2.18.2009

ஒரு பயணம்… சில குறிப்புகள்…



விமானம் கொழும்பில் தரையிறங்கப்போகிறது என்றதும், வழக்கமாக ஒரு குதூகலம் பற்றிக்கொள்ளும். அதுநேரம்வரை ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த காலம் ஒரே முள்ளில் உறைந்ததுபோலாகிவிடும். வாய்கொள்ளாமல் அள்ளித் தின்னச் சொல்லி ஆவலாதி கூட்டும் பஞ்சுப்பொதி மேகங்களினூடே தளம்பித் தெரியும் கடலும் தென்னை மரங்களும் அழகின் பரவசத்தில் மூழ்கடிப்பன. இம்முறையும் அதே நிலம், அதே நிறங்கள்… பார்வை மட்டுமே வேறு. இங்கே மரணம் இருந்தாற்போல வந்து குதிக்கவில்லை என்றபோதிலும், பார்த்துக்கொண்டிருப்பவர் முகத்தில் இரத்தமும் நிணமும் தெறித்துப் பதைபதைக்க வைக்கும் வெட்டுப்பாறையாக இந்நிலத்தை உணர்வது இதுவே முதன்முறை.

போர் நடக்கும் தேசம் என்பதை, ஓடுபாதை நெடுகிலும் காணக்கிடைத்த மணல்மூட்டைகள் அடுக்கப்பட்ட கரும்பச்சை நிறக் காவலரண்கள் ஞாபகமூட்டிக்கொண்டிருந்தன. விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் விசாரணைச் சாவடிகளில் அடையாள அட்டைகளையும் பைகளையும் பரிசோதித்துக்கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் (?) தென்பட்டார்கள். போரின் விளைவுகளிலொன்றாய் வீதிகளில் பல போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் காரணத்தால், கொழும்பினுள் திரிவதென்பது சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் செயலாயிருக்கிறது. காலிமுகக் கடற்கரையை அண்டிய ஒரு பகுதி ‘உயர் பாதுகாப்பு வலயம்’என்ற அறிவிப்புடன் இராணுவத்தினர் மொய்த்திருக்கக் காணப்பட்டது. அலரி மாளிகைக்கு முன்னால் ஒரு குஞ்சும் செல்லவியலாது. அதன் முன் அமைக்கப்பட்டிருக்கும் உயரமான காவலரண்களில் துப்பாக்கிகள் கண்துஞ்சாது உறுத்து விழித்திருக்கின்றன.

எத்தனை அழகிய நாடு! ஐரோப்பிய மேட்டுக்குடித்தனத்தின் நாகரிகம் பூசிய கட்டிடங்கள், மரப்பச்சை குளிர்விக்கும் சாலைகள், நாற்சந்திகளின் மையங்களை அலங்கரிக்கும் பூச்செடிகள், மேலைநாடுகளுக்குச் சற்றும் குறைவுபடாத வசதிகளை உள்ளடக்கிய நகரம்…. காற்றில் பயத்துணிக்கைகள் விசிறப்பட்டிருக்க இயங்கிக்கொண்டிருந்தது. எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்ற பிடரிக்கூச்சம் எல்லோருள்ளும் இருக்கவே இருக்கும். அம்புலன்ஸ் வண்டி அபாய ஒலியெழுப்பியபடி விரையும்போது, அடியில் படிந்திருக்கும் பயவண்டல் ஒரு கணம் கலங்கி மேலெழுந்து அடங்குகிறது.

தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் சனநெரிசல் முன்னரிலும் குறைவாக இருப்பதாகத் தோன்றியதற்கு, பயத்தின் கண்களால் நான் பார்த்ததுகூடக் காரணமாயிருக்கலாம். கிளம்பிக்கொண்டிருக்கிற புகையிரதத்தை ஓடிப்பிடிக்க எத்தனித்தவர்கள்போல விரையும் சாலையோர ஓட்டக்காரர்கள் குறைந்து போனதாய் தோன்றியது. ஏறக்குறைய யாருமற்ற பின்மதிய வீதிகளை விடுதியறையிலிருந்து பார்க்க நேர்ந்தது புதிய அனுபவம்.

வன்னியைப் பொறுத்தளவில் உணவு, மருந்து மற்றும் கருணைக்குத் தடை என்றால், கொழும்புவாழ் தமிழர்களுக்கு செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் அவதானமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பேசுகின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் நேரம் மட்டும் திரை வான நீலமாகி மௌனித்துவிடுகிறது. ‘ஏன்?’ என்று கேட்டேன். ‘அது அப்படித்தான்’என்றார்கள். வீட்டுக்குள் தொலைக்காட்சி உண்மைகளைக் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்களை ‘செய்திக் குருடர்’களாக்கி வைத்திருக்கிறது அரசாங்கம். ‘நேத்ர’என்ற தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகும் செய்திகளை மட்டுமே அவர்களால் பார்க்க, கேட்க முடியும். அது அரசாங்கத்தால் நடத்தப்படும், அரசாங்கத்துக்கு உவப்பான செய்திகளை ஒளிபரப்பும் ஒரு நிலையம். நான் போன வீட்டில் ‘நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் அப்பட்டமான பொய்களைக் கேட்க எரிச்சலாக இருக்கிறது’என்றார்கள். இதைக்கூட எழுந்து, முன் கதவை மூடிவிட்டே அவர்களால் சொல்லமுடிந்தது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் ‘மக்கள்’ தொலைக்காட்சி இனப்படுகொலையின் மீது வெளிச்சம் விழுத்தியது என்ற காரணத்தால், அதற்கும் இலங்கையில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பதாக இங்கு வந்து சேர்ந்ததும் பார்த்த செய்தியின் வழி அறியமுடிந்தது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக, வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொல்லும் ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது மேலதிகமான ஆடம்பரத் தேவைதான்.

