இப்போதுதான் ஒரு ‘சூடான’கூட்டத்திற்குப் போய்விட்டு வந்தேன். அதை ‘சூடாக’எழுதாவிட்டால் ஞாபகங்கள் ஆறிப்போய் கிடப்பில் போடவேண்டியதாகிவிடும். ‘சூடான இடுகைகள்’ பற்றிய தமிழ்மணப் பதிவையும் பின்னூட்டங்களையும் வீட்டிற்குள் நுழைந்ததும் படித்ததன் விளைவு ----------- என்ற சொல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’என்று பதிவு போட்டாலும் சூடு சுரணையில்லை. சும்மா இருப்பதென்றால் குற்றவுணர்வாகத்தான் இருக்கிறது. கூட்டங்களுக்குப் போய் ஒன்றும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் ஆவலாதி விடுவதில்லை. தவிர, எனக்குத் தெரியாத பல விசயங்களைப் பேசக் கேட்பதில் பெருவிருப்பு. ஈழம், தேசபக்தி, எங்கடை சனம் இன்னபிறவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஈழத்தமிழரைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தை பாவலர் கரிகாலன்,லலித்குமார், பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.
‘இங்கேதான் உண்ணாவிரதம் நடக்கும்’என்று ஆட்டோ சாரதி காட்டிய இடத்தில் ஒருவரும் இல்லை. எதிரில் பார்த்தால் பத்துப் பதினைந்து பேர் மட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ‘சாமியானா’எனப்படும் பந்தல் போடும் துணி சுருட்டிவைக்கப்பட்டிருந்தது. தெரிந்த ஒரே முகமான எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தை அணுகிக் கேட்டபோது ஏதோ கட்சி ஊர்வலம் போகவிருப்பதாகவும் அது முடிந்ததும் கூட்டம் ஆரம்பமாகுமென்றும் தெரிவித்தார். மெரீனா கடற்கரைச் சாலை முழுவதும் இரட்டை இலையும் வெள்ளை வேட்டிகளும் சொகுசு வாகனங்களும் ‘அம்மா’படமுமாக அமளிதுமளிப்பட்டது நினைவில் வந்தது. இன்றைக்கு எம்.ஜி.ஆர். நினைவுநாளாம். தோழியர் பஞ்சத்தில் தனிக்குரங்காக அமர்ந்திருந்தபோது கவிஞர் நந்தமிழ் நங்கை எங்கிருந்தோ தோன்றித் தோள்தந்தார்.
கொஞ்சநேரத்தில் கவிஞர் செந்தமிழ்மாரியும் மழையும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். (மழை அஃறிணையா?) விஸ்தாரமான நடைபாதையோரத்தில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அந்த இரைச்சலில் ஈழத்தமிழருக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நேரம் பதினொன்றரை மணியாகிவிட்டது. போக்குவரத்து இரைச்சல் என்பது செவிகளைப் பேச்சுக்கு ஒப்புக்கொடுக்கும்வரைதான் நீடித்தது. பிறகு நாங்களெல்லோரும் பேச்சுக்குள் நுழைந்துவிட்டோம். ஐந்தே முக்கால் மணிக்கு உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வரும்வரை உள்ளேதான் இருந்தோம்.
எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையேற்று நடத்துவாரென அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் வரவில்லை. பதிலாக பா.செயப்பிரகாசம் அவர்கள் தலைமையேற்றுப் பேசுகையில், மௌனம் காக்கிற அரசுகளை அசைப்பதாக நமது போராட்டங்கள் அமையவேண்டும் என்று குறிப்பிட்டார். சென்னை-கொழும்பு-டெல்லி என்ற மும்முனைகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டுமென்றார்.
இந்த ‘என்றார்’ ‘குறிப்பிட்டார்’ ‘சூளுரைத்தார்’ என்று நிறைய இணைப்பு வாக்கியங்கள் எழுதவேண்டியிருப்பதனால் யார் யார் என்ன பேசினார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். இடையில் தேவையானால் கட்டியக்காரியாக வந்துபோகிறேன்.
ம.தி.மு.க. மாநில செயலாளர் நடராஜன்: இலங்கைத் தமிழர்களை இனவழிப்புச் செய்கிற பேரினவாத அரசாங்கத்துக்கு, 2050கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் வட்டியில்லாக் கடனாகக் கொடுத்திருக்கிறது. ஆக, எங்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு எம்மினத்தை அழிப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தி.மு.க.வினர் தாக்கப்பட்டார்கள். அதே தி.மு.க.வினர் இன்றைக்கு காங்கிரஸ்காரர்களோடு கைகோர்த்துக்கொண்டு அவர்களது பேச்சுக்குத் தலையாட்டுவது விசித்திரமாக இருக்கிறது. யார் தடுத்தாலும் தமிழீழம் மலர்ந்தே தீரும்.
பாவலர் தமிழச்சி தங்கபாண்டியன்: பல நாடுகளாலும் தடைசெய்யப்பட்டிருக்கிற கொத்துக்குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். ஈழப் பிரச்சனையை தனிப்பட்ட ஒரு இனத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், இதனையொரு உலகளாவிய மனிதநேயப் பிரச்சனையாகப் பார்க்கவேண்டும். சகோதரி ஒளவை தன் கவிதையில் கூறியதுபோல இடப்பெயர்வு என்பது மிகப்பெரிய வலி.
