9.14.2009

பதிவெழுத வந்த கதை

தொடர்பதிவெனப்படுவனவெல்லாம் பெரும்பாலும் நமது தனிப்பட்ட வாழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். அதைச் ‘சுயபுராணம்’என்று சுருக்க மனம் வருவதில்லை. பார்க்கப்போனால் எல்லாப் புனைவுகளிலும் சுயம் கலந்திருக்கவே செய்கிறது. நாம் எழுதும் எல்லாக் கதைகளிலும், கவிதைகளிலும் ஏதோவொரு வடிவில் நாம் இருந்துகொண்டுதானிருக்கிறோம். ஆயாசம் மிக்கதென எப்போதும் குறைப்பட்டுக்கொள்ளும் இந்த வாழ்வில் இவ்வகையான பகிர்தலும் ஆசுவாசமும் வேண்டித்தானிருக்கின்றன. ‘பதிவெழுத வந்த கதை’யைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி சிநேகிதி அழைத்திருந்தார். பிறகு அய்யனார்… இருவருக்கும் நன்றி.

பதினொரு ஆண்டுகாலம் வாழ்ந்தபிற்பாடும், புலம்பெயர்ந்த நாடான கனடாவோடு ஒட்டமுடியாமல்போக, 2003ஆம் ஆண்டு ஈழத்துக்குத் திரும்பிப்போனேன். அப்போது அங்கே போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. எனினும், நிழல்யுத்தம் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது. ஆனால், அது பொதுமக்களின் இயல்புவாழ்வைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறையப்பேர் திரும்பிவந்திருந்தார்கள். ஆம்… அவர்களால் (எங்களால்) நிலங்கள் விலையேறின. வீடுகள் உப்பரிகைகளோடு உயர்ந்தன. அதுவொரு கனாக்காலம். நாங்கள் மகிழ்ச்சியோடு அந்நாட்களில் அங்கு வாழ்ந்திருந்தோம் என்பதை ஞாபகங்கொள்கிறேன். அந்த அழகிய கிராமத்தில் எங்கள் வீடு அன்பின் கூடு. அந்த வீட்டில் நாங்கள் பதின்மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்திருந்தோம். யுத்தநிறுத்த முறிவினைத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரவுகள் எங்களுடையதாக இருக்கவில்லை. சில பகல்களும் அவ்வண்ணமே. யமன்கள் மோட்டார்சைக்கிளில் வந்துபோயின. நாய்கள் குரைக்கும் ஓசையைக் கேட்டபடி மரணபயத்தோடு எங்கள் சுவாசம் எங்களுக்கே இடியென முழங்கப் படுத்திருந்த இரவுகளை மறக்கமுடியாது. அங்கு தொடர்ந்தும் வாழமுடியாத சூழலில், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊரையும் உறவுகளையும் விட்டுத் தமிழ்நாட்டுக்குப் பெயர்ந்து வந்தோம்.

உயிர்ப்பயத்திலிருந்து தப்பித்து அந்நியத்தினுள் விழுந்தோம்। சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. ஒரு நண்பர்தானும் இல்லை. உறவினர்களும் இல்லை. எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் ஏங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு புன்னகைதானும் இல்லை. சென்னையில் நாங்கள் அநாதைகளாக, அடையாளமற்றவர்களாக வாழ்ந்தோம். நினைக்குந்தோறும் துயரம் பெருக்கும் நாட்கள் அவை. தன்னிரக்கத்தில் கரையவைக்கும் ஞாபகங்கள் அவை.

உறவினைத் தொடுக்கும் ஒரே சரடாக இணையமே இருந்தது. அப்போது நான் அறிந்திருந்த தளங்கள் நான்கைந்துதான். ஆறாம் திணை, திண்ணை, தமிழ்நாதம், தமிழ்நெற். ஹொட்மெயிலிலிருந்து ஜிமெயிலுக்கு மாறி இணைய அரட்டையைத் தொடங்கியதும் பிரமாண்டமான கதவுகள் திறந்துகொண்டதைப் போல இருந்தது. மயங்கி மூச்சடைக்கும்போதில் காற்றுவெளியில் தூக்கியெறியப்பட்டதைப் போன்றதொரு ஆசுவாசம். அதன் வழியாக புதிது புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கனடாவிலிருக்கும் எனது தோழி பிரதீபா ஒருநாள் கேட்டார் “நீங்கள் ஏன் வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதக்கூடாது?”- “எழுதலாமே… ஆனால், வலைப்பதிவு என்றால் என்ன? இணையத்தில் தமிழில் எழுதுவது நம்மைப்போன்ற சாதாரணர்களுக்குச் சாத்தியமா?”

