மரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.
2.03.2007
இதுவும் ஒரு காதல் கதை
அவன்: நீ ஒரு ராட்சசி!
அவள்: உனது தேவதை எங்குதானிருக்கிறாள்?
அவன்: எனக்குள் இருக்கிறாள். அவள் எனது இனிய கனவு! பால்யத்தைப் பசுமை செய்தவள்…! கிராமத்தின் பின்புறமாய் பாசிப்பச்சை நிறத்தில் துவைத்துப் போடப்பட்ட சேலையைப் போல ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் கரையோரம் அவளை முதன்முதலில் சந்தித்தேன். தோழிமாரெல்லாம் வீதியை ஒட்டிய உயரமான பாலத்திலிருந்து குதிக்க, இவள் மட்டும் விழிகளில் ஆசையும் பயமும் கலந்திருக்க தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கும்.
அவள்:பதின்னான்கு
அவன்:சிறிய உருவம். பருவம் தன் கவிதையை இன்னும் எழுதியிருக்காத உடல். இடுப்பைத் தாண்டி இறங்கிக்கொண்டிருந்த கூந்தலில் எந்தக் கணத்திலும் விழுந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தது ஒரு அடுக்குமல்லி. பெரிய பூவொன்று சின்னப்பூவைச் சூடியிருந்ததை அன்று கண்டேன்.
அவள்:பேதையாய் இருக்கையில் எல்லாப் பெண்களும் அழகுதான்.
அவன்:தயவுசெய்து நீ பேசாதே…!என்னை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக்காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல அவளை நான் பார்த்தேன்.
அவள்:இப்போதும் பெண்களை அப்படித்தான் பார்க்கிறாய்.
அவன்:அன்றொரு ஞாயிற்றுக்கிழமை. அன்றிரவு விடிவெள்ளி எதுவும் தோன்றவில்லை. வீட்டின் முகட்டில் பல்லிகூட சப்தித்து நல்ல சகுனம் சொல்லவில்லை. ஆனால், நிலவு வேதனைப்படுத்தியது. வானொலியில் காதலில் கரைந்த குரல் பிடித்திருந்தது. மறுநாள் பார்த்தால்… ஐயோ…!அவள் எனது வகுப்பிலிருந்தாள்.
அவள்: ஒரு தமிழ்ச்சினிமா இப்படித்தான் தொடங்கும்.
அவன்:அதுவரை காராக்கிரகமாயிருந்த பள்ளிக்கூடம் சொர்க்கத்திற்கு மிக அருகில் போய்விட்டது. வகுப்பில் இரண்டாவது வரிசையில் சுவரோடு ஒட்டிய மூலைக் கதிரையில் அவள் இருந்தாள். நான் கடைசி வரிசை. ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் நான் கடவுளாலும் கைவிடப்பட்டவன்.
அவள்:எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் கைவிடப்படுகிறவர்கள்தான்.
அவன்:நான் காதலித்தேன். பள்ளிக்கூடத்தை… அந்த ஊரை… அவள் நடந்துபோன வீதியை…. அவள் இருந்த நாற்காலியை… அவள் தொட்டுத் தந்த நோட்டுப் புத்தகத்தை… அதிலிருந்த உருண்டையான எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சின்னச் சின்னப் பூக்களை நினைவுபடுத்தின. அவளைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு சுகம் இருந்தது. அவள் நன்றாகப் படிப்பாள். அதனால் ஆசிரியர்களின் விருப்பத்திற்குரிய மாணவியாக இருந்தாள். நான்…
அவள்:சராசரியாக இருந்தாய்.
அவன்:சராசரியாகத்தான் இருந்தேன் அவள் வரும்வரை. அவளுடைய பெயருக்குப் பக்கத்தில் என்னுடையது இருக்கவேண்டுமென்று விரும்பியோ என்னவோ படிப்பில் அக்கறை செலுத்தினேன். அவள் மனதில் என்ன வடிவத்தில் நான் எழுதப்பட்டிருந்தேன் என்பதை எவ்வளவு முயன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை. எனது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். தோழிகளோடு இருந்து பேசிக்கொண்டிருப்பாள்… என்னைக் கண்டதும் கூடைக்குள் ஒளிந்துகொள்ளும் முயற்குட்டியைப் போல காணாமற் போய்விடுவாள். நானோ கனவிலும் நனவிலும் அவளைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தேன்.
