3.18.2009

பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளி

வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும் இணைந்து சேலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கௌரவிக்கும் ஒரு விழா நடத்துகிறோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் ஹரிகிருஷ்ணன். முதலில் நாங்கள் ஐந்து பெண்கள் ஒன்றாகக் கிளம்புவதாக இருந்தது. மூவரை வீடு ‘பிடித்துக்கொண்டுவிட’ நாங்கள் இருவர் மட்டும் கிளம்பிப்போனோம்.

போகும் வழியெங்கும் பேச்சு…பேச்சுத்தான். இலக்கியம், அரசியல், மனித மனங்களின் அடியாழ இருட்டுக்கள், வெளிச்சங்கள்… ஏறத்தாழ எட்டு மணிநேரம் பயணக் களைப்பே தெரியவில்லை. நாங்கள் போனது ஜனவரி 23ஆம் திகதி. மலையும் குளிருமாய் அந்த இரவில் அழகாக இருந்தது சேலம் மாநகர். அன்றிரவும் அடுத்தநாள் பகலும் விடுதியில் ஓய்வு எடுத்துவிட்டு மாலையானதும் ஏர்வாடியை நோக்கிக் கிளம்பிப்போனோம். இந்தியா வந்ததற்கு நான் இறங்கிப் பார்க்கப்போகிற முதல் கிராமம் என்று அதைச் சொல்லலாம். போகிற போக்கில் பார்த்ததெல்லாம் சேர்த்தியில்லை அல்லவா? ஊருக்கு இறங்கும் வழியில் கோவணம் கட்டிய தாத்தா தோளில் மண்வெட்டியோடு வீதிக்கரையில் நிற்பதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத ஒரு நெகிழ்வு பிறந்தது. ஒட்டாத நகரமனிதர்களிடமிருந்து கிடைத்த உவப்பற்ற அனுபவங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாங்கள் போகும்போது விழா களைகட்டி, கலைஞர் கௌரவிப்பு நடந்துகொண்டிருந்தது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் அக்கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே இலக்கியவாதிகள் நின்று இலக்கியமும் இன்னபிற அக்கப்போர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல்வன், பொதியவெற்பன், குணசேகரன், அஜயன் பாலா, ‘அந்திமழை’ அப்துல் காதர், க.சீ.சிவகுமார், புதிய மாதவி, ஷாஜகான், கவிஞர்கள் குட்டி ரேவதி, ச.விஜயலட்சுமி, தேவேந்திர பூபதி, இசை, லஷ்மி சரவணகுமார், சேலம் சரவணகுமார்- ஸ்ரீதேவி, தமிழ்ச்செல்வன், சக்தி அருளானந்தம் ஆகியோர் வந்திருந்தார்கள்.
சற்றைக்கெல்லாம் ‘வாலி மோட்சம்’என்ற தோல் பொம்மலாட்டம் ஆரம்பமாகியது. கொஞ்ச நேரம் ஆட்டம் பார்ப்பதும் எழுந்திருந்து அப்பால் போய்ப் பேசுவதுமாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘ஆட்டிவைப்பவர்’யாரெனப் பார்க்கும் ஆவலில் திரைக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மறைப்புக்குள் புகுந்து விடுப்புப் பார்த்தோம். ராமனையும் வாலியையும் சுக்கிரீவனையும் ஒருவர் வைத்து ஆட்டிப் ‘படைத்து’க்கொண்டிருந்தார். அவர் கையில் அவர்கள் சுழன்றதும் ‘தொம்…தொம்’எனச் சத்தமெழ மோதிக்கொண்டதும் பார்க்க பார்க்க உண்மையேபோல உருமாறத்தொடங்கியது. பக்கத்திலிருந்து சட்சட்டென்று பாத்திரங்களை எடுத்துக்கொடுத்ததுமல்லாமல் உணர்ச்சி மிகும் குரலில் பின்னணி பேசிக்கொண்டிருந்த வயதான மூதாட்டியைப் பெருவியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘தேவரீர் கருணை பாலிக்க வேண்டுகிறேன்’என்ற அழுங்குரல் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. நரம்பு தெறிக்கும் அவரது தோற்றத்தில் தெரிந்த ஏழ்மையும்கூட.

இரவுக்கே உரித்தான வசீகரம் எங்கும் பரவியிருந்தது. ஜனவரி மாதக் குளிர் தாங்காமல் கையோடு கொண்டுபோயிருந்த கம்பளிகளால் போர்த்திக்கொண்டோம். பொம்மலாட்டம் முடிந்து ‘லங்கா தகனம்’கூத்து ஆரம்பித்தது. கூத்துப் பார்க்க கிராமத்திலிருந்தும் நிறையப்பேர் வந்திருந்தார்கள். தாளவாத்தியமும் ஆர்மோனியமும் இழைந்து இழைந்து எங்களை உருவேற்றின. நான் அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகச் சிரித்தேன் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறது. அடிக்கடி காப்பி என்ற பெயரில் ஒரு பானம் அருந்தக் கிடைத்தது. இரவு ஏற ஏற அதில் பால் குறைந்து தண்ணீர் அதிகரித்தது. அந்தக் குளிருக்கு அது காப்பியைவிடவும் மேலானதாக இருந்ததை மறுப்பதற்கில்லை. பார்வையாளரின் உச்சபட்சக் கவனத்தை ஈர்த்திருந்தவர் மண்டோதரியாக வேடமேற்றிருந்த கனகராஜ் என்ற அரவாணிதான். அவர் சிவந்த நிறமும் மெல்லிய விரல்களும் சின்ன இடையுமாக வளைந்து நெளிந்து ஒயிலாக ஆடினார். ‘சுவாமீ…!’என்று அழைத்தபோது எங்களுக்குப் பக்கத்திலிருந்த பையன்கள் தாங்கள் ‘சுவாமி’களாயிருக்கக்கூடாதா என்று அந்தக் கணம் ஏங்கினார்கள். சீதை வந்தபோது சபையோர் தலைகள் தூக்கத்தில் ஆடியதையும் மண்டோதரி வந்தபோது மலர்ந்து விழித்ததையும் காணமுடிந்தது. உற்சாக மிகுதியால் ஆண்கள் சட்டைப்பைகளிலிருந்த ரூபாய்த்தாள்களை மண்டோதரியின் மேற்சட்டையில் குத்தினார்கள். ‘பெண்கள் குத்தக்கூடாதா’என்ற குரலையடுத்து அதுவும் நடந்தது.

