மரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.
11.26.2010
ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்
அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்கத்துக்குள் இறுக்கிப்பிடித்திருந்த புத்தகங்களை மேசைமீது ஓசையெழப் போட்டான். ‘புத்தகம் புனிதம்’என்ற எனது நம்பிக்கை கொஞ்சம் ஆடி நிமிர்ந்தது. “குவார்ட்டஸில புதுசா குடிவந்திருக்கிறது நீங்கள்தானே? எங்கடை வகுப்பெண்டு தெரியாமப் போச்சுது”என்று வெள்ளந்தியாய் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். மாடுகளும் அவனும் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்த காட்சி நினைவில் வர, நானும் சிரித்தபடி “ஓம்”என்றேன். சிதம்பரநாதனை மாடுகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அவன் கடைசி வாங்குப் பெடியங்களில் ஒருவன். படிப்பதில் ஆர்வமில்லை. தகப்பனாரின் நிர்ப்பந்தத்தினால் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியிருந்தான்.
‘மாட்டுக்கார வேலன்’என்று அவனை அவனது நண்பர்கள் அழைத்தார்கள். எப்போதாவது அவனது வீட்டைக் கடந்து செல்ல நேர்கையில் அவன் பட்டிக்குள் நின்று சாணம் அள்ளிக்கொண்டிருப்பதையோ மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருப்பதையோ காணமுடிந்தது.
குடியேற்றத் திட்டத்தில் உருவான அழகிய கிராமம் அது. வவுனியா மாவட்டத்தில் அமையப்பெற்றிருந்த பாவற்குளம் என்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பை அண்டிச் செழித்திருந்தது. விவசாயமே பிரதான பிழைப்பு. குளத்திலிருந்து புறப்படும் வாய்க்கால் ஊருக்குப் பின்புறமாக வீடுகளை அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள். கோடையில் உழுந்தும் பயறும் கொழித்துக் கிடந்த காணிகள். அங்கிருந்த காலங்களில் அதன் அழகை உணர்ந்தேனில்லை. ‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம். அதற்கு அங்கு கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒரு காரணம். “உங்களுக்கெல்லாம் படிப்பு மூளையில் இறங்காது. பேசாமல் மாடு மேய்க்கப் போங்கோவன்”என்று அடிக்கடி குத்திக்காட்டும் ஆசிரியை ஒருவர் எங்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் சிதம்பரநாதனில் பதிந்திருக்கும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவளும் ஓரளவு படிக்கக்கூடியவளுமாகிய என்னில் அந்த ஆசிரியைக்கு அதீத வாஞ்சை. அந்த வாஞ்சையின் பாரபட்ச பேதங்கள் பிரித்தறியத் தெரியாத வயதில் நான் இருந்தேன். பிரதேசவாதம் இன்னபிற சொற்கள் அண்மைக்காலத்தில் அறியப்பட்டவை.
“நேற்று நான் சொல்லிவிட்ட பாட்டுக்களை பாடமாக்கிக்கொண்டு வந்தனீங்களோ… வராத எல்லாரும் வகுப்புக்கு வெளியிலை போங்கோ”
என்ற குரலுக்கு விசுக்கென்று எழுந்து வெளியேறுகிற முதல் ஆள் சிதம்பரநாதனே. மனனம் செய்த காரணத்தால் வகுப்பில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்ட துர்ப்பாக்கியவாதிகளான எங்களைப்(பெரும்பாலும் மாணவிகள்) பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டே போவார்கள். பெடியங்களின் குதூகலக் குரல்கள் கலகலக்கும் ஒசையைக் கேட்டபடி எரிச்சலோடு நாங்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். ‘வெளியிலை போய் நிக்கிறதுக்காகவே பாடமாக்காமல் வந்திருப்பாங்கள்’ என்று நாங்கள் எங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வோம்.
