விமானம் உயரம் விழுங்கித் தரைதாழ்கிறது. பிரமாண்டப் பஞ்சுப்பொதிகள் ஐதானதில் குறுஞ்செடிகளாய் தெரியவாரம்பித்த தென்னைகளின் அழகிலும் வேறு ஏதோவோர் உணர்விலும் (அதை நீங்கள் பிறந்த பொன்னாடு இன்னபிறவற்றின் கலவை என உணரலாம்) மனம் இளகி பரவசம் பொங்க அதுவரை முகம்பார்க்காதிருந்த சகபயணியின் பக்கம் திரும்பி ‘அழகு’என்கிறேன். ‘பச்சை நிலம்’என அவரும் வழிமொழிகிறார். கொழும்பு அப்போதிருந்து/அப்போதிருந்த கொழும்பாய்த்தானிருக்கிறது. சென்னையில் அதிகம் காணக்கிடைக்காத பாவாடை-சட்டைப் பெண்கள், ஓராண்டின் பின் ஊர்திரும்பிய எனக்கு காட்சிப்பிழையெனத் (நன்றி தாமரை) தோன்றியது என் கண்களினதும் காலத்தினதும் பெரும்பிழையே. பெருநகருக்கேயுரித்தான நெரிசல்களுடன் அங்கிங்கெனாத இராணுவப் பிரசன்னமும் நெரிக்கிறது.
போய் இறங்கியது ஒரு வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறில் விசா வழங்கும் அலுவலகத்திற்கு விடுமுறை என்றார்கள். எங்கோ வெகுதொலைவில் இருக்கும் வீடு மாயக்கரமசைத்து அழைக்கிறது. இரத்த நிறத்திலும் அதற்கு சற்றே இளைத்த நிறத்திலும் லசந்தரா மலர்கள் மென்காற்றில் இழைகின்றன. பூனைக்குட்டிகளின் பஞ்சுப்பாதங்கள் மனம் முழுதும் மெத்துமெத்தென அலைகின்றன. அதன் பாத அடிப்பகுதி இளஞ்சிவப்பு நிறம். ஐந்துவிரல்களையும் பிரித்துத் தடவிக்கொடுத்தால் அது கண்சொருகி மிக மெலிதாய் ‘மியாவ்’என்கும்.
வெளிநாடொன்றிலிருந்து கொழும்பிற்குப் போய், அங்கிருந்து வவுனியாவுக்குப் போகவிரும்புகிறவராக நீங்கள் இருந்தால் இதை வாசிப்பது நல்லது. இரவு இரயிலில் முதல் வகுப்பு கிடையாது. இரண்டாம் வகுப்பிலும் நீங்கள் எதிர்பார்க்கும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இல்லை. அன்று காலையிலேயே பயணச்சீட்டுப் பெறப்போன எனக்குக் கிடைத்ததோ மூன்றாம் வகுப்புக்கான இருக்கைதான். பயணப்பைகளை புதையல் காப்பதுபோல காக்கவேண்டும். இல்லையெனில், நீங்கள் தூக்கத்தில் கனவுகண்டு சிரித்துக்கொண்டிருக்கும்போது வெறெவரோ உங்களது உடமைகளுடன் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கத்தகு சாத்தியங்கள் அதிகம்.