தனியொருவராக அப்படியொரு கலை நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவதென்பது சாதாரண செயலல்ல என்று அன்றைக்கு எல்லோரும் பேசினார்கள். ஹரிகிருஷ்ணன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். உப்பும் உறைப்புமான சாம்பாரை அன்றைக்குத்தான் முதன்முதலில் சாப்பிட்டேன். சாப்பாடு முடிந்ததும் அரசமரம் ஒன்றின் கீழ் மேடை போட்டு அமர்ந்திருந்த பிள்ளையார் அருகில் வந்தமர்ந்தேன். அரசிலைகளின் சலசலப்பும் ஆர்மோனியக் குழைவுமாய் அந்த இரவு என்றைக்கும் மறக்கமுடியாததாகக் கழிந்துகொண்டிருந்தது.
************
‘இந்த ஒரு வாரமும் திட்டமிடாமல் சுற்றலாமே’என்று தோழி சொன்னதை நான் வழிமொழிந்திருந்தேன். சேலம் நிகழ்ச்சி ஏற்கெனவே முடிவெடுத்த ஒன்று. அதைத் தவிர்த்து அன்றைக்கு எங்கே போகலாமெனத் தோன்றுகிறதோ அங்கே போவதாக உத்தேசம். ஆனால், ஒரு தொலைபேசி அழைப்பால் எங்கள் பாதை திசை மாறப்போகிறதென்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

மறுநாள் மதியம் சேலம் வாழ் கவிதைத் தம்பதிகளான சரவணகுமார்-ஸ்ரீதேவி ஏற்பாட்டில், அவர்களது அலுவலகத்தில் ஒரு சின்னக்கூட்டம் நடைபெற்றது. பிரபஞ்சன், குட்டி ரேவதி, லஷ்மி சரவணகுமார், தமிழ்ச்செல்வன்(ச.தமிழ்ச்செல்வன் அல்ல) ஆதவன் தீட்சண்யா, சரவணகுமார், ஸ்ரீதேவி எனக்குப் பெயர்தெரியாத மேலும் சிலர் கலந்துகொண்டார்கள். ‘குறைவான ஆட்களைக்கொண்ட நிறைவான கூட்டம்’என்று அதைச் சொன்னால் மிகையில்லை. அரசியல் பிரபலங்கள் புத்தகம் போட்டாலன்றி இலக்கியக்கூட்டங்களுக்கு அப்படியொன்றும் கூட்டம் எகிறுவதில்லை என்பது நாமறிந்ததே. இந்தக் கூட்டத்தில் யாரும் அரங்கிற்கு வெளியில் போய் நிற்கவில்லை. யாரும் கொட்டாவி விடவில்லை. யாரும் ‘எப்படா இவன் நிறுத்துவான்’என்று ஏங்குமளவிற்குத் தனக்குத் தெரிந்ததையெல்லாம் நீட்டி முழக்கிக் கொட்டவுமில்லை. ஈழப்பெண்களின் கவிதைகள் கவனிக்கப்படுமளவிற்கு உயர்ந்ததொரு தளத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கவிஞர் குட்டி ரேவதி குறிப்பிட்டார். கவிதை என்பதே ஒரு ‘கிராப்ட்’தான்; அது கட்டமைக்கப்படுவதாக இருக்கிறது என்று ஆதவன் தீட்சண்யா சொன்னார். எனக்கு அதில் ஒப்புதல் இருக்கவில்லை. கவிதை என்பது இயல்பான ஒரு பொறியில் இருந்து தோன்றுவது என்பதே எனது கருத்தாக இருந்தது. ஏதோவொரு உணர்விலிருந்து முகிழ்க்கும் ஒரு சொல்லை அடிப்படையாக வைத்து, அதைச் சுற்றிச் சுற்றி நாம் வனைவதாகவோ புனைவதாகவோதான் கவிதை இருக்கமுடியும். முற்றிலும் கவிதை கட்டமைக்கப்படுவதில்லை என்பது எனது கருத்து. என்னுடையது ஒன்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் இரும்புக்கம்பிகளையொத்த அசைக்கமுடியாத கருத்தில்லை. விவாதிக்கத்தக்கதே.

நாங்கள் நினையாப்பிரகாரமாக திருச்சியில் இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே ஆதவன் தீட்சண்யாவும் பிரபஞ்சன் அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிச் சொல்வதாயின், பிரபஞ்சன் அவர்களது நகைச்சுவை கலந்த பேச்சைத்தான் குறிப்பிடவேண்டும். ‘சிரிப்பால் வெட்டுவது’என்றும் அப்பேச்சைச் சொல்லலாம். ‘நடுநிலை என்றொரு புண்ணாக்கும் இல்லை’என்ற தொனிப்பட ஆதவன் தீட்சண்யா பேசினார். ஒரு பத்திரிகை என்றால் அதற்கென்றொரு நிச்சய நிலைப்பாடு இருக்கவேண்டும். அதையொட்டியே படைப்புகளும் வெளியிடப்படவேண்டும். ‘ஆதிக்கக் குரல்களும், பாதிக்கப்படுவோரின் குரல்களும் எப்படி ஒரே தளத்தில் ஒலிக்கமுடியும்?’என்பது ஆதவனின் கேள்வியாக இருந்தது.

இரண்டுநாட்களும் இலக்கியவழியில் நடந்தோம். அவர்கள் பேசியதில் எனக்குப் பாதி புரியவில்லை. இந்திய சாதியமைப்பு பற்றி ஐயந்திரிபறப் படித்துவிட்டு இம்மாதிரி ஆட்களோடு பேச அமரலாம் என்று தோன்றியது. சில சமயங்களில் நித்திரையில் சாமியாடிவிட்டு படுக்கையைச் சேரவேண்டியிருந்தது.

