ஆதவன் தீட்சண்யாவின் கடிதம் இங்கே இருக்கிறது.
http://www.keetru.com/literature/essays/aadhavan_21.php
சர்ச்சைகள் தொடர்வது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக வலியையும் மனவுளைச்சலையும் நேர விரயத்தையும் தரக்கூடியது. பழிக்குப் பழி பதிலுக்குப் பதில் என்பது அபத்தமாயிருக்கிறபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னைப் பேசத்தூண்டுகின்றன. ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவரது வாழ்வனுபவங்கள், வாசித்து அறிந்துகொண்டவை, தாம் சார்ந்திருக்கும் கட்சி, சூழல் சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. பட்டறிவில்லாத விவாதங்கள் அதில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் என்று நான் நம்பவில்லை. என்னுடைய தொனியும் விவாதமும் எப்படி இருந்தபோதிலும், ‘புலிகளை விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்பவர் அன்றேல் புலிகள் மீது ஒற்றை வாக்கியத்தில் விமர்சனங்களை முன்வைத்து அதைக் கடந்து செல்பவர்’என்ற மையப் புள்ளியிலேயே நின்றுசுழல்கிறது என்னைப் பற்றிய பிம்பம். மாற்றுக் கருத்து, மாற்றுக் கதையாடல் என்று பேசிக்கொண்டிருக்கிற சில இணையத்தளங்களும் இவ்வாறு அழுத்தந்திருத்தமாக ‘அவர் அதற்கு மேலில்லை’என்று முத்திரை குத்தி விடுவது வருத்தமாகவே இருக்கிறது.
எனவே அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆதவன் தீட்சண்யாவின் கடிதத்தைப் படித்தபோது, பால்யத்திலிருந்து ஒரு சொல் மிதந்து மேல்வந்தது. ‘ஆத்தாப் போக்கிலி’என்பதுதான் அந்தச் சொல். பேசவந்த, பேசவேண்டிய விடயத்தைவிட்டு வெளியில் சென்று சம்பந்தமில்லாத விடயங்களைப் பேசுவதன் வழியாகத் தனது வாதத்துக்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார் ஆதவன். தனது பக்கத் தராசைத் தாழ்த்தவேண்டுமே (உண்மையான அர்த்தத்தில் உயர்த்துவது) என்ற பதட்டத்தில் என்மீது சேற்றை வாரியிறைக்க விழைந்திருக்கிறார். ‘இது அறியப்பட்ட ஒரு படைப்பாளிக்கு அழகல்ல’ என்ற வார்த்தைகளை அதை வாசித்த பலரிடமிருந்து நான் கேட்டுவிட்டேன். ‘தமிழ்நதியைத் தாழ்த்துகிறேன் பேர்வழி’ என்று தரந்தாழ்ந்து நிற்பது அவர்தான். அவரது பதில் நெடுகிலும் இழையோடியிருக்கும் நக்கலும் நையாண்டியும் மூன்றாந்தர, வக்கிரமான நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சற்றும் குறைந்தனவல்ல.
“ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்”என்று கீற்று.காம் நேர்காணலில் நான் சொல்லியிருந்தது உண்மை. பதினொரு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபின் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச்சென்று 2006வரை அங்கேதான் வாழ்ந்திருந்தேன் என்பதை இதைப் படிப்பவர்களது தகவலுக்காகச் சொல்லிவைக்கிறேன். மீண்டும் தொடங்கிய போரினால் தமிழகத்திற்குத் தூக்கியெறிப்பட்டவள் நான்.
