8.15.2009
Tweet | |||||
நந்திதா! நீ ஏன் இப்படி இருக்கிறாய்?
நேற்றுவரை அவளை எனக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக நகரும் ஒரு நதியைப் போலிருந்தாள். இல்லை… இந்த உதாரணம் எனக்குப் பிடிக்கவில்லை. இதைப் பல தடவை நானே எழுதியிருக்கிறேன். செடியின் தலையில் நளினமாக அசையும் பூவினை ஒத்திருந்தாள். இதுவும் வேண்டாம். இறுக்கமாக மூடப்பட்ட சாளரங்கள் வழியே தெரியும் வேகநெடுஞ்சாலையின் மௌன விரைதலுக்கு அவளை ஒப்பிடலாம். பூவும் நதியும் சலிக்கிறது. அமைதியில் ஒளிர்ந்த அந்த முகத்தை நான் நேசித்தேன். அவள் அப்படியே நீடித்திருக்க நான் பிரார்த்தித்தேன்.
“நந்திதா! நீ ஏன் எப்போதும் இப்படியே இருக்கக்கூடாது?”
அவள் சிரித்தாள். அவள் சிரிக்கும்போது நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். எப்போதாவது அருமையாக கண்களில் மின்னல் தெறிக்கச் சிரிப்பாள். பிடிக்காதவர்கள் முன் செத்த புன்னகைதான். நடந்தது இதுதான். நேற்று அவள் வெகு நாட்களுக்குப் பிறகு குடித்தாள். போதையின் கிறக்கத்தில் அந்தக் கண்கள் தனக்குள் ஆழ்ந்துபோவதை நான் பார்த்தேன். நினைவுகளின் இருட்டில் எதை அகழ்ந்து எடுத்தாளோ… இறந்தகாலத்தின் துயரக்கதவு படீரெனத் திறந்துகொண்டது. அதனுள்ளிருந்து வெளிவந்த தனிமை மிகவும் கோரமான முகத்தோடிருந்தது. பரண்களிலிருந்து துக்கங்களைச் சேகரித்த அவள் தன்னிரக்கத்தில் அழுதபோது நான் அவளைத் தடுக்கவிரும்பவில்லை. மது இறந்துபோனவர்களைத் தேடிப்பிடிக்கிறது; பிரிந்துபோனவர்களையும் கூட. மது கண்ணீரின் மடையைத் திறந்துவிடுகிறது. முல்லைப் பெரியாறு விடயத்தில் இது-மது உதவாது.
அத்தோடு அவள் நிறுத்திக்கொண்டிருக்கலாம். உங்கள்முன் அவள் தன்னை முழுவதுமாகத் திறந்துகொட்ட ஆரம்பித்தாள். உங்களுக்கோவெனில் கதை கேட்கும் உருசி. அல்லது குற்றவாளியின் முன் நீதிபதியாக அமர்ந்திருக்கும் ஆசை. நீண்டநேரம் உண்மை என்ற சாட்டையால் தன்னைத்தானே விளாசிக்கொண்டிருந்தாள். தவறி உங்கள்மீதும் ஓரிரு அடிகள் விழுந்துவிட்டன. மரபார்ந்த செவிகளுக்கு அவள் ஒரு பெரிய அதிர்ச்சிதான். என்ன செய்வது? வாழ்க்கை அவளைக் குரூரமாகச் சபித்துவிட்டது. (நியாயம் கற்பிக்கிறாளாம்) அவளது செடிகளில் மலர்கள் உதிர்ந்துபோக முட்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. தாமரைக்கிழங்குகள் மட்டும் எஞ்சிய குளமென்றும் சொல்லலாம். பறவைகள் கைவிட்டுப் பறந்த மரத்தைப் போலிருந்தாள் என்று எழுத விரும்புகிறேன். ஆனால், இந்த உதாரணத்தை நாம் பலதடவை பிரயோகித்திருக்கிறோமல்லவா? சரியாகச் சொன்னால், ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று அவளே எல்லோரையும் விரட்டிவிட்டாள். பூவின் ஆயுள்கூட இல்லை பொய்க்கு என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