“கால்களை உதறினேன்செம்மண்ணும் போயிற்றுஎம் மண்ணும் போயிற்று”
ஈழப்பிரச்சனையில் கலைஞரின் கண்ணீரின் உக்கிரத்தைக் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவர் படும் துயரத்தையும் தூக்கமற்ற இரவுகளையும் யாரோ அறிவர்?
பாவலர் த.பழமலய்: பிரச்சனைகள் வந்தபோதெல்லாம் கரையோர மக்கள்தான் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டும் காணாததுபோல இந்திய அரசு மௌனம் காப்பது ஏன்? இப்போது இலங்கை அரசு செய்வது சண்டையல்ல; சாவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டியது இலங்கை அரசு. ஆனால், இன்றைக்கு கள நிலவரத்தைப் படித்துப் பார்த்தால் சிங்களச் சிப்பாய்களாக இருந்த சிறுவர்கள் பலியாகியிருக்கிறார்கள். அப்படியானால், யார் சிறுவர்களைச் சண்டையில் ஈடுபடுத்துவது சிங்கள அரசா? விடுதலைப் புலிகளா?
ஈழப்பிரச்சனையில் தமிழகம் என்ற ஒரு மாநிலம் மட்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் போதாது. இதையொரு பொதுப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும்.
பேராசிரியர் முத்துமணி: ‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்திலே நாடு திரும்ப வழியில்லை’
என்ற கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைக் குறிப்பிட்டு நாடு திரும்ப முடியாதிருக்கும் தமிழர்களின் துயரத்தைப் பற்றிப் பேசினார். ஈழம் தொடர்பான உண்மைகளைத் தமது எழுத்தில் இனங்காட்ட வேண்டிய கடப்பாடு படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்றார்.
மங்கையர்ச்செல்வன்: (அமைப்பாளர் மீனவர் விடுதலை வேங்கைகள்)
இந்தப் போரை நடத்திக்கொண்டிருப்பது யாரென்று நினைக்கிறீர்கள்? இலங்கை அரசா… இல்லவே இல்லை! ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதங்களை வழங்கி இந்தப் போரை உண்மையில் நடத்திக்கொண்டிருப்பது இந்திய அரசுதான். நியாயப்படி பார்த்தால், “இந்திய அரசே! போரை நிறுத்து”என்றுதான் நாம் குரலுயர்த்தவேண்டும்.
பாவலர் யூமா வாசுகி: கவிதை வாசித்தார்.
தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்பதாக அந்தக் கவிதை முடிந்திருந்தது.
பாவலர் ரவி சுப்பிரமணியன்: ஈழத்தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு உதவுபவர்களை அறியவேண்டும்.
கண்மணி (குணசேகரன்?) கல்தோன்றி மண்தோன்றா காலத்தே… என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதி இசையோடு பாடினார்.
ஐயம்: கல் தோன்றும் முன்… மண் தோன்றும் முன்… தமிழன் தோன்றியிருந்தானா?
எழுத்தாளர், திரைத்துறை ஆய்வாளர் அஜயன் பாலா: தமிழகத்திலே இருக்கிற அகதி முகாம்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை. மிக மோசமான நிலையில் அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இனிவருங் காலங்களில் அக்குறைகள் களையப்படவேண்டும்.
பா.செயப்பிரகாசம்: திரைத்துறையிலும் இருக்கிற அஜயன் பாலா காட்சி ஊடகம் வழியாக அச்சீர்கேடுகளை வெளிக்கொணரவேண்டும்.
ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி: இங்கே சொல்லும்படியான பேரெழுச்சிகள் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழகமும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்துக்கொண்டிருப்பதான ஒரு தோற்றப்பாடு ஈழத்தமிழர்களிடையே இருக்கிறது. அதற்குக் காரணம் போர்ச்சூழலில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுதான். சிறிய நிகழ்வுகள் கூட பெரிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு அளிப்பதாக எனது நண்பர்கள் வாயிலாக அறிகிறேன். களத்திலிருந்து வருகின்ற செய்திகளின்படி தொடர்ந்து ஐந்து நாட்களாக சிங்கள இராணுவம் தோல்வியைத் தழுவி வருகிறது.
படைப்பாளிகளே! உங்கள் படைப்புகள் வழியாகவும் விடிவைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
துணுக்கு:ஈழத்தமிழர்கள் தொடர்பான எந்தவொரு கூட்டத்திற்குப் போனாலும் டி.எஸ்.எஸ்.மணி அங்கே சமூகமளித்திருப்பதைக் காணமுடிகிறது. யாருக்கும் தெரியாத சில அரசியல் செய்திகள் அவருக்கு மட்டும் தெரிந்திருக்கும். அதை கிசுகிசு மாதிரியான ஒரு தொனியில் அவர் பேசக் கேட்பது ஒரு இனிய அனுபவம். தொழில்நுட்பவியலாளர்கள் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாநிலை நிகழ்வில், மதுரை பேச்சுவழக்கில் (என் புரிதலின்படி) அவர் ஹிண்டு ராம், சுப்பிரமணியசுவாமி வகையறாக்களை வாங்கு வாங்கென்று வாங்கியது பிடித்திருந்தது. அந்த உற்சாகத்தை இந்த மேடையில்- மன்னிக்கவும் நடைபாதையில் காணவில்லை.
பாவலர்: பட்டி சு.செங்குட்டுவன்
யார் தடுத்தாலும் எனது ஆதரவு ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு என்றும் உண்டு.
முனைவர் புகழேந்தி:
காங்கிரஸாரின் தமிழின விரோதச் செயற்பாடுகள் சகிக்க முடியாதிருக்கின்றன.
