9.16.2006

யாழ்ப்பாணமே…! எங்கள் யாழ்ப்பாணமே…!

இரத்தத்தாலும் கண்ணீராலும் மெழுகப்பட்ட ஏ9 இல் விரைகிறோம். காட்டு மரங்களும் ‘கண்ணிவெடி கவனம்’ என அச்சுறுத்தும் அறிவுறுத்தல்களும் பாதையின் இருமருங்கும் கழிகின்றன. எழுத நினைப்பவரை வார்த்தைகள் கைவிடும்- வலியும் மகிழ்வும் நெகிழ்வும் பெருமிதமும் தரும் ஆனையிறவின் உப்பளக்காற்று ஓராயிரம் கதைபேசுகிறது. தலையறுந்த தென்னை, பனைகள் பரிதாபமாக நிற்கின்றன. சாவகச்சேரியில் சாவு ‘கச்சேரி’ நடத்திவிட்டுப் போயிருக்கிறது. வீடுகளின் எல்லாப் பக்கமும் குண்டுகள் வாசல் வைத்துவிட்டுப் போயிருக்கின்றன. நிலாப் பார்க்க முற்றம் வர வேண்டியதில்லை. வீட்டுள் படுத்து அண்ணாந்தால் ஆகாயம். வெறிச்சிட்டுப்போய்க் கிடக்கும் திண்ணைகளில் விளையாடிய குழந்தைகள் எங்கே போயினர்…? தூணில் சாய்ந்திருந்து ராஜா ராணிக் கதைகள் சொல்லிய வயோதிபர் எந்த இரவல் குடிலில் ஏங்கிச் செத்தனரோ…? இராணுவப் பச்சையாயிருக்கிறது ஊர். தலையும் உருமறைத்த இராணுவத்தினர் துள்ளிப் பயிற்சியெடுக்கும் காட்சி திடீரென கண்ணில் பட பழைய ஞாபகத்தில் திக்கிடுகிறது நெஞ்சு. சாதாரண சனங்களின் நினைவடுக்குகளில் உறைந்துவிட்ட பயத்தை அரசியல்வாதிகளின் ‘சமாதானப் புன்னகைகள்’ துடைத்துவிடப்போவதில்லை. இராணுவப் பச்சையைக் காணுந்தோறும் இருள் நிறத்தில் ஒன்று சுழன்று சுழன்று நெஞ்சை அடைப்பதைத் தவிர்ப்பதெப்படி…?
‘ரியூசன் சென்ரர்’களின் வாசல்களில் கூடிக் கூடி நிற்கும் மாணவர்கள் பால்ய நினைவுகளுக்கு இட்டுச்;செல்கின்றனர். மாறித்தானிருக்கிறது யாழ்ப்பாணம்;;… மாறவில்லை குச்சொழுங்கைகளும், பூவரசுகளாலும் கிழுவந்தடிகளாலும் பின்னப்பட்ட வேலிகளும். போரின் வடுக்களும் புதுமையின் மினுக்கமுமாக இரண்டு முகம் காட்டுகிறது யாழ்ப்பாணம். அங்கு வாழும்போது உணரப்படாத வீடுகளின் விசாலம் இப்போது பிரமிப்பூட்டுகிறது. அகலமும் நீளமுமாய் உள்விரிந்து செல்லும் பலகட்டு வீடுகள். குளிர் தேசங்களில் ஆயிரம் சதுர அடிக்குள் ‘வீடு பேறடைந்ததன்’ காரணமாக ஏற்பட்ட பிரமிப்பாயிருக்கலாம் இது.
போராலும் பின் கடல் நீராலும் அலைக்கழிக்கப்பட்ட உள்ளுர்வாசிகளுக்கும், புலம்பெயர்ந்து – போரோய்ந்த பின் ஊர் பார்க்க வந்தவர்களுக்கும் தோற்றத்தில்கூட வித்தியாசமிருக்கிறது. குளிரூட்டப்பட்ட ‘டொல்பின்’களுக்கும் ‘கார்’களுக்கும் பஞ்சமில்லை. தொளதொள காற்சட்டைகள், நெற்றியிலேற்றிய கண்ணாடிகளுடனான அப்பாக்கள்- ஆங்கிலம், பிரெஞ்சு, டொச் இன்னபிற மொழிகளில் கேள்வி கேட்கும் பிள்ளைகளுக்கு விளக்கமளிக்கிறார்கள். வேரை விழுதுகளுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய காலமாயிற்று! குளிர்தேசங்கள் குழந்தைகளின் கன்னங்களில் பூக்கவைத்த அப்பிள் நிறத்தை வெயில் வெம்மை சுட்டெரித்திருந்தது. ‘ஐஸ்கிரீம்’கடைகளில் ஈக்களோடு கூட இளைஞர்களுமிருக்கிறார்கள். அவர்களுக்கெதிரில் ‘வீட்டுக்காரர் கண்டிடுவினமோ’ பயமும்-காதல் பரவசமும் மாறி மாறி மிதக்கும் கண்களையுடைய இளம் பெண்களுமிருக்கிறார்கள். வழிதெருவெங்கும் புதிதாக முளைத்திருக்கின்றன புலம்பெயர்ந்தோரை ஊரோடு இணைக்கும் தொப்புள்கொடிகளான தொலைத்தொடர்பகங்கள். சொல்ல மறந்துபோயிற்று… இங்கும் அநேகரின் கைகளில் முளைத்திருக்கிறது ஆறாம் விரலாய் செல்லிடப்பேசி. அண்மைய சினிமாப் பாடல் மெட்டுகளில் அவரவர் சட்டைப்பைகளிலிருந்து விதவிதமாய் பாடி அழைக்கிறது.