அன்றொருநாள் வேறு விதமாக விடிந்தது. தங்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை உரத்துக் கூப்பிட்டவாறே வீதிகளில் அலைந்து திரிந்த தாய்மாரின் ஏங்கிய குரல்களைச் செவிமடுத்தபடி எழுந்திருந்தோம். அந்த ஊரிலிருந்து பதினாறு பெடியங்கள் காணாமல் போயிருந்தார்கள். யோகன், விமலன், இராஜகுமாரன், சிதம்பரநாதன், ராஜேந்திரன், கிளியன், புலேந்திரன், மகேந்திரன், சிறி, சூட்டான், யோகராசா, கிருஷ்ணதாஸ், மூர்த்தி, டேவிட், சிவா, உதயன்… எல்லோரும் போய்விட்டார்கள். கொஞ்சநாட்களுக்கு ஊருக்குள் இதுதான் கதை. தாய்மார்கள் பிரலாபிக்கும் குரல்களால் துக்கித்துக் கிடந்தது அந்தச் சின்னஞ்சிறு கிராமம். அதனையடுத்து யார் யாரோ காணாமல் போனார்கள். கடிதம் எழுதிவைத்துவிட்டும், கண்கலங்கி ஏதோவொரு சொல் சொல்லிவிட்டும் தாயையோ தங்கையையோ வழக்கமில்லா வழக்கமாய் கட்டியணைத்துவிட்டும் காற்றாய் மறைந்தார்கள். கடலேறி பயிற்சிக்காய் போனார்கள். சைக்கிள்கள் மட்டும் எப்படியோ எவர் மூலமோ திரும்பி வந்து சாத்தியது சாத்தியபடி நின்றுகொண்டிருந்தன. அந்த ஆண்டு பிள்ளையார் கோயில் திருவிழா சோபையற்று நடந்தது. கலந்த கண்கள் காணாமல் போயிருக்க, பெண்களாலாய திருவிழா போலிருந்தது அது. 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, இயக்கத்துக்குப் போகிறவர்கள் பிறகு பிணமாகத் திரும்பி வருபவர்களது எண்ணிக்கை அவ்வூரில் அதிகமாக இருந்தது.
அந்தக் கிராமத்திலிருந்த அனைவரும் ஒருநாள் உடுத்தியிருந்த துணியோடு அடித்து விரட்டப்பட்டார்கள். உலுக்குளம் என்ற பெயருடைய, பக்கத்து சிங்களக் கிராமத்திலிருந்து வந்த இனவெறியர்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். அதற்கு இராணுவம் துப்பாக்கி சகிதம் துணையிருந்தது. பாடுபட்டுப் பண்படுத்திய நிலங்கள், வீடுகள், ஆடு-மாடு-கோழிகள், தோட்டத்தில் விளைந்திருந்த பயிர்பச்சை, ஆழக்கிணறுகள், கனவுகள் அனைத்தையும் விட்டு ஏதுமற்றவர்களாக, அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களை நோக்கி அந்த மக்கள் போனார்கள். மற்றவர்களின் தோட்டந்துரவுகளில் கிடந்துழலும் அகதி வாழ்வு தொடங்கியது.
சிதம்பரநாதனின் தந்தை வீடு பார்க்கப் போன இடத்தில் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தருணமொன்றில் ஓமந்தையில் வைத்து சிதம்பரநாதனை நான் மீண்டும் பார்த்தேன். பயிற்சியிலிருந்து திரும்பி வந்திருந்தான். உயரமும் பருமனுமாய் ‘ஆம்பிளை’ஆகிவிட்ட சிதம்பரநாதன் சீருடையில் அழகாகத் தெரிந்தான். இடுப்பில் செருகப்பட்டிருந்தது கைத்துப்பாக்கி.
“என்னைத் தெரியுதா?”என்றான்.
“மாட்டுக்கார வேலன்”-சிரித்தேன்.
“ஊரிலிருந்த சனங்களைக் கலைச்சுப்போட்டாங்கள். எங்கடை அப்பாவையும் வெட்டிக் கொண்டுபோட்டாங்கள்”என்றான்.
சில நிமிடங்கள் காட்டை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனது துப்பாக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவொரு பொம்மையைப் போலிருந்தது.