“ராஜீவ் காந்தி கொலையை எத்தனை நாளைக்குச் சொல்லுவாய்?”என்பதை மையமாக வைத்து கவிதையொன்றை வாசித்தார்.
பாவலர் ரவி சுப்பிரமணியன் பாரதியாரின் ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி’என்ற பாடலை மிக உருக்கமான குரலில் பாடினார். யாரோ ஒரு பழைய பாடகரின் சாயல் குரலில் இருந்தது. ஜெயராமனாக இருக்கலாம்.
முனைவர் இரத்தின. புகழேந்தி
‘நாங்களும் நீங்களும் ஒன்றுதான்’என்ற ஒப்பீடுகளோடு கூடிய கவிதையை வாசித்தார்.
பாவலர் இளந்திரையன்:
இந்திரா காந்தியைக் கொன்றது சீக்கியர்கள். அவர்களை மன்னித்து விட்டீர்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் விடயத்தில் இறையாண்மை பேசும் காங்கிரஸாரே!அன்றைக்கு உங்கள் இறையாண்மை எங்கே போயிற்று? சீக்கியர்களுக்கு ஒரு நீதி; ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியா?
வியப்பு: சின்னப் பெடியன்.. நல்ல பேச்சாற்றல்... அரசியல்வாதியாக ஆகக்கூடும்.
பாவலர் ஆறு. இளங்கோவன் (நீங்க அவரில்லைத்தானே:) )
காங்கிரஸ்காரர்களுக்கு வாக்களிக்கக்கூடாது (பேர் மட்டுந்தான் ஒன்றுபோல)
எழுத்தாளர் சீதையின் மைந்தன்
காங்கிரஸ்காரர்கள் ஏதோ இன்றைக்குத்தான் காட்டிக்கொடுத்ததுபோல சத்தமிடுகிறீர்களே… அவர்கள் அந்த நாளிலிருந்தே இந்த வேலையைத்தான் செய்துவருகிறார்கள். (பலத்த கைதட்டல்) பகத்சிங்கைத் தூக்கிலிட யார் காரணம்? நேதாஜியை மாநாட்டை நடத்தவிடாமல், தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் செய்தது யார்? கடைசியில் அவர் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டு காணாமலும் போய்விடவில்லையா? காங்கிரஸ்காரர்களின் துரோகம் புதிதல்ல.
பா.ஜோதி நரசிம்மன்: இந்திய மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும்.
லலித்குமார்: பூங்காற்று தனசேகரின் கவிதையை வாசித்தார்.
பாவலர் கரிகாலன்: கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் - காங்கிரஸாரைத் திருப்திப்படுத்த சீமான் உள்ளிட்டோரைக் கைது செய்திருக்கிறீர்கள். அவர்களை விடுதலை செய்யாவிடில் அது தேர்தலில் தி.மு.க.வினருக்குப் பாதகமான விளைவுகளை அளிக்கும்.
பாவலர் குட்டி ரேவதி: உணர்ச்சிவசப்பட்டுப் பேசி உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி அறிவார்த்தமாக நாம் அடுத்து செய்யக்கூடியது என்ன என்று சிந்திக்கவேண்டும். இதுநாள்வரை இந்தப் பிரச்சனை குறித்து பேசுவதற்கான ஒரு சூழல்கூட இங்கே இருக்கவில்லை. இப்போது அந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். முதலில் நாம் பழம்பெருமை பேசுவதை நிறுத்தி அறிவின் தளத்தில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.
சிவாஜிலிங்கம் (இலங்கை.பா.உறுப்பினர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு)
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலே உருவாகி வருகிற எழுச்சியைக் கட்டுப்படுத்த மறைமுகமாகப் பல வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிகிறேன்.
‘இது சிங்களவர்களுடைய நாடு’என்று சரத் பொன்சேகா சொன்னார். ‘தமிழர்கள் வந்தேறு குடிகள்’என்று சந்திரிகா குமாரதுங்கா சொன்னார். ஆனால், சிங்களவர்கள்தான் வந்தேறு குடிகள் என்கிறது வரலாறு. விஜயன் இலங்கைக்கு வரும்போது ‘விசா’வாங்கிக்கொண்டா வந்தான்? (கைதட்டல்)
பாவலர் லலித்குமார் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு உருவான கதையைச் சொன்னார்.
மும்பாய் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு அதைப்பற்றி குறுஞ்செய்திகள், ஆதங்கம் செறிந்த தொலைபேசி உரையாடல்கள் இரவிரவாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக அந்தத் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டேயிருந்தன. அப்போது எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. 2000 மைல்களுக்கப்பால் இருக்கும் மும்பாயைப் பற்றி, வேறு மொழி பேசுகிறவனைப் பற்றி இவ்வளவு கவலைகொள்கிறோமே… 20 கடல் மைல்களுக்கப்பால் இருக்கிற ஈழத்தமிழனைப் பற்றி நாம் கவலைகொள்கிறோமா…? எழுதுவது மட்டுந்தான் படைப்பாளியின் கடமையா? சமூக அக்கறை சார்ந்து இயங்குவதற்கு ஒரு அமைப்பு தேவையாக இருந்தது. அதனடிப்படையிலே உருவானதுதான் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு.
பாவலர் சி.சுந்தரபாண்டியன்: காங்கிரஸார் தமிழகக் கட்சியினருடனேயே கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துக்கொண்டு தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் தோற்கவேண்டும்.