தனிமை… அது நாம் உண்ணும் பதார்த்தங்களிலும் அதிருசியானது. அதை அவள் கடைசித்துணிக்கை வரைக்கும் சாப்பிட்டே ஆவேன் என்று அடம்பிடித்தாள். நீங்கள் தனிமையைச் சாப்பிட்டிருக்கிறீர்களா? தனியாக அருந்தும் தேநீருக்கொரு சுவை உண்டு. படுக்கையின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம்வரை நாமே புரளமுடிகிற சுதந்திரத்திற்கொரு சுகம் உண்டு. இறுக்கும் உள்ளாடைகள் அணியவேண்டியிராத வீடு அற்புதம் அல்லவா? மரங்கள் அடர்ந்த சாலைகள் வழியே இசையைக் குடித்தபடி தனியே நடந்துபோகும்போது, சுத்தமான காற்று நம் சுவாசப்பைகளுக்குள் வந்து இறங்கும்போது எனக்குச் செத்துவிடத் தோன்றியிருக்கிறது. ஆனால், தனிமை திகட்டும் தேன். அதை மாந்தி மாந்தி மயங்கிவிழும் ஈக்களைப் போல அவளும் விழுந்தாள். இந்தச் சமூகத்திலிருந்து தொலைந்தாள்.
தயவுசெய்து சேர்ந்து குடிக்காதீர்கள். அது உங்களை மற்றவர்கள்முன் காலிசெய்கிறது. கோப்பை காலியாக காலியாக நீங்களும் அதுவிதமாகவே ஆகிவிடுகிறீர்கள். பிறகு வெறுங்கூடுதான். நந்திதா! நீ உண்மை பேசவேண்டுமென்று யார் அடித்துக்கொண்டார்கள்? உன் காதலை, உன் காமத்தை யார் கேட்டார்கள்? நீ பொய் சொல்லவேண்டுமென்று நான் விரும்புகிறேன் நந்திதா. என் அன்பே! தோலுக்கு மேல் இன்னொரு தோலைப் போர்த்திக்கொள். நாவுக்கு மேல் இன்னொரு நாவைத் தைத்துக்கொள். உதடுகளிலிருந்து சொற்கள் புறப்படும்முன் ஒன்றுக்கு நான்கு தடவை ஒத்திகைத்துக்கொள். இப்போது பேசு! ஆஹா! நீ இப்போது பெண்ணிலும் பெண்ணாகப் பேசுகிறாயடி!
நேற்று நீ பேசிக்கொண்டிருந்தபோது நான் யோசித்தேன் ‘நீ எவ்வளவு அழகாக சொதப்புகிறாயடி’என்று. நீ பேசிமுடித்ததும் உனக்கு முன் அமர்ந்திருந்தவர்களின் கண்களில் அதிர்வைப் பார்த்தேன். பிறகு நீ மௌனமாக எழுந்துபோனாய். உனக்குப் பிடித்த பாடலை கணனியில் கிளிக்கினாய். ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’என்ற பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கரைந்து அழுதாய். (‘பாரதி’படத்தில் அதை இளையராஜாவும்தான் பாடியிருந்தார்.) தண்ணீர்த் துல்லியமில்லை ஜெயஸ்ரீயின் குரல். ‘ஙீ…’என்ற இனிமை இல்லை. கொஞ்சம் கனத்து பிசிறடித்தாற்போலிருக்கும். ஆனால் அது மனசுக்குள் புகுந்து அலைகிற குரல். துயரங்களைத் துருவிப் பிடிக்கிற குரல். பிரியமுள்ள இரண்டுபேர் மழை நாளொன்றில் உதட்டில் உதடு அழுத்தி இடும் முத்தத்திற்கு இணையான இதம் அந்தக் குரல். அந்தப் பாட்டை இந்த உலகத்தின் பொய்மைகள் கைவிடும்போது, தனித்திருந்து தயவுசெய்து கேட்டுப்பாருங்கள். பாரதி! யார் என்ன சொன்னாலும் எனக்கு உன்னைப் பிடிக்கத்தான் பிடிக்கிறது.