அவள்:பதின்னான்கு வயதில் வருவதெல்லாம் காதலோடு சேர்த்தியா?
அவன்: சில விடயங்களில் நான் கேள்வி கேட்கவோ ஆராயவோ விரும்புவதில்லை. எதையும் நிறுவ முயன்றதுமில்லை. நான் காதலித்தேன் அதுவொன்றைத் தவிர வேறெதுவும் அப்போது என் நினைவிலில்லை. அவளுடைய தந்தை ஒரு அரசாங்க உத்தியோகத்தர். வேலையின் நிமித்தம் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தார். கிராமமே உறங்கி நாய்களும் அரையுறக்கத்தில் கிடக்கும் நடுநிசியில் அவளுடைய வீட்டின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறாள்… அதற்கு சில அடிகள் தள்ளி நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது.
அவள்:பைத்தியம்!
அவன்:ஏறக்குறைய பைத்தியந்தான். பெரிய கண்கள் அவளுக்கு. அவை எப்போதும் பாடப்புத்தகங்களில் கவிழ்ந்திருக்கும். இருந்திருந்துவிட்டு நிமிர்ந்து விழிகளைச் சுழட்டும்போது அந்தச் சுழலில் சிக்கித் திணறிவிடுவேன். விரும்பியே சிக்கிய சுழி அது. இந்தப் பைத்தியத்திற்கு மாத்திரை போல ஒரு நாளைக்கு ஒரு பார்வையே போதுமானதாகவிருந்தது. இரவு வயலைச் சுற்றிவருகையில் கையிலிருக்கும் வானொலி பாடும். ‘அழகான ஒரு சோடிக் கண்கள்… அதன் அம்புகள் தைத்து என் உளமெல்லாம் புண்கள்…’
அவள்:பாடல் கேட்டுக் கரைவதை எல்லோருந்தான் செய்கிறார்கள்.
அவன்:பாடலில் மட்டும் கரையவில்லை. அவள் பார்வையில் கரைந்தேன். அவள் அண்மையில் கரைந்தேன். அவள் வீட்டிற்கு முன்னால் ஒரு இலவமரம் நிற்கும். அந்த மரத்தைக்கூட நான் நேசித்தேன் என்றால் அதை என்னவென்பது? ஊருக்கு மத்தியில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருந்தது. அதைக் கடந்து போகும்போதெல்லாம் கேட்டுக்கொள்வேன் ‘அவளை நான் கல்யாணம் செய்ய வேண்டும்’என்று. அவளைத் தொடுவதென்பதையெல்லாம் நான் அப்போது நினைத்துப் பார்க்கவே இல்லை. அவளோடு ஒரே வீட்டில் வாழவேண்டும்… அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அந்த ஊரில் எப்போதாவது கோவில் திருவிழா வரும். இரவிரவாக நடக்கும். ஊரே கோயிலில் கூடியிருக்கும். அவள் கண்ணை மூடிக் கைகூப்பி நிற்கும்போதெல்லாம் நான் அவளைப் பார்த்தபடி கைகூப்பி நின்றிருப்பேன். அன்று கோயிலில் ஒலித்த பாடல் கூட எனக்கு நினைவிருக்கிறது… நீ கேட்டிருக்கிறாயா.. ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’என்ற பாட்டை… எத்தனை வயதானாலும் அந்தப் பாட்டைக் கேட்டால் காலிலிருந்து இரத்தம் பெருகி தலைக்குள் பாய்வது போல… விபரிக்க முடியாத உணர்வில் சிலிர்த்துப் போய்விடுவேன். அவள் என் தேவதையாக இருந்தாள்.
அவள்:பித்துப் பிடித்திருந்ததா என்ன…?