‘இளவேனில்’என்ற சொல் எனக்கு எப்போதும் பிடிக்கும். அது மலர்களின் வாசனையை, இலைகளின் பசுமையை, தென்றலின் பாரபட்சமற்ற நேசத்தை நினைவூட்டுவது. மேலும், அந்தப் பெயரில் எனக்குள் நிறைவேறிய கனவொன்றும், உதிர்ந்துபோன கனவொன்றும் இருக்கின்றன. அதையே எனது வலைப்பூவிற்குப் பெயராகச் சூட்டினேன். பிரதீபா மட்டும் அன்றைக்கு வலைப்பூ பற்றிக் குறிப்பிடவில்லையெனில், இப்போதும் எங்காவது கடற்கரையில் அமர்ந்து, திரும்பிச் செல்லமுடியாத அக்கரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேனாயிருக்கும்! கவிதைகள், கதைகள், அனுபவப் பகிர்வுகள் எனத் தொடங்கி, அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்தோடி இணையத்தில் எதிர்க்கருத்தாளர்களுடன் குடுமிப்பிடிச்சண்டை போடுமளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன். (காம்ப்ளான்) இதை எழுதும்போது மெல்லிய புன்னகை ஓடுகிறது. அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஏங்க தமிழ்நதி உங்க வலைத்தளத்தில ஒரே பிணங்களாக விழுந்துகிடக்குதே…”என்று. “ஏன்?”என்று வினவினேன். சில பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சிரித்தார். “என் நண்பர்களிடம் கேட்டால் தெரியும். நான் எவ்வளவு அப்பாவி என்பது…”என்று அவருக்கு விளையாட்டாகப் பதிலளித்தேன். அப்புறாணிகளை உசுப்பேற்றினால் அதுகளுந்தான் பாவம் என்ன செய்வது? ‘மௌனம் கலகநாஸ்தி’ என்பதெல்லாம் என் அகராதியில் இல்லை. ‘கலகமில்லையேல் நியாயமில்லை’ என்பதுதான் என் வேதம். தனிப்பட்ட விடயங்களுக்காக நான் சண்டையிட்டது… ம்… இல்லையெனலாம். பொதுவான விடயங்கள், அரசியல் என்று வந்தால் கொம்பு சீவிய காளை… (இதிலும் பாருங்கள்… பசு இல்லை. மொழியிலும் வஞ்சகம்) இல்லை… கொம்பு சீவிய பசுவேதான். சின்னக் கொம்பாயிருந்தா சீவக்கூடாதா என்ன?

வலைப்பதிவு எழுதவந்து சம்பாதித்தது, எதிரிகளை மட்டுமன்று; நூற்றுக்கணக்கான நண்பர்களையுந்தான். எனக்கு வரும் அனானி அஞ்சல்களிலிருந்து அகராதிகளில் இல்லாத கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். என்றைக்காவது தேவைப்படும். பெண் என்பதும் வேற்று நிலத்திலிருந்து வந்தவள் என்பதும் திட்டுவதற்கு மேலதிக சொற்பிரயோக வசதிசெய்துகொடுக்கின்றன. (இதை எழுதும்போது கழிவிரக்கம் என்ற சொல்லோடு சேர்த்து ஆதவன் தீட்சண்யா நினைவில் வந்துபோகிறார்) இப்போதெல்லாம் எங்காவது இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், யாராவது அடையாளங்கண்டு வந்து பேசுகிறார்கள். வலைப்பூவில் நான் பண்ணுகிற அக்கப்போர்கள், அதகளங்கள், தர்க்கங்கள் வெளியில் நிறையப்பேருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. அந்நேரங்களில், யாருக்கும் தெரியாமல் எழுதிய இரகசியக் குறிப்புகளை சபையில் வாசிக்கக் கேட்பது போல கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