அவள் உறங்கப்போனாள்; ஒரு மனதைக் கலைத்துவிட்டு. தண்டனைகள் நியாயமற்ற காலங்களில் வந்தடைவதற்கு யார் என்ன செய்ய இயலும்?
நந்திதா! நீ ஏன் இவ்வளவு தத்தியாக இருக்கிறாய்? நீ ஏன் எல்லாப் பெண்களையும் போல இருந்திருக்கக்கூடாது?
கண்ணாடியை எடுத்து உன் கண்களைப் பார்த்துச் சொல்கிறேன்:
“நந்திதா! யாரும் இல்லாமல் போனாலும் நீ எழுதிக்கொண்டிரு… அது போதாதா உனக்கு?”
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
"மது கண்ணீரின் மடையைத் திறந்துவிடுகிறது. முல்லைப் பெரியாறு விடயத்தில் இது-மது உதவாது."
ரசித்தேன்..
நந்திதா!--->கல்யாணி-->தமிழ்நதி...
// என் அன்பே! தோலுக்கு மேல் இன்னொரு தோலைப் போர்த்திக்கொள். நாவுக்கு மேல் இன்னொரு நாவைத் தைத்துக்கொள். உதடுகளிலிருந்து சொற்கள் புறப்படும்முன் ஒன்றுக்கு நான்கு தடவை ஒத்திகைத்துக்கொள். இப்போது பேசு! ஆஹா! நீ இப்போது பெண்ணிலும் பெண்ணாகப் பேசுகிறாயடி!//
சத்தியம். இக்கலையைப் பயிலாத பெண்களின் கதி....
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலிலும் குறிப்பாக அந்தப் பாடலிலும் கரைந்து உருகுபவர்களில் நானுமொருத்தி.
ஒ..நந்திதா தாஸும் உங்களுக்கு தோழியோ ..நான் அவர்களது பரம் விசிறி..ஒருமுறை சென்னைக்கு அவர்கள் வந்தால் அறிமுகப்படுத்துங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்.அல்ப புத்தி.அவரும் குடிப்பாரோ..பரவாயில்லை நீங்கள் சொன்னது போல அவரும் இனி கொஞ்சமாய் குடிப்பார் என்றே நம்புகிறேன்
ஒருத்தியின் சொல்லப்படாத பக்கங்களிலிருந்து சிலவற்றை தமிழ்நதி திரும்பிப்பார்த்திருக்கிறீர்கள். முற்றில்லாத தொடராக நந்திதாவின் கதை முடிந்துள்ளது. தனிமையின் கிழைகள் நந்திதாவை சுற்றிச்சுழல அவள் ஏன் அத்தனை உண்மைபேசினாள் ?
வளமையான உங்கள் கதையிலிருந்து இது வேறொரு வகையில் அமைந்துள்ளது. முற்றாா ஒரு கதையின் தொடக்கமாக நந்திதா மனசுக்குள் உட்கார்ந்துள்ளாள்.
சாந்தி
/தயவுசெய்து சேர்ந்து குடிக்காதீர்கள். அது உங்களை மற்றவர்கள்முன் காலிசெய்கிறது. கோப்பை காலியாக காலியாக நீங்களும் அதுவிதமாகவே ஆகிவிடுகிறீர்கள். பிறகு வெறுங்கூடுதான்./
காலினஸ் அல்லது எம்டினஸ் எப்போதும் நல்லதுதானே..
குற்றவுணர்வில்லாமலிருக்க இவைகள் உதவுமெனில் தத்தியாக இருப்பதே சிறந்தது.நானொரு தத்தி என்றால் நீங்கள் நம்பாவா போகிறீர்கள் :)
சின்னப்பயல்,
“நந்திதா-கல்யாணி-தமிழ்நதி…” இவற்றோடு நித்திலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அது சரி எனது வீட்டுப் பெயர் உங்களுக்கெப்படித் தெரிந்தது? எனது உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், கணவர் எல்லோரும் ‘கல்யாணி’என்றுதான் கூப்பிடுவார்கள். வர வர இணையத்தில் ‘கண்டுபிடிப்பு’கள் அதிகமாகிவருகின்றன.
