7.28.2009

மனதின் நடை


மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான்.

களைப்பு, அயர்ச்சி, ஆற்றாமை, மனவுளைச்சல், துக்கம் எல்லாம் கலந்த மனநிலையொன்றிலிருந்து உற்சாகத்திற்கு மீட்டிருக்கிறது இடமாற்றம். சனங்களும் வாகனங்களும் நெருநெருக்கும் தெருக்களிலிருந்து தப்பித்து வந்துவிட்டதாய் தற்காலிக மகிழ்வொன்று ஊற்றெடுக்கிறது. எத்தனை சுத்தம் இந்த வீதிகள், எத்தனை நாசூக்கு இந்த மனிதர்கள் என்று வியக்கும் மனதிற்கு ‘புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்’என்பதும் புரியாமலில்லை. மேலும், மாநகரங்களில் தரியாத கிராமத்தவளின் மனம் இருக்கும்வரை மேலைத்தேயங்களில் நிலைக்காமல் பெயர்ந்தோடும் கால்களை நானறிவேன். இந்த மாதத்தில் இலண்டனில் வெயிலும் குளிரும் கைதேர்ந்த பரிசாரகனால் கலக்கப்பட்ட ‘காக்டெய்ல்’போல கூடியிருக்கின்றன. செழிசெழியென்று செழித்தடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்காவில் கைவீசி நடக்கும்போது கசடுகள் பின்னழிந்து மறையக் காண்கிறேன். நம்மைக் கட்டிவைத்திருக்கும் அன்றேல் நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் கணனியை முதலில் விட்டுத்தொலைய வேண்டுமென்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அப்படி விடுவதென்பது அடையாளத்தைத் தொலைப்பது மாதிரியும் அறிமுகமற்ற மனிதர்கள் நடுவில் தொலைந்து போவது போன்ற திகைப்பிருளினுள் ஆழ்த்துவதையும் சொல்லித்தானாக வேண்டும்.


சில விடயங்களில் பைத்தியக்காரர்கள் நம்மைவிடத் தெளிவானவர்கள் என்றும் தோன்றுகிறது. (அனானிக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறேன்) களத்தில் யாரோ சண்டை பிடித்தார்கள்; யாரோ செத்துப்போனார்கள்; யாரோ சிறைப்பட்டார்கள்; யாரோ அங்கவீனர்களாக்கப்பட்டார்கள்; யாரோ பசித்திருக்கிறார்கள்; ஒரு உணவுப்பொட்டலத்துக்காக யார் யாரோ வரிசையில் நிற்கிறார்கள்; யாரோ வன்கலவப்பட்டார்கள்; யாரோ வாழ்ந்த வீட்டிலேயே புதைந்துபோனார்கள்; யார் யாரோ இரவுகளில் விம்மி வெடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்; யாரோ காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்; யாரோவின் குழந்தை தரையிலடித்துக் கொல்லப்பட்டது; யாரோ… யாரோ… நாம் இணையத்தில் பம்மாத்துக் காட்டிக்கொண்டிருக்கிறோம். முன்னமே ஒத்திகை பார்த்துக் காயப்படாமல் பொருதும் குத்துச்சண்டை வீரர்களினுடையதைப் போன்ற பொய்மை நம்மிலும் இருக்கிறது. ஆதவனோடு முரண். ஷோபா சக்தியோடு சண்டை. குணாளனோடு முறுகல். அவர்களுக்கெல்லாம் நான் ஆகாதவள். புலியெதிர்ப்பாளர்களுக்கெல்லாம் புலி ஆதரவாளர்கள் வெத்துவேட்டுக்கள். வெண்ணை வெட்டிகள். புலி ஆதரவாளர்களுக்கோ புலியெதிர்ப்பாளர்கள் துரோகிகள். கத்தியினால் கீறிப் பிளக்கும் வலியை விட அதிகமாகத்தான் இருக்கிறது வார்த்தைகளால் கீறுவதும் கீறப்படுவதும். எத்தனை இலகுவாகக் கட்சி பிரிகிறோம். எத்தனை இலகுவாக குத்தி முறிகிறோம். கோடை மண்டைக்குள் அனலை ஊற்றுகிறது. சொற்களில் நெருப்புத் தெறிக்கிறது. ஆளற்ற வீட்டில் பெருகும் விஷ ஜந்துகள் போல வன்மம் வளர்கிறது.