ஆக, அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மறுத்தால் பிடித்து அடைத்துவிடுகிறார்கள். அல்லது லசந்த விக்கிரமசிங்காவைக் கொன்றதுபோல கொன்றுவிடுகிறார்கள். உண்மையைப் பேசுவதைக் காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா?
=== ==== =====

‘திருடன் வேண்டுமென்றே சில தடயங்களை விட்டுச்செல்கிறான். அவன் உள்மனதில் பிடிபடும் ஆசை இருக்கும்போல…’என்று யாரோ (சுஜாதா என்றே நினைக்கிறேன்) எழுதியிருந்ததை எப்போதோ வாசித்த ஞாபகம். நம் எல்லோருக்குள்ளும் சாகசம் நோக்கிய குறுகுறுப்பு இருக்கத்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்களின் மிகப்பெரிய துயரம் யாதெனில், இலங்கையிலுள்ள வீடுகளுக்குச் செல்வதே ஒரு சாகசமாகவும் சாதனையாகவும் ஆகிவிட்டிருப்பதுதான். ‘வராதே… வராதே…’என்று பயத்தோடு சொன்ன அம்மாவின் குரலில் ‘வர மாட்டாளா என் பிள்ளை!’என்ற ஏக்கம் ஒளிந்திருந்தது.

நாடோடிகள் பயணங்களால் உயிர்வாழ்கிறார்கள். குறிப்பாக வீடுகளில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் பெண்களுக்கு பயணம் ஒரு விடுதலை, கொண்டாட்டம், உற்சவம். விமானம், கார், பேருந்தைவிட புகையிரதப் பயணங்களில், வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்துபோயிருக்கும் எங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடிகிறது. மாசி மாதப் பனி நிலத்திலிருந்து இரண்டடிக்கு மேல் செறிந்து அடர்ந்திருக்க, உள்ளங்காலுக்குள் குளிர் குறுகுறுக்க, பூ மலர்வதுபோல பொழுது மெல்ல மெல்ல அவிழ்வதைப் பார்த்தபடி பயணித்தேன். வழியெல்லாம் ஒரே நினைவு கூடக் கூட ஓடிவந்தது. ‘என்ன ஒரு அழகிய நாடு இது… ஐயோ! போர் தின்று அழிகிறதே…!’

தாமரைக் குளங்கள், விழுந்து புரளத் தூண்டும் பச்சை வயல்வெளிகள், தன் இருப்பைப் பல மைல்களுக்கு முன்னமேயே செழிப்பின் வழி கர்வத்தோடு அறிவித்து ஓடும் ஆறுகள், வெடித்த பஞ்சுகள் வெண்கொக்குகளாய் தொங்கிக்கொண்டிருக்கும் இலவமரங்கள், இப்பூமியில் வந்துதித்ததே கடக்கும் புகையிரதத்திற்குக் கைகாட்டுவதற்குத்தான் என்பதேபோல் முகமெல்லாம் விகசித்திருக்கக் கையசைக்கும் சிறுபிள்ளைகள்….

வெயிலின் அதிகாரத்தின் முன் பணிந்து கலைகிறது பனி. இருந்தாலும், தாய்மையின் கனிவோடு காற்றில் குளிரை விட்டுவிட்டே செல்கிறது. கவிஞர் சுகுமாரனின் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’இப்போது கூடவே வருகிறது. தன்னுணர்வு மிகுந்த இயல்பின் எழுத்து அது. மிகைப்படக் கூறும் வழக்கமில்லை. இருந்தபோதிலும், திடீரென உணர்ச்சிச் சுழியில் நம்மைச் சிக்கிச் சுழலவைத்துவிடும் தன்மையது. சுகுமாரன் அவர்களின் கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. மிகப் பிடித்த ஒரு பாட்டின் நாத அதிர்வு பாடல் ஓய்ந்தபிறகும் அறையினுள் சுழன்றுகொண்டிருப்பதுபோல வலியும் சுகமுமான அனுபவத்தைத் தந்தது ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’. (உயிர்மை வெளியீடு)
=== ==== ====

வீடுகளுக்கும் உயிர் இருக்குமென்று நான் நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை. மரங்களால் செடிகொடிகளால் யாவற்றையும் உணரக்கூடுமென்றுகூட நம்புகிறேன். பூனைகள் விசுவாசமற்றவை என்று யாராவது சொன்னால் என்னால் ஆதாரங்களோடு மறுத்துரைக்க முடியும். நாய்களின் ஞாபகசக்தி மனிதர்களுக்கு ஏனில்லை?

வீட்டில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது! அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது!