தீபா,
“இக்கலையைப் பயிலாத பெண்களின் கதி?”
அதோகதிதான்!
உங்களுக்கும் அந்தப் பாட்டுப் பிடிக்குமா? மிகுந்த கவலையாக இருந்தால் நான் அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
அஜயன்,
நந்திதாதாஸை எனக்கும் பிடிக்கும். ‘அழகி’யில் உண்மையில் ‘அழகி’யாகத் தெரிந்தார். பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆசை உங்களுக்குமா? ம்… நக்கல்…! நடக்கட்டும் நடக்கட்டும்.
சாந்தி,
ஏதோவொரு நொந்த நேரத்தில் கிறுக்கியது. இதைக் கதை என்று சொல்லமுடியாது. ஏதோவொரு வடிவம். சும்மா சும்மா எழுதவேண்டியதுதானே…
அய்யனார்,
‘காலினெஸ்’நல்லதுதான். ஆனால், யார் முன்னால் காலிசெய்கிறோம் என்பது முக்கியம். தத்தியாக இருப்பதும் நல்லதே. இந்த மரபார்ந்த சமூகம் சலித்துவிட்டது.
\\‘காலினெஸ்’நல்லதுதான். ஆனால், யார் முன்னால் காலிசெய்கிறோம் என்பது முக்கியம்.//
:)
நந்திதா!--->கல்யாணி-->தமிழ்நதி--->நித்திலா.....ஹ்ம்ம்ம்ம் நடக்கட்டும். நடக்கட்டும்.
ThamilNathi, deepa avarkalin blog moolamaaga ungal pathivukku vara nernthathu... Nalla pathivu..Vaazhtukkal!
yaaravathu thayavu seidhu sollungappa Tamilil appadi pinnoottam poduvathenru?
Nanri,
Jenova
bharathi! yaar enna sonnalum unnai ennakku pidikkavea pidikirathu... tamil ippothu naaan kudithiruka villai ippothum solkirean naam ondru poal than eluthukiroam. rajavin kural veru alagiyal tamil."im" vikuthi varutham alikaiertahu.bombay js padalai naanum keatirukiraean.athu ennai alavea vaikitrathu.
நந்திதா!--->கல்யாணி-->தமிழ்நதி..!!!!!!
வசந்தம் வீசிய உங்கள் வார்த்தைகளில் (Alcohol)
ஆல்ககால் வாடை வந்தது வருத்தம்
அளிக்கிறது தமிழ் நதி.
அன்புடன்
எஸ். எஸ் ஜெயமோகன்
ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த இந்த வார்த்தைகள்தான்
நினைவுக்கு வந்தன உங்களது இந்த பதிவை படித்தபோது
எனது குடி தற்காலிக தற்கொலை.நான் உயிர்வாழ அவ்வப்போது
தற்கொலைகள் அவசியமாகின்றன.
நந்திதா நந்திதாவாகவே இருக்கட்டும். அவள் out of the crowd and unique. தமிழ் சோகமான பதிவாயினும் ஆழமான உணர்வுகளை பேசி விட்டது. Miss you Tamizh
தோழரே........நீங்களே நிராகரித்த உவமானங்களை கதையிலிருந்து அடித்துவிட்டிருந்தால் கதை அமைப்பில் கவிதையை இன்னும் நெருங்கிவிட்டிருந்திருக்கும். சிறப்பான முயற்சி. இன்னும் சமகாலப்பெண் எழுத்தாளர்கள் எவரிடமுமில்லாத சிறப்பான மொழி உங்களுக்கு வாய்ய்த்திருக்கிறது. மிகவிரிந்த ஒரு எழுத்துப்பரப்பை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
பொ.கருணாகரமூர்த்தி. பெர்லின்.
Post a Comment