வாழ்வில் எதிர்ப்படும் யாவற்றிலிருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். மனிதர்கள், புத்தகங்கள், அனுபவங்கள், கலைகள், ஊர்கள்… இவ்வாறாகப் பட்டியல் தொடரும். அண்மையில் என்னால் எழுதப்பட்ட ‘ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்’என்ற பதிவின் வழியாக நிறைய அறிந்துகொள்ள வாய்த்தது. எந்தப் பதிவினைவிடவும் அதிகமான வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எதிர்வினையான பதிவுகளையும் விவாதங்களையும் இந்தக் கட்டுரை ஏற்படுத்தியது எப்படி என்று நினைத்துப் பார்த்தேன். ஈழமக்களின் அவலங்களைக் குறித்து இவர்கள் இருவரும் மௌனமாயிருந்தார்கள் என்பதைக் குறித்து பெரும்பாலானோர் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால், எவரும் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பிட முனையவில்லை. யாரோ ஒருவர் அதைப்பற்றிப் பேச முற்படும்போது தங்கள் ஆதரவை வழங்க முன்வருகிறார்கள். இந்த விட்டேத்தியான மனோபாவத்திற்குக் காரணந்தான் என்ன? சோம்பலா? ‘அவர்கள் பெரிய எழுத்தாளர்கள்… அவர்களை எதிர்ப்பதாவது’என்ற அச்சமா? நாம் ஏதாவது சொல்லப்போய் வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்பதனால் வாளாவிருந்தார்களா? அஞ்சி அஞ்சியே உண்மைகளை ஆழப் புதைத்துவிடுகிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.
ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் பதில் அளிக்கும்போது ‘ஆம் நீங்கள் சொன்னது சரிதான்… இல்லை.. அதில் கொஞ்சம் தவறு இருக்கிறது’என்று பதிலளிக்கும்போதே ஒரு படி மேலே நின்று பேசுவதான தொனி, சட்டாம்பிள்ளைத்தனம் வந்துவிடுகிறது. அதைத் தவிர்க்கும் ஒட்டுமொத்தமான பதிலாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளலாம்.
தற்காலிக பெருமிதங்களால் தூண்டப்பட்டு இதனை நான் எழுதவில்லை. பின்னூட்ட உடுக்கைகளால் உருவேறித் தலைவிரித்து ஆடவும் இல்லை. (அதற்கென்று பதிவுலகில் சில பேர் இருக்கிறார்கள்.) ஒருவனை அடித்தபிற்பாடு யாரைக் கண்டாலும் சட்டைக்கை உயர்த்தித் திரியும் விடலைத்தனமும் இல்லை இது. மனங்கள்… இந்த மனங்கள்… என்று நினைத்துக் கொண்டேன். ஒருவரைப் பற்றி, அதிலும் பிரபலமான ஒருவரைப் பற்றி எழுதியதும் இத்தனை பேர் வந்து வாசிக்கிறார்களே… அந்த ஆர்வத்தின் பின்னிருக்கும் அந்தரங்கச் சுவை ஆவலை நினைத்துப் பார்த்தேன். சுவாரசியமாக இருந்தது. எழுத்தாளர்கள் சினிமாக்காரர்கள் தரத்திற்கு ஆவலைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விடயநதான்:)
பிரபலமான எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் இத்தனை வெறுப்பையும் வாசகர்களிடையில் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவ்வளவு பேர் இன்னவிதமாகப் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு சிலர் மட்டும் ‘எங்க அண்ணாச்சி வழக்கமாக கால்களால்தான் நடப்பார்; சில சமயம் கைகளால் நடக்கவேண்டியேற்பட்டுவிடுகிறது. அது அவரது பிழையன்று’என்று பேசக்கேட்பது வியப்பாக இருக்கிறது. அநியாயத்திற்கும் அறியாமைக்கும் பக்கப்பாட்டுப் பாடுபவர்கள் சமூக நீதிகளுக்கு முரணாக இயங்குகிறவர்கள். அறிவீனத்தைக் கொண்டாடுபவர்களும் அறிவிலிகளே!