எல்லோருக்கும் ஏதோவொன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. எழுத்து, இசை, காதல், காமம், பணம், இசம்… ஏதோவொரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடத் தோன்றுகிறது. ஒரு தேசாந்திரியாக எங்கோ ஒரு கிராமத்தில் பசுங்கதிர்கள் அசையும் அழகைப் பார்த்துக்கொண்டு வரம்பில் அமர்ந்திருக்கும்போது, ‘தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது?’என்ற கேள்வி எழப்போகிறதா என்ன?

தமிழில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் எழுதுகிறோம். அதிகபட்சமாக ஒரு பத்தாயிரம் பேர் படிப்பார்களாயிருக்கும். அதிலும் கவிதை படிப்பவர்கள் ஆயிரத்துக்கும் குறைவு. ஐந்நூறு பிரதிகள் போட்டால் இழுத்துப் பறித்துத் தீர்வதிலிருந்து தெரிகிறது கவிதையின் ‘சீத்துவம்’ அந்த இருநூறு பேருக்குள் எத்தனை குழுக்கள். போட்டா போட்டிகள். வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள். ‘அவன் அவளோடு படுத்த கதை’கள். ‘அவள் அவனோடு குடித்த கதை’கள். ‘பிடித்து ஆடிய இடுப்பில் இருக்கிறதா கட்டுடைப்பு’என்ற நையாண்டிகள்.

இதையெல்லாம் தாண்டி வாழ்க்கை இருக்கிறது. தெருவில் நடந்துபோகும் ஒருவனை நிறுத்தி “நீ சூரியன் தனித்தலையும் பகல் வாசித்திருக்கிறாயா?”என்றால், ‘தப்பி வந்துட்டியா’என்பதுபோலத்தான் பார்ப்பான். வாழ்நாளில் ஒரு கவிதைகூட வாசித்திராமல், ஒரு எழுத்தாளப் பெருமக்களின் பெயரும் பரிச்சயமில்லாமல், அரசியலே பேசாமல் கோடானுகோடிப் பேரின் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கு அடையாளங்கள் வேண்டியிருக்கவில்லை. சாமரங்கள், பல்லக்குகள், வாரிசு அறிவித்தல் தடாலடிகள் அவசியமாகவில்லை.

ஓட்டங்கள் எல்லாம் சூனியத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன. விவாதங்கள் பொருளற்றுக் கரைவதைப் பார்க்கமுடிகிறது. இப்போது வேண்டியது சுயவிமர்சனமன்றி வேறில்லை. நிலவெறிக்கும் ஒரு இரவில் தனித்த கரையில் கட்டப்பட்டிருக்கும் ஓடம்போல சின்னத் தளம்பலாகத் தளம்பிக்கொண்டிருக்கிறது மனம். அது ஓயவேண்டும். ஒரு பளிங்குபோல துலங்கவேண்டும். அதுவரையில் உலகத்தை வேடிக்கை பார்க்கலாம்; ஒரு குழந்தையின் விழிகளோடு.

7.17.2009

ஷோபா சக்தி! புலி படுத்தால் நரி நாயகனாகுமா?



