மரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.
11.17.2006
மந்திரப்பெட்டியும் மாயக்கோலங்களும்…
“ஆண்டவலிங்கத்தை எங்கை ஒளிச்சுவைச்சிருப்பாங்கள்…?
“அபி செய்யிறது சரியான பிழை… மற்றாக்களின்ரை கதையை நம்பி தொல்சை வெளியிலை அனுப்பியிருக்கக்கூடாது”
யார் இந்த ஆண்டவலிங்கம்…?
“ஊர்க்காரரா? கூட வேலை செய்கிறவரா…? நண்பரா…? பலரின் பேச்சில் குறிப்பாக பெண்களின் பேச்சில் இவரது பெயர் அடிபடுவதேன்…?” இந்தக் கேள்வியை சிலரிடம் நீங்கள் எழுப்புவீர்களேயானால் ‘செவ்வாயிலிருந்து வந்தவரா நீங்கள்’ என்பதாய் அவர்கள் புருவமுயர்த்தக்கூடும். உங்கள் கேள்விக்கான பதிலை அவர்கள் வாயால் கூறக்கேட்டு வியப்புற்றீர்களெனில் நீங்கள் தொலைக்காட்சியில் செய்தி மட்டும் பார்க்கிற ‘அப்புறாணி’என்று அர்த்தம். ஆனால், யதார்த்தத்திற்கு அப்பால் ஒரு புனைவுலகத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொண்டுவிட்டவர்களுக்கு அபியும், ஆண்டவலிங்கமும் ஊரிலிருந்த (புகலிடங்களில் அல்ல) பக்கத்துவீட்டுக்காரர்களைப்போல மிக அறிமுகமானவர்கள். சிலசமயம் ஆதர்சமும்கூட.
ஒரு சதுர வடிவப் பெட்டி எங்களில் செலுத்தும் ஆதிக்கத்தின் ஒரு வகையான வெளிப்பாடுதான் தொலைக்காட்சி நாடகங்கள். பெரும்பாலான பெண்களின் நேரத்தைத் தின்று பசியாறும் அந்நாடகங்களில் உதிர்க்கப்படும் சில வாசகங்களைக் கேட்கும்போது ‘இதைப் பார்றா’ என்கிற அதிர்ச்சி ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. தமிழ் சினிமாக்களில், நாடகங்களில் வரும் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்டு தலையிலடித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு அதீத சகிப்புத்தன்மை அவசியம்.
“பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா லட்சணமா வீட்டோட இருக்கணும். எங்க வீட்டுப் பொண்ணுக போனா கோயிலு… வந்தா வீடு”
“அவன்தான் ஏதோ புத்திகெட்டு அவகூட போயிட்டான். நீயில்லியா கையில கால்ல விழுந்து திரும்பக் கூட்டிக்கிட்டு வரணும்”
“ஆம்பிளைன்னா கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும்… அவன் வெளியிலை என்ன ஆடீட்டு வந்தாலும் நீதாம்மா பொறுத்துப் போகணும்… அப்பிடிப் பொறுத்துப் போகலேன்னா என்ன பொண்ணு”
இந்த வசனங்களையெல்லாம் எழுதுகிற ‘பிரம்மா’க்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் ஆண்கள்தான். பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரைவிலக்கணங்களை வடிவமைக்கிற இவர்களைப் போன்றவர்களுக்கு சமூகப்பொறுப்புணர்வு கிடையாது. சினிமா மட்டத்தில் அறிவுஜீவிகளென அடையாளங் காணப்பட்டுள்ள பெண்களுள் ஒரு சிலர் நிர்வகிக்கும் நாடகங்களில் இத்தகைய ‘அறிவுரைகள்’ ஒப்பீட்டளவில் குறைவெனினும், அவர்கள்கூட முற்றிலும் பழமை வட்டத்திலிருந்து வெளிவந்திருப்பதாகக் கூறவியலாது. இத்தகைய பொன்மொழிகளை, பழமொழிகளைக் கேட்டு வளரும் ஒரு ஆண்பிள்ளையின் மனதில் (புகலிடங்களில் வளர்வதாயினும்) தனது வன்முறையைப் பிரயோகிக்கத்தக்கதான முதல் உயிர் வீட்டிலுள்ள பெண் என்கிற விதை விழுந்துவிடுகிறது. பெண் என்பவள் இரண்டாம் பிரஜை என்பது அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊட்டப்படுகிறது. ஏற்கெனவே நமக்கெல்லாம் தெரியும் இந்த அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம்! முட்டைப்பொரியலோ முருங்கைக்காய் கறியோ ஆண் குழந்தைகளுக்கு அதிகமாய் ஊட்டி அடிப்படையிலேயே ‘நீதான் உயர்ந்தவன்’என்ற ஒளிவட்டத்தைத் தலைக்குப் பின்னே சுழலவிட்டுவிடுவது நாமெல்லாம் அறிந்ததே. (சிக்மன்ட் பிராய்ட் இதற்கு வேறு விளக்கம் சொல்லுகிறார்… அதைச்சொல்லப் போனால் கலாசார மீறல் என்பார்கள்.)
