7.07.2009

பூனைக்குட்டிப் புராணம்


அன்பு நண்பர்களுக்கு,

உங்களில் பலருக்கு பூனை நாய்கள் பிடிக்காது என்பதை நான் அறிவேன். அதுவும் என் வலைப்பூவுக்கு வந்துபோகிறவர்களுக்கு பூனைகள் மீது கடும் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். அது உங்களை வாசிக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ‘வாசிப்பைத் தடைசெய்கிறது… அதைத் தூக்குங்கள்… தூக்குங்கள்’என்று பலரும் சொல்லிவிட்டார்கள். அமிர்தவர்ஷினி அம்மா மட்டுந்தான் ‘பாவம் அது அங்கேயே இருக்கட்டும்’என்று சொன்னதாக ஞாபகம். இன்று என் செல்லப் பூனைக்குட்டியை வலைப்பூவிலிருந்து தூக்கி என்னோடு வைத்துக்கொண்டேன். அதற்கு உருவமில்லை. அதன் பஞ்சு உடலை நான் தொட்டுக்கொண்டிருக்கவுமில்லை. ஒருநாள்கூட என்னைப் பார்த்து ‘மியாவ்’என்றதில்லை. என்றாலும் அது என்னோடு இருந்தது. அதன்மேல் வாஞ்சை மிகுந்திருந்ததற்கு அதுவொரு குட்டிப்பூனையாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு நரிகளைப் பிடிப்பதுபோல, எனக்குப் புலிகளைப் பிடிக்கும். பூனைகளையும் பிடிக்கும். இதுவொரு முரண்தான். என்ன செய்வது? பலவகைப்பட்ட உணர்ச்சிகளாலான மனிதர்கள் முரண்களாக உலவுவதில் வியப்பொன்றுமில்லை. இந்தப் பூனைக்குட்டிகளில் பிரியம் பெருகுவதற்கான மூலகாரணம் அப்பாதான். அவர் மாலை நேரங்களில் ‘தீர்த்தமாட’ச் செல்வார். ஒரு குவளை மதுவில் எவ்வளவு அன்புவெள்ளம் பெருக்கெடுக்கும் என்பதை அருந்தியவர் அறிவர். அவர் வழிதெருவிலுள்ள நாய்களுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிவைப்பார். சில சமயம் வீட்டுக்கும் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார். ‘அர்ச்சனை’களுக்கு அவருடைய பதில் பெரும்பாலும் ஒரு சிரிப்பாகவோ ஞானியின் தத்துவமாகவோ இருக்கும்.

அப்படி வந்து சேர்ந்ததுதான் பூக்குட்டி. ‘ஏன் இதைப் பிடித்துக்கொண்டு வந்தீர்கள்?’என்றதற்கு, ‘அது வீதியைக் கடக்கமுடியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தது’என்பதற்கு மேல் எங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஐந்தாம் இலக்க செருப்புக்குள் உடல் முழுவதையும் அடக்கிவிடக்கூடிய சின்னப்பஞ்சாக அது எங்களிடம் வந்தது. நான் அப்போது மிகுந்த தனிமையில் இருந்தேன். பிறகு பூக்குட்டியைக் குழந்தையாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அது எந்தளவு விபரீதமாக வளர்ந்ததென்றால், பூக்குட்டி ஒரு நிமிடம் எங்காவது காணாமல் போனாலும், வீட்டிலுள்ளவர்களைப் பதட்டம் கொள்ளவைத்துவிடுமளவுக்கு கூச்சலிடும்படியாக. அது பல தடவை காணாமல் போய் கற்களுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் மரங்களின் மேலிருந்தும் திரும்பி வந்தது. நான் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பதை அது நன்றாகத் தெரிந்துவைத்திருந்தது. பசிக்காதபோதிலும் அதற்கு உணவு வைத்தோம். ஆனாலும், என்னருகில் வந்து கத்தி என்னைச் சமையலறைக்கு இழுத்துப் போவதற்கு அது கற்றுவைத்திருந்தது. பூக்குட்டி கொஞ்ச நாட்களில் பேசக்கூடுமென்று நான் எதிர்பார்க்குமளவிற்கு புத்திசாலியாக இருந்தது. மாலை வேளைகளில் குடும்பமாய் குந்தியிருந்து ‘விண்ணாணம்’ பேசும் வேளைகளில் பூக்குட்டி மிக சாவதானமாக எனது மடியில் ஏறி தன்னைச் சுருட்டிக்கொண்டு ஆழ்ந்து உறங்கிவிடும். மற்றவர்கள் ‘இதப் பார்றா’எனப் பார்ப்பார்கள்.