வாழமுடியாத என் வாழ்நிலமே! உன்னை நான் ஒருக்காலும் மறந்துபோகேன். இருந்தாலும், உன்னை எழுத்தில் ஏற்றியும் போற்றியும் வைத்திருக்க விரும்புகிறேன். வஞ்சனைகள் சூழ்ந்து துயரம் என் கழுத்திறுக்கும்போது உனது மடியில் நான் படுத்துக்கொள்வேன். என்மீது கவிழ்ந்து மூடட்டும் உன் எல்லையற்ற கருணையின் கதகதப்பு. எழுத்தின் ஒழுங்கமைவுகளுக்குக் கட்டுப்படாது கோர்வையற்று நான் நினைக்கிறாற்போல உன்னை எழுதவிரும்புகிறேன். எனக்காக பாசாங்கற்று எப்போதாவதுதான் எழுதமுடிகிறது.

இளஞ்சிவப்பு லசந்தரா என்ன காரணத்தினாலோ பட்டுப்போய்விட்டது. குருதிநிற லசந்தராவும் வெள்ளை லசந்தராவும் கொஞ்சமாய் பூத்திருக்கின்றன. நித்தியகல்யாணி நிறைய மொட்டு விட்டிருக்கிறது. மொட்டைமாடியிலிருந்து பார்க்கும்போது ஒளிர்ந்த வெள்ளை நிறத் தேமா மலர்களின் மீது காரணந் தெரிந்த கோபம். பாவம் அது என்ன செய்தது? சதா கண்மூடியிருக்கும் புத்தரை நினைவுறுத்துவதைத் தவிர. புத்தரால் செய்யத் தக்கதும் ஒன்றுமில்லை. பஞ்சசீலத்தை மறந்தவர்களால் வணங்கப்படும் கொடுவிதிக்கு ஆளானது அவரது குற்றமல்லவே! ஈரப்பலா செடியொன்று மதாளித்த இலைகளுடன் ‘நானும் நானும்’என்று வளர்கிறது. வீட்டின் பின்புறத்திலுள்ள அம்பரலங்காய் மரம் உயர்ந்து கிளைகளை நீட்டி தண்ணீர்த் தொட்டிக்குப் போகும் படிகளை மறைத்துக்கிடக்கிறது. ஜாம் மரத்தின் கிளைகள் முற்றத்தின் பெரும் பகுதியில் நிழல் படர்த்துகின்றன. நான் வரமுடியாமற்போன இந்த ஒன்றரை வருசத்தில் செவ்விளநீர் மரங்கள் குலைகுலையாய் காய்த்து, பாரந்தாங்காமல் சில குலைகள் முறிந்து வீழ்ந்ததாகச் சொன்னார்கள். ‘உனக்கு எங்கள் வீட்டு மாதுளம் பழம் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை’என்றார் அப்பா. இழந்தது மாதுளம்பழங்களை மட்டுமா?

விடிகாலையில் கையில் தேநீர்க் குவளையோடு செடிகொடிகளோடு பேசும் வழக்கத்தை மாநகர வாழ்வு விழுங்கிவிட்டது.

பொன்னி நாய்க்கு வயதுபோய்விட்டது. சின்ன வெடிச்சத்தம் கேட்டாலும் வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துகொள்கிறதாம். என்னைக் கண்டதும் மற்ற இரண்டு நாய்களும் தோள்வரை எகிறின. பொன்னி மட்டும் நாணமுள்ள பெண்பிள்ளை போல கால்களைப் பின்னிக்கொண்டு தள்ளித் தள்ளி நின்றது. பிள்ளைகள் பிறந்து அவற்றுக்கு விருத்தெரிந்ததும் எங்கள் வீட்டை விட்டு பக்கத்து வீட்டுக்குக் குடிபெயர்ந்து போய்விட்ட பூக்குட்டியை அதன் ‘புகுந்த வீட்டில்’ போய்ப் பார்த்தேன். நான் போட்ட சாப்பாட்டை மிக விரைவாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு பஞ்சுக்குவியலாக மடியில் படுத்திருந்தது. ஒரு காலத்தில் அது எத்தனை செல்லமாயிருந்தது என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பனிபொழியும் அந்த இரவில் நான் நீண்ட நேரமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். இனி அது அவர்களின் மீன்பொரியலைக் களவெடுத்துச் சாப்பிட்டாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மை தீட்டப்பட்டதுபோன்ற கரிய அழகிய கண்களை அகல விரித்து எல்லோரையும், எல்லாவற்றையும் குட்டியாயிருந்தபோது விடுப்புப் பார்த்த காரணத்தால் ‘புதினம்’என்று எங்களால் நாமகரணம் சூட்டப்பட்ட பூனைக்குட்டி இம்முறையும் நிறைமாதக் கர்ப்பிணி. போன தடவை நான் போனபோது எனது காலடியில் குட்டிகளை ஈன்று, பூனை பற்றிய கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருந்தது. போன நிமிடத்திலிருந்து என் பின்னாலேயே திரிந்தது. தூக்கி வைத்து வயிற்றைத் தடவிக் கொடுக்க சின்ன அனுக்கமாக ‘மியாவ்’என்றது. ஒவ்வொரு தடவலுக்கும் ஒவ்வொரு மியாவ். இரவு உறங்கப்போனபோது பூட்டப்பட்ட எனது அறைக்கதவின் முன் தவங்கிடந்தது. காலையில் ஆறு மணிக்கே சுப்ரபாதம் பாடித் துயிலெழுப்பிவிட்டது. ‘பார்த்துப் பார்த்துச் சாப்பாடு வைத்தும் உனக்குப் பின்னால்தானே திரிகிறது’என்றார் அம்மா வருத்தமும் பெருமிதமும் ஒருசேரத் தொனிக்க. எனது அறை வாசலில் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும் புதினத்தை நினைத்துப் பார்க்க, அந்தப் பட்டுக் குஞ்சுக்காக என்றாலும் போர் நின்றுபோகலாகாதா என்று ஏங்குகிறேன். ‘எத்தனை மனித உயிர்கள், உடமைகளுக்கில்லாத முக்கியத்துவமா பூனைக்குட்டிக்கு?’என்று நீங்கள் கேட்பீர்கள். மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…?பூனைகளதும் நாய்களதும் உலகத்தைத் திருடும் உரிமையை மனிதர்களாகிய நம்மிடம் கையளித்தது யார்?
=== ==== ====