இதை வாசிக்க ஆரம்பித்திருக்கும் நீங்கள் நினைப்பது சரி. இது வேலையற்றவர்களின் வேலைதான். ஷோபா சக்தி ‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று தனது வலைத்தளத்தில் எழுதி நாளாகிறதுதான். இருந்தபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஷோபா சக்தியின் பினாமியைப் போலவே பிதற்றிக்கொண்டிருக்கும் குணாளன் என்பவரின் கட்டைப் பஞ்சாயத்து தாங்கமுடியவில்லை. ‘பதில் சொல்’ என்ற தொனியில் அந்தக் குரல் கீச்சிடுகிறது. ஷோபா சக்தியோ நான் கொலை செய்துவிட்டு ‘கள்ள மௌனம் சாதிப்பதாக’வும் ‘பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்’என்றும் தனது இணையத்தளத்தில் அருட்டியிருக்கிறார். (மிரட்டுகிறார் என்று எழுதினால் ‘தமிழ்நதி கழிவிரக்கத்தில் கதைக்கிறார்’ என்று கண்ணைக் கசக்க ஆரம்பிப்பார்) ‘இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைக் குண்டியைத் தூக்கி அடிப்பான்’என்றொரு பழமொழி உண்டு. நான் இரும்புமில்லை. இளகினவளுமில்லை. ஆனாலும், புலியெதிர்ப்பையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களைப்போல எனக்கு நேரமில்லை என்பதைச் சொல்லித்தானாகவேண்டும். சில நாட்களுக்கு முன்னரே ஆதவன் தீட்சண்யாவுடனான அக்கப்போர் நடந்துமுடிந்தது. எனது கவிதைத் தொகுப்பு வேலைகளை அது மிகவும் பாதித்திருந்தது. அடுத்து திருவாளர் ஷோபா சக்தியுடன் பொருதி எனது சக்தியை வீணடிக்கக் கூடாதென்பதனால் ஒதுங்கியிருந்தேன். வழக்கம்போல எனக்குள்ளிருக்கும் கோபம் என்னைச் சும்மா இருக்கவிடுவதாயில்லை. ஆகவே ஷோபா சக்தியின் மறுப்புக்கு மறுப்போ பருப்போ ஏதோவொன்றை எழுதித் தொலைத்தாக வேண்டியிருக்கிறது.

இதை வாசிக்கும் உங்களில் அநேகரைப் போல ‘அங்கே அத்தனை இலட்சம் பேர் தடுப்புமுகாம்களில் அவதிப்பட இங்கே இவர்கள் தின்றுகொழுப்பெடுத்து மீந்த நேரத்தில் மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்கிறார்கள்’என்ற கருத்தே எனக்கும் இருக்கிறது. இவர்களோடு விவாதித்துப் பயனில்லை, இல்லாத ஊருக்கு வழி இதுவென்று நான் ஒதுங்கியிருப்பதை ‘கள்ள மௌனமாக’இவர்கள் சொல்வதன் பின்னாலிருக்கும் காழ்ப்புணர்வைத் தாளமுடியவில்லை.

முதலில் ஷோபா சக்தியின் அரசியலுக்கு வருவோம். என்னை ‘அரைகுறை’ என்று சொல்லும் ஷோபா சக்திக்குப் புலியெதிர்ப்பு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர் அதிமேதாவித்தனமாகக் கொடுத்துவரும் நேர்காணல்கள், இணையத்தளங்களிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இவரது நிலைப்பாடு தௌ;ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். பௌர்ணமியன்று நிலவு உதிக்கவில்லை என்றால்கூட ‘புலிகளின் சதியால் நிலவு மறைந்துவிட்டது’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்தான் இவர். தவிர, அரசியல் என்பது பட்டறிவிலிருந்தும் படிப்பிலிருந்தும் கேள்வி ஞானத்திலிருந்தும் வரக்கூடியது. ஒரு குழந்தை பிறக்கும்போதே ‘பூர்ஷ்வா’என்றுசொல்லிக்கொண்டு பிறப்பதில்லை. சும்மா ‘அரசியல்… அரசியல்’என்று எங்களுக்குப் பூச்சாண்டி காட்டவேண்டாம். நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள் என்றால், நாங்கள் இயக்கத்துள் இருந்தோம். உங்களைப் போல மொண்ணையான-ஒற்றைச்சாயலுடைய புலியெதிர்ப்பு அரசியலைத்தான் உங்கள் அகராதிப்படி ‘அரசியல்’என்ற பதத்திற்குள் அடக்குகிறீர்கள் என்றால், அந்த அரசியல் எங்களைப் போன்றவர்களுக்கு வேண்டியதில்லை.

