எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி மறுபடி சடப்பொருளாகிக் கிடக்கிறது. என் பெயரில் அதிகப்பிரசங்கித்து சர்ச்சை வழி அடையாளப்படுத்திய நண்பருக்கும், எனது மறுப்பினை வெளியிட்டு ‘மீள் கருணை’ காட்டிய ஆனந்த விகடனுக்கும் (குறிப்பாக கண்ணனுக்கு) பெயர் குறிப்பிட முடியாத சில நண்பர்களுக்கும், வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சுகிற போதெல்லாம் தாங்கிப்பிடித்து தலைகோதி, தொடர்ந்து எழுதத் தூண்டும் என் சக பதிவர்களுக்கும் நன்றி.
பரபரப்பிற்காளாக்கியவர் தவிர்த்து வேறெவரையும் இழக்காமல் இக்கோடையைக் கடந்தேன் என்பதே எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல். அந்த நேர்காணலை காலம் தாழ்த்தி வாசித்து, விளக்கத்தை அறியாத ஒரு சிலர் இன்னமும் மின்னஞ்சல் வழியாக ‘ஏன் நாயே இப்படிச் சொன்னாய்?’என்ற தொனிப்படக் கேட்கும்போது மட்டும் ரணம் வாய்பிளந்து மூடுகிறது.
பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லைத்தான். எனது பெயருக்கு அருகில் புதிதாக அடைமொழி சேர்ந்திருக்கக்கூடும். ஏதோவொரு மதுச்சாலையில் எல்லா அரசியலும் பேசி ஓய்ந்த கணமொன்றில் யாரோவொருவரால் எனது பெயர் குறிப்பிடப்பட்டு ஆரம்பிக்கப்படும் உரையாடலில் ‘ஆனந்த விகடன்’என்ற பத்திரிகை குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் அநேகம். நியாயம்-அநியாயம், அறம்-கயமை, சுதந்திரம்-வன்முறை என்பதன் பொருளெல்லாம் அவரவர் அளவுகோல்களின்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஓங்கியிருக்கும் கையின் அளவினதாயிருக்கிறது அறம்.
16.04.08 திகதியிடப்பட்ட விகடனில் 177ஆம் பக்கத்தில் ‘நான் என்ன சொன்னேன்’என்ற தலைப்பின் கீழ் எனது விளக்கம் வெளியாகியிருக்கிறது. விகடன் அதைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதையும் தெரியப்படுத்தினால் நன்று என நினைத்தேன். ஆனால்,எனது மறுப்பைப் பிரசுரிப்பதே விகடனின் பெருந்தன்மையையும், வருத்தத்தையும் உணர்த்துவதற்குப் போதுமானதாயிருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’, ‘இந்தளவில் திருப்தி கொள்’, ‘மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கவில்லை’என்றெல்லாம் சொல்லப்பட்டன. சரிதான்!ஓரளவு நீதி கிடைத்தது என்று ஒதுங்கவேண்டியதுதான். ‘அதுவுமில்லை’ என்று கைவிரித்தாலும் மேற்கொண்டு செய்வதற்கொன்றுமில்லை. பல சமயங்களில் வாளாதிருக்க விதிக்கப்பட்ட வாழ்வெமது.
நேர்காணல் வெளியாகியதும் இரண்டு நிலைப்பாட்டுடன் தொலைபேசி அழைப்புகள் வந்தன. “நன்று சொன்னீர்கள்”என்றவர்கள் ஒருபுறம். “எப்படி இப்படிச் சொல்லப்போயிற்று?”என்றவர்கள் மறுபுறம். “நான் சொல்லவில்லை”என்ற சுயபுராணம் கேட்டதும் “அதுதானே நீங்கள் அப்படிச் சொல்லக்கூடியவரில்லையே….”என்றார்கள்.
விகடன்.காம் இல் வந்து கருத்துத் தெரிவித்த சிலர் “நீங்கள் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டு எப்படிச் சென்னையைப் பற்றி குறைத்துச் சொல்லலாம்?”என்று கேட்டிருந்தார்கள். இன்று காலையில் வந்த மின்னஞ்சலில்கூட
I WOULD APPRECIATE IF YOU CAN ATLEAST CLARIFY YOUR POINT OF VIEW WITHOUT AFFECTING OR OFFENDING TAMIL WRITERS AND CHENNAI.