இந்தப் பந்தியை எழுதத் தொடங்கும் முன் வவுனியா என்பது வேறு வன்னி என்பது வேறு என்பதைச் (அறியாதவர்களுக்கு) சொல்லிவிடுகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு இவைகள்தாம் வன்னிப்பகுதி. வவுனியா என்ற இடம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியில் வன்னிக்குச் சற்று முன்னதாக இருக்கிறது. வவுனியா இப்போது அகதிகளின் நகரமாகிவருவதுதான் செய்தி. வவுனியாவில் வாழ்பவர்கள், போர் நடக்கும் வன்னியிலிருந்து கொண்டுவந்து இறக்கப்படுபவர்களை ‘அகதிகள்’என்றே விளிக்கிறார்கள். எழுதுவதன் வசதி கருதி நானும் அவ்விதமே வலியோடு அழைக்கவேண்டியிருக்கிறது.

வவுனியாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் தற்காலிக அகதி முகாம்களாக்கப்பட்டுவிட்டன. வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், காமினி சிங்கள மகாவித்தியாலயம், நெளுக்குளம் மகாவித்தியாலயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம், மெனிக் பாம் (முன்பு மாணிக்கம் வளவு), பம்பைமடுவில் பல்கலைக்கழகத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதி ஆகிய இடங்களில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு பதினொரு மணியளவில் வவுனியா பிரதான வீதியருகில் ஏதிலிகளாக கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்த மக்களை முகாமுக்குக்குக் கொண்டுசெல்வதன் முன் தான் பார்த்து நெஞ்சுருகிப் போனதாக நண்பர்களில் ஒருவர் சொன்னார். அவர்களில் சிலர் வீதியோரத்திலேயே படுத்துறங்கிக் கிடந்தார்கள் என்று சொல்லிவிட்டு, ‘எப்படியெல்லாம் வாழ்ந்த சனங்கள்’என்று கண்கலங்கிப் பெருமூச்செறிந்தார். தனது கண்களுக்கு முன்னால் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்து விழுந்து கிடக்க அவர்கள் மீது ஏறிக் கடந்து தப்பித்து வந்ததாகப் பெரியவர் ஒருவர் சொன்னார். உயிரோடும் ஞாபகங்களோடும் மட்டும் தப்பித்து வந்தவர்கள் இதுவரையில் முப்பதாயிரத்திலிருந்து முப்பத்தைந்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வவுனியா வைத்தியசாலையின் பிணவறையில் அடையாளந் தெரியாத பல சடலங்கள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. வன்னியிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் வயிற்றுப்போக்கினாலும், காய்ச்சலினாலும் அவதிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ‘அவர்களைப் போய்ப் பார்க்கலாமா?’ என்று கேட்டபோது, அவ்வாறு போய்ப் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படவும் கைதுசெய்யப்படவும் கூடுமென்று தெரிவிக்கப்பட்டது. நான்கு தடவைகள் அந்த நோயாளிகளைப் போய்ப் பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதிய கட்டில்கள் இல்லாத காரணத்தால் வெறுந்தரையிலும் நோயாளிகள் படுத்திருப்பதாகச் சொன்னார்கள். அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சில அகதிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வெளியிலிருப்பவர்களோடு தொடர்பாடக் கூடாதென்பதில் இராணுவத்தினர் மிகுந்த இறுக்கம் காட்டிவருகின்றனர். வவுனியாவில் இருக்கும் உறவினர்கள் யாராவது அகதிகளைப் போய்ப் பார்ப்பதாயின், பதினைந்தடிக்கும் தள்ளிநின்றே பார்க்க முடியும். பேசமுடியும். இடையில் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டிருக்கின்றன. பதினைந்தடி தள்ளி நிற்கும் உறவுகளோடு கத்திப் பேசும்போதுகூட பக்கத்தில் எப்போதும் யாராவது கண்காணித்தபடி இருக்கிறார்கள். மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி வந்தவர்கள், கடும் மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பவர்கள், வாழ்வின் சகிக்கமுடியாத குரூரப் பக்கத்தைக் காணும் துர்ப்பேறு பெற்றவர்கள் அதைத் தமது உறவுகளுடன் பகிர்ந்து ஆற்றிக்கொள்ள முடியாத நிலையில் கைதிகளைப்போல வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்னோடு பேசிய இளம் பெண்கள் இருவரின் பெற்றோரும் சகோதரர்களும் அகதி முகாமில் இருந்தார்கள். ஒரு பெண்மணியின் மகளும் குழந்தைகளும் அகதிகளாக வந்திருந்தார்கள். இன்னொரு பெண்ணின் மகளும் குழந்தைகளும் வவுனியா வந்துவிட, கணவர் வன்னிக்குள் சிக்கியிருக்கிறார். சிகிச்சைக்காக வவுனியாவுக்கு முற்கூட்டியே வர வாய்த்ததனால் அந்தப் பெண்மணி தப்பிவிட்டார். அவர் கணவரை நினைத்து எந்நேரமும் அழுதபடியே இருந்தார்.