திருச்சியை ஏறக்கட்டிவிட்டு இராமேஸ்வரம் புறப்பட்டோம். இதற்கிடையில் எனக்கும் எங்கள் வண்டியோட்டிக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துவிட்டிருந்தது. எப்போதும் வண்டியின் வேகமுள் நூறைத்தாண்டுவதில் குறியாயிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. “நாங்கள் போகவேண்டிய இடத்திற்குத்தான் போகவிரும்புகிறோம். வைத்தியசாலைக்கு அல்ல”என்று ஒன்றுக்குப் பத்துத் தடவைகளுக்கு மேல் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை. பயணங்களில் வேகம் பதட்டமளிக்கிறது. வெளியில் எதையும் நிதானமாகப் பார்த்து ரசிப்பதை அது தடைசெய்கிறது. வண்டி நசுங்கி எங்கள் உடல்கள் வாழைக்குலைகள் போல வெளியில் தொங்கும் கற்பனை அடிக்கடி வர ஆரம்பித்தது. நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபிறகு வண்டியோட்டி ‘நிதானமாக’ச் செலுத்த ஆரம்பித்தார். அதாவது நாற்பதில் வண்டி நகர்ந்து (நடந்து)கொண்டிருந்தது. ஆக, நான் போகச் சொன்ன எண்பதில் அவருக்குப் பாதிதான் புரிந்திருக்கிறது. ‘இந்தப் பொட்டைக் கழுதைங்க நம்மை என்ன சொல்வது?’என்ற வரிகளை அவரது முகத்திலிருந்து வாசித்தறிய முடிந்தது. ‘வண்டியை நிறுத்து. நாங்கள் இறங்கிக்கொள்கிறோம்’என்று குரலை உயர்த்தியபிறகே, தனது வீட்டுப் பெண்களை அதட்டுவதுபோல எங்களை அதட்டமுடியாது என்பதை உணர்ந்தவராக எண்பதில் ஓட்டவாரம்பித்தார். அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை வேகமுள் எண்பதிலிருந்து இம்மியும் அங்கிங்கு அசையவில்லை.

எங்கே போனாலும் இணையத்தில் ஈழம் தொடர்பான செய்திகளை ஒருநாளுக்கு ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும் என்ற தவிப்பில் இருந்தோம். அன்று தமிழ்நெற்றைப் பார்த்தபோது தலைசுற்றியது. வன்னியில் அகதிகளாக இருந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் எறிகணை வீச்சு நடத்தியதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் இறந்திருந்தார்கள். ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள். அந்தக் காட்சிகளையெல்லாம் நேரடியாகப் பார்த்த ஒருவரது குரலைப் பதிவுசெய்து இணையத்தில் இட்டிருந்தார்கள். “என்னைச் சுற்றவர மனிதர்கள் இறந்து கிடக்கிறார்கள். சதைத்துண்டுகள் சிதறியிருக்கின்றன. இரத்தம் வீதிநெடுகிலும் ஓடுகிறது. குழந்தைகள் பயத்தாலும் பசியாலும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். எனது கண்முன்னால் ஒருவர் உயிரிழந்த உடலொன்றைத் துவிச்சக்கரவண்டியின் பின்பக்கத்தில் வைத்து கயிற்றினால் கட்டி எடுத்துப்போய்க்கொண்டிருக்கிறார். இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. இங்கே எனக்குப் பக்கத்தில் இந்த மரணக்களத்தில் எஞ்சியிருக்கும் இத்தனை ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லை”என்று குரல் நடுங்க அவர் சொன்னார். வண்டியிலிருந்து குதித்து இறங்கி எங்காவது ஓடிப்போய்விட வேண்டும் போலிருந்தது. கைகளை மடக்கி எதிரிலிருக்கும் எதனையாவது துவம்சம் செய்யவேண்டும்போலிருந்தது. நான் விம்மி வெடித்து அழுதேன். அது ஒன்றுதான் என்னால் செய்யமுடிந்தது. தோழி செய்வதறியாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘அழுவாதீங்க அக்கா’என்றார் வண்டியோட்டி. அழுது முடித்து வேறு வேலைக்குத் திரும்ப நாங்கள் இப்போதெல்லாம் பழகியிருக்கிறோம். பல்துலக்குவதுபோல, தலைவாருவதுபோல அழுவதும் பின் தெளிவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

பாம்பன் பாலத்தில் காற்று சுழற்றியடித்தது. கடல் பச்சை நிறமாயிருந்தது. எங்களைப் போலவே நிறையப் பேர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘கப்பல் வரும்போது இந்தப் புகையிரதப் பாதை விலகி வழிவிடும்’என்றார் தோழி. அதே போல ஒரு பாதை கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழியில் இருப்பது நினைவில் வந்தது.

இராமேஸ்வரம் யாத்திரீக நகரங்களுக்கேயுரிய முகக்களையோடிருந்தது. கடலில் முங்கிக் குளித்துக்கொண்டிருந்தவர்களுள் அநேகர் வடநாட்டுக்காரர்களாக இருந்தார்கள். உள்ளுர் பிராமணர்கள் வெளியூர் பிராமணர்கள் போல தோற்றமளித்தவர்களின் இறந்த உறவினர்களை மந்திரங்களால் குளிர்மைப்படுத்திக்கொண்டிருந்தார்கள். காற்று பல மொழிகளை ஏந்தி வந்தது. கடற்கரை துணிக்குவியலும், குப்பையுமாக கால்வைக்கக் கூசுமளவு அழுக்காக இருந்தது. அந்த அழுக்குக்குள் எதையோ கிண்டியபடி மாடுகள் வாயசைத்துக்கொண்டிருந்தன. இராமேஸ்வரத்திலும் சிவப்பு நிறச் சேலை கட்டிய நிறையப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள் மேல்மருவத்தூர் போய்விட்டு அப்படியே வந்தவர்களாயிருக்கும். அதே போல திரும்பும் வழியில் மஞ்சள் நிறச் சேலை கட்டிய பெண்கள் கூட்டமொன்று இளைப்பாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ‘அவர்கள் சமயபுரம் போய்விட்டு வருகிறார்கள்’என்றார் தோழி. ஆக, பெண்களின் சுற்றுலா மையங்களும் கோயில்களாகவே இருக்கின்றன.