நாங்கள் நெடுநேரமாக பழைய பாடசாலை நாட்களில் இருந்தோம். அந்த நாட்களில் உணரப்படாதிருந்த இனிமை கடந்த காலத்திலிருந்து சுரந்துகொண்டிருந்தது. இன்னார் இன்னாரை இரகசியமாகக் காதலித்தார்கள் என்ற கதைகளை அவன் என்னிடம் அவிழ்த்துவிட்டான். எண்ணிப் பார்த்தால் ஏழு சோடிகள். இரகசியமாகக் காதலிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். விருத்தெரிந்த பிறகான அனுகூல-பிரதிகூல கணக்குக்கள் அறியாத பால்யத்தின் தூயகாதல். தேவதைகளையும் தேவன்களையும் மட்டுமே கொண்டிருந்த- கால்கள் தரைபாவாக் காதல்.
பயிற்சிக்குப் போன எனது வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவராக இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த எனது அறை (பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்) பால்ய நினைவுகளால் நிறைந்து வழிந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்திருக்க ஏங்கினோம். இப்போது நினைத்துப் பார்த்தால் அங்கு படித்த காலங்களைக் காட்டிலும் மீள்ஞாபகித்தலின் வழி அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த காலங்கள் அதிகம் போலிருக்கிறது.
சிதம்பரநாதன் அடிபாடுகளில் முன்னிற்பவன் என்று மற்ற நண்பர்கள் சொன்னார்கள். அவன் அடிக்கடி காயப்பட்டான். அதே மாறாத சிரிப்போடு மீண்டும் மீண்டும் எங்கள்முன் தோன்றினான். ‘சோஸ் வீடு’என்று பெடியங்களால் அழைக்கப்பட்ட, இயக்கத்தை ஆதரித்து உணவளிக்கும் வீடொன்றில் இருந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்த விடயம் அவளுக்குத் தெரியாது.
“என்ன இது ஒரு தலை ராகம்?”என்றேன்.
“சாப்பிடுற வீடு… எங்களை நம்பித்தானே வீட்டுக்குள்ள விடுகுதுகள்… நினைச்சுக்கொண்டிருக்க எனக்கு ஒரு முகம் போதும்.”என்றான்.
“நீங்களும் இயக்கத்துக்கு வந்திருக்கலாம்”சிதம்பரநாதன் ஒருநாள் என்னிடம் சொன்னான்.
“துவக்குத் தூக்க உடம்பிலை சக்தி வேண்டாமோ?”என்று பரிகசித்தான் யோகன். அந்நாட்களில் சதைப்பற்றேயில்லாமல் அவ்வளவு ஒல்லியாக இருந்தேன்.
“அது சரி…!புத்தகம் தூக்கிற பிள்ளையளை நீ ஏன் துவக்குத் தூக்கச் சொல்லுறாய்?”என்று பரிகசித்தான் ராஜன்.(அவர் என்று இப்போது சொல்லவேண்டுமோ...)
நான் சிரிக்கவில்லை. குற்றவுணர்வாக இருந்தது.
ஒரு சுற்றிவளைப்பின்போது சிதம்பரநாதனும் அவனது தோழர்களும் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டனர். சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த காவலர்களை கோடரியால் தாக்கிவிட்டு சிறையை உடைத்து தப்பமுயன்றார்கள். சிதம்பரநாதன் கம்பிவேலியால் ஏறிக்குதித்து புகையிரத தண்டவாளத்தைக் கடந்து காட்டுக்குள் ஓடிவிட்டான். அவனோடு தப்ப முயன்ற இன்னொருவன் கம்பி வேலியைத் தாண்டும்போது துப்பாக்கிச் சன்னம் தாக்க கீழே விழுந்து உயிர்துறந்தான். தப்பிவந்த மகிழ்ச்சி ஒரு துளியும் இல்லை சிதம்பரநாதனில். நீண்டநாட்களுக்கு இறந்துபோன நண்பனைக் குறித்தே கதைத்துக்கொண்டிருந்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு, ஓமந்தையிலுள்ள கிராமம் ஒன்றில், ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் வதனன் என்ற போராளியுடன் உறங்கிக்கொண்டிருந்த சுசி என்கிற சிதம்பரநாதனை நள்ளிரவில் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். அவனது வெள்ளந்தியான சிரிப்பை நினைத்துப் பார்த்துக்கொண்டே பல இரவுகள் தூங்காமல் கிடந்திருக்கிறேன்.
