இருண்ட கர்ப்பக்கிரகங்களுள் இருள்நிறத்திலான பெண் தெய்வங்கள் கருணைபொலிய, பொழிய காலகாலமாக அமர்ந்திருக்கிறார்கள். ‘ஆணும் பெண்ணும் சகவுயிர்கள்’ என்று, கைதட்டலைக் கறக்கும்விதமாக குரலுயர்த்தி மேடைகளில் முழங்கும்போது, பார்வையாளர்கள் பழக்கம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கைதட்டுகிறார்கள். பட்டிமன்றங்களோவெனில் ‘பெண்களே குடும்பத்தைக் கட்டிக்காக்கிறார்கள்’என்ற பெருந்தன்மைத் தீர்ப்பளித்து நிறைவுறுகின்றன. ‘இட ஒதுக்கீடு’ இன்னபிற சொற்கள் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி புழங்கிக்கொண்டே இருக்கின்றன.இருந்தபோதிலும் பெண்கள் இன்னமும் இரண்டாம் பாலினமாக நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
பெண்ணாகப் பிறந்ததை ஒரு துருப்புச்சீட்டாக, பிழைப்பின் கருவியாக, ஏமாற்றும் தொழிலின் மூலதனமாகப் பயன்படுத்தும் ஒரு சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது அந்தந்த நபர்களின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்ததாகும். அத்தகையோர் ஆணாகப் பிறந்திருந்தாலும் அவ்விதமே நடந்துகொண்டிருப்பர். சமுதாயத்தின் பாரபட்சங்களால், அடக்குமுறைகளால், ஓரவஞ்சனையால், ஒழுக்கவிதிகளால் உண்மையிலும் உண்மையாக பாதிக்கப்பட்ட-பாதிக்கப்பட்டுவரும் பெருவாரியான பெண்களைக் குறிக்கவே ‘பெண்’என்ற சொல் இந்தப் பத்தியில் பிரயோகிக்கப்படுகிறது.
சொத்துரிமையைக் கையகப்படுத்த விரும்பிய ஆண்களால், தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, பிறந்த குடும்ப அமைப்பிலிருந்து பெண்ணின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. குடும்பம் ‘அருளிய’ தாய், மனைவி என்ற தெய்வீகப் பீடங்களில் புளகாங்கிதத்தோடு அமர்ந்து சுயத்தினை இழந்துபோன பெண்களின் வரலாறு பரிதாபகரமானது. அவ்வாறான அடிமைச்சுகவாசிகளது மனதின் அடியாழத்துள்ளும் விடுதலைக்கான வேட்கை நிலத்தடி நீராக இருக்கக்கூடும். பழக்கப்பட்ட கூண்டுச்சுகம் விரும்பும் கிளிகளுக்கு வானம் சிறகெட்டாத தூரமே. ஆனால், ‘நானும் நீயும் ஒன்றாகவே படைக்கப்பட்டோம்… உனக்குரியவை அனைத்தும் எனக்குரியவையே’என்று பேசப் புறப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணற்றவை.