முகாம்களுக்குள் சில சமயம் வெளியிலிருந்து உணவுப்பொதிகள் அனுமதிக்கப்படுகின்றன. சில சமயம் திருப்பியனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறைகளுக்குள்ளும் குழுக்களாகப் பிரித்துவிடப்பட்டிருப்பவர்களில் குறிப்பிடப்பட்ட ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பெரிய பாத்திரம் ஒன்றுடன் அனுப்புகிறார்கள். அவர் தனது அறையிலிருப்பவர்களுக்காக வரிசையில் நின்று தேநீர் வாங்கிவருவார். மதிய உணவு பெரும்பாலும் மூன்றரை மணிக்கு முன்னதாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

திரும்பி வரும்போது காமினி மகாவித்தியாலயத்தைக் கடந்து வரவேண்டியிருந்தது. பளபளக்கும் வெள்ளிக்கம்பிச் சுருள்கள் பாம்புகளாய் முகாமுக்கும் வீதிக்கும் இடையில் சுருண்டிருந்தன. உள்ளே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பதினைந்தடி தொலைவில் இருந்தபடி என்ன பேசுவது? “அம்மா! உங்களை நினைத்து நாங்கள் அழுதுகொண்டிருந்தோம்”என்ற வார்த்தைகளை, அத்தனை தொலைவில் இருந்தபடி எப்படிச் சொல்வது? “தங்கச்சீ! நீ சாப்பிட்டியா?”என்று உரத்த குரலில் எங்ஙனம் கத்திக் கேட்பது? “என்ரை பிள்ளை உயிரோடை இருக்கிறானா? அவனை நீங்கள் பாத்தீங்களா?”என்று ஒரு தாய் வன்னியிலிருந்து வந்திருப்பவர்களைப் பார்த்து அத்தனை கண்காணிப்பிற்கிடையில் எப்படிக் கதறியழுவாள்? மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன், தணிக்கைக்குட்படுத்தப்பட்ட வார்த்தைகளால் பேச விதிக்கப்பட்டவர்களாயினர் எமது மக்கள்.
=== ==== ====

காலை அப்படியொரு குளிராயிருக்கிறது. மதியம் அப்படியொரு அனலாய் எரிக்கிறது. புகையிரத நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட ‘செக்கிங்கா?’என்றேன். ‘இல்லை. தினமுரசு பேப்பர்’என்றாள் வழியனுப்ப வந்த தோழி. ‘வேண்டாம்’என்றேன். ‘இல்லை… வாங்க வேண்டும்’என்றாள். ‘பேப்பர் வாங்காவிட்டால் பிரச்சனை’என்றாள் ஆட்டோ நகரத்தொடங்க. புலிகளுக்கு எதிரான செய்திகளைத் தாங்கிவரும் தினமுரசை வாசிக்க அன்றேல் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் மக்கள். ஆக, நாங்கள் பார்க்கும் தொலைக்காட்சிச் சானல், வாசிக்கும் பத்திரிகை தொடக்கம் வாழும் நாட்களின் எண்ணிக்கை வரையில் எதுவும் எங்கள் கைகளில் இல்லை. இன்ன நேரம்தான் மலங்கழிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டாலும் வியப்பதற்கொன்றுமில்லை. அகதி முகாம்களில் அதுவும் சாத்தியமே.

புகையிரத நிலையத்தில் பயணப்பொதிகளைக் கிண்டக் கொடுத்து நிற்கும்போது அந்தரங்கம் என்று இந்த நாட்டில் ஒன்றுமில்லை என்று எண்ணத்தோன்றியது. தங்கிய முகவரி, தங்கவிருக்கும் முகவரி, பயணத்தின் காரணம் எல்லாம் கேட்டறிந்து எழுதிக்கொண்டார்கள். எனது புகைப்படக் கருவியை நாயிடம் கொடுத்து ‘குண்டில்லை’என்று கண்டுபிடித்தார்கள். மிக நீண்டநேரம், நீண்ட வரிசையில் புகையிரத நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. குழந்தைகள் அழுதுகொண்டிருந்தார்கள். பெரியவர்கள் போர் நடந்துகொண்டிருக்கும் தேசத்திற்கேயுரிய பொதுப்பண்பாகிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

கொழும்பை நெருங்கும்போது புகையிரதம் தடக்கென்று நின்றது. நின்றது நின்றதுதான். மூன்று மணி நேரமாகியும் சண்டி மாடு போல படுத்தே கிடந்தது. யாருக்கும் காரணம் தெரியவில்லை. வேறொரு புகையிரதம் தண்டவாளம் மாறி வந்துவிட்ட காரணத்தால் தாமதம் என்ற தகவல் கிளம்பும் நேரத்தில் வந்துசேர்ந்தது. நல்லவேளை அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’கையில் இருந்தது. எத்தகைய வரண்ட மனநிலையில் இருப்பவர்களையும் குளிர்த்திவிடும் எழுத்துக்குச் சொந்தக்காரருக்கு நன்றி. அந்தக் கொதிநிலையிலும் நான் ஒரு புத்தகத்தில் குனிந்து என்பாட்டில் சிரித்துக்கொண்டிருப்பதை எவரும் கவனித்திருந்தால் ‘ஐயோ பாவம்’என்று (நன்றி தோழி) பரிதாபப்பட்டிருப்பார்கள். தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத தருணத்தில் நுட்பமான நகைச்சுவையொன்று-பயணத்தில் சடக்கெனத் தோன்றிப் பின்னகரும் நீர்நிலைபோல-இனிமையாகக் குறுக்கிடும்.