பாவற்குளத்திலிருந்து சனங்கள் விரட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீளக் குடியேற அரசாங்கம் அனுமதித்தது(?) இருபது ஆண்டுகளுக்குப் பிறகு (2004இல்) மீண்டும் அங்கு போவதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. கடல்கொண்ட தனுஷ்கோடியின் செங்கல் எச்சங்கள் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள் புதைந்துபோனமொஹஞ்சதாரோ, மச்சுப்பிச்சு என்று சொல்வதெல்லாம் இவ்விதம்தானிருக்குமோ என்றெண்ணத் தோன்றியது.
ஊருக்குள் போகும் சாலை ஒற்றையடிப் பாதையாக ஒடுங்கிச் சிறுத்திருந்தது. வீடுகளின் கூரைகளும் கற்களும்கூட பிடுங்கப்பட்டு, அங்கிங்கு என கல்லறைகளை நினைவூட்டும் குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களை யானைகளும் பாம்புகளும் வேறு விலங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மழையும் வெயிலும் இதனுள் எப்படி இறங்கும் என்று ஐயுறுகிற அளவிற்கு அடர்ந்திருந்தது காடு. பகலிலும் இரவென மாயத்தோற்றம் காட்டுகிற காடு.
நாங்கள் படித்த பள்ளிக்கூட வளவினுள் ஒரேயொரு கட்டிடம் பரிதாபகரமாக நின்றிருந்தது. அதை எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. மூலை நாற்காலியில் போய் அமர்ந்தேன். “பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி…”என்ற பாடல் வரிகளை அந்தச் சுவரில் எழுதிய விரல்களை நான் அறிவேன். கடந்த காலத்தின் குரல்களும் வாசனையும் காற்றில் மிதந்து வருவதுபோலொரு மாயம். அமானுஷ்யமானதொரு உணர்வு. எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசியபடி வகுப்பறையை விட்டு வெளியில் போகும் சிதம்பரநாதனின் நினைவு வந்தது. அவன் காதலைச் சொல்லாமல் போன அந்தப் பெண்ணின் நினைவும்கூடவே. விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது.
அண்மையில் (2009 மே மாதம் நடந்தேறிய பேரனர்த்தத்தின் பின்) எனது வகுப்புத் தோழர்களில் ஒருவனை வெளிநாடொன்றில் சந்தித்தேன். வழக்கம்போலவே இழப்புகளையும் பழங்கதைகளையும் கிண்டிக்கொண்டிருந்துவிட்டு, உறங்கவென எழுந்திருந்தபோது நெடுமூச்செறிந்தபடி அவன் சொன்னான்.
“எங்கடை தமிழ் ரீச்சர் சொன்னதுபோல அப்பவே மாடு மேய்க்கப் போயிருக்கலாம்”
அந்த வார்த்தைகளிலிருந்த ஆற்றாமையையும் துயரத்தையும் கோபத்தையும் காலகாலங்களுக்கும் மறக்கமுடியும் என்று தோன்றவில்லை.
பிற்குறிப்பு: இதை வாசித்துவிட்டு ஒருவர் சொன்னார் “கதை நல்லாயிருக்கு”என்று. - “சொந்த அனுபவம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.”என்றேன்.
கலக்கமாக இருக்கிறது, அம்மா. என்றென்றைக்கும் ஆறாது இல்லையா?
ReplyDeleteஉங்கள் எழுத்துகள் எப்போதுமே மனம் கனக்க வைக்கவும்,ஊருக்குக் கூட்டிப்போகவும் வைக்கிறது.
ReplyDeleteஇதைப்போல எத்தனை கதைகளை விட்டுச் சென்றிருக்கிறது எமது போராட்ட காலம்.நினைவுகளை விட்டுச் சென்ற தியாகத் தீபங்களின் வெளிச்சத்தில்தானே நாங்கள் இன்று.
உண்மைதான்....மாடு மேய்த்திருக்கலாமோ !
ஆற்றாமை
ReplyDeleteதுயரம்
கோபம்...
..........எதுவுமே மறக்காது!
எழுத்துக்கள் இலக்கியமாக இருந்தாலும் எழுத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் உண்மைகள்...மனக்காயங்களாகவே.
ReplyDeleteகிராமமொன்றே மற்றவர்களால் துரத்தப்படுவதையும், சினேகிதனின் தந்தை படுகொலை செய்யப்பட்டதையும் ஒற்றை வரியில் எழுதும் வாழ்க்கை திணிக்கப்பட்டதாக இருக்கிறது உங்களுக்கு.
