4.22.2010

அம்மா! வரவேண்டாம்


கடற்படை காலாட்படை
விமானப்படை வேவுப்படை
நாலாபுறம் எல்லைப்படை
எல்லாம் இருந்தென்ன?
தாய்க்கு எங்கள் தாய்க்கு
எழுபத்தொன்பது பிராயம்
இந்திய இறையாண்மைக்கு
அவரால் நேருமாம் அபாயம்!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

மானத் தமிழ் மகனை ஈன்ற
எம் தாய் வெடி குண்டா?
வன்மம் வளர் அரசே!-உன்
நோய்க்கோர் மருந்துண்டா?
காந்தி பிறந்தாராம்-இங்கு
புத்தர் மலர்ந்தாராம்
கருணை சிறிதில்லா மண்ணில்
கல்கி பிறப்பாராம்!!!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

'அறியோம் யாம் அறியோம்'என
சொரிவார் பல பொய்கள்
சரியோ இது முறையோ எனில்-கலைஞர்
அதற்கும் எழுதுவார் அஞ்சல்.

தமிழை ஈன்ற தமிழே-எங்கள்
தாயுன் மலர்ப்பாதம்
இம்மண்ணில் படவேண்டாம்-விழி
நீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்!

31 comments:

  1. இவர்களிடம் இதைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்க தமிழ்? :-(

    ReplyDelete
  2. அழியாச் சாபம் இன்னொன்றை ஏற்றிருக்கிறோம்!

    அவ்வளவே!

    ReplyDelete
  3. முதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு

    ReplyDelete
  4. தெரிந்ததுதானே சந்துரு

    என்.ஆர்.சிபி,

    ஈற்றில் நீதி வெல்லுமாம்.... சொல்கிறார்கள்:) கசந்த புன்னகையோடு காத்திருப்போம்.

    அனானி,

    என்ன மிரட்டலா? முதலில் உங்கள் பெயரில் வந்து பின்னூட்டம் விடப் பாருங்கள்... அதன்பிறகு என்னை விரட்டும் வேலையில் ஈடுபடலாம். வேண்டுமானால் 'முதுகெலும்பில்லாதவன்'என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.

    இந்தத் தெருவில் கல்லடிபட்ட நாய் அடுத்த தெருவுக்கு ஓடிப்போய் காலையுயர்த்தி ஊளையிடுமாம் அதுதான் எனக்கு நினைவில் வருகிறது.

    தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  5. முதுகெலும்புள்ளவன்Thursday, April 22, 2010

    போயும் போயும் தமிழ்நதியையெல்லாம் அனுமதித்த அரசாங்கம் பார்வதியம்மாளை அனுமதிக்காதது ஆகப்பெரிய தவறு என்று கண்டிக்கிறேன்

    ReplyDelete
  6. //காந்தி பிறந்தாராம்-இங்கு
    புத்தர் மலர்ந்தாராம்
    கருணை சிறிதில்லா மண்ணில்
    கல்கி பிறப்பாராம்!!!//

    இருக்கும்..இருக்கும்...!

    அங்க யாரு பிறந்தா என்ன? நாசமா போகட்டும் அந்த நாடும்!

    ReplyDelete
  7. //முதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு//

    வாடா(டி) ராசா(த்தி),

    (ஆம்பளையா, பொம்பளையா-ன்னு தெரியில. அதான் இப்படி)

    எந்த ஊரு நமக்கு? அப்பா அம்மா பேரு வெக்கலியா உனக்கு?

    ReplyDelete
  8. சகோதரி தமிழ்நதி! தங்கள் கவிதைகள் அத்தனையும் வீரம் நிறைந்தவை.... சொல்லில் அடங்கா பாராட்டுக்குரியவை ....அருமை!!! தொடரட்டும்....

    தமிழ்த்தாய் இப்படியொரு பெண்ணை பெற்றெடுத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்....

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அதே மதுரைக்காரன் நான். மதுரை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை எனக்கு.... காரணம் வேறொன்றுமில்லை தமிழ் வளர்த்த ஊருக்காரன் என்ற பெருமைதான்....

    தமிழை உலகம் முழுதும் சென்றடையச்செய்த அந்த மாபெரும் தலைவனை ஈன்ற தாயும் , தந்தையும் அங்கு பிறந்த நீங்களும் எத்தனை பெருமைப்பட வேண்டும்...

    இங்கு சில அரசியல் நாதாரிகள் மானமில்லாத முதுகெலும்பில்லாத கேவலமான மனிதமற்ற பிறவிகளை அப்புறப்படுத்த வழியில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும் எங்களால் வருத்தப்பட மட்டும்தான் முடிகிறது....



