4.25.2010

எனக்கு ‘மதம்’பிடிக்காது!


தீபாவுடைய ‘சிதறல்கள்’வலைத்தளத்தில்,‘எலிஃபென்ட் சாமியும் தாடித் தாத்தாவும்என்ற பதிவை வாசித்தேன். மதம் தொடர்பான அந்தப் பதிவு எளிமையான அழகோடு இருந்தது. ‘வாங்க வந்து கொஞ்சம் பக்தி வாங்கிட்டுப் போங்க’என்று அழைக்காமல், ‘இதாங்க எஞ் சாமி’என்ற யதார்த்தப் பகிர்தல் பிடித்திருந்தது. அதில் தொடர்பதிவு போட என்னையும் அழைத்திருந்தார். தீபாவுக்கு என் நன்றி.


கொஞ்சநாட்களாக எனது வலைப்பூ ஒரே சோகமயமாக இருப்பதாக நண்பர்களில் ஒருவர் குறி(குறை)ப்பிட்டிருந்தார். சர்ச்சைகளையும் சோகத்தையும் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, முகஇறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு ‘ஜாலி’யாக எழுத நினைத்திருக்கிறேன். ‘சோகத்தை ஒத்திவைக்கிறதாவது’என்று, வில்லங்கம் வளர்ப்பதே வேலையாக இருக்கும் அனானி வந்து பின்னூட்டம் போடாமலிருக்கவேண்டுமென்பதே, இருக்கிறாரா இல்லையா என உறுதியாகத் தெரியாத கடவுளிடம் வைக்கும் பிரார்த்தனை. அனானியும் பாவம்! ஏதாவது ‘அவல்’கிடைக்காதா என்று நாள்தோறும் வந்து அலைந்துவிட்டுப்போகிறது. அவலை (அவளை அல்ல) நினைத்து உரலை இடிக்கிறது.

எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் முகப்பில் பெரியாருடைய வாசகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்’ என்பதுவே அது. அவ்வாசகத்தைக் கண்ணுறும்போதெல்லாம் ஒரு குறுஞ்சிரிப்பு முகம் முழுக்கப் பரவும். ‘பெரியாரே! நீங்கள் மகாகுசும்புக்காரர்’ என்று செல்லமாக மனதுள் சொல்லிக்கொள்வேன். பெரியாரோடு நெருக்கமாவதற்கு உந்துதலாக அமைந்த ‘வீடு தேடும் படலத்திற்கு’நன்றி.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டபழக்கம். அதாவது யாராவது எதையாவது ரொம்பவுந்தான் தூக்கிப் பிடித்தால், ‘அதை’நான் மறுதலித்துவிடுவேன். அப்படி மறுக்கப்பட்டவையும் வெறுக்கப்பட்டவையும் நிறைய உண்டு. ஒரே விதிவிலக்காக அப்பாவும் அண்ணாவும் புத்தகங்களுக்குள்ளேயே தலையைப் புதைத்துக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எனக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை. அம்மா ஒரு சைவப்பழம். நமக்கெல்லாம் புத்தகங்கள்போல அவருக்கு சாமி. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் மற்றும் கோயில் நிச்சயமாக உண்டு. அந்நாட்களில் வீடு கழுவப்பட்டு, சாம்பிராணிப் புகை சுழன்றுகொண்டிருக்கும். அம்மா நடுங்கிய குரலில் தேவாரம் கதைத்துக்கொண்டு வேலைகளைச் செய்வார். அம்மா எங்களை அதிகம் சோதிக்கவிடாமல், அப்பா சுசீலாவையோ சௌந்தரராஜனையோ பாடவிட்டுவிடுவார். பக்திப்பாடல்கள் வீடெல்லாம் கரைபுரண்டு ஓடுகையில் சாமி மீது கொஞ்சூண்டு பக்தி வந்து மெல்லிய பரவசமாக உணர்வோம். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..’என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. செவ்வாய் தவிர, வெள்ளிக்கிழமை விரதம் பிடிப்பதற்கு ஒத்திகையாக வியாழக்கிழமையும் மச்சம் (புலாலுணவு) தவிர்க்கப்படும்.

நாய், பூனைகள் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் அந்நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து விரதம் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா மகா நக்கல்காரர். அதிலும் அம்மாவை நக்கலடிப்பதென்றால், ஒரு முழுப்போத்தல் சாராயத்தை அவரிடம் அப்படியே தூக்கிக்கொடுத்து ‘உங்களுக்கேதான்’என்று சொல்வதற்கிணையான ஆனந்தம். ‘ஒரு குடிமகனின் சரித்திரம்’என்ற எனது பதிவில் இடம்பெற்ற மணியம் மாமாவில் அப்பாவின் சாயலும் இருக்கும். அப்பா சொல்வார்:

“இன்று பொன்னியும் விரதம். ஆனா அது கொம்மாவைப்போல நல்ல சீலையாப் பாத்து உடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போகேலாது”என்று.பொன்னி என்பது எங்களது நாயின் பெயர். அதற்கு ஏழு வயதாகிறது. “கொம்மா சொர்க்கத்துக்குப் போகேக்குள்ள பொன்னி உட்பட நாங்கள் எல்லாரும் அவவின்ரை வாலைப் பிடிச்சுக்கொண்டு சொர்க்கத்துக்குப் போயிடலாம்.”என்பார்.

தற்கொலை செய்து இறந்துபோன எனது சகோதரியின் நினைவுநாளன்று அம்மா மோட்சார்ச்சனை (மோட்சம் என்றால் சொர்க்கமென அறியாதவர் அறிக) என்றொரு அர்ச்சனை செய்வார். அதற்கு சில நூறுகள் செலவாகும். அந்த நூறுகளைத் தன்னிடம் தராமல் ஐயரிடம் அம்மா கொடுப்பதில் அப்பாவுக்கு வருத்தமான வருத்தம். அவர் சொல்வார்:

“எவ்வளவு காசுக்கு மோட்சார்ச்சனை செய்யிறமோ அந்தக் காசுக்கு அளவா சொர்க்கத்துக்குப் பக்கத்திலை போகலாமாம்.”