அ.பத்மநாதன்: காங்கிரசுக்கு இது தேய்பிறை காலம். தங்கபாலு தமிழனே இல்லை. பிரபாகரன்தான் தமிழர்களின் தனிப்பெருந்தலைவன். எதிர்வரும் 26ஆம் திகதி நடக்கவிருக்கும் தமிழீழ அங்கீகார மாநாடு அதை முரசறையும்.
ஓவியர் வீரசந்தானம்: விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறலிலே ஈடுபடுவதாகச் சிலர் சொல்கிறார்களே…மாவிலாறிலே இரண்டு நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் ஒரு இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டாள். மாட்டுப்பட்டியொன்றின் மீது குண்டுவீசியதில் 85 மாடுகள் செத்துமடிந்திருக்கின்றன. பரந்தன் வீதியில் இருந்த தேவாலயமொன்றில் இன்றைக்கு குண்டு போடப்பட்டதில் பலர் சிதறிப் பலியாகியிருக்கிறார்கள். கிளிநொச்சியில் 56,500 வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 22,500 போராளிகள் களத்தில் பலியாகியிருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் அகதிகளாக அலைகிறார்கள். யார் மனித உரிமை மீறலைச் செய்வது என்று தெரியவில்லையா?
இலங்கை இராணுவத்திற்கான புதைகுழி அங்கே தோண்டப்பட்டுவிட்டது.
எழுத்தாளர் இராசேந்திரசோழன் (மண் மொழி சஞ்சிகை ஆசிரியர்) படைப்பாளிகளுக்கென்று தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன. தென்னாபிரிக்கா நிறவெறியை எதிர்ப்போம்; பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்போம்; வியட்நாமியப் போராட்டத்தை மெச்சுவோம்; ஆனால், ஈழத்தமிழர்களது பிரச்சனை குறித்துப் பேசாதிருப்பது எப்படி?
த.மு.எ.ச. சார்புடைய மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அதைப் பற்றி விமர்சனங்கள் உண்டு.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்: மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதே கேள்வியைக் கேட்கிறேன்… நந்திக்கிராமம் பிரச்சனையைப் பற்றி த.மு.எ.ச. ஏன் கேள்வி எழுப்பவில்லை? ரஷ்யாவின் ‘தாய்’நாவலைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்தத் தாயைக் கொண்டாடுகிறீர்கள். தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிவைக்கும் ஈழத்தாய்மாரைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை? போர் ஆலோசனைக் குழுவிடம் தனது 3 குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு களத்திற்குச் சென்ற ஈழத்துத் தாயை நீங்கள் அறிந்ததில்லையா? ஏன் இந்த மௌனம்? ஒரு ஆக்கிரமிப்பிற்கெதிராகக் குரல் எழுப்பாதவர்கள் ஏகாதிபத்தியத்தோடு உடன்படுவதாகத்தானே பொருள்?
பாவலர் இன்குலாப்: இந்தக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாக அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன? நமது ஜனநாயகம் எதிர்ப்புக் குரலுக்கு இணக்கமாக எப்போதும் இருப்பதில்லை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்… காங்கிரஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சேர்ந்து ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்கள். அதாவது, பெரிய பெரிய சிறைச்சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் மக்கள் விரோதப் போக்கை முறையாகப் பயின்றிருக்கிறார்கள். 150பேர் மும்பையில் இறந்துபோனார்கள் என்று கூக்குரலிடுகிறவர்கள் - ஈழத்தமிழர்கள் கூட வேண்டாம் - தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? ஆக, மக்கள் அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்திய அரசு, தன் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா?
செத்துக்கொண்டிருப்பவன் தமிழன் என்பதற்காக மட்டும் அவனை ஆதரிக்கவில்லை; அவன் ஒரு மனிதன் என்பதற்காகவுந்தான் ஆதரிக்கிறோம். இனவழிப்புப் போர் சிங்களவன் மீது நடத்தப்பட்டால் சிங்களவன் பக்கம் நின்றுதான் பேசியிருப்போம். அதைக் கண்டித்திருப்போம்.
இப்படியாக பேசினார்கள்.. பேசினார்கள்… பேசினார்கள். ஆனால், காலையிலிருந்து மாலை ஐந்தே முக்கால் மணிவரை அங்கிருந்தும்கூட களைப்புத் தோன்றவில்லை. ஏனென்றால், செவிக்குணவு ஈயப்பட்டுக்கொண்டிருந்தது. வாகனங்கள் போக்குவரத்து ஓகோகோவென்று இரைச்சலாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது. பிறகு சத்தம் ஒடுங்கிவிட்டது. பேச்சு மட்டுந்தான் செவிகளில் இறங்கியது.
அரசியலுக்கும் ஈழத்தமிழருக்கும் பெண்களுக்கும் அப்படியென்ன ஒவ்வாமையோ… கவிஞர்கள் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மட்டுந்தான் அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் குட்டி ரேவதி, நந்தமிழ் நங்கை, இன்பா சுப்பிரமணியம், தமிழ்நதியாகிய நான் ஆகியோர்தான் கலந்துகொண்டோம்.
'சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து’என்று பதாகையில் போடப்பட்டிருந்தாலும் அதிகம் கண்டிக்கப்பட்டதென்னவோ காங்கிரஸார்தான். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கடைசிவரை கூட்டம் கலையாதிருந்ததுதான். இரண்டு மூன்று பேரைத் தவிர ஏனையோர் அமர்ந்தது அமர்ந்தபடி பேச்சில் இறங்கி அன்றேல் கிறங்கிக் கிடந்தார்கள். தவிர, பிரபாகரன், புலிகள், தமிழீழம், தாயகம், தேசியத் தலைவர் என்ற பதங்களெல்லாம் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன. கண்ணை உருட்டி விழிப்பது, காதருகில் கிசுகிசுப்பது இன்னபிற இல்லாதிருந்தது உவப்பளித்தது.
ஈழப்பிரச்சனை பற்றிய அறிவும் தெளிவும் பொதுமக்களுக்கு வருமோ இல்லையோ நானறியேன். ஆனால், எப்போதும் குண்டாந்தடியும் கையுமாக நிற்கும் பொலிஸ்காரர்களுக்கு வந்துவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.
சீமான் சேகுவேராவின் ‘ரீ சேர்ட்’ஐப் போட்டுக்கொண்டு பேசி சிறைப்பட்டாலும் பட்டார். அதுவொரு ‘மாதிரி’ஆகிவிட்டது. இந்தக் கூட்டத்திலும் பலர் சேகுவேராவை மார்பிலும் முதுகிலும் தாங்கித் திரிந்தார்கள்.
எப்போதும்போலதான்… நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், பெருமிதங்களைக் கூட்டங்கள் தரத் தவறுவதில்லை. தெருவில் இறங்கி வீடு நோக்கிப் போகும்போது ஜி.நாகராஜனின் நாவல் தலைப்புப் போல (நாளை மற்றுமொரு நாளே) ‘இதுவும் இன்னுமோர் கூட்டம்’என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது பெயரிலி…? ‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’சும்மா இருக்கவும் முடிவதில்லை.:)
தமிழ் நதி இதைப்படித்து விட்டு இந்தநிகழ்வினை ஒழுங்கு படுத்தியவர்களையும் கலந்து கொண்டவர்களையும் பாராட்டுவதா?? அல்லது பரிதாபப்படுவதா என்று புரியவில்லை. ஆனாலும் அவர்களிற்கும் உங்களிற்கும் எனது நன்றிகள்.
ReplyDelete//ஈழப்பிரச்சனையில் கலைஞரின் கண்ணீரின் உக்கிரத்தைக் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவர் படும் துயரத்தையும் தூக்கமற்ற இரவுகளையும் யாரோ அறிவர்?//
ReplyDeleteஉண்மை தான். கலைஞரின் கண்ணீரின் உக்கிரம் காங்கிரஸ் கராத்தே, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இதுகளின் அறிக்கைகளில் கரைந்து போகிறது. புதுடில்லிக்கு சொல்ல வேண்டிய செய்தியை சொல்லவேண்டிய மொழியில் சொன்னால் கலைஞர் மட்டுமல்ல, அனைத்து தமிழர்களும் ("உண்மை தமிழன்"களை தவிர) தூக்கமற்ற இரவுகளை கடக்க இயலும்.
//பாவலர் குட்டி ரேவதி: உணர்ச்சிவசப்பட்டுப் பேசி உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி அறிவார்த்தமாக நாம் அடுத்து செய்யக்கூடியது என்ன என்று சிந்திக்கவேண்டும். இதுநாள்வரை இந்தப் பிரச்சனை குறித்து பேசுவதற்கான ஒரு சூழல்கூட இங்கே இருக்கவில்லை. இப்போது அந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். முதலில் நாம் பழம்பெருமை பேசுவதை நிறுத்தி அறிவின் தளத்தில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.//
உடன்படுகிறேன். அறிவுப்பூர்வமான பேச்சு. உணர்வு தளத்தில் தமிழர்கள் பிரச்சனையை அணுக பலர் இருக்கின்றனர். பழம்பெருமைகளை கடந்து நிகழ்கால, எதிர்கால செயல் முன்னெடுப்புகளுக்கான அறிவுடன் தமிழக மக்களை வழிநடத்தும் தளங்களின் (தமிழீழ பிரச்சனைக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கும்) தேவை ஏற்படுகிறது.
இறுதியாக, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் வாலாக்களை சந்திப்பது விவாதத்திற்குள்ளாக்கப்படல் வேண்டும்.
மீதித்தமிழ்ப்படைப்பாளிகள் ஈழம் பற்றிய தொடர் மொட்டைமாடியிலே எழுதிக்கொண்டிருந்திருக்கலாம். புதினப்பூப்பு நீராட்டு நடந்திருக்கலாம்
ReplyDeleteபுல்லரிக்குது.
ReplyDeleteஉப்பிடியே அரிச்சு அரிச்சு...
ம்.. ஈழ ஆதரவு பேச்சுக்கள் பட்டிமன்றம் போல சுவாரசியமாகி விட்டன. செவிக்குணவு மக்களின் ரத்தத்திலும் தசைத் துண்டங்களிலும் ஈயப்படுகிறது.
பதிவைப் பார்த்தேன். மனதில் பதித்தேன். ஜி.நா வின் மனப் பதிவு போல என் மனப்பதிவு, நாளைமறுதினமும் மற்றுமொரு நாளாக மாறிவிடுமோ என அஞ்சுகிறேன்.போக, தங்கள் எழுத்துநடையிருக்கிறதே.....என்றுமே அதை நான் வெகுவாக இரசிப்பவன்.
ReplyDeleteபடித்தேன்..எழுத்தை ரசித்தேன்..வேறொன்றும் செய்ய இயலாமல்!!