பெண்ணை ‘சக்தி’என்கிறார்கள். அந்த சக்தி அத்தனையும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் சிறைவைக்கப்பட்டுவிடுவதுதான் துயரம். பெண்கள் கண்ணீர் பெருக்கி மூக்குச் சிந்திப் பார்க்கிற சில நாடகங்களிற்கூட எப்போதாவது இருந்திருந்துவிட்டு ‘பெண்களால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை’ என்றொரு வசனம் வரும். ‘ஊருக்குபதேசம் (உ)எனக்கல்லடி மகளே’ என்றிருப்பவர்கள்தான் எம்மில் அநேகர். பெரும்பாலான பெண்கள் சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டைச் சுத்தம் செய்தல், கணவனுக்கான பணிவிடை என்பதற்கப்பால் செல்ல விரும்புவதில்லை; அன்றேல் ஆண்கள் செல்ல விடுவதில்லை. குறுகிய எல்லைகளுக்குள் செக்குமாடுகள் போல சுற்றிச் சுற்றி வருவதற்கு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீனிபோடுகின்றன.
அறிவை விருத்தி செய்யும் ஒரு நிகழ்ச்சியை அடிக்கடி நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
“ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டிருந்தேன்… இன்னிக்குத்தான் உங்களோட பேசற சந்தர்ப்பம் கிடைச்சுது… எனக்காக கஜினி படத்திலேர்ந்து ‘சுட்டும் விழிச்சுடரே’போட முடியுமா…”
“கண்டிப்பா… இந்த ‘சாங்’ஐ நீங்க யார் யாருக்கு ‘டெடிகேட்’பண்ணுறீங்க…?”
அந்தப் பாடலை யாருக்கெல்லாம் ‘அர்ப்பணிக்கிறேன்’(அவங்களெல்லாம் சுதந்திரத் தியாகிகள் பாருங்க)என ஒரு பட்டியல் வரும். ஜன்மமே சாபல்யம் அடைந்தது போன்றதொரு மகிழ்ச்சி அந்தக் குரல்களில். ஆக்கபூர்வமற்ற, தேடல்கள் அற்ற வாழ்வின் அர்த்தமின்மையை அவர்களுக்கு எடுத்துரைப்பது யார்…?
பெரும்பாலும் வணிக சிந்தனைகளைக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இத்தகைய பெண்களின்-ஆண்களின் அறியாமைதான் மிக முக்கியமான மூலதனம்.
மேலும், தலைமுறை இடைவெளி, கலாச்சார இடைவெளி என்ற வார்த்தைகளை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கக்கூடியதாக உள்ளது. பதின்பருவ பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையிலான இடைவெளி நாளாக நாளாக விரிந்துசெல்லும் தன்மையது. அதிலும் புகலிட தேசங்களில் வளரும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் இருக்கும் வெளி அச்சுறுத்தும் அளவிற்கு பரந்தது. அந்த வெளியை நிரவ அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. பெற்றோருக்கு அறிவும் வேண்டும். ஆங்கிலம் தெரியாத அம்மா பிள்ளைகள் நினைவில் ஒரு படி கீழே நிற்பவளாகவே தோன்றுகிறாள். பாடசாலை வீட்டுப் பாடங்களில் உதவி செய்ய முடிந்த தாய் அல்லது தந்தை குறித்த மதிப்பீடு பிள்ளைகள் அளவில் உயரும் என்பதை மறுக்கமுடியாது. பெற்றோர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதென்பது, “ஆண்டவலிங்கத்தை யார் கடத்தியிருப்பார்கள்?”என்று கவலைப்படுவதைக் காட்டிலும் தேவையான ஒன்றல்லவா…?