அம்மாவின் கனவில் சாமிகளாக வருவர்.

“நல்ல கடுஞ் சிவப்பு நிறத்திலை சீலை கட்டிக்கொண்டு நெத்தியிலை பெரிய குங்குமப்பொட்டும் வைச்சுக்கொண்டு தலையை விரிச்சுப்போட்டு அவ வாசலிலை வந்து நிக்கிறா… சிரிப்பெண்டால் அப்பிடியொரு சிரிப்பு… வாங்கோ எண்டு கூப்பிடுறன். வாசலிலையே நிக்கிறா…”என்று அம்மா மெய்சிலிர்க்கும் பரவசத்தோடு கனவை மீள்ஞாபகித்துக்கொள்வார்.

இளம்வயதில் தன்னை மோகினிப்பேய்கள் துரத்தியதாக அப்பா பதிலுக்குக் கதைவிடுவார்.

கடவுளரும் பேய்களும் விருத்தெரியாத சின்னவயதில் சுவாரசியம் தந்தார்கள். இப்போதில்லை.

அம்மாவின் அதிதீவிரமான பக்தியும் அதைக்குறித்த அப்பாவின் பார்வையும் மதம் குறித்த எனது சிந்தனைகளை வடிவமைத்தன. (இதைக் கட்டமைத்தன என்று சொல்லவேண்டுமோ…) சடங்குகள் பெரும்பாலும் பாசாங்குகளாக இருக்கக் கண்டோம். தீபா தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல திருவிழா நாட்களில் கோயில்பக்கம் மறந்தும் போவதில்லை. பளபள சேலைகளும் நகைகளும் அர்ச்சகர்களின் பாரபட்ச பந்தாக்களும்… அர்ச்சனைச் சீட்டுக் கட்டணத்தொகைக்கேற்ப காட்டப்படும் தரிசனங்களும் கழுத்தில் விழும் மாலைகளும்… ஏழைகளின் கடவுள் இல்லை அவர்! இதை நான் திருச்செந்தூரில் கண்ணால் பார்த்து வெதும்பியிருக்கிறேன். எங்களுக்கு முன்னால் ஏழ்மைக்கோலத்தில் பரட்டைத் தலையோடு ஒரு பெண் திருநீறுக்காக கையை நீட்டிக்கொண்டே இருந்தார். நிமிடங்கள் கழிந்தும் அர்ச்சகரின் கண்களில் அந்தப் பெண் தட்டுப்படவேயில்லை. எங்கள் கையில் இருந்த திருநீறை நீட்டியபோது வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டு கல்லில் உறைந்திருந்த சாமியை ஒரு ‘பார்வை’பார்த்துவிட்டுப் போனார். கலங்கியிருந்த அந்தக் கண்கள் இன்னமும் நினைவிலிருக்கின்றன. ‘கல்லே… உனக்கும் கண்ணில்லையா?’என்ற சீற்றத்தை அதில் பார்த்தேன்.

கனடாவில் நான் இருந்தபோது கதவுதட்டும் மதவியாபாரிகளை என் கணவர் வாசலிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார்.

“மதத்தினால் எத்தனை நாடுகளில் எவ்வளவு மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா…? எங்களுக்கு மதம் அவசியமில்லை”என்று, அவர்களிடம் அவர் சொல்லவும் தவறியதில்லை.

சாதியும் மதமும் இல்லாமல் இப்பூவுலகில் நிச்சயமாக வாழ்ந்துவிடமுடியும் என்றே நினைக்கிறேன். ‘விரதம் பிடி… விரதம் பிடி’என்று சொல்லிக் களைத்த அம்மா இப்போது ‘வெள்ளி, செவ்வாயிலும் மச்சம் சாப்பிடுறியாமே…’என்று ஆதங்கத்தோடு தொலைபேசியில் கேட்குமளவுக்கு இறங்கிவந்திருக்கிறார். விரதம் என்பது உடலின் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு என்பதாகத்தானே இருக்கமுடியும்? அது தன்னை வருத்துவதாக மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அம்மாவின் பேச்சைக் கேட்டு விரதம் பிடித்த நாட்களில் எல்லாம் சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். ‘எப்போதடா இலையின் முன் அமர்வோம்…’என்ற நினைவன்றி வேறேதும் இருந்ததில்லை.

“எலும்பைக் கழிச்சுப் பாத்தால் பதினைஞ்சு கிலோவும் வராது. வாயால் இயங்குற ஆள்… விரதமெல்லாம் ஏன்… மனசு சுத்தமாயிருந்தால் போதும்”என்ற வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் வைத்து அப்பா சொன்னார். ‘கந்தசஷ்டி பிடிக்கிறேன் பேர்வழி’ என்று ஆறு நாட்களும் விரதமிருந்து மயங்கிவிழுந்துகிடந்த அம்மாவைப் பார்த்தபடி சொன்ன வார்த்தைகள் அவை.

ஆனாலும், சாமியை அப்படியொன்றும் அம்போவென்று விட்டுவிட என்னாலும் முடிந்ததில்லை. சாமி என்னை அம்போவென்று விட்டுவிடுமோ என்ற உள்ளார்ந்த பயம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாட்களும் காலையில் எழுந்ததும் அம்மன் முகம் பார்த்து ஒரு நொடி வணக்கம் போடுவதுடன் எனது வழிபாடு முடிந்தது. சாப்பிடப் போவதன் முன் சாமிக்கு அவசியம் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பசி என்பது அதிபயங்கரமானது என நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். என்னிடம் ஒரு அம்மன் படம், ஒரு அன்னைவேளாங்கன்னி சொரூபம் (மூன்றங்குல உயரம்)இருக்கின்றன. நான் மதுரை போனால் இரண்டுபேரும் என்னோடு வருவார்கள். சேலம் போனால் சேலத்திற்கு வருவார்கள். கனடா, ஈழம் இங்கெல்லாம் இந்த இரண்டு தோழியரும் பயணச்சீட்டு எடுக்காமல் என்னோடே பயணிப்பார்கள். தாங்கமுடியாத தனிமையும் துயரமும் பொங்கியெழும் நேரங்களில் மனிதர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வதில்லை. ஓரிரு நிமிடங்கள் இந்த இரண்டு பேரிடமும் சொல்லியழுதால் மனசு இலேசாகி அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவேன். துக்கம் கண்ணீராக வெளித்தள்ளப்படும்போது மனம் இலேசாவது எல்லோருக்கும் இயல்பே. எனக்கென்னவோ ஆண் சாமிகளைப் பிடிப்பதில்லை. அதற்கு பெண்ணியம் ஆணியம் மண்ணீயம் என்ற உள்ளர்த்தங்கள் ஒன்றும் கிடையாது.