சற்றே வசதியான விடுதிகள் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களாலும் புலம்பெயர்ந்தோராலும் நிறைந்துள்ளன. ‘பரவாயில்லை’ எனும்படியானவற்றின் கட்டணங்களோ குடாநாடு ‘டாலர்’ மற்றும் ‘பவுண்ஸ்’ பற்றிய அறிவுடைத்து என எடுத்துரைக்கின்றன.
ஆனையிறவிற்கும் யாழ். நூலகத்திற்கும் அப்படியென்ன தொடர்பு…? சொல்லமுடியாத உணர்வுகளால் நெகிழ்ந்துபோகிறது மனம். இழப்பின் வலியை ஈடுசெய்யுமோ நெடிதுயர்ந்த கட்டிடம்…! ஆனால் புதுப்பொலிவோடு அழகாயிருக்கிறது. வெளிகளிலிருந்து வந்திறங்கும் காற்றுக்கேற்ப ‘உலகம் அழகியது அழகியது’ எனத் தலையசைக்கின்றன செடிகள். அத்தனை நூல்களையும் வாசிக்க இடந்தராத நடைமுறை வாழ்வின் மீதான ஆற்றாமை படியிறங்குகையில் பொங்குகிறது.
‘சுப்பர் மார்க்கெட்’ எனப்படும் பேரங்காடிகளில் அலைமோதுகிறது கூட்டம். மாநகராய் மீள உருக்கொள்ள விளைகிறது நகரம். பாவம் கிராமங்கள்தான் தனித்து தவித்துப்போயின. போருக்கஞ்சி வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் ஓடிப்போனவர்கள் கோயில் திருவிழாக்களுக்கே திரும்பிவருகிறார்கள். அந்த சில நாட்கள் முருகனுக்கும் அம்மனுக்கும் இன்னபிற தெய்வங்களுக்கும் குளிரக் குளிர அபிசேகம்… பின்னர் கேணியும் மரங்களும் மட்டுமே துணை. திரட்டிய நிதியில் ஒளிர்பவை தவிர்த்து ஏனைய கோவில்களில் இருளோடு வெளவால்கள் உறவாடுகின்றன. வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகள் போடாத கடிதங்களுக்காகக் காத்திருக்கும் வயோதிபப் பெற்றோர் போல, சில கடவுளரும் கிராமங்களில் காத்திருக்கின்றனர்.
ஏழு மணிக்கெல்லாம் கடைகள் பூட்டப்பட்டு சனமோய்ந்துபோன நகரம் இறந்தகாலத்தின் மீதான ஏக்கத்தைக் கிளறுகிறது. தாம் போகும் பாதை நெடுக இந்த வேலிக்கும் அந்த வேலிக்கும் ‘சமரசம்’ செய்து வைத்துக்கொண்டு போகும் குடிகாரர்களைக் காணவில்லை. படம் முடிந்து பின்னிரவில் எவரும் வீடு திரும்பும் சந்தடியில்லை.
போராலும் காலத்தாலும் சிதிலமாகிப்போன வீடுகளுக்குப் பக்கத்திலேயே முளைத்திருக்கின்றன புதிய வீடுகள். ஒன்றிரண்டு தூண்கள் மட்டும் தாங்க ஓவென வெறிச்சிட்ட ஆளற்ற வீடுகளின் பக்கலில் எழுந்திருக்கும் நவீன வீடுகளைப் பார்க்கையில் மரணமும் வாழ்வும் அருகருகு அமர்ந்திருப்பதைப் போலிருக்கிறது. திறந்தவெளி உணவுச்சாலைகளின் கட்டணங்கள் கைநனைக்குமளவிற்கு இல்லை. அந்தக் கதிரைகளில் உட்கார்ந்தால் ஓரிரு ‘மயில்’களாவது பறந்துவிடுகின்றன.
இனியென்ன… எங்கோ ஒரு குளிர்தேசத்தில், ‘அலாரம்’ அலறி எழுப்பாத ஞாயிற்றுக்கிழமை காலையில், கோப்பிக்கடையொன்றில் ஒலிக்கும் ‘சாக்சபோன்’ பின்னணியில் இனங்காணக்கூடும் எங்கள் ஊரின் பூவரச ‘பீப்பீ’ குழலோசையை!