பின்னூட்டங்களில் ஜெயமோகனைப் பற்றி இளக்காரமாகக் கதைத்தவர்கள் குறைவு. அவர் ஒரு இந்துத்துவவாதி, நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகளை முன்வைப்பவர் என்பதைத் தாண்டி அவர் மீது காட்டமான விமர்சனங்கள் இல்லை. ஆனால், சாரு நிவேதிதா மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. என் பதிவின் குறிக்கோளைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்குமளவுக்கு அவை அமைந்திருந்தன. சாரு ஓரினச்சேர்க்கையாளர், அறிவிலி, குடிகாரர், சுயவிளம்பரத்திற்காக எந்த எல்லைவரை வேண்டுமானாலும் செல்லக்கூடியவர் இன்னபிற விமர்சனங்கள் வந்தன. அவை உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனது பதிவின் நோக்கமே வேறாக இருந்தது. ‘நீங்கள் எங்கள் மக்கள் கொல்லப்படும்போது மௌனமாக இருந்தீர்கள். ஏறக்குறைய கொன்றுகுவித்தபின் தீர்வுகளைப் பற்றிப் பேச, உங்களுக்கு அருகதையில்லை’என்பதே நான் சொல்ல முற்பட்டது. அதனையொட்டிய விவாதங்களைத் தொடர்வதே நமக்கு இன்றைக்கு வேண்டியது. இலக்கியங்களைப் படைப்பது மட்டுமல்லாது, அநியாயங்களை எதிர்த்துக் குரலெழுப்புவதும் எழுத்தாளனின் கடமை என்பதற்கு, வரலாற்றிலிருந்து பல உதாரணங்களைக் காட்டமுடியும்.
தனது கவிதைகளால் சுதந்திரக்கனலை இந்தியர்களின் இதயங்களில் மூட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதி, லத்தீன் அமெரிக்க விடுதலைக் கவிஞர் பாப்லோ நெரூடா, பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூத் தார்வீஷ், ஈழத்துக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், சிவரமணி, மு.புஸ்பராஜா, ஊர்வசி, சு.வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஆதவன், பா.அகிலன் என இந்தப் பட்டியல் நீண்டது. (சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இளைய கவிஞர்களின் பெயர்களை¸ விடுபடல்களை அஞ்சி எழுதவில்லை.)
அண்மையில் என்னோடு கதைத்த பிரபலமான கவிஞர்களில் ஒருவர் சொன்ன வாக்கியம் மனதுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. “உண்மையான எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இயங்கவேண்டியவர்கள்”என்றார் அவர். ஆட்சியாளர்கள் தவறுகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். சுலபத்தில் தட்டிக் கேட்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் அவர்களை மண்ணிலிருந்து இரண்டடி உயரத்திற்குத் தூக்கிவிடுகிறது. எதிர்க்கட்சிகளோ தமது நலன்களின் வாயால் பேசத் தலைப்படுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதா வீட்டுக்கு முன்னால் ஒரு காகம் இறந்துகிடக்குமானால், ‘இது கருணாநிதியின் தி.மு.க. செய்த காரியம்’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்களாகவே எதிர்க்கட்சிகளின் நியாயப்பாடு இருக்கிறது. இது மாறி மாறி வரும் ஆட்சிகளுக்கெல்லாம் பொருந்தும். ஆக, உண்மையின் குரலால் பேசவேண்டியது அச்சமூகத்தில் வாழக்கூடிய அறிவுஜீவிகளின் கடமையாகிறது.
தமிழ்நாட்டுக்கு வந்த பிற்பாடு, உறுத்தலான ஒரு விடயத்தைக் கண்ணுற்றேன். அது, ‘காலில் விழும் கலாச்சாரம்’. அந்தக் கலாச்சாரத்தின் முன் வயது, அறிவு எதுவும் பொருட்டல்ல. கவிஞர்களில் பலரே தன்மதிப்பைப் பின்தள்ளிவிட்டுக் காலில் விழுந்தெழும்புவதைக் கவனித்து மனம்வெதும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்க் கவிஞர்களின் கூட்டமைப்பினரால், ஈழத்தில் நடக்கும் இனஅழிப்புக்கெதிரான கவிதை வாசிப்பொன்று மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு காலதாமதமாக கவிஞர் கனிமொழி வந்தார். அவரைக் கண்டதும் சில கவிஞர்கள் பறந்தோடிப் போய் அவரது பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். கனிமொழியின் கவனத்தைப் பெறுவதில் அவர்கள் காட்டிய அக்கறையைப் பார்த்தபோது… ம்… என்னத்தைச் சொல்ல…? முதலமைச்சரின் மகளாக இருக்கட்டும். அன்று அவர் ஒரு கவிஞராகத்தான் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இம்மாதிரியான கவன ஈர்ப்புகள் எரிச்சலூட்டுகின்றன. தனிப்பட்ட நலன்களுக்காகத் தன்மதிப்பழியும்படி நடந்துகொள்வது சகிக்கக்கூடியதாக இல்லை.