வேதாளம் எதிலிருந்து என்மீது தொற்றுகிறது என்று பார்த்தால், “புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கவில்லை”என்று கீற்று இணையத்தளத்துக்கு நான் கொடுத்திருந்த நேர்காணலிலிருந்துதானாம். அதற்கான எதிர்வினையை மட்டும் ஷோபா சக்தி காட்டவில்லை. புலிகள் மீதான ஒட்டுமொத்த கெட்டித்த கோபத்தையும் என்மீது உருக்கி ஊற்றப்பார்க்கிறார். என்மீது எகிறிப்பாய்வதன் வழியாக அவர் தனது அரசியல் நேர்மையை நிரூபிக்கப் பார்க்கிறார். என்னைப் புலிகளின் பிரதிநிதியாக நினைத்து வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார். நான் குற்றவாளிக் கூண்டில் தலைகுனிந்து நிற்கவேண்டும்@ கண்ணீர் மல்கி கதறிக் கதறியழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்போல. ஏனென்றால், அவர் மனதில் எனது சித்திரம் மஞ்சளும் கறுப்புமாய்த்தான் படிந்திருக்கிறது.

நான் கீற்று நேர்காணலில் நான் சொல்லியிருந்தது எனது அப்போதைய அறிதலின் பாற்பட்டது. “சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக வன்னியின் போர் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது”என்று சுசீந்திரன் வகையறாக்கள் என்று புதுவிசைக்கு, உண்மைக்கு மாறாக நேர்காணல் கொடுத்தபோது வாயை மூடிக்கொண்டிருந்த ஷோபா சக்தி, புலிகளுக்கு ஆதரவான குரல்களுக்கு மட்டும் கொதித்தெழும் மாயந்தான் என்ன? நான் அறி;ந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை.

‘மக்களுக்கு புலிகள் செய்த துரோகம்’ என்ற வாசகத்தை அடிக்கடி ஷோபா சக்தி பிரயோகிக்கிறார். இதுவரை புழக்கத்திலிருந்த ‘துரோகம்’என்ற வார்த்தையின் பொருளையே தலைகீழாக மாற்றத் தவண்டையடிக்கிறார். ஆம் ஐயா… அத்தனை ஆயிரம் புலிகள் மண்ணுக்காகத் தம்மை ஈந்து மண்ணோடு மண்ணாகியது துரோகந்தான். பிரான்சிலிருந்தபடி இன்னமும் நீங்கள் பிதற்றிக்கொண்டிருப்பது மாபெரிய தியாகந்தான்.

உங்கள் இணையத்தளத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நீங்கள் இனவாத அரசுக்கெதிராகப் பேசியது அதிகமா, அன்றேல் புலிகளுக்கெதிராகக் கொந்தளித்தது அதிகமா என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

“புலிகளிடமிருந்து தப்பிவரும்போது கொல்லப்பட்ட, புலிகளால் பணயமாகப் பிடிக்கப்பட்டிருந்து இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட அப்பாவிச் சனங்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிப்பேயற்ற துரோகம் என்பதைத் தமிழ்நதி ஏற்றுக்கொள்கிறாரா?”

என்ற கேள்வியின் வழியாக உங்களது நிலைப்பாட்டை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஷோபா சக்தி, நீங்கள் ஒரு புலியெதிர்ப்பாளரே அன்றி ஒட்டுமொத்த அதிகாரங்களுக்கெதிரானவர் அல்ல என்பது இதிலிருந்து புலனாகவில்லையா? உங்கள் மண்டைக்குள் புலிகள் மீதான கோபம் பிரமாண்டமான மலை போல உருத்திரண்டிருக்கிறது. அதன் முன் அரசாங்கம் செய்த-செய்துகொண்டிருக்கும் அராஜகமான படுகொலைகள் சின்னக் கட்டிபோலத் தெரிகின்றன. ‘புலிகளினால் பணயமாகப் பிடித்துவைக்கப்பட்டிராவிட்டாலும்’, ‘புலிகளிடமிருந்து தப்பிவரும்போதும்’சனங்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலும் பேரினவாதிகளால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ‘எல்லாம் தெரிந்த தெய்வமாகிய’உங்களுக்கு நான் நினைவுறுத்த வேண்டியதில்லை. இப்போது ‘புலி நீக்கம்’செய்யப்பட்ட மக்கள் தடுப்புமுகாம்களில் எப்படி வதைபடுகிறார்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

