குறுக்கித் தறித்து
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
‘காட்டுப்பூ போல மலரவேண்டும் கவிதை’
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது
காற்றில் தனித்தசையும் காட்டுப்பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!
--
புளியமரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும் சாலையின் வழியே
மிதந்துசெல்கிறார்கள்
கார்காலத்தில் மானசியும் ஜான்சனும்
இளவேனிலில் மானசியும் மௌலியும்
ஆகஸ்டின் கொதிவெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப்பெண்ணின் காதலின்மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை.
--
ஊழல்சாந்து குழைத்த கட்டிட இடிபாடுகளினின்று
தப்பிப்பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு
நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத்தொலைக்காட்சியை வாங்க.
---
‘உன்னை மறந்தால் இறப்பேன்’என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும்
அழுத்தமாய் மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கிக் கலர் காற்சட்டையும்
தோள்தொங்கும் ஜோல்னாப்பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!
--
ஒரு சொல் உதிர்க்கும்வரை தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால் மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்தபின்னே ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும் எப்போதும் தேவகணம்!
----
கொலைகாரர்கள் நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள் வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல் ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
---
கணவனைப் பின்னிருத்தி
இருசக்கர வண்டியை ஓட்டிச்செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மதுவிடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும் உவப்பானதாக இல்லை.
‘அவள்’ எழுதும் கெட்டவார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்கமுடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்துபோகும்வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்.
அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கைமறதியில் திறந்திருக்கும் கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன.
----
அவசரமாய் கவிதையொன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமுகம்…
வாசிப்பவள்-ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைபடுகளத்தைச் சித்தரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப்பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மைசெய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக்கொக்கி பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம்சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!
----
வாக்குப்பெட்டிகளுக்காக
பணப்பெட்டிகள்
பணப்பெட்டிகளிலிருந்து
ஆயுதப்பெட்டிகள்
ஆயுதப்பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகள்
சவப்பெட்டிகளிலிருந்து……...
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்லமுடியுமா நண்பர்களே?
--
மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.
நன்றி: ஆனந்தவிகடன்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இந்தப் பதிவு தமிழ்மணத்தில் தோன்றவில்லை. அனுப்பப்போனால் 'புதிய இடுகைகள் ஏதுமில்லை'என்கிறது. சில மனிதர்களை மட்டுமல்ல; கணனியையும் புரிந்துகொள்ள முடிவதில்லை:)
கவிதை நன்றாக உள்ளது. தமிழ்நதி அக்கா
அ.முகிலன்
கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள். இரண்டாவது கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது
4th n de final ones are real bueaties!
:)
எல்லா கவிதைகளுமே நல்லாயிருக்குங்க. முதல் கவிதை மனசுல இன்னும் நிக்குது...
\\அழகாகத்தானிருந்தது
ஆவி!//
எல்லாமே நல்லா இருந்தது நதி ..இது படிச்சதும் சிரிச்சிட்டேன்.. :)
அப்பறம் புதிய இடுகை எதுமில்லை// உங்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே இப்படி நிகழ்ந்து குழப்பற சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டித்தான் இருக்கு.. எல்லாரையும் அல்லது எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டா ரொம்ப கஷ்டம் சுவாரசியம் போயிடும்..
எல்லா கவிதைகளும் மிக நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள். நாவல் வெளியீட்டுற்கும்.
வாசித்தேன் நன்று
பல கவிதைகள் மிகவும்
கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள்
சபாஷ்...
மீண்டுமொருமுறை
சபாஷ்.
I liked your writings.
I liked specially the first, the second and the fourth.
I like your prose much and so waiting for your novel.
intha kavithaikalai elutha tamilnathy thevai illai
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!
அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கைமறதியில் திறந்திருக்கும் கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன. //
மிகவும் பிடித்த வரிகள்.
வாழ்த்துக்கள்
வெகு காலம் கழித்து ஆனந்த விகடன் வாங்கிய போது உங்கள் கவிதைகள் இருந்தது கண்டு மகிழ்ந்தேன்.
அனைத்துமே எனக்கு மிகப் பிடித்திருந்தன.
பொதுவாகக் கவிதைகள் என்றால் எனக்குக் கொஞ்சம் பயம். புரிகிற கவிதைகளை ரொம்பப் பிடிக்கும். புரியாதவை சற்றே நெருடும்; உங்களுடைய கவிதைகளில் படிப்பவர்களைத் தொற்றிக் கொள்ளக் கூடிய ஒரு உற்சாகத் துள்ளல் இருக்கிறது.
Good work. Keep it up!
நீண்டநாட்களின் பின் உரையாட வந்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சிக் களைப்பு:) நன்றி முகிலன், RVC,Kartin, பாலாசி.
கமலேஷ்,நர்சிம், மண்குதிரை, ஸ்டாலின் குரு, சூர்யா,
முத்துலட்சுமி,தனராஜ்.
இந்த ஆவிக் கவிதை நிறையப் பேருக்குப் பிடித்திருக்கிறது. ஒருவேளை ஆவியில் எழுதியதனாலோ (ஆனந்த விகடன்):))))
அமிர்தவர்ஷினி அம்மா,
உங்களுக்குப் பிடித்த வரிகள்தான் என் கணவருக்கும் பிடித்திருந்தனவாம்.
தீபா,
கவிதைகளைப் பார்த்துப் பயப்படவேண்டியதில்லை.. கவிதை எழுதும் என்போன்றவர்களைக் காட்டிலும் அவை நல்லவையே:)
அனானி,
"இந்தக் கவிதைகளை எழுதத் தமிழ்நதி தேவையில்லை"என்று சொல்லியிருந்தீர்கள்.
தமிழ்நதி அவ்ளோ பெரிய ஆளாக்கும் என்று எனக்குப் புரிந்த பொருளில் பெருமிதப்பட்டுக்கொண்டேன்:) சும்மா நம்ம முதுகை நாமே தட்டிக்கொடுக்கிறதுதானே... அதுதானே பெரும்பாலும் நடக்கிறது...:)
ஆனால், ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகையில் வெளிவந்தால் எத்தனை பேர் நின்று கவனிக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. 'ஆவி'க்கு நன்றி.
வாழ்த்துக்கள் !!!!
:)
Post a Comment