5.20.2008

மிருகாபிமானம்


எங்கள் தெருவில் ஒரு நாய் சதாசர்வகாலமும் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. போகும்போதும் வரும்போதும் தன் ஈரம் நிறைந்த கறுப்புக் கண்களால் எங்களை அண்ணாந்து பார்க்கும். வெயிலோ மழையோ அதன் கழுத்திலிருக்கும் சங்கிலி மட்டும் அவிழ்க்கப்படுவதேயில்லை. யாரோ ஒரு மகானுபாவன் வீட்டைக் கட்டி, அதற்குக் காவலாக ஒரு நாயையும் கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தப் பிரமுகரின் ஓய்வில்லமாக அது இருக்கக்கூடும். அவரின் உத்தரவு அன்றேல் வேண்டுகோளின் பிரகாரம் அதே தெருவிலிருக்கும் ஒரு கூலித்தொழிலாளியின் குடும்பம் அதைப் ‘பார்த்து’க்கொள்கிறது. பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. உணவோ தண்ணீரோ வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் சொற்பம். எப்போதாவது ‘லக்கி’ தெரு முனைவரை கொண்டுவரப்படும்; பிறகு இயற்கை உபாதைக்கென தூக்கிய கால் தூக்கியபடியிருக்க இழுத்துப்பறித்துக் கொண்டுபோய்விடுவார்கள். லக்கி walking போகிறதாம். முதலில் புளு குறொஸிற்கு அறிவிக்கலாமென யோசித்தோம். ஆனால், அமைப்புகள் மீதான அவநம்பிக்கையும் அயர்ச்சியும் அவ்வாறு செய்யவிடவில்லை. நாளடைவில் ‘லக்கி’யைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். நாங்கள் ஊரை நீங்கிய பிற்பாடு அந்த நாய் என்னாகும்? அதனைக் கட்டிவைத்து வெயிலைக் குடித்து பைத்தியம் பிடிக்கவைக்கும் உரிமையை அந்த வீட்டுச்சொந்தக்காரரிடம் கையளித்தது யார்?

கடவுள் என ஒருவர் இருந்தால், பிராணிகளின் படைப்பு விடயத்தில் அவர் முழுமுட்டாளாக இருக்கவேண்டும். மனிதனிலும் ஓரறிவு குறைந்த(அதையும் மனிதர்கள்தான் சொல்கிறார்கள்)விலங்குகளுக்கான தேவை இவ்வுலகில் என்ன? காவலுக்கு நாய், எலி பிடிக்கப் பூனை, வண்டி இழுக்க மாடும் குதிரையும்…(சில சமயம் சகமனிதனும்) இயற்கையிலிருந்து விலங்குகள் வரை தன் தேவைக்கியைபுற வளைத்துக்கொள்ளும்படியாக மனிதனை கூடுதல் அறிவோடு படைத்தது அந்தாளின் குற்றமல்லவா?

தெருக்கள்தோறும் தோல் மட்டும் வயிறாய் அமையப்பெற்ற நாய்கள் அலைகின்றன. குப்பைக் கூடைகளுள் இறங்கி அரிதிலும் அரிதான உணவைத் தேடுகின்றன. அவற்றின் பசி தேங்கிய பார்வையிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்தோடிக்கொண்டிருக்கிறோம். ஒரு உச்சுக்கொட்டலில் பின்னால் ஓடிவந்துவிடுமோ என அஞ்சி அதன் கண்களையே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டியிருக்கிறது. ‘என்னை யாராவது கூட்டிப்போக மாட்டீர்களா?’என்ற இறைஞ்சுதலோடு நூற்றுக்கணக்கான பிராணிகள் வீதிகளெங்ஙணும் திரிகின்றன. மனிதர்களே சகமனிதர்களில் தங்கியிருக்க நேரும்போது, ‘நாயே’எனப் பார்க்கும் இக்குரூர உலகில் நிஜ நாய்களின் கதி அதோகதிதான்! உங்களில் எவரேனும் ‘ஜாதி’நாய்களைத் தெருக்களில் கண்டிருக்கிறீர்களா? ஏன் ராஜபாளையமோ, பொமரேனியனோ, ஜேர்மன் செப்பேட்டோ, டால்மேஷனோ வீதியில் திரிவதில்லை? பூனைகளோவெனில் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகின்றன. பூனைகள் களவெடுக்கின்றனவாம்! ஆத்திசூடி, பஞ்சசீலம், திருக்குறள், இன்னா நாற்பது-இனியவை நாற்பது இன்னபிறவெல்லாம் படித்துமுடித்துவிட்டு பசிதீர்க்கவும் ஆடம்பரமாக வாழவும் மனிதன் களவெடுக்கும்போது, ஓரெழுத்தும் வாசிக்கத் தெரியாத பூனை களவெடுத்தாலென்னவாம்? விசுவாசமற்றவையாம்! ஐயோ… இந்த மனிதர்கள்-புனிதர்களாலாயது இவ்வுலகு!