ஒரு குடும்பத்தில் வளரும் பெண்பிள்ளை மனைவி, தாய் எனும் உருமாற்றங்களுக்குத் தயார்ப்படுத்தப்படுகிறாள். சிமொன் தி பொவார் சொன்னதுபோல, “பெண்கள் பிறப்பதில்லை… அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்” ஆனால், ஆண்பிள்ளை திருமணத்தின் முன்னும் பின்னும் ‘ஆணாக’வே நிலைத்திருக்கிறான்.குடும்பம், கலாச்சாரம், மதம் போன்ற கிடுக்கிப்பிடிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு பொதுவெளிக்கு வரும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் விசித்திரமானவை.கலாச்சாரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மிகச் சாதாரணமாக ஒரு பெண்ணைக் குற்றஞ்சாட்டமுடிகிறது. அவளுடைய நடத்தையை, உடையை, சிந்தனையை, எழுத்தை, பேச்சை கேள்விகேட்க முடிகிறது. ‘நீ இந்தச் சமுதாயத்திற்குரிய பெண்ணல்ல’என்று ஒதுக்கிவைப்பதன் வழியாக, மனவுளைச்சலையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தி, அவளுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வைக்கவும் முடிந்திருக்கிறது. பெண் கவிஞர்கள்‘ஆபாசமான சொற்களைப் பிரயோகித்து ஆபாசமான கவிதைகளை எழுதுகிறார்கள்’என்றொரு குற்றச்சாட்டை, அதன் ஆழம் புரியாமல் போகிறபோக்கில் பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ‘கவிதை ஒன்றை எழுதிவிட்டு ஆங்காங்கே சில கெட்டவார்த்தைகளைச் செருகிவிடுவார்களாயிருக்கும்’என்று அண்மையில் ஒருவர் சலித்துக்கொண்டார். வார்த்தைகளுள் கெட்ட வார்த்தை எது? நல்ல வார்த்தை எது? கெட்ட வார்த்தைக்கான வரைவிலக்கணந்தான் என்ன? என்ற கேள்விகளைப் பற்றி இன்னொரு நாள் பேசலாம். (அப்படியொருநாள் வரவே போவதில்லை என்பதே உண்மை) தன்னுடைய உடலை, உணர்வுகளை, தன்னுடைய படைப்புகளில் வெளிக்கொணர ‘அவளே’தகுதியுடையவள் என்பதை இப்படிப் பேசுகிறவர்கள் உணர்வதில்லை. ஒரு படைப்பின் கருவாக்கமும் உருவாக்கமும் எவர் மனதில் நிகழ்கிறதோ அவரே சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். ‘ஆகச்சிறந்த படைப்பாளி’ என்று வியக்கப்படுகிற கடவுளுக்கு (அப்படி ஒருவர் இருந்தால் - ஒருத்தி என்று சொல்வது வழக்கமில்லையே…) மயிலையும் -காட்டெருமையையும், மலரையும் - முள்ளையும் படைக்க முடியுமெனில், ‘அவளுக்கு’ மட்டும் அவ்வுரிமை கிடையாதா? வலிந்து திணித்தலற்று இயல்பாக முகிழ்த்து வருகின்ற படைப்பினுள் கெட்டவார்த்தை என்று சமூகத்தினால் சுட்டப்படுகிற ஒன்று இருக்குமாயின், அது கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அன்று.
ஆறாத காயத்தைப் பிரித்துப்பார்க்கும்போது அதிலிருந்து குருதி கொப்பளித்துப் பாய்வதுபோல, இதுநாள்வரை கிடைக்காத சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலங்காலமாக அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகள் எழுத்தாக, பேச்சாகப் பீறிடுகின்றன। பாசாங்கற்ற கண்ணீர்,கோபம்,காமம் தன்னியல்போடு எழுத்தில் வெளிப்படும்போது, அது கவனிக்கப்படுகிறது. மாற்றாக, சில தன்துருத்திகளும் விளம்பரமோகிகளும் அதை மடைமாற்றி, பொதுவெளியில் இயங்குகிற அத்தனை பெண்கள்மீதான வெறுப்பாகத் திசைதிருப்பிவிடுவது துர்ப்பாக்கியமானது.
‘சில பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள்; இப்படியான எழுத்துக்கள் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன’ என்று கூச்சலிடுபவர்களிடம் கேட்பதற்கென்று ஒரு கேள்வியுண்டு. நீங்கள் சொல்கிற சமுதாயம் உண்மையில் நீங்கள் சொல்கிற ஒழுக்க விழுமியங்களோடு இயங்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் நெஞ்சறிய நம்புகிறீர்களா? அவ்வாறெனில் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தில் பரவியிருக்கக் காரணந்தான் என்ன?