    மரியாதை கலந்த அன்புடன் , கவிதன்.

    ReplyDelete
  9. தோழமை தமிழ்..

    உங்கள் கவிதையில் ஒரு சொல்லை மாத்திரம் திருத்துங்கள்.. கலைஞர் என்றிருக்க கூடாது கருணாநிதி என்றே இருக்கவேண்டும் கவிதை அழகியலுக்கு ஒத்துவரா எனக்கருத வேண்டாம் அரசியல் கவிதைக்கான அழகியலை அதன் பாடுபொருளே தீர்மானிக்கின்றன.

    பார்வதி அம்மா வந்தன்று சென்னையில் இருந்தேன். நண்பர்கள் அறைக்கு செய்தி வந்தது. உடன் கிளம்பியபோது அடுத்த செய்தியாக திருப்பி அனுப்பிய செய்தி வந்தது.

    அனானி..

    உங்களுக்கு பெயரைக்கூட நாங்கள்தான் தேர்ந்தெடுத்த தர வேண்டுமா..
    ஸ்டார்ட்டிங் பிராபளத்தை சரிசெய்ய நல்ல........ பாருங்கள்.

    ReplyDelete
  10. உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
    செய்தித் தாள்களை கனத்த மனத்துடனே
    இன்றைய நாட்களி்ல் புரட்ட வேண்டியுள்ளது

    ReplyDelete
  11. வேதனையான நிகழ்வு.

    காரணமானவர்களை வரலாறு தூற்றும்.

    ReplyDelete
  12. தேர்ந்தெடுத்த வரிகள்

    ReplyDelete
  13. நான் முன்பொரு முறையும் இடுகையை பார்வையிட்டேன்.கவிதை நடைக்கும் எனது வார்த்தைகளுக்கும் கொஞ்சம் மெல்லிய ஊடல் என்பதால் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன்.இருந்தும் தலைப்பு என்னை உறுத்தியது.காரணம் இன்றைய நிகழ்வுகள்,அது சார்ந்த துயரங்கள் எத்தனையோ இருந்தாலும் பூகோளம் என்ற ஒட்டலும்,மொழி என்ற வேரும் நல்லதும்,கெட்டதும் ஏதாவது ஒரு விதத்தில் தமிழ் மண்ணை சார்ந்தே இருக்கிறது.இருக்கும் என நம்புகிறேன்.இப்போதைய துக்கங்களின் மிகப் பெரிய காரணகர்த்தாக்கள் நாங்கள்.இருந்தாலும் அரசியலமைப்பு என்ற தடங்கல்களை நீக்கவும்,தூரப்பார்வைக்கும் வராதே என்ற வாசகம் அம்மா!வாருங்கள் என்றாக வேண்டும்.

    ReplyDelete
  14. சில நண்டுகள் எட்டிப்பார்த்து விட்டு சின்ன அதிர்வுக்கே வங்குக்குள் போய் ஒளிந்து கொள்ளும்.நடையை தொடர்வது கடற்காற்றை சுவாசிப்பவர்களின் பொறுப்பு.

    ReplyDelete
  15. //முதல்லே உன்னை இங்கே விட்டு வைத்திருப்பதே தவறு//

    தேசிய எல்லைகளுக்கு உரிமைவெறி கொண்டாடுகிறவர்களும் ஒருவிதமான சாதிவெறி பிடித்தவர்களே.

    //'அறியோம் யாம் அறியோம்'என
    சொரிவார் பல பொய்கள்
    சரியோ இது முறையோ எனில்-கலைஞர்
    அதற்கும் எழுதுவார் அஞ்சல்.//

    கருணாநிதியோ கோபாலசாமியோ அவர்களை இதில் தமிழரென்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு சாதிமதிப்பே.

    அறத்தோடு அமைந்தால் அரசியல் நன்றுதான், ஆனால் அப்படி எங்கே அமைகிறது?

    என்றாலும் ஒரு கவி அறத்தோடு நிற்கவேண்டுவதே முறை. அப்படி நின்றமைக்கு என் பாராட்டுகள். வாழ்க!

    ReplyDelete
  16. காற்றுப்பட்டாலே கலவரம் வெடிக்கும் என அச்சம் தான் தரையிறங்கவிடாமல் தடுத்தது...துணைக்கண்டமே தொடைநடுங்கி நிற்கிறது..இதுவும் ஒரு வகையில் வெற்றிதான் மூத்தகுடிக்கு...!