ReplyDeleteI love that Chidhambaranathan.
ReplyDeleteI salute him.
To Tamilnathy: Thanks for bringing such persons into history.
//அப்பவே மாடு மேய்க்க போயிருந்திருக்கலாம்//
ReplyDeleteதுயரங்களை தெறிக்கும் வரி.
இது கதையென்றால்.. கதைதான். இனி எப்பொழுதும் தமிழ் மண்ணில் திரும்ப நடக்க இயலாத கதை.
தோல்வியுற்றதொரு போராட்டத்தின் நினைவுகளையும், அதன் அடிநாதத்தையும் மக்கள் தொடர்ந்து தக்கவைக்க இயலாதபடி கலாச்சாரத் தாக்குதல் தொடுக்கும் இந்திய, இலங்கை அரசுகளின் பேக்டரிகள், துறைமுகங்கள், சினிமாக்கள், ரயில் தண்டவாளங்கள், குடித்து ஆடும் நடன பார்கள், பயணிகள் கப்பல்களின் முன்... இது இனி எப்போதும் திரும்ப நடக்க இயலாத கதைதான்.
//தாயையோ தங்கையையோ வழக்கமில்லா வழக்கமாய் கட்டியணைத்துவிட்டும் காற்றாய் மறைந்தார்கள்//
ReplyDeleteஅடிக்கடி, அதிகம் பேசாத அப்பாக்களிடம் கூட தங்கள் வழியை தேர்ந்தெடுத்த பின் வீட்டை விட்டு போகுமுன் பேசியதை எத்தனையோ அப்பாக்கள் பின்னாளில் சொல்லி கண்கலங்கி இருக்கிறார்கள்.
இப்பிடி நினைவுகளின் "செம்மணி புதைகுழிகள்" ஏராளம், ஏராளம்.
புரியாது தமிழ்நதி. இங்கு யாருக்கும் புரியவே புரியாது எங்கள் வலி.
உலகத்தமிழினமே மாவீரர் நாளை துக்கத்துடன் அனுஷ்டிக்கும் இவ்வேளை சிதம்பரநாதன் என்ற மாவீரனுக்கு இந்த பதிவினை சமர்ப்பணம் செய்யுங்கள் தமிழ்நதி. இடம் பெயர்ந்த நாட்டில் எங்கள் விதியை நினைத்து அழுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?
ReplyDeleteராஜசுந்தரராஜன்,
ReplyDelete”அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்
வந்தது
அப்படியும் வாழ்கிறோம்.”
உங்கள் கவிதை எங்களுக்கும் பொருந்துகிறது கவிஞரே....
ஹேமா,
கல்லறைகளையும் கிண்டிக் கிளறி எறிந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பர்களின் நெஞ்சில் தங்கிவிட்ட ஞாபகங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
கதிர்,
இன்னொரு முறை போனால் வன்னிக்கும் போய்வாருங்கள். அங்கிருப்பவர்களின் அவலங்களைக் கண்டும் கேட்டும் வந்து எழுதுங்கள். மனங்களிலிருந்து அடிப்படை மாற்றங்கள் ஆரம்பமாகட்டும். குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலாவது.
ராஜநடராஜன்,
எல்லா அர்ப்பணிப்புகளும் கொச்சைப்படுத்தப்படும் நாட்களில் இப்படிச் சிலர் இருந்தார்கள் என்று எழுதவேண்டியிருக்கிறது.
சரவணன்,
இது எம்மாத்திரம்..”நாற்பதினாயிரம் பேர்கள் கொல்லப்பட்டார்கள்”என்று சுலபமாக எழுதிக் கடந்துசெல்லும்போது:(
தன்ராஜ்,
சிலரைப் பற்றி எழுத நினைக்கும்போது தாங்கமுடியாத வலி எழுதவொட்டாமல் தடுத்துவிடுகிறது. சிதம்பரநாதனைப் பற்றி எழுதமுடிந்தது. அதிலும் சுயநலம்தான் பாருங்கள்... நமக்கு வலியில்லாமல் எழுத முயல்வது.