ஆதவன் எழுதுகிறார்:
“எனக்குத் தெரியும் இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று. இலங்கை இராணுவத்தாலும் உங்கள் பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்கள் தாய்நாட்டுப்பக்தி. ஏனென்றால், நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல. புலிகளை…”
புலிகள் இல்லாத மண்ணுக்குப் போவதென்பது என்னளவில் அச்சமும் துயரும் பாதுகாப்பின்மையும் தரக்கூடியதே. நாடு திரும்பமுடியாத ஒருவரை நக்கலடிக்குமளவிற்கு, எள்ளிநகையாடுமளவிற்கு இருக்கிறது ஒரு மார்க்ஸிஸ்டின் மனிதாபிமானம். ‘முடிஞ்சா உங்க ஊருக்குப் போய்ப் பாரேன்…வெவ்வெவ்வே’என்கிற சிறுபிள்ளைத்தனத்தை அதில் பார்த்தேன். மேலும், ‘இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும் நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்’என்பதன் பின்னுள்ள எள்ளலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில சுயவிளக்கங்களை ஆதவனுக்காக அல்லாது இதனை வாசிக்கும் எனது நண்பர்களுக்காகக் கூறத் தள்ளப்பட்டுள்ளேன். ‘ஐயோ! நான் கஷ்டப்படுகிறேனே…’என்ற அனுதாபம் வேண்டி இதை எழுதவில்லை. சுயபச்சாத்தாபம் என்னிடம் துளியளவும் இல்லை. 2003ஆம் ஆண்டு கனடாவிலிருந்து திரும்பி இலங்கை வந்தபோது கைவசமிருந்த நிலத்தில் கொட்டில் (குடிசை) கட்டி சில காலம் வாழ்ந்திருந்த பின்னால்தான் வீடு கட்டிக் குடிபோனோம். மனிதர்களைப் போல சர்வசாதாரணமாக பாம்புகள் திரிந்த இடம் அது. வெக்கை பிடுங்கித் தின்ற நிலம் அது. அங்கே ஏ.சி.இருக்கவில்லை தூசிதான் இருந்தது. அவ்விதமிருக்க எந்த அடிப்படையிலிருந்து இந்த ஏ.சி.க் கதையை இவர் எழுதுகிறார் என்று தெரியவில்லை. தவிர, ஒருவர் ஏ.சி.யில் வாழ்வதா? வெக்கையைக் குடிப்பதா என்பதெல்லாம் அவரவர் வசதியும் தெரிவும். கடவு கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யா பேசியதற்கு நான் எழுதிய எதிர்வினைக்கும் மேற்கண்ட தனிப்பட்ட கதைகளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பிருக்கிறது என்று அவர்தான் சொல்லவேண்டும்.
‘தாக்கப்படும்போது மனிதர்கள் சரிந்துவிடுகிறார்கள்’என்பதை இப்போது வேறொரு அர்த்தத்தில் பார்க்கவேண்டியிருக்கிறது.
“ஆதவன் என்னைத் தாக்க வந்தார்’ என்று பதிவில் தலைவிரிகோலமாக எழுதாமல் விட்ட உங்கள் பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்”
“ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான் என்று திரித்து அடுத்த பதிவில் எழுதி மூக்குச் சிந்தப் பதைக்காதீர்கள் தமிழ்நதி.”
என்ற வாசகங்களையும் அவரது கீற்று கடிதத்தில் பார்த்தேன். அந்த வாசகங்கள் வழியாக அவர் தனது ஆழ்மனதிலிருக்கும் கசடுகளை வெளியில் கொட்டிவிட்டார். ஏதோ சில படைப்புகளை அண்மைக்காலங்களில் எழுதியவள் என்பதிலும் பார்க்க நான் ஒரு பெண் என்பதுதான் அவருடைய ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆக, பெண் என்பதை என்மீதான அனுதாப வாக்குச் சீட்டாக, பச்சாத்தாபத்தைத் தூண்டும் ஆயுதமாக நான் பயன்படுத்தக்கூடியவள் என்று அவர் நினைத்திருக்கிறார். ‘மூக்குச் சிந்துவது’, ‘தலைவிரிகோலமாக எழுதுவது’இந்த மலினமான உத்திகளெல்லாம் கைவரப்பெறாதவள் நான். அப்படி எழுதி கூட்டம் சேர்க்கவேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா என்ன? ‘எழுதுகிறேன் என்பதனால் எழுதுகிறேன்’ என்பதை விட்டுக் கீழிறங்கி கைதட்டல் தேடவேண்டிய தேவையொன்றும் எனக்கில்லை. ஒரு பொதுவெளிக்கு வரும்போது பெண் என்ற விடயத்தை மறந்து தன்னியல்பாக நடந்துகொள்ளவேண்டுமென்ற அறிவும் பிரக்ஞையும் எனக்கு எப்போதுமுண்டு. உண்மையில் காதல் வயப்பட்ட ஆணோடு மட்டுமே பெண்தன்மைகள் எனக் கருதப்படுபவைகள் அன்றேல் வளர்ப்பின் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆள் நான். மற்றபடி பொதுவெளியில் பழகும்போதோ எழுதும்போதோ ஆண்கள் எனக்கு ஆண் என்ற வேறொரு பாலினமாகத் தோன்றுவதேயில்லை. நெளிவது, குழைவது, உதட்டைச் சுளித்துச் சிரிப்பது, எனக்காக நீ இதைச் செய்யக்கூடாதா என்று கிறங்குவது, சாகசங்கள் செய்வது இன்னபிற விடயங்களையெல்லாம் நான் கடந்துவந்து நாளாகிறது. பழகும்போது கொஞ்சம் தன்மையாகப் பழகுகிறேன் என்பதைவைத்து, ஆதவன் என்னைப் ‘பெண்ணிலும் பெண்ணாக’ச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆணுக்குள்ள கம்பீரம் பெண்ணுக்கும் உண்டு. ‘அவன் மூக்கைச் சிந்துகிறான் என்றோ, தலைவிரிகோலமாக எழுதுகிறான்’என்றோ அவரால் எழுதிவிட முடியுமா? மேற்கண்ட வார்த்தைகள் ஊடாக அவர் ஒரு ‘ஆணாக’ப் வெளிப்பட்டிருக்கிறார், அவரையறியாமலே. அவரது வார்த்தைகள் அவரைக் கைவிட்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: பேசிய விடயத்திற்குள் நின்று பேசுவதுதான் அறிவாளிக்கு அன்றேல் அறிவாளி என்று தம்மைக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு அழகு. ‘ஏண்டா என்னைத் தள்ளிவிட்டாய்?’என்றால், ‘எங்கம்மா கடைக்குப் போய்விட்டாள்’என்ற வகையிலான அபத்தங்களைக் கொண்டிருக்கிறது கீற்றுவில் வெளியாகியுள்ள அவரது கடிதம்.
தேவேந்திர பூபதியை வேறு தேவையில்லாமல் இதற்குள் இழுத்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையை (அப்படி ஒன்று இருந்தால்) நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆதவனைக் காட்டிலும் புரிதலுள்ளவர்தான் பூபதி. ‘ஐயகோ! என்னைக் காப்பாற்றுங்கள்’என்று அபலையாக ஆதவனிடம் வந்து தஞ்சமடைந்ததாக எனக்கு நினைவில்லை. இப்படிச் சிண்டு முடிந்துவிடுவதுதான் நான் கேட்ட கேள்விகளுக்கு ஆதவன் ஆற்றுகிற எதிர்வினையா?
இனியொருபோதிலும் இவ்விடயத்தைக் குறித்துப் பேசுவதில்லை என்று ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன். ஆனால், மௌனமாயிருப்பது அதிகாரத்துக்குத் துணைபோவதற்கொப்பானது என்ற பழகிப் புளித்த வாசகம் என்னை இருக்கவிடுவதாயில்லை.
‘கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தெரியாமல் மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றார்கள்’என்று புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆதவன் வகையறாக்கள், தம் உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? தன் வாதங்களுக்கு வலுச்சேர்க்க தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியிருக்கும் அவர் இதைக்குறித்துச் சிந்திக்கவேண்டும்.
உயிர்க்கொலைக்கு சற்றும் குறைந்ததன்று மனக்கொலை!
-தமிழ்நதி
பல்வேறு தளங்களில் இந்த நிகழ்வு பற்றிப் படித்து வருகிறேன்.
ReplyDeleteதன் மனத்தை இறுக்கிப் பூட்டிக் கொண்ட ஓர் அறிவுய்தியிடம் பேசிப் பயனில்லை. அவருடைய ஒவ்வொரு சொல்லாடலுக்கும், எதிரே மறு சொல்லாடல் செய்து கொண்டிருப்பது உருப்படியான வேலைகளைச் செய்யவிடாது.