என்றும்
BEING IN CHENNAI AND TALKING ILL OF CHENNAI IS NOT GOOD COURTESY.
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தவிர,அனானியாக நிறைய மிரட்டல்கள் வந்தன. அதன் சாரமானது "அகதி நாயே! உன் ஊருக்கு ஓடிப்போ"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா?'என்று கேட்கத் தோன்றுகிறது.
"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் “நிம்மதியான உறக்கம், உணவு, அமைதியாக எழுதக்கூடிய சூழல். ஆனால், சென்னை என்பதும் ஒரு வேடந்தாங்கல்தான். எங்கோ தொலைவில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான காத்திருப்பு, ஏக்கம் மனதுள் எப்போதுமிருக்கிறது.”என்ற எனது பதிலை, இக்கோடை விழுங்கித் தொலைத்ததா நானறியேன். எனது வலைப்பூவில் இடப்பட்டிருந்த 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற கட்டுரையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களே விடையாக அமைந்திருக்கக் கண்டேன். "அவளது கணவன் இறந்துபோய்விட்டான். பிள்ளைகள் பசியில் கதறின. வேறு வழியின்றி அவள் திருட வேண்டியதாயிற்று. அவள் இப்படித்தான் திருடியானாள்"என்றொரு பந்தியின் முதற்பகுதியை நீக்கிவிட்டு கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டால் "அவள் திருடி"என்றே வரும். இத்தகைய கைங்கரியத்தைத்தான் என்னை நேர்கண்டவர் செய்திருக்கிறார்.
"நான் பாதிக்கப்பட்டேன்", "மன உளைச்சலுக்குள்ளானேன்", "திரிக்கப்பட்ட வார்த்தைகளால் விரோதிகளைப் பெற்றுக்கொண்டேன்"என்றெல்லாம் புலம்புவது வெறுத்து, சலித்துப் போய்விட்டது. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்.
எல்லாப் புனிதங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றபோதிலும், எழுத்தின் மீது இன்னமும் மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அது கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் இழையால் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். தொழில் என்று பார்த்தால்-கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும், கடத்தல் செய்வதைப் பார்க்கிலும் எழுதுவது ஏதோவொரு வகையில் பெருமிதந் தரத்தக்கதே. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பிற்குறிப்பு: பதிவின் நீளம் கருதி, வாசிப்பவர்களை சலிப்பிற்காட்படுத்த மனமின்றி என்னால் தட்டச்சி அளிக்கப்பட்ட ‘உண்மையான’செவ்வியையும், விகடனில் வெளியாகியிருந்த எனது மறுப்பையும் இதில் போடவில்லை.
20 comments:
விட்டு தள்ளுங்க அக்கா. இதுவும் கடந்து போகட்டும்! :-)
As usual உங்க ஃபார்முக்கு வாங்க!!
தமிழ்நதி,
நம்ப மாட்டீர்கள், உங்கள் மறுப்பு வருகிறதா என்று பார்க்க மட்டும் விகடன் வாங்கினேன். இதற்கு முன் எப்போது வாங்கினேன் என்று ஞாபகம் இல்லை. :-))
**
தவறாக திரித்தமைக்கு வருத்தம், மன்னிப்பு கேட்கவில்லை விகடன்.
நீங்கள் சொன்னது மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது "Actullay நான் என்ன சொல்றேனா " என்று நீங்களே விலக்குவதுபோல ‘நான் என்ன சொன்னேன்’ என்று உங்களையே குற்றவாளிக் கூண்டில் வைத்து பேசச் சொல்கிறது அந்த பத்திரிக்கை. :-((((
ஜெயமோகன் விசயத்தில் ‘நான் என்ன சொன்னேன்' என்று சொல்லாமல் "மன்னிசுக்குங்க சாமியோவ்" என்று விகடன் ஏன் சொன்னார்கள் என்று யாரும் சிந்தித்து சிரிக்கலாம். :-)))
**
விகடன் எப்படி ஒரு பத்திரிக்கை தர்மம் கொண்டுள்ளது என்பதற்கு இந்த இதழில் வந்திருக்கும் பதிப்பாளர் என்ற ஒரு ஆத்மாவின் கருத்தே சான்று.