இனிய இசை, நல்ல புத்தகம், உண்மையான நண்பர்கள்… உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், கையசைத்துப் பிரிந்துவிட முடியாமலிருப்பதற்கான பட்டியல் நீண்டது. அன்றேல் அவையெல்லாம் உயிராசைக்கு வலுச்சேர்க்கும் அழகான சப்பைக்கட்டுகள்.

=== ==== ====

மனம் களைத்திருக்கிறது. எதற்காகவும் போர் வேண்டாம் என்றே தோன்றுகிறது. ‘எல்லோர் குருதியும் சிவப்பு... எல்லோர் கண்ணீரும் உப்பு’என்ற வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். சாவுக்களை படிந்த, நம்பிக்கைகள் நமுத்துப்போன, குற்றஞ்சாட்டும் அந்த விழிகளைப் பார்க்கும்போது, ‘எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள்.’என்று கையுயர்த்தி இறைஞ்சி அழ மட்டுமே தோன்றுகிறது. நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்?


18 comments:

சாந்தி நேசக்கரம் said...

போர் தனது கொடிய வாயினுள் நம்மை இழுத்துப் போகிறது. வாழ்வு மீதான பிடிமானமும் வரலாறு மீதான நம்பிக்கையும் கேள்வியாய்.....

இன்றும் தூக்கத்தில் இருந்தவர்கள் 108பேர் காரணம் சொல்லப்படாமல் கொத்தணிக்குண்டுகளால் குதறப்பட்டுள்ளார்கள்.

பயணங்களின் குறிப்புகளோடும் பழைய நினைவுகளுடன் தொலைந்த வசந்தங்களுடனும் புலத்தில் நாம்....

தங்கள் பயண அனுபவம் எனக்கானது போல பகிர்வுகள் இருக்கிறது தோழி. பாராட்ட முடியவில்லை. இதயம் வலிக்கிறது.

சாந்தி

Test said...

என் நண்பர்கள்...?

Anonymous said...

//வவுனியா என்பது வேறு வன்னி என்பது வேறு என்பதைச் (அறியாதவர்களுக்கு) சொல்லிவிடுகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு இவைகள்தாம் வன்னிப்பகுதி. வவுனியா என்ற இடம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியில் வன்னிக்குச் சற்று முன்னதாக இருக்கிறது.//

தமிழ் நதியக்கா வவுனியாவில் வீடு கட்டியிருக்கிறபடியால் அது வன்னிக்குள் வரவில்லையா என்ன.. எனக்குத் தெரிந்து வவுனியாவும் வன்னிக்குள்தான் வருகிறது. பழை வன்னியா யாழ்ப்பாணமா..

வன்னி என்பது இப்போத பலரால் பெருமையாகவும் சிலவேளை கருணைபொங்கவும்,வெறுப்பாகவும் பேசப்படுகின்றபோதும்.... ஒரு காலத்தில் வெறுப்பாகவும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை என்பதற்கு என்னிடம் நேரடியான அனுபவங்கள் இருக்கின்றன.. அதை விடுவோம்.. சிலவேளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிற எதுவும் வன்னிக்குள் வராதெண்டு அர்த்தமெண்டால் வவுனியாவும் வன்னிக்குள் வராதுதான்..

சனிக்கிழமை இரவுச்சாப்பாடு வாழ்க...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

M.Rishan Shareef said...

//மனம் களைத்திருக்கிறது. எதற்காகவும் போர் வேண்டாம் என்றே தோன்றுகிறது. ‘எல்லோர் குருதியும் சிவப்பு... எல்லோர் கண்ணீரும் உப்பு’என்ற வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். சாவுக்களை படிந்த, நம்பிக்கைகள் நமுத்துப்போன, குற்றஞ்சாட்டும் அந்த விழிகளைப் பார்க்கும்போது, ‘எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள்.’என்று கையுயர்த்தி இறைஞ்சி அழ மட்டுமே தோன்றுகிறது. நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்? //

சகோதரி,இதேதான் எனது கருத்தும் :(

தமிழ்நதி said...

வருகைக்கு நன்றி சாந்தி,

உண்மை. ஒரு கவிதையை நன்றாக இருக்கிறது என்பதற்கப்பால் சில சமயங்களில் எதுவும் சொல்ல முடிவதில்லை. சில வலிகளை எழுதும்போது ‘வலியை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்’என்று சொல்ல முடிவதில்லை. எஞ்சியிருக்கும் மக்களது நிலை மிக மோசமாக இருக்கிறது.

புரியவில்லை கோபி. இவ்வளவு சுருக்கமாகக் கேட்டால்…?


