அன்புள்ள ராஜன்,
இப்போதெல்லாம் ஓரிடத்தில் தரிக்கவே முடிவதில்லை. செயலற்று ஒரு கணம்கூட அமரவும் முடிவதில்லை. எழுத்து, வாசிப்பு, சமையல், துப்பரவு, பாட்டு, பயணம், தொலைபேசி… எதிலாவது பொருத்திக்கொள்ளாமல் சும்மா அமர்ந்திருந்து யோசிப்பது குறைந்துபோய்விட்டது. எங்காவது எதற்காவது ஓடிக்கொண்டேயிருக்கும்படியாக ஒரு பிசாசு உள்நின்று என்னை விரட்டிக்கொண்டேயிருக்கிறது. ஏதோ மன அவசம், இன்னதென்று புரியாத துயரம். இல்லை… அது எனக்குப் புரிந்துதான் இருக்கிறது. எங்களுக்கு உரிமையுள்ள சாலைகளை இழந்து நாடோடிகளாக அலைவதைப் போன்ற துயரம் என்ன இருக்கிறது? இன்று பகல் வான்வழியாக மதுரையை வந்தடைந்தேன். ஊர்சுற்ற எனக்கு மட்டும் எப்படியோ காரணங்கள் கிடைத்துவிடுகின்றன. இம்முறை இலக்கியக் கூட்டம் என்றொரு சிறப்புக் காரணம்.
மேகக் கூட்டங்களுக்கிடையே வீட்டையும் தூக்கிக்கொண்டு பறந்துவந்தேன். எனது அறை விளக்குகள் எல்லாவற்றையும் ஞாபகமாக அணைத்தேனா என்று யோசித்தேன். பின்வாசல் கம்பிக்கதவை நினைவாகப் பூட்டினேன். மொட்டைமாடியில் காயப் போட்டிருந்த உடைகளை எடுத்துவைக்க மறந்துபோனது நினைவில் வந்தது. மின்சாரக் கட்டணத்திற்கு, இணையத்தொடர்புக்கு, பேருந்துக் கட்டணத்திற்கு பணம் கொடுத்தாயிற்று. பிள்ளைகளுக்கு சாப்பிட இடம் ஒழுங்குசெய்தாயிற்று. இரண்டு மணியானால் எங்கள் வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் தெருநாய்களுக்குக்கூட சாப்பாட்டிற்கு ஒழுங்குசெய்துவிட்டே கிளம்பிவந்தேன்.
ஆனாலும் வீடு என்னோடு வருகிறது. எத்தனை பாரம் அது! அது சீமெந்தும் கல்லும் கம்பியும் மரமும் மட்டுமல்ல; பெண்கள் அளவில் அதுவொரு ஆடை, செருப்பு, கைப்பை. வீட்டைப் பத்திரப்படுத்தாமல் தெருவில் இறங்கமுடியாது.
விதிவிலக்காக, திருமணத்திற்குப் பிறகு சிறகுகள் முளைத்த பறவை நான். கணவனே ஆத்மார்த்த தோழனாக அமைவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் என் வார்த்தைகளில் ஏதோ இடறுகிறது. “கணவன் சிநேகிதனாக இருப்பது அவனுடைய கடமை; அது நான் உங்களுக்கு அளிக்கும் சலுகை அல்ல” என்பீர்கள். உள்ளுர பெருமிதந்தான். அவ்வாறு துணை கிடைக்காத பெண்களுக்காக நான் இரங்குகிறேன் ராஜன். காலில் ஈயக்குண்டாக எந்த உறவுமில்லை என்றபோதிலும், ஏன் இத்தனை குற்றவுணர்ச்சி? ஒருவேளை நான் ‘பெண்ணாக’வளர்க்கப்பட்டதாலா? பெண் எனும் ஞாபகம் கண்ணுக்குத் தெரியாத கால்விலங்காக கனத்துக் கிடப்பதிலிருந்து என்னை எப்போது விடுவித்துக் கொள்ளப்போகிறேன் என்று தெரியவில்லை. பயணங்களின்போது என்றில்லை; சமையலறை வெக்கையிலிருந்து தப்பிப்பதற்காக- அலுத்துச் சலித்த உணவுப் பட்டியலிலிருந்து ஒரு மாறுதலுக்காக உணவகத்திற்குச் செல்லும் நாட்களில் ஒரு குற்றவாளியைப் போலவே உணர்கிறேன். ‘இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?’என்று அன்றைக்கு யாராவது கேட்டுவிட்டால், நான் பொய்சொல்லத் தலைப்படுகிறேன். அறைகளுள் பொருட்கள் சிதறிக்கிடந்தால் ஏன் அத்தனை பதட்டமடைகிறேன் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அழுக்கடைந்த ஆடைகளை எனது மூளைக்குள் திணிப்பது யார்? கழுவப்படாத பாத்திரங்கள் ஏன் என்னைத் தொந்தரவு செய்கின்றன? அந்த 32 கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, ‘எனக்கு வைன் பிடிக்கும்’என்று சொல்லமுடியாமல் செய்த ‘ஒழுங்கான பெண்ணை’நான் ஒருநாளைக்குக் கொல்வேன் ராஜன்.