விளம்பரத்தில் சிகப்பு நிறம் காட்டி , கருப்பு கேவலம் என்று ஒதுக்குவது தவறாம். பதிப்பாளர் என்பவர் இப்படி சொல்றார். இந்த ஆளின் கருத்துள்ள அடுத்த பக்கத்திலேயே இரண்டு சிகப்புப் பெண்கள் படம் போட்டு எதோ ஒரு விளம்பரம். மேலும் மீரா சீயக்காயிலும் சிகப்புப் பெண்கள்.
இந்த ஆள் பதிப்பாளராக இருக்கும் வரை நிற வேற்றுமையை காட்டும் படங்கள்,அல்லது ஒரு நிறத்தை உயர்வாக கட்டமைக்கும் விளம்பரங்கள் வராது என்று சொல்ல முடியுமா இவரால்?
விகடனின் அட்டையில் எத்தனை கருப்பு பெண்கள் இயல்பாக இடம் பெற்றுள்ளனர். அழகு என்றாலே வெள்ளை/சிகப்பு என்று கட்டமைப்பதில் இந்த புத்தகத்துக்கு நிறையவே பங்கு உண்டு.
அதையே தவறு என்று இந்த ஆள் சொல்றார். அவர் சொல்லும் இதழிலேயே அதே தவறு நிகழ்கிறது. அவர் பதிப்பாளராம். பதிப்பாளர் என்றால் அச்சு மெசினை ஓட்டுபவரா? இவருக்கு பத்திரிக்கையின் உள்ளடக்கத்தில் ஏதாவது அதிகாரம் உண்டா?
**
எழுதுவது வணிக நோக்கம் ஆகும் போது அடுத்தவர் படிக்கும் வண்ணம் எழுத சுவராசியம் கூட்ட எழுதுபவன் எதுகை /மோனை/பஞ்ச்/திருப்பம்/வர்ணனை/....என்று மெனக்கெடுவதும், பதிப்பாளர்கள் பத்திரிக்கை படிப்பவனை கிளுகிளுப்பூட்ட சில பிட்களை தானாக சேர்ப்பதும் தொழில்தர்மம் என்று அறிக. :-)))
பத்திரிக்கைக்கு நீங்கள் கட்டுரை/பேட்டி/கதை செய்வது வேலையா ( job you do for living) அல்லது விளம்பரத்துக்காகவா?
Job என்று வரும் போது சமரசங்கள் அவசியம். நமது கொள்கைகளை அப்படியே அடுத்தவர் நிறுவனத்தில் செயல்படுத்த முடியாது. :-(( . சினிமா கதை எழுதுபவன் எப்படி நடிகனுடன் சமரசம் செய்கிறானோ அது போலத்தான் இதுவும். நீதி என்பது வலியவன் (பத்திரிக்கை) கொடுப்பதுதான் , நாம் விரும்புவது அல்ல.
அதிகம் பேரை அடையவேண்டும் (விளம்பரம்) என்பதே நோக்கம் என்றாலும் சமரசங்கள் வேண்டும். ஆனால் இதைத் தவிர்க்கலாம். Job I do for living என்று இல்லாதபோது இதை தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது.
**
‘நான் என்ன சொன்னேன்' என்று அவர்கள் உங்களை சொல்ல அனுமத்தித்தே (ஒரு பக்கத்தில்) மெய்யாலுமே பெரிய விசயம்.
சொல்ல வேண்டிய கருத்தை blog-ல் போட்டுவிட்டு போகலாமே?
** அப்படிப் போட்டாலும் விகடன் அதிலும் காசு பார்த்துவிடும் விகடன் (ஜெயமோகன் விசயம்) . விகடனைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாய் இருக்கிறது. :-)))
**
ஆம் ,இதுவும் கடந்து போகும்
இலகுவாகுங்கள் தோழி காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தரும் அதிலிருந்து நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்வோம் பலவற்றை விட்டுத்தள்ளுவோம் அதைப்போன்றவற்றில் இதுவும் ஒன்றென கடந்து செல்லுங்கள் உங்களுக்கான பணியில் தொடர்ந்து செல்லுங்கள் நன்பர்களுண்டு எப்போதும்....