அவன்:பித்தனைப்போல் நண்பர்களிடம் பிதற்றித் திரிந்தேன். அவளை என்னிடமிருந்து யாரும் பிரித்துவிடக்கூடாதென்பதற்காக ஒரு தந்திரம் செய்தேன். அவளது பெயரையும் எனது பெயரையும் இணைத்து எங்கெல்லாம் எழுதிவைக்க முடியுமோ அங்கெல்லாம் எழுதிவைத்தேன். பாழடைந்த மண்டபங்களில், குளத்தையொட்டிய குறுகிய பாலத்தில், பாறைகளில்,பள்ளிக்கூடச் சுவர்களில் எழுதினேன். இலகுவில் யாரும் எட்டிவிடமுடியாத முகட்டின் தீராந்திகளில் தொங்கிக்கொண்டு எழுதினேன். அந்த இளவயதில் எனக்குக் கவிதையெனத் தோன்றியதையெல்லாம் வேப்பங்குச்சியெடுத்து அதன் பச்சை மையால் சுவர்களில் பொறித்துவைத்தேன்.
அவள்:அவளுக்கு உன்மீது காதல் இருக்கவில்லையா என்ன…?
அவன்: எனக்குத் தெரியாது. அதை நான் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அவளது நோட்டுப் புத்தகத்தை வாங்கி அதன் மேலுறைக்குள் ஒரு கடிதத்தை வைத்து திறக்கமாட்டாதவாறு ஒட்டினேன். அதைக் குறித்து ஒரு வார்த்தைதானும் பேசாமல் நோட்டுப்புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தேன்.
அவள்:சொல்லப்படாத காதல்…
அவன்:அவளையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி பேசும்போது உள்ளுர மகிழ்ச்சி பொங்கி வழியும். அன்றைக்கெல்லாம் சைக்கிளில் கையைவிட்டு ஓடி மிதந்துகொண்டிருப்பேன். அவள் நடந்துபோன சுவடுகள்தான் எனது வீதிகளை எழுதின. பள்ளிக்கூடம் முடிந்து எல்லோரும் போனபிற்பாடு அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்துகொள்வேன். அதை என் விரல்களால் வருடிக்கொடுப்பேன். அந்த வகுப்பில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாக கற்பனை செய்துகொண்டு காற்றோடு பேசுவேன். எனது வால்தனங்களையெல்லாம் அவளது கூந்தல் காட்டினுள் மகிழ்வோடு தொலைத்தேன். அவளுடைய பெரிய கண்களும் அடர்ந்த கூந்தலும்தான் என்னை ஈர்த்தன என்று பின்னாளில் நினைத்துக்கொண்டதுண்டு.
அவள்:அழகு பார்த்து வந்த காதல்…
அவன்:அவள் பேரழகி அல்ல… ஆனால்,அவ்வயதில் அவள் அழகி. அமைதியாக நடக்கும் சிற்றோடை போலிருந்தாள். யாருடனும் அதிகம் பேசாமல் தலையைக் குனிந்தபடி வீதியில் எவ்வளவு ஓரமாக நடக்கமுடியுமோ அவ்வளவு ஓரமாக நடந்துபோவாள். அவளறியாமல் நான் பல நூறு தடவை அவள் பின்னால் போயிருக்கிறேன். அவள் நெஞ்சோடு அணைத்திருந்த புத்தகங்களாக நான் இருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன்.
அவள்:காலம் முழுதும் ஒருதலையாய்க் காதலா…?
அவன்:இல்லை… அதுவொரு அழகிய மழைநாள். சாரல் விசிறியடித்தது. நண்பனின் ஏற்பாட்டில் நானும் அவளும் ஒரு பழைய மண்டபத்தில் சந்தித்தோம். எனது விரல்களைப் பார்…! இப்படித்தான் அவை அன்றும் நடுங்கின. நாங்கள் சுவரையண்டி சீமெந்துத் தளத்தில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி. அந்த இரண்டடியும் தூசி படர்ந்து கிடந்தது. நாங்கள் அந்தத் தூசியைக் கடைசிவரை கலைக்கவேயில்லை. வார்த்தைகள் என்னை அன்று கைவிட்டுவிட்டன. என்னால் பேசமுடியவில்லை. நெஞ்சுக்குழி கோடைகாலக் கிணறாய் வறண்டு கிடந்தது.
அவள்:நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லையா…?
