6.24.2009

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மெளனமாயிருந்தாள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்
படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
கடல் ஒரு
நீர்க்கல்லறை என்பதன்றி.

கழிப்பறை வரிசை...
கல் அரிசி...
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?


என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொரு நாளில்
பூர்வீக வீட்டைப் பிரிய மறுத்து
போருள் தங்கிவிட்ட
என் தாய்முன் இளகலாம்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்.

"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"


---

தேவ வசனம்


தனிமைத் தாழியுள்
தன்னைக் கிடத்தியவளைப் பார்த்துவரப் போனேன்
அவள் கண்ணிலிருந்து
சுண்டியெறிந்த துளி
பல்திவலைகளாகப் பெருக
வீட்டினுள்ளே மூழ்கிக்கொண்டிருந்தாள்.

வெளியே அழைத்துப்போனேன்
மஞ்சள் பூவலைவுறும் வெளிகளில்
இல்லாத பட்டாம்பூச்சிகளை
குசலம் கேட்டாள்.
காலம் கால் நழுவும் கோயில்களில்
தானுமோர் கல்லென
இறுகிச் சொன்னாள்.
மதுச்சாலையொன்றில் ஒலித்த
ஒற்றை சாக்சபோன் இசையை
நிறுத்தும்படி பரிசாரகரிடம்
பணிந்து கேட்டாள்.

வெயில் கருக்கும் கூடல்மாநகரை
'நினைவின் மது'என்கிறாள்
'வின்கானிஸ்'உபயத்தில்
யன்னல்கள் பெயர்ந்து திரியும் இவ்விரவில்
மணிக்கூண்டில் ஒரு மணி அடித்து
பைபிள் ஒலிக்கிறது
'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை'
எழுந்தமர்ந்து சிலுவைக்குறியிட்டு
'நெகிழும்படியான தேவவசனங்களை
சந்தர்ப்பத்திற்கேற்றபடி எதிரொலிக்கிறவர்களை
செருப்பாலடியும் என் தேவனே!'என்றவள்
தன் தனிமைத் தாழியுள்
இறங்கி மரிக்கிறாள்.


'வின்கானிஸ்'-ஒருவகை வைன்

----

திரும்பவியலாத வீடுகள்

மிகுதொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
இல்லை...
கல்லாலாய கனவு
இருள்பச்சை நிற வாகனங்கள்
மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்வேலிகள்
இரும்புத்தொப்பிகளின் அடியில்
வெறியில் மினுக்கிடும் விழிகள்
இவை தாண்டி
கண்ணிக்குத் தப்பி
விதை பொறுக்கும் பறவையென வருகிறேன்.

குளிர்தரையினுள்ளே துடிக்குமோ
வீட்டின்
வெம்மைசூழ் இதயம்...!

உருக்கி ஊற்றிய தங்கமென
முற்றம் படரும் வெயிலை
கண்களுள் சேமிப்பேன்
கிணற்றின் ஆழ இருளினுள்
பளிச்சிடும் நாணயங்களை
ஓராண்டு செலவழிக்க
பொறுக்கிக் கொள்வேன்
ஓ கிளைகொள்ளாத லசந்தரா!
என் கனவினில் சொரிக சொரிக
நின் இளஞ்சிவப்பு மலர்கள்.

பூனைக்குட்டி
என் வாசனையைத் தொடராதே
தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டவளாயினேன்
பூட்டப்பட்ட என் அறையின் முன்னமர்ந்து
தீனமாய் அழைக்காதே என் செல்லமே!
அங்கில்லை நான்.

திரும்பவியலாத
யாரோ ஒருவர்
இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்
விழி பனிக்க.