அன்ன்பின் தமிழ்நதி,
விகடன் தான் இழைத்த தவறுக்கு சிறிதளவேனும் வருத்தம் தெரிவிக்காமல்,பிரசுரித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உங்களது மறுப்பை வெளியிட்டிருக்கிறது என நினைக்கிறேன் சகோதரி.
விகடன் இழைத்திருப்பது ஒரு சிறு தவறல்ல. இலக்கியவாதியொருவரின் ஒவ்வொரு மூச்சும் வரலாறாகும் பொழுது ஒருவரது பேச்சில் பெருந்திரிபை ஏற்படுத்தி அவரது எழுத்துக்களுக்கே இழிவு படுத்திவிட்டது விகடன்.
தவறுக்கான சிறுவருந்தலையோ,உங்களிடம் ஒரு மன்னிப்பையோ கேட்டிருக்கலாம்.
விகடன்,அதன் பெருந்தன்மையையும்,பெருமதிப்பையும் இழந்துவிட்டது.
அக்கா,
படைப்பாளிகள் செய்யாத தவறுக்காக மனம் கலங்குவதில்லை. நீங்கள் பேட்டிக்கும் மறுப்பிற்கும் இடையில் அடைந்த வேதனை புரிகிறது.
மறுப்பை வாசிக்காதவர்களுக்காக, என்னாலான உதவியாக "ஆ.வியில் தமிழ்நதியின் பேட்டியும் மறுப்பும்" என்றவோர் இடுகையில் போட்டிருக்கிறேன்.
சந்தோசமாக இருங்கள் அக்கா.
இந்த அளவில் இறங்கியுள்ளார்களா??
இவை சகலருக்கும் நல்ல பாடமே!! உங்களைப் புரிந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
ஆனால் ஆயாமல் எச்சில் துப்பவென காத்திருக்கும் கூட்டம் மாறாது.
மறக்க முயலுங்கள்.எல்லாம் நன்மைக்கெனக் கொள்ளவும்.
//என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா?'என்று கேட்கத் தோன்றுகிறது.//
தமிழ் நதி மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொளீரென்று அறைந்தாற் போலிருக்கும். ஆ.வி மீது என்றுமே மரியாதை இருந்ததில்லை. அதை இன்னோரு முறை உறுதிபடுத்தியிருக்கிறது. "நான் என்ன சொன்னேன்" இந்த தலைப்பின் கீழிருக்கும் அரசியல் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது.
விட்டுத் தள்ளுங்கள்.
ம்ம்ம்ம்...
நானும் பார்த்தேன்...
பெரிசாய் திருப்தியில்லைதான்...
வலிகள் குறைய நாளாகும்தான்....
முந்தைய கோபம் இப்போதில்லை.....
ம்ம்ம்ம்ம்.....
அன்புத்தோழிக்கு செல்லாவின் காலை வணக்கம். தங்கள் தளத்தின் இணைப்பை
href="http://poovaasam.blogspot.com/">“பூவாசம்” பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்.
தங்கள் வரவை விரும்பும்...
ஓசை செல்லா
படைப்பாளிக்கும் படைப்பை வெளியிடுபவனுக்கும் இடையில் இருக்க வேண்டிய கண்ணியமும் ஜனநாயக உறவும் தமிழ்ச்சூழலில் பிரச்சனைக்குரியதாகவே இருந்திருக்கிறது.
படைப்பாளி தனது சத்தியத்தில் நிமிர்ந்த்து நிற்பார்.
வெளியிடுபவன் வியாபாரத்தில் குனிந்திருப்பார்.
"மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?
என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ?
உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?"
thevaabira
வாருங்கள் லக்கிலுக்!உங்கள் கை ராசியான கைதான் போல. எனது முதற்பதிவில் பின்னூட்டமிட்டு ஆரம்பித்து வைத்தாலும் வைத்தீர்கள். எகிறிக்கொண்டு ஓடியது:)
"As usual உங்க ஃபார்முக்கு வாங்க!!"
