12.14.2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்


ஈழத்தமிழர்கள் துயர்ப்பட மட்டுமே பிறந்தவர்களன்று; பெருமிதப்படவும் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை யாராவது இருந்திருந்துவிட்டு விசிறிச் செல்வதுண்டு. நேற்று சனிக்கிழமை கோயம்பேட்டில் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் மனம் நெகிழ்வும் நிறைவும் அடைந்திருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால சென்னை வாசத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிகழ்வும் இத்தகு மனவெழுச்சியைத் தந்ததில்லை.

“துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை... உங்களுக்கு?’ – ‘போரை நிறுத்து’ஆகிய வாசகங்களைக் கொண்ட ‘ரீ சேர்ட்’டுகளை அணிந்த இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அரங்கினுள் நுழைந்தபோது நீண்ட சொற்பொழிவுகளில் செவிகள் களைத்துப்போய்விடும்… விரைவில் எழுந்து வேறு வேலை பார்க்கச் சென்றுவிடலாமென்றே நினைத்திருந்தேன். ஆனால், பேச்சு என்பது எப்போதும் பேச்சு அல்ல… பேசுகிற விதத்தில், சென்றடையும் இடத்தில் பேசினால் அதுவொரு விளக்கை ஏற்றிவிடும் என்பதைக் கண்கூடாகக் கண்டேன். வார்த்தைப் பொறியொன்றால் எத்தனை சுடர்களை ஏற்றமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அத்தனை இளைஞர்கள் கூடியிருந்த அரங்கில் தேவையற்ற பேச்சு இல்லை; கைத்தொலைபேசிகள் விதவிதமாகப் பாடவில்லை; அவசியமற்று எழுந்து ஓடித் திரிந்து யாரும் தங்கள் இருப்பைத் துருத்திக் காண்பிக்கவுமில்லை. கவனச்சிதறலற்று, கூடியிருக்கும் நோக்கத்தில் குவிந்திருந்தன எல்லா மனங்களும்.

எங்களில் அநேகர் பொதுப்புத்தி சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறோமென்பதை அங்கே பேசியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அதாவது, ‘தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள்; வேலை நேரம் போக களியாட்டங்களில் திளைக்கிறவர்கள்; பணத்தைத் துரத்துவதில் வாழ்க்கையை இழக்கிறவர்கள் என்றெல்லாம் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு உங்களிடம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’என்ற வியப்பை அங்கு உரையாற்றிய அநேகர் வெளிப்படுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், எழுத்தாளர் ராசேந்திரசோழன், சி.மகேந்திரன் (கம்யூனிஸ்ட் கட்சி) பேராசிரியர் கல்யாணி, சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வைகோ, இயக்குநர் சீமான், தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, ஓவியா, கவிஞர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி, ஜெகத் கஸ்பர்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், பேரினவாதத்தின் வெறியாட்டங்கள், அதற்கு ஒத்தூதும் ஊதுகுழல்கள், தமிழர்களின் அவலநிலை, அதன் மீதான பாராமுகங்கள், போராட்டத்தின் நியாயம், அதனை இழிவுபடுத்துவோரின் ஈனச் சுயநலம் என பல்வேறுபட்ட விடயங்கள் அங்கு பேசப்பட்டன.

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகங்களைத் திரும்பிப் பார்த்தேன். ஒவ்வொருவரும் சொற்களைத் துளி சிந்திவிடாமல் அருந்திக்கொண்டிருந்தார்கள். அது பேசியவர்களின் ஆற்றலா… மழைக்காக ஏங்கிக் கிடந்த மண்ணின் உறிஞ்சலா...? பேச்சுக்கேற்ப அந்த முகங்கள் மாறியதைப் பார்க்கும்போதில் ‘இந்தக் கூட்டத்தில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ’என்ற நினைவு எழுந்தது. அண்மையில்தான் மு.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’என்ற நூலை வாசிக்கப் பொழுது வாய்த்தது. அன்றைக்கு மாணவர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அநேகர் மகத்தான அரசியலாளர்களாக உருவானதுபோல, நேற்றைய கூட்டமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தோன்றியது. அவர்கள் கண்களைப் பார்க்க நேர்ந்திருப்பின் நான் மிகைப்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

பழ. நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலியும் ‘கீற்று’இணையத்தள அமைப்பாளர் ரமேசும் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சக பதிவரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவருமான லஷ்மணராஜா அங்கு நடைபெற்ற நிகழ்வுகளைத் தனது புகைப்படக்கருவியினுள் பதிவுசெய்துகொண்டிருந்தார். என்னாரெஸ் பிரின்ஸ் உடனிருந்தார். எத்தனையோ நாள் உழைப்பின் விளைவு அற்புதமான ஒழுங்கமைப்பில் தெரிந்தது.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் கலந்துகொண்டதானது உறுத்தலாக இருந்தது. பொது நிகழ்வுகளில் எப்போதும் பெண்களின் எண்ணிக்கை பாயாசத்தில் முந்திரி மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருப்பது (புதுசாக ஏதாவது யோசிக்க வேண்டும்) எப்போதும் அயர்ச்சியூட்டுவதாகும். அதற்கான நதிமூலம் தேடினால், ‘சமூகம், ‘அதன் கட்டமைப்பு’ 'குடும்பம்' என்ற சலிப்பூட்டும் பழக்கப்பட்ட பதில்களையே வந்தடைய வேண்டியதாய் இருக்கும்.