திருவிழா தவிர்ந்த ஏனைய நாட்களில் கோயில்கள் அத்தனை அழகாயிருக்கும்! விபூதியும் பூக்களும் கற்பூரமும் கலந்தொரு வாசனை வீசும் பிரகாரத்தின் படிகளில் அமர்ந்து அரசிலைகள் அசைவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கப் பிடிக்கும். மனதுள் பெருவெளியொன்று விரிந்து விரிந்து செல்லும். உலகத்தின் கசடுகள் எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கவேண்டுமென்ற தாபம் பெருகிடும் நேரமது. அந்த அமைதிக்குப் பெயர் என்னவென்று அறிந்துகொள்ள முற்பட்டதில்லை. ஒருவேளை அந்த அமைதியின் பெயர்தான் கடவுளோ…?

மதத்தின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களை, படுகொலைகளை, சித்துவேலைகளை, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நடக்கும் கொள்ளைகளைப் பார்க்குந்தோறும் மதத்தைத் தூக்கியெறியத் தோன்றுகிறது. அதேசமயம், ஏதோவொரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது; அதுவே நம்மை இயக்குகிறது என்ற பயம் இல்லாமல்போவது ஆரோக்கியமானதல்ல; அப்படி ஒன்று இல்லையெனில் தறிகெட்டலைவோம் என்றும் தோன்றுகிறது. சரி-பிழை என்ற இருவேறுபட்ட மனோநிலைகளில் தத்தளிப்பது எல்லோருக்கும் நேரக்கூடியதே.

நாத்திகவாதி அன்றேல் ஆத்திகவாதி என்று நம்மை முத்திரை குத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ‘நான் இன்னார்தான்’என்று பிரகடனப்படுத்தவேண்டிய தேவை இல்லை. இந்த வாழ்க்கை விடுவிக்கமுடியாத புதிர்களைக் கொண்டது. அதனாலேயே அது சுவாரசியமானதாகவும் இருக்கிறது.

பெரியாரைப் படிக்கவாரம்பித்திருக்கிறேன். அந்த மிகப்பெரிய ஆளுமையிடமிருந்து நான் நிறையத் தெரிந்துகொள்வேன். யார் கண்டது? எதிர்காலத்தில் நானொரு மிகச்சிறந்த கடவுள்மறுப்பாளியாக மாறவும்கூடும். ‘நாத்திகன்…நாத்திகன்…’என்கிறார்கள். கடவுளை மறுக்கும் பெண்களை எப்படி அழைப்பது? இந்த மொழி…! இந்த மொழி…!! இந்த மொழி!!!

31 comments:

  1. கடவுள் மறுப்பாளர் அல்லது நாத்திகர் என்பதற்கு ஆண்பால், பெண்பால் உண்டா என்ன? :)

    ReplyDelete
  2. //....கனடாவில் நான் இருந்தபோது....//

    நீங்க இருக்கிறது தமிழ்நாடோ, கனடாவோ, ஈழமோ? பதிவைப்பத்தி சொன்னால், எனக்கு என்ர பிரச்சனைய யோசிக்கவே நேரம் போதேல்ல. இதில இவரப்பத்தி(கடவுள்) ஆர் கவலைப்பர்றது. கடவுளைப்பத்தி கவலைப்பட நிறையப்பேர் இருக்கிறீனம் என்டிட்டு நான் அவரைப்பற்றி கவலைப்படாமலே விட்டுட்டன். இணையத்தில உங்களோட எண்டாலும் எங்கட தமிழ் கதைக்கிறதில எனக்கு பெரிய சந்தோசம்.

    ReplyDelete
  3. நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பது மறுக்க இயலாத உண்மை. அதுதான் கடவுள். பகுத்தறிவு வளர வளர கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள்தான் களையப்பட வேண்டுமே தவிர கடவுளை அல்ல. என்னைப் பொருத்த வரை புலன்களால் அறிய முடியாத சகலத்தையும் இயக்கும் அந்த மூல சக்தியை(கடவுள்) நம்புவதே உண்மையான பகுத்தறிவு. உங்கள் தேடலுக்கு விடை கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. There is a wonderful book named "GOD IS NOT GREAT" by Christopher Hitchens. It is an interesting book.
    It speaks against God primarily based on the unwanted practices associated with each religion. It does not deny God's existance in strict sense.
    Your article reminded me of that book.

    ReplyDelete
  5. பதி,

    அரசியல், மதம் இன்னபிற சிந்தனைகள் ஆணுக்குத்தான் புரியுமாம். அதனால் 'நாத்திகன்'என்று சொல்லமுடிகிறது:) கணவனை இழந்தவளை 'விதவை'என்கிறார்கள். மனைவியை இழந்தவனுக்கு யாராலும் அறியப்படாத, புழக்கத்திலில்லாத தபுதாரன் என்றொரு சொல்லே இருக்கிறது. மொழியின் பாரபட்சங்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

    ரதி,

    திருவிளையாடலில் சிவபெருமான் சொல்வார்: "யாம் எங்கும் நிறைந்துளோம்"என்று. சிவபெருமானைப்போல சொல்லமுடியாது:) ஆனால், நான் கனடா, தமிழ்நாடு, ஈழம் மூன்று இடங்களிலும் இருக்கிறேன். ஓரிடத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்கள். அதற்குமேல் தாங்காது.