கடந்தமாதம் திருவனந்தபுரத்திற்குப் போயிருந்தபோது, கேரளாவை ‘கடவுளின் தேசம்’என்று சொல்வது மிகையன்று என அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். ‘உங்கள் ஊர் இதுபோல இருக்குமாமே?’என்று அங்கு ஒரு நண்பர் கேட்டார். ‘அழகில் இதனிலும் ஒரு படி குறைவாகத்தான் இருக்கும்’என்று பதிலளித்திருந்தேன். ஆனால், அது தவறென அந்தப் புகையிரதப் பயணத்தின் வழிநெடுகிலும் தோன்றிக்கொண்டேயிருந்தது. பகலெல்லாம் வெயில் உயிரின் ஈரத்தை உறிஞ்சிக்குடிக்கும். ஏப்ரல் மாதமாக இருந்தபோதிலும், இம்முறை, மாலையானதும் முகில் திரண்டு மழைகொட்டிக்கொண்டிருந்தது. அன்றிரவு மழையில்லை. அதுவொரு மனோரம்மியமான பௌர்ணமி இரவு. யன்னலூடாக நுழைந்த குளிர்காற்றில் இலைகளின் வாசனை மிகுந்திருந்தது. நிலவு தழுவிக்கிடக்கும் வயல்களையும் மரங்களையும் மலைகளையும் நீர்நிலைகளையும் கடந்தபடி இரயில் குரலெடுத்துக் கூவியபடி விரைகிறது. ‘இவ்வூரில் இருக்கமுடியாமற் போனது எவ்வளவு துரதிர்ஷ்டம்!’ ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டுமாம்! மெத்தச் சரி! உயிரோடிருப்பதற்கான சமரசங்கள், விட்டுக்கொடுத்தல்கள் மிக அதிகந்தான். விடிகாலையில் ஓரிரு மணிநேரம் இமைகளுக்கும் நித்திரைக்கும் பயங்கரமான இழுபறி நடந்துகொண்டிருக்க ஈற்றில் மதவாச்சியை வந்தடைந்தோம்.
விடிகாலையிலும் விழித்திருந்த காவலர்களால் பயணப்பொதிகள் கிண்டிக்கிளறப்பட்டன. என் ‘டிஜிட்டல்’ புகைப்படக்கருவியில் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த படங்களை உன்னிப்பாகப் பார்த்து ‘ஒன்றும் பயமில்லை’எனத் தெளிந்தார்கள். வெளிநாட்டிலிருந்து ஒருவர் கொண்டுவந்திருந்த இனிப்புகள்,ஆடைகள்,நவீன கருவிகள் மேசையில் பரப்பப்பட்டு அத்தனை பயணிகளுக்குமான காட்சியாயிற்று. புகையிரத நிலையத்திலிருந்து ஒன்றரை-இரண்டு மைல் தூரத்திற்கு ஆட்டோவில் பயணம். குளிர் முகத்தில் இழைய, மழைக்கு மதர்த்துச் செழித்த செடிகொடிகளைப் பார்த்தபடி ஊர் விழித்திராத இளங்காலையில் பேருந்து நிற்குமிடத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது ஏனோ விதியின் நினைவு வந்து அருட்டிற்று.
சலிப்பில் தோய்ந்த வார்த்தைகள், குழந்தைகளின் அழுகைகள் இன்னபிற பின்னணியில் அரைமணிநேரம் காத்திருந்தபின் ஒருவழியாய் புறப்பட்டு வவுனியாவைப் போய்ச் சேர்ந்தோம். நேரம் காலை 7 மணி.; மீண்டும் ஆட்டோவிலேறி வீடுநோக்கிப் பயணம். கதவைத் திறந்தபோது நாய்கள் திகைத்துப் பின்வாங்கிக் குரைத்துப் பின் தெளிந்து… நாய்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஞாபகசக்தியையும் நன்றியையும். மூத்த பூனைக்குட்டி பல மணிநேரம் என்னைச்சுற்றிக் கத்தித் திரிந்தது. பாதங்களில் முகம்வைத்து பிரசவ வேதனையில் கதறியது. (பூனைகளுக்கு விசுவாசமில்லை என்ற கூற்றை அதுவரை நம்பியிருந்தேன்.) என் கண்ணெதிரில் அன்றிரா மூன்று குட்டிகளை ஈன்றது. இனி அது குட்டியில்லை. பூனை குட்டி போடுவதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றார்கள். எனக்காக அது காத்துக்கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள்.