எல்லாப் புனிதங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்பதனால் மட்டுமே சமூக மாற்றங்களைக் கொண்டுவர முடியும். எழுத்தாளன் என்பவனை போப்பாண்டவர் தரத்தில் நடத்தவேண்டியதில்லை. அவன் என்ன சொன்னாலும், ‘தேவ ஆட்டுக்குட்டி வந்தேனே…’என்று பாடிக்கொண்டு பின்தொடர வேண்டிய அவசியமில்லை.
கேள்வி கேட்கப் பழகுவோம். அதிகாரங்களை, எல்லாத் துறைகளிலும் இருக்கும் ஒற்றை ஆதிக்கங்களை. இல்லையெனில், இப்படிப் பொத்திப் பொத்தி வைத்திருக்கிற நமது உயிரும் உடமைகளும் கேள்விக்குறியாகிவிடும் காலமொன்று வாசல் கதவை வந்து தட்டுவதை எதிர்கொள்ளத் தயாராகுவோம்.
குறிப்பு: ஒரு மனோநிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்துவதற்கான ஒரு பதிவாக, எனக்கே எழுதியதாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
6.01.2009
Tweet | |||||
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//யாரோ ஒருவர் அதைப்பற்றிப் பேச முற்படும்போது தங்கள் ஆதரவை வழங்க முன்வருகிறார்கள். இந்த விட்டேத்தியான மனோபாவத்திற்குக் காரணந்தான் என்ன? சோம்பலா? ‘அவர்கள் பெரிய எழுத்தாளர்கள்… அவர்களை எதிர்ப்பதாவது’என்ற அச்சமா? நாம் ஏதாவது சொல்லப்போய் வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்பதனால் வாளாவிருந்தார்களா?//
அப்படி இல்லை. அவர்களும் பேசி இருப்பார்கள். அது நண்பர்களுடனோ, பதிவுகளிலோ குழுமங்களிலோ இருக்கலாம். ஒரு சிலர் அது பற்றி பேசாமலே கூட இருக்கலாம். ஆனால், ஒரு பதிவில் ஒருவர் நமக்கு ஏற்படும் உணர்வுகளை நம்மை விட சிறப்பாக வெளிப்படுத்தும்போது அந்த உணர்வுக்கு ஆதரவு இயல்பானது தானே. அப்படியான ஆதரவாகவே நீங்கள் அந்தப் பின்னூட்டங்களை காணவேண்டும்.
இது சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னது அல்ல, மனதில் தோன்றியதைச் சொன்னேன்.
//அந்த உணர்வுக்கு ஆதரவு இயல்பானது தானே.//
அந்த உணர்வுக்கு ஆதரவு கொடுப்பது இயல்பானது தானே - என வந்திருக்க வேண்டும்.
"அப்படியான ஆதரவாகவே நீங்கள் அந்தப் பின்னூட்டங்களை காணவேண்டும்."
காண்கிறேன் ராஜா. அப்படி ஒரு பதிவை நான் வாசித்ததில்லை என்பதை வைத்து எழுதப்பட்டது அது. சுட்டிகளைத் தரமுடிந்தால் நல்லது. நன்றி.
//வ.ஐ.ச.ஜெயபாலன்//
வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு இப்பொழுதும் சுதந்திரக்கனலை மூட்டும் கவிதைகளை எழுத நேரம் இருக்கிறதா? தான் நடிக்கும் திரைப்படத்திற்கு மீசை வளர்க்கவும் மீதமுள்ள நேரங்களில் மின்னரட்டையில் பெண்களுடன் ஆசை வளர்க்கவும் அல்லவா அவரது பொன்னான நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு இருக்கிறார் :-) [இந்தப் பின்னூட்டம் தனிமனிதத் தாக்குதலாகத் தோன்றினால் வெளியிட வேண்டாம்]
//சுட்டிகளைத் தரமுடிந்தால் நல்லது.//
ஒரு சோறு இங்கே
http://asifmeeran.blogspot.com/2009/05/blog-post_27.html
/நீங்கள் எங்கள் மக்கள் கொல்லப்படும்போது மௌனமாக இருந்தீர்கள். ஏறக்குறைய கொன்றுகுவித்தபின் தீர்வுகளைப் பற்றிப் பேச, உங்களுக்கு அருகதையில்லை’என்பதே நான் சொல்ல முற்பட்டது./
சாரு நிவேதிதா ஏப்ரல் மாதத்தில் கலா கௌமுதியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் தமிழ் வடிவம் :
http://charuonline.com/May2009/srilanka.html
சாருவின் கட்டுரையைப் படித்தேன் சுந்தர்.
(தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவர முடியாத இக்கட்டுரை கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக வந்தது)
என்று கட்டுரையின் அடியில் போட்டிருக்கிறார். இந்தக் கட்டுரையை ஏன் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட மாட்டா என்பதைத் தயவுசெய்து எனக்கு அறியத்தாருங்கள். நடுநிலைமையுடனும் பக்கச்சார்புடனும் எத்தனையோ பத்திரிகைகள் இயங்கிக்கொண்டுதானே இருக்கின்றன? இங்கே வெளிவரும் அனைத்து சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் விடுதலைப் புலிகளின் அல்லது அரசின் பக்கமாகவே நின்று பேசுகின்றன என்று சொல்லிவிட முடியுமா? உங்களால் எழுதப்பட்ட பதிவொன்றைப் படிக்க நேர்ந்தது. நாம் சரியானதைப் பேசாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நின்று பொருதுகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. நமது கருத்துக்கள் சரியோ தவறோ... ஆரம்பித்துவிட்டோமே என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவதுபோன்றதொரு தோற்றம்.
தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றித் தமிழர்களிடத்தில் எழுதாமல், மலையாள வாசகர்களிடையே அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதனால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது? ஆம். ஈழத்தமிழர் பிரச்சனை இப்போது உலகளாவிய ரீதியில் பேசப்படுகிறதுதான். அது மலையாளத்தில் பேசப்படவும் வேண்டுந்தான். ஆனால், சாருநிவேதிதா அதை முதலில் தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கவேண்டும். 'தமிழில் பிரசுரிக்க முடியாத கட்டுரை'என்பது சாக்குச் சொல்கிற மாதிரி இருக்கிறது சுந்தர்.
ராஜா,
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் 'ஜாலி'யான ஆள்தான். நான் அவரோடு பேசுகிறபோது 'என்ன.. இணையத்தில் யாரோடு இப்போது கடலை?'என்றே ஆரம்பிப்பேன். அவர் ஒன்றும் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார். சில உண்மைகளை அவரும் ஏற்றுக்கொள்வார் என்றே நினைக்கிறேன்.
Hi,
I feel that the issue here is that writers become celebrities (in their own way even though their following is very less compared to the 'actual' celebrities) and an institution in themselves (with their own set of followers et.all). This results in criticisms being practically forbidden.
It's like that concept of center, where a power center is destroyed by a rebellion and the rebels themselves become a power center (i.e) what they had opposed for so long. That's why the concept of power, quoting of 'Micheal Foucault' etc by the writers is only for others, not for them. I think this would be applicable to most people.
Finally I would like to quote a pertinent verse of Sartre, when he refused the Nobel prize.
"A writer must refuse to allow himself to be transformed into an institution, even if it takes place in the most honorable form."
oru velai thangal pathivugalai ippozhuthaan vaasikka
nerndhirukkalaam allava...?
thaangal indha saathiyathaiyum
ennip paarka vendugiraen
Nandri..!
தோழிக்கு,
தங்கள் பதிவினைவிடவும் கீழுள்ள குறிப்பு நல்லாயிருக்கு.
நானும் அதே மன்நிலையிலுள்ளேன்.
என்னதான் செய்யக்கூடுமிவ்வுலகில்...?
திக்குத்தெரியாத காட்டில் இப்படி அல்லறுவதிலும் விட எனக்குப் பிடிச்ச அந்த வன்னிக் காட்டிலேயே தொலைந்து போயிருக்கலாம் என் தோழர்களுடனும் தோழிகளுடனும்.
ம்...........!
நன்றி.
கேள்வி கேட்கப் பழகுவோம். அதிகாரங்களை, எல்லாத் துறைகளிலும் இருக்கும் ஒற்றை ஆதிக்கங்களை. இல்லையெனில், இப்படிப் பொத்திப் பொத்தி வைத்திருக்கிற நமது உயிரும் உடமைகளும் கேள்விக்குறியாகிவிடும் காலமொன்று வாசல் கதவை வந்து தட்டுவதை எதிர்கொள்ளத் தயாராகுவோம்.