    முற்றுமுழுக்க எங்கடை தமிழிலை (இதுக்கொரு சண்டை வரும் பாருங்கோ) ஒரு பதிவு போட ஆசை. சும்மா எழுதிப் பாக்கிறதுதானே... நீங்கள் எங்கை இருக்கிறீங்கள்?

    நன்றி தமிழ் மீரான்,

    "கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள்தான் களையப்பட வேண்டுமே தவிர கடவுளை அல்ல."

    அந்த மூடத்தனங்கள் களையப்பட முடியாத இறுகிய வேர்களுடன் அல்லவா இருக்கின்றன? என்ன செய்வது? அதை அறுக்க முடியாதபோது மறுத்தோடத் தோன்றுகிறது.

    தன்ராஜ்,

    நீங்கள் நிறைய வாசிப்பவராக இருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகத்தை வாசிக்க முயற்சிக்கிறேன். ஆனால், அது இப்போதைக்கு சாத்தியமாகுமா தெரியவில்லை. எனது நண்பர்களில் ஒருவர் இந்தக் குழப்பந் தீர கீழ்க்காணும் புத்தகங்களையும் படிக்கச் சொல்கிறார்.
    the god delusion - richard dawkins, The Hitchhiker's Guide to the Galaxy - Douglas Adams.

    இப்படியெல்லாம் படித்து முடிப்பதென்றால் இன்னொரு பத்துவருடம் புத்தகக் குவியலுக்குள் குடியிருக்கவேண்டும். அதுவரை உயிரோடு இருக்கப் பொறுமை வேண்டுமே...:)

    ReplyDelete
  6. தமிழ்நதி! உங்களோட இந்தப் பதிவை நான் ரொம்ப ரசிச்சேன். நீங்க கடவுள் பக்தியாளர்ங்கிறதே எனக்கு ஆச்சரியம் தந்தது. மதமோ, கடவுள் நம்பிக்கையோ மனுஷனைப் பண்படுத்துறதுக்காக உருவானவைதான். காலத்தின் கோலத்தால் அதே மதமும் கடவுள் நம்பிக்கையும் மனுஷனுக்கு மனுஷன் பகைமை உணர்ச்சி கொள்ள வெச்சுடுச்சு. நெருப்பைக் கொண்டு சோறாக்கவும் செய்யலாம்; குடிசையைப் பத்த வைக்கவும் செய்யலாம் இல்லியா? அது மாதிரிதான்! சில மனக் கஷ்டங்களின்போது நம்மைத் தாங்கிப் பிடிக்க உளவியல்ரீதியா சில நம்பிக்கைகள் தேவையா இருக்கு. அதுல ஒண்ணுதான் கடவுள் நம்பிக்கை. நல்லது தமிழ்நதி! உங்களோட எனக்கு எந்தச் சண்டையும் இல்ல; உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லே!

    ReplyDelete
  7. கடவுள் இல்லை என்பதை அறிவியலால் அறிவியல் பூர்வமாக விளக்க இயலும் என்று எழுத்தாளர் சுஜாதா தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் அவரும் ஆத்திகராகத்தான் இருந்தார்.ஆங்கிலத்தில் atheist,agnostic,skeptic, infidel என்று முழு மறுப்பாளர்,கொள்கை மறுப்பாளர்,அந்த வாதத்திலேயே நம்பிக்கையில்லாதவர் என பலவாறாக இருந்தாலும் தமிழில் வணக்கம் மாதிரி(good/ morning/after noon/evening/night என்றில்லாமல்),வணங்குபவர், வணங்காதவர் என்று இரண்டு பிரிவினர். அதில் சிரத்தை எடுப்பவர்,எடுக்காதவர், பாவத்தில் பகவானுக்கும் பங்குக் கொடுப்பவர்கள் என பல வகையினர் உண்ணா நோன்பு மாதிரி.உண்ணா நோன்பு என்பது எதுவும் உட்கொள்ளாதிருப்பது, அதில் சிறிது சிறிதாய் விலக்கு அளித்து தண்ணீர் அருந்தலாம்,பழச்சாறு அருந்தலாம்,பழம் உண்டால் தவறில்லை என்பது போல.
    சரி, அது என்ன மச்சம் என்றால் மீனா

    ReplyDelete
  8. என் பின்னூட்டத்தைப் பதிவிட்டிருந்தீங்க. அதுக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். கோபிச்சுக்கலேன்னா ஒரு கருத்தைச் சொல்லலாமா? //கணவனை இழந்தவளை 'விதவை'என்கிறார்கள். மனைவியை இழந்தவனுக்கு யாராலும் அறியப்படாத, புழக்கத்திலில்லாத தபுதாரன் என்றொரு சொல்லே இருக்கிறது. மொழியின் பாரபட்சங்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.// இதுல மொழியின் பாரபட்சங்கள் எங்கேர்ந்து வந்துதுக்கா? பாரபட்சம் மொழியிடம் இருந்தா, நீங்க சொல்ற அந்த வார்த்தையே இருந்திருக்காதே! ஆக, பாரபட்சம் எல்லாம் மனிதர்களிடம்தான், இல்லையா? அப்புறம்... மனைவியை இழந்த கணவனைக் குறிக்க ‘கம்மனாட்டி’ என்றொரு வார்த்தை உண்டு!

    ReplyDelete
  9. கிருபாநந்தினி,

    நான் கடவுளை நம்புகிறவள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது என்று சொல்வது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

    "உங்களோட எனக்கு எந்தச் சண்டையும் இல்ல; உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லே!"

    வலுச்சண்டைக்கு இழுத்தவர் நீங்கள்தான் கிருபாநந்தினி. நான் இல்லை. என்னுடையது அநேகமாக எதிர்வினையாகவே இருக்கும். சண்டைகளினால் உண்டாகும் மனவுளைச்சல் மிகப்பெரிது. அதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். எனக்கு மட்டும் உங்கள் மீது கோபமா என்ன? அதற்குப் பெயர் வருத்தம்!