நிலவில் ஒளிர்ந்த மொட்டை மாடியில் நின்றபடி கீழே பார்த்தபோது, எங்கெங்கோ வியர்த்தமாக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை செடிகொடிகளினிடையில் கண்டேன். எத்தனை தண்ணீர் ஊற்றியும் உரம் போட்டும் உயரமாட்டேன் என்று அடம்பிடித்த செவ்விளநீர் முத்துக்களாய் பாளை வெடித்து நின்றது. கிணற்றைச் சுற்றி பாக்குமரங்கள் உயர்ந்துவிட்டன. மஞ்சளில், சிவப்பில், ஒறேஞ்சில் நிறம்நிறமாய் பூத்திருந்தன செம்பருத்திகள். வாழைத்தார்கள் குரங்குகளை வாவென்றழைத்தன. ஓ லசந்தரா மலரே! நீ ஏன் குருதியை நினைவூட்டுகிறாய்?(இதை நான் எனக்காகவுந்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.)
இரண்டு நாள் வீட்டுக்காவலின் பின் திரும்புகிறேன்… கவனியுங்கள் அனானிகளே! ஒரு ‘அகதி’ நாய் மீண்டும் மீண்டு வருகிறது. நேசிக்கும் மனிதர்களிடமும் காலைச் சுற்றும் பிராணிகள் மற்றும் வாய்பேசவியலாத வீட்டினிடத்திலும் விடைபெறுதல் சுலபமில்லை. உயிர் என்பது மயிருக்குச் சமானம் என்று இனி எவரும் சொன்னால், ஓரமாகப் போய் காறித்துப்பிவிட்டு வரவேண்டும்.
பொதிவதை படலம் மீண்டுமொரு முறை அரங்கேறுகிறது. ஆட்டோ-பேருந்து-ஆட்டோ-மதவாச்சியிலிருந்து அனுராதபுரம்வரை இரயில்-அனுராதபுரத்திலிருந்து கொழும்புவரை மற்றோர் இரயில்-ஆட்டோ என்று மாறி மாறித் தாவி விடுதியை வந்து சேர்வதற்கிடையில் அவர்கள் கிளறிய கிளறலில் பருத்தியாடை பஞ்சாயும் பட்டாடை புழுவாயும் மாறாதிருந்தது ஆச்சரியம். வெயில் முகத்தை கூர்நகங்களால் பிறாண்டிக்கொண்டிருந்தது போதாதென்று இரயில் வேறு சிறுபிள்ளை விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் முன்னால் போகும்@ பிறகு பின்னோக்கி பயணிக்கும். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டாற்போல அரைமணிக்கும் மேலாக ஒரு நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும். சகிப்புத்தன்மையற்றவர்கள் இந்தப் பயணத்தைத் தவிர்த்தல் நன்று. இல்லையெனில், குதித்திறங்கி வேறுவழியில் கொழும்புநோக்கிப் பயணிக்க முடிந்தவர்கள் போகலாம்.
விமானம் மேலெழுகிறது. அலைக்கழித்து என்னை அழவைத்து, அழகில் திளைக்கவைத்து, அயர்ச்சியில் துவளவிட்டு, பயத்தின் திகைப்பாழ்த்தி, நெகிழ்ந்து நெக்குருகச்செய்த மண்ணே போகின்றேன். ‘வரமாட்டேன்’என்று ஒருபோதும் எழுதேன். என்னை மீறி ஏதோவொரு வெறுப்பில் ‘போகின்றேன்’என்பேன். ஆனாலும், மீண்டும் மீண்டும் அழைக்கும் குரலுக்கு அடிபணிந்து வருவேன். பூக்குட்டீ! நான் திரும்பிய காலை அட்டைப்பெட்டிக்குள் குட்டிகளை அடைகாத்தாய். இப்போது ‘குளோசெற்’இன் மேல் தூக்கிப்போய் வைத்திருக்கிறாயாம். குட்டிகளை ஏழு இடம் மாற்றும் பூனை என்பர். நாங்களோ ஏழு கடல் தாண்டி அலைகின்றோம். இன்னும் இருப்புத்தான் தரிக்கவில்லை.