வந்துவிட்டேன். எனக்கே புலம்புவதில் வெறுப்பு வந்துவிட்டது. தொலைவதெல்லாம் தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.
கல்வெட்டு,
"‘நான் என்ன சொன்னேன்' என்று அவர்கள் உங்களை சொல்ல அனுமத்தித்தே (ஒரு பக்கத்தில்) மெய்யாலுமே பெரிய விசயம்." என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஏனைய விடயங்கள்... ம்... இப்போதைக்கு பேச விரும்பவில்லை. ஒருதடவை வாயைத் திறந்ததே வினையாகிவிட்டது.
நன்றி கிருத்திகா, உண்மையில் முகமறியாத பல நண்பர்களை இந்த வலைப்பதிவு பெற்றுத் தந்திருக்கிறது. நன்றியும் மகிழ்வும்.
ரிஷான்!
"இலக்கியவாதியொருவரின் ஒவ்வொரு மூச்சும் வரலாறாகும் பொழுது ஒருவரது பேச்சில் பெருந்திரிபை ஏற்படுத்தி அவரது எழுத்துக்களுக்கே இழிவு படுத்திவிட்டது விகடன்." என்ற உங்கள் கருத்தைப் பார்த்து வருத்தத்தோடு சிரிக்கத்தான் முடிந்தது. இலக்கியவாதிகளின் பெருமூச்சு எவரையும் அசைக்காது சகோதரரே. 'செல்வாக்குள்ள'இலக்கியவாதிகளின் முச்சு வேண்டுமானால் வரலாறாகலாம். ஏனையவை எல்லாம்.... காற்றில் கலக்கும்... காணாது போகும்.
கெளபாய்மது, உங்கள் பதிவில் ஆனந்தவிகடன் பேட்டியை எடுத்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். நன்றி. அதன் வழி மேலும் சிலரைச் சேர்ந்திருக்கக்கூடும்.
யோகன்!இந்தப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து விகடன்.காம் இலும்,இங்கு எனது வலைப்பூவிலும் தொடர்ந்து வந்து ஆதரவு அளித்துவருகிறீர்கள். நியாயமெனத் தோன்றுவதன் பக்கம் நின்று உரத்துப்பேசும் தங்கள் பண்பிற்கு வணக்கம்.
வாருங்கள் நந்தா!ஆளையே காணவில்லை, அதிக நாட்களாக. ரசிகர் மன்றத்துக்காரர் காணாமற்போய்விட்டார் என அறிவித்தல் கொடுக்கவிருந்தேன்:)
இரண்டாம் சொக்கன்,
"பெரிசாய் திருப்தியில்லைதான்...
வலிகள் குறைய நாளாகும்தான்....
முந்தைய கோபம் இப்போதில்லை....."
நிறைய யோசித்து யோசித்து எழுதியிருப்பீர்களோ.... வாக்கியங்களுக்கிடையில் அத்தனை இடைவெளி:)
மூன்றாவது வாக்கியத்தோடு உடன்படவில்லை:(
நன்றி ஓசை செல்லா!இணைப்புகள் அதிகமாக அதிகமாக வருகைத் தொகை அதிகரிக்கும்.நன்றி.
தேவஅபிரா,ஏன் இப்போது எழுதுவது குறைந்துபோய்விட்டது?அவ்வப்போதாவது வந்துபோங்கள்.
வணக்கம், வேறு வழியற்று சிலவற்றை சகித்துகொண்டிருகும் நிலை மறுபற்று நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விட்டுத்தள்ளுங்க..
தமிழ் நதி,
பழுக்கிற மரம் தான் கல்லடி வாங்கும்.
நீங்கள் இவற்றையெல்லாம் கடந்து விடுவீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்,ஏனெனில் முன்னொரு முறை உங்கள் வீட்டுப் பிரச்சினையில் என்னால் இதனை எதிர் கொள்ள முடியும் என்று நீங்கள் எனக்குப் பதில் எழுதியதாக ஞாபகம்.