ஒழுங்கின் அரசியல் குரூரமானது. அது கையில் சாட்டையோடு வீடு முழுவதும் அலைகிறது. வெளியிலும் என்னைத் (எங்களை-பெண்களை) தொடர்கிறது.
‘நீங்கள் என்னை இப்படி வளர்த்திருக்கக்கூடாது’என்று சின்ன வயதில் அம்மாவை மனசுக்குள் கோபித்த பட்டியல் நீளமானது. ஆனால், இப்போது நினைக்கிறேன் “அம்மா! நீங்கள் என்னைப் போலல்லாது மூன்று வேளை சமைத்தீர்கள். இரவு எத்தனை மணியானாலும் அப்பாவுக்காகக் காத்திருந்து அவர் வந்தபிறகே சாப்பிட்டீர்கள். கோழிக்கறி வைக்கும் அன்று நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை (மிஞ்சியிருந்தால்) மட்டுமே நீங்கள் சாப்பிட்டீர்கள். போதையில் அப்பா அடித்தாலும், திருப்பி ஒரு சொல்லும் பேசாதிருந்தீர்கள். ஊரைவிட்டுத் தனியாக எங்கும் போயறியாத பெண் நீங்கள். நான் நாடுவிட்டு வந்து எங்கெங்கோ அலைந்து, எங்கோ ஒரு நகரத்தின் விடுதியறையினுள் தனியாக அமர்ந்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.”
ராஜன், எனது பிரார்த்தனை எல்லாம், எங்கள் பிள்ளைகளின் (பையன்களின்) மனைவிகளாவது பயணங்களின்போது வீடுகளைத் தூக்கிச் செல்லக்கூடாதென்பதுதான்.
கல்யாணி
பாரதி கண்ட கனவு பலிக்கிறது போல !
ReplyDeleteஎல்லாப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்தாலும் , அவர்கள் எல்லாராலும் இப்படி எங்கேயோ கொஞ்சம் விடுதியில் தனிமையில் இருக்கும் அளவுக்கு துணிச்சல் கிடைக்குமா?
கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்கு.
ஐயோ ! இது நீங்கள் எழுதியதுதானே ?
ReplyDeleteகீழே கல்யாணி என்று எழுதி இருக்கிறதே!
ஒழுங்கின் அரசியல் குரூரமானது. அது கையில் சாட்டையோடு வீடு முழுவதும் அலைகிறது.
ReplyDeleteஒழுங்கை தூரத் தூக்கி போட்டாயிற்று குற்ற உணர்வில்லாதிருக்க பழகியாகிவிட்டது தமிழ்..இந்த இடுகையை படிக்கும்போது என் பழைய முகத்தினை பார்த்துக்கொண்டது போல் உள்ளது.
/ஒழுங்கான பெண்ணை’நான் ஒருநாளைக்குக் கொல்வேன் ராஜன்./
சீக்கிரம் நடக்கட்டும் :)
என்ன எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை....தினமும் வேலைக்குக் கூட வீட்டை எடுத்துச் செல்பவளாகத்தான் இருக்க முடிகிறது....அருமையான உணர்வின் வெளிப்பாடு
ReplyDeleteசமையலறை வெக்கையிலிருந்து தப்பிப்பதற்காக- அலுத்துச் சலித்த உணவுப் பட்டியலிலிருந்து ஒரு மாறுதலுக்காக உணவகத்திற்குச் செல்லும் நாட்களில் ஒரு குற்றவாளியைப் போலவே உணர்கிறேன். ‘இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?’என்று அன்றைக்கு யாராவது கேட்டுவிட்டால், நான் பொய்சொல்லத் தலைப்படுகிறேன். அறைகளுள் பொருட்கள் சிதறிக்கிடந்தால் ஏன் அத்தனை பதட்டமடைகிறேன் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அழுக்கடைந்த ஆடைகளை எனது மூளைக்குள் திணிப்பது யார்? கழுவப்படாத பாத்திரங்கள் ஏன் என்னைத் தொந்தரவு செய்கின்றன? அந்த 32 கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, ‘எனக்கு வைன் பிடிக்கும்’என்று சொல்லமுடியாமல் செய்த ‘ஒழுங்கான பெண்ணை’நான் ஒருநாளைக்குக் கொல்வேன்.