அவன்:”நீ எனக்காகக் காத்திருப்பாயா” என்று நான் கேட்டேன். “எங்கே போகிறீர்கள்…?”என்று அவள் கேட்டாள். நான் கடல்கடந்து போகவிருப்பதைச் சொன்னேன். காலத்தின் கட்டாயத்தைச் சொன்னேன். அவள் அழுதாள். கடவுளே!அவள் எனக்காக அழுதாள். என்னைப் பிரிவதை எண்ணி அழுதாள். நாங்கள் திசைக்கொருவராகப் பிரிந்தோம். என்னை அலைக்கழித்த அந்தக் கண்களிலிருந்து என்னுயிரைப் பெயர்த்துக்கொண்டு அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினேன். அன்றைக்கு எனது சைக்கிள் வீதியில் சக்கரம் படராமல் பாய்ந்தது. நான் உரத்த குரலில் வீதி நெடுகப் பாடிக்கொண்டு போனேன்.
அவள்:நீ போனாய்!
அவன்: ஆம்! நான் போனேன். போகவேண்டியிருந்தது. இரவும் பகலும் பேய்களுக்கஞ்சி ஒளிந்து திரிவதைச் சகித்துக்கொள்ளவியலாமற் போனேன். பேய்கள் என்னை விரட்டின. நான் சிறையிருளில் வதைபட விரும்பவில்லை.
அவள்: வதைபடலை அவளுக்கு விதித்துப் படகேறிப் போனாய். அவளுடைய குடும்பமும் அந்த ஊரைவிட்டுப் போயிற்று. கடற்கரையோர கிராமமொன்றில் காலம் அவளை எறிந்தது. அலையெறியும் கடல் பார்த்த வீடு. இருளோடு காதலும் கவியும் மாலைப்பொழுதுகளில் கடற்கரையோரம் அமர்ந்திருப்பாள். அலைகள் வந்து வந்து போயின… நீ வரவேயில்லை! உனது தோழர்கள் திரும்பி வந்தார்கள். நீ வரவேயில்லை! அவளுக்கும் உனக்கும் இடையில் கடல் விரிந்து கிடந்தது. அப்போதுதான் அறிந்துகொண்டாள்… கடல் என்பது பார்க்கச் சலிக்காத நெடியதொரு ஓவியம் என்று. அதன் பேச்சு கேட்கச் சலிக்காத உரையாடல் என்று.
அவன்: காதலைக் கடமையால் மூடினேன். நகரத்திலிருந்து ஏழு மலை தாண்டிய அடர்வனத்தில் இருப்பு. நதியொரு பக்கம் மெதுநடை போட்டுக்கொண்டிருந்தது. கோப்பித்தோட்டத்திலிருந்து பச்சை வாசனை மிதந்துவரும். உடல் தழுவி விரையும் பனிப்புகார்கள் உன் பார்வையை நினைவுபடுத்தின. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிக்கும் ‘ராசாத்தி ஒன்னைக் காணாத நெஞ்சு’என்ற பாடல் இறுகிய இதயத்தை தன் மென்விரல்களால் வருடிப்போகும். உடலும் மனமும் இறுக நானொரு இளைஞனாகிக்கொண்டிருந்தேன்.
அவள்:மேற்படிப்பு என்னை நகரத்தை நோக்கி நகர்த்தியது. விரித்த புத்தகத்திலிருந்து சிரித்தாய். புழுதியடர்ந்த அந்த ஒழுங்கையில் நடந்து போகும்போதெல்லாம் நினைவாக நீயென்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தாய். பகலில் படிப்பும் தோழிகளுடன் ஒப்புக்குக் களிப்பும்… இரவைப் பிரிவின் துயரெழுதிய காலமது. அப்போதுதான் புத்தகங்களோடு பரிச்சயமானேன். உனது இன்மையை எதையெதையெல்லாம் இட்டு நிரப்ப முடியுமோ அதையெல்லாம் இட்டு நிரப்ப முயன்றேன்.
அவன்:அன்றொருநாள் திரும்பிவந்தேன்.
அவள்: நான் மழையோடு எவ்விதம் தொடர்புபட்டேன் என்பதை நான் அறியேன். என் வாழ்வு முழுவதும் மழை தனது ஈரக் குரலால் பேசிக்கொண்டேயிருக்கிறது. அன்றொரு மழை நாள். வன்னியில் தோழியொருத்தியின் வீட்டின் மண் திண்ணையில் சாய்ந்தபடி தனக்கென வழி செதுக்கி குறு நதியாய் பாய்ந்த வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரவேற்பறையில் யாரோ வந்திருப்பதாகச் சொல்லித் தோழி அழைத்தாள். எழுந்து வந்து பார்த்தபோது சிறுவனாகப் போன நீ இளைஞனாக ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தாய். என்னைக் கண்டதும் உன் விழிகள் வியப்பில் மலர்ந்தன. எனக்குள் எழுந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவதெனத் தெரியவில்லை. அதிர்ச்சி,கோபம்,துக்கம்,காதல்,ஆற்றாமை,மகிழ்ச்சி எல்லாம் கலந்த உணர்வொன்று என்னை அங்கிருந்து விரட்டியது.
அவன்:நீ அந்த இடத்திலிருந்து விருட்டென்று ஓடிப்போனாய். உன் விசும்பலை என் செவிகளில் தங்கவிட்டு விழிகளிலிருந்து மறைந்தாய். ஒரு சோக நாடகத்தின் உச்சக் காட்சியைப் பார்க்கும் பாவனையில் உனது தோழியும் அவளுடைய அன்னையும் அமர்ந்திருந்தனர். அத்தனை குழப்பத்திலும் கூட நீயொரு பெரிய பெண்ணாக வளர்ந்திருந்ததைக் கண்டு நான் வியப்படையத் தவறவில்லை. நிலத்தடியில் நீராக உள்மனதில் ஓடிக்கொண்டிருந்த காதல் என் இதயப்பரப்பெங்கும் பாய்ந்து நாடி நரம்பெங்கும் பரவியது.
அவள்:அரை மணி நேரம் மௌனத்தில் கழிந்தது. தோழி சிணுங்கும் மழைபோல அழைத்தபடியேயிருந்தாள். ஈற்றில் எழுந்து வந்து முகம் கவிழ்த்து அமர்ந்தேன். ஓரிரு நிமிடங்கள் உருண்டபின் நிமிர்ந்தேன். தோழியோ அவள் அன்னையோ அங்கில்லை. நீ மட்டும் என்னை உற்றுப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தாய். எனது கோபம் செம்மண் போல கரைந்து வழிந்தோடிக்கொண்டிருந்தது.
அவன்: பின்னிரவில் நல்ல நிலா. குளிரடர்ந்த இரவு. மாமரக் கிளைகளின் ஊடே வழிந்த நிலவு தன் மெல்லிய விரல்களால் எமக்கான கவிதையை எழுதிக்கொண்டிருக்க நாம் பேசினோம். இரண்டடி இடைவெளி என்பது எமக்கிடையில் எப்போதும் எழுதா விதி. உனக்கு நான் எழுதிய கடிதங்களை எவரும் உன்னிடம் சேர்ப்பிக்கவில்லை என்று அறிந்தேன்.
அவள்:விடிய விடியப் பேசியும் ஏதேதோ எஞ்சியிருப்பதாய் ஒரு எண்ணம். காதல் இத்தனை மகிழ்வா…? காதலில் இத்தனை துயரா…? காலை தூய்மையாகப் புலர்ந்துகொண்டிருக்க அந்த மெல்லிருளில் நீ விடைபெற்றுப் போனாய். பரந்த உன் முதுகுப்பரப்பை சென்று மறையும்வரை நான் பார்த்திருந்தேன்.
அவன்:காதல் என்பது சிலருக்கு மட்டுமே பூச்செண்டு. எம்மைப் போன்ற சிலருக்கோ அது சிலுவை. கடும் இருளில் கரடுமுரடான பாதையில் பேய்கள் முதுகில் சவுக்காலடிக்க நாங்கள் சுமந்துபோனோம்.
அவள்:அன்றொருநாள் பேசியது ஆயுளுக்கும் போதுமென்றா விட்டுச் சென்றாய்…! பேதையாய்க் காத்திருந்தேன். பின் பெதும்பையாய்க் காத்திருந்தேன். உன்னைப் பார்க்க முடியவில்லை. நீக்கமற எங்கும் பேய்கள் நிறைந்திருக்கும் நகரத்தின் மத்தியில் நான். காடுகளில் கரந்துறையும் வாழ்க்கை உனது. தேடி வந்தேன் ஓரிரு தடவை. என்னையும் பேய்கள் தேடுவதாய் அங்குள்ளோர் திருப்பியனுப்பினார்கள்.
அவன்: பாம்புகள் விழுதெனப் படர்ந்திருக்கும் கானகத்தில் வேம்பென உயிர்வெறுத்து என்னைத் தேடிவந்தாயென்றறிந்தேன். சிந்தித்தேன்… நாளையொரு போர்க்களத்தில் நான் மறைந்துபோகலாம். பேதையிவள் என்ன செய்வாள்… அதனால், காதலை மறைத்தேன். கடமையில் கவனத்தைக் குவித்தேன்.
அவள்:எங்கு குண்டு வெடித்தாலும் என் இதயத்தில் போர்க்களம். நீ கழுத்தில் கட்டியிருந்த நஞ்சு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. செய்திகளில் உன் பெயரைத் தேடிப் பயந்திருந்த காலங்களை வெந்து சாம்பலாய்க் கரைந்தாற்தான் மறக்கலாம்.
அவன்: உள்ளே அழுததை உனக்காக உருகியதை காடுதான் அறியும். காடொன்றே அறியும். கடமையைக் காதலினால் களங்கம் செய்வேன் என்றஞ்சி உன் நினைவை எனக்குள்ளே புதைத்தேன். மண்பற்றால் காதல்மேல் மண்ணள்ளி எறிந்தேன்.
அவள்:ஊரறிந்தது. உறவறிந்தது. ‘வெள்ளைப் புடவை கட்ட விருப்பமா…?’என்றெனது தாயழுதாள். ‘பார்க்காதே…’என்றார்கள். ‘பழகாதே…’என்றார்கள். ‘மரணத்தின் மீது மாறாத காதல் கொண்டான். இவன் விட்டு வேறொருவன் இருப்பானே உனக்கு’என்றார். பால்யத்தில் நெஞ்சில் பதிந்தவனை விட்டு வேறொருவன் கொள்ள விருப்பில்லை’எனக்கென்றேன்.
அவன்:ஆண்டு பல ஓடியது.
அவள்:அவனை மறந்தேன் என்றது உறவு. ‘மறந்தேனெனில் இறந்தேன்’என மனதுக்குள் நினைத்தேன்.
அவன்:நேரத்திற்கு உணவில்லை. தலைசாய்த்து உறங்க என் தாய்மண்ணில் அமைதியில்லை. வயிற்றுப்புண் வந்து என்னை வதை செய்யத் தொடங்கியது. நெருப்பிறைத்தாற்போல நெருஞ்சியினை விதைத்தாற்போல் இடைவிடா வலியொன்று எனைக் கொன்று தின்றது. உருண்டு புரண்டும் வலியன்றி ஒரு வழியும் காணவில்லை. பாலும் சோறும் மட்டும் பலநாட்கள் உணவாகும். ‘இந்தப் புயல் தேசம் விட்டு அயல் தேசம் போ… வைத்தியம் பார்த்தால் வலி நீங்கும்’ என்றார்கள். கடலிலும் பேய்கள் காவலென்று இருக்க, எங்கே நான் போக…? எப்படித்தான் நோய் தீர்க்க…?
அவள்:அன்றொருநாள் தோழர் சிலர் என்னிடத்தில் வந்தார்கள். ‘சென்றிடுக இவனோடு… சிலநாட்தான்’என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்தேன்… பின் தெளிந்து ஆனந்தம் அடைந்தேன். அம்மா அழுதாள். என் அடம் கண்டு திகைத்தாள்.
அவன்:நாங்கள் போனோம்…! என் மண்ணே…! நாங்கள் போனோம்…! திரும்பி வருவோமென்ற தீர்மானத்தோடு தாய் மண்ணே! உன்னைத் தழுவி விடைபெற்றோம். காடு மறைகிறது. என் கண்ணிலிருந்து ஓடி மறைகின்றன எமதூர்கள். விதி வலியது…! விதியே வலியது!! திரும்ப வழியற்ற தேசத்தை விட்டு இந்தப் பறவைகள் எங்கோ திசைமாறி இறங்கின துருவத்தில்.
அவள்: மாலையின் இருளை அடர்த்தியாக்கி அழுகிறது வயலின். இரகசியத்திற்கு மிக அருகிலான குரலில் ஒருவன் பாடுகிறான்.
“ஸ்தெப்பி வெளியின் மஞ்சள் கண்கள் அழைக்கின்றன
நீலம் படர்ந்த மலைகள் என்னை அழைக்கின்றன
ஓ என் தாய்த்திருநாடே…!
உன்னைப் பிரிந்து வந்தேன்…!”
அவன்-ஊரைச் சுருட்டி ஒரு குரலில் அடக்கி அந்த இடமெங்கும் தெளிக்கிறான். இசையைப் பருகி இறத்தல் சாத்தியமா? நான் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருக்கிறேன்.
அவள்:குற்றவுணர்வு தகிக்கிறது. கொடிய போர் இன்னும் நடக்கிறது.
அவன்: பூவரசு தன் மஞ்சள் கண்களால் அழைக்கிறது
பௌர்ணமியில் மட்டுநகர் வாவியின்
மீன்கள் பாடியழைக்கின்றன
கோணமலையின் கடல்
தன் நீலவிழிகளால் அழைக்கிறது நெடுநாளாய்.
மொட்டைப் பனைமரங்கள் அழைக்கின்றன
கூதிர் பறவைகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன.
திரும்ப வழியற்று
திசைதொலைத்து திரிகிறோம் உலகெங்கும்
ஓ என் தாய்த்திருநாடே…!
என்ன பிடித்திருக்கிறதா...என்று கேட்டீர்களா..?
ReplyDeleteஇல்லை பிடிக்கவில்லை...!!
அந்த நடை பிடிக்கவில்லை.
அந்த உணர்வு பிடிக்கவில்லை...
சும்மா போங்க நீங்க...
எவளவு அருமையா எழுதியிருக்கிறீர்கள். பிடித்திருக்கிறதா என்ற உத்தி அபாரம்.
இதை ஒரு நாடகமாக ...போடலாம் என முற்பகுதியில் தோன்றியது. பின்னர்...அது ஒரு அழகிய வாசிப்பனுபவத்திற்குரியது என்று தோன்றியது. மறுமுறை வாசிக்க் என்ன தோன்றுமோ தெரியவில்லை. வாசித்துவிட்டு சொல்கிறேனே.
வாழ்த்துக்கள்.
பொறாமைதான் வருகிறது.....
ReplyDeleteமெனக்கெடலும் உழைப்பும் இருந்தால் எல்லோராலும் எழுதிவிடமுடியும்...ஆனால் இத்தனை லாகவமாய் எண்ணங்களை கோர்ப்பதும்,பிரிப்பதும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
அநியாயத்துக்கு வசியம் செய்கிறீர்கள் உங்கள் தமிழால்....
வாழத்துக்கள் தமிழ்நதி....
அருமை...
ReplyDeleteஒரு நிமிடம் என் பால்யகாலத்தில் எனக்குள்ளிருந்த தேவதையையோ, இராட்சசியையோ தேடவைத்தது இது:))
ReplyDeleteஉணர்வுகளை மிக நளினமாக பிரதிபலிக்கின்றன உங்கள் வார்த்தைகள். அருமையான வாசிப்பு அனுபவமாக அமைந்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீ எனக்காகக் காத்திருப்பாயா” என்று நான் கேட்டேன். “எங்கே போகிறீர்கள்…?”என்று அவள் கேட்டாள். நான் கடல்கடந்து போகவிருப்பதைச் சொன்னேன். காலத்தின் கட்டாயத்தைச் சொன்னேன். அவள் அழுதாள். கடவுளே!அவள் எனக்காக அழுதாள். என்னைப் பிரிவதை எண்ணி அழுதாள். நாங்கள் திசைக்கொருவராகப் பிரிந்தோம்.
ReplyDelete--------------.
நான் கடல்கடந்து போகவிருப்பதைச் சொன்னேன். காலத்தின் கட்டாயத்தைச் சொன்னேன். அவள் அழுதாள். கடவுளே!அவள் எனக்காக அழுதாள். என்னைப் பிரிவதை எண்ணி அழுதாள். நாங்கள் திசைக்கொருவராகப் பிரிந்தோம்./
ReplyDeleteம்...நானும்தான் நிறையக் காதலையும் அவளின் அன்பையும் இன்னும் தேக்கி வைத்தபடியே....காதல் காமம் அன்பு உறவு நட்பு இந்த சொல்லாடல்களின் போதை எப்போதுமே தெளிவதில்லைப் போலும்......
விமான நிலைய வாசலின் அவள் உரக்க அழுதாள் நான் பேச்சற்று நின்றிருந்தேன் தனித்தனியே ஆகாயத்தில் பறந்தோம்...
புதிய ஊரில் புதிய மனிதர்கள்
நாங்களும் புதியவர்களாகப் பேசினோம்.
"அவன்-அவள்", நீங்கள் காலத்தில் கொஞ்சம் பின் தள்ளி
ReplyDeleteகொண்டுபோய் விட்டுவிட்டீர்கள்.
--//நாய்களும் அரையுறக்கத்தில் கிடக்கும் நடுநிசியில் அவளுடைய வீட்டின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறாள்… அதற்கு சில அடிகள் தள்ளி நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது.
ReplyDelete//--
ம்ம்ம்ம்....பதின்ம நிணைவுகள்....ம்ம்ம்ம்
காதல், பிரிவு, யுத்தம், காயம், வலி, புலம் பெயர்தல் - காவியம் படைத்து விட்டீர்கள் தமிழ்நதி
ReplyDeleteஅன்புடன்,
மா சிவகுமார்
மிகவும் பிடித்திருந்தது!
ReplyDeleteஅருமையான நடை! கதையின் ஓட்டம் ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்ட போதிலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வைத்துவிட்டது.
பின்னூட்டமிட்ட நண்பர்கள் சூரியகுமார்,பங்காளி,ஜெயச்சந்திரன்,செல்வநாயகி,கணேஷ்,சயந்தன்,சோமி,லட்சுமி,சிவகுமார்,நாமக்கல் சிபி அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஇதனை கதை வடிவமைப்பைக் கருத்திற்கொண்டு உண்மைக்கு மிக அருகில் சென்று எழுதியிருந்தேன். 'உண்மையையே எழுதுங்கள்' என்றார் எனது நண்பர். அவரது வேண்டுகோளுக்காக சில மாற்றங்கள் செய்து மீள் பிரசுரம் செய்துள்ளேன். நன்றி.
"தமிழ்நதி" என்னும் பெயருக்கு பொருந்தும் விதமாக எழுதியுள்ளீர்கள்
ReplyDelete-GR
/கிராமமே உறங்கி நாய்களும் அரையுறக்கத்தில் கிடக்கும் நடுநிசியில் அவளுடைய வீட்டின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறாள்… அதற்கு சில அடிகள் தள்ளி நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது.
ReplyDelete/ என்ற வரிகளில் ஈர்க்கப்பட்டு படித்தேன். ஆனால் மேற்கண்டு படிக்கமுடியவில்லை. வேறு எந்த வரிகளும் ஈர்க்கவில்லை. சாரி. ஒரு சிறுபிள்ளைத்தனமான ரொமாண்டிக்காக இருக்கிறதே தவிர வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. .
நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.
ReplyDeleteகுறிப்பாக,
//நிலத்தடியில் நீராக உள்மனதில் ஓடிக்கொண்டிருந்த காதல் என் இதயப்பரப்பெங்கும் பாய்ந்து நாடி நரம்பெங்கும் பரவியது.//
என்ற உவமை அருமை.
உயிர், மெய் இரண்டும் மறந்தேன். அதோட மெச்ச சொற்களையும் மறந்தேன்
ReplyDelete// ஒரு சிறுபிள்ளைத்தனமான ரொமாண்டிக்காக இருக்கிறதே தவிர வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. . //
ReplyDeleteஹா ஹா சுகுணாவா அது! அவர்கள் ஏன் தான் சலனங்களை மட்டுமே தேடுகிறார்கள் என்று தெரியவில்லை! மறுபடியும் ஒரு குழந்தைப்பருவத்தை அடைய அவர்கள் காத்திருக்கட்டும் தோழி! உனது சின்னஞ்சிறு வரிகளின் இயல்பும் உண்மையும் மனதை தொடுகின்றன, பிசைகின்றன!
nenjai negizhla vaikkira thamizh nadai!! vaalthhukkukaL! ungal vaarthaigalai paaraatta vaarthaigal illai!!!
ReplyDelete