எனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது.
நம்பிக்கையின் நாடித்துடிப்பு
மெல்ல மெல்ல
அடங்கிக்கொண்டு வருகிறது நந்திதா!
தேய்ந்த சொற்களால்
வழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.
நீல ஒளியுமிழும் சரவிளக்குகள்
மரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்
இந்தத் திருவிழாத் தெருக்களில்
நானும் ஞாபகமும் நேற்றிரவு நடந்துபோனோம்.
அழகிய போர்வையாய் பனிபடர்ந்திருக்க
குளிரும் நிலவுமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது இந்நிலம்.
தொலைவில் ஒலித்த துள்ளிசைக்கிணங்க
ஆடியபடி போயிற்று
கடலை வண்டியின் காடாவிளக்கு
இந்தப் பண்டிகை நாட்களில் என் அன்பே!
நமதூரின் எந்தப் பதுங்குகுழியில்
பதைக்கும் விழிகளோடு உயிர்தரித்திருக்கிறாய்?
வாழிடம் சுருங்கிப்போன இக்கொடுங்காலத்தில்
சாவின் சாத்தியங்கள் விரிந்துவிட்டன.
பறவைகளை இழந்த வானத்திலிருந்து
எந்தக் கணமும்
மரணம் சிறகுதழைத்திறங்கலாம்.
நேற்று
பொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்
குற்றவுணர்வோடு பதில் அனுப்பினேன்
நேற்று வழக்கத்தைக்காட்டிலும்
நிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்
நேற்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்
யாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை
தொடர்ந்து பொங்கலைச் சிறப்பித்துக்கொண்டேயிருந்தார்கள்
நேற்று
நமது குழந்தைகளுக்கு உணவு கிடைத்ததா?
நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்
குருதி ஒட்டியிருந்ததா?
பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு
வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ
இடம்பெயர்ந்து போனாயா?
நந்திதா!
நாதஸ்வரமும் மேளச்சத்தமும் கலந்தொலிக்கும்
இத்திருவிழா நாட்களில்
கோயில் கேணி பிரதிபலித்த
நம் தலைகீழ்பிம்பங்கள் போலாயிற்று வாழ்க்கை!
அறிவுஜீவிகள் மெளனம் பழகுகிறார்கள்
அரசியல்வாதிகள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அன்றன்றைய வாழ்வை
இழக்க விரும்பாத மக்களோ
சிறையிருளின் கனத்த காலணிகளை
கனவிலும் அஞ்சினர்.
பூர்வீக கலைகளை
அழியவிடாமல் விழா எடுத்துப் பாதுகாக்கும் இம்மண்ணில்
நந்திதா! நான் நம்புகிறேன்
ஈழத்தமிழர்களின் சாம்பலும்
காலத்தால் அழிபடாத தாழியொன்றில்
பத்திரமாய்த்தானிருக்கும்.
நன்றி: உன்னதம்
மனசை மெல்ல மெல்ல நெருடி, ஈற்றில் கடைக்கண்வழி கசிகிறதே..கண்ணீர். நல்ல கவிதை தோழி.
ReplyDeleteமனம் கனக்க வைத்த கவிதை.
ReplyDelete//அறிவுஜீவிகள் மெளனம் பழகுகிறார்கள்
அரசியல்வாதிகள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அன்றன்றைய வாழ்வை
இழக்க விரும்பாத மக்களோ
சிறையிருளின் கனத்த காலணிகளை
கனவிலும் அஞ்சினர்.//
கனத்த காலணிகளை மட்டுமல்ல சகோதரி..குருதி தோய்ந்த செய்திகளைக் கேட்டால் கூடத் தீட்டு என்பதாக ஒதுங்கிப் போகின்றனர்..
:(((
கவிதை சொல்லாத ஆயிரம் வார்த்தைகளைப் படம் சொல்லியது.
ReplyDeleteஉங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறோம்.