என்னைக் கேட்டால், ஆற்றில் இன்னொரு வெள்ளம் வந்து போனது என்று எண்ணிக் கொண்டு உங்கள் பணிகளைச் செய்து, போய்க் கொண்டிருங்கள்.
அன்புடன்,
இராம.கி.
இராம.கி. அவர்களுக்கு,
ReplyDeleteநன்றி. நீங்கள் சொல்வதுபோல பேசாதிருக்கவே நினைக்கிறேன். ஆனால், பழிச்சொல்லைத் தாங்கும் பக்குவம் வரவில்லை. ஞானியைப் போல இருக்கவேண்டும். இனியொன்றும் பேசுவதில்லை என்று இந்த நிமிடமும் நினைக்கிறேன். எனக்கும் வெற்றுவிவாதங்களில் ஈடுபாடு இல்லை. தவிர வேலைகளும் தடைப்படுகின்றன.
இணையப்பக்கம் வராமல் இருக்கலாமென்றாலும் முடிவதாயில்லை.கோபத்துக்கும் நிதானத்துக்கும் இடையில் பெரும் இழுபறி. கோபமே பல சமயங்களில் வென்றுவிடுகிறது.
தமிழ்நதி,
ReplyDeleteதங்கள் பகிர்வுக்கு மாற்றுக்கருத்து மாணிக்கங்களான இணையமொன்றுக்கு ஆதவன் தீட்சண்யா அனுப்பிய கடிதத்தையும் அதன்பின்னால் தமிழ்நதியனெ்ற பெண்மீதான கருத்துக்களையும் படித்தேன்.
தமிழ்நதியென்ற பெண் ஒரு ஆணான ஆதவன் தீட்சண்யாவை எழுதியதுதான் எல்லாம் பிரச்சனையாக உள்ளது. இதையே சாருநிவேதாவோ அல்லது சோபாசக்தியோ எழுதியிருந்தால் ஆத்திரம் ஆறிய பின் 'அட மச்சான் அதையெல்லாம் மறப்போம்'என கோமாநிலை தெளிய கூடிவிடுவார்கள். யெயலலிதா வை.கோ கூட்டணிபோல அண்ணா என்றும் தங்கையென்றும் உருகுவது போல இவர்களும் உறவாகிவிடுவார்கள்.
தனது தவறை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது தவறை உரத்துக்கூறியது ஒரு பெண்ணாகையால் அவள் மீதான தனது இயன்றளவிலான எள்ளல் துள்ளல் மிக்க வசீகரம் அத்தகைனையையும் அள்ளிக் கொட்டியுள்ளார் ஆதவன். ஏதோ ஈழவிடுதலைப்போரில் பங்கெடுத்து இழைத்துக் களைத்த ஒருவர் போல தனது எழுத்துக்களை நீட்டிப்பரப்பி ஆண்களால் சூழப்பட்ட ஒரு இணையத்திற்கு அனுப்பி தனக்குச் சார்பானவர்களிடம்தான் தனது மேன்மையை விளக்கியிருக்கிறார். இதுவொன்றே போதும் ஆதவனின் நேர்மையை உணர்ந்து கொள்ள.
கேள்வி கேட்காதே நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிரு என்ற தனது ஆண்மேன்மையை ஆதவன் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தலித்துக்கள் தலித்துக்கள் நாங்கள் தலித்துகளின் காவலர்கள் என்று பம்மாத்துப்பண்ணும் இந்த பம்மாத்துக்காறர்கள் இப்படித்தான் ஆட்களுக்கு அறிக்கையும் இலக்கியமும் தந்து கொண்டிருப்பார்கள்.
இதையெல்லாம் விட்டுவிடுங்கள். நீங்கள் சொல்ல நினைப்பதை துணிந்து சொல்லுங்கள். யாருக்கும் அச்சப்படத்தேவையில்லை.
அண்மையில் நான் எழுதிய 'உருத்திரகுமாரைப் புறக்கணீயுங்கள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் ஆண்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கும் ஆதவனின் கருத்துக்களுக்கும் நிறையவே ஒற்றுமையுள்ளதாகவே எண்ணுகிறேன்.