----

பிதாமகனின் மீள்வருகை


இம்முறை பிதாமகன்
புத்தக அடுக்குப் பக்கம் வரவில்லை
மாமிசவாடை தூக்கலாக இருப்பதாக
சலித்துக்கொண்டார்.
அவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை
தம்பி பட்டத்திற்கு வாலென
எடுத்துப் போனபிறகு
அடுக்களைக்குள் வந்து தண்ணீர் கேட்டார்.
என் வீட்டுக் குழாயில்
கடல் வருவதில்லை என்றதற்கு
அஞ்சலோட்டத்தில் நான் பின்தங்கிவிட்டதாக
குறைப்பட்டார்.
வெறுங்கால்கள் = அடிடாய்ஸ்
என்ற சூத்திரம் எனக்குப் பிடிபடவில்லை
கைதட்டல்களின் ஓசையில்
தன்னால் உறங்கமுடிவதில்லை
என்றவரைக் குறித்து
தோழியிடம் கேட்டேன்
'ஓடுகளத்தில் அவரைக் கண்டதேயில்லை'என்றாள்.

---

ஒரே மாதிரி

காலையில் எழுந்ததும்
இந்தக் கண்ணாடியைத்தான் பார்க்கிறேன்
கண்ணில் ஒற்றும்
அம்மன் முகத்தில்
பன்னிரு வருசப் பழமைக் கருணை
நேரே நடந்து
இடதுபுறம் திரும்ப குளியலறை
தண்ணீர் நிறமற்றது
தேநீரில் துளி சுவை மாற்றமில்லை
பகல் கனவுகளின் நீட்சியாய்
துரோகமும் கோபமும்.
மாலை நடக்கப்போகும் தெருவில்
மிஞ்சி மிஞ்சிப் போனால்
ஒரு பூ அதிகமாகப் பூத்திருக்கலாம்
'பாப்பா'என்ற பைத்தியக்காரி
இன்றைக்கும் அதே சேலையோடும்
மாறாத வார்த்தைகளோடும்.

இரண்டாவது தலையணை
எப்போதும் நீள்வாட்டில்
டார்ச் லைட்
பாம்புக் கறுப்பாய் பழுப்பு மஞ்சளாய்
10.32 ஆகலாம் இன்று தூங்க
நாளை
இந்த மின்விசிறியில்தான்
தொங்குவேனாயிருக்கும்
அப்போதும் கால்கள்
ஒரே மாதிரியாகவா இருக்கும்?


---

குருதியினும் கனம் மது

நாங்கள் உங்களைப்போலவே வெளியேறினோம்
அன்றேல் வெளியேற்றப்பட்டோம்
பிரிவு கொடியது
எனினும் மரணத்திலும் மெலியது
நெஞ்சுக்கூட்டுக்குள்
குண்டுகள் சிதறும் அதிர்வுடன்
தேசங்களின் எல்லைகளைக் கடந்தோம்.

ஒரு நிந்தனையில்லை

செய்திகளாலும் மரணங்களாலும்
மட்டுமே அறியப்படும் நிலத்தை
காலப்புல் படர்ந்து மூடுகிறது.
மீட்சியிலா பனிச்சேற்றுள்
புதைந்தன எங்கள் பாதங்கள்.

இழித்தொரு சொல்லும் எழுதேன்

எது உனக்குத் திருப்திதரும்?
சமாதானப் பணியாளர்களின் வெளியேற்றம்?
ஆட்சியாளரின் கொடியேற்றம்?
போராளிகளின் பின்னடைவு?

வேலை சப்பித் துப்பிய
விடுமுறை நாட்களில்
சலித்த இசங்களையும்
அழகிய நாட்களையும்
பேசித் தீர்ந்த பொழுதில்
மதுவின் புளித்த வாசனையில்
மிதக்கவாரம்பிக்கிறது தாய்தேசம்.
ஊறுகாயிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
எதிர் அரசியல்.

வெள்ளை மாளிகையும்
மெளனம் கலைத்த இந்நாட்களில்
உன் மூளைச்சலவை
மிக நன்று.

பேசு!