இந்த சினிமாக்களும் தொலைக்காட்சி நாடகங்களும் மற்றுமொரு புண்ணிய காரியத்தை ஓசைப்படாமல் செய்துகொண்டிருக்கின்றன. அதாவது நாங்கள் மறந்துபோய்க்கொண்டிருக்கிற அல்லது கடந்து வந்துவிட்டோம் என்று ஒரு சந்தோசத்திற்காகவேனும் நினைத்துக்கொண்டிருக்கிற பழமையான விடயங்களை ஞாபகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றன. சீதனம், பெண்வதை, சாதிப்பாகுபாடு… இப்படி பட்டியல் நீளும்.
மது, புகைப்பழக்கம் போல நீண்டநேரம் தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கிக்கிடப்பதும் ஒரு போதைதான். அதனின்று விடுபட்டு சோபாவிலிருந்து எழ முடியாதளவிற்கு செயலற்றதாக்கிவிடும் வலிமைவாய்ந்த சாதனமாயிருக்கிறது. நள்ளிரவில் பியர் போத்தல் மிக்சர் சகிதம் ‘ஆ… அப்பிடித்தான்… குத்து… அடி…!’என்றவாறான உற்சாகக் கூச்சல்களை எழுப்பும் ஆண்களைப் பார்க்குந்தோறும் ‘ரத்தம் பார்ப்பதற்கு இத்தனை வேட்கையா…?’என்ற வியப்பு எழுவதுண்டு.
தவிர, தொலைக்காட்சி எமக்காக சிந்திக்கிறது என்பதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா…? எமது மண்டைக்குள் புகுந்து ஏதோ குறளி வித்தை காட்டி அமெரிக்காவை அன்னை தெரசாவாக்கவும், பின் லேடனை உலக மகா எதிரியாக்கவும் அதனால் இயலும். நாம் தேய்க்கும் சவர்க்காரம், பூசும் கிறீம், அணிந்துகொள்ளும் சப்பாத்து, சமையல் எண்ணெய், வலி நிவாரணி… அதிகம் ஏன்… நாம் தேடும் ஆண், பெண் யாவற்றையும் தீர்மானிப்பதில் தொலைக்காட்சியும், சினிமாவும் கணிசமான பங்கு வகிக்கின்றன.
“திரிஷா மாதிரி உடம்பு, மீனா மாதிரி கண், பூமிகா மாதிரி உதடு” எத்தனை கேட்டிருக்கிறோம்.
“ஜிம்முக்குப் போனா சூரியா மாதிரி உடம்பு வருமா…?”ஒல்லிக்கையை உயர்த்திப் பார்த்து நம்மில் பலர் பெருமூச்செறிந்திருக்கிறோம்.
உருவம் குறித்து எத்தனை தவறான கற்பிதங்களை சினிமா எமக்குள் ஏற்றியிருக்கிறது.
பெண் வெள்ளையாய் இருப்பது அழகு. ஆண் கொஞ்சம் கறுப்பாய் இருந்தாலும் பரவாயில்லையாம் என்பது அதிலொன்று.
கணவர் குத்துச்சண்டையையும், மனைவி நாடகங்களையும், பிள்ளை கார்ட்டுனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பது எப்போது…? உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளப் பொழுதற்ற குடும்பங்கள் எப்படிச் சிதைந்துபோகும் என்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவரிடையே அதிகரித்துவிட்ட விவாகரத்து வீதமே சான்று.
எனக்குத் தெரிந்தவர், வயதானவர் ஒருதடவை தனது மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
“எனக்கொரு கோப்பி போட்டுத் தாறாளில்லை… ‘கணவருக்காக’ நாடகம் பாக்கிறாளாம்.”
அவர் நகைச்சுவையாகத்தான் கூறினார். ஆனால், நகைச்சுவைக்கப்பால் உள்ளார்ந்த சோகம் இழையோடியதை உணரமுடிந்தது.