    ReplyDelete
  17. முதுகெலும்பில்லாதது, முதுகெலும்புள்ளவன் எல்லோருக்கும் நன்றி.

    "போயும் போயும் தமிழ்நதியையெல்லாம் அனுமதித்த அரசாங்கம் பார்வதியம்மாளை அனுமதிக்காதது ஆகப்பெரிய தவறு என்று கண்டிக்கிறேன்."

    தனக்கு முதுகெலும்பு இருப்பதாக அறிவித்துக்கொள்ளவேண்டிய துயரம் பெரிதுதான் முதுகெலும்புள்ளவன். ஆம்... என்னை மறுதலித்தாலும் அம்மாவை அனுமதிக்காதது தவறு என்று சொல்லும் 'பெருந்தன்மை'க்கு நன்றி:)

    சத்ரியன்,

    பெரியாரைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பெரியார் வந்து மீண்டும் பிறந்தாலன்றி இனி மீட்சியில்லை. அவர் வந்து பிறந்து... இனி வளர்ந்து... அப்படி ஏதாவதொரு நன்முகூர்த்தம் தென்பட்டால் எப்படியாவது கண்டுபிடித்து அவரைக் கொன்றுவிடுவார்கள்.

    "எந்த ஊரு நமக்கு? அப்பா அம்மா பேரு வெக்கலியா உனக்கு?"

    சந்தநயம் மிகுந்த வார்த்தைகள். (எனக்குப் பரிந்து பேசியதற்காகச் சொல்லவில்லை) முதுகெலும்புள்ளதற்குப் பெயரில்லைப் போலும்... 'பெயரில்லாப் பிள்ளை' இது:)

    நன்றி கவிதன்,

    புகழ்ச்சி வார்த்தைகள் தற்காலிக மகிழ்ச்சி அளிப்பனவாக இருந்தாலும் உள்ளுக்குள் அயர்ச்சி மேலிடுகிறது. அரசியல் மேடைகளில் இறைக்கப்படும் 'மன்னவனே தென்னவனே..'புகழுரைகளைக் கேட்டு 'இதப் பாருங்கடே'என்று அயர்ந்துபோவதன் நீட்சியே அது. ஆம்... தலைவன் (உண்மையான தலைவன்) பிறந்த மண்ணில் பிறந்தமைக்காக நான் பெருமிதமடைகிறேன்.

    அன்பின் சரவணன்,

    "கலைஞர் என்றிருக்கக் கூடாது கருணாநிதி என்றே இருக்கவேண்டும் கவிதை அழகியலுக்கு ஒத்துவரா எனக்கருத வேண்டாம்."

    அழகியலுக்கு ஒத்துவருகிறதோ இல்லையோ அப்படி விளிக்க சில சமயங்களில் மனது வருவதில்லை. அதற்கு அவர் வயதில் மூத்தவர் என்பதனோடு அறிவிலும் (அது ஈழத்தமிழரின் அழிவுக்கு வழிகோலியது என்பது வேறு)பெரியவர். இதை 'சீன்'போடுவதற்காகச் சொல்லவில்லை. தன்மதிப்பைத் தான் இழந்தார் நாமென்ன செய்வது?

    உங்களது குறுஞ்செய்தி வழியாகவே நானும் அந்தச் செய்தியை அறிந்தேன். நன்றி.

    'ஸ்டார்ட்டிங் ப்ராப்ளம்'டாக்டர் ருத்ரனிடம் சொல்லிப் பார்க்கலாம்:)

    பத்மநாபன்,

    இப்படியான கவிதைகளை நான் எழுதுவதில்லை. காரணம் சொற்களை வலிந்து அடுக்கவேண்டியிருக்கும். அத்தோடு பிரச்சார நெடியும் அடிக்கும். நான் புதுக்கவிதை விரும்பி. புதுக்கவிதை மிகையுணர்ச்சிகளின்போது கைவிட்டுவிடுவதுபோலவொரு தோற்றம். அதனால் இப்படியொரு வடிவம். சகித்துக்கொள்ளுங்கள்:)

    விஜயராஜ்,

    வரலாறு எல்லாவற்றையும் குறித்துவைத்துக்கொண்டிருக்கிறது. அதை வன்முறை அழிப்பான் வைத்தும் அழித்துவிடமுடியாதென்பதை அறியாதிருக்கிறார்கள்.

    முத்துலட்சுமிக்கு சமீபகாலங்களாக வேலை அதிகம் போலிருக்கிறது.:) நகைப்புக்குறி அன்றேல் துயரக்குறியோடு முடித்துவிடுகிறீர்கள். நான் அதையும் செய்வதில்லைத்தான் தோழி.