    மனைவியை இழந்தவனை 'கம்மனாட்டி'என்று சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இன்றுவரை அதையொரு வசைச் சொல்லாக மட்டுமே அறிந்திருக்கிறேன். தவிர,அது பேச்சுவழக்கில் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். எதற்கும் அகராதியை எடுத்துப் பார்க்கிறேன். ஆனால், அச்சொல் அங்கிருக்கப் பெரிதும் வாய்ப்பில்லை.

    விதவை என்ற சொல் அறியப்பட்ட அளவுக்கு தபுதாரன் என்ற சொல் அறியப்படவில்லை. இந்தப் பதிவைப் படித்த எத்தனை பேருக்கு 'தபுதாரன்'என்ற சொல் தெரிந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? அதைத்தான் 'அறியப்படாத, புழக்கத்திலில்லாத'என்று அழுத்தி எழுதியிருக்கிறேன். சமூகத்தின் பாரபட்ச மனப்பாங்கை அவர்கள் கையாளும் மொழி வெளிப்படுத்துகிறது. சமூகம் கையாளும் ஓரவஞ்சகமான மொழியைத்தான் நான் குறிப்பிட்டேன்.

    'அவன் ஒரு தபுதாரன்'என்று முதுகின்பின் யாரையும் சுட்டிப் பேசி நான் கண்டதேயில்லை. நீங்கள் கண்டிருப்பீர்கள் போலும்.

    ஆனா... எப்பிடிங்க...? உங்களாலை மட்டுந்தான் இது சாத்தியமாகும்:)

    பத்மநாபன்,

    மச்சம் என்றால் மீன், இறைச்சி, நண்டு, கணவாய் போன்ற எல்லாம் அடங்கும். மரக்கறியல்லாதவை அன்றேல் புலால். இங்கே 'என்வி'(Non veg) என்று அழகுதமிழில் சொல்கிறார்களே... அது:)

    ReplyDelete
  10. வழக்கம் போல சுவாரஸ்யம்..எங்க தொட்டு எப்டி சுத்தினாலும் கடைசில இந்த மொழி இந்த மொழில கரெக்டா முடிக்கறீங்க :)

    ReplyDelete
  11. எனக்கு புடிச்ச வரி
    ‘நாத்திகன்…நாத்திகன்…’என்கிறார்கள். கடவுளை மறுக்கும் பெண்களை எப்படி அழைப்பது?

    எப்படிக்கா உங்கனால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது . அது தான் படைபாளியோ ? :)

    பிரச்சினைகளே இல்லாத ஒரு ஆள் இருந்தா (ஒருவேளை) அவருக்கு கடவுள் தேவை இல்லையா க்கா ?

    பெரியாரைப் படிக்கவாரம்பித்திருக்கிறேன்.

    இவ்வளவு நாள் உங்களுக்கு படிக்கணும் நு தோணலையா . :(.
    அப்ப ரொம்ப மாற்றத்த எதிர் பாக்க முடியாது .

    ReplyDelete
  12. "The God Delusion" by Richard Dawkins, is too technical in its language and it might put you off. Moreover you need to know the Catholic theology a bit to read that book. Only then you would understand the arguments of Richard Dawkins. But "God Is Not Great" is a simple read.

    ReplyDelete
  13. தமிழ்நதி போன்று ஒரு நவீன அரசியல் பிரக்ஞையோடு கவிதையில் இயங்குபவர் என நம்பக்கூடியவரிடம் ’கடவுள்’ மீதான (அது மதநீக்கம் செய்யப்பட்டது என்றாலும்)தடுமாற்றம் வியப்பளிக்கிறது. கடவுள் கருத்தாக்கம் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றியதுதான் என்பதை மார்க்சியம், பெரியாரியம் நமக்கு சமூக விஞ்ஞான அடிப்படையில் விளக்கியுள்ளன. நமக்கு முன் விரிந்துள்ள இந்த முடிவின்மையின் பெரும்புதிர் தொல்குடி நம்பிக்கைகளிலிருந்து நவீன பிரபஞ்ச அறிவிவியல் வரை மனித சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான ஞான விளையாட்டுக்குரியதுதான். அத்ற்கு, எல்லாவற்றிற்கும் மேலான சக்தி(கடவுள்) என ஒரு முற்றுப் புள்ளி தேவையா.எல்லா அடிப்படைகளும் தகர்ந்த பிறகு முடிவின்மையைன் முன் திகைத்து நிற்கும் நிர்வாணமும், கடவுள் இல்லை என்ற உறுதிக்குப் பிறகும் தேவையான அறம் பற்றியும் மனிதம் பற்றியும் நவீனத்துவத்திற்குப் பிந்தைய வரலாறு நமக்கு நிர்பந்திக்கிறது.

    ReplyDelete
  14. சுபகுணராஜன்Tuesday, April 27, 2010

    ’பெரியாரைப் படிக்கப்போகிறேன்’என்று பதிவு செய்து பெரியாரின் சிந்தனைகள் அவை எட்டியிருக்க வேண்டிய எல்லைகளை சென்றடையவில்லை என்பதனை சுட்டியுள்ளீர்கள்.தமிழ் வெளியில் காத்திரமான கவிதைச் செயல்பாடுகளின் வழி அறியப்பட்டிருக்கும் ஈழப்பெண் கவிஞர் அவர் என்பது,பெரியார் சிந்தனைகளை
    தமது சொத்தாக மட்டும் கொண்டிருந்தவர்கள் மீதான விமர்சனமும்கூட.ஈழ விடுதலைப்போராளிகளிடமும் அவரது
    பெரிய தாக்கத்தை எற்படுத்தவில்லை
    என்பதே உண்மை.எங்களின் ஆதர்சமான
    ‘தம்பி’யை மத அடையாளங்களுடன்
    பார்த்து அதிர்ந்ததுண்டு.ஈழத்தின் சுழல்
    புரிந்துகொள்ள சற்று கடிமானதுதான்.
    பெரியார் மதமறுப்பின் வழி சுயமரியாதையைதான் கட்டமைக்க முயன்றார்.எல்லா உயரிய சிந்தனைகளைப் போல பெரியார் சிந்தனைகளும் மூடப்பட்ட இறுதி கருத்தியலல்ல.சுயமரியாதை விளைவுகளுக்கான காரணங்களை ‘கடவுள் செயல்’ என்று
    முடித்துவிடாமல் ‘தன் செயல்’குறித்த
    விசாரணைக்கு இட்டுச் செல்வது என்பதே எனது புரிதல்.கடவுள் மறுப்பு
    பால்பேதம் அற்றது.