ReplyDeleteஇவளவு அவஸ்தைகளுக்கும் காரணம் ஒரு ஒழுங்கான பெண்ணாக இருப்பது அல்ல .பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எம்முள் இத்தகைய எண்ணங்களை வளர்த்த எங்கள் சமுகம் தான். நாம் எமக்கு ஒரு நல்ல நண்பனாக உள்ள ஒரு கணவனை அடைந்த போதும் கூட ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு கட்டுக்கோப்புக்கு கீழே வாழப்பழகி விட்டோம் . எம் வீட்டில் ஒரு உறவினர் வருகிறார் என்றால் வீடு குப்பையாக இருக்கிறது என்றால் என் தம்பிமாரை யாரும் குறை சொல்வதில்லையே .வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளைத் தானே சாடுகிறார்கள் .ஆனால் சில கடுமையான வேலைகளை (அது எம்மால் செய்ய முடிந்தால் கூட )அதை வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளை தான் செய்யவும் வைக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கை என்பது ஒரு வேலைத்திட்டம்( project).எமக்கு என்று பிரித்து தரப்பட்ட வேலைகளை அடுத்தவர் தலையீடு இன்றி செய்யவேண்டும் .ஒருவர் வேலையை மற்றவர் மாற்றியும் செய்யலாம் புரிந்துணர்தலோடு.. .. அன்பு இருந்தால் எதையும் வெல்லலாம். அந்த அன்பு தான் உங்களையும் ராஜன் அண்ணாவையும் பிணைத்து நிற்கிறதே .
//ராஜன், எனது பிரார்த்தனை எல்லாம், எங்கள் பிள்ளைகளின் (பையன்களின்) மனைவிகளாவது பயணங்களின்போது வீடுகளைத் தூக்கிச் செல்லக்கூடாதென்பதுதான்//
ReplyDeleteகல்யாணின் பிரார்த்தனை நிறை வேரட்டும்.
அருண்
//கணவனே ஆத்மார்த்த தோழனாக அமைவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் //
ReplyDeleteநிச்சியமாய்...
Hi,
ReplyDeleteInteresting piece enjoyed reading it. I have similar feelings.
Vinothini
இது உண்மைதான் சில வேளைகளிள் பெண்ணிற்கு கண்ணீர் மட்டுமே நெருங்கிய உறவாக மாறிவிடுகிறது
ReplyDeleteகனமான எழுத்து!
ReplyDeleteநல்ல வீச்சு. ஒவ்வொரு வரிகளும் மனதில் தங்கி இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாய் ஆத்மார்த்தமாய் உணர முடிகின்றது.
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் பலிக்கட்டும்.
அனேக பெண்களின் மனதின் நிலையை / விருப்பத்தை / நீங்கள் எழுதி(யே)!!!விட்டீர்கள் தமிழ்.
ReplyDeleteமிகவும் பிடித்தமாயிருந்தது.
சமையலறை வெக்கையிலிருந்து தப்பிப்பதற்காக- அலுத்துச் சலித்த உணவுப் பட்டியலிலிருந்து ஒரு மாறுதலுக்காக உணவகத்திற்குச் செல்லும் நாட்களில் ஒரு குற்றவாளியைப் போலவே உணர்கிறேன். ‘இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?’என்று அன்றைக்கு யாராவது கேட்டுவிட்டால், நான் பொய்சொல்லத் தலைப்படுகிறேன். அறைகளுள் பொருட்கள் சிதறிக்கிடந்தால் ஏன் அத்தனை பதட்டமடைகிறேன் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அழுக்கடைந்த ஆடைகளை எனது மூளைக்குள் திணிப்பது யார்? //
அனேகப் பெண்களின் எண்ணத்துக்குள் குடைந்த கேள்வியை, அழகாய் வாக்கியங்களுக்குள் பொருத்திவிட்டீர்கள். விடைதான் கிடைத்தபாடில்லை.