இராமேஸ்வரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதி அறை பரவாயில்லை ரகம்தான். ஆனால், அறையின் பின்புறம் இருந்த கடல் குறைகளை மூழ்கடித்துவிட்டது. அவசரமாகக் கிளம்பி தனுஷ்கோடி பார்க்கப் போனோம். எல்லா இடங்களிலும் காசு பிடுங்கும் கூட்டமொன்று வாயைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருப்பது போல இங்கேயும் இருக்கிறது. தனுஷ்கோடிக்கரைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஒழுங்குசெய்பவர்கள் மிகுந்த தந்திரக்காரர்களாயிருந்தார்கள். இருபது பேர் சேர்ந்தவுடன் ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்புகிறார்கள். எங்கள் இருவருக்கும் முதல் வந்த வாகனத்தில் இடம் கிடைக்கவில்லை. ‘தனி வாகனம் எடுத்துக்கொள்ளுங்கள் 1200ரூபாதான்’ என்றார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். பிறகு வந்த வாகனத்திலும் எங்களுக்கு இடம் கிடைக்காதபடி அவர்களே முன்னின்று முகாமைத்துவம் செய்து சனங்களை அடைத்துவிட்டார்கள். எங்களுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தனியாக அழைத்துச் செல்வதனால் அவர்களுக்கு இலாபம் 1200 மட்டுந்தானா…? அதற்கும் மேலா…? என்று நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். அப்போது பார்த்து ஒரு வாகனம் வந்தது. அதில் நாங்கள் ஏறிக்கொள்ளக் கேட்டபோது, அது ஒரு குடும்பத்திற்கு மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார் அதில் இருந்தவர். அவருக்கு இளகிய முகம். நான் தோழியின் முகத்தைப் பார்த்தேன். அவர் அந்த மனிதரிடம் எங்கள் பிரச்சனையைச் சொன்னார். முதலில் அவர் மறுத்தாலும், ‘இவர்களை நம்பி நாங்கள் இரு பெண்கள் எப்படித் தனியாகச் செல்லமுடியும்?’என்ற கேள்வியின் பின் ஏற்றிக்கொள்ளச் சம்மதித்தார். எங்களை ஏமாற்றலாம் என்று காத்திருந்தவர்களின் முகங்களை, சூழ்ந்துவந்த இருள் முழுவதுமாக மூடிக்கொண்டாற்போலிருந்தது. சற்றைக்கெல்லாம் ஒரு பெரிய பெண்கள் கூட்டம் பொங்கி வழியும் சிரிப்பும் பேச்சுமாக வந்து வண்டியில் ஏறிக்கொண்டது. எல்லோரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருந்தார்கள். அறுபதிலிருந்து ஒன்றரை வயது வரை என பிராயம் மட்டுந்தான் வித்தியாசம். தங்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி என்றார்கள். தோழி ‘எனக்கும் திருநெல்வேலி பக்கந்தான்’என்றதும் முகமெல்லாம் அப்படியொரு வெளிச்சம் மின்ன ஒட்டிக்கொண்டார்கள்.

ஒழுங்கற்ற பாதையில் வண்டி விழுந்தெழும்பிப் போனது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பயணித்தபின் தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்தோம். தனுஷ்கோடியில் சொல்லில் எழுதமுடியாத அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தக் கடல் நான் எங்கும் பார்த்த கடல்போல இல்லை. அலை வந்து உடையும் ஓசைகூட வித்தியாசமாக இருந்தது. அந்த மாலைப்பொழுதின் தனிமையில் அது என் மனதின் கற்பிதமாயிருக்கலாம். காலத்தின் மீதமென நின்றுகொண்டிருந்தன தூர்ந்த செங்கற் கட்டிடங்கள். காய்ந்து பொருக்குத் தட்டிய மலக்குவியல்களால் கவனமாகப் பார்த்து கால்வைத்து நடக்கவேண்டியிருந்தது.

இந்த இடத்தை வாழத் தேர்ந்தெடுத்த மனம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இங்கே குழந்தைகள் விளையாடியிருக்கும்… இங்கே காதலர்கள் அமர்ந்திருந்திருப்பார்கள்… இங்கே முழுநிலவில் கூடிப் பேசியிருப்பார்கள். இத்தனை சாதுவாக இருக்கும் கடலா இவர்களை விழுங்கியிருக்கும்? அடியறுத்திருக்கும்?

தனுஷ்கோடி என்றதும் எப்போதும் நினைவில் வருவது குழந்தைகளும் கையுமாக வந்து இறங்கும் அகதிகள்தான். இந்தக் காற்றில் அவர்களின் அழுகுரல் கலந்திருக்குமோ…? நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் ஏங்கிய விழிகளுடன் காத்திருந்திருப்பார்களோ? கடல் முடியும் இடத்தில் மரங்களின் சாயல் சாம்பல் நிறத்தில் தெரிந்தது. தனுஷ்கோடி எனக்கு மன்னாரை ஏதோவொரு விதத்தில் நினைவுபடுத்துவதாகத் தோழியிடம் சொன்னேன். அக்கரையைக் கொஞ்சநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் பாரமேறிக் கிடந்தது. ‘தனுஷ்கோடியைப் பற்றி கோணங்கிக்குத்தான் நிறையத் தெரியும்’ என்றார் தோழி.

இருள் முழுவதுமாக மூடவாரம்பித்தது. நாங்கள் எங்களோடு வந்தவர்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சிறுபுதர்களும் கடல் மணமும் மணல்வெட்டைகளும் அன்று கனவில் வந்தன.

**** ***** ****
காலையிலேயே எழுந்து சிவன் கோயிலுக்குப் போய்விட்டு மண்டபம் அகதி முகாமுக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். கோயில் முழுவதும் சொதசொதவென்று ஈரமாக இருந்தது. இராமேஸ்வரக் கடலில் மூழ்கியெழுந்து அப்படியே ஈர உடைகளோடு கோயிலை வந்து தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாம். ஈரச்சேலை காலைப் பிடித்து இழுக்க, முக்காடு போட்ட நிறைய வடநாட்டுப் பெண்கள் சுடுமணல் நடையில் சுவாமி தரிசனம் செய்தார்கள். தொந்தி பெருத்த ஆண்களுக்கும் குறைவில்லை. ஆன்மீகம் என்பது கேள்வி கேட்கப்படாத பல விசித்திரமான பழக்க வழக்கங்களை உடையதென்பதைத் தவிர்த்து எனக்குப் பெரிய அபிப்பிராயங்கள் இல்லை. இந்த விடயத்தை யாராவது இருத்தி வைத்து உபதேசித்தாலும் எழுந்தோடவே பார்க்கிறது மனம்.