    ReplyDelete
  15. நன்றி ரெளத்ரன்,

    எங்கேர்ந்து பிடிக்கிறீங்க இப்படிப் பேரெல்லாம்... கோபக்காரர்போல...:)

    செந்தில்,

    நாங்க உட்கார்ந்து யோசிக்கிறதில்லை.:)

    "பிரச்சினைகளே இல்லாத ஒரு ஆள் இருந்தா (ஒருவேளை) அவருக்கு கடவுள் தேவை இல்லையாக்கா?"

    அதென்னவோ தெரியவில்லை... சிக்கல்கள் கைமீறிப்போகும்போதுதான் கடவுள் ஞாபகம் வருகிறது. மனிதர்கள் நம்பத்தகாதவர்களாக ஆகிவருவதாக ஒரு தோற்றப்பாடு காணப்படுவதால் (எல்லாக் காலங்களிலும் இப்படித்தான் சொல்கிறோம்...), நமக்கு மேலிருக்கும் சக்தியை நினைக்கிறோமாயிருக்கும்.

    ஆம் தன்ராஜ்,

    அந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பர் பெரிய படிப்பாளி. அவருக்கு அது இலகுவாயிருக்கலாம். எனக்கு... நீங்கள் சொல்கிற புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கிறேனே...


    பிரவீண்,

    "தமிழ்நதி போன்று ஒரு நவீன அரசியல் பிரக்ஞையோடு கவிதையில் இயங்குபவர் என நம்பக்கூடியவரிடம் ’கடவுள்’ மீதான (அது மதநீக்கம் செய்யப்பட்டது என்றாலும்)தடுமாற்றம் வியப்பளிக்கிறது."

    நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நான் பெரிய ஆளல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.:) ஆம்... என்னால் முற்றுமுழுதான முடிந்தமுடிவொன்றுக்கு வரமுடியவில்லை. கடவுள், மதம் பற்றி ஆழ்ந்து கற்று முடித்தாலும்கூட (அது முடியாதது)மனதின் ஒரு ஓரத்தில் மெல்லிய கீற்றாக அது ஒட்டிக்கொண்டிருக்குமென்றே நம்புகிறென். வளர்ப்பின்வழி ஊட்டியதை அவ்வளவு சீக்கிரத்தில் களைந்துவிடமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை.

    சுபகுணராஜன்,

    "’பெரியாரைப் படிக்கப்போகிறேன்’என்று பதிவு செய்து பெரியாரின் சிந்தனைகள் அவை எட்டியிருக்க வேண்டிய எல்லைகளை சென்றடையவில்லை என்பதனை சுட்டியுள்ளீர்கள்."

    'பெரியாரைப் படிக்கவில்லை'என்று சொன்னது அவரை ஆழமாகப் படிக்கவில்லை என்ற பொருளில்தான். மற்றபடி அவரைத் தெரிந்து வைத்திருக்கிறேன். முழுவதுமாக 'அறிந்து'வைத்திருக்கவில்லை.

    அதை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, பெரியாரை ஆழ்ந்து படிக்காதது தனிப்பட்ட என்னொருத்தியின் தவறு. அதை ஈழத்தவர் யாவருக்கும் பொதுமைப்படுத்தவியலாது. மற்றது, பெரியாரைப் படிப்பதைக் காட்டிலும் எங்கள் வாழ்வு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கியதாக, அதிகாரத்தின் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் மிகத் தேவையானதைத் தெரிவுசெய்து படிக்கவேண்டியவர்களாகவும் இருந்தோம். ஆனாலும், 'பெரியாரிஸ்ட்'என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அங்கு யாரும் இருந்ததாக - இருப்பதாக நினைவில்லை.

    தெரிந்துவைத்திருப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவல்லவா? நான் இத்தனை காலமும் தெரிந்துதான் வைத்திருந்தேன்.

    "கடவுள் மறுப்பு பால்பேதம் அற்றது"

    உண்மைதான். ஆனால், அதைக் கைக்கொள்பவர்களை விளிக்கும் பால்பேதச் சொல்.... அவசியமா? இல்லையா? யோசிக்கலாம். அல்லது 'கவிதாயினி'போன்றதொரு சொல்லைக் கண்டுபிடிக்கலாம்:)

    ReplyDelete
  16. god delusion by dawkins thamizhil velivanthullathu.kadavul- poi nambikkai endra peyaril.veliyeedu diravidar kazhakam.

    ReplyDelete
  17. இந்த விஷயத்தில நான் இன்னும் "சின்னப்பயல்" தான்..அதனால
    எதுவும் சொல்வதிற்கில்லை...
    ( தப்பிச்சிட்டேன்..)...:-)

    ReplyDelete
  18. தமிழ்நதி,

    எங்கடை தமிழிலில் பதிவு போட்டா ஏன் சண்டை வரவேணும்? உங்கள் தளத்துக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் மற்றவர்களின் கருத்துகளுக்கு, உணர்வுகளுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும், சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும், பரந்த மனப்பான்மை உள்ளவர்களாகவும் தான் எனக்கு தெரிகிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகளை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தானே இருக்கிறார்கள். அவர்களை மாற்றும் லட்சியத்தோடா நீங்கள் பதிவெழுதிக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையே.

    சும்மா, பயப்படாமல் நீங்கள் ஆசைப்பட்டது போல் ஒரு பதிவாவது எழுதுங்கோ. இல்லையெண்டால் பிறகு நாங்கள் ஈழத்தமிழரை தமிழ்நதி புறக்கணிக்கிறார் என்று "தப்பான" முடிவுக்கெல்லாம் வந்திடுவம். :)

    நானும் நீங்கள் தஞ்சமடைந்த நாட்டில் தான் தஞ்சமடைந்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. மீண்டும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்,கணவாய்=?

    ReplyDelete
  20. நூல் பற்றிய தகவலுக்கு நன்றி அன்பு. வாங்கிப் படிக்கிறேன்.

    சின்னப்பயலாய் இருப்பவர்கள் மட்டும் சின்னப்பயல் இல்லை. பல விடயங்களில் பெரியவர்களாய் தோற்றமளிக்கிறவர்களும் சின்னப்பயல்களாய் இருக்கலாம்:)

    ரதி,

    கட்டாயம் எழுதுறன். எதிர்பார்ப்பைக் கூட்டிப்போட்டு இப்பிடியொரு கண்ராவிப் பதிவை எழுதிப்போட்டாளே எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது.:) அதாலை கொஞ்சம் ஆறுதலாக எழுதுறன். அது சிறுகதையாகத்தான் இருக்கும். ஒரு பெரிய மனக்குமுறல் உள்ளுக்குள்ளை இருக்கு.

    பத்மநாபன்,

    ம் புரிகிறது. சென்னையில் நான் பழகிய சில நண்பர்களுக்கே கணவாய் தெரியவில்லை. நீங்களோ மலையில் வாழ்கிறீர்கள். அதுவொரு கடல்வாழ் உயிரினம். மேலே ஊதா நிற மெல்லிய தோலும் நடுவில் இளநீலத்திற்கு நெருக்கமான பொதுபொதுவென்ற உடலும் அந்த உடலின் ஒரு பகுதியில் கறுப்புநிற மைப்பையொன்றும் உள்ளே நடுவில் வெள்ளை நிற ஓடும் இருக்கும். மிகச்சிறிய கணவாய்களுக்கு ஓடு இருப்பதில்லை. அதை ஆங்கிலத்தில் squid என்று சொல்வார்கள். மிகுந்த சுவையான கடலுணவு.

    ReplyDelete
  21. இயற்கை கடவுளின் பாதுகாவலன்

    ReplyDelete
  22. தமிழ்ந‌தி!

    அழைப்பை ஏற்று அருமையுடன் எழுதிய‌மைக்கு முத‌ற்க‌ண் ந‌ன்றிக‌ள். இடையில் ஏதேதோ வேலைகள். இன்று தான் படிக்க நேர்ந்தது.

    //சாதியும் மதமும் இல்லாமல் இப்பூவுலகில் நிச்சயமாக வாழ்ந்துவிடமுடியும் என்றே நினைக்கிறேன்.//

    //திருவிழா தவிர்ந்த ஏனைய நாட்களில் கோயில்கள் அத்தனை அழகாயிருக்கும்! //

    அப்ப‌டியே வ‌ழிமொழிகிறேன்.

    //சாப்பிடப் போவதன் முன் சாமிக்கு அவசியம் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். //

    ஆஹா. ந‌ன்றி சொல்வ‌தென்ப‌து தான் க‌ட‌வுள் ந‌ம்பிக்கையில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ அம்ச‌மே.


    //மதத்தைத் தூக்கியெறியத் தோன்றுகிறது. அதேசமயம், ஏதோவொரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது; அதுவே நம்மை இயக்குகிறது என்ற பயம் இல்லாமல்போவது ஆரோக்கியமானதல்ல; அப்படி ஒன்று இல்லையெனில் தறிகெட்டலைவோம் என்றும் தோன்றுகிறது.//

    இதில் இன்னும் குழ‌ப்ப‌த்தில் தான் அலைகிறேன் நான்.

    உங்க‌ள் அம்மாவின் க‌வ‌லை தோய்ந்த‌ கேள்வியில் தொனித்த‌ அன்பு ம‌ன‌தைக் குழைத்த‌து!

    அப்புறம் "இது எஞ்சாமி" என்று எதையும் நான் சொன்ன‌தாக‌ நினைவில்லையே? ;-) எப்ப‌டியோ என் ப‌திவு பிடித்திருந்த‌தாக‌ச் சொன்ன‌த‌ற்கு ம‌கிழ்ச்சி!
    :-)

    ReplyDelete
  23. த‌லைப்பும் மிக‌ப் பிடித்திருக்கிற‌து! :)

    ReplyDelete
  24. /* ஜாலி’யாக எழுத நினைத்திருக்கிறேன் */

    நினைத்ததோடு சரி போலும்... :-)

    ReplyDelete
  25. ஆதவன்,

    'இயற்கை கடவுளின் பாதுகாவலன்'என்று சொல்லியிருந்தீர்கள். இயற்கையைப் பார்க்குந்தோறும் 'அதைப் படைத்த கலையுள்ளத்தை'வியக்கவே தோன்றுகிறது. நதிகள்,மலைகள்,மலர்கள்,பசுமைப்பள்ளத்தாக்குகள்,பட்டாம்பூச்சிகள்... பல இலட்சம் வார்த்தைகளாலும் எழுதித் தீர்க்க முடியாத அழகு.

    தீபா,

    "அப்புறம் "இது எஞ்சாமி" என்று எதையும் நான் சொன்ன‌தாக‌ நினைவில்லையே? ;-)"

    'எஞ்சாமி'என நான் குறிப்பிட்டதை நேரடிப் பொருள் கொள்ளாதீங்க. 'என்னளவில் கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவுதான்'என்பதை அந்தச் சொல்லுக்குள் சுருக்கியிருந்தேன்:)

    தாடித் தாத்தாவுக்கும் எலிஃபென்ட் சாமிக்கும் 'ஹலோ'சொல்லும் குழந்தை வளரும் வீடு ஆரோக்கியமானதாகவே இருக்கமுடியும்.