ஈழப்போராட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊடகக்காரர்களைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் தலையைக் காட்டுபவர்களைப் பார்த்து வெறுத்திருந்தேன். ஒரு புல்லையும் தூக்கிப் போடாமல் சொல்லையுண்டு செழிப்பவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. இந்நிகழ்வு நெஞ்சார்ந்த நிறைவு. உணர்வாளர்களின் ஒன்றுகூடல். தகவல் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றுத் தகவல்களை வழங்கிய காலப்பதிவு. வார்த்தைகள், கூடியிருந்த எல்லா மனங்களுக்கும் விளக்கினை எடுத்துச்சென்றன.

அடுத்த தலைமுறையிலும் பற்றிக்கொண்ட பொறி பற்றிப் படரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வெளியில் வரும்போது, அந்த நாளின் நிறைவு தந்த நெகிழ்வில் பாடல் வரிகள் உள்ளே ஓடுகின்றன.

‘குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா…’

நாம் முணுமுணுக்கும் பாடலாவது அவ்விதம் இருந்துவிட்டுப் போகட்டுமே...!

பிற்குறிப்பு: உண்ணாநிலைப் போராட்டம் இன்றைக்கும் தொடர்கிறது. நாளையும் தொடரும். மாணவர்கள் சோர்ந்துபோய் படுத்திருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். நேரம் அனுமதித்தால் இன்றைக்கும் கலந்துகொள்ள வேண்டும்.

11 comments:

  1. இந்தப் பக்கத்தின் வார்ப்புரு பற்றிச் சொல்கிறீர்களா அன்றேல் இக்கட்டுரையின்... :) எதுவாயினும் நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் நதி,
    உங்களுடைய அறச்சீற்றம் தெளிவாகிறது. தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகள்
    ஊடகத்தின் நேர்மையின்மையைக்கண்டிக்கும் துணிவை இன்னும் பெற்றிடவில்லை. அதற்கான இரசமாற்றங்கள் இலக்கியத்தின் வழியாகத்தான் நிகழவேண்டுமென நம்புகிறேன்.

    ReplyDelete
  3. I am pleasantly surprised by the IT community.As you said ,I also had sceptical view of the young people with IT background.Like many people, I thought they have no social consciousness, they are materialistic,only interested in money and they have no interest in other human beings or their sufferings.I must say I have changed my views.
    The genuine interest they showed in the Eelam tamil issue should be appreciated.I ask them to continue their good work.

    ReplyDelete
  4. ஈழப் போராட்டதில் நீண்ட காலமாக போராடி வரும் உங்கள் போன்றோரோடு நாங்களும் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்!!

    உண்ணாவிரதம் பற்றிய எனது பதிவு!

    http://nareshin.wordpress.com/2008/12/14/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/

    ReplyDelete
  5. அனானி நண்பருக்கு,(கருத்து அனானி அல்லவே) ஆம்... இலக்கியவாதிகளுக்கும் அடையாளம் வேண்டியிருக்கிறது. அதற்கு ஊடகங்களுடன் சமரசம் செய்யவேண்டியதான சூழல். எழுத்து என்பதைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதல்லவா? நாமெல்லோரும் சுயநலம் சார்ந்து இயங்குபவர்கள்தானே... இருந்தபோதிலும், உண்மைக்கு மிகத் தொலைவில் இருப்பதைத் தொடர்ந்து ஊதிக்கொண்டேயிருக்கும் ஊடகங்களை இனங்கண்டு சமூகத்திலிருந்து அந்நியப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இருக்கவே செய்கிறது.

    குமரன், பூமி உருண்டை... காகம் கறுப்பு என்பதுபோல 'ஐ.ரி.க்காரர்கள் கருணையற்றவர்கள்'என்றொரு மனோபாவம் நம்மிடையே வளர்ந்திருக்கிறது. எல்லாம் சொல்லிச் சொல்லி வருவதுதானே... சில சமயங்களில் நாம் பழகிய வார்த்தைகளை அதன் பொருள் உணராமலே சொல்லிக்கொண்டிருக்கிறோம். யாராவது கன்னத்தில் அடித்துச் சொல்லும்போது திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சனையின்பாற்பட்ட தமிழகத்தின் பார்வை மாறிவருகிறது. தமிழகமெங்கும் மக்கள் எழுச்சியுறும் காலம் வரும். அதற்கு கால்கோளிட்டிருக்கிறது தொழில்நுட்பவியலாளர்களின் இந்தப் போராட்டம்.