‘முலைகள்’என்ற தலைப்பை ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சூட்டிய காரணத்தால் அளவிறந்த விமர்சனங்களுக்கு ஆளானவர் கவிஞர் குட்டி ரேவதி। அதே தலைப்பை ஒரு ஆண் சூட்டியிருந்தால் இத்தனை சர்ச்சைகள், இருட்டடிப்பு, ஓரங்கட்டல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கும் பல கவிஞர்களின் (ஆண்) கவிதைகளிலும் கதைகளிலும் பல ‘யோனிகள்’வருகின்றன. பல நூறு ‘முலைகள்’இடம்பெறுகின்றன. கலவிக் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. அண்மையில் வா.மு.கோமுவின் புத்தகம் ஒன்றைக் குறித்து உயிர்மை வெளியீட்டு விழாவில் விமர்சித்துப் பேசிய எழுத்தாளர் முருகேச பாண்டியன் “இதைப் படித்தபோது இங்கேயுள்ள பெண்களில் பலர் பாவாடை நாடாவைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதான சித்திரம் தோன்றிமறைந்தது”என்றார். ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’என்ற நாவலை ஒரு பெண் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டபோது, சமூகத்தின் பாரபட்சம் சீற்றமளிப்பதாக இருந்தது.
பெண்களைப் பற்றி அவதூறு பேசுவது என்பது தமது பிறப்புரிமைகளுள் முக்கியமானதொன்று எனச் சில ஆண்கள் (குறித்துக்கொள்ளவும் சில ஆண்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இவள் ‘சீதை’எனவும், இவள் ‘பரத்தை’எனவும் முத்திரை குத்தவும் தாங்கள் உரித்துடையவர்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கிறது. ஒருவனின் உதடுகளால் வேசியென முன்மொழியப்படுமொரு பெண், அவளைத் தொடரும் கலாச்சாரக் கண்களனைத்தாலும் வேசியாகவே வழிமொழியப்படுகிறாள். அவர்களது கீழ்மனம் விதம்விதமான கற்பனைச்சரடுகளை இழுத்துவிட்டுக்கொண்டேயிருக்கிறது. ‘விடுதியில் அழகிகள் கைது’என்று மொண்ணையாகச் செய்தி வெளியிடுகிற ஊடகங்களுக்கும், ‘அவள் ஒரு தேவடியாள்’என்று, கூடிக் குடித்துவிட்டுப் பேசுகிற ஆண்களுக்கும் வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. விபச்சாரம் என்பது ஒரு பெண்ணால் தனியாக நிகழ்த்தப்படுவதில்லை. அப்படியானால், அங்கே அந்தப் பெண்களோடு கலவியிருந்த ‘அழகன்கள்’செய்திகளிலிருந்து மறைந்துபோவது எப்படி? பொதுப்புத்தி சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற சாதாரண சமூகத்தினரைக் காட்டிலும், இலக்கியமும் தத்துவமும் இன்னபிறவும் படித்து அறிவுஜீவிகள் என்று தம்மை அறிவித்துக்கொண்டிருக்கும் சிலர் அவதூறுகளைப் பரப்புவதன் வழியாக அதிகப்பட்ச வன்முறையைப் பெண்கள்மீது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளைச் செவியுறும்போது மனசு துணுக்குறுகிறது. உறுதியும் தெளிவுமற்ற பெண்களை அத்தகைய அவதூறுகள் மீண்டும் வீட்டுக்குள் விரட்டிப் புண்ணியம் கட்டிக்கொள்கின்றன.
பெண்ணை, குடும்ப அமைப்பு தாயும் மனைவியுமாக்கி முடக்குகிறது.கலாச்சாரம் பதிவிரதையாக்கிப் பதுக்குகிறது. இலக்கியம் கண்ணகி என்கிறது. கணவன் பிறபெண்ணுடன் கலவி முடித்துத் திரும்பிவரும்போது அவனது கால்களைக் கழுவி ஏற்றுக்கொள் எனக் கற்பிக்கிறது. இதிகாசம் சீதையாக்குகிறது. கணவன் கீறிய கோட்டைத் தாண்டினால் ‘ஐயோ ஐயோ என்று போவாய்’ என்கிறது. செவியுறும், வாசிக்கும், பார்க்கும், அனுபவிக்கும் எல்லாமும் மனிதனின் ஆறறிவைச் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. பாரபட்சங்களும் தளைகளும் நிறைந்த இந்தக் குடும்ப அமைப்பின், சமூகத்தின் அடிப்படைப் பிறழ்வுகள் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பக் கற்றுக்கொள்வோம். அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகளிலாவது நமது ஆறாவது அறிவு ஓரவஞ்சனைகளற்று இயங்கவாரம்பிக்குமென பிரார்த்திப்போமாக!