ஒரு போராட்ட இயக்கத்தின் குறைந்தபட்ச நியாயங்களின் அடிப்படையிலேனும் அவர்களை ஆதரிக்கும் நான் குற்றவுணர்வுகொள்ள வேண்டியவள் என்றால், ‘புலிகளின் தியாகங்களை தமிழ்மக்களுக்கெதிரான துரோகமாக’ச் சித்தரித்து, மறைமுகமாக பேரினவாத அழிப்புக்குத் துணைபோய்க்கொண்டிருக்கும் உங்களை என்னவென்பது? ‘எனக்குப் பின்னால் ஒருவன் பிலாப்பழத்தோடு நிற்கிறான் அவனை நினைத்துச் சிரித்தேன்;’ என்று வாய் கிழிபட கிழிபடச் சொன்ன மாம்பழக்காரனின் நினைவுதான் வருகிறது. ‘எத்தனை அருவியில் குளித்தாலும் கையிலுள்ள இரத்தக்கறை போகாது’என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், தவிர்த்தே இருக்கமுடியாத அடிப்படை நியாயங்களைக் கொண்ட ஒரு போராட்டத்தை ‘மாபியா இயக்கம்’ என்று பரப்புரை செய்வதன் வழியாக இனவாதிகளுக்குச் சாமரம் வீசும், குடைபிடிக்கும் உங்கள் உடல்முழுவதும் தமிழ்மக்களின் இரத்தமாகவல்லவோ வழிந்துகொண்டிருக்க வேண்டும்?

ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்க வெளிக்கிடும்போது, முதலில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது. நேரடியாக சம்பந்தப்படாதவர்கள் பொய்ச்சாட்சி சொல்ல வரக்கூடாது. “ஈழத்தமிழர்களது அவலங்களைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை?”என்ற கேள்விக்கு ஆதவன் தீட்சண்யாவிடமிருந்து வந்த பதிலே அடிப்படையில் தவறானது. நான் மக்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும்போது “விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள்”என்கிறார். விடுதலைப் புலிகளும் மக்களும் வேறு வேறு என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் இப்படியான பதில்களின்போது மட்டும் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக்கிவிடுவது எதனால் என்பது எனக்குப் புரியவேயில்லை. ‘கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாக இருக்கப் பழகுவது நல்லது’என்பது உங்களுக்கும் தெரிந்த கவிதை வரிதான். (ஆம். அடுத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்) ‘இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை’ என்று ஆதவன் அந்தச் சமயத்தில் கேள்வி எழுப்பவேண்டிய தேவை என்ன? ஒரு கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் வேறொரு கேள்வியை முன்வைப்பது போலத்தான் அது இருந்தது. தவிர, இஸ்லாமியர்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டது மாபெரிய தவறு என்பதை விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட எங்களைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதைத் திரும்பத் திரும்பக் கேட்பது எதனால்? இது எப்படி இருக்கிறதென்றால், ‘பூமி உருண்டை’என்று நிறுவப்பட்ட பிற்பாடு, ‘பூமி உருண்டையாக இருக்கிறதா? இருக்கிறதா?’என்று நச்சரிப்பதைப் போலிருக்கிறது. அந்த வீடியோவை உங்கள் நண்பரிடமிருந்து ஒரு தடவை முடிந்தால் வாங்கிப் பாருங்கள். ‘முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது தவறு என்றுதான் நாங்களும் சொல்கிறோம் ஆதவன்’என்று அதில் நான் சொல்லியிருக்கிறேன்.

“நீங்கள் கேட்காததால் நாங்களும் கேட்கவில்லை”என்ற தொனிப்பட ஆதவன் பேசவில்லை என்று வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். அப்படியானால் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும். “இல்லை… நீங்கள் சொல்வது தவறு. நாங்கள் எழுதியிருக்கிறோம்”என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, அவரே தனது கைப்பட வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகளை என்னை நோக்கி எழுப்பியது எதனால்? உங்களுக்கு நேரம் இருந்தால் அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றின் கீழும் ‘நாங்கள் ஏன் கேட்கவேண்டும்?’என்று எழுதிப்பாருங்கள். மிகப் பாந்தமாகப் பொருந்தும்.