கனடாவில் இருந்தபோது நிறையப் பத்திரிகைகளில் (நிறைய விளம்பரங்களுக்கிடையில்) எழுதிக்கொண்டிருந்தேன். அது சிலகாலம் விட்டுப்போயிருந்தது. வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிய கைப்பழக்கத்தால் ஓரளவு எழுத்து வசப்பட இப்போது கதை, கவிதை என வகைக்கொன்றாய் இரண்டு தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலுமொரு கவிதைத் தொகுப்பு அச்சுக்குப் போயிருக்கிறது. குறுநாவலொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னதான் சொன்னாலும், நமக்கென்றொரு ‘அடையாளம்’இருப்பது மகிழ்வளிப்பதாகவே இருக்கிறது. எனது வீட்டு முகவரிக்கு நிறையப் புத்தகங்கள் ‘கவிஞர்’என்ற அடைமொழியோடு வந்து பரவசப்படுத்துகின்றன. அங்கீகாரம் என்பது பெரிய கொடை. எழுத்தாளர்கள் பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு அருகில் நின்று பேசும் பெருமிதம் கூடியிருக்கிறது. (‘அவங்கல்லாம் யாரு?’என்ற பதிலளிக்கச் சங்கடமான கேள்விகளைக் கேட்கக்கூடாது) இதையெல்லாம் தந்தது இளவேனிலும் தமிழ்மணமும்தான் என்பதை நெகிழ்ந்து சொல்கிறேன். எனது தோழியும் கவிஞருமாகிய குட்டி ரேவதி சிலசமயம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு… “நீங்கள் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை… எவ்வளவு பேர் உங்களில் பிரியமாயிருக்கிறார்கள்”என்று. தமிழ்நாட்டு மக்கள் எங்களில் எப்போதும் பிரியமாய்த்தானிருக்கிறார்கள். தேர்தல்களின்போதும் தீர்மானங்களின்போதும் மட்டும் அந்தப் பிரியம் காவியுடுத்திக்கொண்டு தூரதேசம் போய்விடுகிறது. அல்லது கைமறைவாய் அளிக்கப்படும் காகித உறைகளுள் அடங்கிவிடுகிறது.

“நீ இந்தக் கட்டுரையிலும் அரசியல் கதைக்க வேண்டாம்”என்று அங்கே அதட்டுவது யார்? நானேதான்!

எழுத்து என்பது அற்புதம். மகோன்னதம். ஆன்மாவை வருடும் மயிலிறகு. என் தாய்மடி. நான் வணங்கும் ஒரே கடவுள். எழுத்து என் தோழி. அதுவே என் காதலனும். எழுத்தே இயற்கை. எழுத்தே வாழ்க்கை. வாழ்வதன் ஒரே பொருளாகிய அதற்கென் நன்றியில் தோய்த்தெடுத்த முத்தங்கள்.

இந்தத் தொடர்விளையாட்டில் கலந்துகொள்ள யாரை அழைப்பதென்று தெரியவில்லை। யாராவது யாரையாவது அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் விதிகளை மீறமுடியாது. ‘வலைப்பதிவெழுத வந்த கதையெழுத’ நான் அழைக்கும் நண்பர்கள்:

மாதவராஜ்
காமராஜ்
தீபா
விஷ்ணுபுரம் சரவணன்
இசை (கோவை)

இவர்களெல்லாம் ஏற்கெனவே எழுதியிருக்கவும் கூடும்:)


19 comments:

  1. //கொம்பு சீவிய பசுவேதான். சின்னக் கொம்பாயிருந்தா சீவக்கூடாதா என்ன?//

    :)))

    சீவினா என்ன தப்பு? சீவறதுக்கு தானே கொம்பு!

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் எழுத்தை கொஞ்சம் சிரிப்போடு வாசித்த உணர்வை தந்தது இந்தப் பதிவு.

    ReplyDelete
  3. தோழமைமிக்க தமிழ்..

    முதலில் தோழி பிரதீபா விற்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துவிடுங்கள்..

    நானும் நண்பனும் மகாகவியுமான இசையும் உங்களிடம் அடிக்கடி குறிப்பிடுவது நீங்கள் எழுதும் மொழிநடையின் நேர்மையையும் வசீகரத்தையும்தான்.. அது உங்கள் வாழ்வு சார்ந்ததாக இருக்ககூடும் என நினைப்பதுண்டு.