‘அவன் பாம்பு மாதிரி… பழகுவது கவனம்’என்று இந்த மகாமனிதர்களிற் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். எந்தப் பாம்பாவது ‘சிவனே’என்று நின்றிருக்கும் உங்களை நோக்கி ஓடோடிவந்து கடித்ததுண்டா? உங்கள் படுக்கையின் கீழ் கிடக்க நேர்ந்து, நீங்கள் காதல் மற்றும் கடன் நினைவில் புரண்டு புரண்டு உங்கள் மாமிசத்தால் அதனை அழுத்தும் வலியில் கடிக்கிறது. இல்லையேல் அதனை மிதித்தால் கடிக்கிறது. தற்காப்பு வன்முறை, திருப்பித்தாக்குதல் என்பன எல்லா உயிர்களிடத்தும் உள்ளதே. முகட்டுவளையில் சுருண்டிருக்கும் பாம்பைக் கண்டால், விரட்டிவிரட்டிக் கொல்கிறோம். பயிர்பச்சைகளினடியில் தன்பாட்டில் சரசரத்துப்போகும் பாம்பை போவெனத் துரத்திவிடுவதில்லை. மாற்றான் படை கண்டாற்போல ஊரையே கூட்டி அடித்துக் கொழுத்தி துவம்சம் செய்யும்வரை அடங்குவதில்லை நம் கொல்வேட்கை. எத்தனை எத்தனை போராளிகள் காடுகளில் எல்லைக் காவலுக்கு இருக்கிறார்கள். பாசறை அமைத்து முறைவைத்து உறங்கவும் உறங்குகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் பாம்பு தீண்டி மரணித்தார்கள்? மறுபடியும் இந்தக் கடவுளைத்தான் வம்பிற்கு இழுக்கவேண்டியிருக்கிறது. அவர் ஒரு பாரபட்சன். வளவளவென்றொரு தோலும், நெளிநெளியென்று நெளியும் அரியண்ட நகர்தலும் அதற்கு மட்டுமேன்? பாம்பு கடித்தாலும் விஷம். நாய் கடித்தாலும் விஷம். பூனை கடித்தாலும் விஷம். இதில் நாய் நன்றியுள்ளது. பூனை விசுவாசமற்றது. பாம்பு படையையும் நடுங்கவைப்பது. எல்லாற்றுக்கும் ஒவ்வொரு குணங் கற்பிக்கும் மனிதன் எந்தவகைக்குள் அடங்குகிறான்?

‘பிராணிகளுக்காகப் பரிந்துரைப்பது சரி…எத்தனை நாடுகளில் எத்தனை மனிதர்கள் வறுமையாலும் போராலும் மடிந்துகொண்டிருக்கிறார்களே… அது கவனத்தில் உறுத்தவில்லையா…?’ என்று ‘மனிதாபிமானிகள்’எவரேனும் கேட்கக்கூடும். வறுமைக்குக் காரணம் வளங்களின் பாரபட்ச பகிர்தல். ஆதிக்க மனோபாவமும் பேராசையும் கூடிப்பெற்ற குழந்தைதான் போர். கடவுள் என்றொருவர் இருந்து இந்த உலகம் அவரால் படைக்கப்பட்டிருந்தால் அனைத்துயிரும் சமமே என்றெண்ணியல்லவோ படைத்திருப்பான்? (இங்கும் படைத்திருப்பாள் என்று சொல்ல முடியாது. என்னே மொழிப்பிரட்டு, சூழ்ச்சி) மனிதன் மட்டும் இதிலென்ன உசத்தி…?இயற்கைச் சமநிலையையும் குழப்பவல்ல சர்வவல்லமை படைத்ததாலா? அதிலும் அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், நடிகர்கள் இன்னபிற பிரமுகர்களின் உயிர் பொற்சரிகைப்பட்டில் பொதியப்பட்ட வைரக்கல் (அல்லது ‘பிளாட்டினம்’). சாதாரணர்களின் உயிர் உதிரும் ஒற்றை மயிருக்குச் சமானம். அதிகாரச் சேற்றிலூறிய நாட்டாமைக்காரர்கள் மனுச மனங்களில் ஊன்றியிருக்கும் விஷவித்துக்களை நினைத்தால், வலியற்ற மரணத்தைத் தேர்ந்து போய்விடலாம்போலிருக்கிறது. (போவது போவது என்று சும்மா போக்குக் காட்டுவதுதானன்றி வேறில்லை)

