விடுநர்
முகாம்வாசிகள்
சிறப்பு முகாம்
செங்கல்பட்டு.
செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர்உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம், எங்கள் மீது போலீஸாரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை. நாங்கள்இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும்இல்லை, எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்றுவருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகளாகிய மனைவி. பிள்ளைகள்.உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்துகொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள், இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்தத் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம்.
நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்றும் எங்கள்அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும்.உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம். ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. எங்களில் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல்போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை, இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். இந்த வதை முகாமில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலைசெய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது அரசுசார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்,ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்குவரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலைதொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது,எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரிகள் எங்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் மீண்டும் எமதுஉண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம், மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்குத் துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவுதிரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம், எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம்,இவ்வாறு செய்வதைத் தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது, இதைத் தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைப்பாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம், எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம். தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம், உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம். இதிலிருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும்போது நீங்கள் 'எல்லா வசதிகளும் செய்து தருவோம்' என்று வாக்குறுதி வழங்கி, தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது, எமது உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எந்த மிருகத்தைக் கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட அது சிறைவாழ்க்கையாகவே இருக்கும். காயப்படும் விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம். திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதைக் காப்பாற்றி அனுப்புவதைக் காண்கிறோம், இவ்விலங்குகள் அளவுக்குக்கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்வேதனையான விஷயம். நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம், இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்.
இப்படிக்கு
முகாம் வாசிகள்
நாள் – 22,8,09
இடம்: சிறப்பு முகாம். செங்கல்பட்டு
இவ்வறிவித்தல் இன்று காலை மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது.
8.23.2009
Tweet | |||||
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
செங்கல்பட்டு முகாம் விடுதலைபுலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யதவர்களுக்கானது.
தகவலுக்கு நன்றி ராவணன்.
விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் விசாரணையும் ஒரு தீர்ப்பும் வேண்டுமல்லவா? (அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருப்பின்)போராடியதற்குத் தண்டனை ஆயுட்காலமா?
மேலும் ஒரு துயரம் தரும் செய்தி.
சட்டரீதியான தலையிடலுக்கு முயற்சிக்கிறேன்.
நண்பர் சுந்தரராஜன்,
தயவுசெய்து ஏனைய வழக்குரைஞர்களுக்கும் அறியத்தந்து ஆவன செய்ய முயற்சிப்பீர்களென நம்புகிறோம். நன்றி.
என்ன கொடுமை பாருங்க..!
இப்படி அபயம் கேட்டு வந்த அப்பாவி தமிழ் மக்களை அடைத்து வைத்து துன்புறுத்தும் இவர்கள்தான் தமிழனைக் காக்க வந்த தெய்வங்களாம்..?
கேவலமா இருக்கு..!
தொடரும் இவர்களின் அவலம் விரைவில் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.
// ராவணன் said...
செங்கல்பட்டு முகாம் விடுதலைபுலிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யதவர்களுக்கானது.//
இவர்கள் பெரும்பாலானோரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரிசி, பருப்பு, மண்ணெண்ணய் கடத்தினார்கள் என்பதாகும்.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கம்யூனிச நாடுகளில் கூட 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை இல்லை...
அதே சமயம், கருத்து தெரிவிக்கும் முன் முழுவதும் இந்த அறிவிப்பை படித்திருக்கலாம்.
//எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம்.//
tamilnathy,
I am working on it from the beginning. Along w PUCL , i have given official representations to govt and they are considering it.
thamarai
Post a Comment