பூக்குட்டி மூன்று குட்டிகள் போட்டது. அதில், மை தடவியதே போன்ற கண்களால் எல்லாவற்றையும் பிரமித்துப் பார்க்கும் ‘புதினம்’மட்டுந்தான் மிஞ்சியது. புதினம் தாயைவிடச் சமத்தாயும் செல்லமாயும் இருந்தது. அதன் கண்கள்தான் அதன் சிறப்பு.

பூனைகள் நாய்களைப் போல விசுவாசமற்றவை என்றொரு கதை உலவுகிறது. ஆனால், அந்தக் கட்டுக்கதையை முறியடித்தன எங்கள் பூனைகள். கடந்த ஆண்டு வீட்டிற்குப் போயிருந்தபோது, ‘புதினம்’நோக்காடு எடுத்துக் கத்தித் திரிந்தது. எனது பாதங்களில் முகம் வைத்து முனகியது. பிறகு நாங்கள் பதறிப் பார்த்திருக்க எனது காலடியில் ஒரு குட்டியை ஈன்றது. ‘பூனை குட்டி போடுவதைப் பார்ப்பது நல்லது’என்றார் அம்மா.

‘புதினம்’வளர்ந்து ஆளாகியதும் பூக்குட்டி பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டது. நாங்கள் எத்தனையோ தடவை தூக்கிக் கொண்டு வந்து விட்டும் அது எங்கள் வீட்டில் நிலைகொள்ளவில்லை. சாப்பாடு கொண்டுபோய் வைத்தால் சாப்பிடும். சோர்ந்துபோய் படுத்திருக்கும். மனிதர்களின் மனங்களையே படித்தறிய முடியவில்லை. பூனைகளின் உளவியல் யாரிடம் கேட்க? எங்கள் செல்லப் பூக்குட்டி இப்போதும் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது. சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போது, ‘ஏன் போனாய்?’என்று துக்கமாக இருக்கும்.

அதே துக்கத்தை வலைப்பூவிலிருந்து பூனைக்குட்டியைத் தூக்கிய இன்றைக்கு மீண்டும் உணர்ந்தேன்.

33 comments:

  1. சுய 'பூனை'வு, மனம் தொட்டது, எனினும்
    இப்பொழுதுதான் படிப்பதற்கு எளிதாயிருக்கிறது.
    பழைய பூனைப்படத்தைச் சிறிதாக்கி ஒரு ஓரமாக
    வைத்துக் கொள்ளுங்கள், ஆறுதலுக்கு :)

    ReplyDelete
  2. இரண்டு நாய்கள் வளர்த்து வருகிறேன்
    மீன் தொட்டி ஒரு பதினைந்து வருடக்கதைகளுடன்
    முயல்கள் ஒரு முப்பது இருந்தன
    கூண்டில் வளராத வால் கத்தரிக்கப்படாத கிளி இருந்தது
    மாமாவின் மைனா அடிக்கடி வந்து போகும்
    பக்கத்து வீட்டு பூனை என் வீட்டு பொம்மியுடன்(நாய்) சிநேகம்
    மீன் சமைக்கும் நாட்களில் எங்கள் வீட்டில்தான் விருந்து
    புறாக்கள் தோட்டத்தில் உண்டு
    அங்கு
    தேனீயும்
    வளர்த்தார் அப்பா...

    உங்கள் முந்தைய டெம்பிளேட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    காரணம் கேட்டு யாரும் சிரிக்க வேண்டாம்
    பூனைகளுக்கு அப்பால்
    பூனை மட்டும் அப்படியே இருக்க எழுத்து மேலும் கீழும் நகர்வது
    ஒரு விளையாட்டு போல இருந்தது
    :)

    ReplyDelete
  3. //சிலருக்கு நரிகளைப் பிடிப்பதுபோல, எனக்குப் புலிகளைப் பிடிக்கும். //

    ;)))))

    ReplyDelete
  4. அந்தப் பூனைக்குட்டியை சிறுபடமாக இங்கேயும் வைத்துக்கொள்ளலாமே!