    நன்றி இளமுருகன்.

    ராஜநடராஜன்,

    "இன்றைய நிகழ்வுகள்,அது சார்ந்த துயரங்கள் எத்தனையோ இருந்தாலும் பூகோளம் என்ற ஒட்டலும்,மொழி என்ற வேரும் நல்லதும்,கெட்டதும் ஏதாவது ஒரு விதத்தில் தமிழ் மண்ணை சார்ந்தே இருக்கிறது.இருக்கும் என நம்புகிறேன்."

    அப்படி இருப்பதுதான் துயரம். நாங்கள் எங்களுக்குத் தொடர்பே இல்லாத அந்நியர்களிடம் உரிமையோடு கோபித்துக்கொள்ளமுடியுமா என்ன?

    இப்படி இழிவாக நடந்துகொண்டு திருப்பி அனுப்பியபிறகு 'வாருங்கள் அம்மா'என்று அழைக்க எப்படி மனசு வரும்? நாங்கள் நேசித்த தலைவரின் தாய் என்ற உணர்வெழுச்சியின்பால் விளைந்த கோபந்தான் அது. மேலும் கவிதை என்பது... உங்களுக்கே தெரியும் அது எப்போதும் நேரடியானதன்று.

    மதிப்பிற்குரிய ராஜசுந்தரராஜன்,

    "அறத்தோடு அமைந்தால் அரசியல் நன்றுதான், ஆனால் அப்படி எங்கே அமைகிறது?"

    அதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை. எல்லோரும் எல்லாம் தெரிந்துதானிருக்கிறார்கள்; எல்லோரும் ஒன்றும் அறியாதவர்கள் போலிருக்கிறார்கள்.

    உங்களது 'முகவீதி'நான் அடிக்கடி எடுத்துப் பார்க்கும் கவிதை முகம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சின்னப்பயல்,

    கீழ்க்காணும் வரிகளை வாசித்தபோது சின்னப்பயல் வளர்ந்துவருவதாக உணர்கிறேன்.

    "காற்றுப்பட்டாலே கலவரம் வெடிக்கும் என அச்சம் தான் தரையிறங்கவிடாமல் தடுத்தது."

    முன்னாடி போய்ட்டே இருங்க... வந்துட்டே இருக்கோம்:)

    ReplyDelete
  18. அனானி,

    ரொம்பத்தான் புண்பட்டுட்டிங்க போலருக்கு... இப்படிப் படமெடுத்திருக்கிறீங்க... உங்கள் பின்னூட்டம் இங்கு பிரசுரிக்கப்படமாட்டாது. இப்பதான் தெரிந்தது... உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று... நீங்கள் யாருடைய ஆள் என்று... நான் முன்னமே சொன்னதுதான்... அங்க அடிச்சா இங்க வந்து குரைப்பீங்களா?

    இங்கு அழகி, கிழவி இல்லை பிரச்சனை.. கவிதை கவிதையா இருக்கா இல்லையான்றதுதான் பிரச்சனை. மேலும் தோலில் இல்லை அழகு. அப்படிப் பொதுப்புத்தி அளவில் பார்த்தால்கூட நீங்க சொல்ற ஆள்... no comments. நன்றி உணர்வில் என்னிடம் 'வாலாட்ட'வேண்டாம். நிச்சயமாக நீங்கள் ருத்ரனிடம் போகத்தான் வேண்டும். இல்லையென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைவீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. //காந்தி பிறந்தாராம்-இங்கு
    புத்தர் மலர்ந்தாராம்
    கருணை சிறிதில்லா மண்ணில்
    கல்கி பிறப்பாராம்!!!//
     
    மனிதம் செத்த மண்ணில் யார் பிறந்து என்ன புண்ணியம்?

    ReplyDelete
  20. அனானி,

    அது 'விசிறு'அல்ல, விசர். தெரியாத சொற்பிரயோகங்களை ஏன் முயற்சிக்கிறீர்கள்? மறுபடியும் உங்கள் பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. தனியாக அமர்ந்து புலம்பிக்கொண்டிருங்கள். நீங்கள் யாரென்பதை நான் அறிவேன். நீங்கள் பொருட்படுத்தப்படாமல் போனதன் ஆற்றாமையால் புலம்பியிருக்கிறீர்கள்.