இந்த உங்கள் ப்ரார்த்தனை இனி எழும் தலைமுறை பெண்களுக்கானது :)
அன்புள்ள நண்பர்களுக்கு,
ReplyDeleteவீட்டோடு இணையத்தொடர்பையும் எடுத்துவர முடியவில்லை. அதனால் வெளியூரில் சிரமப்பட்டு பதில்போட வேண்டியதாக இருக்கிறது. இந்த இருண்ட, திரும்பமுடியாத கூடுகளுள் வெந்து பதிவு போடும் நட்சத்திரமாக இருப்பதில் பெருமை.:) மதுரையில் தமிழுக்குத் தட்டுப்பாடு இல்லை. கணினியில் தமிழ் எழுத்துக்களுக்குத் தட்டுப்பாடு. இதைப் பற்றித் தனியானதொரு பதிவு போடுமளவுக்கு எனது பொறுமை சோதிக்கப்பட்டிருக்கிறது.
மயாதி, தனியாகத் தங்கும் பெண்கள் காசைக் கருதாமல் ஓரளவு தரமான விடுதிகளில் தங்குவது முக்கியம். இல்லையென்றால், பாரதியே மனம்வெந்து புழுங்குமளவுக்கு நடக்கவும் சாத்தியங்கள் உண்டு. ‘கல்யாணி’ பற்றி…உங்களுக்கு எப்படித்தான் இப்படிக் கேள்விகள் எழுகின்றனவோ என்று சிந்தித்துச் சிரித்தேன். எனது வீட்டில் பெற்றோர், உறவினர்கள், கணவர் என்னை அழைக்கும் பெயர் ‘கல்யாணி’. ‘கலைவாணி’ டாப்புப் பெயர். அதுவென்ன ‘டாப்பு’என்று யாராவது ஈழத்தமிழர்கள் வந்து பதில் சொல்வார்கள் பாருங்கள்.
--
அய்யனார்,
‘ஒழுங்கான பெண்ணை நான் ஒருநாளைக்குக் கொல்வேன்’என்பதற்கு எவ்வளவு உற்சாகத்தோடு வந்து பதில் போட்டிருக்கிறீர்கள். நான் சாவதில் அவ்வளவு சந்தோசமா
---
நன்றி அன்புடன் அருணா. போகுமிடமெல்லாம் வீடு தொடர்வது உண்மையே.
---
கல்யாணி,
‘வாழ்க்கை என்பது ஒரு வேலைத்திட்டம்’ என்ற வரி பிடித்தது. நம்மைக் கட்டியவர்கள் பொறுமைசாலிகளும்கூட (அண்ணா, தம்பி) அந்தப் பிணைப்புக்கு அதுவும் காரணம்.
பிரார்த்தனைக்கு நன்றி அருண்
ஷோபி கண்ணு, ஆ.முத்துராமலிங்கம், வினோதினி, மாயாவி, நந்தா, அமிர்தவர்ஷினி அம்மா, மினக்கெட்டு பின்னூட்டம் இட ஒரு மனசு வேண்டும். நன்றி. மாலை மீண்டும் கதைக்கலாம்.
--
--
மயாதி, தனியாகத் தங்கும் பெண்கள் காசைக் கருதாமல் ஓரளவு தரமான விடுதிகளில் தங்குவது முக்கியம். இல்லையென்றால், பாரதியே மனம்வெந்து புழுங்குமளவுக்கு நடக்கவும் சாத்தியங்கள் உண்டு. ‘கல்யாணி’ பற்றி…உங்களுக்கு எப்படித்தான் இப்படிக் கேள்விகள் எழுகின்றனவோ என்று சிந்தித்துச் சிரித்தேன். எனது வீட்டில் பெற்றோர், உறவினர்கள், கணவர் என்னை அழைக்கும் பெயர் ‘கல்யாணி’. ‘கலைவாணி’ டாப்புப் பெயர். அதுவென்ன ‘டாப்பு’என்று யாராவது ஈழத்தமிழர்கள் வந்து பதில் சொல்வார்கள் பாருங்கள்.//
ReplyDeleteஈழத்தமிழர்கள் வந்தெல்லாம் சொல்லத் தேவை இல்லை அக்கா !
நான் இப்போது இருப்பதே ஈழத்தில்...