நன்றி: அம்ருதா
Read such articles from many pens. It is from your pen. That is the only difference.
ReplyDeleteதமிழ்நதி,
ReplyDeleteஉங்கள் எழுத்தை சிறிதுகாலமாகவே உங்கள் தளத்தில் படித்து வருகிறேன். ஆரம்பத்தில், உங்கள் எழுத்தால் கவரப்பட்டு, இப்படி கூட எழுத முடியுமா என்று வியந்திருக்கிறேன். அப்படி வாய் பிளந்ததில் நீங்கள் சொல்ல வந்த கருத்துகளை கவனிக்காமல் தவறவிட்டேன். இப்போது தான் உங்கள் எழுத்து நடையோடு சொல்லப்படும் கருத்தையும் அறியும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். ஓர் ஈழத்தமிழராய் தமிழ்நாட்டு பத்திரிகைகளில் உங்களின் திறமை அடையாளம் காணப்பட்டதில் எனக்கும் பெருமையே. வாழ்த்துக்கள்.
இன்று நான் இந்த பதில் எழுத விளைந்ததின் காரணம், இது பெண்கள் பற்றிய பதிவு என்பதால். சில கவிதைகளில் மனித உடற்கூற்றின் குறிகளை குறியீடாக்கி சமூக அவலத்தை சொல்ல விளைகிறார்கள். இதை படிக்கும் எத்தனை பேரால் அந்த குறியீடுகளினால் விளக்கப்படும் கருத்தை, அவலத்தை நெட்டுருப்போட்டு பார்க்க முடிகிறது? சிலர் அந்த வார்த்தை பிரயோகங்களில் ஏதோ பாலுணர்வின் கிளுகிளுப்பை உணர்வது போல் பதில் எழுதுகிறார்கள். அப்படி கிளுகிளுப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே! ஆக, அங்கேயும் பெண்மை, அதன் குறியீடும் நுகர்வுப் பொருளாகிறது. ஏன் இப்படி? பாமரனுக்கும் புரியும் படி தெளிவான வார்த்தைகளில் கவிதை எழுதலாமே என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. தங்கள் மேதாவித்தனத்தை பறைசாற்ற மட்டுமே இப்படி எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்.
மற்றப்படி, நான் பள்ளிக்கூடத்தில் கம்பராமாயணம் படித்த காலங்களிலிருந்து கம்பர் சீதையை, அவரின் அங்கங்களை, அதன் லாவண்யங்களை அணுவணுவாய் வர்ணித்ததை என் தமிழ் ஆசிரியர் (ஆண்) சப்புகொட்டி கற்பித்த காலங்களிலிருந்து எனக்குள் இது ஓர் வெறுப்பாய் படிந்துபோய்விட்டது. பெண்ணையும் நுகர் பொருளாய் பார்க்கும் "நுகர்வு கலாச்சாரம்" மாறும் வரை, பெண்கள் தங்களையும் அறியாமலே மகள், தாய், மனைவி (அதோடுதான் பெண்களுக்கு எல்லாம் முடிந்துவிடுகிறதே) என்ற வேஷங்களை எப்படி திறமையாய் ஒப்பேற்றுவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி தேவையற்ற விட்டுக்கொடுப்புகளை செய்யும் வரை...ம்ஹீம் .... பெண்களுக்கு விடிவில்லை. உங்களைப் போன்ற பெண்களின் எழுத்துகள் அவர்களின் விடிவிற்கு விளக்கேற்றினால் சந்தோசமே.
சமூகம் என்கிற அமைப்பு, குடும்பம் என்கிற ரத்தமும் சதையுமான அமைப்பால் கட்டப்படுகிறது.
ReplyDeleteஇவ்விரண்டு அமைப்புகளையும் கட்டுவது முழுக்க முழுக்க பெண்களைச் சார்ந்தே இருக்கிறது. ஆண்கள் அதனால் பெண்களைப் பற்றி புரணி பேசுவதும் தொடர்கிறது.