இந்தக் கோபத்தை என்னதான் செய்வது? அயர்ச்சியூட்டும் உறவுகளிடம் காட்டவியலாது. அலையவைக்கும் அதிகாரிகளிடம் காட்டவியலாது. நாகரிகம் கருதி நண்பர்களிடம் வெளிப்படுத்தமுடியாது. பொறுக்கிக்கொடுத்த மாம்பழங்களை ஒரு வித்தைக்காரனின் சாகசத்தோடு கண்ணெதிரிலேயே மாற்றும் நடைபாதைக் கடைக்காரனிடமோ, ஏறும்போதும் இறங்கும்போதும் வெவ்வேறு நாக்குகளால் பேசும் ஆட்டோக்காரனிடமோ, நாறிய மீனை விற்றுத்தள்ளிப்போன மீன்காரியிடமோ காட்டுதல் சாத்தியமன்று. கண்ணில் பொய்முள் பொருத்திய கபடர்களிடமோ, பூமி உருண்டையானது என்று நிறுவப்பட்டதையே தம் வாய்ச்சாதுரியத்தால் சதுரமாக்கிவிடக்கூடிய சில விதண்டாவாதிகளிடமோ பேசவியலாது. பரபரப்பிற்காக மற்றவர்களின் உணர்வுகளைப் பலியிடும் சில பத்திரிகையாளர்களிடமும் காட்டலாகாது. இப்போதைக்கு கோபத்தை பிராணிகளின் மீதான கருணையாக மடைமாற்றுவதொன்றே வழி. இன்று எழுத்து கோபத்தை தன் முதுகில் வாங்கிக்கொண்டது. பாவந்தான். அதுவும் ஒருவகையில் வாய்பேசா வளர்ப்புப்பிராணிதான். அதனாற்றான் அதன் மீதான வாஞ்சை நாளாக நாளாக பெருகிக்கொண்டேயிருக்கிறது.

பிற்குறிப்பு: இதனை எழுதத்தூண்டிய ‘லக்கி’(அ)க்கும் தெருநாய்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் என்று சொல்வதன் மூலம் இதனை முழுமொக்கையாக்கிப் போகிறேன்.

17 comments:

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

உங்கள் அதே ஆதங்கம் எனக்கும் உண்டு.
எப்படியாவது அந்த கட்டி வைக்கப்பட்ட நாயை விடுதலையளிக்க முயற்சியெடுங்கள்.

விலங்குநல சங்கங்கள் அங்கு அதற்குதவுமென நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது எனது இந்தப்பதிவுகளைப் பாருங்கள் சகோதரி.

http://rishansharif.blogspot.com/2008/05/blog-post_18.html

http://rishansharif.blogspot.com/2008/05/blog-post_10.html

தமிழ்நதி said...

பார்த்தேன் ரிஷான். சில புகைப்படங்களைப் பார்க்கமுடியவில்லை. அந்த ஷீலின் கண்களைப் கவனித்தீர்களா? 'லக்கி'இப்போது எங்கள் கவனிப்பில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் போனபிற்பாடு அதன் கதி என்ன ஆகும்? அதற்குள் அந்த வீட்டுக்காரர்கள் வந்துவிட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

செல்வநாயகி said...

:((

கிரி said...

உங்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. அதே போல நான் சென்று விட்டால் இதை யார் கவனிப்பார்கள் என்ற உங்கள உண்மையான ஆதங்கத்தை பாராட்டுகிறேன். பெரும்பாலான சமயங்களில் மிருங்கங்கள் யார் மனிதர்கள் யார் என்ற சந்தேகம் வந்து விடுகிறது.

லக்கிலுக் said...