பெரியவர்கள் சொன்னால் சில விடயங்களைத் தெரிந்துகொள்கிறேன்:)நான் அவ்வாறு பிரித்து எழுதியதற்குக் காரணம் ‘எனது அப்பா-அம்மா வவுனியாவில்’என்றால், ‘ஐயோ! அங்கே பிரச்சனையல்லவா?’என்று என்னோடு பேசுபவர்கள் பதறிப்போய்க் கேட்பார்கள். தவிர, வன்னியும் வவுனியாவும் சில காலமாக மாறுபட்ட பொருளிலேயே புழங்குகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள். அதற்கு நீங்கள் சொன்ன ‘இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாக வவுனியா இருப்பதும்’காரணமாக இருக்கலாம். எனது ஞாபகத்தில் வவுனியா என்பது வன்னியாகக் கருதப்படுவதிலிருந்து விலகி நாளாயிற்று. இது இன்ன இடம் என்று எழுதிவைத்த எல்லைகள் இன்னமும் நிலைத்திருக்கின்றனவா என்ன? போர் எல்லாவற்றையும் மாற்றிப் போடுகிறது. பளை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிதான்.

நீங்கள் சொல்வது சரி. வன்னி என்பது நாகரிகம் குறைந்தவர்கள் வாழும் பகுதி என்பதாய் யாழ்ப்பாணத்தவர்களால் கருதப்பட்ட, பேசப்பட்ட ஒரு காலம் இருந்தது. அதேபோல ‘மட்டக்களப்பார்’என்றால் கொஞ்சம் இளக்காரந்தான். தவிர, ‘பாயோடு ஒட்ட வைத்துவிடுவார்கள்’என்று பேசி நான் கேட்டிருக்கிறேன். ‘திருகோணமலையார்’கொஞ்சம் பரவாயில்லை என்பார்கள். ‘வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே’என்று இன்னமும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாபமும் ஒன்றாகச் சூழ்ந்துதான் நாம் இப்படியாகிவிட்டோம். போர் கொடிதென்றாலும் சில மேடு பள்ளங்களை வெளிப்படையாக நிரவியிருக்கிறது. உள்ளுக்குள் இன்னமும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

“சனிக்கிழமை இரவுச் சாப்பாடு வாழ்க”

மறக்கவில்லை. பின்னூட்டம் விட்டு நினைவுபடுத்துகிறீர்களாக்கும்:)

நன்றி வலைப்பூக்கள் குழுவினர்.

ரிஷான்,

ஊருக்குப் போய் வந்தபிறகு, ‘எஞ்சியிருக்கும் சனங்களேனும் காப்பாற்றப்படட்டும்’ என்ற எண்ணமே வலுப்பெற்றிருக்கிறது.

தமிழன்-கறுப்பி... said...

முன்னெப்பொழுதோ நானோ அல்லது கிங் என்கிற நண்பரோ சொன்னது போல தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு, கடவுள் இளைப்பாற உருவாக்கிய தேசம் என்கிற அடை மொழிகளோடு இருந்த இலங்கையை...
எவ்வளவு அழகான நாடு இப்படி இல்லாமல் செய்கிறார்களே என்கிற விரக்தி ஆளைத்தின்னுவது உண்மை...

தமிழன்-கறுப்பி... said...

வேண்டாம் இந்த யுத்தம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறிக்கொண்டிருக்கிறது மனது...

பதி said...

//உண்மையைப் பேசுவதைக் காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா?//

நிதர்சனமான வரிகள்....

//வீட்டில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது! அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது!//

நாடற்று அழையும் இனங்களுக்கு வீடு என்பது கூட ஒரு கிட்டாப் பொருள் தானோ???

கிட்டாமலே போய்விடுமா என்ன?

//மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…?//

இது போன்ற பல கற்பிதங்கள் தான் வரலாறு நெடுக மனிதத்தின் மேல் தன் இரத்தக் கரை(றை)யை விட்டுச் சென்றுள்ளது.

//இழந்தது மாதுளம்பழங்களை மட்டுமா?//

வழக்கம் போல மனதை கனமாக்கிவிடுகின்றது ஒவ்வொரு வார்த்தைகளும்......

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்?


மிகவும் வலிக்கின்ற உண்மை.
இதயம் கனத்துப்போனது தோழி.
விடியலை வேண்டி....

kalyani said...

வலிகள் வார்த்தைகளை விழுங்குகின்றன அக்கா.கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்கிற ஒரு நம்பிக்கை கே(ள்வி)லியாகி விட்டது.மஹிந்தவின் கணிப்பில் தமிழரின் உடமைகள்(பூனை , நாய் உட்பட)அனைத்தும் சமம்.இராணுவதினரின் குண்டுகள் எதைத்தான் மிச்சம் விட்டன?கணவரைப் பிரிந்து வவுனியா வந்த மனைவியின் துயரம் தான் என் மனதிலும்.எதற்காக உயிரைக் காப்பாற்றிக்கொண்டு இங்கு வாழ்கிறோம்.கண்ணுக்கு முன்னாலேயே என் இனம் அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கும் கையாலாகாத்தனம் எமக்கு மட்டும் கிடைத்த சாபமா?

kalyani said...