    ReplyDelete
  5. உங்கள் உயிர்மை கவிதை அற்புதம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என்ன தமிழ், அந்த வாஞ்சையோடான கண்களை கொண்ட பூனை இல்லாத உங்கள் வலைப்பூவின் பக்கம் பார்ப்பது என்னவோ வெறுமையாக இருக்கிறது.

    நான் உங்கள் எழுத்துக்களைபடித்துவிட்டு பிறகு சற்று நேரம் அந்த பூனையையும் பார்ப்பேன்.

    இனி ம்ஹும் :(

    . ஐந்தாம் இலக்க செருப்புக்குள் உடல் முழுவதையும் அடக்கிவிடக்கூடிய சின்னப்பஞ்சாக அது எங்களிடம் வந்தது. //

    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. தோழமைமிக்க தமிழ்நதி...

    சென்னையில் உள்ள என் தோழி எனக்கென்று ஒரு வலைபூ வடிவமைத்து தருகிறேன் என்றது நான் முதலில் சொன்னது உங்களின் வலைபூவை பார்க்கசொன்னேன். அழகான ஒருபூனையின் பிந்தோற்றதோடு இருப்பதை அந்த தோழியும் ரசித்து இம்மாதிரியான வடிவத்தில் தயார்செய்கிறேன் என்றாள்.இதிலிருந்து பூனைக்குட்டி எடுக்கப்பட்டது எனக்கும் வருத்தமே..
    பூனைகளுக்கென தனியான குணம் உண்டு வீட்டில் வளரும் பூனையை நாம் தவிர்க்க எண்ணி மிகதொலைவில் கொண்டுவிட்டு விரட்டினால் கூட சிறிது நேரத்திலேயே எப்படியோ நம் வீட்டை வந்தடைந்துவிடும்.
    இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் இருப்பவர்கள் பலருக்கும் பூனையில் மனநிலைத்தான் இருக்கிறது இல்லையா..
    அதனால்தான் உங்களுக்கு மற்றதைகளை விட பூனையின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூட உணரலாம்

    விஷ்ணுபுரம் சரவணன்

    ReplyDelete
  8. தமிழ், பூக்குட்டியும் இந்த வலைத்தளத்திலிருந்த அழகுப் பூனைக்குட்டியையும் ஏன் கைவிட்டாய்? ஸ்கீரினில் அமைதியாய் சற்றே தலைகுனிந்து மெளனமாய் இருக்கும் அது அமைதியாகத்தானே இருந்தது, இப்போது, எங்கே சென்று விட்டது? ஏன் ஒளித்துவைத்தாய்? என்னைப் போலவே அதுவும் உன் எழுத்துக்களை வாசித்து அறிவார்ந்த பூனையாகிவிட்டதா? பூனைக்குட்டியில்லாத தமிழின் வலைத்தளம் ஏனோ வெறிச்சென்றிருக்கிறது....தடாகத்தில் நான் எழுதியிருக்கும் ‘காணாமல் போன பூனைக்குட்டி’(http://www.thadagam.com/kavithai_week91.aspx) நினைவிற்கு வந்தது தமிழ்.

    ReplyDelete
  9. மனிதர்களின் மனங்களையே படித்தறிய முடியவில்லை. பூனைகளின் உளவியல் யாரிடம் கேட்க?


    அருமை!!!!!!!!!1

    ReplyDelete
  10. ##சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போது, ‘ஏன் போனாய்?’என்று துக்கமாக இருக்கும்.

    அதே துக்கத்தை வலைப்பூவிலிருந்து பூனைக்குட்டியைத் தூக்கிய இன்றைக்கு மீண்டும் உணர்ந்தேன்.###


    ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பூக்குட்டியை எடுத்து உள்ளிர்கள் என்று தெரிகிறது
    அது நன்றாக தான் இருந்தது!

    ReplyDelete
  11. அந்த பூனைக்குட்டி நல்லாத்தானே இருந்தது!

    ReplyDelete
  12. தமிழ் நதி அவர்களுக்கு,

    ஒரு சிறுகதை / கவிதை படித்த நிறைவு ஏற்ப்பட்டது.
    இதயம் இதமானது.