அவன்...
விமானங்கள் சிதைத்துப்போன
தசைத்துணுக்குகளைப் பொறுக்குகிறான்
தலைகளையும் உடல்களையும்
சரிபார்த்துப் பொருத்துகிறான்
அவள்...
இடம்பெயர்ந்து
சேலைத்திரை மறைவில்
இறுதி இழுபறிபடும் கர்ப்பிணியின்
கைகளைப் பற்றியபடியிருக்கிறாள்
மேலும்
அவனும் அவளும்
எல்லைகளில் இறந்துபோகிறார்கள்
ஒரு புகைப்படமாய்...
தாயின் முகத்தில் கண்ணீர்த்துளியாய்...
தோழர்களின் விழிகளில் கோபமாய்...
துயரம் ததும்பும் ஞாபகமாய்...
உறைகிறான் உறைகிறாள்.

நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட!

-இந்தக் கவிதை தோழர் ஷோபா சக்திக்கும் போல்வார்க்கும் சமர்ப்பணம்:)


இம்மாதம் வெளிவந்த 'புது எழுத்து'சஞ்சிகையில் மேற்கண்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. அனைத்து அதிகாரங்களும் கைகோர்த்து எங்கள் கதையை முடித்துவைப்பதன் முன் எழுதப்பட்ட கவிதைகள்(?)இவை.

நன்றி:புது எழுத்து

22 comments:

மயாதி said...

இந்தக் கவிதைகள் நீங்கள் எழுதியதா?

நீங்கள் சமர்ப்பித்து இருப்பதை வைத்து , நீங்கள் எழுதியது என்றுதான் நினைக்கிறேன்.

கவிதை மிக அருமை , ஆனால் வார்த்தைகளின் கணம் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் நிறையப் பேர் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

ஒரு சின்ன சந்தேகம்,
உங்கள் சமர்ப்பனத்திற்கான அர்த்தத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா? நீங்கள் தப்பாக நினைக்கா விட்டால் !

தமிழ்நதி said...

ஆஹா... நானே எழுதியது...'மண்டபத்தில் யாராவது எழுதிக்கொடுத்தார்கள்'என்று நினைக்கிறீர்களா:) (திருவிளையாடல்)

கவிதைகளை எளிமைப்படுத்த முடிவதில்லை மயாதி. அதனால்தான் அது கவிதையாக இருக்கிறதோ என்னமோ... மேலும் புரிந்துகொள்வதில்லை கவிதை.. அனுபவிப்பது என்றும் சொல்கிறார்கள்.

எனது சமர்ப்பணத்திற்கான பொருள் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் அறிந்ததுதான். பொதுவெளியில் இருக்கிற தமிழகத்தமிழர்களுக்கும் புரியும். ஷோபா சக்தி போன்றவர்கள் ஈழப்போராட்டத்தை (அவர்களுடைய அர்த்தத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை) தொடர்ந்து கீழ்மைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறவர்கள். ஒரு எள்ளலுக்காக அந்தக் கவிதையை அவருக்குச் சமர்ப்பணம் என்று எழுதினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் தகராறு ஒன்றுமில்லை:)

மயாதி said...

ஐயோ தப்பாக நினைக்க வேண்டாம் !
ஒரு இதழில் வெளி வந்தது என்று சொன்னதன் காரணத்தால் அவ்வாறு சந்தேகம்.

கவிதைகளைப் சமர்ப்பித்தாவது இப்படி நல்ல கவிதைகளையும் வாசிக்க வைக்க முயற்சி செய்ய நினைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அவர்கள் எதிரான கருத்துக்களைச் சொல்வது, மனச்சாட்சிப் படி என்றா நினைக்கிறீர்கள்?

உண்மையான தமிழனின் உணர்வுகளை நிறையப் பேர் எழுதுகிறார்கள் , அவர்களிலே நன்கு திறமையானவர்களின் எழுத்துக்களே பேசப்படுகின்றன. இவ்வாறு போட்டி போட்டு பிரபலம் அடைய முடியாதவர்கள் , மாற்றுக் கருத்து என்ற பெயரில் எதிரான கருத்துக்களை எழுதி மனச் சாட்சிக்கு எதிராக பிரபலம் அடையத் துடிக்கிறார்கள்.