ReplyDeleteசிறப்பாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஒரு குறிப்பிடத் தக்க செய்தியை விட்டுவிட்டீர்கள்! ஒருவேளை நீங்கள் கவனிக்க வில்லையோ?
பாவலர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, தான் சார்ந்துள்ள கட்சி (தி.மு.க.) இயன்றவரை ஈழத் தமிழர்க்காகப் பாடுபடுவதாகவும் இதில் குறைகூற யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்றும் சொன்னபோது, எதிரில், பா.சிவப்பிரகாசம் ஐயாவிற்குப் பின்னால் இருந்தவர், நீங்கள் அப்படிப் பேசக்கூடாது என்று கூறினார்.
ஒருக்கணம் திகைத்த அவர், பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, வேறு செய்தியைப் பேசித் தம் உரையை முடித்தார்.
இன்னொன்று, பாவரேறு பெருஞ்சித்திரனாரின் 'இதோ ஒருவன்...' பாடலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக உரையாற்றிய எழில்.இளங்கோவின் உரைபற்றி எழுதமறந்துவிட்டீர்கள்.
மொத்தத்தில், சுவையான நடையில் செய்திகளை நன்றாகத் தொகுத்து அளித்திருக்கின்றீர்கள்.
நன்றி.
///இதுவும் இன்னுமோர் கூட்டம்’என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது ///
உண்மை தான்!
ஆனால் இப்படிப்பட்ட கூட்டங்கள் இக்கால் தேவைப்படுகின்றன என்பதும் உணமையே!
சாத்திரி,
ReplyDelete'நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியவர்களைப் பாராட்டுவதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை'
எனச் சொல்லியிருந்தீர்கள். அவர்களைப் பாராட்டுங்கள். எங்களைப் பார்த்துப் (என்னைப் பார்த்து அல்ல) பரிதாபப்படுங்கள்... சரிதானே நான் சொல்வது...:)
----------
திரு,
கலைஞரின் நிலைப்பாடு வெளிப்படையானது. 'தடை செய்யப்பட்ட இயக்கங்களை யார் ஆதரித்துப் பேசினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'என்று கலைஞர் கூறியிருப்பதாக இப்போதுதான் செய்தியில் பார்த்தேன். நிலைமை தெளிவாகத் தெரிந்தும் நமக்கு ஆதரவு வேண்டியிருக்கிறதே... அரசியல் என்று வந்துவிட்ட பிறகு தனிப்பட்ட தர்மங்கள் அடிபட்டு தாம் சார்ந்த கட்சிகளின் குரலிலேயே பேசவேண்டியிருக்கிறது. என்ன செய்வது? வருத்தமாக இருக்கிறது.
கவிஞர் குட்டி ரேவதி கூறியிருப்பதுபோல உணர்ச்சிப் பிழம்புகளாகி கொதிக்காமல் அறிவார்த்தமாகச் சிந்திக்க வேண்டும். ஆனால்,என்னதான் சிந்தித்தும் செயலாற்றவில்லையென்றால் எல்லாம் வீண்.
"த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் வாலாக்களை சந்திப்பது விவாதத்திற்குள்ளாக்கப்படல் வேண்டும்."
இது வேறையா?
-------
அனானி,
இருக்கலாம். இருக்கலாம்:)
------
பிரம்மபுத்திரன்,
புல்லரிச்சுச் சொறியிற நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி ஒரு வலைப்பூ தொடங்கலாமே... எத்தனை காலந்தான் 'பிரம்மபுத்திரன்'அனானியாகவே இருப்பது?
"செவிக்குணவு மக்களின் ரத்தத்திலும் தசைத் துண்டங்களிலும் ஈயப்படுகிறது."
அது எங்களுக்கும் தெரிகிறது. வெள்ளத்தில் போகிறவனுக்குத் துரும்பு கிடைத்தாலும் பற்றிக்கொள்வதைப் போலத்தான் இதுவும். நடிப்பென்று தெரிந்தும் திரையரங்கில் அமர்ந்து அழுவதில்லையா?
-------------
நன்றி சூரியா,
எழுத்துக்களாலேனும் எனது நண்பர்களுடன் பேச முடிவதில் மகிழ்ச்சி. நண்பர்களாலாயது இவ்வுலகு.
-------
சந்தனமுல்லை,
நாங்களும் வேறொன்றும் செய்வதில்லைத்தான். நம்புவதையும் ஏமாறுவதையும் தவிர்த்து. நினைத்தால் மனவருத்தமாக இருக்கிறது தோழி.
------
சிக்கி முக்கி,
நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தீர்களா..? கதைக்க முடியவில்லை. அப்படியா? தமிழச்சியின் பேச்சை இடைமறித்து ஒருவர் அப்படிக் கூறினாரா? வழக்கம்போல ஓரத்தில் அமர்ந்திருந்ததில் கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி.
ஆம். மன்னிக்கவேண்டும். ஒரு சிலரது பெயர்கள் விடுபட்டுப் போயின. ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது குனிந்து எழுதிக்கொண்டிருப்பேன். அதற்குள் அடுத்து பேசுபவரின் பெயரை அறிவித்து விடுவார்கள். நிறையப் பேரின் பெயர்களை எனக்குப் பக்கத்திலிருந்த அஜயன் பாலாவிடம் கேட்டே தெரிந்துகொண்டேன். சில குறிப்புகள் இருக்கின்றன பெயரில்லாமல். எழில் இளங்கோவிடம் சொல்லுங்கள்.. தவற விட்டமைக்கு வருந்துவதாக.