இங்கே விடுதலை, சுதந்திரம் என்பது ஆண் அனுபவிக்கும் 'கட்டற்ற' சுதந்திரம் என்பதாய் நம் மனத்தில் பதிந்து போயிருக்கிறது. ஏன் எல்லா பெண்ணியம் பேசுபவர்களின் மனத்திலும் இதுதான் பிம்பம்.
அந்த சுதந்திரம் நோக்கி பெண்களை நகர்த்துவதில் தற்கால முற்போக்கு சிந்தனைகள் நகர்கின்றன. பெண்கள் உண்மையில் அப்படிச் சுதந்திரத்தை அடையும் போது குடும்பம் இல்லாது போகும். குடும்பம் அழிந்து அல்லது நசிந்து போகும்போது சமூகம் யந்திரகதியாக மாறும், பரஸ்பர நம்பிக்கைகள் இல்லாத மனிதர்கள் கொண்ட உலகாக மாறும். இன்னும் ஆணும் பெண்ணும் தங்களிடையேயான ஈகோக்களின் போரை அப்போது வெளிப்படையாக நடத்துவார்கள். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஒரு பொருட்டாக தோன்றாமல் போகும்.
போகட்டுமே. நம் கவலை என்ன என்கிறீர்களா ? அதுவும் சரிதான்.
எப்போதும் வந்து வாசித்துக் கருத்தும் சொல்லிப்போகும் தனராஜ்க்கு நன்றி.
ReplyDeleteஎழுதியது எழுதக்கூடாதென்றே நினைக்கிறேன். (எழுதப்படாததென்று ஒன்றுமில்லை என்பதும் உண்மைதான்) ஆனால், சிலசமயம் தனிப்பட்ட முறையில் நாமே பாதிக்கப்படும்போது, அந்தக் கோபத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும் சொல்லுங்கள். அண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எப்போதும் எழுத்தே வடிகால்.
நன்றி ரதி
உங்கள் எழுத்துக்களை வினவு தளத்தில் வாசித்திருக்கிறேன். மீண்டும் படித்துறையில் சகதி படிந்தபோது படிக்கநேர்ந்தது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொள்ளவும், நமக்காக நாமே வாதாடவும் கூச்சப்படும் சமயங்களில் இப்படி யாராவது கைகொடுப்பது உண்மையில் பெரிய ஆசுவாசம். ஆழ்மனதிலிருந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
பெண்ணுறுப்புகளையோ காமத்தையோ கட்டாயம் எழுத்தில் புகுத்தவேண்டுமென்று நான் கூறவில்லை. அது இயல்பாக வருமிடத்தில் அதை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் சரியென்று சொல்ல விழைந்தேன். மேலும், காமத்தைப் பெண் எழுதினால் குற்றம்; அதையே ஆண் எழுதினால் குற்றமில்லை என்ற பாரபட்ச மனோபாவத்தின் மேலெழுந்த வெறுப்பேயன்றி வேறில்லை.
பெண்மை நுகர்வுப்பொருளாவதில் எனக்கும் கோபமுண்டு. குறிப்பாக விளம்பரங்களில் பெண்களைப் பிரயோகிக்கும் அபத்தங்களில் எரிச்சல் ஏற்படுவதுண்டு. ஆனால், தன்னுணர்வைத் தனது மொழியில் வெளிப்படையாகச் சொல்ல, எழுத அவளுக்கு எந்த நிர்ப்பந்தங்களும் இருக்கக்கூடாதென்று நினைக்கிறேன்.
அவ்வகை எழுத்துக்களை கிளுகிளுத்துப் படிப்பவர்களின் ரசனை மட்டம்தான் இங்கு பிரச்சனை. திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்காட்படும் காட்சிகள் கடைசி அந்தம்வரை நீளாதா என்று சப்புக்கொட்டிக் காத்திருப்பவர்கள்கூட உண்டுதானே...? அதற்குக் காரணம் கலாச்சார விடயத்தில் விளக்குமாற்றோடு நிற்கும் சமூகந்தான். மீண்டும் மீண்டும் தொடங்கிய இடங்களுக்கே செல்கிறோம்.