சினிமா என்ற அற்புதமான கலையை அற்பமானதாகத் தரமிறக்கும் வேலைகள்தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போது ‘தாதா’க்களின் காலம். அரிவாள், துப்பாக்கி, சைக்கிள் செயின் சகிதம் பதினைந்து பேரைக் கலைத்துக் கலைத்து வெட்டி, சுட்டு, சிதைத்துவிட்டு, ஆடைப் பஞ்சத்தில் இருக்கும் கதாநாயகியோடு மரங்களைச் சுற்றி ஆடுவதைத்தவிர இப்போது கதாநாயகர்களுக்கு அதிக வேலையில்லை. சமீபத்தில் வாசித்த ஒரு நகைச்சுவைத்துணுக்கு:
“அந்தப் படத்திலை கதாநாயகியின்ரை வயித்தை ஏன் அடிக்கடி காட்டுறாங்கள்…?”சினிமா ஞானமற்ற ஒருவரின் கேள்வி இது.
“வயித்துப் பிழைப்புக்காகத்தான் அவ நடிக்க வந்திருக்கிறாவாம் எண்டிறதை ‘சிம்போலிக்’ஆ காட்டுறாங்கள்”
இப்போதெல்லாம் வயிற்றில் முட்டை பொரிப்பதில்லை; (பறவைக் காய்ச்சல் பயமோ…!) பம்பரம் விடுவதில்லை. உண்மைதான். ஆனால், இடையைக் காட்டுவதென்பது ‘இடைவிடாமல்’ தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பல இயக்குநர்கள் கதையில் நம்பிக்கையிழந்து சதையை நம்பத்தொடங்கியிருப்பது தமிழ் சினிமாவின் சரிவையே காட்டுகிறது.
பாடல்கள் வேறு தம் பங்கிற்கு பாவத்தைக் கொட்டிக்கொள்கின்றன.
‘கொக்கி’என்றொரு படம்… அதில் கதாநாயகி கதாநாயகனைப் பார்த்து பாடலில் ஒரு வேண்டுகோளை பவ்யமாக முன்வைப்பார். “சும்மா ஒரு புள்ளை கொடுடா” என்னே ஒரு இலக்கியத்தரம் பாருங்கள்!!!
சினிமாவும், தொலைக்காட்சிப்பெட்டியும் எமது வாழ்வைச் சீரழித்துவிட்டதாக ஒரேயடியாகப் புலம்புவது அறிவுடைய செயலல்ல. நாம் அவற்றைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ஒரு நண்பர் அடிக்கடி கூறுவார்: “லேசர் கத்தியாலை கத்தரிக்காய் வெட்டுறாங்கள்” என்று. அத்தகைய அதியற்புத சக்தி சினிமா, தொலைக்காட்சிக்குண்டு. தொலைக்காட்சி உலகத்தை வீட்டிற்குள் எடுத்துவருகிறது. இந்தோனேசியாவின் பூகம்பத்தையும், அமெரிக்காவின் காட்டுத்தீயையும், லெபனானின் போரழிவையும், கேரளாவின் பேரழகையும், யப்பானின் தொழில்நுட்பத்தையும் தொலைக்காட்சிகள் எமது வரவேற்பறைக்கு எடுத்துவருகின்றன. தரவுகள் சரியோ தவறோ நமது ஊரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படை விடயத்தைச் சொல்கின்றன. நம்மில் பெரும்பாலானோருக்கு செய்திகள் என்றால் புஷ்ஷ_க்கு பின் லேடனில் எவ்வளவு விருப்பமோ அவ்வளவு விருப்பம்! பாய்ந்து விழுந்து ‘சானலை’ மாற்றிவிடுவோம்.
காலச்சரிவில் நாட்கள் புதையுண்டு போகின்றன. வாழ்வு எனும் நதி வற்றுவதற்குள் அதன் கரையமர்ந்து எழுதவேண்டிய கவிதையை எழுதி முடித்துவிடவேண்டும். எமது கையில் ஒரு எழுதுகோல் தரப்பட்டிருக்கிறது-அதை வைத்து காலத்தால் அழியாத கவிதையை எழுதப் போகிறோமா…? அன்றேல் அதைக்கொண்டு முதுகைச் சொறிந்துகொள்ளப்போகிறோமா…?
சிந்திக்க வேண்டியது.