    மொழி உபயோகத்தில் குறுக்கீடுகள் காலந்தோறும் இருக்கவே செய்கின்றது. மத, ஆணிய, அதிகாரத்துவ என ஏற்கனவே திணித்தவைகளை தெரிந்தோ தெரியாமலோ நாமும் பயன்படுத்துவிட நேரிடுகிறது.அது குறித்த உங்களின் கவனமும் சிரத்தையும் உங்களை இன்னும் செழுமையுறச்செய்யும்.

    வாழ்க்கையை போன்ற ஆசிரியர் யாருண்டு.. மெல்ல ஆறும் எனத்தான் ஒவ்வொருமுறை அடிப்படும்போதும் நினைக்கிறோம். ஆற்றுவதற்கான காரணியற்ற சூழலில் அது நிகழாது என உணருவதற்குள் இன்னும் முதிர்ச்சியான அனுபவங்கள் நமக்கு வந்து சேர்கின்றன.

    உங்கள் வலை பூ பக்கங்கள் சமீபத்தில் பலரால் படிக்கப்பட்டு விவாதிக்கப்டுகிறது என்பது உரையாடலை எப்போது விரும்புகிற என்போன்றோருக்கு பெருமகிழ்வையே தருகிறது.

    ஒருநாள் இரவு விடைபெறும் கடைசி நிமிடங்களில் நண்பரது கணிணியில் அண்ணன் கவிஞர் அறிவுமதி அவர்களிம் உங்களின் வலைபூவை திறந்து வாசிக்கசொல்லி அருகில் இருந்து அவரது உணர்வுகளை பார்த்தேன். அவருக்கும் உங்களின் சொற்பிரயோகம் குறித்து மதிப்புண்டானது. அதை உங்களிடம் அன்று அரைகுறையாகத்தான் பகிர்ந்துகொள்ளமுடிந்தது.

    பகிரத்தானே எழுதுவது... பகிரும்போது சோகம் குறையவும் மகிழ்வு பெருகவும் செய்யுமெனில் அதை தொடர்ந்து செய்யுங்கள்..

    [என்னை பதிவெழுத வந்த கதை க்கு அழைத்திருப்பது உங்களின் நகைச்சுவை திறனை காட்டுகிறது. முதலில் நான் உருப்படியாக ஏதாவது எழுத முயலுகிறேன்.. பிறகு நீங்கள் எழுத சொன்னதெல்லாம்..]

    விஷ்ணுபுரம் சரவணன்

    ReplyDelete
  4. உங்களை வலைப்பதிவுக்கு அழைத்து வந்த உங்கள் தோழி பிரதீபாவுக்கு தான் நாங்க நன்றி சொல்லணும்

    ReplyDelete
  5. \\யாருக்கும் தெரியாமல் எழுதிய இரகசியக் குறிப்புகளை சபையில் வாசிக்கக் கேட்பது போல கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.//
    :)

    ReplyDelete
  6. உங்களின் இந்த பதிவு மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
    நீங்கள் எப்போதும் தமிழ் நாட்டின் செல்லப் பிள்ளைதான்

    :)

    ReplyDelete
  7. மிஸஸ்.தேவ்,

    "சீவினா என்ன தப்பு? சீவறதுக்குத்தானே கொம்பு!"

    அதென்னமோ தெரியவில்லை... பசுவின் கொம்பைச் சீவுவதில்லை. காளைக்குத்தான் அலங்காரம்:)

    அமிர்தவர்ஷினி அம்மா,

    கனடாவில் இருக்கிறேன். மனவுளைச்சல்கள் குறைவு. அதனால்தான் என்னையறியாமல் ஒரு சிரிப்பு எழுத்தில் இழையோடியிருக்கிறது போலும்... இருந்தாலும் தமிழ்நாடுதான் பிடிக்கிறது. துயரநூல் பாவாத வாழ்வுத்திரையில் அழகில்லையோ...:)


    சரவணன்,

    பிரதீபாவுக்கு நன்றியைச் சொல்லிவிடுகிறேன். அவரை இந்த வாரவிடுமுறையில் சந்திப்பேன்:)

    ஆமாம். மொழிப் பிரயோகம் குறித்து அதீத கவனத்தோடிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் பெரும்பாலும் ஆண்மொழியாக இருக்கக் காண்கிறேன். பல சொற்களுக்கு பெண்பால் இல்லை. அல்லது பிரயோகத்தில் இல்லை. மேலும் அப்படியே வாசித்துப் பழகிய காரணத்தால் நமது எழுத்திலும் அது அவ்வித பாரபட்சத்துடனேயே வந்துவிடுகிறது. மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. அதேபோல விதவை போன்ற சொற்களுக்கு ஆண்பால் சொல் (தபுதாரன்)இல்லாதது போன்ற ஒரு தோற்றம். இதைப் பற்றி யாராவது எழுதுங்கள்.

    இல்லை.. உண்மையாகவே நீங்கள் எப்படிப் பதிவுலகுக்குள் வந்தீர்கள் என்பதை நீங்கள் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். பதிவுகளின் எண்ணிக்கைக்கும் 'வந்த கதை'க்கும் தொடர்பில்லை. எழுத்து தொடர்பான உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். உங்கள் எழுத்து குழந்தைகளின் மனவுலகுக்கு நெருக்கமாக இருப்பதைக் குறித்து எழுதுங்கள். 'மகாகவி' இசையையும் எழுதச் சொல்லுங்கள்.

    நன்றி ராஜா,

    நான் பிரதீபாவுக்கு நிச்சயமாக நன்றியைத் தெரிவித்துவிடுகிறேன். நான் வலைப்பூவில் இவ்வளவு சண்டை போடுகிறேனே...கண்டனத்தை யாரிடம் தெரிவிப்பது:)

    முத்துலட்சுமி,

    பேஸ் புக் அனுபவம் எப்படிப் போகிறது...? ஆமாம். வெளியில் சிலசமயம் சங்கடமாக இருக்கிறது. இணைய விவாதம் சிலசமயம் வெளியிலும் தொடர்கிறது.

    ReplyDelete
  8. வணக்கம் தமிழ்நதி,

    மத்தாப்பூ வார்த்தைகள்;
    அழகாகக் கோர்த்து இருக்கிறீர்கள்.

    பதிவுக்கேற்ப மிகவும் பொருத்தமான
    ஒரு படத்தைத் தேர்ந்து எடுக்கும்
    கதையை (கலை) யும்
    எழுதுங்கள்.

    எஸ். எஸ் ஜெயமோகன்

    ReplyDelete
  9. நேசமித்ரன்,

    நன்றி. செல்லப்பிள்ளைகளைச் சிலர் தரையில் கடாசிவிடுவதுமுண்டு:) உங்கள் வலைப்பக்கம் செல்ல ஏதோவொன்று விடுவதாயில்லை. operation aborted என்றொரு செய்தி வருகிறது. எனது கணினியில் கோளாறா தெரியவில்லை.

    ஜெயமோகன்,

    அந்தப் படங்களா? ம்... அது ஒன்றும் பெரிய விசயமில்லை. சரியான key word ஐக் கொடுத்து கூகுலாண்டவரிடம் கேட்டால் தந்துவிட்டுப் போகிறார். அவர்தான் எதையும் மறுப்பதில்லையே...:) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  10. முருகேஷ்Tuesday, September 15, 2009

    தமிழ்நதி, எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வலைப்பூ பார்க்கிறேன். முன்பொருமுறை பூனை படத்தை எடுத்ததற்கு நான் அனானியாக பின்னூட்டமிட்டு அறிமுகமானேன். உங்கள் கோபமும், வேகமும் கனடாவிலும் குறையாமல் இருக்க வேண்டுகிறேன். மனவுளைச்சல்கள் இல்லாமல் இருப்பது பெரிய வரம். உங்களுக்கு அது தொடர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பதிவெழுத வந்த கதை கூட பதிவுகளைப் போல சுவாரசியமாகத் தான் உள்ளது. உங்களை வலைப் பதிய அழைத்தவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துவிடுங்கள்.

    ReplyDelete
  12. //எனக்கு வரும் அனானி அஞ்சல்களிலிருந்து அகராதிகளில் இல்லாத கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். என்றைக்காவது தேவைப்படும். //

    வாய் விட்டுச் சிரித்தேன்! What an attitude??!!
    :-))

    //“நீங்கள் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை… எவ்வளவு பேர் உங்களில் பிரியமாயிருக்கிறார்கள்”என்று. //

    அந்த ”எவ்வளவு பேரில்” என்னையும் சேர்த்துக் கொள்ளவும்!