:-(((
வகை வகையாக இனிப்பு பதார்த்தங்கள் முன்னால் இருந்தும் சாப்பிட முடியாத நீரிழிவு நோய்க்காரரின் மன நிலைபோல,வாழுவதற்கு சகல வழிகள் இருந்தும் மனதளவில் ஜடமாக வாழுகின்ற புலம் பெயர் வாழ்வை " நேற்று
ReplyDeleteபொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்
குற்றவுணர்வோடு பதில் அனுப்பினேன்
நேற்று வழக்கத்தைக்காட்டிலும்
நிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்
நேற்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்
யாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை
தொடர்ந்து பொங்கலைச் சிறப்பித்துக்கொண்டேயிருந்தார்கள் " என்று சரியாக சொல்லியுள்ளீர்கள்.
நூற்றுக்கணக்கான துயர் சுமந்த படங்களைப் பார்த்த போது கூட ஒரு சில மணி நேரங்கள் தூங்கினேன்.இனி இக்கவிதை என்னை என்னசெய்யப்போகிறதோ....
எப்போது உங்களை படித்தாலும் மன்னிக்கவும் உங்களின் பதிப்புகள் படித்தாலும் நெஞ்சு கனக்கச் செய்து வார்த்தைகள் எழும்பாது/
ReplyDeleteஅருமை என்று பொதுவாய் சொல்லி விட மனசு கூசுகிறது.
நான் நம்புகிறேன்
ஈழத்தமிழர்களின் சாம்பலும்
காலத்தால் அழிபடாத தாழியொன்றில்
பத்திரமாய்த்தானிருக்கும்.//
இச்சமயம் மிகவும் அடர்த்தியாக கனக்கிறது நெஞ்சம்.
நாளை விடியும் என்னும் எதிர்பார்ப்பில்.....
நன்றி சூரியா,
ReplyDeleteநீங்கள் போன பதிவிற்குப் போட்ட பின்னூட்டத்தின் பின்னாலிருந்த அரசியலைப் புரிந்துகொண்டேன். அதைப் பிரசுரித்தால் எனக்கு அதே ஞாபகமாகவே இருக்கும் என்பதால் போடவில்லை. நமக்கு நெருக்கமானவர்களின் கடுஞ்சொற்களைச் சேமித்துவைத்திருக்கக்கூடாதல்லவா?
ரிஷான்,
இணையத்தில் சில படங்களைப் பார்க்கக்கூட முடிவதில்லை. வாழ்வு குறித்த சகல நம்பிக்கைகளையும் ஆட்டங்காணச் செய்துவிடுகின்றன அவை. மூளை பேதலித்துப் போய்விடுமோ என்று தோன்றுகிறது. எமக்கே இப்படியென்றால்.... மற்றவர்களைச் சொல்லியென்ன...? வேண்டுமென்றே அவலங்களின் முன் கண்மூடியிருப்பவர்களைப் புறக்கணியுங்கள். மனிதர்களாகவே கணக்கிலெடுக்க வேண்டாம்.
பாலராஜன் கீதா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். ஓராயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று சொல்வார்கள். புகைப்படங்கள் யதார்த்தத்தின் மறுபிரதி. எழுத்துக்கு எப்போதும் திணறல் உண்டு.
கல்யாணி,
'எழுதி என்ன ஆகப்போகிறது?'என்று சிலசமயம் தோன்றுகிறது.ஆனால், எழுதாமலிருக்க முடியவில்லை. துயரத்தைக் கொட்ட வேறு வழியும் தெரியவில்லை. தற்காலிக ஆசுவாசம்தான் எழுத்து. அது மனச்சாட்சியுள்ளவர்களைத் தொந்தரவு செய்கிறது. என்ன செய்வது?
அமிர்தவர்ஷினி அம்மா,
"எப்போது உங்களை படித்தாலும் மன்னிக்கவும் உங்களின் பதிப்புகள் படித்தாலும் நெஞ்சு கனக்கச் செய்து வார்த்தைகள் எழும்பாது"
என்று சொல்லியிருந்தீர்கள். என் தனிப்பட்ட துயரை மற்றவர்களுள் கடத்தும்போது நான் குற்றவுணர்வு கொள்வேன். இதுவொரு சமூகத்தின் துயரம்... அதனால், எழுத்து தன் வேலையைச் செய்கிறது என்று சிறிய மகிழ்ச்சிகூட ஏற்படுகிறது. நன்றி.