21 comments:
என்னத்தை சொல்ல..
எல்லாவற்றையும்தான் நீங்களே எழுதிவிடுகிறீர்களே..
//எங்கோ வெகுதொலைவில் இருக்கும் வீடு மாயக்கரமசைத்து அழைக்கிறது//
இவ்வரிகள் மிகப்பிடித்திருந்தன.
உண்மைதான் நதி அக்கா வாழ்ந்த வீட்டை பார்பது என்றால் யாருக்குதான் ஆசையில்லை உங்களைப் போல எனக்கும் ஆசைதான் ஆனால் என்ன செய்ய முடியும்??????
வெயிலுக்கு இதமளிக்கும் சிலீர் வார்த்தைகளிலான பயண அனுபவம்! நன்றி!!!
கொஞ்சம் பொறுங்க...
மனதை பாரமாக்கி இருக்கிறீர்கள்...
உண்மையில் உங்களுடைய சொந்த இடம் எது...
என்னவோ தெரியலை ஊர் நினைவுகள் பற்றிய பதிவென்றாலே கண்கள் கலங்கி விடுகிறது...:(
நான் உங்களுக்கு தொடர் வாசகன்தான்தான் ஆனால் பின்னூட்டம் எழுதுவதில்லை அந்த அளவுக்கு எனக்கு திறமையும் இல்லை... ஏனோ...இந்தப்பதிவுக்கு என்னையும்மீறி பின்னூட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது...
எப்படி இவ்வளவு அழகாக எழுத வருகிறது உங்களுக்கு...
//அலைக்கழித்து என்னை அழவைத்து, அழகில் திளைக்கவைத்து, அயர்ச்சியில் துவளவிட்டு, பயத்தின் திகைப்பாழ்த்தி, நெகிழ்ந்து நெக்குருகச்செய்த மண்ணே // தாய் மண்னை தரிசித்த புத்துணர்ச்சி நடந்த சில கசப்பான அனுபவங்களை உதறிச் செல்லும் வலிவைத் உங்களுக்குத் தந்திருக்குமென்று நம்புகிறேன்.
//நாங்களோ ஏழு கடல் தாண்டி அலைகின்றோம். இன்னும் இருப்புத்தான் தரிக்கவில்லை/
:(
ஏதோதோ மனது நினைத்தாலும், சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை [வழக்கம்போல....]
"தமிழன்" க்கு எத்தனை repeatதான் சொல்றது...
உங்களின் கனமான வார்த்தைகள் முக்கியமான ஒரு அனுபவத்தைப் பதிவு செய்து வைக்கின்றன. அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். ஆறுதல் என்று என்ன சொல்ல?
உங்கள் ஊர் பற்றீய பரவசங்களை விடவும் துயரங்கள் தான் மனதை அழுத்துகிறது.. :(
பூனைக்குட்டி தந்த அதிர்ஷ்டம் என்ன வென்றும் நிகழ்ந்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள். :)
'பயணம்' என்ற வார்த்தையில் 'ண'வை எடுத்துவிட்டால் 'பயம்'ஆகிவிடும். அப்படி அமைய இராணுவ நெருக்குதல் மட்டும் காரணமில்லை. வேறு சில துணைக்காரணங்கள் இருந்தன.
தீவு!எல்லாவற்றையும் எழுதவில்லை. உண்மையில் இதுவொரு மேலோட்டமான விவரணையே. பகிர்ந்துகொள்ளப்பட முடியாத பல விடயங்கள் நடந்திருந்தன.
நிமலன்! உங்கள் வீடு உயர்பாதுகாப்பு வலையத்தினுள் இல்லையெனில் முயற்சித்துப் பார்க்கலாம்.