//கலைஞரின் நிலைப்பாடு வெளிப்படையானது. 'தடை செய்யப்பட்ட இயக்கங்களை யார் ஆதரித்துப் பேசினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'என்று கலைஞர் கூறியிருப்பதாக இப்போதுதான் செய்தியில் பார்த்தேன்.//
ReplyDeleteஅப்படியென்கிறீர்கள். ம்ம்...
ஈழத்தமிழர்களையும், வாழ்விடங்கள், கால்நடைகள் அனைத்தையும் அழித்தொழிக்க வானிலிருந்து குண்டுமழை பொழிவதை நிறுத்த 'தடைசெய்யப்பட்ட இயக்க ஆதரவு' பற்றி கலைஞர் சிந்திக்கவும் அவசியம் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டும் அல்ல. அண்டை நாட்டில் ஒரு இன அழிப்பு நடைபெறுகிறது. கலைஞரின் ஆதாரவில் நடைபெறும் இந்திய அரசின் முழு ஆதரவுடன் இந்த இன அழிப்புக்கு உதவுகிறது. 'பெரியார் சீடன்' கலைஞர் என்ன செய்ய வேண்டும்? இன அழிப்பை ஆதரிக்கும் ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு 'வடிக்கும் கண்ணீரும் உறக்கமில்லாத இரவுகளும்' யுத்தத்திற்கு முகம் கொடுக்கிற தமிழ் மக்களுக்கு என்ன பாதுகாப்பை தரும்? அரசியல் அதிகாரத்தை கலைஞர் தக்க முறையில் பயன்படுத்தியிருந்தால் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். குறைந்த பட்சமாக அவரது கட்சியின் அமைச்சர்களை விலக்கி கொண்டாரா? என்ன செய்வது அவரது அரசியல் கவலை அவருக்கு. கலைஞரை எப்படி ஆட வைப்பது என்பது புதுடில்லிக்கு இப்போது பாலபாடம்.
கலைஞஞரா 'தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவை' கண்டித்து அறிக்கை விடுத்தார்? நம்பமுடியவில்லை. சிலபல மாதங்களுக்கு முன்னர் 'எங்கே சென்றாய் செல்வா?' கவிதை எழுதியது யாரோ? காங்கிரஸ்காரர்களின் தயவில் ஆட்சியை நகர்த்த கலைஞரின் அரசியல் கணக்கு புதுடில்லியின் தாளத்துக்கு ஏற்ப ஆடுவதும், ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு நடவடிக்கைகள் எடுப்பதுமாக தொடர்வதும் ஒரு நடவடிக்கை இல்லையா?
"பதவி எங்களுக்கு தோளில் இருக்கும் தூண்டு"
திரு,
ReplyDeleteகீழ்க்காணும் சுட்டியைத் தொடர்ந்துபோனால் அந்தச் செய்தியைக் காணலாம்.
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2599&cls=row3
வர இயலவில்லை மன்னிக்கவும்தமிழ்.பதிவு செய்தமைக்கு நன்றி.//தெருவில் இறங்கி வீடு நோக்கிப் போகும்போது ஜி.நாகராஜனின் நாவல் தலைப்புப் போல (நாளை மற்றுமொரு நாளே) ‘இதுவும் இன்னுமோர் கூட்டம்’என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது பெயரிலி…? ‘தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்’சும்மா இருக்கவும் முடிவதில்லை.:)//
ReplyDeleteநாளை மற்றொரு நாளே, நம்பிக்கையுடன் நாம்.
அசாத்திய பொறுமையும் அவதானமும் உங்களுக்கு நிறைய இருக்குபோல..
ReplyDeleteபுல்லரிச்சுச் சொறியிற நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி ஒரு வலைப்பூ தொடங்கலாமே... எத்தனை காலந்தான் 'பிரம்மபுத்திரன்'அனானியாகவே இருப்பது?//
ReplyDeleteதமிழ்நதி! நான் பிரம்ம புத்திரன் என பெயர் கொடுத்து என் கருத்தை எழுதுவதற்கும் பிரம்ப புத்திரன் என புளொக்கரில் ஒரு கண்கெடுத்து உங்களுக்கு பதில் அளிப்பதிலும் என்ன வித்தியாசம் உள்ளது எனப் புரியவில்லை.
உங்கள் பதிவுக்கென என் கருத்தைச் சொல்வதற்கு நான் வலைப்பூ ஒன்று வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது - ஆனந்தவிகடனை படித்து கருத்து சொல்பவர்கள் எல்லோரும் இன்னொரு குமுதமோ கல்கியோ வெளியிடுபவர்களாக இருக்க வேண்டும் என்பதைப் போன்றது.-
அல்லது பிரம்மபுத்திரன் யார் எங்கிருந்து அவரது பாஸ்போட் இலக்கம் என்ன என்பதை அறிவித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா.. ?
பிரம்பபுத்திரன் வலைப்பூ ஒன்றைத் தொடங்கியவுடன் அவர் அனானியாக அல்லாமல் போய் விடுவாரா... :)
உங்கள் கருத்துக்கு பதில் கருத்து
அவ்வளவுமே...
//நடிப்பென்று தெரிந்தும் திரையரங்கில் அமர்ந்து அழுவதில்லையா?//
தமிழ்நதி!
சினிமா வேறு!!!!!!
பிரம்மபுத்திரன்,
ReplyDeleteமுதலில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு விளங்கவில்லை!