அம்பேதன்,
”தோல்வியுற்றதொரு போராட்டத்தின் நினைவுகளையும், அதன் அடிநாதத்தையும் மக்கள் தொடர்ந்து தக்கவைக்க இயலாதபடி கலாச்சாரத் தாக்குதல் தொடுக்கும் இந்திய, இலங்கை அரசுகளின்....”
கல்லறைகளைக் கிளறியெறிய முடிந்த மனிதாபிமானிகளுக்கு கலாச்சாரம் எல்லாம் துாசு.
ரதி,
பொங்குதமிழ் இணையத்தளத்தில் விமலேஸ்வரி என்பவர் எழுதியிருப்பதைப் படித்தீர்களா...? வேதனையாக இருக்கிறது.
வருகைக்கு நன்றி யாழ்.
சிதம்பரநாதனைப் போன்ற சாதாரண இளைஞர்களை போராட்டம் எப்படி உணர்வுபூர்வமானவர்களாக மாற்றியது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். போராட்டத்தின் நோக்கமே மக்களை முள்வேலியை நோக்கிச் செலுத்திக்கொண்டுபோவதாகவே இருந்ததுபோல சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை எத்தனை பேர் அத்தனையையும் துறந்து மறைந்துபோனார்கள் என்பதை நான் எழுதவிரும்புகிறேன்.
இங்க இருக்குற இன்னிக்கு ஒரு படத்துல தலயக்காட்டினதுக்கே
ReplyDeleteபுரட்சி,புடலங்காய்ன்னு பேருக்கு முன்னால போட்டுக்கிறவங்களுக்கு
இந்த சிதம்பரனாதனைக்காண்பிக்கவேண்டும்.
தோண்டியெடுத்து ,கிளறி எடுத்து வீசிய வீரர்களின் உடல்கள் நாளை
எழுந்து நின்று சாட்சி சொல்லும்,,,
//கடந்த காலத்தின் குரல்களும் வாசனையும் காற்றில் மிதந்து வருவதுபோலொரு மாயம். அமானுஷ்யமானதொரு உணர்வு. எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசியபடி வகுப்பறையை விட்டு வெளியில் போகும் சிதம்பரநாதனின் நினைவு வந்தது. அவன் காதலைச் சொல்லாமல் போன அந்தப் பெண்ணின் நினைவும்கூடவே. விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது.// மனதைக் கனக்கச் செய்துவிட்டது தமிழ்...
ReplyDeleteதமிழ்,
ReplyDeleteகொஞ்சம் இடைவெளிக்கு பின்னல் மிக்க கோபத்தோடும், ஆறாத மனக் காயத்தோடும் வந்து இருகின்றீர்கள்.
உங்கள் கட்டுரை மனதை ரணமாக்கிவிட்டது.
சேனல் 4 - நாகரிக உலகம் இன்னுமா வேடிக்கை பார்க்க வேண்டும்.
என்னதான் வேண்டும் அவர்களுக்கு..............
அன்புடன்
சுரேஷ்
அன்புச் சகோதரிக்கு,
ReplyDeleteவணக்கம் !
உண்மையை அன்பில் நனைத்து
எழுதி இருக்கிறீர்கள்..
படித்து முடித்தும் கண்கள் மட்டுமல்ல,
மனசும் ஈரமாகிறது !
"ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்" படித்தேன் என்நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தன!1988 இன்
ReplyDeleteகடைசிக்காலம் "ஜவான்" அண்ணன் "காமினி" அண்ணன் இருவரும் கோட்டை தாக்குதலில் (ஒரு காலை இழந்து) காயம் அடைந்து தமிழகத்தில் சிகிச்சை பெற்ற போது பல நாட்கள் உடனிருந்தேன். அப்போது ஒரு சிறுவன் 14 வயது
இருக்கும் தமிழகத்தில் அவன் பெயர் 'எட்வின்'இவனும் (ஒரு காலை இழந்து) இருந்தான் நான் அவனிடம் கேட்டேன்
அவன் பதில் சொல்ல வில்லை. "ஜவான்" அண்ணன் சொன்னார் அவன் காட்டில் வழி காட்டியாக இருந்தான் அப்போது
மிதி வெடியில் சிக்கி விட்டான் என்றார்.மூவருக்கும் கட்டை கால் (செயற்கை கால்) பொருத்தி நடை பழக்கி. சைக்கிள்
,மோட்டார் சைக்கிள் ,கார் எல்லாம் பழகி பின் மூவருக்கும் 'லைசன்ஸ்' (ஓட்டுநர் உரிமம்) வாங்கினோம் .நகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது எங்கள் கிராமம் 'கேழ்வரகு' கூழ் குடிப்பதற்காக எங்கள் வீ ட்டிற்கு சைக்கிளிலேயே வந்து விடுவான்! என் அம்மா அவனின் கட்டை காலை கழற்றி கசிந்த இரத்தத்தை துடைத்து
விடுவாள். எங்கள் கிராமம் அவனுக்கு மிகவும் பிடித்தது .'கயிற்றுக்கட்டிலில்' உறங்குவது, மா , பலா ,முந்திரி தோப்புகளில் திரிந்ததை ஒற்றைக் காலோடு எங்கள் ஊரில் எல்லாருக்கும் தெரியும் "எட்வினை" பின் ஒரு நாள்
எங்களை யெல்லாம் பிரிந்து நாட்டிற்கு சென்றான். நான் என் கனவில் கூட நினைக்க வில்லை அவன் ஒரு
கரும் புலியாய் மாறினான் என்று.1996 இல் கரும் புலிகள் புகைப்பட தொகுப்பில்! அவன் புகைப்படத்தை கண்டபின்
தான் தெரிந்தது! எனக்கு.
"ஜவான்" அண்ணன் புலிகளின் குரல் வானோலி நிலைய பொறுப்பாளராக இருந்தார் ????????
"காமினி" அண்ணன் பற்றி எதுவும் தெரியவில்லை??????
கி.சேகர்
நெஞ்சைத்தொடும் ஒரு விடயத்தை உரைநடை அலங்கரிக்கிறது .. கதைக்குள்ளேயே சென்றதில் மனதிலே துன்பம் கலந்த ஒரு சிறு துளி இன்பம்... நன்றி அம்மா
ReplyDelete//‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம்.
ReplyDeleteமிக்க உணமை.எங்களை இன்னும் கரையான் போல அரித்துக் கொண்டிருந்தாலும் நாங்கள் திருந்தமறுக்கின்ற ஒரு ஒன்று
இதிலே எனது நிலைப் பாட்டை இங்கே சென்று பருங்கள்
http://vadaliyooraan.blogspot.com/2010/04/blog-post.html
//அந்த வார்த்தைகளிலிருந்த ஆற்றாமையையும் துயரத்தையும் கோபத்தையும் காலகாலங்களுக்கும் மறக்கமுடியும் என்று தோன்றவில்லை.
அதே இதை எங்களிலும் ஏற்படுத்தி விட்டீர்கள் உங்கள் எழுத்தால்
தமிழ்நதி அக்கா உங்கள் எழுத்திலே இழையோடிக் காணப்படும் மென்மையான கதை சொல்லும் பாங்கு,அதனூடு எமது சோகங்களை,ஆற்றாமைகளை,இயலாமைகளை சொல்லும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளது.அதோடு நான் நிச்சயம் குறிப்பிட்டேயாகவேண்Dஇய இன்னொரு பண்பு அல்லது என்னைப் போன்றவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு பழக்கம் என்னவெனில், நாம் ஊரின் நினைவுகள் என்று எழுதும் போது எமது ஊரின் மொழிநடையை கொண்டு வந்து கலப்பதை தவிர்க்கமுடியாதவர்களாயிருக்கிறோம்.அது எமது பிரதேச மொழிநடையை தெரியாதவர்களுக்கு, எரிச்சலைக் கொடுக்கலாம்.ஆனால் உங்கள் எழுத்து தமிழ் தெரிந்த அனைவருக்குமே பொதுவானது.பொறாமையாக இருக்கிறது அக்கா உங்கள் எழுட்த்துக்களைப் படிக்கும் போது.அத்துடன் இன்னுமொன்று உங்களைப் பிந்தொடர்வதற்கான(followers) இணைப்பை உங்கள் வலைப் பூவில் காணவில்லையே?
ReplyDeleteஉண்மையில் இவர்கள் தான் மாவீரர்கள்.
ReplyDelete