அன்புள்ள அம்பேதன்,(கூப்பிட எவ்வளவு இலகுவாக இருக்கிறது பாருங்கள்:)
"அந்த சுதந்திரம் நோக்கி பெண்களை நகர்த்துவதில் தற்கால முற்போக்கு சிந்தனைகள் நகர்கின்றன."என்று சொல்லியிருந்தீர்கள். பெண்விடுதலை என்பது பெண்ணுக்கு ஈடாக ஆணுடைய பொறுப்பாகவும் இருக்கிறது. 'முற்போக்கு சிந்தனைகள்'பெண் மனதில் மட்டுமல்லாது ஆண் மனதிலும் நிகழாதவரையில் விடுதலை என்பது சாத்தியமில்லை.
"பெண்கள் உண்மையில் அப்படிச் சுதந்திரத்தை அடையும் போது குடும்பம் இல்லாது போகும். குடும்பம் அழிந்து அல்லது நசிந்து போகும்போது சமூகம் யந்திரகதியாக மாறும், பரஸ்பர நம்பிக்கைகள் இல்லாத மனிதர்கள் கொண்ட உலகாக மாறும்."
குடும்பம் என்ற அமைப்பு அன்பாலும் பின்னப்பட்டது என்பதை நான் அறியாது இருக்கவில்லை. அது அழிந்துபோகவேண்டுமென்று உண்மையில் நான் விரும்பவில்லை. ஆனால், அது மிக வெளிப்படையான பாரபட்சங்களையும் தளைகளை கொண்டியங்குவதும், அதுவே நீதியென வழங்கிவருவதும் அதை மறுதலிக்கச் சொல்கிறது. ஈழத்தில் நடந்த - நடக்கும் போரை யார் விரும்பினார்கள்? மரணத்தை யார் நேசித்தார்கள்? போர் திணிக்கப்பட்டது. அது போலவே குடும்பம் என்பது நிர்மூலமாகிப்போகட்டும் என்று நான் சொல்லவில்லை. அதன் பாரபட்சங்களை மாற்றுங்கள். இல்லையெனில், நாளடைவில் அதுவே அழிந்துபடும் என்கிறேன்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போகுமென்கிறீர்களா? இல்லை அம்பேதன்... உலகம் எதனால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறீர்கள். அந்த ஈர்ப்பு இல்லையேல் இது பாழுலகுதான். காதல் என்ற உயர்வுநவிற்சி வார்த்தை வேண்டுமானால் அடிபட்டுப் போகும். காமமும்,சகபால் ஈர்ப்பும் முடிவிலிகள் அல்லவா?
ஒரு பெண் தனது எழுத்துக்களில் பயன்படுத்தும் சொற்கள் ஏன் எதற்காக எப்படி என்று நோக்கும் போது சில அவசியமாகவும் சில அடயாளத்தேடலாகவும் சில அபத்தமாகவும் இருக்கின்றது. இவற்றை அதனதன் நோக்கத்தின் பொருட்டு ஆதரிப்பதும் விமர்சிப்பதும் தவறில்லை. சொல்லாடல்களுக்கான ஆணின் பார்வை என்பதும் இங்கே பிரதானமானது ஏனெனில் ஆதிக்கம் நிறைந்த பார்வைக்கு எல்லாச் சொல்லாடல்களும் வர்த்தைகளும் வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. லீனா மணிமேகலை மற்றும் தில்லை போன்றவர்களின் சில சொல்லாடல்களில் நேர்மை தவறுகின்றதை நான் உணர்கின்றேன். அதை பின்னூட்டமாக எழுதியும் இருக்கின்றேன். அதே நேரம் பல இடங்களில் இவ்வாறான சொல்லாடல்களின் உணர்வை ஏற்றுக்கொண்டும் இருக்கின்றேன்.
ReplyDeleteமிக சிக்கலான சமூக அமைப்பைக் கொண்ட இடத்தில் சிலர் எழுதும் அபத்தம் அல்லது அடயாளத்தேடல் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாட்டையும் சேர்த்து அடித்துச் செல்கின்றது. அதை அனுமதிக்க முடியாது.