ஆரம்பத்திலேயே இவர்களின் கருத்துக்களை விமர்சிக்காமல் புறக்கணித்து இருந்தால் , எழுத்து உலகத்தில் இருந்தே இவர்கள் காணாமல் போய் இருப்பார்கள்.
என்ன செய்வது ?
முரணான விடயங்களை விமர்சித்து விமர்சித்தே அதற்கான அங்கிகாரத்தை ஏற்படுத்தி விடுவது நம் இயல்பு .
அதை நம்பியே பிழைப்பு நடத்துகிறது ஒரு கூட்டம்.

அதுசரி அதை விடுங்கள்,

கவிதை என்பது ``அனுபவிப்பது `` இதை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கவிதையை புரிந்து கொண்டதால் அனுபவித்தேன். புரிந்து கொள்ளாமல் ஒரு விடயத்தை அனுபவிப்பது என்பது காமத்தை புரிந்து கொள்ளாமல் கற்பழித்து காமம் அனுபவிப்பது போன்றது அல்லவா?


நான் அங்கிகாரம் பெற்ற தமிழ் எழுத்தாளர்களிடம் எல்லாம் வழமையாக தாழ்மையாக கேட்டுக் கொள்வது, அடிமட்ட சமூகத்தில் இருப்பவனும் புரிந்து கொள்ளும் படி எழுதுங்கள் என்றுதான்.
அந்த தாழ்மையான கருத்தைத்தான் உங்களிடமும் சொன்னேன்.

ஆனாலும் எழுத்து உங்கள் உரிமை , உங்கள் திறமை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

இவையெல்லாம் என் தாழ்மையான கருத்துக்கள் மட்டுமே ,!

rvelkannan said...

உங்களின் மனதின் ஆறாத வலிகளை இக்கவிதையின் வழியாக இடம் மாற்றியிருக்கிறிர்கள்

தமிழ்நதி said...

நன்றி மயாதி,

நீங்கள் கூறிய பலவற்றோடு உடன்படுகிறேன். 'தாழ்மையான'என்று சொல்லாவிட்டாலும் புரிந்துகொள்வேன். நான் அநியாயக்காரர்களிடம்தான் கோபப்படுவேன். மற்றபடி மிக நட்பார்ந்த பெண் என்றே பழகும் வட்டாரங்களில் சொல்கிறார்கள்(போதும் நிப்பாட்டு)

மற்றோர் பயணத்திற்குத் தயாராகிக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மிகுதியை நாளை பேசுவோம்.

நன்றி வெண்காட்டான். அடிக்கடி வருவதற்கும் வந்ததற்கான தடயமாக பின்னூட்டத்தை இட்டுச்செல்வதற்கும். கொஞ்சம் அவசரத்தில் இருக்கிறேன். பேசலாம் பிறகு.

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

வணக்கம் தமிழ்நதி அவர்களே!

“பிராத்தனை செய்யும் உதடுகளைவிட உதவும் கரங்களே சிறந்தது” என்பது ஒரு தலைசிறந்த பழமொழி.
தமிழீழம் தொடர்பான புத்தகம் கட்டுரை கவிதை போன்றன எழுதுவது கையாலாகாதத்தனங்களேதான். ஆனால், இவர்களைத்தான் இலக்கிய உலகு கொண்டாடுகிறது.
தமிழர்கள் தன்நாட்டில் வாழ்ந்தாலும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் கையாலாகாதவர்களேதான் என்பது எனது கருத்து. பிராத்திப்பதைவிடுத்து உதவத்துணிவோம்.
முதலில் தமிழர்கள் ஒன்றிணைவோம்.
நதிகளின் இலக்கு கடலைச்சேர்வதே. குட்டைகளைச் சேர்வதல்ல. இது தமிழ்நதிக்கும் பொருந்தும் எனக்கருதுகிறேன்.

தங்கள் வாசகன்
சரவணன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கவிதைகள், கவலைகளையே தருகின்றன :(

தமிழ்நதி said...