    ஒரு சிறிய இடைவெளி விட்டு பூனையை மறுபடியும்
    கொண்டு வர பாருங்கள். இனி
    அது உங்கள் அடையாளமாக
    இருக்கட்டும்.

    அன்புடன்
    எஸ்.எஸ் ஜெயமோகன்

    ReplyDelete
  13. பாண்டியன்Tuesday, July 07, 2009

    வெள்ளை கலர் பூனைகுட்டியை பேக்கிரவுண்டாக வைத்து கொண்டு கறுப்பு எழுத்தில் எழுதினால் எல்லோருக்கும் தெரியும் தங்களது பழைய பேக்கிரவுண்டில் புரவுன் கலர் மற்றும் பெரிய சைசு பூனை கூடவே டார்க் மெரூன் கலர் எழுத்துகள்.. இவையே பலருக்கு படிப்பதற்கு சிரமம்..

    மற்றது ஒய்வு நேரத்தில் வீட்டிலோ அல்லது புரவுசிங் சென்டரில் படிப்பவர்களுக்கு எந்த தொல்லையும் இல்லை..ஆனால் அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தில் தங்கள் வலைபூவை திறந்தால் பார்ப்பவர்களை பளீர் என அந்த பூனை கவனத்தினை ஈர்க்கும்.. மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை... இப்போது படத்தில் இருக்கும் அந்த வெள்ளைகலர் பூனை உங்கள் வீட்டில் வளர்ந்ததா?

    ReplyDelete
  14. புராணமோ புனைவோ பதிவு நன்றாக இருக்கிறது தமிழ்நதி! பழகினால் பேயை கூட பிரிவது துயரம் என்று அப்துல் ரகுமான் ஒரு புத்தாயிரமாண்டு கவிதையில் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. ( பொருத்தமோ தெரியவில்லை )

    உண்மையில் நானும் அந்தப் பூனையை ரசித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வந்த பூனைக்குட்டி கதவு கேட்டின் சீலை ஆடுவதை கூர்ந்து பார்த்தது பிற்பாடு நான் எதிர்பார்த்திராத தருணமொன்றில் சட்டென முன்னங்காலை முகத்தின் குறுக்கே வீசி கேட்டினை அறைந்தது. பிற்பாடு கேட்டினோடு friend ஆகி பிராண்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தது. அதுபோலத்தான் உங்கள் பூனைக்குட்டியும் எழுத்துக்கள் உருள்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு முன்னங்காலை வீசக்காத்திருந்ததோ என்னவோ?

    ஆனந்தம் படத்தில் எனக்கு பிடித்த ஒரு வசனம் "அவங்க அவங்க அவங்களுக்கு பிடிச்ச இடத்தில இருக்கிறாங்க" நீங்கள் நான் உங்கள் பூக்குட்டி..?

    ReplyDelete
  15. பூனைகள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவை!
    பூனைகளுக்கு வேலைக்கார மனோபாவம் கிடையாது!
    பூனைகள், பிறர் தன்னை நேசிப்பதைத்தான் விரும்பும்.
    பூனைகள் அமைதி விரும்பிகள்!

    இப்படி பூனைகள் உண்மையிலேயே விருப்பத்துக்குரியவைதான்.

    நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  16. தமிழ்நதி,
    இவ்வளவு கவலையா உங்களுக்கு?
    இங்கு வளர்க்கலாமே?
    அழகாக எழுதியுள்ளீர்கள்.

    //சிலருக்கு நரிகளைப் பிடிப்பதுபோல, எனக்குப் புலிகளைப் பிடிக்கும்.//
    எனக்கும் அதே போல தான்.

    ReplyDelete
  17. ஒரு படத்தை எடுத்ததற்க்கு இவ்ளோ படம் காட்டுறது கொஞ்சம் ஓவர் தான். அதுக்கு துக்கம் விசாரிச்சு இத்தனை பின்னூட்டம் போடுறது ரொம்பவே ஓவர்

    ReplyDelete
  18. தோழி ,

    வருத்தமாக உள்ளது. பூனையும், நாயையும் நினைத்து அல்ல. உங்களை நினைத்து.... பாதை மாறி விடாதீர்கள். உங்கள் வேர்கள் ஆழமானது. தொலை நோக்கு பார்வை .....