    நரேஷ்,

    "ஈழப் போராட்டதில் நீண்ட காலமாக போராடி வரும் உங்கள் போன்றோரோடு நாங்களும் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்!!"

    என்று சொல்லியிருந்தீர்கள். என்னைப் போன்றவர்கள் போராடவில்லை. மாபெரிய சுயநலமிகள் நாங்கள். அவ்வப்போது ஏதோ எழுதுகிறோம். எழுத்து எதைப் புரட்டிப் போட்டுவிடப் போகிறது என்ற அயர்ச்சிதான் மிஞ்சியிருக்கிறது. நீங்கள்தான்... உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். காலம் அரசியல்வாதிகளிடமிருந்து மக்களுக்கு மடைமாற்றியிருக்கிறது இந்தப் பிரச்சனையை.

    உங்கள் சுட்டியைத் தொடர்ந்துபோனேன். அங்கே உங்கள் பதிவு இல்லை நரேஷ்.

    ReplyDelete
  6. இந்த பதிவு ஒன்றே இந்த நிகழ்வின் சாட்சி.

    (நன்றி எ்ன்பது சாதாரண வார்த்தை.அதை ்சொல்ல விரும்பவில்்லை)

    ReplyDelete
  7. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பவியலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்"
    எங்கள் துறை என்று தெரிந்தும் ஞாயிறும் நடக்கும் சொல்லாமல்
    சனி அன்று சென்று விட்டு வந்த நல்லவர்களுக்கு என் நன்றி . .

    ReplyDelete
  8. சரியாக 25 ஆண்டுகள் முன்பு நானும் கிண்டி பொறியியற் கல்லூரியில் இதேபோன்று உணர்ந்திருக்கிறேன். பார்ப்போம்..என்ன நடக்குது என்று.
    போராளிகள் மாவீரராகிறார். அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள். அப்பவே நானும் ஏதோவொரு சண்டையில் தொலைந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ம்ம்...ம்ம்..!

    ReplyDelete
  9. லஷ்மண், 'நன்றி'என்ற வார்த்தை உறவுகளுக்கிடையில் வரும்போது சம்பிரதாயமும் புகுந்துவிடுகிறது. எங்கள் பிரச்சனையை உங்கள் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளும்போது நமது பிரச்சனையாகிவிடுகிறதல்லவா? இது யாவருக்கும் பொதுவான மனிதத்தின் மீதான அக்கறை. அந்த சமூக அக்கறை உங்களுக்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    விக்ரம்,

    தொழில்நுட்பத் துறையினர் இவ்வளவு ஈடுபாட்டோடு நடத்தும்போது அதை எனது அறிவாளி நண்பர் தெரிந்துகொள்ளாமலிருப்பார் என்று எனக்கெப்படித் தெரியும்? எங்கள் வீட்டில் நடக்கும் விசேசத்தை பக்கத்து வீட்டுக்காரர்களா என்னிடம் சொல்வது? தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். இனியும் இது தொடரும் அப்போது உங்களுக்கு அறியத்தருகிறேன்:)

    சூரியா,

    தமிழகச் சூழல் சாதகமாகவே இருக்கிறது. தொடர்ந்து தோற்றுக்கொண்டேயிருப்போம் என்று எதிர்மறையாகவே ஏன் நினைக்கவேண்டும்? இம்முறையும் நம்புவோம். நல்லதே நடக்கும்.(குடுகுடுப்பைக்காரன் பேச்சுப் போல எனக்கே தோன்றுகிறது)

    ReplyDelete
  10. நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழல்...உங்கள் விரிவான கட்டுரையை வாசித்ததும் நானே அங்கிருந்தது போலிருந்தது. ஆழமான பதிவு...

    //ஈழப்போராட்டத்தை ஒரு கருவியாகக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊடகக்காரர்களைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் தலையைக் காட்டுபவர்களைப் பார்த்து வெறுத்திருந்தேன். ஒரு புல்லையும் தூக்கிப் போடாமல் சொல்லையுண்டு செழிப்பவர்களைக் காணநேர்ந்திருக்கிறது// நன்றாக சொன்னீர்கள் தமிழ்நதி.

    தமிழகம் முழுவதும் எழுச்சியுற வேண்டும். எல்லா ஊடகங்களும் சீரியல்களுக்கும் சில்லறைகளுக்கும் மட்டும் மதிப்பு கொடுப்பதை விடுத்து இப்பிரச்சனையில் நேர்மையாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கூட்டங்கள், எத்தனை மேடைகள்? என்று முடியும்? நம்மிடம் சில சமயம் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. இலங்கையில் போர் சூழல்கள் முடிந்து முற்றிலும் அமைதி திரும்ப வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன் தோழி..

    ReplyDelete