நீங்களே இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் டாப்பு வார்த்தைகளை , எப்படியக்கா தாய் மண்ணிலேயே இருக்கும் நாங்கள் மறப்போம்
/*அறைகளுள் பொருட்கள் சிதறிக்கிடந்தால் ஏன் அத்தனை பதட்டமடைகிறேன் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அழுக்கடைந்த ஆடைகளை எனது மூளைக்குள் திணிப்பது யார்? கழுவப்படாத பாத்திரங்கள் ஏன் என்னைத் தொந்தரவு செய்கின்றன?*/
ReplyDeleteஏன்???
/*ராஜன், எனது பிரார்த்தனை எல்லாம், எங்கள் பிள்ளைகளின் (பையன்களின்) மனைவிகளாவது பயணங்களின்போது வீடுகளைத் தூக்கிச் செல்லக்கூடாதென்பதுதான்*/
உண்மை
மனம் புரிந்த தோழமை என்றும் இனிதே..! அதுவும் கணவனோ,மனைவியாகவோ இருந்துவிட்டால் மேலும் இனிதே.
ReplyDeleteபலருக்கு அதுதான் அமைவதில்லையே..!
பெண்ணிற்குள் கிடக்கும் ஒழுங்குகள் ஆணிற்குள்ளும் சில கிடக்கின்றன. நானும் அவற்றை உதற நீண்ண்ண்ட காலமாய் தமிருக்கிறேன்.
நன்றி.
அன்புள்ள தமிழ்நதி,
ReplyDeleteநல்லதொரு கடிதம். பெரும்பாலான பெண்களின் மனநிலையை ஒரு பிரதிநிதியாக உங்கள் கடிதம் வெளிப்படுத்தியிருக்கிறது. 'குடும்பத்தை சுமந்து செல்வது' என்ற கருத்தாக்கம் பெரும்பாலும் பெண்களோடு தொடர்புடையது என்றாலும் சில நேரங்களில் ஆணும் அதே போன்றதொரு மனநிலையை அடைகிறான் என்பதை மாத்திரம் உங்களுக்கு நினைவுப்டுத்த விரும்புகிறேன்.
நண்பர்களுடன் உயர்ரக உணவுவிடுதியில் அருமையானதொரு தின்பண்டத்தை உண்ணும் போதோ அல்லது திரையரங்கிலே மற்ற குடும்பத்து குழந்தைகளின் குதியாட்டத்தைப் பார்க்கும் போதோ, நம்முடைய குடும்பத்து உறுப்பினர்களுடன் இதை அனுபவிக்க நேரவில்லையே என்று ஒவ்வொரு ஆணும் நினைத்திருப்பான்.
//ஒழுங்கின் அரசியல் குரூரமானது. அது கையில் சாட்டையோடு வீடு முழுவதும் அலைகிறது.//
ReplyDeleteநல்லதொரு வரிகள்.
சொல்ல மறந்தது விட்டேன். :-))
priyangal niraintha kalyaani...miga arputhamaana nadai.kavitthuvamaana,"ozhungaana pennai naan oru naalaikku kolven rajan"variyai vaasikka kidaitthathum,mr.rajan mel alavu kadantha anbu perukiyathu.manaiviyai mathikkira manitham evvalavu arputham!ungal kaiyai illai kalyaani,mr.rajan kaikalai piditthu kirangi nirkkavenumpol irunthathu.enakkaaga,neengal orumurai seiyavenum kalyaani!niraya anbum,vaazhthukkalum!thodarnthu ezhuthungal!
ReplyDeleteநல்லதொரு பதிவு தோழி. எத்தனையோ முறை இதைப் போன்ற பதிவுகளை எழுத முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். கட்டைக் கயிற்றில் இறுகியதுபோல் சுற்றிச் சுற்றி நடந்ததில் சுவடுகள் பதித்த பாதையில் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியவில்லை. உங்கள் எழுத்தில் விட்டு விடுதலையாகி வானில் சிறகடிக்கும் சிட்டுக் குருவியைப் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி.
ReplyDeleteஉங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டுகிறேன்..
ReplyDeleteஇரு நாட்களுக்கு முன்னர் தங்களின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூலை பிரபஞ்சன் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்தார். மகிழ்ச்சி.
அம்மாவுடன் வீட்டிலிருந்த காலங்களில் எல்லாவேலைகளையும் நேர்த்தியோடு செய்து களைத்துப் போகும் அம்மாவிடம் 'இன்று ஹோட்டலிலிருந்து தருவித்துச் சாப்பிடலாம்..சமைக்கச் சிரமப்படவேண்டாம்'என்று சொல்லும் கணத்தில் ஒரு புன்னகை நீளும் அம்மா முகத்தில். பின் அதுவே பதற்றமாக மாறிச் சொல்வார் "கடைச் சாப்பாடு நல்லாயிருக்காது.நானே சமைக்கிறேன்..எனக்கென்ன சிரமம்? "
ReplyDeleteகடைச்சாப்பாடு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அம்மாவை அந்த வேலைகளோடு ஆதி தொட்டுவந்த எதுவோ பிணைத்திருந்தது என நினைக்கிறேன்.