பெண்விடுதலை சிலர் ஆணிடம் இருந்து மட்டும் என்ற குறுகிய வட்டத்துள் நின்று சன்னதம் ஆடுகின்றனர். இலங்கையின் இனவாதப்போரை ஆண்களின் போராக சித்தரிக்கின்றனர். உலகின் மதவாத பொருளாதரா நலன் சார்ந்த அனைத்து அதிகார நடைமுறைகளையும் ஆண் சார்ந்து அணுகும் நிலைப்பட்டுடன் சிலர் குறி யேனி என்ற சொல்லாடல்களை தமது கருத்துக்கு வலுச்சேர்க்க எழுதியிருக்கின்றனர். இப்படியான அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகின்றது.
நல்லவொரு கட்டுரை தமிழ்நதி.
ReplyDeleteவீரியமான வாள் வீச்சு
ReplyDeleteவளையல் சத்தத்துடன்...
++
சீர் அதிகம் கொடுத்து திருமணம்
செய்து வைக்கும் பெற்றோர்கள்
தங்களின் சொந்த மகளிடமே
" சொத்தில் பங்கு கேட்க மாட்டேன் "
என்று எழுதி வாங்கும் பெற்றோர்கள் / சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த அவலத்தை, ஒரு குடும்பத்தில்
நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
அப்போது அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?!
உணர்வார்களா ??
தமிழ்நதி நல்லதொரு பதிவு. அருவருக்கத்தக்க வகையில் யார் எழுதினாலும் கண்டிக்க தக்கதே. அது ஆண் எழுதினால் யாரும் ஒன்றும் சொல்வதில்லை என்ற உங்கள் ஆதங்கம் விசித்திரமாக இருக்கின்றது. ஆண்கள் எழுதவில்லையா அதனால் பெண்களும் எழுதலாம் என்று வாதாடுவதும் சரியா என்று எனக்கு தெரியவில்லை.
ReplyDeleteDear friends,
ReplyDeleteI will return on 21st and talk to you. please wait.
எனது முதல் பின்னூட்ட்ம் நிராகரிப்பட்டதன் காரணம் விளங்கவில்லை.
ReplyDeleteநான் மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான்..
"மொழியும் உணர்வும் இருபாலினற்கும் பொது".
மற்ற துணைக்கண்ட மொழிகள் போல வாக்கிய அமைப்பை/முடிதலை வைத்து பாலினம் பிரித்தறிய இயலாத[எழுதியது ஆணா அல்லது பெண்ணா என்று ]மொழி நமது.அது நம் தமிழுக்கே உரிய சிறப்பு.நம் தாய் மொழியே பாலினப் பகுப்பிற்கு இடம் கொடுக்காத போது எழுதும் நாம் ஏன் ?
தமிழ்நதி,
ReplyDeleteஉங்கள் கருத்து என்னை எழுதத்தூண்டியுள்ளது. முதலில் தற்காலத்தில், காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலைஇதழ்களில்(?) வரும் வா.மு.கோமு, செந்தில் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகள், நாவல்களை யாருக்காக இப்படி எழுதுகிறார்கள்? சமுகத்திற்கு இவர்கள் சொல்ல விரும்புவது என்ன? சுஜாதா இவர்கள் போன்றவர்களின் எழுத்துக்களை செத்த எலிகளைப்போல அருவருப்புடன் பார்த்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். எனக்கும் அதே நிலைதான். அதே அருவருப்பு. குறத்தி முடுக்கு எழுதிய நாகராஜனின் தொண்டரடிப்பொடிகள் இவர்கள். மனிதவாழ்வின் உயர்ந்தகணங்களின் ஒருதுளியையாவது இவர்களின் ஒரு வரி சொல்லியிருக்குமா?
இந்த வக்கிரங்களுக்கு களம் அமைத்துக்கொடுத்து, மேன்ஷன்கள் பிரித்துக்கொடுக்கும் சஞ்சிகைகள்..தூ..