    தோழி,
    கரைந்து செல்லும், கடந்து செல்லும் மணித்துளிகள் - தமிழ் இன மீட்புக்கு செலவு செய்ய படட்டும். இதை மற்றவர்களிடம் கேட்க முடியாது. ...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. திருவாளர் அனானி இன்று காலையில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அவருக்குப் பதிலளித்துவிட்டு வருகிறேன்.

    அனானி,

    "ஒரு படத்தை எடுத்ததற்க்கு இவ்ளோ படம் காட்டுறது கொஞ்சம் ஓவர் தான். அதுக்கு துக்கம் விசாரிச்சு இத்தனை பின்னூட்டம் போடுறது ரொம்பவே ஓவர்"

    இதைக்கூட உங்கள் சொந்தப்பெயரில் சொல்லமுடியாமற் போய்விட்டதே என்று உங்களை நினைத்துக் கவலைப்பட்டேன்:) இப்படி ஏதாவது சொல்வதானால் மட்டும் அனானியாக வருகிறீர்கள். என்னிடத்தில் அவ்வளவு பயமா என்ன:)

    நினைத்துப் பார்த்தால் எல்லாம் ஒருவகையில் 'படம் காட்டுதல்'தான்.தன்னை அடையாளப்படுத்தும் அன்றேல் இவ்வுலகுக்குத் நிரூபிக்கும் எத்தனந்தான்.

    எனக்கும் என் பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல், உரையாடல் இருக்கிறது. அதனால்தான் 'பூனைக்குட்டியைத் தூக்குங்கள்", 'ஏன் தூக்கினீர்கள்'என்று மாறி மாறிக் கேட்கிறார்கள். மேலும் இவ்வளவு காலமும் இருந்த பூனைக்குட்டியைச் சடக்கென்று தூக்குவது உண்மையில் வருத்தமாக இருந்தது. அந்தப்பதிவை ஒரு அறிவித்தலாகவே எழுதினேன். படத்தை மாற்றுவதைக் கொஞ்சம் கவித்துவமாக மாற்றலாமே என்ற உள்மமனசின் தூண்டலே அது. சீரியஸான விடயங்களால் மட்டுமல்லாது, சின்னச் சின்ன விடயங்களாலும் இந்த உலகம் இயங்குகிறது என்பது நாமறிந்ததே. அதைக்கூட 'குத்த'வென்று சிலபேர் இருப்பது வியப்பளிக்கிறது.

    இதற்கு இத்தனை பின்னூட்டமா என்று புகைச்சல் என்றால், உங்கள் வலைப்பூ முகவரியைத் தாருங்கள். கொஞ்சப்பேரை அனுப்பிவைக்கிறேன்:)

    --

    ஆமாம் மொங்ஸ், பழைய பூனையை ஓரத்தில் இருத்த முயற்சி செய்கிறேன்.


    நேசமித்ரன்,

    எனக்கும் அத்தகைய விசித்திர வேடிக்கைகளில் ஈடுபாடு உண்டு.இதில் சிரிக்க என்ன இருக்கிறது....

    பதி,

    உங்களுக்கு மட்டும் எப்படி என் வரிகள் சரியாகச் சிக்குகின்றன:)

    இப்படியும் சொல்லியிருக்கலாம்..

    "சிலருக்கு நரிகளையும் சிங்கங்களையும் பிடிப்பதுபோல..."

    ---
    கே.வி.ஆர். ராஜா,

    அதை எப்படி ஓரத்தில் வைப்பதென்று எனக்குத் தனிமடலிடுங்களேன்... தொழினுட்ப விடயத்திலும் எனக்கொன்றும் தெரியாது:)

    அமிர்தவர்ஷினி அம்மா,

    பூனை போனாலும் புலி போனாலும் வாழ்க்கை நகரத்தான் செய்கிறது:) பழகப் பழகச் சரியாகிவிடும்.

    --

    சரவணன்,

    பூனையைப் பிடிக்க நிறையக் காரணங்கள். நீங்கள் சொன்னதும் அதிலொன்றாக இருக்குமோ என்று இப்போது யோசிக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா.. அவை மிகுந்த குறும்புத்தனம் பொருந்தியவை. வாலால் காலுரசி நேசங்கொண்டாடுபவை. எங்கள் புதினம் யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்றால் செல்லக் கடி கடித்து சாப்பாடு கேட்கும்.