மண்டபத்தில் எங்களுக்குக் கிடைத்த ‘மண்டகப்படி’யை வாழ்வில் மறக்கமுடியாது. அனுமதி பெற்றே உள்ளே செல்லவேண்டும் என்று பலர் சொல்லியிருந்தாலும், நாங்கள் பார்த்துவரப் போன பெண் ‘இல்லை.. முகாமில் தங்குவதென்றால் மட்டுந்தான் அனுமதி பெறவேண்டும். நீங்கள் எனக்குப் பின்னால் வாருங்கள்’என்று சொல்லியதை நம்பி உள்ளே காலடி எடுத்துவைத்தோம். வாசற்காவலர் போலிருந்த ஒருவர் ‘யாரைக் கேட்டு உள்ளே போறீங்க?’என்றார். அத்தோடு நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை. ‘இந்த மண்ணுல நிக்கிறவரைக்கும் நீ அகதிதான்… அது நினைப்புல இருக்கட்டும்… ஏதோ தொறந்த வூட்டுல நொழையுற மாதிரி நொழையுற’என்றார். ‘தேவையில்லாத டயலாக்கை எங்கள் மீது ஏன் பிரயோகிக்கிறார்… இதை வேறு யாருக்காவது முற்கூட்டியே தயார்செய்துவைத்துக் கொண்டு காத்திருந்து, அவர் வராமற் போன கடுப்பில் அவ்வார்த்தைகளை வியர்த்தமாக்கக்கூடாதென்று எங்கள் மீது பிரயோகிக்கிறாரா?’என்றெல்லாம் யோசனை எழுந்தது. சூடாக ஏதாவது சொல்லவேண்டுமென்று உதட்டுக்குள் சொற்கள் முண்டியடித்தன. ஆனால், காரியம் முக்கியம் என்பதனால் அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றோம். ‘போய் கலெக்டர்ட்ட பர்மிசன் வாங்கிட்டு வாங்க’என்றார். பக்கத்துப் பெட்டிக்கடையில் அனுமதிப்பத்திரம் வாங்கி நிரப்பி கலெக்டரின் வாசல் முன் காத்துக்கிடந்தோம். அதற்கிடையில் ‘எதுக்கு வந்தீங்க?’என்று வெளியில் நின்றவர் ஒரு குட்டி விசாரணை நடத்தினார். சுவர்களுக்கும் அங்கே காதுகள் இருந்தன. அருகிலும் தொலைவிலும் பல கண்கள் எங்களைக் கவனித்துக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. திரும்பிப் போய்விடலாமென்று தோன்றிக்கொண்டேயிருந்தது. கலெக்டர் ஒரு மணி நேரம் உள்ளே போய்வர அனுமதி தந்தார்.

நுழைந்தவுடன் ஒரு சிறிய எட்டடிக்கு எட்டடிக் கூடம். அதனையடுத்து சின்னதாய் ஓர் அறை. அதுதான் சமையலறையும் படுக்கையறையும். அதைப் பார்த்தபோது ‘பொங்க ஒரு மூலை… புணர ஒரு மூலை’என்ற கவிதை நினைவில் வந்தது. மின்விசிறி காற்றுக்குத் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. அப்படியொரு அறைக்குள் மூன்று மாதக் குழந்தையொன்று வெகு அழகாய் ஒரு பெரிய தக்காளிப்பழம் போல என் மடியில் அமர்ந்திருந்தது. அதன் முகத்தைப் பார்க்கப் பார்க்கக் கலங்கியது. ஆனால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள்; சாப்பிடுகிறார்கள்; நிம்மதியாக உறங்குகிறார்கள். இன்றைய கொலைக்காலத்தில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

**** ***** *****
இராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குப் போய், அந்த ‘உறங்கா நகரத்தை’அனுபவிப்பது என்ற எங்கள் திட்டம் மதுரை இளவரசர் மு.க.அழகிரியால் பிழைத்துப் போயிற்று. நாங்கள் நகரத்திற்குள் நுழைந்தபோது திரும்பிய இடமெல்லாம் மு.க.அழகிரியின் ‘கட் அவுட்’களைக் கண்டோம். ‘எங்கள் பிடல் காஸ்ட்ரோவே’, ‘எங்கள் குடும்பத் தலைவனே’(?), ‘எங்கள் நேதாஜியே’, ‘மதுரையின் மாமன்னனே’என்ற ஆளுயர எழுத்துக்களாலான அதியுயர்ந்த ‘கட் அவுட்’கள் எங்களைக் கலங்கடித்தன. விசாரித்ததில் மறுநாள் அவருக்குப் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ஓரளவு மரியாதைப்பட்ட விடுதிகளெல்லாம் ‘கொண்டாட’ வந்திருந்தோரால் நிறைந்திருந்தன. நேரே திருச்சிக்குப் போய்விடலாம் என்று நான் சொன்னேன். வந்ததுதான் வந்தோம் மதுரை மீனாட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாமென்று போனோம். சுற்றி மாளாத கருங்கல் காவியம் அது.
திருச்சிக்கும் எங்களுக்கும் அப்படியொரு பிராப்தம். திட்டத்தில் இல்லாத நகரம் எங்களைத் திரும்பத் திரும்பத் தன்னிடம் இழுத்தது. நள்ளிரவு கடந்து நாங்கள் விடுதியை வந்தடைந்தபோது ஊர் உறங்கியிருந்தது. அறைப்பையன் ஒருவன் சுவரில் சாய்ந்து வாய்திறந்து தூங்கிக்கொண்டிருந்தான். மணிச்சத்தத்தில் விழித்து பைகளை எடுத்துக்கொண்டு அறைக்கு விரைந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எந்தக் கிராமத்து மடியிலோ உறங்கிக்கொண்டிருந்தவனை பணத்தேவை நகரத்தின் பெருவாயுள் திணித்திருக்கும்.
**** **** ****
நாங்கள் திரும்பிவந்த வழி மிக அழகானது. பச்சை ததும்பி வழியும் வயல்களைக் காற்று சலிக்காமல் வருடிக்கொண்டேயிருந்தது. மரங்களின் செழிப்பைப் பார்த்து ‘அப்படியே கடித்துத் தின்னவேண்டும் போலிருக்கிறது’என்றேன். தோழி வினோதப் பிராணியைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார். ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் சாலையைக் கடந்துபோயின. தமிழ் சொட்டும் பெயர்களோடு ஊர்கள் எதிர்ப்பட்டன. தமிழகம் இத்தனை அழகானதா என்று அடிக்கடி வியக்கத் தூண்டிய பாதை அது. நிறைய சிற்றோடைகளை வழியில் நாங்கள் பார்த்தோம்.