எனது கட்டுரையில் கூட ஒரு அதிகாரம் உள்ள ஆணின் ஆணவத்தை(பெயர் சொல்லாமல்) நான் சொன்னதே நேர்மையான பல ஆண்கருத்தாளர்களின் ஆவேசத்துக்கக் காரணமானது.
ஆக இது ஒன்றும் புதுமையில்லை. இன்னும் பெண்ணுரிமை கத்தரிக்காய் என்றும் தாழ்த்தப்பட்டோரின் காவலர்கள் என்று கூவுவோருக்குள்ளும் ஆண் நான் என்னை எப்படி எதிர்ப்பாய் என்ற ஆணவங்களும் இயல்பானவைதான்.
போகட்டும் விட்டுவிடு யாவும் புது அனுபவங்கள் கற்றுவிடு.
சாந்தி
தமிழ்நதி,
ReplyDeleteதமிழன், தமிழ் பேசுகிறவன் என்கிற ஒரே காரணத்துக்காக நீங்கள் தமிழகத்து தமிழர்களை ஈழத்தில் ஈடுபடச் சொல்கிறீர்கள். அப்ப அதே அளவுகோலை ஏன் மலையகத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நீங்கள் நீட்டவில்லை எனக் கேட்பது எப்படி அநியாயமாகும்.
முதலில் இப்போதைய தமிழகத் தலைவர்கள், எழுத்தாளர்கள் ஈழத்துக்காக எதையும் செய்துவிட முடியாது என்பதை தெளிவாக நம்புங்கள்.இரண்டாவது ஆதவன் சொன்ன பதில்கள் காலம் தவறியவை என்றால் நீங்கள் கேட்ட கேள்விகளும் காலம் தவறியவை. கேள்விகள் கேட்க இதுவா நேரம்? அதேபோல ஆதவன் அப்படி ஆதவன் இப்படி என தலைப்புக்களை வைப்பதை தவிர்த்து பேசப்படும் விஷயத்தை இரண்டுபேரும் பேசினால் இன்னும் தெரிந்துகொள்வோம். இப்போதைய உடனடி கவலை ஈழத்திலிருக்கும் சாதாரண மக்களைக் குறித்தது அரசின் முகாம்கள் நாஜி முகாம்களாகிவிட்டதை அம்பலப்படுத்துவதைக் குறித்தது. எல்லோரையும் கேள்வி கேட்டு அன்னியப்படுத்தாமல். ஒன்றாய் செயல்பட அறைகூவல் விடுங்கள்.
அன்புடன்
அக்கறையுள்ள மனிதன்
:(((
ReplyDeleteஆதவன் CPI(M) இன் உறுப்பினரும் பின்னவீனத்தும் பேசுகிறோம் மாற்றுக்கருத்துப்பேர்வழிகள் என்று சொல்லிக்கொள்கின்றாவர்களின். மார்க்ஸியத்தினை எதற்கு இங்கே இழுத்து எதனை அவரிடம் எதிர்பார்கின்றீர்கள்?
ReplyDeleteவிடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தினரை/க் கருத்துக்காரர்களைக் கொன்றார்கள் என்று சொல்லிச்சொல்லியே விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்களைப் புனிதப்படுத்தும் செய்கையை இவர்கள் தொடக்கம் லயானல் போபகே வரைக்கும் செய்கின்றார்கள். சந்ததியார் தொடக்கம் பாரிசிலே யோகன் கண்ணமுத்துவுக்கு அடித்து ராமராஜனின் வானொலி நிலையத்தினைத் தாக்கியதுவரை விடுதலைப்புலிகள்தானா செய்தார்கள் என்பதை இவர்கள் பேசப்போவதில்லை. இலக்கியக்கூட்டம் போடுகிறோம் என்பதை ஏதோ இலையிலே பாயாசம் ஊற்றக் குடித்துவிட்டுப்போவோம் என்ற உளநிலையிலே எண்ணிக்கையிலும் பேச்சிலுமே பார்க்கின்றவர்களுடன் என்னத்தினைப் பேசப்போகிறீர்கள்? மாதவராஜ், தமிழ்ச்செல்வன் போன்றோர்களும் இதே சிபிஎம்சில்லெடுப்புகளிலேயே பேசுகின்றார்கள்; ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றோருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களல்லர். உங்களுக்கான தார்மீகக்காரணங்களுக்காக இவர்கள் பதிலளிக்க மறுப்பின், இவர்களின் புத்தகங்களை வாங்கி வாசிப்பதை நிறுத்துங்கள். ஆனால், இப்படியான சொற்களைக் கொட்டும் இலக்கியவாதிகளிடம் அதிகம் அல்ல, எதையுமே எதிர்பார்க்காதீர்கள்; பேசுவதே அறம்; புரிவதும் புரிதலும் அல்ல.