உங்கள் நண்பர் ‘மூக்கைச் சிந்தி எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்கவில்லை என்பதில் மகிழ்கிறேன்’என்கிறார். நீங்களோ ‘வெற்றுப் புலம்பல்’, ‘கழிவிரக்கம்’, ‘அழுவாச்சி’என்றெல்லாம் எழுதுகிறீர்கள். நான் ஒரு பெண் என்கிற காரணத்தால் எடுத்ததற்கெல்லாம் அழுகிற ஆளாக என்னை நீங்கள் கற்பனை செய்துவைத்திருக்கிறீர்கள்.

ஆம்… நான் எனது மக்களுக்காக அழுதேன்தான். அதை ‘போலிக் கண்ணீர்’என்றும் ‘மாமிசம் விறைத்துப்போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர்’என்றும் பழிப்புக் காட்டுகிறீர்கள். போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பரப்புரைத்ததன் வழியாக குரூர சந்தோசம் கொள்ளும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் உங்கள் எழுத்தென்ற நச்சுவிதையைத் தூவுவதன் வழியாக பேரினவாத அரசாங்கத்துக்கு காவடி தூக்கும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலியெதிர்ப்புக் காய்ச்சலில் வெந்து தணலாகிக்கொண்டிருக்கும் உங்களால் எங்கள் மக்களுக்காக ஒரு துளிக் கண்ணீர் சிந்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால், வதைபடும், கொல்லப்படும் எல்லா மக்களுக்காகவும் (புலிகளாலோ அரசாங்கத்தாலோ) நான் உண்மையிலும் உண்மையாக அழுதேன் என்பதை உங்களைப் போன்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. அது பசப்புக் கண்ணீராகவே இருந்துவிட்டுப் போகட்டும். இணையத்தளங்களில் தலை கூழாகிக் கிடந்த குழந்தைகளைக் கண்டு ‘புலிகளைப் பின்தொடர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி’என்று கைகொட்டி நகைத்திருக்கலாம். ஆனால், இணையத்தளங்களில் வந்த-வரும் புகைப்படங்களையும் செய்திகளையும் பார்த்து இரக்கமுள்ள எந்த மனிதராக இருந்தாலும் அழவே செய்வர். எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்த எங்கள் மக்கள் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் இராணுவத்தான்களிடம் கையேந்தி நிற்பதைப் பார்த்து எவரால் அழாதிருக்க முடியும்? எந்த இனவாத அரசாங்கம் அந்த இனவழிப்பைச் செய்ததோ அதன் ஆட்சியின் கீழிருக்கும் சிங்கள இனத்தவரும்கூட அழவே செய்வர். நீங்களும் அழுதிருப்பீர்கள்; புலிகள் அழிக்கப்பட்டபோது ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பீர்கள். ஏனென்றால், என்ன விலைகொடுத்தும் புலிகளை அழிக்கவேண்டுமென்று தலைகீழாக நின்ற பேரினவாதிகளின் பெருவிருப்புக்குச் சற்றும் குறைந்ததன்று தங்களது புலிக்காய்ச்சல். அல்லது புலியெதிர்ப்புப் பாய்ச்சல்.

‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று உங்களால் எழுதப்பட்ட கடிதமோ கண்ராவியோ அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்: “இது என்மீதான கோபமன்று. விடுதலைப் புலிகள் மீதான கோபந்தான். அது எப்படி என்மீது திரும்பியிருக்கிறதென்றால், புலிகளுக்கெதிரான அவரது காகிதப் புரட்சியை அன்றேல் புரட்டை ஆணித்தரமாக நிறுவுவதற்கெதிராக ஒலிக்கும் ஒரு சிறு முனகலாக எனது குரல் அவரைப் பாதித்திருக்கிறது. அதுதான் இத்தனை எள்ளல், துள்ளல்.”

திரு.அன்ரன் பாலசிங்கத்தை ‘மதியுரைஞர் அல்ல; மதுவுரைஞர்’ என்று தேனி சொன்னதை தனிமனித தாக்குதல் என்று கண்டிக்கத் தெரிந்த பெருந்தன்மையாளரான, பெருந்தகையாளரான தங்களுக்கு, ‘பொய்க்குப் பிறந்தவர் தமிழ்நதி’என்று சொல்வது மட்டும் தனிமனிதத் தாக்குதலாகத் தெரியவில்லையா? ‘நீலிக்கண்ணீர் வடிக்கிறார்’என்பது தனிமனிதத் தாக்குதலில் சேர்த்தியில்லையா? பொதுவெளியில் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரை ‘கள்ளமௌனம் சாதிக்கிறார்’, ‘முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’என்பதெல்லாம் எந்த நாகரிகத்தில் சேர்த்தி?