வீடு வந்து சேர்ந்து சில நாட்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதுபோலவே இருந்தது. கண்ணை மூடினால் காடும் மரமும் வயலுமாய் கூடக் கூட ஓடிவந்தன. சில மாதங்களுக்கேனும் வீட்டோடு இருந்து இம்முறை வாங்கிய புத்தகங்களை வாசித்து முடித்துவிடவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேன். சங்கற்பங்களின் ஆயுளைப் பற்றி நானும் நீங்களும் அறியாதவர்களா என்ன? நாம் உறங்கிப்போனபிறகு, நம்மைக் குறித்து புத்தகங்கள் தமக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக்கொள்ளும்போலும்!
நன்றி: உயிரோசை



20 comments:

  1. அட்டகாசம் தமிழ்நதி..முழுமூச்சோடு வாசித்து நிமிர்ந்தேன்..உங்கள் சில இடுகைகளில் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு விடும்..சில இடுகைகள் வாசித்து முடுக்கும் வரை நிமிர விடாது....இப்பதிவு அதில் ஒன்று..எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்!!

    ReplyDelete
  2. எழுத்தாளர்கள் வரிசையில் பெருமாள் முருகனையும் சேர்த்திருக்கலாம் :-))

    மீண்டும் ஒருமுறை தனுஷ்கோடியை பார்த்தது போன்ற உணர்வு.மறக்கமுடியாத இடங்க.

    ReplyDelete
  3. எவ்வளவு பெரிய பதிவு அனாலும் விடாமல் வாசிக்க வைக்கிற நெருக்கம் உங்களிடம் இருக்கிறது...

    தமிழ் நாட்டை ஆகக்குறைந்த நாட்களிலாவது பார்த்து முடிக்க என்கிற ஆசை எனக்குள்ளும் இருக்கிறது பார்க்கலாம்..

    ReplyDelete
  4. சில வேளை உங்களையும் தமிழ் நாட்டில்தான் சந்திப்பேனோ? பொறுத்திருந்து பார்க்கலாம்...

    ReplyDelete
  5. அடேயப்பா என்ன ஒரு அனாயாசமான நடை?!

    //‘தேவரீர் கருணை பாலிக்க வேண்டுகிறேன்’என்ற அழுங்குரல் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. நரம்பு தெறிக்கும் அவரது தோற்றத்தில் தெரிந்த ஏழ்மையும்கூட.//

    //தனுஷ்கோடி என்றதும் எப்போதும் நினைவில் வருவது குழந்தைகளும் கையுமாக வந்து இறங்கும் அகதிகள்தான். இந்தக் காற்றில் அவர்களின் அழுகுரல் கலந்திருக்குமோ…?//

    // நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் ஏங்கிய விழிகளுடன் காத்திருந்திருப்பார்களோ? கடல் முடியும் இடத்தில் மரங்களின் சாயல் சாம்பல் நிறத்தில் தெரிந்தது. //

    // ‘இந்த மண்ணுல நிக்கிறவரைக்கும் நீ அகதிதான்… அது நினைப்புல இருக்கட்டும்… ஏதோ தொறந்த வூட்டுல நொழையுற மாதிரி நொழையுற’என்றார். ‘தேவையில்லாத டயலாக்கை எங்கள் மீது ஏன் பிரயோகிக்கிறார்… இதை வேறு யாருக்காவது முற்கூட்டியே தயார்செய்துவைத்துக் கொண்டு காத்திருந்து, அவர் வராமற் போன கடுப்பில் அவ்வார்த்தைகளை வியர்த்தமாக்கக்கூடாதென்று எங்கள் மீது பிரயோகிக்கிறாரா?//
    //நுழைந்தவுடன் ஒரு சிறிய எட்டடிக்கு எட்டடிக் கூடம். அதனையடுத்து சின்னதாய் ஓர் அறை. அதுதான் சமையலறையும் படுக்கையறையும். அதைப் பார்த்தபோது ‘பொங்க ஒரு மூலை… புணர ஒரு மூலை’என்ற கவிதை நினைவில் வந்தது. மின்விசிறி காற்றுக்குத் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. அப்படியொரு அறைக்குள் மூன்று மாதக் குழந்தையொன்று வெகு அழகாய் ஒரு பெரிய தக்காளிப்பழம் போல என் மடியில் அமர்ந்திருந்தது. அதன் முகத்தைப் பார்க்கப் பார்க்கக் கலங்கியது. ஆனால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள்; சாப்பிடுகிறார்கள்; நிம்மதியாக உறங்குகிறார்கள். இன்றைய கொலைக்காலத்தில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.//

    //மணிச்சத்தத்தில் விழித்து பைகளை எடுத்துக்கொண்டு அறைக்கு விரைந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எந்தக் கிராமத்து மடியிலோ உறங்கிக்கொண்டிருந்தவனை பணத்தேவை நகரத்தின் பெருவாயுள் திணித்திருக்கும்.//
    .

    //சங்கற்பங்களின் ஆயுளைப் பற்றி நானும் நீங்களும் அறியாதவர்களா என்ன? நாம் உறங்கிப்போனபிறகு, நம்மைக் குறித்து புத்தகங்கள் தமக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக்கொள்ளும்போலும்! //

    ஏதோ உங்களது பயணத்தில் நானும் கூடவே இருந்ததைப் போல ஒரு பிரமை, வாசித்து முடித்ததும் ஏற்ப்பட்டது நிஜம் என்றால் அது உங்களது எழுத்துக்கு கிடைத்த வெற்றியே .இவ்வளவு நாட்கள் உங்களை மிஸ் பண்ணி விட்டேன்.இனி தொடர்வேன் .அருமையாக இருக்கிறது இந்த பதிவு .