குறிப்பு: ஒரு மனோநிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்துவதற்கான ஒரு பதிவாக, எனக்கே எழுதியதாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.//
அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன். உங்களின் முந்தைய கட்டுரைகளுக்கும் கடைசி இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே அடிப்படை குரலில் மாற்றம் இருக்கிறது. முந்தையவற்றில் ‘ஆதர்சம்’ என்ற பெயரில் பீடங்களில் அமர வைத்திருப்பவர்களை இதில் போட்டு உடைக்கிறீர்கள். அருகாமை மனுஷனாகப் பார்க்கிறீர்கள்.
எனது இந்த வார்த்தைகள் மேடையில் அமர்ந்து தீர்ப்பு கொடுப்பதாகாது :)
அனானியாகப் பின்னூட்டமிட்ட நண்பருக்கு,
"I feel that the issue here is that writers become celebrities (in their own way even though their following is very less compared to the 'actual' celebrities) and an institution in themselves (with their own set of followers et.all). This results in criticisms being practically forbidden."
ஆம் அதுதான் இங்கே நடக்கிறது. தொடரும் யாவரும் தவறுகளைச் சுட்டுவதில்லை. விமர்சிப்பதில்லை. அவ்வாறான நிலையில் ஒரு எழுத்தாளன் தன்னைப் பிதாமகனாகக் கருதிக்கொள்ளத் தலைப்படுகிறான்.
நேசமித்திரன்,
ம் எண்ணிப் பார்த்தேன். இருக்கலாம். நன்றி. உங்கள் பதிவில் நீங்கள் போட்டிருக்கும் கவிதையின் இறுதி வரிகள் மனதை உலுக்கின.
சூரியா,
இதே பெயரில் இன்னொருவர் வந்து பின்னூட்டமிடுகிறார். பின்னூட்டத்தின் சாரம்சத்திலிருந்து யாரெனப் பிரித்தறிய முடிகிறது. 'வன்னிக் காட்டில் தொலைந்து போயிருக்கலாம்'என்று சொல்லத்தானே நம்மால் முடிகிறது... கையாலாகாத்தனத்திற்கும் குற்றவுணர்வுக்கும் இடையில் கடும் போட்டி நடக்கிறது. கடைசியில் நமது சொந்த வாழ்வின் மீதான பற்றுத்தானே வெல்கிறது...!
வாருங்கள் ஆழியூரான்,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என் வலைப்பூவில் உங்களைச் சந்திக்கிறேன். நீங்கள் சொல்லும் வித்தியாசத்தை நானும் உணர்கிறேன். ஒருவேளை இப்போதுதான் என்னிலிருந்து விடுபட்டுக் கொஞ்சம் வெளியைப் பார்க்கிறேனோ என்னவோ... 'ஆதர்சங்கள்'எனப் போற்றிய காலங்கள் இருந்தன. நான் நினைக்கிறேன்... எண்ணிறந்த துயரங்களைப் பார்க்க நேரிடும்போது, இலக்கியம் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறது என்று.
"எனது இந்த வார்த்தைகள் மேடையில் அமர்ந்து தீர்ப்பு கொடுப்பதாகாது :)"
நிச்சயமாக இல்லை ஆழியூரான். எனக்கு நண்பர்களைத் தெரியும்.
இதையும் வாசித்தேன்....
என்னவென்று தெரியவில்லை, முன்பு போல் பின்னூட்டமிடக் கூட முடியவில்லை.
எழுத்தாளர்களைப் பற்றி நீங்களும் வேறு சிலரும் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுளது தான் எனது கருத்தும்...
//"A writer must refuse to allow himself to be transformed into an institution, even if it takes place in the most honorable form."//
ம்ம்ம்ம்.. உண்மையான வரிகள்..
ஆனால், பக்கவாத்தியம் வாசிப்பவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல
//அநியாயத்திற்கும் அறியாமைக்கும் பக்கப்பாட்டுப் பாடுபவர்கள் சமூக நீதிகளுக்கு முரணாக இயங்குகிறவர்கள். அறிவீனத்தைக் கொண்டாடுபவர்களும் அறிவிலிகளே!//
அவர்கள் அறிவிலிகள் என தோன்றவில்லை. பிற்காலத்தில் ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்னும் நீண்ட காலத் திட்டத்தில் செயல் படுகின்றார்கள் என்றே தோன்றுகின்றது... இல்லையெனில் மற்றவர்கள் தவறென கருதுவதை சரியென சொல்லி கவனத்தைக் கவரும் உத்தியாக இருக்கலாம்... ஆனால் எதுவாக இருப்பினும் இதுவே இன்றைய பிழைக்கும் வழி என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்...
Post a Comment