-----
ஏறக்குறைய ஓராண்டிற்கு முன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது எழுதியது. இப்போது யாழ்ப்பாணம் எப்படிச் சிதைந்திருக்குமென்பதைக் கூறவேண்டியதில்லை. அதன் முகத்தை போர் குதறிவிட்டிருக்கும் என்பது துயரம் செறிந்த உண்மை.

நாளை என்னோடு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘எங்கள் யாழ்ப்பாணமே…!’என்றெழுதியது குறித்து எள்ளுவார்.

8 comments:

  1. //நாளை என்னோடு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘எங்கள் யாழ்ப்பாணமே…!’என்றெழுதியது குறித்து எள்ளுவார்.//
    ம்ம்.....!

    ReplyDelete
  2. "ஊர்" போல இந்தப் பதிவும் நல்லா இருக்கு. எதிலும் பிரசுரமானதா??

    ReplyDelete
  3. //நாளை என்னோடு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘எங்கள் யாழ்ப்பாணமே…!’என்றெழுதியது குறித்து எள்ளுவார்.//

    ;-)

    நல்லாயிருக்குப் பதிவு.

    கொஞ்சம் பத்திகள் பிரிச்சுப் போடலாமே?

    ReplyDelete
  4. நன்றி

    வைசா, பிரபாதி, டி.சே… எழுதிய காலம் முக்கியமானதாக ஏனோ தோன்றவில்லை. இனி கவனத்தில் எழுத்துக்கொள்கிறேன். பத்தி பிரித்துப் போடுவதும்… பழைய எழுத்துக்கள் என்றபடியால்… ஏதோ போட்டேன். இனி கவனமெடுக்கிறேன்.

    ReplyDelete
  5. இனியென்ன… எங்கோ ஒரு குளிர்தேசத்தில், ‘அலாரம்’ அலறி எழுப்பாத ஞாயிற்றுக்கிழமை காலையில், கோப்பிக்கடையொன்றில் ஒலிக்கும் ‘சாக்சபோன்’ பின்னணியில் இனங்காணக்கூடும் எங்கள் ஊரின் பூவரச ‘பீப்பீ’ குழலோசையை!

    mm naanum 1 year kku muthalthaan pooy vanthen nice

    ReplyDelete
  6. இதை முன்பே (தமிழ்மணத் திரட்டியில் திரட்டப்பட்ட போதே) வாசித்திருந்தேன்.
    ஆனால் பின்பு சென்னை வலைப்பதிவர் சந்திப்பின்பின் கவனம்பெற்று தமிழ்நதியாக உங்கள் ஆக்கங்கள் பலதை வாசித்திருந்த நிலையில் இன்று மீண்டும் உங்கள் பழையவற்றைக் கிளறியபோது இவ்வாக்கம் உங்களுடையதாக இருந்தது ஒருவகை திகைப்பு.

    ReplyDelete
  7. இதை வாசிக்கும் போது பல வித எண்ணங்கள் மனதில் எழுந்து மறைய மறுக்கின்றன.

    ReplyDelete
  8. சென்னை பயணங்களின் போது அந்நகரை மூச்சுமுட்ட குடித்து தாகம் தீர்க்கிறேன்... ஒட்டகமென சேமிக்கவும் செய்கிறேன்... இம்மனநிலையின் மிக உக்கிரமான அதீத வடிவமாகவே உங்களது யாழ்ப்பாண பயணத்தை என்னால் உருவகிக்கமுடிகிறது. போரினால் வெளியேற்றப்பட்டவர்களின் வேர்பற்று....

    ReplyDelete