    உமா,

    எனக்கும் ஒரு மாதிரி வெறுமையாகத்தான் இருக்கிறது. பேசாமல் வைன் கிளாசுக்கு மாறிவிடலாமா என்று யோசிக்கிறேன். காப்பிதான் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறாற்போலிருக்கிறது:) மேலும் ஒரு பெண்ணின் வலைத்தளத்தில் வைன் கிளாஸ் ஏற்புடையதல்ல, 'நீ ஒரு கொண்டாட்டக்காரி' பிறகேன் 'அந்நியன் மாதிரி அழுகிறாய்'என்று யாராவது கலாச்சாரக் காவலர்கள் கேட்கக்கூடும். நினைவிருக்கட்டும். நாங்கள் பதில்சொல்லக் கடமைப்பட்டவர்கள்:)

    வாருங்கள் இராயர் அமிர்தலிங்கம்,

    ஆமாம். இந்த உளவியலே பெரிய அக்கப்போராக இருக்கிறது.

    தமிழன் கறுப்பி,

    ஆளாளுக்கு எல்லோரும் தூக்கச் சொன்னார்கள்... நந்தி மாதிரி மறைக்கிறதென்று... இப்ப வந்து 'வைத்திருந்திருக்கலாமே'என்றால்நான் என்னத்தைச் சொல்ல...:(

    நன்றி எஸ்.எஸ்.ஜெயமோகன்,

    பூனையை ஓரத்தில் இருத்த எண்ணம். சிலசமயம் மற்ற வலைப்பூவிற்கு ஆளை அனுப்பிவைத்துவிட்டுப் பேசாமலிருந்து விடுவேன். எனக்கு பூனைத் தத்தா? புலித் தத்தா?

    ஆம் பாண்டியன்,

    இதுதான் புதினம். குட்டி போட சிலநாட்களுக்கு முன்னால் எடுத்தது. என்னமாய் ஓய்வெடுக்கிறது பாருங்கள்.

    துர்க்கா தீபன்,

    பூனைக்குட்டிகளின் குறும்பு சொல்லி மாளாதது. நீங்களும் கவனித்திருக்கிறீர்கள். சில சச்சரவுகள், முரண்பாடுகள், அக்கப்போருக்கு அடுத்து என்னையும் தேற்றிக்கொள்ளத்தான் இப்படியொரு பதிவு.

    சுரேகா,

    பூனைகளுக்கு நாய்களைப் போல அடிமை மனோபாவம் கிடையாது. கம்பீரமானவை என்று கவிஞர் சுகுமாரன் ஒரு கவிதை எழுதியிருப்பதாக நினைவு.

    வாருங்கள் வாசுகி,

    எனது மிக நீண்ட காலத் தோழியின் பெயரும் வாசுகிதான். சுகி என்று கூப்பிடுவோம். இலண்டனில் இருக்கிறா. நீங்கள் யாழ்ப்பாணத்திலா இருக்கிறீர்கள்? நீங்களெல்லாம் வந்து வாசிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    எனக்கும் அதே அதே அதே:)

    தமிழரினம்,

    வாழ்க்கை சிலசமயம் நம்மை அற்பங்களை நோக்கி நகர்த்திவிடுகிறது. அதற்காக அற்புதங்களைக் கைவிட்டுவிட்டதாக அர்த்தமில்லை. சில காலங்களுக்கு தீவிரமான விடயங்களைப் பேசுவதிலிருந்து ஒதுங்கியிருக்கலாமென்று நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. //ஆனால் அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தில் தங்கள் வலைபூவை திறந்தால் பார்ப்பவர்களை பளீர் என அந்த பூனை கவனத்தினை ஈர்க்கும்.//

    ஆம். பலமுறை எனது அலுவலகத்தில் இது பற்றி கேட்டனர்.. ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு பக்கங்களுக்கு போய்விடுவேன் !!!!! ;)))))

    ReplyDelete
  21. ...வெள்ளை நிறத்தொரு பூனை,
    எங்கள் வீட்டில் வளர்ந்தது கண்டீர்...
    என்ற பாரதி பாடல் ஏதோ நினைவுக்கு வந்தது தவிர, இப் பதிவு பற்றி ஏதும் சொல்வதற்கில்லை.
    எனக்கென்றால் தங்கள் முந்திய பூனைதான் விருப்பம். கொள்ளை அழகு.