அருவருக்கத் தக்கவகையில் எழுதுபவர்கள் யாரானாலும் கண்டிக்கத்தக்கதே.நீங்கள் சொல்வது மிகச் சரி தமிழ்நதி.எங்கும் எதிலும் பேதம் பிரித்தே பழக்கப்பட்டுப் போன மனது வாசிப்பிலும் அப்படியே தான்,ஒரு ஆண் எழுத்தாளருக்கு தான் எழுத நினைக்கும் விசயங்களை வெளிப்படுத்துவதில் இருக்கும் கட்டற்ற சுதந்திரம் அதே விஷயத்தை பெண் எழுத்தாளர்கள் எழுத வருகையில் பலமான யோசனைகளின் பின்னும் கடுமையான விமர்சனங்களின் பின்னும் அவர்களை பின்னடைய வைத்து விடுகிறது.இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல.ஆனாலும் இந்த பேதம் வரக் காரணம் ஆண்கள் மட்டும் அல்ல...பெரும்பாலும் பெண்களாலும் தான்,பெண் எழுதக் கூடாத விஷயங்கள் என்று எதுவும் இருக்கிறதா?
ReplyDeleteவிமர்சனங்களை எதிர்கொண்டு மீளும் மன வலிமை இருப்பவர்கள் குட்டிரேவதி போல ,தமிழ்நதியைப் போல எழுத விரும்பியதை எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.என்ன செய்ய இயலும்! அடையாளமற்ற இடங்களில் இருந்து வந்து விழும் எதிர்பாரா துவேஷங்களால் வந்து சேரும் அந்த நேர மன அழுத்தங்களை ரப்பர் கொண்டு சுவடற்று அழித்து விட முடிந்தால் நன்றாய் இருக்கும்!கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இங்கே எழுத்தைக் காட்டிலும் எழுதுபவர்களின் பெர்சனல் தான் அதிகமும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
\\எழுதியது எழுதக்கூடாதென்றே நினைக்கிறேன். (எழுதப்படாததென்று ஒன்றுமில்லை என்பதும் உண்மைதான்) ஆனால், சிலசமயம் தனிப்பட்ட முறையில் நாமே பாதிக்கப்படும்போது, அந்தக் கோபத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும் சொல்லுங்கள். அண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எப்போதும் எழுத்தே வடிகால். //
ReplyDeleteபல நூறு ஆயிரம் முறை எழுதப்பட்டாலும் நிலை அப்படியே இருக்கே. :(
முதலில் இந்த இடுகைக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டத்தை இடுவதற்கு மன்னிக்கவும். விருப்பமில்லாவிடில் வெளியிடவும் வேண்டாம்.
ReplyDeleteதகுதியே இல்லாதவர் எழுதிய அவதூறுகளுக்கு நேரத்தை விரயம் செய்து நீங்கள் பதிலளித்துள்ளது வருத்தமளிக்கிறது. முதலில் செய்த சிறு நிராகரிப்பே
போதுமானது. விளம்பரம் தேடுவது தான் அவரது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் அதை நல்ல முறையிலேயே செய்திருக்கலாம். உங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி விட்டது தான் எரிச்சலூட்டுகிறது.
மனசாட்சியின் குரலாகவே ஒலிக்கின்றன உங்கள் எழுத்துக்கள்.
ReplyDeleteஅதுவும் "அடிமைச்சுகவாசிகள்"
என்ற வார்த்தைப் பயன்பாடு ரொம்பவும் பாதிக்கிறது.
//பெண்கள் பிறப்பதில்லை… அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்” ஆனால், ஆண்பிள்ளை திருமணத்தின் முன்னும் பின்னும் ‘ஆணாக’வே நிலைத்திருக்கிறான்//
// ‘நானும் நீயும் ஒன்றாகவே படைக்கப்பட்டோம்… உனக்குரியவை அனைத்தும் எனக்குரியவையே’என்று பேசப் புறப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணற்றவை. //
புரிகிறது. உண்மையில் குடும்பம் உருவாக்கி வைத்திருக்கும் அர்த்தமற்ற கட்டுக்களை மீறுவதற்கும் சுயம் விரும்பும் அந்த வேட்கைக்காகப் போராடுவதற்கும் மிகப்பெரிய பலமும் தீர்க்கமும் வேண்டும்.
//பாரபட்சங்களும் தளைகளும் நிறைந்த இந்தக் குடும்ப அமைப்பின், சமூகத்தின் அடிப்படைப் பிறழ்வுகள் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பக் கற்றுக்கொள்வோம்.//
நிச்சயமாக!
முழுக்க உடன்படுகிறேன். நியாயமான இடுகை.
ReplyDelete