உங்களால் முடியும்.
விட்டுத்தள்ள வேண்டிய விஷயம். :)
அக்கா.. எல்லாருக்கும் உண்மை என்ன என்பது தெரியும். அதனால , விகடன் வியாபார தந்திரங்களை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாமே:).
//. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.//
வழிமொழிகிறேன்:)
nanparkalukku nanri.
naan ippothu naaddil illai. athanaal thamizhil ezhutha mudiyavillai. mannikkavum. pinnooddam idda nanparkalukku nanri. I will talk to you after one week.:)
நதியக்கா..,
விகடனில் வந்த கட்டுரைக்கு பின்.. உங்கள் மறுப்பு பார்த்தபின் அங்கே அலுவலகத்தில் செய்தியை எடுத்த நிருபருக்கு செம டோஸ் விழுந்திருக்கும். அதே துறையில் இருப்பதனால் சொல்கிறேன். தான் எடுக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் இப்படி பல நிருபர்கள் செய்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் அதன்காரணமாக எதிரிலிருப்பவருக்கு வரும் சங்கடங்கள் பற்றிய போதிய அறிவு/சிந்தனை இன்மையே இது போன்ற செயலுக்கு காரணமாகின்றன.
மேலும், இச்சமூகத்தில் பொதுவாகவே பெண்கள் ஏதும் சொல்லிவிட முடியாத சூழலே இருக்கிறது. தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை பெண் ஒருவர் சொல்லி இருந்திருப்பாரேயானால்.. அவரின் நிலை என்னவாகி இருக்கும் என்பதைக்கூட யோசிக்க முடியவில்லை.
அம்பை பட்ட அவமானங்களும், அடைந்த அதிர்ச்சிகளையும் அவர் சொல்லியே கேட்டிருக்கிறேன் நான்.
அடுத்தகட்டத்தை நோக்கிய பயணத்தை தொடங்கி விடுங்கள். இது கடந்து போகிறதோ இல்லையோ.. நாமாக கடந்து வந்துவிடலாம். :)
கண்ணதாசன் காரைக்குடி, பேரைச் சொல்லி ஊத்திக்குடி, குன்னக்குடி மச்சான்போல பாடப்போறேண்டா.
"மணல் கொள்ளையில் மானா சுனா என்பவர் வகையாகச் சிக்கிக்கொண்டிருக்கிறாராம், போலீஸ் வலைவீசித் தேடுகிறதாம்" என்று கழுகார் ஒரு வாரம் சொல்வார். மறுவாரம், மானா சுனா "எனக்கும் மணல் கொள்ளைக்கும் எந்த்ச் சம்மந்தமும் கிடையாது" என மறுப்புவிடுவார். இந்த மறுப்பைப் பார்க்கும்போது என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு யார் மீதூ நம்பிக்கை வரும்? மானா சுனா டேமேஜ் கண்ட்ரோல் பண்றாரு என்றுதான் தோன்றும்.
மானா சுனா சொல்லியிருப்பது உண்மையே, தவறான தகவலுக்கு வருந்துகிறோம் என்று ஒற்றை வரி ஆ-ர் என்று போட்டு வந்தால் அது ஏற்படுத்தும் தாக்கம் நிச்சயம் வேறு மாதிரி.
பாலபாரதி சொல்வது போல அந்த நிருபருக்கு டோஸ் கிடைத்திருக்கலாம். ஆனால் ஆனந்தவிகடன் ஆசிரியர் வாயிலாக வருத்தம் தெரிவிக்காத வரையில் வலைப்பதிவுபடிக்க்காத ஆர்வலர்களின் மத்தியில் தமிழ்நதியின் இமேஜ் டேமேஜ் ஆனது சரி ஆகாது. தங்கள் ஈகோவே முக்கியம் என்று ஓ பக்கங்கள் போதோ, ஜெயமோகன் போதோ நினைக்கவில்லையே? அல்லது, பலம் படைத்தவர்கள் மட்டும் அவர்கள் ஈகோவிற்கு விலக்கா?
ஆனால், தமிழ்நதி, இதுவும் கடந்து போகவேண்டும்.
Post a Comment