    எதிர்காலம் என்னைப் பொருட்படுத்துகிறதா புறக்கணிக்கிறதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் தொடர்ந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்தானிருப்பேன். எனது அரசியல் மற்றும் இலக்கிய இலக்கு என்னவென்று துல்லியமாக எனக்குத் தெரியும். உங்களைப் போன்ற முகமற்றவர்களின் மிரட்டலுக்கோ அலட்டலுக்கோ அஞ்சுகிற ஆளாக நானில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    (நான் பொருட்படுத்தப்பட்டால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, புறக்கணிக்கப்பட்டால் உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்போலிருக்கிறது.)

    குறைந்தபட்சம் தன் பெயரைக்கூட வெளியிட்டுக் கருத்துச் சொல்லத் திராணியற்ற அல்லது தகுதியற்ற உண்மையற்ற உங்களைப்போன்றவர்கள்தான் கைகொட்டி நகைக்கப்படப் போகிறவர்கள். நகைக்கப்பட்டுக்கொண்டுமிருப்பவர்கள்.

    உங்களிடமும் உங்கள் கூட்டத்திடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது. அதன் பெயர் 'நேர்மை'. உங்களைப்போல எந்தச் சலுகையின்பொருட்டும் நான் விலைபோனதில்லை.

    முடிந்தால் நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்திக்கொண்டு பேச வாருங்கள். எனக்குத் தெரிந்த உங்கள் நரிக்குணத்தை மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே..! எனது எதிர்வினை இனி எந்தக் கருணையும் காட்டாததாக இருக்குமென்பதையும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  21. உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.


    வெறுமனே அநீதிகளுக்கு எதிரான வார்த்தைகளை
    மட்டும் இன்னும் எவ்வளவு
    நாட்களுக்கு பகிர்ந்துகொண்டு இருக்கப்போகிறோம்
    என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பதாக தெரியவில்லை. :(

    ReplyDelete
  22. அருமையான சோகம் ததும்பும் கவிதை

    ReplyDelete
  23. உணர்வுக்கு நன்றிங்க.

    http://anbudannaan.blogspot.com/2010/04/blog-post.html

    இதையும் பாருங்க.

    ReplyDelete
  24. நன்றி நதி...வசிஷ்டர் வாயால் ப்ரம்ஹரிஷி...மகிழ்ந்தேன்...!

    ReplyDelete
  25. 'விழிநீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்'
    ’அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே/ செல்வத்தை தேய்க்கும் படை’..
    வரலாறு எவ்வளவு குரூரமாக இருந்தாலும் அறம் வெல்லும் என்ற நம்பிக்கைதான் நம்மையெல்லாம் உந்திச் செல்கிறது. தங்கள் கவிதைகளில் ஒளிரும் அர்சியலின் கூர்மையேறிய அறத்திற்கு நன்றி...பிரவீண்

    ReplyDelete
  26. வந்தாரை எல்லோரையும் வாழ வைக்கும் தமிழகம், இப்போது வந்தாரை ( தமிழர்களை மட்டும் )
    நோக வைக்கிறது என்பது வேதனை அளிக்கிறது !

    ReplyDelete
  27. Heart cried as I read the poem.

    ReplyDelete
  28. Really nice,
    also the next one....
    எனக்கு ‘மதம்’பிடிக்காது! as there is not command am posting here....
    Sorry to say this as am very poor in tamil writing i had given my commands in english....you tamil is great madam. really i appreciate.... this one is heart touching... i got tears when read this,

    ReplyDelete
  29. புள்ளி மான் என்றாலும், பெற்றது புலியல்லவா. அதுதான் தலைவனை தந்த தாயை கண்டு பயம் இந்த போலி தமிழினத் தலைவருக்கு.

    ReplyDelete
  30. Anbirku oriya tholare,
    thamilan yenrum yarukum payanthavan illai...
    vendumanal puli pathunkum paiurathuku, (ithai nan solli ne theria vendiyathu illai :)) atharku peru payam illai...
    Yem arasan pudi ingu mel(central) sabai ammavidam ullathal angu kudukum key ku inga adukirathu pommai...ithu arasiyal...
    puliyai perru yedutha thaiku maruthuvam pakkam kulla narigal yeppadi idam kodukum.

    ReplyDelete
  31. Incredibly pleasant document .I just came across upon your weblog as a consequence required to tell that I have really enjoyed browsing your page posts.After all I am going to be subscribing to your rss feed furthermore I anticipate you compose again before long!

    In conclusion , allow me thank you for your patience with my English as (I am confident you have figured this by now,), English is not my principal tongue as a result I am using Google Translate to build out how to note down what I sincerely have in mind to voice.

    ReplyDelete