    சாணக்கியன்,

    /* ஜாலி’யாக எழுத நினைத்திருக்கிறேன் */

    நினைத்ததோடு சரி போலும்... :-)

    அப்டீங்கிறீங்க... நரசிம்மராவ் போல ஆயிட்டேனாக்கும்:)

    ReplyDelete
  26. தமிழ்நதி
    படைக்கப் பட்டதாகவா சொல்லுகிறீர்கள்…உண்டானதாகவல்லவா அறிவியல் சொல்லுகிறது..
    கடவுள் எப்போது தோன்றியிருக்கலாம்?
    சண்டைகளின்றி வாழ நல்லது கெட்டது தேவை என்று மனிதன் நினைத்திருக்கலாம். பயமும் பயனும் இல்லாவிட்டால் யாரும் நல்லது கெட்டதை நம்பமாட்டார்களென்று கடவுளைப் படைத்திருக்கலாம். கடவுளுக்கு பயம், பணிவு, காணிக்கை இன்னபிற தேவைப்படுவதைப் பார்த்தால் கடவுளைக் கண்டுபிடித்தவர்கள் ஆள்வோர்களாகவோ அல்லது ஆள விரும்புவோர்களாகவோ இருக்கலாம்.
    எல்லோரும் கடைப்பிடித்தால் கடவுளைப் படைத்தது நல்லதே..என்ன செய்வது, பெரும்பாலனவர்கள் நம்புவதாகச் சொல்லத்தான் செய்கிறார்கள்…உண்மையில் நம்புவது இல்லையே…
    இப்போது இயற்கையின் அதிசயங்களில் மறைந்திருக்கும் இறைவா… நாளை என் பேரனோ கொள்ளுப்பேரனோ இயற்கையிலிருந்து அதிசயங்களைப் பிரித்தெடுப்பானே…அப்போது எங்கே போய் கரைவாய் இறைவா…

    ReplyDelete
  27. காரல் மார்க்ஸின் கடவுள் பற்றிய கூற்றாக பிரபலமாக அறியப்படும் வாக்கியம் இது.. “மதம் என்பது அபின் போன்றது”. (அந்தக் காலத்தில் போரில் காயம் பட்ட வீரர்களுக்கு காயத்தின் வலி தெரியாமலிருக்க தற்காலிக வலிநிவாரணியாக அபின் கொடுப்பார்களாம்). ஆனால் அந்த ஒரு வரியுடன் அவர் நிறுத்திவிடவில்லை. அவ்வரிகளுக்கு முன்னதாக சொன்ன வரிகள் இவை
    “மதம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இருதயமில்லாத உலகின் இருதயமாகவும், ஆன்மா இல்லாத இடத்தில் ஆன்மாகவும் இருக்கிறது.”

    இன்னொரு இடத்தில் “மதம் என்பது நோயல்ல. நோயின் அறிகுறி” என்றும் கூறுகிறார்.

    நம்பிக்கைகள் முழுதும் அற்றுப் போய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் உலகில் நமக்கு சோசலிசமும் கிட்டவில்லை.. கடவுளும் வரவில்லை.. அதனால் தான் மதங்கள் மூலமாக ‘பெருமூச்சுகள்’ விடுகிறோமோ என்னவோ.

    சொக்கநாதா.. ஒரு வழி சொல்லப்பா..

    ReplyDelete
  28. //சர்ச்சைகளையும் சோகத்தையும் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, முகஇறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு ‘ஜாலி’யாக எழுத நினைத்திருக்கிறேன்.//
    நானும் முயன்றுபார்த்தேன் தமிழ்நதி. ஆனாலும் அந்தக்கிழவன் என்னை விடாது துரத்துகிறான்.
    http://chelliahmuthusamy.blogspot.com/2010/04/blog-post_29.html

    ReplyDelete
  29. ஆதவன்,

    கடவுளை நம்புகிறவர்கள் அது படைக்கப்பட்டதெனவும், நம்பாதோர் அது உண்டானதாகவும் அவரவர் நிலைக்குத் தக்கபடி நினைத்துக்கொண்டிருப்போம். அதற்கும் இதற்கும் இடையில் நின்று ஊசலாடும் என்னைப்போன்றவர்கள் 'படைக்கப்பட்டது'என்றே இப்போதைக்குப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    "இப்போது இயற்கையின் அதிசயங்களில் மறைந்திருக்கும் இறைவா… நாளை என் பேரனோ கொள்ளுப்பேரனோ இயற்கையிலிருந்து அதிசயங்களைப் பிரித்தெடுப்பானே…அப்போது எங்கே போய் கரைவாய் இறைவா…"

    ஒருவகையில் இயற்கையிலிருந்து அதிசயங்களைப் பிரித்தெடுக்கும் வேலை ஆரம்பித்தாகிவிட்டது. ஏரிகளைத் தூர்த்து வீடு கட்டுகிறோம். மரங்களை வெட்டி மழையைத் துரத்துகிறோம். பறவைகளின் கீச்சிடலை மறக்கடித்து தொலைக்காட்சி இரைந்துகொண்டேயிருக்கிறது. இயற்கைதான் இறைவன் எனில், அந்த இறைவன் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறான்.

    அம்பேதன்,

    "சொக்கநாதா.. ஒரு வழி சொல்லப்பா.."

    அவன் வரமாட்டான். இல்லை... நம்பாதே:)))

    செல்லையா முத்துசாமி,

    "ஆனாலும் அந்தக்கிழவன் என்னை விடாது துரத்துகிறான்."

    என்ற வாசகத்தைப் படித்தபோது,

    'அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான்'என்ற கதைத் தலைப்பு நினைவில் வந்தது. உங்கள் பதிவைப் போய்ப் படித்தேன். 'வேந்தனும் அல்லவை செய்யான்'என்று இனியொருவரும் எழுத வாய்ப்பிராது போலுள்ளது:)

    ReplyDelete
  30. /* அப்டீங்கிறீங்க... நரசிம்மராவ் போல ஆயிட்டேனாக்கும்:) */

    அப்படி எல்லம் ஒன்னும் இல்ல தமிழ்... ஏதோ நகைச்சுவையோ பகடியோ எழுதுவீங்கன்னு நெனச்சேன்... ஆனா அதுவும் ஒரு சிந்தனையா, விவாதமா போயிடுச்சேன்னு சொன்னேன்.. :-)

    ReplyDelete
  31. நாத்திகள் என்று
    சொல்லிக்கொள்ளலாமே?

    ReplyDelete