    ReplyDelete
  6. உயிரோசையிலேயே படித்தேன், நன்றாக இருந்தது, எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இழையோடும் பகடி ரசிக்கும் படியாய் இருந்தது, இராமேஸ்வரம்,,,,
    என்ன சொல்வது

    ReplyDelete
  7. //அழுது முடித்து வேறு வேலைக்குத் திரும்ப நாங்கள் இப்போதெல்லாம் பழகியிருக்கிறோம். பல்துலக்குவதுபோல, தலைவாருவதுபோல அழுவதும் பின் தெளிவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டிருக்கிறது.//

    இது ஈழத்தமிழர்களுக்கு என்று இருந்த நிலை போய், உணர்வுள்ள தமிழர்களின் நிலை இன்று இது தான்.

    நீங்கள் வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல, சிலருக்கு மதுவும், சிலருக்கு இணையமும், வெகு சிலருக்கு இரண்டும் ஒரு வடிகாலக உள்ளது.

    //மண்டபத்தில் எங்களுக்குக் கிடைத்த ‘மண்டகப்படி’யை வாழ்வில் மறக்கமுடியாது.//

    எங்கள் ஊர்பக்கம், "பொணத்து நெத்தில இருக்குற காசைக் கூட இவன் விட மாட்டன்" என சிலரை சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றேன் சிறுவயதில். ஆனால், தமிழகத்துக்கு புலம் பெயர்ந்துவந்தவர்களிடம் கூட ஏதாவது தேறுமா என ஆராய்ந்த எமது அரசு இயந்திரங்களின் மூலம் அவர்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete
  8. //சந்தனமுல்லை said...

    உங்கள் சில இடுகைகளில் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு விடும்..சில இடுகைகள் வாசித்து முடுக்கும் வரை நிமிர விடாது....இப்பதிவு அதில் ஒன்று..எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்!!//

    அப்படியே வழிமொழிகிறேன் !!!!

    ReplyDelete
  9. சந்தனமுல்லை,

    நான் எல்லோரையும் அழவைக்கிறேன் போலிருக்கிறது.... நான் இயல்பாகத்தான் எழுதுகிறேன். ஆனால், வாசிப்பவர்கள் எப்படியோ அழுதுவிடுகிறார்கள்... ஒருவேளை 'இது ஏன் எழுத வந்திச்சு'என்று நினைத்து அழுகிறார்களோ என்னமோ:) நன்றி தோழி.

    கார்த்திக்,

    பெருமாள் முருகன் வந்திருந்தாரா என்ன..? மன்னிக்கவும். நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் தெரிந்திருக்காது. அவருடைய புத்தகங்கள் மட்டும் வாசித்திருக்கிறேன். இம்முறையும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். இன்னமும் வாசிக்கவில்லை. தகவலுக்கு நன்றி கார்த்திக். ம்..தனுஷ்கோடி அமானுஷ்யத்தன்மையோடு கூடிய ஒரு இடம்.

    தமிழன்-கறுப்பி,

    எழுதும்போதே நீளமான பதிவு என்று தெரியும். ஆனால், அதைச் சுருக்கினால் சிலது விடுபடும். ஒரு வாரப் பயணமல்லவா? இனி இப்படியெல்லாம் நீளமான பதிவு போட்டுக் கொல்ல மாட்டேன். எனக்கே எனக்காக எழுதிக்கொண்ட குறிப்புத்தான் அது. ஒரு காலத்தில் எடுத்துப் பார்க்கும்போது பல ஞாபகங்கள் வருமல்லவா? ஒரு வகையில் நாட்குறிப்பு போலத்தான்... இது பயணக்குறிப்பு.

    "சில வேளை உங்களையும் தமிழ் நாட்டில்தான் சந்திப்பேனோ? "

    சந்திக்கலாமே...

    மிஸஸ் டவுட்,

    'எத்தனையோ பெயரிருக்க ஏனிந்தப் பெயர்'என்று நான் கேட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள்தானே...? 'மிஸஸ் டவுட்ஃபயர்'ஞாபகம் வந்தது. உண்மையிலேயே என் பதிவை ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள். நான் நன்றாகத்தான் எழுதுகிறேனோ என்று எனக்கே வர வர சந்தேகம் எழ ஆரம்பித்துவிட்டது:) அடிக்கடி வந்து போங்கள்.

    நன்றி யாத்ரா,

    உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

    வினோ,

    எனக்குத் தெரியும். நீங்கள் என்மீது கோபமாக இருக்கிறீர்கள். விரைவில் நீங்கள் கேட்டது எழுதுவேன். விமர்சனத்திற்காக என்னை நாற்காலியில் கொண்டுபோய் அமர்த்துவதுதான் சிரமமாக இருக்கிறது. ஒருவேளை மற்றவர்கள் கவிதையில் கைவைக்க மனசு வரவில்லையோ என்னவோ...

    நீங்கள் சொல்வது சரி பதி.

    அண்மையில் எனது ஈழத்து நண்பர் ஒருவரிடம் அவர் குடியிருக்கும் வீட்டுக்காரர் கேட்டாராம். 'ஈழத்தில் போரை நிறுத்துவதனால் எங்களுக்கென்ன இலாபம்'என்று. அப்படியிருக்கிறது மனிதாபிமானம்! என்னத்தைச் சொல்ல...?

    உங்களையும் சந்தனமுல்லையையும் நான் வழிமொழிகிறேன். ஏனென்றால் எழுதும்போது சிலசமயங்களில் எனக்கே அழுகை முட்டிக்கொண்டு வந்துவிடும். மனம் நொய்மையாகிவிட்டது நண்பர்களே.

    ReplyDelete
  10. உயிரோசையில் இந்தப் பதிவை வாசித்ததில் இருந்து இதுவே இரண்டு நாட்களாய் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

    நேற்று உங்களின் “ஊர்” (ந.குமாரனுக்கு மாதங்கி எழுதுவது) படித்தேன். கண் கலங்கிவிட்டேன்.
    சில நிமிடங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

    எழுத்து தான் உங்களுக்கு சிறந்த வடிகாலாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
    இந்த எழுத்து இன்னும் உங்களை இன்னும் வெகு உயரத்தில் வைத்து கொண்டாட எனது வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்.

    கண்கள் பனிக்க
    தோழமையுடன்
    அமித்து அம்மா.