ReplyDeleteneengal veliyittulla karuthukkal mutrilum unmai. aanaal unamaikkuthaan ippothu mathippillaiye. ilangovan, madurai
ReplyDelete//இந்த அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம்! முட்டைப்பொரியலோ முருங்கைக்காய் கறியோ ஆண் குழந்தைகளுக்கு அதிகமாய் ஊட்டி அடிப்படையிலேயே ‘நீதான் உயர்ந்தவன்’என்ற ஒளிவட்டத்தைத் தலைக்குப் பின்னே சுழலவிட்டுவிடுவது நாமெல்லாம் அறிந்ததே. (சிக்மன்ட் பிராய்ட் இதற்கு வேறு விளக்கம் சொல்லுகிறார்… அதைச்சொல்லப் போனால் கலாசார மீறல் என்பார்கள்.)//
ReplyDelete////சிக்மன் பிராய்ட் என்ற உளவியல் அறிஞர்...ஒடிபஸ் கொம்பளக்ஸ், இலக்ரா கொம்பளக்ஸ் என்ற எடுகோளை வைக்கிறார்.... அதாவது...பொம்பிளை பிள்ளையளிலை தகப்பன் மாருக்கு பிடிப்பதற்க்கும் ஆம்பிளைப்பிள்ளையிலில் தாய் மாருக்கும் பிடிப்பதற்க்கும் ஏதோ வகையில் முடிச்சு போடுகிறார்.
எல்லாத்துக்கும் sex அடிப்படைக்கு வாறார்.........இப்பொழுது ஆண்கள் பெண்கள் காதல் வலையில் விழுவதற்க்கான ஆராய்ச்சி முடிவுகள் பெரும்பாலனவை....சிறுவயதில் நேசிச்சவை தெரிந்தவை பழக்கப்பட்டவர்கள் போன்ற உருவங்களை உடையவரை வயது வந்தப்போல காணும் பொழுது அவர்கள் இடம் வசீகரிக்கப்படுகிறார்களென்ற கூறுகிறது
பிராய்டின் முடிவை நிராகரித்தவர்கள்கூட இப்பொழுது மீண்டும் கவனத்தில் எடுத்து கொள்கிறார்கள் ////
--------------------
//////சின்னக்குட்டி சிக்மன் பிராய்ட் இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறார் அவர் சொல்லாமல் விட்டதை அவற்ற மகள் சொல்லியிருக்கிறா.
"காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே" என்றொபு பழைய பாடல் வரி "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடு" பாடலில் யுவன் கலந்தடிச்சிருப்பாரே.பிராய்ட் சொன்னமாதிரி காமமும் கோபமும்தான் எங்கட எல்லாச் செயற்பாடுகளுக்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்///////.
====யாழ் இணையத்தில் சிக்மன் பிராய்ட் பற்றி பேசிக்கொண்டது.===...
ஏன் சொல்ல நீங்கள் தயங்குகிறீர்கள்?????
சின்னக்குட்டி,
ReplyDeleteசிக்மன்ட் பிராய்ட் எழுதிருப்பதை நானும் வாசித்திருக்கிறேன். அதை இந்தக் கட்டுரையில் சொல்வதென்பது கட்டுரையின் மையக்கருத்தை விட்டு வெளியில் செல்ல வைத்துவிடும் என்பதனால் அதை எழுதவில்லை. மற்றபடி தயக்கம் என்றில்லை. “கலாச்சார மீறல் என்று சண்டைக்கு வருவார்கள்”என்றுதான் சொல்லியிருக்கிறேன். என்னளவில் அதைப் பற்றிப் பேசுவது கலாச்சார மீறலும் அல்ல. எல்லைகள் என்று வரையறுப்பதும் அந்தக் கோட்டைத் தாண்டுவதும் அவரவர் தன்மையைப் பொறுத்தது.
‘சின்னக்குட்டி சிக்மன்ட் பிராய்ட்’ மற்றும் அவரது மகள் பற்றி நான் அறியவில்லை. நீங்கள்தான் சின்னக்குட்டியாயின் எடுத்துச்சொன்னால் கேட்டுக்கொள்வேன். காமமும் கோபமும்தான் எங்கள் செயற்பாடுகளுக்கெல்லாம் மூலகாரணம் என்றா சொல்கிறீர்கள்…? ம்… சிந்திக்கத் தூண்டுகிறது.