தமிழ்நாட்டு இலக்கியவேங்கைகளூம் வேதாளங்களும் வெப்பிசாசுகளும் பேசுவதாலேயோ எழுதுவதாலேயோ எதுவுமே மாறப்போவதில்லை; சொல்லப்போனால், எவர் வெறுமன எழுதுவதாலேயேயும் பேசுவதாலேயுமே எதுவுமே மாறப்போவதில்லை.
முடிந்தால், (நண்பர் ஒருவர் அண்மையிலே சுட்டிக்காட்டியபடி), தமிழக இலக்கியவட்ட+சதுரச்சதுப்புநிலமாயையிலிருந்து உங்களை அகற்றிக்கொள்ளுங்கள். இவர்களின் உளறல்களும் செத்த இரத்தப்பிசுபிசுப்புக் காயமுன்னரேயே "பிரபாகரன்: வாழ்வும் மரணமும்" என்று சவுண்டிப்பத்ரிகையாளர்கள் விடும் பரபரப்பு எட்டுவீட்டுப்புத்தகங்களும் இத்தனைநாள் இலக்கியம், திரைப்படம், புகைப்படம், மயிர்மட்டை என்று பரஸ்பரம் பேசிக்கொண்டதற்குக் கொடுக்கும் மதிப்பினைத் தெரிவிக்கின்றது; செத்துப்போன முத்துக்குமரன் பெயரிலேயோ ஈழத்தமிழருக்காகக் கணித்தொழில்நுட்பத்துறையிலிருப்போர் ஆதரவாகவோ இயன்றவரை உதவ விழையும் முகமற்ற தமிழகநண்பர்களின் பீத்துண்டுக்கு இந்த இஸத்துக்கசங்கள் இணையாகா.
தவிர, எதையுமே அடுத்தவரிடம் எதிர்பார்க்காதீர்கள் - இரக்கம் & இலக்கியம் உட்பட.
தமிழ்...
ReplyDeleteஇப்பதிவினில் பின்னூட்டத்தை தவிர்க்கலாம் என்பது என் ஆலோசனை.
நன்றி
விஷ்ணுபுரம் சரவணன்
ஐயோ..ஐயோ..ஐயோ..!
ReplyDeleteஉண்மையில் நான் அழுகிறேன்.
என் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் என்னாச்சு..?
இதுவா இலக்கியம்?
இதற்காகவா எழுதுகோல் ஏந்தினீர்கள்..?
ஆளையாள் குத்திப் புடுங்கி
இன்னும் ஏதும் தசை இருக்கிறதா என்று பாருங்கள்.
ச்..சீ...
ஏதாவது படையுங்கள்.
காத்திருக்கிறோம்..உங்கள் படைப்பினைக்காண.
நான் தனிப்பட்டமுறையில் சொல்லவில்லை.
பிறகு என்னையும் இழுத்துப்போட்டு
வேடிக்கை பாப்பாங்கள்.
ஆளைவுடுங்கையா.
இயற்கையை ரசியுங்கள்.
12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்குமாமே குறிஞ்சிமலர்.
அதைப் போய்ப்பாருங்கள்.
பயணம் செய்யுங்கள்.
எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.
என் மேல் விழுந்த மழைத்துளிகள்..
துன்புறுவதை தாங்க முடியாமல்
என் கண்களிலும் துளிகள்.