வணக்கம் லக்கிலுக்!உங்கள் பெயரிலுள்ளள அதிர்ஷ்டம் எனக்கு எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றி கடந்தபதிவில் எழுதியிருப்பதாக நினைவு. பயத்திலும்'சிலீர்'இடலாம்:)
தமிழனுக்கு என்னவாயிற்று? திரும்பத் திரும்ப வந்திருக்கிறீர்கள். என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஊரை தொலைவிலிருந்து வேறொருவரின் கண்களால் பார்ப்பதென்பது எத்தனை வருத்தமளிப்பது என்பதை உணர்வேன். எனது சொந்த இடம் எதுவென்று கேட்டிருந்தீர்கள். பெற்றோர் யாழ்ப்பாணம்.நான் பிறந்தது திருகோணமலையில். மணமுடித்தது வன்னி வளநாட்டில்... புலம்பெயர்ந்து வாழ்ந்தது கனடாவில்... எது எனது சொந்த இடம்?தெரிந்தால் சொல்லுங்கள்:)
"தாய் மண்னை தரிசித்த புத்துணர்ச்சி நடந்த சில கசப்பான அனுபவங்களை உதறிச் செல்லும் வலிவைத் உங்களுக்குத் தந்திருக்குமென்று நம்புகிறேன்."
உண்மைதான் லஷ்மி!பத்து நாட்கள் இங்கில்லாதிருந்ததில் பலவற்றைத் தவிர்த்திருப்பதாகவே நினைக்கிறேன். சிறு விடுப்பு எடுத்திருந்தீர்கள். நீங்கள் மறுபடியும் எழுதவந்தது குறித்து மகிழ்ச்சி.
ரசிகன்! :( துக்கக்குறிக்குப் பக்கத்தில் ஒரு குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது..எல்லாம் கடந்துபோகும் என நான் ஒரு ஞானியைப் போல் இப்போது சொல்லவேண்டும்:)))
தென்றல்!ஏதாவது திட்ட நினைத்தீர்களா என்ன...:) என்ன சொல்ல வந்திருப்பீர்கள் என்று என்னால் ஊகிக்க முடிகிறது.
ஆறுதல் ஓன்றும் வேண்டாம் செல்வராஜ். இதுவொரு இனத்தின் துயரமென்ற புரிதல் போதும். அவர்கள் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என தெரிந்தால் போதும்.
கட்டாயம் பகிர்ந்துகொள்கிறேன் கயல்விழி முத்துலெஷ்மி.. ஏன் அடிக்கடி பெயர்மாற்றம்?
சிறப்பாக அமைந்த எழுத்து இந்த பதிவு.
அன்பின் தமிழ்நதி,
பயண அனுபவத்தை சொற்களால் வலிக்கச் செய்யும் வித்தைகள் கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.
தாய்தேசம்,தாய் இரண்டையும் பிரிந்திருக்கும் போதுதான் அருமை தெரிகிறது.ஆனாலும் அந்த அருமையை உணர்வதற்கான விலை?வலி.
வீட்டில் இரண்டு நாட்கள் மட்டும்தான் தங்கினீர்களா சகோதரி?பிரயாணக் களைப்பு நீங்கவே ஒருநாள் பிடித்திருக்கும்.
தமிழ்,சிங்களப்புத்தாண்டு நாட்களின் இறுதியில் கொழும்பிலிருந்து இரயில் பயணமென நினைக்கிறேன்.அதற்கு முந்தைய வாரமாயிருந்திருந்தால் மூச்சுவிடக் கூட இடந்தராத கூட்டமாயிருந்திருக்கும்.
'அகதி நாய்'என்ற சொல்லை எழுதாமல் இருந்திருக்கலாமே சகோதரி?
மனது வலிக்கிறது.
என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதையும் உங்கள் ஏக்கத்தையும் (உங்களுடையது மட்டுமல்ல ) முடிந்தவரை பகிர்ந்திருக்கிறீர்கள்... நன்றி...