தமிழ்நதி!
ReplyDeleteநமது திரைப்படங்கள்; எப்போதோ என்ன???நம் தனித்துவத்தை இழந்து விட்டது; சின்னத்திரைத் தொடர்களோ!!!!!!;பழம் பஞ்சாங்கங்களாக உள்ளது உண்மையே!!!
ஆண் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தல் என்பதில்;மாற்றம் எவ்வளவோ ஏற்பட்டுள்ளது. மேலும் நான் இளைஞனாக இருக்கும் போது; பாரமான வேலைகள்,அதிக உடல் உழைப்புக்குரிய வேலைகளைச் செய்வேன். அதாவது சராசரியாக என் சகோதரிகளின் உடலுழைப்பிலும் வெகு கூட;இதனால் எனக்கு என் தாயார் நீங்கள் கூறியது போல்,சிறப்புக் கவனிப்பு செய்தாள்; இது ஒளிவட்டமில்லை.
ஏனேனில் என் அண்ணனுக்கோ; தம்பிக்கோ (சிறுவனாக இருந்த போதும்) இந்தச் சலுகை கிடைக்கவில்லை.காரணம் அண்ணன் வேலைக்குக் கள்ளன்; விளையாட்டுப் பிரியன்....
அடுத்துப் பெண்பிள்ளைகளுக்கு; வயதுக்கு வந்ததும் ஒரு மாதம் மிகச் சிறப்பான சாப்பாடு கவனிப்பு உண்டு. தேவையானதும் கூட அதை நான் மனதார வரவேற்கிறேன். அத்துடன் மாதவிடாய் காலத்திலும் ஊட்டச் சத்து நிறைந்த உணவு; இருத்தி வைத்துக் கொடுப்பர்; கட்டாயம் செய்ய வேண்டியது.குழந்தைப் பேற்றுக் காலங்களிலும் பெண்களை சிறப்பாகக் கவனிப்பர்; தேவையும் கூட
இப்படியான எந்த கவனிப்பும் ;சாகும் வரை ஆணுக்கு அமைவதில்லை. என்பதால் "பெற்றவள்" இரக்கத்துடன் ,ஒரு துண்டு கூடப் போடுவாள்.
நீங்கள் கூட அந்தத் தாயில் நிலையில் இருந்தால் அதைச் செய்யலாம்.
எனவே இந்த விடயத்தில் தாய்க்குலத்தைத் தாக்க வேண்டாம்.
என் சிற்றறிவுக் கெட்டியது இதே!!
என் கருத்துத் தவறாகவும் இருக்கலாம்.
யோகன் பாரிஸ்
யோகன்,
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல மாதவிடாய்க் காலத்திலும், குழந்தைப் பேற்றுக் காலத்திலும் பெண்களுக்கு உணவு விடயத்தில் சிறப்புக் கவனிப்பு இருப்பது உண்மையே. ஆனால், பொதுவாக அந்தக் குறிப்பிட்ட நாட்களைக் கழித்துப் பார்த்தால் யாருக்கு கவனிப்பு அதிகம் என்று யோசித்துப் பாருங்கள். திருமணம் செய்தபின் தாயின் இடத்தில் தாரம் அல்லவா… அவளும் கூட ‘அவருக்கு’என்று விசேடமாக ஒதுக்கி வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தாயைக் குறை சொல்வது எனது நோக்கமல்ல யோகன்… எமது சமூகத்தில் ஒப்பீட்டளவில் இப்படித்தான் ஆண்-பெண் என்ற பாரபட்சம் காட்டப்படுகிறது என்று சொல்லவந்தேன். எனது கருத்தில் மாற்றமில்லை என்றாலும், ஆணாகிய உங்கள் மனதை அது எவ்வகையிலேனும் பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.
சூப்பர் பதிவு.
ReplyDeleteஆனா.... ரிமோட் யார்கிட்டே கொடுத்துருக்கீங்க பார்த்தீங்களா? ( படத்துலே)
'அவருக்கு' மனுஷரை விட அறிவு உண்மைக்குமே கூடுதல்தான்.:-))))
இப்படிக்கு பூனை & யானைப் பிரியை.