இனிய இசை, நல்ல புத்தகம், உண்மையான நண்பர்கள்… உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், கையசைத்துப் பிரிந்துவிட முடியாமலிருப்பதற்கான பட்டியல் நீண்டது. அன்றேல் அவையெல்லாம் உயிராசைக்கு வலுச்சேர்க்கும் அழகான சப்பைக்கட்டுகள். யதார்த்தமான வரிகள்.அன்பிற்குண்டோ அடைக்கும் தாள்.என்பதை விட ஆசைக்குண்டோ அடைக்கும் தாள் என்பதே மிகவும் பொருந்தும் தற்காலத்தில்

தமிழ்நதி said...

தமிழன் கறுப்பு,

'வேண்டாம் இந்த யுத்தம்... மக்கள் அழிந்துபடுகிறார்கள்'என்று கதறும் அந்நேரம், 'இத்தனை காலமும் கொடுத்த உயிர்விலை என்னாவது?'என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டுக்கும் இடையில் இழுபடும் மனது.

வருகைக்கு நன்றி பதி,

உங்கள் வலைப்பூவைப் போய்ப் பார்த்தேன். ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. 'எழுதி என்ன செய்யப் போகிறோம்' என்ற கேள்வி எழுந்தாலும் எழுதாமல் இருக்க முடியாமலிருப்பதுதான் உண்மை.

அமித்து அம்மா,

தொடர்ச்சியாக வந்து வாசிப்பதற்கும் கருத்துச் சொல்வதற்கும் நன்றி. எழுத்தும் கூட ஒரு சம்பிரதாயமாக, தப்பித்தலாக முடிந்துவிடுமோ என்ற குற்றவுணர்வில் இருக்கிறேன்.

அன்பு கல்யாணி,

நீங்கள் வந்து எனது வலைப்பூவை வாசிப்பதும் பின்னூட்டமிடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது வீட்டுப் பெயரும் உங்கள் பெயரும் ஒன்று. உங்கள் கணவரின் பெயரும் எனது கணவரின் பெயரும் ஒன்று. போதாக்குறைக்கு இருவரும் சகோதரர்கள். உங்களுக்கு இசையில் ஆர்வம். எனக்கு எழுத்தில் ஆர்வம். நீங்கள் புலம்பெயர்ந்து எங்கோ... (நாம் பார்த்ததுகூட இல்லை அல்லவா) நான் நாடோடியாக எங்கெங்கோ... பாருங்கள் நாம் பேசிக்கொள்வதேயில்லை. பேசாதிருப்பதால்தான் இன்னமும் நேசித்துக்கொண்டிருக்கிறோமோ என்னமோ:)

மனம் வலிக்கிறது கல்யாணி. ஒவ்வொருவர் சொல்லும் கதைகளையும் கேட்க 'அப்படி இருக்கக்கூடாது'என்று பிரார்த்திக்கிறேன்.

"கண்ணுக்கு முன்னாலேயே எம் இனம் அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கும் கையாலாகாத்தனம் எமக்கு மட்டும் கிடைத்த சாபமா?"

வேறென்ன... சாபந்தான்! இப்போதைக்கு நம்பிக்கையோடு இருப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்?

"ஆசைக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?"

எல்லா ஆசையிலும் உயிராசை பிரதானமானது. ஏனையவை எல்லாம் உபரி ஆசைகள்தாம்.

உங்கள் வலைப்பூவில் பதிவுகள் இடத்தொடங்குங்கள். தமிழ்மணத்துடன் இணைப்பதாயின் முதலில் மூன்று பதிவுகள் இடப்படவேண்டும். இணையம் என்ற நீரோட்டத்தில் இணைய வாழ்த்துக்கள் கல்யாணி.

ramachandranusha(உஷா) said...

நெஞ்சடைக்கு துக்கத்தில் ஆறுதல் வார்த்தைகள் சொல்ல வந்த பொருளை சரியாய் சொல்வதில்லை
அல்லது சொல்ல தெரிவதில்லை. இன்னும் நடக்க்கும், நடக்க இருக்கிறது என்ற கேள்விகள்
மனதை குடைகின்றன.

இந்த வார ஆனந்தவிகடனில் நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட யாழ்பாணத்து தமிழ் நதி
நீங்களாய் இருக்கும், அந்த பயண கட்டுரை இதுவாய் இருக்கும் என்று ஆவலுடன் வந்தேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ,
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_28.html

குடந்தை அன்புமணி said...

//வராதே… வராதே…’என்று பயத்தோடு சொன்ன அம்மாவின் குரலில் ‘வர மாட்டாளா என் பிள்ளை!’என்ற ஏக்கம் ஒளிந்திருந்தது//

தங்களின் நீ்ண்ட எழுத்தையும் வாசிக்க வாசிக்க... அங்கு அனுபவித்து வரும் இன்னல்களையும், அவலங்களையும் உணரமுடிகிறது. உணரத்தான் முடிகிறது.... என்ன செய்ய? காலங்கள் விடியாதா என்று கண்கலங்க காத்திருக்கிறேன்.

Anonymous said...

தங்கள் பயண அனுபவம் எனக்கானது போல பகிர்வுகள் இருக்கிறது தோழி. பாராட்ட முடியவில்லை. இதயம் வலிக்கிறது.
-RB

சஞ்சயன் said...

அருமையானதோர் பதிவு.உங்கள் பக்கத்தை இன்று தான் காண்கிறேன். நன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள்