11.20.2006

வலைப்பதிவர் சந்திப்பு: பார்த்தது, கேட்டது, நெகிழ்ந்தது

நாங்கள் தமிழர் என்பதை நேர விடயத்திலும் நிரூபித்துக்கொண்டிருப்பது நியாயமில்லை என்று தோன்ற, ஒன்றுகூடல் நடைபெற்ற மண்டபத்தை சரியாக நான்கு மணிக்கே சென்றடைந்துவிட்டோம். (பன்மையில் கூறக் காரணம் இருக்கிறது. பெண்கள் அதிகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிந்தமையால் தனியாகத் தெரிவதன் சங்கடத்தைத் தவிர்க்க அண்ணாவின் மகளை அழைத்துப்போயிருந்தேன்.) அதிகம் பெண்கள் வரமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் பெயராய் அறிந்த முகங்களைப் பார்க்கும் ஆவலுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது.

யெஸ்.பாலபாரதி (யெஸ் என்றால் என்ன…?) கைகூப்பி வரவேற்றார். தொலைபேசியில் கேட்ட குரலைவிட நேரில் இளைஞர்தான். வழக்கம்போல பின்னிருக்கையைத் தேர்ந்து அமர்ந்துகொண்டோம்.

வலைதிரட்டிகளின் அடுத்த நகர்வு என்பது குறித்து மா.சிவகுமாரும் தொழில்நுட்பம் தொடர்பாக விக்கியும் பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், கோவையாக சற்றும் பிசிறில்லாமல் எப்படிப் பேசுவதென்று மா.சிவகுமாரிடம் கற்றுக்கொள்ளலாமென்ற எண்ணம் வந்தது. ‘பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து புறப்பட்டு…’இப்படியான ரீதியில் அலுப்புத்தட்டாமல் ‘புளொக்குகிற’மா.சிவகுமார் இவர்தான்; என்பது பேச்சின் முடிவில்தான் இந்த மூளையில் பொறிதட்டியது.

த.அகிலனின் பேச்சு மீண்டும் ஊருக்கு அழைத்துப்போனது. ‘பிணங்கள் என்பது அங்கு சர்வசாதாரணம்’என்று அவர் சொன்னபோது குற்றவுணர்வாக இருந்தது. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். தான் கண்டதை முன்னெப்போதும் காணாதவர்கள் முன் இயல்பாகப் பகிர்ந்துகொண்ட விதம் பிடித்திருந்தது. அதைவிட முக்கியமாக, எங்களது மக்களின் மரணம் சூழ்ந்த வாழ்வு குறித்த விடயங்களை அக்கறையோடும் ஆதூரத்தோடும் துயர் தோய்ந்த விழிகளுடனும் வந்திருந்த வலைப்பதிவர்கள் செவிமடுத்த காட்சி ஈழத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் மனம் நெகிழவைத்தது. கண்ணீர் வந்துவிடுவேன் வந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டேயிருந்தது. மண்டபத்துக்குள் வரும்போது இருந்த சங்கடம் விலகி அங்கிருந்தோருடன் மிகுந்த நெருக்கத்தை உணரமுடிந்தது. ஹிட்லரின் கோயபல்ஸ்சை ‘பாவம்பா’என்று சொல்லிவிடக் கூடிய விதத்தில் பொய்யுரைத்துவரும் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊடகங்களைப் பற்றி அகிலன் கூறியது ஆறுதலாக இருந்தது.

ஈழத்தைச் சேர்ந்த மற்றொரு வலைப்பதிவாளரான நிலவன் என்னைப்போல சிரித்துக்கொண்டேயிருந்தார். கடைசிவரை பேசவில்லை.

அடுத்து ‘வலைப்பூவில் சாதியம்’ பற்றி பாலபாரதி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே துணைக்குரல்கள் பல எதிரொலித்தன. அதிலொருவர் “சாதியம் பற்றிப் பேசி என்ன செய்யப் போகிறோம்…?”என்றார். “அப்போ வாழ்ந்தென்னங்க பண்ணப் போறோம்”என்றொரு எதிர்க்குரல் கேட்டது. “நாம எழுதி என்ன பண்ணப் போறோம்…?”என்றொரு கேள்வி என்னிடம் இருந்தது. வழக்கம்போல கேட்கப்படாத கேள்வியாய் உள்ளேயே மடிந்துபோனது. “நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்டதில்லை”என்ற பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உலகெங்கிலும் பட்டினியால் நாளாந்தம் எத்தனையோ பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். போர் ஓரிடத்தில் இருக்கவிடாமல் இலட்சக்கணக்கானவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது. உடுதுணிக்காகவும் ஒரு கூரைக்காகவும் எத்தனையோ உயிர்கள் ஏங்கிக் காத்திருக்கின்றன. இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்துகொண்டு சாதியம் பேசத்தான் வேண்டுமா என்ற அயர்ச்சி எழுந்தது.

பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந்து உயர்ந்து அமிழ்ந்தன. சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய். (இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் பாத்திருக்கோமில்ல…) நிறையப் பேர் கதம்பமாகப் பேசியதில் ஒன்றும் புரியவில்லை.

வருவார் வருவார் என்று பாலபாரதியால் சொல்லப்பட்ட ‘பொன்ஸ்’ஒருவழியாக வந்துசேர்ந்தார். சத்தியமாக எனக்கு அவர் மூலம் ஆகவேண்டியது ஏதுமில்லை. உண்மையாகவே நல்ல அழகான சிரிப்பு. கனடாவிலிருந்து வலைபதியும் மதி பற்றிக் கேட்டார். நானும் எனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டேன்.

ரொம்பப் புழுகிற அல்லது புகழுற மாதிரியான சில வரிகளை ‘பொன்ஸ்’இன் பதிவில் பார்த்தேன். சரி… சரி…“உங்க சிரிப்பு அழகாக இருந்தது” என்று கூறியதற்குப் பிரதியாக (நன்றிக்கடனாக) இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். மன்னித்து மறந்துவிடுவோம்.
கனடாவில் வாழும் எனது நண்பர் டி.ஜே. என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். வலைப்பதிவு நண்பர்களிடையே ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்படி. அந்த உரையாடல் இப்படித்தான் அமைந்தது.

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…?”

“திருவான்மியூரில்”

“நான் ஈ.சீ.ஆர். றோட்டில் இருக்கிறேன். நீங்கள்…?”

“நானுந்தான்…”

“நான் ஆர்.டீ.ஓ. ஆபீஸ் பக்கம்.. நீங்கள்”

“நானுந்தான்…”

எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் முன் வீட்டில்தான் அவர் இருக்கிறாரோ என்று. நல்லவேளை (அல்லது கெட்டவேளை) அவரது வீடு சற்று தள்ளி இருந்தது. ‘நீங்கள் ஒரு கலகக்காரரா?’என்ற எனது கேள்விக்கு ரோசாவசந்த் போனால் போகட்டுமென்று சிரித்துவைத்தார்.

சற்றைக்கெல்லாம் மையப் புள்ளியிலிருந்து விலகி பேச்சு அங்குமிங்கும் திரியத்தொடங்கியது. சின்னச் சின்னக் கும்பலாகக் கூடி அவரவர் ‘அலப்பறை’ஆரம்பமாயிற்று.

முத்து தமிழினி, பாலா, றோசாவசந்த், எஸ்.கே, பொன்ஸிடம் கொஞ்சம் பேசியபின் விடைபெற்றோம். அகிலனையும் நிலவனையும் தேடினால் காணோம்.

கிளம்பும்போதும் பாலபாரதி கைகூப்பி வழியனுப்பினார். ‘யெஸ்.’ என்பதன் பொருள் கொஞ்சம் புலனாகியது. இப்படி ஒரு சந்திப்பை ஒருங்கிணைப்பதென்பதும் அதை கைகலப்பின்றி கலகலப்பாக முடிப்பதென்பதும்… ‘யெஸ்’அசாத்தியம்தான்.

‘எள் ஏன் காயுது எண்ணெய்க்கு… எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்கு’என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கிணங்க தனக்கு சம்பந்தமேயில்லாத பேச்சுக்களை ‘சிவனே’என்று ‘பார்த்துக்கொண்டிருந்த’ எனது மருமகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். தேநீர், பிஸ்கெட்டுடன் ஒரு சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. பாலபாரதியிடம் இத்தால் சொல்லிவைக்கிறேன்… அடுத்த சந்திப்பில் சீர்செய்வார் என்று நம்புகிறேன்.

35 comments:

  1. நிலவனும் அகிலனும் கலந்து கொண்டது இன்னும் என்னால் நம்ப முடியாமல் தானுள்ளது.

    நீங்கள் அவர்களோடு கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்.
    சந்திப்புக்காகவேதான் கிளிநொச்சியிலிருந்து வந்திருந்தார்களா?

    ReplyDelete
  2. அழகான நேரில் பார்த்ததுபோன்ற ஒரு உணர்வுபூர்வமான வர்ணனை.

    மீட்டிங்கில் உங்கள் யதார்த்தமான பார்வைகளால் என்னை கவர்ந்தது.

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. வசந்தன்,

    கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பேசுவது முறையல்ல என்பதால் நிலவனோடும் அகிலனோடும் நிறையப் பேச முடியவில்லை. பின்பு தேடினேன், காணவில்லை. அவர்கள் வலைப்பதிவர் சந்திப்பிற்காக என்று வரவில்லை, இப்போது நாட்டில் இருக்கும் நெருக்கடி நிலை காரணமாக, இங்கு வந்த இடத்தில், சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. அடிச்சித் தாக்குங்க..

    //உண்மையாகவே நல்ல அழகான சிரிப்பு//
    நன்றி தமிழ்நதி.. அதே மாதிரி, (உங்களிடமே நேரிலேயே சொல்லியது போலவே), நான் சொன்னதும் உண்மை தான்..

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. விரிவான பகிர்வுக்கு நன்றி. நேரில் செல்ல இயலாத குறையை ஓரளவு போக்கும் விதமாக இருக்கிறது :-)

    ReplyDelete
  7. ரெம்ப நல்ல பதிவுங்க. தகவல்களை அருமையாதந்திருகீங்க, நேரிலே போனமாதிரியான அனுபவம்.

    நன்றி.

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்ட நண்பர்கள் பொஸ்டன் பாலா, பொன்ஸ், ஜயராமன், சிறில் அலெக்ஸ், வசந்தன் யாவருக்கும் நன்றி.

    எப்போதும் சொல்வதுபோல அறிமுகமில்லாதவர்களின் புன்னகையும் எதிர்பார்ப்புகளற்ற அன்பும் இருப்பதனால்தான் உலகம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. பூங்காவில் இடம்பெற்ற ‘சென்னை: ஒரு நாடோடியின் பதிவு’க்கு வந்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. தெளிவான பகிர்தலுக்கு நன்றி.

    //தேநீர், பிஸ்கெட்டுடன் ஒரு சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. // - அடுத்த சந்திப்பில் ஆவன செய்யப்படும் என்பதை எங்கள் தலை பாலா சார்பில் சொல்லிக்கொள்கிறேன் :)

    ReplyDelete
  10. ‘தலை’யிடம் பரிந்துரைத்தமைக்கும் பரிவுக்கும் நன்றி அருள்குமார். அடுத்த ஆண்டு சமோசாவை எதிர்பார்த்து ஓடோடி வரவிருக்கும் எம்மை ஏமாற்றிவிடாதீர்கள்.

    ReplyDelete
  11. உவத்தல் காய்தல் இன்றி வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் தமிழ்நதி. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. // விக்கியும் பேசியதை கொஞ்சம் அசுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்

    அச்சோ .. நான் ஒரு நிமிஷம் கூட பேசியிருக்க மாட்டேன். அதுவே அவ்வளவு bore அடிச்சுதா?? ;-)

    நல்ல விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
  13. //சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப்...//

    சொன்னாங்க பாருங்க உங்க மருமகள், இது ...............

    அந்த வடை ஒரு 'மசால்வடை'யாக இருக்கட்டுமுன்னு பாலாவுக்குப்
    பரிந்துரை செய்யவேணும்:-)

    சந்திப்பை அழகாகச் சொல்லி இருந்தீங்க. நிறையப் பெண்கள் கலந்துக்கிட்டு
    இருந்தா இன்னும் ஜோரா இருந்துருக்கும், இல்லே?

    ReplyDelete
  14. “நிறையப் பெண்கள் கலந்துக்கிட்டு இருந்தா ஜோரா இருந்திருக்கும் இல்லே…” ஆம்… எனது அண்மைய ஆதங்கம் அதுதான். என்னமோ தெரியலே… என்ன மாயமோ புரியலே…ன்னு சொல்லப் போவதில்லை. அதைப் பற்றியும் பொன்ஸ் இடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  15. //அடுத்த சந்திப்பில் ஆவன செய்யப்படும் என்பதை எங்கள் தலை பாலா சார்பில் சொல்லிக்கொள்கிறேன் :)//
    அதானே! ஆட்ட கேடுக்கிட்டா வெட்டுராங்க???

