருணங்களில் ஒன்றெனக் கொண்டாடுபவர்களாகவுமே திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள்.(தமிழ் நதி)


நீங்கள் "கண்ட"திரைப்படங்கள் உங்களை எந்த அளவு பாதித்திருக்கின்றன என்பதை அறிய தந்தீர்கள். உங்கள் நிலமை அது."நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதையே கண்டடைவீர்கள்". நீங்கள் குறிப்பிடும் அவ்வுலகினை எவ்வித கொச்சைப்படுத்தல்களும் இன்றி நிர்மலமான சித்தரிப்புடன் காட்டியிருக்கும் "Born into Brothels" என்ற ஆவணப்படத்தினை முடிந்தால் பாருங்கள். ஊடகங்களினைக் குறித்த உங்களது பார்வையை அது மாற்றலாம். தமிழ் திரைப்படப் பரப்பில் இவ்வகை மகளிரை நீங்கள் கூறும் சக மனிதர்களாக பார்க்க விழையும் பான்மை துளிர்க்கத் துவங்கியிருக்கிறது. சமூகத்தால் இயற்றப்படிருக்கும் விதிகள் காலம் சார்ந்தவை. நன்றி

தமிழ்நதி said...

சீனா! அந்தக் காலம் கனிவது எப்போது?

நேரம் எடுத்துக்கொண்டு கருத்துச் சொன்னமைக்கு நன்றி தேவஅபிரா! உங்களது கட்டுரையின் 'லிங்க்'ஐ முடிந்தால் தாருங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

"தணலைச் சுவாலையாக்குவதற்கு விறகுகளை உரிய முறையில் அடுக்கவேண்டும் என்பது என் கருத்து"

உண்மைதான். எழுதி முடித்த பிற்பாடு நானும் அதைக் கவனிக்கவே செய்தேன். ஆனால்,அந்த ஒழுங்கமைவு உள்ளார்ந்த கோபத்தினால் ஏற்பட்டிருக்கலாம். அதைக் கலைத்து அடுக்கும்போது அந்தக் கோபத்தின் இயல்புத்தன்மை கெடலாம் என்பதனால் அப்படியே விட்டுவிட்டேன். சில கவிதைகளும் அப்படித்தான். மாற்றி மாற்றி எத்தனை எழுதினாலும் முதலில் எழுதியதே சிறப்பாகத் தோன்றுவதுண்டு. 'நகாசு'வேலைக்கு முன்னான படைப்புகளில் உண்மைத்தன்மை இருக்கும் அல்லவா? நீங்கள் சொன்ன விடயத்தைக் கவனத்தில் கொள்கிறேன்.

பாம்பாட்டிச்சித்தன்!

"நீங்கள் "கண்ட"திரைப்படங்கள் உங்களை எந்த அளவு பாதித்திருக்கின்றன என்பதை அறிய தந்தீர்கள். உங்கள் நிலமை அது."நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதையே கண்டடைவீர்கள்"."

தமிழ்த்திரைப்படங்களில் நான் எதையும் தேடுவதில்லை. தேடாமற் கிடைக்கும் 'திரவியங்கள்' அவை. முன்னறையில் அமர்ந்திருக்கும்போது யாரோ பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கக் கிடைக்கிறது. பார்க்கிறேன். 'மொழி' போன்ற சில படங்களைத்தான் 'தேடி'ப் பார்ப்பதுண்டு.

கட்டுரையில் நான் பேசியிருப்பது தமிழ்ச் சூழலை, தமிழ் ஊடகங்களை. நீங்கள் "Born into Brothels" இனைப் பரிந்துரைத்திருக்கிறீர்கள். நல்லது! ஆக,தமிழ்ச்சூழலில் நீங்கள் சுட்டிய 'மகாநதி'மற்றும் அண்மையில் வெளியான 'அம்முவாகிய நான்'போன்றவற்றைத் துணைக்கழைத்து வரவேண்டியிருக்கிறது. எங்கே உதாரணங்களைத் (அல்லது விதிவிலக்குகளை)தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறதோ அங்கே நீங்கள் குறிப்பிடும் சூழல் இல்லை என்றுதானே பொருள்.