யார் அறிதல் கூடும்???
அவரினுடைய நோக்கம் உங்கள்ளுக்கு எதிரானது அல்ல , அவர் இன்னும் கொஞ்சம் பிரபலம் அடைவதற்காக உங்கள் பெயரை உபயோக படுத்தி விட்டார்.
ReplyDeleteஅதில் வெற்றியும் பெற்று விட்டார்...
பாவம் விடுங்கள் புழைச்சுப் போகட்டும்.
சாந்தி,
ReplyDeleteஆம். எனக்கு மிகவும் கொதிப்பாக இருந்தது அந்த விடயம். ஆகாத்தியம் பண்ணுகிற ஒரு பெண்ணாக, அல்லது ஏளனத்திற்குரிய இரண்டாம் பாலினமாக அவரது மனதில் நான் விழுந்திருப்பது எரிச்சலாக இருந்தது. தங்களைத் தாங்களே காலிசெய்துகொள்கிறார்கள் அவ்வளவுதான். நன்றி தோழி.
அனானி நண்பரே,
"தமிழன், தமிழ் பேசுகிறவன் என்கிற ஒரே காரணத்துக்காக நீங்கள் தமிழகத்து தமிழர்களை ஈழத்தில் ஈடுபடச் சொல்கிறீர்கள். அப்ப அதே அளவுகோலை ஏன் மலையகத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நீங்கள் நீட்டவில்லை எனக் கேட்பது எப்படி அநியாயமாகும்."
என்று கேட்டிருந்தீர்கள். 'மலையகத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை?'என்று ஆதவன் கேட்டதை நான் எங்கேயும் தவறென்று சொல்லவில்லையே... நீங்கள் முழுப்பதிவுகளையும் படித்துப் பாருங்கள்.
நான் இதே கேள்வியைப் பல இடங்களில் பலரிடம் முன்னரே கேட்டிருக்கிறேன். நாஞ்சில் நாடன் அவர்களிடம், எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டிருக்கிறேன். காலந் தவறிய கேள்வி என்று ஒன்றில்லை. இப்போதும் எமது மக்களுக்காகச் செய்ய நிறைய இருக்கிறது. அதற்கு அறிவுஜீவிகளிடமிருந்து அழுத்தங்கள் இப்போதும் வேண்டியிருக்கிறது. முடிந்துவிடவில்லை போர்.
---
கல்ப் தமிழன்,
:((((((((((((((((((
பெயரிலி,
"தவிர, எதையுமே அடுத்தவரிடம் எதிர்பார்க்காதீர்கள் - இரக்கம் & இலக்கியம் உட்பட."
என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். செருப்படி பட்டால்தான் ஊட்டப்பட்ட மாயைகளிலிருந்து வெளிவருவோம் போலிருக்கிறது.
சரவணன்,
'நான் போறேன்... நான் போறேன்'என்று சொல்லவும் ஒரு இடம் வேண்டியிருக்கிறதல்லவா... அந்த இடமாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்கிறேனே...
சூரியா, இனி எழுத்தில் கவனம் குவிக்கவே உத்தேசம். வீண் மனவுளைச்சல்கள்தான் மிச்சம்.
மயாதி,
அவர் ஏற்கெனவே பிரபலமான ஆள்தான். இதன் மூலம் நான்தான் இணையத்தளங்களில் பிரபலமாகிவிட்டேன் போலிருக்கிறது.:) எழுத்தால் ஆக நினைத்தேன். இப்படியாயிற்று. இனி அதற்கே முனைவேன்.
தமிழ்நதி,
ReplyDeleteஉங்களது எழுத்துக்கள் நேர்மையானதாக இருக்கிறது.
இந்த சம்பவங்களால் உங்களது மனம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் எழுத்துகள் மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது.
இப்படியானவர்களுடன் வாதாடி எந்த பயனும் இல்லை.
இவற்றை புறக்கணித்து உங்களது வழியில் நீங்கள் செல்லுங்கள்.