    ReplyDelete
  11. தமிழுடன் பயணம் செய்ய ஏலாவிட்டாலும், இக்கட்டுரையின் வாயிலாக கூடவே வந்தது போல உணர்கிறேன்.பயணம்எனக்கு அலுக்காத ஒரு விதயம் தமிழ். ஆனால் வெகு நாள்கள் வீட்டை விட்டு வெளியில் அலைந்து திரியும் போது வீட்டின் வாசம் நம்மை இழுத்துக் கொண்டேயிருக்கும்...தலைப்பு கவிதையாக இருக்கிறது தமிழ்..என்னிடம் இப்போதைக்கு போதிய வார்த்தைகள் இல்லை..அமித்து அம்மா சொன்னதை நான் வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள் தமிழ்.

    ReplyDelete
  12. நல்ல பயணம் தமிழ்நதி :) மன்னிக்கவும் அன்று அய்யப்பமாதவன் அவர்கள் அலைபேசியை கொடுத்தபோது தெரியவில்லை யாரென்று. பிறகு தான் நியாபகம் வந்தது. ஆனந்த விகடனில் உங்கள் பேட்டியைப் படித்திருகிறேன். மறுமுறை சந்திக்கையில் பேச ஆர்வவமிருக்குமென நம்புகிறேன் :)

    இவ்வாழ்கையை போலவே பயணமும் கொண்டிருக்கின்றது கொஞ்சம் வருத்தங்களை,கொஞ்சம் மகிழ்வை, தீர்மானிக்க முடியாத கண‌ங்களை,கொஞ்சம் சுவாரசியங்களை மற்றும் கொஞ்சம் சலிப்பை.
    எனக்கும் எங்காவது பயணிக்க‌ ஆசை. ஊர் பெயர் தெரியா இடத்தில், புது விதமாக, புது அணுபவமாக.
    நீங்கள் கொடுத்துவைத்திருகிறீர்கள் ஒருவகையில் :)

    ReplyDelete
  13. மிக்க நன்றி, தங்கள் வாழ்த்துகள் உற்சாகமளிக்கிறது

    ReplyDelete
  14. Hola,

    Angry, I've bundled and buried it. And it's being composted now :-) There's time.

    ReplyDelete
  15. தோழி,
    நம்புறீங்களோ இல்லையோ..
    அழகான ஒரு பின்னூட்டத்தை இணைக்க முயன்று..ஏதொவொன்றை என் விரல் அளுத்த அழிந்து போயிற்று, சாட்சியங்கள் இல்லாமலேயே எனது நியாயங்கள்.
    .....
    இது 2ம் பதிப்பு என்று சொல்லலாம்.
    ....
    முதலில் நான் சொல்ல விழைந்தது, எதற்காக தங்கள் படைப்பு என்னைக் கவர்ந்தது என்பதுபற்றி.
    ...
    1. எளிமை
    2. துணிவு
    3. நேர்மை
    ...
    இந்தப் படைப்பு எனக்கு விளாத்திகுள கரிசல் காட்டில் தேவராட்டம் பயிலப்போன என் நொந்து போன நினைவையும் மீட்டியது.
    தோழிக்குத் தெரிந்த கோணங்கியை எனக்கும் தெரியும். அவருடன் பயணம் செய்வது அலாதி ஆனந்தம்.
    வள்ளலாரை எனக்குச் சொல்லித் தந்தார்.
    ஒரு நல்ல நண்பர்.
    ...
    நீங்கள் பார்த்ததைவிட, இவை எல்லாரையும் காய்வெட்டிப்போட்டு நான் பார்த்தவை ஏராளம்.
    ...
    பயணியுங்கள்..தமிழ்நாடு சொல்லித்தரும் கவிதை பல.

    ReplyDelete
  16. தமிழ்நதி,

    மீண்டும் இணையப்பக்கம் தலைநீட்டக் கிடைத்த அவகாசத்தில் உங்களை முன்புபோலவே தவறாது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இடுகையும் வாசித்தபின்பு நிறையச் சொல்லவேண்டும் போலவும், சொல்ல என்னிடம் ஒன்றுமே இல்லாதது போலவும் ஒருசேரத் தோன்றுவதால் அமைதியாக நகர்ந்து விடுகிறேன். இப்போதும் இதைத்தவிர வேறென்ன சொல்லவெனத் தெரியவில்லை:(( எழுதிக்கொண்டிருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  17. //நீங்கள் சொல்வது சரி பதி.

    அண்மையில் எனது ஈழத்து நண்பர் ஒருவரிடம் அவர் குடியிருக்கும் வீட்டுக்காரர் கேட்டாராம். 'ஈழத்தில் போரை நிறுத்துவதனால் எங்களுக்கென்ன இலாபம்'என்று. அப்படியிருக்கிறது மனிதாபிமானம்! என்னத்தைச் சொல்ல...?//

    ம்ம்ம்ம்... அவர்களைப் போன்றவர்கள் எவ்வளவோ பரவாயில்லை, எங்களின் சில அரசியல் வியாதிகளுக்கு முன்... மனதில் தோன்றியவற்றை அறியாமையின் காரணமாக உதிர்த்துவிட்டு செல்கின்றார்கள் என்னும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் அவர்கள்...

    // உங்களையும் சந்தனமுல்லையையும் நான் வழிமொழிகிறேன். ஏனென்றால் எழுதும்போது சிலசமயங்களில் எனக்கே அழுகை முட்டிக்கொண்டு வந்துவிடும். மனம் நொய்மையாகிவிட்டது நண்பர்களே.//

    நடந்து கொண்டிருப்பவை கண்டு மனம் கலங்காமலும் அழுகை வராமலும் இருந்தால் தான் நம்மை நாம் சந்தேகிக்க வேண்டும்... :(

    ReplyDelete
  18. தமிழ்நதி, அருமையான பயணம் கட்டுரை.. மிக மிக ரசித்தேன்.. முதல்வேளையாக ஒரு வாரம் இப்படியே எங்கேயாவதுச் என்றுவர வேண்டும் போல இருக்கிறது..

    தனுஷ்கோடி கண்முன்னே விரிகிறது..

    ReplyDelete
  19. பெண்களின் பயண வழி , வலியோட தான் இருக்கிறதா?


    உங்கள் கட்டுரை அருமை

    ReplyDelete