    ReplyDelete
  22. தோழமைமிக்க தமிழ்நதி...

    சென்னையில் உள்ள என் தோழி எனக்கென்று ஒரு வலைபூ வடிவமைத்து தருகிறேன் என்றது நான் முதலில் சொன்னது உங்களின் வலைபூவை பார்க்கசொன்னேன். அழகான ஒருபூனையின் பிந்தோற்றதோடு இருப்பதை அந்த தோழியும் ரசித்து இம்மாதிரியான வடிவத்தில் தயார்செய்கிறேன் என்றாள்.இதிலிருந்து பூனைக்குட்டி எடுக்கப்பட்டது எனக்கும் வருத்தமே..
    பூனைகளுக்கென தனியான குணம் உண்டு வீட்டில் வளரும் பூனையை நாம் தவிர்க்க எண்ணி மிகதொலைவில் கொண்டுவிட்டு விரட்டினால் கூட சிறிது நேரத்திலேயே எப்படியோ நம் வீட்டை வந்தடைந்துவிடும்.
    இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் இருப்பவர்கள் பலருக்கும் பூனையில் மனநிலைத்தான் இருக்கிறது இல்லையா..
    அதனால்தான் உங்களுக்கு மற்றதைகளை விட பூனையின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூட உணரலாம்

    விஷ்ணுபுரம் சரவணன்///

    ஒகோ இது தான் படைப்பு மனமா பின்னுறீங்க சரவணன்

    ReplyDelete
  23. அனானி நண்பரே,

    தயவுசெய்து கோபப்படாதீர்கள். நமது கோபத்தைவிட உலகம் பெரிது. உங்கள் பின்னூட்டத்தைக் காலங்கார்த்தாலே படித்துவிட்டுக் கவலையாக இருக்கிறது. உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

    ReplyDelete
  24. உங்கள் நல்ல காலைப் பொழுதை என் பின்னூட்டம் கவலைப்பொழுதாக ஆக்கிவிட்டதை அறிந்து எனக்கு தான் இப்போது வருத்தமாக இருக்கிறது. மீதி நாள் நல்லபடியாக அமைய வேண்டுமென்று நான் அவனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  25. என் பின்னூட்டத்தை இப்போது திரும்ப படித்து பார்த்த போது ஏதோ நக்கல் செய்யும் தொனி போல தெரிகிறது. உங்களுக்கும் அப்படி தெரிந்திருந்தால் என்னை மன்னிக்கவும். நான் அப்படி எதுவும் நினைத்து எழுதவில்லை. உண்மையான கரிசனையோடு தான் எழுதினேன்.

    நான் 10 தமிழ் வார்த்தைகள் தட்டச்சு செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறேன். சில சமயம் மனதில் உள்ளதை வார்த்தையில் கொண்டு வருவதற்கு இந்த வேகம் தடையாக இருக்கிறது. ஒரு வழியாக ஒன்றை தட்டச்சு செய்து முடித்ததும் அலுப்பில் திரும்ப படித்து பார்க்காமல் பொத்தானை அழுத்தி விடுகிறேன். நிறைய எழுதுபவர்களை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

    நான் 1 மணி நேரத்திற்கும் மேலாக டைப் செய்ததை இதுவரை படித்ததற்கு நன்றி.

    அன்புடன்
    அகராதி பிடித்த அனானி

    ReplyDelete
  26. போங்க‌ கா.. இவருக்கு பிடிக்கவில்லை அவருக்கு பிடிக்கவில்லை என்ற காரணங்க‌ளெல்லாம் தேவையற்றவை.உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் தூக்கி எரிந்திருக்கலாம்.பாவ‌ம‌ந்த‌ பூனைக்குட்டி. :(

    ஒருவ‌ருக்கு பிடிக்காத‌தால் நீக்கிவிட்ட‌ உங்க‌ளுக்கு பாராட்டுக்க‌ள். ஆயினும் பெய‌ரில்லா அனானிக்காக‌ நீக்கிய‌து உங்க‌ளின் சுய‌புத்தியின் நிலைப்பாட்டை குறைக்க‌ச்செய்ய‌லாம்.

    ReplyDelete
  27. I loved that kitty!. Though it is easy to read the text now, I strongly suggest that you bring the kitty back.