"சமூகத்தால் இயற்றப்படிருக்கும் விதிகள் காலம் சார்ந்தவை"

சமூகம் என்பது மனிதர்கள்தானே.. காலம் மாறியும் மனிதர்கள் மாறாதது ஏன்? காலத்தின் மீது பழிபோடுவது ஒருவித தப்பித்தல் மனோபாவம் அல்லவா? இதே தொனிப்பட 20 ஆண்டுகளுக்கு முன்னால் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கலாம். "காலம் யாவற்றையும் மாற்றும்"என்றொரு நம்பிக்கை அப்போது நிலவியிருக்கும். ஆனால், மனிதர்களது அதிகாரத்தின் பாற்பட்ட விருப்பானது (ஆண்-பெண்) காலத்தை விஞ்சியதாக இருக்கிறது என்பதே உண்மை.

"தமிழ் திரைப்படப் பரப்பில் இவ்வகை மகளிரை நீங்கள் கூறும் சக மனிதர்களாக பார்க்க விழையும் பான்மை துளிர்க்கத் துவங்கியிருக்கிறது."

மகிழ்ச்சி! :) 21ஆம் நூற்றாண்டிலே இவ்வகைச் சிந்தனை 'துளிர்க்கத்'துவங்கியிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயந்தான். நாங்கள் நம்புவோமாக!

லக்கிலுக் said...

விபச்சார வழக்கு என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

அவ்வாறு கூறப்பட்டு கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளர்கள் மீது கஞ்சா வைத்திருந்தது, பொது இடத்தில் தகராறு செய்தது போன்ற பிரிவுகளில் தான் போலிசார் வழக்கு போடுகிறார்கள். அதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்துவதற்கு முன்பாகவே ஊடகங்களுக்கு செய்திகளை தருகிறார்கள்.

விபச்சார வழக்கு என்று தலைப்பிட்டு ஊடகங்கள் செய்தி போடுவதை நீதிமன்றங்கள் தடை செய்யவேண்டும்.

Ayyanar Viswanath said...

/அதே ‘முலை’யும் ‘யோனி’யும் ஆண் கவிஞர்களுடைய பேனா வழியாக எழுதப்படும்போது புனிதசொற்களாகிவிடுவது/

யார் எழுதினாலும் ஆபாசம்னுதான் சொல்றாங்க தமிழ்நதி.. என்ன ஒரு பெண் எழுதும்போது ரொம்ப தீவிரமா ஆகுது இவங்களோட கோபம்...சித்தன் சொன்ன பார்ன் இன் டு ப்ராத்தல்ஸ் தவறாம பாருங்க ..என் பக்கத்திலும் அந்த படம் பற்றிய குறிப்புகள் கிடைக்கும்

தமிழ்நதி said...

"விபச்சார வழக்கு என்று ஏதாவது இருக்கிறதா என்ன?"

லக்கிலுக்!என்ன நீங்க அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிறீங்க. தயவுசெய்து பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கவும்.

"யார் எழுதினாலும் ஆபாசம்னுதான் சொல்றாங்க தமிழ்நதி.. என்ன ஒரு பெண் எழுதும்போது ரொம்ப தீவிரமா ஆகுது இவங்களோட கோபம்..."

அய்யனார்!ஒரு பெண் தன்னுடைய உடலைக் குறித்து எழுதும்போது இவர்கள் கோபம் தீவிரமாக இருப்பதன் மூலகாரணம் என்ன...? அவளுடலையும் தம் உடமையாகக் கருதுவதுதானே? தமக்குரிய பேசுபொருள் என்ற எண்ணமோ? இவ்வாறு எழுதும் பெண் கவிஞர்களைப் பற்றி யாராவது கோபப்பட்டுப் பேசும்போது எனக்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு. இவ்வாறு பேசுபவர்களின் கோபம் பெண்களை 'உரித்து'க் காட்டும் சினிமாக்காரர்களைச் சுட மறுப்பது ஏன்?
சித்தனாலும் உங்களாலும் குறிப்பிடப்பட்ட "Born into Brothels" விரைவில் பார்த்துவிடுவேன். நன்றி.

லக்கிலுக் said...

//லக்கிலுக்!என்ன நீங்க அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிறீங்க. தயவுசெய்து பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கவும்.//

பத்திரிகைகளில் அப்படி வரலாம். கோர்ட்டில் விபச்சாரம் செய்ததாக வழக்கு போட முடியுமா? முடியும் என்றால் சொல்லுங்கள். தெரிந்துகொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து விபச்சாரத்துக்கு வற்புறுத்தியாக மட்டுமே வழக்கு போட முடியும்.

அந்த லட்சணத்துலே இருக்கு நீதி!

பாரதி தம்பி said...

/அன்றேல் ஆண் என்ற பிறப்பு வழி வந்த தகுதியையோ பயன்படுத்தி அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்./

இந்த ஒற்றை தகுதி(இதில் என்ன எழவு தகுதி இருக்கிறதென தெரியவில்லை)தான் பல தவறுகளை தர்க்க அளவில் நியாயப்படுத்துவதற்கான அடிப்படை. சில ஆண்டுகளுக்கு முன்பு விபசார தொழில் செய்த ஆண்கள் சிலரை சென்னை போலீஸ் கைது செய்தது. அப்போது பத்திரிகைகள், அவர்களை 'அழகன்கள் கைது' என எழுதவில்லை. 'ஆண் விபசாரிகள் கைது' என்றே எழுதின. அழகி, அழகன் இரண்டுமே தவறுதான்.

அவர்கள் யாருடனோ படுக்கையை பகிர்ந்து கொண்டதால் யாருக்கு என்ன நஷ்டம்..? சமூக ஒழுங்கு குறித்து அதிகம் கவலை என்றால், ஏனைய அனைத்தும் அததற்குரிய ஒழுங்குடந்தான் இருக்கின்றனவா..? பசி என்னும் பிசாசிடமிருந்து தப்பிக்க, தன்னிடம் இருக்கும் கடைசி மூலதனமான உடலை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களை, ஏதோ குண்டு வைத்தவர்களுக்கிணையாக அரசும், ஊடகங்களும் நடத்துகின்றன.

உடல் தேவைகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் உள்ள சமூகம் நம்முடையது. தனிமனித ஒழுக்கம் அதிகம் பேணப்படுகிறதிங்கு. இவை அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமே சாதகம் செய்கின்றன. பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே பாவிக்கின்றன. பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு இன்னமும் பெண்கள் மடியில் கட்டிய நெருப்புதான். காலம் மாற்றும் என்பது நம்பிக்கையின்மையின் வேறு வார்த்தைகளாக மாறிவிட்டன. காலம் மாற, மாற இந்த எண்ணங்களும் புதிய சட்டை அணிந்துகொள்கின்றன.

ரசிகன் said...

இப்போது தவறு செய்யும் ஆண்களையும் தண்டிக்க சட்டம் வரப்போகுது..தினமலரில் படிச்சேன்.

நல்லாயிருந்தது.

நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

தமிழ்நதி said...

"எனக்குத் தெரிந்து விபச்சாரத்துக்கு வற்புறுத்தியாக மட்டுமே வழக்கு போட முடியும்."
அப்படியா லக்கிலுக்! சட்டம் தெரிந்தவர்களிடம் விசாரித்துத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். இது இன்னமும் மோசமாக அல்லவா இருக்கிறது! 'விபச்சாரத்திற்கு வற்புறுத்தியதாக'த்தான் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது என்றால், அந்த வார்த்தைகளில் இருக்கும் சூழ்ச்சியைப் பாருங்கள். எந்தவிதமான பாலியல் உந்துதலுமற்று தெருவில் 'தேமே'என்று போய்க்கொண்டிருக்கும் தொழிலதிபரையோ அரசியல்வாதியையோ ஒரு பொறியியலாளரையோ விபச்சாரத்திற்கு 'அழைக்கும்'இவர்களுக்கு தண்டனை வேண்டியதுதான். இதை எழுதும்போது கெட்டவார்த்தையுடன் கூடிய வசவு ஒன்று உதடுகளில் துருத்துகிறது. அதை வலைப்பூவில் சாதாரணமாக உதிர்த்துவிட்டுப் போக இந்த 'பொண்ணாப் பொறந்தவளுக்கு'தைரியமில்லை. கிண்டினால் மகா மகா துரோகங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளலாம் போலதானிருக்கிறது. எதற்கும் பிரபு ராஜதுரை போன்ற சட்டத்தரணிகள் யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன். அல்லது இது விடயமறிந்த நண்பர்கள் யாராவது அறியத்தாருங்கள்.

"சமூக ஒழுங்கு குறித்து அதிகம் கவலை என்றால், ஏனைய அனைத்தும் அததற்குரிய ஒழுங்குடந்தான் இருக்கின்றனவா..?"

ஆமாம் ஆழியூரான்! பணமும் அதிகாரமும் நிறைந்தவர்கள் வைத்ததுதான் சட்டம். அதுதான் சமூக ஒழுங்கு. அதுதான் நீதியும்கூட. இவர்கள் சொல்கிறபடி பார்த்தால் நாங்களெல்லாம் 'ராமராஜ்யத்தில்'அல்லவா வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்.

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ரசிகன். முதற் பதிவா...? வந்து பார்க்கிறேன் :)

லக்கிலுக் said...

//இது இன்னமும் மோசமாக அல்லவா இருக்கிறது!//

ஆமாம். விபச்சாரம் குற்றமில்லை. விபச்சாரத்துக்கு அழைப்பதுதான் குற்றமாம். காமெடியா இருக்கில்ல? (வேதனையாகவும் இருக்கு)

மங்கை said...

" ஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்த புத்தகதை படிச்சீங்களா நதி..தமிழ்ல கூட வந்திருக்குன்னு சொன்னாங்க
ஆங்கிலத்துல வந்துருச்சு.. கேராளாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஜமீலா எழுதிய புத்தகம்...

கணவனின் மரணத்திற்கு பிறகு, மாமியாரையும், குழந்தைகளையும் காப்பாற்றுவற்காக தன் உடலை மூலதனமாக்கி இத்தொழிலில் ஈடுபட்டார்
குழந்தையின் பசியை தீர்க்க வழிகேட்டு சென்ற ஜமீலாவுக்கு ஒருவர் கூறிய யோசனை உள் அறையில் இருப்பவருடன் ஒரு இரவு இருக்க வேண்டும் என்பது...50 ரூபாய்க்காக.. அது தான் அவருக்கு இந்த தொழிலில் முதல் நாள்...உள்ளே இருந்தவர் ஒரு காவல் துறை அதிகாரி...(ஹ்ம்ம்ம்.. என்ன சொல்ல இதற்கு)... பணிமாற்றம் செய்யப்பட்ட அந்த அதிகாரிக்கு சக காவலாளிகளின் பரிசு ஜமீலா... ஆனால் அடுத்த நாளே விபச்சாரம் செய்த குற்றத்திற்காக இவர்
போலீசாரால் கைது செய்யப் பட்டார்..

இதே புத்தகத்தை The Autobiography of a Sex-worker”. WESTLAND BOOKS- பிரசுரித்திருக்கிறார்கள்.. landmark la கிடைக்குது..

பாதிக்கப்பட்ட ஒருவரின் புலம்பலாக இதை எடுத்துக்கொள்ள முடியவில்லை.. ஒரு பெண் தனக்குள்ளே வளர்த்து கொண்ட தன்னம்பிக்கையும் போராடும் குணத்தையும் எடுத்துச் சொல்லும் ஒரு புத்தகமாகத்தான் எனக்கு படுகிறது..

52 வயாதாகும் ஜமீலாவுக்கு இரண்டு பெண்கள்..திருமணம் செய்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்..

இன்னும் படிக்கவில்லையென்றால் கண்டிப்பாக படியுங்கள் நதி... அவரின் இந்த முயற்சிக்கு கை கொடுத்த மாதிரியும் இருக்கும்..

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

தமிழ்நதி, இந்தப் பதிவுக்கு அதிகமும் தொடர்பில்லாத (அப்படியெண்டுஞ் சொல்லேலாது தான்..) ஒரு கேள்வி... சட்டென்று பட்டதால் கேட்கிறேன்... உங்கள் வலைப்பூவிலுள்ள எண்சுட்டிக்கு ஏன் 'எண்ணுவான்' என்று 'ன்' ஆண்பால் விகுதியோடு ஒரு பெயர் கொடுத்திருக்கிறீர்கள்? ஏதாவது விசேஷ காரணம்? ;-))

தமிழ்நதி said...