அந்த நாலுகால் நண்பனின் பெயரும் லக்கியா? கிழிஞ்சது போங்க... :-)

ரசிகன் said...

நியாயமான கோபம்.சரியான கேள்விகள்:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

"எழுத்து கோபத்தை தன் முதுகில் வாங்கிக்கொண்டது. பாவந்தான்." என்ன செய்ய தோழி.. பலசமயம் நமக்கான வடிகால்களாக எழுத்தைத்தான் கொள்ளமுடிகிறது. மொத்தத்தில் அன்பெனும் ஜீவநதி கூட வற்றித்தான் போய்விட்டது ஏதேனும் எதிர்பார்ப்புக்களற்ற மானுடம் அரிதாகிவிட்டது.

Unknown said...

Dear Tamil-Nathi,
I’m appreciating your humanity, I can understand your feelings, which dog must get freedom, and there are no choices other than this. Who is going to punishable for this?

Anyhow I’m strongly condemned about your wording Tamil-Nathi, really it is hurting me. I love Almighty GOD, if you not believe god, it upon you, please don’t force to others.

// கடவுள் என ஒருவர் இருந்தால், பிராணிகளின் படைப்பு விடயத்தில் அவர் முழுமுட்டாளாக இருக்கவேண்டும் //

How can you say? God must be an idiot? See we are humans, we can think as much we can, everything has a reason, most of animal created by helping the humans, as our wrong view, few are torture these animals. If they are right human, they shouldn’t do this. Kindly avoid such words in future.


I’m sorry if I hurt you by my words.

please follow this link about the god http://readislam.net/atheism2.htm

Thanks
--Mastan Oli

தமிழ்நதி said...

நன்றி செல்வநாயகி வந்ததற்கும் வருந்தியமைக்கும்.

கிரி!மிருகங்கள் சில சமயங்களில் சமூகம் வரையறுத்திருக்கும் மனுசக் குணங்களோடும் மனிதர்கள் மிருகக் குணங்களோடும் நடந்துகொள்வது உண்மைதான்.

லக்கி!இந்தக் 'கிழிஞ்சது'என்ற சொல்லின்பால் ஏன் இத்தனை ஈர்ப்பு? 'டவுசர் கிழிவது' என்று கேட்டால் உங்கள் ஞாபகந்தான் வருகிறது. ஆம்.. இந்த லக்கியும் வாலை ஆட்டும்:) கோபத்திலும் நன்றியிலும்.

நன்றி ரசிகன்!பெயருக்கேற்றாற்போல எங்கிருந்தாலும் வந்து பாராட்டுகிறீர்கள்.

கிருத்திகா!எதிர்பார்ப்பற்றவர்களாக நாமாவது நடந்துகொள்ள வேண்டும் என்ற நினைப்பு வர வர வலுப்படுகிறது.

மஸ்தான்!

Anyhow I’m strongly condemned about your wording Tamil-Nathi, really it is hurting me. I love Almighty GOD, if you not believe god, it upon you, please don’t force to others.

என்று சொல்லியிருந்தீர்கள். கடவுளை கேள்விகளற்று நீங்கள் நேசிக்கலாம். ஆனால், கடவுளைப் பற்றி எனக்குத் தோன்றுவதைத்தான் நான் எழுதமுடியும். I can't write to satisfy others. I am expressing what i think. and i didn't force anyone to accept my opinion. did i?

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. எனது எனக்கு. கடவுள் என்றொருவர் நிச்சயமாக இருக்கிறார்; அவர் அநியாயங்களைச் சகித்துகொள்ள மாட்டார் என்றால் ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் ஏன் அத்தனை உயிர்கள் பலியெடுக்கப்பட அனுமதித்தார்? ஏன் வலியவர்கள் கையோங்கியிருக்கவும் எதுவுமறியாத எளிய மனிதர்களும் குழந்தைகளும் கொல்லப்படவும் நேர்ந்தது?

http://www.puthinam.com/full.php?2b1Voqe0dUcYA0ecKA4I3b4g6D74d3f1e3cc2AmI3d424OO2a030Mt3e

என்ற பக்கத்திற்குப் போய்ப்பாருங்கள். நேற்று ஈழத்தில் முறிகண்டி என்ற இடத்தில் உடல் சிதறி 16 பேர் பலியெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்விடத்தில் நின்று சிதைந்த அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் கடவுளைப் பற்றி என்ன மரியாதை ஏற்படும்? எனது கடவுள் நம்பிக்கை நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் கடவுளை நான் நம்புகிறேன். ஆனால் விமர்சனங்களோடு. கடவுள் மட்டும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா என்ன?