    ReplyDelete
  28. பதி,

    கொஞ்ச நாள் புலிப்பிரச்சனை ஓடியது. இப்போது பூனைப்பிரச்சனை.... :) அலுவலகங்களில் பூனை கவனத்தை ஈர்ப்பதனால் சிரமம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

    சூரியா,

    எனக்கும் பூனைதான் பிடித்திருந்தது. ஆனால், மனம் ஒன்றி வாசிப்பதை அது தடைசெய்கிறது என்றால், நீக்குவதே நியாயம். மற்றவர்களால் படிக்கப்படுவதற்காகவுந்தான் எழுதுகிறேன் என்பதனால்.

    தொடர்பவனின் பின்னூட்டத்திலிருந்து அவரை சரவணனுக்குத் தெரியும் என எடுத்துக்கொள்கிறேன்:)

    அகராதி பிடித்த அன்றேல் படித்த அனானிக்கு,

    சிலசமயங்களில் நாம் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம். அது அந்தத் தருணத்தின் குறையேயன்றி, நமது குணவியல்பே அதுவல்ல. இதை நாம் மறந்துவிடலாம். நேரம் இருக்கும்போது வலைப்பூ பக்கம் வந்துபோய்க்கொண்டிருங்கள்.

    எல்லாமே பழக்கந்தான். தட்டச்சுவது உட்பட. நானும் ஒவ்வொரு எழுத்தாக தேடிப் பிடித்து அதன் தலையில் ஓங்கிக் குத்தித்தான் பழகினேன். இப்போது சுமாராக டைப்புகிறேன்.

    நளன்,

    பூனைக்குட்டிக்கும் அனானிக்கும் சம்பந்தமில்லை. அது வேறு... இது வேறு... ம்... உங்கள் வலைப்பக்கம் விரைவில் வருவேன்:)

    அழகன்,

    எவ்வளவு தன்னம்பிக்கை உங்கள் தோற்றத்தில்:) பூனைக்குட்டி வரும் போகும்... வார்ப்புரு என்பதே ஒரு பேச்சாக இருப்பதுகூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது..

    ReplyDelete
  29. //கே.வி.ஆர். ராஜா,

    அதை எப்படி ஓரத்தில் வைப்பதென்று எனக்குத் தனிமடலிடுங்களேன்... தொழினுட்ப விடயத்திலும் எனக்கொன்றும் தெரியாது:)//

    mailed u the steps to ur gmail id tamilnathy@gmail.com

    ReplyDelete
  30. பூனைக்குட்டி புராணம் நல்லாயிருக்கு.

    உங்கள் பதிவுகளையும் அதற்கு வரும் நீண்ட பின்னூட்டங்களும் அதனினும் அழகே..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. சிலருக்கு சில விதமான விருப்பு...வெறுப்புகள் இருக்கும்,உங்களுக்கு விருப்பமிருப்பின் ஏன் யாருக்காகவும் அந்தப் பூனைக் குட்டியைத் தூக்கி எறிந்தீர்கள் தமிழ்நதி,???

    நான் பெரும்பாலும் உங்கள் பதிவுகளை தவறவிடுவதில்லை,சொல்லப் போனால் பூனைகள் மீது எனக்குப் பெரிய அசூயை உண்டு,அதையும் தாண்டி உங்கள் எழுத்து என்னை ஈர்த்தது உண்மை. ஆர்வமிருப்பவர்கள் பூனை இருந்தாலும் சரி புலி இருந்தாலும் சரி தொடர்ந்து வாசிக்கத் தான் செய்வார்கள்,பூனைக்குட்டி படம் வேண்டுமா ...வேண்டாமா என்று மறுபரிசீலனை செய்யலாமே?!

    ReplyDelete
  32. nice. very touching. பூனை அவளவாக பிடிக்காது அனால் ஒரு பூனை வந்து சேர்த்து பூனை மீது என்னகு இருந்த வெறுப்பு இல்லாமல் பூய் விட்டது. குட்டி பூடும் போதும் நான் அருகில் நிண்டு பார்க்க விட்டது. கடிக்கவே இல்லை. இடபெயர்வில் ஆரியக்கணக்கான மக்களுடன் மக்களாக சாவடைந்து விட்டது.

    ReplyDelete