உங்களுடைய நண்பரான ஆதவன் தீட்சண்யாவோ ‘தமிழ்நதி மூக்கைச் சிந்தி பதிவு எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்காமல் இருந்தாரே’என்கிறார். நீங்களோ நான் கழிவிரக்க அரசியல் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். கழிவிரக்கத்தை வைத்துக்கொண்டு ஒரு பற்பொடிப் பக்கெட் கூட வாங்கமுடியாது என்று எனக்குத் தெரியாதா? நான் என்ன போர்க்களத்திலா இருக்கிறேன்? அல்லது தெருவோரத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறேனா கழிவிரக்கத்தினால் இரந்து கேட்க? தமிழ்நதி என்பது ஒரு பெண்ணாக இருப்பதால் கழிவிரக்கம் என்று புறந்தள்ளிவிட உங்களுக்கு வசதியாக இருக்கிறது. (இதையும் கழிவிரக்கம் என்று சொல்லிவிடாதீர்கள்) இப்படியெல்லாம் பேசுவதன் மூலமாக உங்களுடைய ஆணாதிக்க மனோபாவத்தை, அடியில் படிந்துள்ள கறுப்புவண்டலை வெளியில் அள்ளிக்கொட்டுகிறீர்கள். உருப்படியாக ஒரு கவிதையை அல்லது கதையை எழுதத் தகுதியற்றவளாக, கழிவிரக்கத்தை மட்டும் நம்பிப் பிழைப்பு நடத்துமளவு எழுத்து வங்குரோத்தில் நான் இருந்துகொண்டிருக்கவுமில்லை.

மேலும், “கடந்த சில மாதங்களாக உக்கிரமாக நடத்தப்பட்ட இனத்துடைத்தழிப்புக்கு எதிராக உங்கள் குரல்கள் உயரவில்லையே… அது ஏன்?”என்பதே நான் மதுரையில் எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி. யாரைப் பார்த்து அந்தக் கேள்வியை நான் எழுப்பினேனோ அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். ‘ஈழப்பிரச்சனையில் ஈடுபாடு கொண்டு எழுதியவர்’களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இனவழிப்புக்கு எதிராக தக்க சமயத்தில் குரல் கொடுப்பது வேறு; ஈழப்பிரச்சனை பற்றி ஆற அமரப் பேசுவது வேறு என்ற புரிதல் ஷோபா சக்திக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து கதைகளும கவிதைகளும் எழுதிய வேறும் பலருடைய (உங்களுடைய பட்டியலில் அடங்காத) பெயர்களை வேண்டுமானால் நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் (அ)நியாயத்திற்கு பெயர்களைப் பட்டியலிட்டுக் கூட்டுச்சேர்க்காதீர்கள். உங்களைப் பற்றி எப்படியொரு பிம்பம் அவர்களது மனதில் இருக்குமென்பதை அவர்கள் சொல்லாமலே நானறிவேன். உங்களுக்கு ஜால்ரா தட்டும் ஒரு சிலரைத் தவிர யாவரும் அறிவர்.

நீங்கள் மாக்ஸிசம், கம்யூனிசம், மயிரிசம் எல்லாம் படித்திருக்கலாம். புத்தகங்களில் படித்ததையெல்லாம் நடைமுறைக்கொவ்வாமல் கக்கியும்வைக்கலாம். ஆனால், சாதாரணர்களாகிய எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், பேரினவாத அரசாங்கம் எங்கள் இனத்தை ஆரம்பத்திலிருந்து காவுகொண்டுவந்தது, நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டோம், கேட்டுக்கேள்வியின்றிக் கொல்லப்பட்டோம். எங்களது மீட்பர்களாக விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றமும் எழுச்சியும் பெற்றது. (ஆம். அவர்களும் கொலைசெய்தார்கள்) அதுவொரு நீதியான போராட்ட இயக்கமாக எங்களைப் போன்ற சாதாரணர்களுக்குத் தோன்றியது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வளர்ந்தார்கள். போராடினார்கள். பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள். இது எங்களுக்கு தெரிந்த எளிய சூத்திரம். என்ன காரணத்தினால் உங்களுக்குப் புலியெதிர்ப்புக் காய்ச்சல் வந்தது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த கம்பசூத்திரம்.