பயணப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடும் அவசரத்திலும் சரவணனின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் கை குறுகுறுவென்றிருந்தபடியால் இந்தப் பதில்.

நதிகளெல்லாம் கடலைச் சேரவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது சரவணன்?

போகுமிடத்தில் எங்காவது இணையத்தொடர்பு கிடைத்தால் உங்கள் பதில் குமுறலுக்குப் பதிலளிப்பேன்:)

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு கவிதையும் பொக்கிஷம்!!பூங்கொத்து!!

அமுதா said...

மனம் கனக்கிறது

soorya said...

நானும் பயணப் பையுடன் இருப்பதால், ஒவ்வொரு கவிதை பற்றியும் நீண்ட ஒரு பின்னூட்டம் இடுவேன் சில நாட்களில்.
நன்றி தோழி.

soorya said...

1.
ஆ....அ.
..............
கடல் ஒரு
நீர்க்கல்லறை

சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...

குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்

"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"
.........
இந்தவரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
ஒவ்வொரு வரியுமே ஒரு கவியை நிகர்த்தன.

கவிதை என்பது சொற்சுருக்கம் பொருட்செறிவுதான்
குறைந்த சொற்கட்டுடன் நிறைந்த அனுபத்தைக் கொடுப்பன அவை.

2.
தேவ வசனம்.

இந்தக் கவிதை, எனக்கு வேறு ஒரு அனுபவத்தைத் தந்தது.
உங்கள் வழைமையான நடை இல்லை.

முன்பு, பிரான்சின் புகழ் பெற்ற கவிஞன் ழாக் ப்ரேவரை
ஆங்கிலம் வழி தமிழுக்குப் பேர்த்துத் தோற்றுப் போன அனுபவம் எனக்குண்டு. (10 வருடங்கள் முன் கி.பி அரவிந்தன்
எடிட் பண்ணிய மெளனம் இதழ்களைப் பாருங்கள்)

ப்ரமீள், ஆத்மாநாம், கலாப்ரியா , நம்பி(விக்ரமாதித்யன்) போன்றோர்களுடன்
நான் கவிதைச் சண்டை பிடித்த காலத்தில்....
பிரக்ஞை என்றொரு இதழ் வந்தது, என்றும்
1978 ம் ஆண்டு பேராதனைப் பல்கலைகழக நூலகத்தில் நான் அதைப் பார்த்தேனென்றும்
அதில் ழாக் ப்ரேவரின் கவிதையை மொழிபெயர்த்தார்களென்றும்
.....நினைவில் இருக்கிறதா Bபார்பரா.....
அன்று பரிஸில் மழை பெய்திருந்தது..!
என்று தொடங்கிய அந்த வரிகளே ..என்னைக் காதலுக்கும்
கவிதைக்கும் இட்டுச் சென்றது என்றும் நான் சொன்னபோது
அவர்கள் அதை இரசித்ததும்
இன்றும் ஞாபகம் இருக்கிறது.
(அப்பொழுது சென்னையில் மழை பெய்யவில்லை..நினைவிலிருக்கிறதா வண்ணநிலவன்?)
..
எனக்கு ழாக் ப்ரேவரை நினைவுபடுத்துகிற ஒரு கவிநடையாகவே இதைப் பார்த்தேன்.

மதுச்சாலையொன்றில் ஒலித்த
ஒற்றை சாக்சபோன் இசையை
நிறுத்தும்படி பரிசாரகரிடம்
பணிந்து கேட்டாள்.

எனக்கு நன்றாகவே பிடித்த கவிதை இது. பின்னூட்டங்களில் யாரோ சொன்னது போல இது
எளிமையான கவிதை இல்லை.
எளிமையாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை இக் கவிக்கு.
சாக்சபோனை வைன் குடித்து ரசிக்கலாம்
நாதஸ்வரத்தை கள் குடித்து ரசிக்கலாம்.
அது அது அப்படி இருந்தால்தான் அழகு.
....
மீதியை மீண்டும் தொடர்வேன்

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

தற்பொழுது பயணத்திலிருப்பீர்கள். ஆறுதலாகப் படிக்கவேண்டுமென்றுதான் தாமதமாக இப்பதிவுக்கு வந்தேன்.