"தமிழ்நதி! நான் பிரம்ம புத்திரன் என பெயர் கொடுத்து என் கருத்தை எழுதுவதற்கும் பிரம்ப புத்திரன் என புளொக்கரில் ஒரு கண்கெடுத்து உங்களுக்கு பதில் அளிப்பதிலும் என்ன வித்தியாசம் உள்ளது எனப் புரியவில்லை."
நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. உங்களுக்கு அது இல்லாமலிருக்கலாம். ஆனால் நான் கருத்தை மட்டும் பார்ப்பதில்லை. அந்தக் கருத்து யாரிடமிருந்து சொல்லப்படுகிறது என்பதையும் கணக்கிலெடுக்கிறேன். எனக்கு யாராவது வந்து புதிதாகப் பின்னூட்டமிட்டால், அந்தச் சுட்டியைத் தொடர்ந்து சென்று அவர்களுடைய பதிவுகளை வாசிக்கிறேன். எழுத்தின் தரம் (எனது அளவுகோல்களின்படி) அவர்களுடைய நிலைப்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்கிறேன். எழுத்தின் வழியாக ஒருவரது முகத்தைப் பார்க்கமுடிகிறது. முகமற்றவர்களுடன் பேசுவது என்னளவில் சிரமமானதாகவே இருக்கிறது.
இதை இப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம். அனானியாக, அல்லது சும்மா ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டு பின்னூட்டுவது ஒருவகையான தப்பித்தல்தான். வலைப்பூ வாயிலாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும்போது தான் சொல்லும் கருத்துக்களுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டியிருப்பதிலிருந்து தப்பித்தல் எனலாம். 'தமிழீழத்தை அங்கீகரிக்கிறேன்'என்று ஒபாமா சொல்வதற்கும், குட்டி நாடொன்றின் தலைவர் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஆகவே, கருத்துக்கள் மட்டுமல்லாது அது யாரிடமிருந்து வருகிறது என்பதும் முக்கியந்தான்.
"அல்லது பிரம்மபுத்திரன் யார் எங்கிருந்து அவரது பாஸ்போட் இலக்கம் என்ன என்பதை அறிவித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா.. ?"
மேற்கண்ட வரிகள் உங்கள் கோபத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன. அதீத கோபத்தில் இடத்திற்குப் பொருந்தாத வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறீர்கள். என்னைப் புண்படுத்தவேண்டுமென்பதற்காக இவ்விதம் செய்ததில் நீங்கள் மகிழ்வடைகிறீர்கள் என்றால் மகிழ்ந்துவிட்டுப் போங்கள்.
"பிரம்பபுத்திரன் வலைப்பூ ஒன்றைத் தொடங்கியவுடன் அவர் அனானியாக அல்லாமல் போய் விடுவாரா... :)"
நான் அப்படித்தான் நினைக்கிறேன். இந்த விதண்டாவாதத்தையும் எதிர்பார்த்தேன். நீங்கள் வலைப்பூ தொடங்கி அதில் பதிவுகளை எழுத ஆரம்பித்த உடனேயே உங்கள் அடையாளத்தைப் பதிவுசெய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். தன் நெஞ்சுக்குப் புறம்பாக எழுத முடியாது. நான் பெண்விடுதலையை நேசிக்கிறவள் என்றால் அது என் பதிவுகளில் வெளிப்பட்டே தீரும். நான் நாத்திகவாதி என்றால் அதில் 'சிவனே போற்றி'என்று எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். கடவுள் மறுப்பின் சாயல் இருக்கவே செய்யும்.
உங்கள் கருத்தை மறுத்தொரு சொல்லும் சொல்லாதவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறீர்களோ என்னவோ:)
"சினிமா வேறு!!!!!!"
சிலசமயங்களில் அரசியலில் சினிமாவைக் காட்டிலும் நடிப்பாற்றல் மிக்கவர்கள் உண்டு. பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.
---
உமா,
கருத்துக்கு நன்றி தோழி. இந்தப் பக்கமும் வந்துபோய்க்கொண்டிருங்கள்.
-------
அய்யனார்,
நிச்சயமாக பொறுமை இருக்கிறது. அதை, பிரம்மபுத்திரன் போன்றவர்கள் அடிக்கடி இல்லாமலாக்கப் பார்க்கிறார்கள்:)
மிகநன்றாக தொகுத்துள்ளீர்கள் காலையில் உண்ணாவிரதம் திட்டமிட்டபடி தொடங்கமுடியாமல் கடும்குளிரில்,மழையில்,சூரியனின் வெப்பத்தில் எதிரிகள் ஏளனம் பேசியிருப்பர் தடை,தடை,தடை,தமிழினாஅதரவிற்க்கு தடை கிளியைபிடித்துவிட்டோம்,கிளிநொச்சியை பிடித்துவிட்டோம்,என்று சிங்களராணுவக்குரளாக தினம் நஞ்சை கக்குகிற ‘இந்து'விற்ககு12 மணிக்குமேலே நடந்த அந்த எழச்சிமிகுபோராட்டம் கிளிநொச்சியை அல்ல எங்கள் புலிகளின் எச்சியை கூடபிடிக்கமுடியாது என்று நிரூபித்து விட்டது அந்த உண்ணாநிலைப்போராட்டம் நீங்கள் குறிப்பிட்ட அந்தவெற்றிவீரன்'சே'வைமார்பிலே சுமந்து தமிழகமீனவருக்கு “ஆயுதம்”வழங்கு என்று முழங்கியதில் நான் பெருமைப்படுகிறேன்
ReplyDelete