    அழைப்புக்கு நன்றி தோழி. ஆனால் நீங்கள் யூகித்தது போல் நான் ஏற்கனவே எழுதி விட்டேன்.
    http://deepaneha.blogspot.com/2009/09/blog-post_08.html

    ReplyDelete
  13. அன்புமிக்க தமிழ்,
    இளவேனிலை போலவே இதமானவை
    உங்கள் எழுத்துக்கள்!
    தொடர்ந்து நிறைய எழுதுங்க!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பாண்டியன்Wednesday, September 16, 2009

    அக்கா! நீங்கள் ஏன் தமிழ் திரைபட பாடல்கள் எழுத கூடாது! எல்லோரும் நாக்கு முக்க நாக்கு முக்க என எழுதிகொண்டிருக்கும் போது,,, கண்கள் இரண்டும் உன் கண்கள் இரண்டும்.. ஒன்றா இரண்டா என கவிஞர் தாமரை போன்று உங்களால் கவிதைகள் எழுதமுடியும் அது என்னவோ அனு பல்லவி சரணம் என்பதை மற்றும் கற்று கொண்டால் போதுமானது... கூடவே வைரமுத்து போல் நிகழ்கால உண்மைகள் ,இயற்கைகளை உவமைகளை சேர்த்து கொள்ளுங்கள் விரல் படாத ரோசா அது பூமி தொடாத பிள்ளையின் பாதம் என ... கூடிய விரைவில் உங்கள் பாடல்களை திரை இசையில் கேட்டும் ஆசையுடன் பாண்டியன்

    ReplyDelete
  15. வெளிநாடுகளிலிருந்து நிறையப்பேர் திரும்பிவந்திருந்தார்கள். ஆம்… அவர்களால் (எங்களால்) நிலங்கள் விலையேறின. வீடுகள் உப்பரிகைகளோடு உயர்ந்தன. அதுவொரு கனாக்காலம். நாங்கள் மகிழ்ச்சியோடு அந்நாட்களில் அங்கு வாழ்ந்திருந்தோம் என்பதை ஞாபகங்கொள்கிறேன். அந்த அழகிய கிராமத்தில் எங்கள் வீடு அன்பின் கூடு.
    Meendum oru nalla nilai angu varum.
    Anbudan
    K.P.Suresh

    ReplyDelete
  16. ம் எழுதியாச்சா :)

    \\இளவேனில்’என்ற சொல் எனக்கு எப்போதும் பிடிக்கும். அது மலர்களின் வாசனையை, இலைகளின் பசுமையை, தென்றலின் பாரபட்சமற்ற நேசத்தை நினைவூட்டுவது. மேலும், அந்தப் பெயரில் எனக்குள் நிறைவேறிய கனவொன்றும், உதிர்ந்துபோன கனவொன்றும் இருக்கின்றன. \\

    இளவேனில் என்ற இயற்பேரில் எனக்கொரு தோழியிருந்தாள். தற்போது தொடர்பில்லை. அண்மையில் வாகைத்தென்றல் என்றொரு பெயர் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  17. இந்தப் பதிவை ரசித்துப் படித்து பல நாட்களாகி விட்டன. தொடரில் நானும் ஆயிரம் பூக்கள் மரட்டும் என பங்கு பெற்று விட்டேன். நன்றி.

    ReplyDelete
  18. (உயிர்ப்பயத்திலிருந்து தப்பித்து அந்நியத்தினுள் விழுந்தோம்। சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. ஒரு நண்பர்தானும் இல்லை. உறவினர்களும் இல்லை. எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் ஏங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு புன்னகைதானும் இல்லை. சென்னையில் நாங்கள் அநாதைகளாக, அடையாளமற்றவர்களாக வாழ்ந்தோம். நினைக்குந்தோறும் துயரம் பெருக்கும் நாட்கள் அவை. தன்னிரக்கத்தில் கரையவைக்கும் ஞாபகங்கள் அவை.)

    புதிதாய் வருவோரை இந்த நகரம் என்றுமே ஒரு கேலி புன்னகையுடன் தனிமைபடுத்தி தான் பார்க்கிறது. அது ஏற்கெனவே காயப்பட்ட மனதை துவள செய்து விடுகிறது.

    ReplyDelete