//"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"//

மிக ஆழமான கேள்வியிது. ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாப் பதிலைக் காலம் கொண்டிருக்கிறது. ஏவப்பட்ட கேள்வி சிறுமிக்கு மட்டுமானதல்ல. சக வாழ்வில் தினந்தோறும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நமது பதிலை வைத்து அகதியென்றோ, புலியென்றோ பார்வையிலேயே மட்டிட்டு விடுகிறார்கள் கேட்பவர்கள். நாம் என்ன செய்ய? :(

M.Rishan Shareef said...

//'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை'
எழுந்தமர்ந்து சிலுவைக்குறியிட்டு
'நெகிழும்படியான தேவவசனங்களை
சந்தர்ப்பத்திற்கேற்றபடி எதிரொலிக்கிறவர்களை
செருப்பாலடியும் என் தேவனே!'//

மிக மிகச் சரி சகோதரி.
இது போன்ற வாக்குறுதிகளைத் தந்து நகரும் நம்பிக்கைத் துரோகிகளுக்கு, சந்தர்ப்பவாதிகளுக்கு அடிப்பதற்கு ஒரு செருப்புப் போதாது. இனிமேல் இப்படி யாருக்கேனும் வாக்குறுதியளித்து மோசம் செய்வாயா என்று கேட்டுக் கேட்டு செருப்புகள் தேயத்தேய அடிக்கவேண்டும். அப்பொழுதாவது திருந்துவார்களா தெரியவில்லை.

M.Rishan Shareef said...

//திரும்பவியலாத
யாரோ ஒருவர்
இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்
விழி பனிக்க.//

:(

M.Rishan Shareef said...

//நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட! //

இதே கருத்தில் நானும் கவிதையென ஒன்றைக் கிறுக்கியிருக்கிறேன். நல்லவேளை யாருக்கும் சமர்ப்பிக்கவில்லை. பொதுவில் தொப்பியை எறிந்திருக்கிறேன். தலைக்குப் பொருந்துபவர்கள் போட்டுக்கொள்ளட்டும்.

நேரம் கிடைக்கும்போது பாருங்கள் சகோதரி.
http://mrishanshareef.blogspot.com/2007/11/blog-post.html

M.Rishan Shareef said...

நல்ல காத்திரமான, கூர்மையான கவிதைகள் !
பகிர்வுக்கு நன்றி சகோதரி !

King... said...

மயாதி,
அடிமட்டத்திலிருக்கும் என்று யாரைச்சொல்கிறீர்கள்,வாசிப்பின் அடிமட்டத்திலா அல்லது எனக்கு புரியவில்லை...

soorya said...

3.
கல்லாலாய கனவு,
எப்படிச் சொல்லமுடிகிறது
உனக்கு மட்டும்...??

நீ இப்படியே சாகப் போறாய்.
போ செத்துப் போ..!

அன்றொரு நாள் நானுங்கூடத்தான்
கல்யாணியைப் பார்த்தேன்.

நீங்கள் ஏன் பதிவெழுதுவதில்லை என்றாள்

எனக்குத் தமிழ்நதியை நன்றாகப் பிடிக்குமென்றேன்.

நீங்கள் இப்பொழுதும் குடிக்கிறீர்களா

என்று, கேட்டுக்கொண்ட

கல்யாணியின் கண்களில்......

வேலைப் பளு மட்டுமில்லைத் தோழி
வேதனைப் பளுவுந் தெரிந்தது.

soorya said...

4.
பிதா மகன் என்று யாரைச் சொல்றீங்க?
எங்கள் குப்பிழானிலோ அல்லது குரும்பசிட்டியிலோ
அல்லது வவுனியாவிலோ இப்படிப் பிதாமகன் இருந்தால்
வாவ் ....வாழ்வு மேலும் ஆனந்தமாயிருந்திருக்கும்.