    ReplyDelete
  16. வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி கொஞ்சமாவது உருப்படியாக எழுதியிருப்பதாக (பலரும் உசுப்பேற்றியபின்) நினைத்துக்கொண்டிருப்பதில் மண்விழுந்தது. பின்னூட்டமிட வருபவர்களில் அநேகர் காக்கா மாதிரி வடை விவகாரத்தையே கவ்விக்கொண்டிருப்பதாக இப்போது தோன்றுகிறது.

    ReplyDelete
  17. ----- வடை விவாகரம் முக்கியம் போய்ட்டுது..... ஓட்டு எடுப்புவரையும் போட்டுதி்ல்லையா...

    ReplyDelete
  18. ஓம் சின்னக்குட்டி அண்ணை,

    என்ரை மருமகள் பிஸ்கட் சாப்பிட்டதோடை பேசாம வந்திருக்கலாம்.

    ReplyDelete
  19. கனடாவில இருந்தெல்லாம் விசேடமா வலைப்பதிவாளர் மாநாட்டுக்குப் போயிருக்கிறையள். கனடாவில இல்லாத சமோசாவே:-)

    ReplyDelete
  20. புரிகிறது கானா.பிரபா,

    ஒரு வருடமாக சென்னைவாசம்.

    ReplyDelete
  21. //“நான் இதுவரைக்கும் உருப்படியாக ஒரு பதிவும் போட்டதில்லை”என்ற பாலபாரதியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.//

    யக்கா.. நீங்களுமா.. புதுசா யார் வந்திருந்தாளும் பா.க.ச ஆகிவிடுவது என் துரதிர்ஸ்டம் தான். :-((
    *

    எனி வே.. கலந்துகொண்டு பதிவு எழுதியமைக்கு நன்றிகள்.
    :-))

    ReplyDelete
  22. //அடுத்த ஆண்டு சமோசாவை எதிர்பார்த்து ஓடோடி வரவிருக்கும் எம்மை ஏமாற்றிவிடாதீர்கள்.//

    என்னது அடுத்த ஆண்டா.. அது மாநாடு நடத்துப் போது. இது சந்திப்பு+கலந்துரையாடல் தான்! அதனால் அடுத்த மாதம் கூட நடத்த திட்ட மிருக்கு. இதை விட சின்னதாக. சில வி.ஐ.பி-களின் தமிழக வருகையை முன்னிறுத்தி.!

    ReplyDelete
  23. /ரோசாவசந்த்தைச் சந்தித்தால் என்னை ‘டி.ஜே‘யின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்படி./
    இப்படி அறிமுகப்படுத்தியதால்தான் வசந்தோடு உரையாடல் அபத்தமாய் முடிந்துவிட்டது போல. அடுத்தமுறை இதே தவறை வேறு யாருடனும் செய்துவிடாதீர்கள் :-).
    ....
    / சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய். (இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் பாத்திருக்கோமில்ல…) /
    அதுதானே, உந்தச் சலசலப்புக்களுக்கு எல்லாம் நாம் அஞ்சிவிடுவோமா என்ன? அனுபவப்பட்டவர்களாயிற்றே!

    ReplyDelete
  24. //. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். //

    இதுதானம்மா நிதர்சனமான வார்த்தைகள்.....

    ReplyDelete
  25. இவ்வாறானதொரு உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக வாழ்ந்துகொண்டு சாதியம் பேசத்தான் வேண்டுமா என்ற அயர்ச்சி எழுந்தது.//

    சத்தியமான, நியாயமான வார்த்தைகள்..

    எனக்கும் அந்த நேரத்தில் அப்படித்தான் தோன்றியது..

    மரணத்தை நேரில் பார்த்த அவலங்களை ஒருவர் மனமுருக எடுத்துரைத்த அதே கூட்டத்தில் ஒன்றுக்கும் உதவாத சாதீயத்தைப் பற்றி பேசத்தான் வேண்டுமா என்ற எண்ணம் உங்களுக்கு மட்டுமல்ல அங்கு குழுமியிருந்த பலருடைய மனதிலும் தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை..

    அதை திசை திருப்பும் நோக்கத்துடனும் ஆக்கபூர்வமாக சிந்திப்போமே என்ற நோக்கத்துடனும்தான் வலைப்பதிவர் சங்கத்தை அமைப்பது பற்றி சிந்திக்கலாமே என்ற யோசனையை முன் வைத்தேன்.. என்னுடைய துரதிர்ஷ்டம் அது எடுபடாமல் போனது..

    உங்களுடைய எழுத்தும் நடையும் மிக நன்றாக இருக்கிறது தமிழ்..