"Kindly avoid such words in future."

என் எழுத்தை எனக்குத் தோன்றும் வகையில்தானே எழுதவியலும்? அது எனது உரிமை அல்லவா? 'இப்படி எழுதுங்கள்'என்று சொல்வதுகூட வன்முறைதான் நண்பரே! பிடித்தால் படிக்கவும் பிடிக்காவிட்டால் மூடவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது.

கோபம் ஒன்றுமில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. வருகைக்கு நன்றி.

selventhiran said...

வணக்கம்; நேற்றைய தினமணியில் (25/05/08) தங்களது சிறுகதைத் தொகுதிக்கு அருமையான விமர்சனம் வந்திருக்கிறது பார்த்தீர்களா?!

லக்கிலுக் said...

//லக்கி!இந்தக் 'கிழிஞ்சது'என்ற சொல்லின்பால் ஏன் இத்தனை ஈர்ப்பு?//

கட்டுடைத்தல் என்ற சொல்லுக்கு எளிமையான மாற்றுச்சொல்லாக இதை எடுத்துக்கொள்ளலாம். அவ்ளோ தான்! :-)

தமிழ்நதி said...

நண்பர்கள் சொன்னார்கள். பத்திரிகை வாங்கி நானும் பார்த்தேன் செல்வேந்திரன். பத்திரிகையில் நம் பெயர் பார்க்கும்போது ஏற்படும் வழக்கமான புளகாங்கிதம் ஊறியது. கலாரசிகன் என்பது யாரென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். என்றாலும் எல்லோரும் சொல்லிவைத்தாற்போல இப்படியொரு கேள்வியைக் கேட்டால் எப்படி...? அதுதான் 'அடுத்தது நாவல்தானே?' கலாரசிகனும் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். உங்களில் யாராவது ஒருவர்தான் அந்த விமர்சகரா?

'கட்டுடைத்தல்'என்பதெல்லாம் உங்களைப்போன்ற பின்நவீனத்துவவாதிகளின் சொல்லாடல்:) என்னைப் போன்றவர்களுக்குப் புரியாது லக்கி.

லக்கிலுக் said...

//'கட்டுடைத்தல்'என்பதெல்லாம் உங்களைப்போன்ற பின்நவீனத்துவவாதிகளின் சொல்லாடல் என்னைப் போன்றவர்களுக்குப் புரியாது லக்கி.
//

இதைவிட யாராலும் பயங்கரமான மரண அடியை எனக்கு கொடுக்க இயலாது :-(

தமிழன்-கறுப்பி... said...

நீண்ட நாட்களுக்குப்பிறகு...11 வருடங்களாக இருந்து செத்துப்போன எங்கள் வீட்டின் தம்பியை ஞாபகக்படுத்தயிருக்கிறீர்கள்...


(ஆனா இப்ப சொன்னா நம்புங்க நான் ஒரு நாயைப்பார்த்து கிட்டத்தட்ட 27 மாதங்கள்... )

selventhiran said...

கலா ரசிகன் யாரென்று தெரியவில்லை. அருமையான நாவலை எழுதுவதற்குறிய அடையாளங்களும், நம்பிக்கையையும் கதைகளிலும், கவிதைகளிலும் தென்பட்டால் ஒரு நல்ல வாசகன் அதை எதிர்பார்க்கத்தானே செய்வான். நீங்கள் நாவல் எழுத ஆயத்தமாகிவிட்டீர்கள்தானே?!

கால்கரி சிவா said...

நம்ம காந்தி சொன்ன பொன்மொழியை பாருங்கள்

"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."
- Mahatma Gandhi"

அந்த வகையில் வளர்ப்பு மிருகங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் கனடா அழிக்கும் உரிமைகள் ஏராளம். ஒரு வளர்ப்பு பிராணியை கொடுமை படுத்தினால் தண்டனை நிச்சயம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனிதர்களே சகமனிதர்களில் தங்கியிருக்க நேரும்போது, ‘நாயே’எனப் பார்க்கும் இக்குரூர உலகில் நிஜ நாய்களின் கதி அதோகதிதான்!

ம் சர்வ நிச்சயமாய்