உங்களிடம் இருந்து நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
tamilnathy,
ReplyDeletewhere is my comments? y.day i posted it.
thamarai
நன்றி வாசுகி,
ReplyDeleteஇந்தப் பிரச்சனைகளிலிருந்து வெளியில் வந்து என்னுடைய வேலைகளைப் பார்க்கவே நானும் முயற்சிக்கிறேன். ஓரளவு மீண்டுவிட்டேன். மீண்டும் ஏதாவது தொடங்குவார்களேயானால் பதிலளிக்காத பக்கம் குற்றவாளியாகக் கருதப்படும் என்பதையும் உணர்கிறேன். இருந்தும் சில காலம் மெளனமாக இருக்க நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
தாமரை,
நீங்கள் போட்ட பின்னூட்டம் 'காமராஜுக்கு ஒரு கடிதம்'பதிவில் வெளியாகியிருக்கிறது. நீங்கள் அந்தப் பதிவில்தான் பின்னூட்டம் இட்டீர்கள் இல்லையா? இன்றோ நாளையோ உங்களை அழைத்துப் பேசுகிறேன். (உங்களுக்கு நேரம் இருந்தால்)
தமிழ்நதி, உங்களது கோபங்களையும், மனம் பொறுக்காமல் பதில் போதும் பதிவின் பின்னாலான உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.
ReplyDeleteநான் ஏன் மநு விரோதி, பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும் ஆட்டம் உள்ளிட்ட அவரது பலவைகளைப் படித்து விட்டு உண்மையில் அவர் மேல் இங்கே என்னில் பலர் வைத்திருந்த பிம்பம் முற்றிலும் வேறானது.
ஆனால் இங்கே தொடர்ச்சியான சொல்லாடல்களில் அவர் வரிகளுக்கு வரிகள் தரம் தாழ்ந்துக் கொண்டே போகின்றார் என்பதை பார்க்கும் போது மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் புரட்சிகர படைப்பாளி நிஜ வாழ்க்கையில் மிக சராசரியாய் நடந்து கொள்கிறாரே என்ற வருத்தமே ஏற்படுகின்றது.
மிக முக்கியமாய் தலைவிரிகோலம், மூக்கு சிந்தி எழுதுதல் போன்ற மகா மட்டமான ஆணாதிக்க சொல்லாடல்கள் உண்மையில் கோபத்தை விட வருத்தத்தையே அதிகம் தந்தது.
நெருங்கிய நண்பனொருவன் தவறாய் நடக்க முயற்சிக்கும் போது, நாம் கூறும் அறிவுரைகளை மறுத்து நம்மையே திருப்பி திட்டும் போது கோபத்திற்குப் பதில் ஒரு ஆற்றாமை ஏற்படும் அல்லவா அதே போன்றதோர் உணர்வு.
ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும், படைப்பாளி, எவருமே குரல் கொடுக்காத மக்களுக்காய் கொஞ்சமேனும் அக்கறையாய் எழுதுபவன், இறங்கிப் போராடுபவன் என்று இன்னொரு நல்ல முகத்தை வைத்திருக்கும் ஒரு மனிதன் இப்படி சறுக்கி விட்டானே என்ற வருத்தம் அதிகமாய் இருக்கத்தான் செய்கின்றது.
peyarili karuththodu udanpadukiRen!
ReplyDeletetamilnathi,
ReplyDeleteYes, i wrote a comment but i don remember wher i put it ? I jus read, got angry, immediately posted a comment - don know where !
I feel you have done the right thing, at the right time. You sparked a discussion on the most wanted question - why were the tamil writers silent when the world's biggest holocaust took place .
Don pain yourself . we'll work together.
p.s. Sorry for writing in english as i don have tamil type.
Also, i think this is the first time i'm posting any comment.
thamarai
தமிழ் நதி நான் இதை ஓர்குட்டில் பதிவிட்டுள்ளேன்.
ReplyDeleteபாருங்கள்.
சுட்டி இதோ
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5358471687785568481&na=4
TAMILNATHI after reading this article only i came to know that u r women, i though u r male, u have uploaded a photo in kaviarangam, after seeing that i thought u r a male, nice to hear that u r woman and ur articles were so nice ... particularly this article , adhavanuku sariyana nethi adi, super....... vnsubash@gmail.com
ReplyDelete