    ReplyDelete
  26. ////. ஊராசையை விட உயிராசை பெரிதென்று ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்கு உறுத்தத்தானே செய்யும். //


    எல்லாவிதமுமாக யோசித்து சென்னையினின்று 550 கிமீ தூரத்தில் நான் பிறந்து வளர்ந்து கல்விபயின்ற ஊரில் வயதான பெற்றோரால் பார்த்துக்கொள்ள இயலவில்லை என்று பிறந்த வீட்டை விற்றுவிட்டு சென்னையிலேயே தங்கிவிடுவது என்ற சுயமுடிவே பெரிய வருத்தம் தருகிறது!
    வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிப்பதால் இம்முறை ஓடோடிப் போய் நான் பிறந்து வளர்ந்த வீட்டை எனது குழந்தைகளுக்குக் காட்டினேன். அடுத்த விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியுமா என்ற எண்ணம் வருத்தம் அளிக்கிறது.

    சொந்த மண்ணைப் பிரிந்து இருப்பது அதுவும் தன்னால் செய்யப்படாத முடிவுகளால் என்பது பெரிய துயரமே!

    ReplyDelete
  27. பின்னூட்டமிட்ட நண்பர்கள் டி.ஜே., பாலபாரதி, மௌல்ஸ், ஜோசப் யாவருக்கும் நன்றி. டி.ஜே.! உரையாடல் அபத்தமாக முடியவில்லை. அதியொற்றுமையாக நெருங்கியிருக்கிறோம் என்று பொருள். பா.க.ச. என்றால் என்ன பாலபாரதி. உண்மையில் எனக்குத் தெரியாது. ஆட்சேபணை இல்லையெனில் சொல்லவும். வலைப்பதிவில் புகைப்படங்கள் போடப்பட்டதாகவும் பின் நீக்கப்பட்டதாகவும் திரு.டோண்டு அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமிடப்பட்டவற்றிலிருந்து தெரிந்துகொண்டேன். அந்தப் புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பமுடியுமா…? நன்றி

    ReplyDelete
  28. //பாலபாரதி பேசிக்கொண்டிருக்கும்போது குரல்கள் உயர்ந்து உயர்ந்து அமிழ்ந்தன. சண்டைதான் போடப்போகிறார்களோ என்று பயமாக இருந்தது என்று எழுதினால் அது பொய்.//

    இதைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க!

    நிங்க இவ்வளவு ஆர்வத்தோட வந்ததுக்கு ஒரு சிறப்பு நன்றி.

    ReplyDelete
  29. நதியக்கா, பா க ச பற்றி தலையக் கேட்காதீங்க..

    பாலபாரதியைக் லாய்ப்போர் ங்கம் தான் அது..

    ReplyDelete
  30. அட! இதுதானா பொன்ஸ்…! பா.க.ச. என்றால் என்னமோ பெரிதாக இருக்கும் என்று நினைத்தேன். சப்பென்று ஆகிவிட்டது. விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  31. வணக்கம்!
    வணக்கம்!
    இரண்டு வணக்கங்களா
    என்று கேட்கிறீகளா?
    ஒன்று வந்ததற்கு
    மற்றொன்று
    செல்வதற்கு!
    என்ன எழுதுவது
    எனக்கு புரியவில்லை
    நீங்கள் வேறு
    நிறையா எழுதியிருப்பதால்
    படிக்க நேரமில்லை
    எனவே நல்லா
    படித்துவிட்டு
    மறுபடியும் வருகிறேன்!
    நன்றி வணக்கம்!

    ReplyDelete
  32. சந்திப்பை அழகாக எழுதியமைக்கு நன்றி தமிழ்நதி.

    //சமோசா அல்லது வடை தந்திருக்கலாமென்பதே இந்தச் சந்திப்பைப் பற்றிய அவளது மேலான அபிப்பிராயமாக இருந்தது. //

    அடுத்த சந்திப்பில் இவ்வெதிர்ப்பார்ப்பை பாலா பாய் சரி செய்வார் என்று அவரின் தொண்டர் அடிப் பொடிகள் பா.க.ச தெரிவித்துக் கொள்கிறது.

    ReplyDelete
  33. நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. தமிழ்நதி அவர்களே,

    சந்திப்பின் போது உங்களுடன் பேச இயலவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. திரு.டோண்டு அவர்களுக்கு,

    நிச்சயமாக. வலைப்பதிவர் சந்திப்பின்; பயனாக நண்பர்கள் வட்டம் விரிவடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தடவை மேலும் பயனுள்ள சந்திப்பாக அமையுமென நம்புகிறேன்.

    ReplyDelete