நன்றி மங்கை! அந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. விரைவில் வாசித்துவிடுவேன். மேலும் சில ஆழமான வாசிப்புகளின் பின்னர் இதைக் குறித்து எழுதவுள்ளேன். மேலோட்டமான ஒரு கோபமாகவே இந்தப் பதிவை என்னால் பார்க்க முடிகிறது.

வியாபகன்! 'எங்கயாச்சும் ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ'என்று வியக்கப் பார்த்திருக்கிறேன். இப்போது நானும் அதைத்தான் நினைக்கிறேன். அந்த 'எண்ணுவான்'ஐ வார்ப்புருவில் சேர்க்கக்கூட எனக்குத் தெரியாது. அவ்வளவு 'அறிவுக்கடல்'நான்:) எனது தோழியொருவர்தான் அந்த 'எண்ணுவான்'ஐப் போட்டது. இனி அவரைத் தொடர்புகொண்டால் இப்படியொரு 'ஒக்காந்து யோசிக்கிறவர்'இருக்கிறார்... தயவுசெய்து அதை 'எண்ணுவாள்'ஆக மாற்ற முடியுமா என்று கேட்டு மாற்றிவிடுகிறேன். சரியா? என்றாலும் கண்டுபிடித்துக் கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்... அது!!!

Anonymous said...

அம்மா!வேரடி மண்ணை இழந்து,காலப் பறவையின் எச்சமாக "கரைசேரா இடர் எல்லை கண்டிலேன்" என்கிற உங்களின் இந்நிலையில்,சில வீணர்களின் வார்த்தைகளில் மனம் தளரா வேண்டாம்,தொடர்ந்து நடையிடுங்கள்...வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

'அவர்களைப் பார்த்தால் சுட்டெரிக்கும் காமத்தீயைத் தணிக்க விடுதிகளுக்கு வந்தவர்களாகத் தெரியவில்லை. உடலை மூலதனமாக்கும்படியான நிலைக்குத் தள்ளி வாழ்க்கை அவர்களைத் தண்டித்துவிட்டது. அவ்வளவே!'
ஆமாம்.ஒவ்வொரு பாலியல் தொழிலாளியின் ஆழ்மனதிலும் இவ்வாழ்வுக்கு வரக்காரணமாயிருந்த எதேனுமொரு துயரக்கதை வேரோடி இருக்கும்.
சபிக்கப்பட்ட தேவதைக் கதைகளின் நாயகிகள் மட்டுமே இங்கு வில்லிகளாகவும் சட்டத்தால் சித்தரிக்கப் படுகின்றனர்.
தமிழ் சினிமா பாஷையில் சொல்வதானால் தேவதூதன்கள் கிளைமேக்ஸில் எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

soorya said...

அப்பாடா...
ஒரு மாதிரி பல்லைக்கடிச்சுக் கொண்டு படைப்பையும், பின்படைப்பையும்(பின்னூட்டங்கள்) யாவும் மேய்ந்து முடித்தேன்.
எதுவுமே இப்போதைக்கு சொல்வதற்கில்லை.

நதி...நீங்கள் எழுதுங்கள்.
அது ஆரோக்கியமாக இருக்கிறது.

அகலக்கால் வைக்காமலும்....,
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமலும்....
உங்கள் ஆக்ரோசத்தை சற்றேனும்
குறைக்காமலும்....

இந்த நதி இயல்பாய் பாயட்டுமேன்.
வாழ்த்துகள்.

PRABHU RAJADURAI said...

தங்களது இப்பதிவினை இன்று படிக்க நேரிட்டது.

தங்களது பதிவு குறித்து சட்டரீதியிலான சில விளக்கங்களை இங்கு பெறலாம்
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html
நன்றி!

தமிழ்நதி said...

வணக்கம் பிரபு ராஜதுரை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களால் எழுதப்பட்ட விளக்கக் கட்டுரையின் பின்னூட்டத்தில் எனது எண்ணத்தைத் தெரிவித்திருக்கிறேன்.