கிறிஸ்தவ நண்பர்களுக்குத் தொட்டப்பா
இருக்கிறார்.

விக்ரம் நடிச்ச படத்தில்
மு.. ராமசாமி (அற்புதமான நாடக அறிஞர்)

எனக்கு யார் பிதாமகன்?????

ஐயோ பிறகுமேன் என்னைப் பெண்ணிலை வாதம்
பேசப் பண்ணுறீங்க.

மாதா மகனால்,,,
சீர்கெட்டுப் போன அற்பப்
பிதா மகன் என்பதை
நீவிரும் அறிக.

soorya said...

5.
ஒரே மாதிரி.

எனக்கென்னவோ தோழி,
இந்தத் தலைப்புப் பிடிச்சுப் போயிற்று.

எல்லாமுமே ஒரே மாதிரித்தான் இருக்கு.
ஆனா டார்ச் லைட்???

ஏதோ பாம்பு போலத் தெரிகிறது.

அதனிலும் மேலாக

'பாப்பா'என்ற பைத்தியக்காரி
இன்றைக்கும் அதே சேலையோடும்
மாறாத வார்த்தைகளோடும்

இதுதானே எரிச்சலூட்டும் சலித்துப் போன வாழ்க்கை என்பதுவும்.

நீங்கள் ஒழுக்கவியலை மீறும் வேட்கை கொண்ட
மனமுடையவர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
2 கால்கள்தான்.

தோழி..
மிக அற்புதமாகச் சொல்ல வந்ததை சொல்லும் ஆற்றல்
கைவரப் பெற்றுள்ளீர்கள்.

நான் கருத்துமுரண்பட இது களமல்ல.
வேறொரு தளத்தில்..களத்தில்
நான் முரண்படக்கூடும்.

கவசங்கள் இழந்த ஆண்மகனாய்...
தோற்றுப் போய் நிற்கிறேன் தோழியே...........
வா...!
வருவாயா தோள் கொடுப்பாயா???????

soorya said...

உங்களுக்கும் கை சும்மா இருக்காது.
சோபா சத்தியையும் அவன் போன்றோரையும் சந்திக்கிழுத்து...........
சரி போங்க.
நீங்களே அனுபவிப்பீங்க.

பேசு!

அவன்...
விமானங்கள் சிதைத்துப்போன
தசைத்துணுக்குகளைப் பொறுக்குகிறான்
தலைகளையும் உடல்களையும்
சரிபார்த்துப் பொருத்துகிறான்
அவள்...
இடம்பெயர்ந்து
சேலைத்திரை மறைவில்
இறுதி இழுபறிபடும் கர்ப்பிணியின்
கைகளைப் பற்றியபடியிருக்கிறாள்
மேலும்
அவனும் அவளும்
எல்லைகளில் இறந்துபோகிறார்கள்
ஒரு புகைப்படமாய்...
தாயின் முகத்தில் கண்ணீர்த்துளியாய்...
தோழர்களின் விழிகளில் கோபமாய்...
துயரம் ததும்பும் ஞாபகமாய்...
உறைகிறான் உறைகிறாள்.

நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட!
......................
எனக்கு சோபாசக்தியின் நடை பிடிக்கும்.
ஆனால்,,,,,,,,,
அவர் எதிரியுடன் சேர்வதென்பதை ஒரு மூடனாலும்
அங்கீகரிக்க முடியாது

கொரில்லா க்கு ம் என்று கதை சொல்றாராம்....
நாங்கள் கேக்க வேணுமாம்
இத்தனைக்கும் முன்னாள் போராளி.
இவையளை நான் என்ன செய்ய../?

கேட்டால் சொல்லுவாங்கள் புலிப்பினாமி என்று.
எரிச்சல்தான் வருமையா.

ஏதோ அவங்கடை காட்டில மழை.

எனக்கு மழை பிடிக்கும்.

நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
..............

நன்றி தோழி.