ஊர் நினைவுகளில் சில நிமிடம் அப்படியே இருந்து விட்டேன்...
கடந்த நாட்களில் உங்களுக்கு நடந்த பிரச்சனைகளுக்கும், மன வேதனைகளுக்கும் நான் எந்த கருத்தும் சொல்லவில்லை என்பது என் வருத்தம் ஆனால் அது பற்றி நானும் கதைத்து உங்கள் மனதை இன்னும் பாரமாக்க கூடாது என்பதற்காக தவிர்ததிருந்தேன் அத்தோடு நான் அந்த அளவுக்கு அறிந்தவனுமல்ல...
உண்மையில் எனக்கு அந்த விகடன்கூட இன்னமும் கிடைக்கவில்லை... என் நிலமை அப்படி...மீண்டும் அதனை நினைவு படுத்தியதற்கு மன்னிக்கவும்...
சரி இனி இந்தப்பதிவுக்கு வருவோம் என்ன எப்படி இருக்கிறது... ஊர்... ஒரு மாதிரியான விரக்திதான் மிஞ்சியது... உங்கள் பதிவினை படித்த பின்பான என் சிந்தனையின் முடிவில்...
இலங்கை என்பது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம் என்பதும், கடவுள் இளைப்பாற உருவாக்கிய தோட்டம் என்பதும் நான் சிறுவயது கட்டுரை ஒன்றில் எழுதிய நினைவு... இப்பொழுது... தேவமாதாவுக்கான குடிசை கூட குண்டடி பட்டு கிடக்கிறது...
தேவையற்றதொரு நகர்வில் தவறான பாதையில் பயணம் செய்கின்றன இலங்கையின் நாட்கள் பார்க்கலாம மக்கள் எப்பொழுது விழித்துக்கொள்கிறார்கள் என்பதை...
nunniya visayangal thoovallaaka! vum thookkalaakavum ulla arumaiyaana pathivondrai vaasikka alithamaikku nandri!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி. இப்போது எழுதுவது குறைந்துபோய்விட்டது.
"'அகதி நாய்'என்ற சொல்லை எழுதாமல் இருந்திருக்கலாமே சகோதரி?
மனது வலிக்கிறது."
ரிஷான்!நான் ஏதாவது பிரச்சனைக்குள் மாட்டுப்படும்போதெல்லாம் சில போலித்'தேசியவாதிகள்'அனானியாக வந்து 'அகதி நாய்க்கு இங்கென்ன வேலை?'என்ற கேள்வியைத் தவறாமல் கேட்பதுண்டு. சொந்தப் பெயரில் கேட்டாலாவது அவர்கள் பேரில் ஒரு மதிப்பிருக்கும். அந்தத் துணிச்சலும் இல்லாமல் வந்து கேட்பவர்களின் பால் ஒரு இளக்காரந்தான் உண்டு. அவர்களுக்காக எழுதிய வரி அது.
கிங்!'கடவுள் இளைப்பாற உருவாக்கிய தோட்டம்'இப்போது அங்கில்லை என்பதை என்னைவிடவும் நீங்கள் அறிவீர்கள். நிச்சயமற்ற வாழ்வின் வலியோடு வாழ விதிக்கப்பட்டோம். எத்தனைக்கென்றுதான் சுயஇரக்கம் கொள்வது? மரணகாலத்தின் மெளனசாட்சிகளானோம்.
ஓசை செல்லா!அவ்வப்போதெனினும் வந்து வாசிப்பதற்கு நன்றி. கொஞ்சநாள் நடைமுறை வாழ்வு என்னையும் வாசிப்பிலிருந்து தள்ளிவைத்துவிட்டது.
எல்லோரும் சொல்லிச்சென்றபின்பும் இன்னும் மிச்சமிருக்கிறது வார்த்தைகள் ஆனால் அதை தேடி எடுக்கும் திராணியற்றுப்போனது மனது.. மிகவும் நெகிழ்வான பதிவு..
Post a Comment