ஆம்..பெண்கள்..பெண்கள்..மேலும் பெண்கள்..எதிலும் மீண்டுவர முடியாப் பெண்கள் :(
நட்சத்திர வாழ்த்துக்கள் தமிழ்நதி!
ReplyDeleteபெண்கள் யாவரும் இதை நிச்சயம் படிக்க வேண்டும். எங்கு சென்றாலும் குடும்பம் குழந்தைகள் என எல்லாரும் எங்களுடன் ஒட்டிக்கொண்டே வருகிறார்கள். தனித்தியங்க முடியாத அம்மாக்களாக மனைவிகளாக நாங்களும்...
ReplyDeleteசாந்தி
மன்னிக்க வேண்டும் மயாதி,
ReplyDeleteநீங்கள் ஈழத்திலிருந்து எழுதுகிறீர்கள் என்பதை நான் கவனிக்க மறந்துவிட்டேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் பதில் எழுத நினைத்தேன். வேளியூரில் இருப்பதால் இந்த எழுத்துப் பிரச்சனை தொடர்கிறது.
நன்றி அமுதா.
சூரியா, நிறைய முடிவுகள் எடுப்போம். ஆனால் நிறைவேற்றப் பின்னிற்போம். இதுதான் நமது வழமை. ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்திலும் நான் ஏற்ற சபதங்களை, அந்த ஆண்டின் நடுப்பகுதியிலோ இறுதியிலோ நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு.
சுரேஷ் கண்ணன்,
நீங்கள் சொல்வது உண்மை. ஒப்பீட்டளவில் பெண்களே அதிகமும் வீட்டைச் சுமப்பவர்களாக இருக்கிறார்கள்.
ராஜாராம்,
உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆம். அவர் அற்புதமான மனிதர். சுயபுராணம் போல தோன்றினாலும், மீண்டும் சொல்கிறேன். அவர்தான் என்னுடைய ஆத்மார்த்த தோழன். உங்கள் சார்பில் அவர் கைகளைக் குலுக்க எனக்கும் ஆசைதான். ஆனால், அதற்காக நான் ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டும். ஆகஸ்டில்தான் நான் அவரைப் பார்க்க கனடாவிற்குச் செல்கிறேன்.
அன்பு நண்பர்களுக்கு, மிகுதிப் பின்னூட்டங்களுடனான பதிலாடலை நாளை பதிவேன். நன்றி.
பெரும்பான்மையான பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு கடிதம் !!!
ReplyDeleteபெண்மை என்றாலே மென்மை என்ற போர்வையில் கட்டி விடுகிறார்கள்
ReplyDeleteஅதன் பின் அந்த மென்மையை கொண்டு ஒரு மலையை இழுத்து வந்து பெருமை பேசும் ஆண்களுக்கு உரைக்கும் இந்த உரை இந்த வெளிபாடு எல்லோரிடமும் வர வேணும் உங்கள் எழுத்து அதற்க்கு சாட்சி
ஒரு பெண்ணின் பகிரங்கமான ஆழ மன உணர்வுகள் அனைவராலும் ஆசைபடவும் ஆதங்க படவும் மட்டும் தான் முடிகிறது சுமைகள் எப்போதும் பெண்ணுக்கு சுகங்கள் எப்போதும் ஆணுக்கு இந்த நிலை இனி நிச்சயம் மாறும் எனக்கு நம்ம்பிக்கை இருக்கு அதற்க்கு உங்கள் எழுத்துகள் சாட்சி
ReplyDeleteஒரு பெண்ணின் பகிரங்கமான ஆழ மன உணர்வுகள் அனைவராலும் ஆசைபடவும் ஆதங்க படவும் மட்டும் தான் முடிகிறது சுமைகள் எப்போதும் பெண்ணுக்கு சுகங்கள் எப்போதும் ஆணுக்கு இந்த நிலை இனி நிச்சயம் மாறும் எனக்கு நம்ம்பிக்கை இருக்கு அதற்க்கு உங்கள் எழுத்துகள் சாட்சி
ReplyDelete