நீங்கள் பேசும் அரசியலில் “ஐயோ! புலிகள் வென்றுவிடுவார்களோ… வென்று விடுவார்களோ என்ற பதைப்பை இதுநாள்வரை கண்டோம். “தோற்றுவிட்டார்கள் ஹைய்யா தோற்றுவிட்டார்கள்” என்ற களிப்பை இப்போது காண்கிறோம். ஆக, உங்களுக்கு மக்களைப் பற்றி ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. புலிகள் தோற்கவேண்டும் அதுவொன்றே உங்களது ஒரே முனைப்பு. இலக்கு. குறிக்கோள். வேண்டுதல்.

தலைவர் பிரபாகரன் எனக்குக் கடவுளாயிருப்பதில் உங்களுக்கேன் இவ்வளவு கடுப்பு என்று எனக்குப் புரியத்தானில்லை. ஒருவேளை யாரை நான் வழிபடவேண்டும் என்பதற்கு உங்களிடம் விண்ணப்பம் அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ… எனக்குப் பிடித்திருந்தால் சாத்தானைக்கூட வணங்குவேன். (இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது) சீரடி பாபாவையோ தெருவில் போகிற விறகுவெட்டியையோ தெருப்பொறுக்கியையோ கூட கும்பிடுவேன். உங்களுக்குக் கடுக்கிறதா என்ன? யாரை நாம் வணங்குவது என்பதுகூட நீங்கள் குறிப்பிடும் ‘தனிமனித புண்ணாக்கு’ உரிமையுள்தான் அடங்குகிறது என்றறிக.

என்ன செய்தாலும் நரி நரிதான். புலி புலிதான். நரி கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்ளட்டும். கழுத்துப்பட்டை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளட்டும். தம்மபதத்தை கையில் வைத்துக்கொண்டு கருணையைப் போதிக்கட்டும். சமவுரிமை, சமாதானம், புத்தம், காந்தியம் எதைவேண்டுமானாலும் பேசட்டும். எங்களைப் போன்றவர்களின் கண்களில் நரி நரிதான். புலி புலிதான். ஒருபோதும் நரிகளை வணங்குதல் செய்யோம். தொண்ணூறு வீதமான தமிழர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கிறது. (கருத்துக்கணிப்பு வேண்டுமானால் நடத்திப்பாருங்கள் ஷோபா சக்தி)

களத்துப்புலிகள் இப்போது அரங்கில் இல்லை. பார்க்கலாம்…. காகிதப்புலிகள் நீங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று. அதுதான் நாடு நாடாகப் போய்க் கூட்டம் போடுகிறீர்களே… இப்போது தமிழகத்திற்கு விஜயம் செய்திருப்பதாக அறிகிறேன்.


‘டெக்கான் குரோனிக்கல்’, ‘தீராநதி போன்ற ஊடகங்களில் உங்கள் நிலைப்பாட்டைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறீர்களே… ‘செத்தும் கெடுத்தது இந்தப் புலி’என்ற வகையில். நண்பர்களே! ஷோபா சக்தி என்ன சொல்லியிருக்கிறார் என்று இங்கே போய்ப் பாருங்கள். http://www.shobasakthi.com/?p=470


முன்பு எழுதியதுபோலத்தான் பூனை இல்லாத வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம். அல்லது புலி இல்லாத காட்டில் நரிக்குக் கொண்டாட்டம் என்றும் சொல்லலாம். கொண்டாடுங்கள் ஷோபா சக்தி. தங்கள் இனவிடுதலைக்காகப் போராடி, பல்வேறு நாடுகளின் கூட்டுச் சதி என்ற வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட ‘மாவீரர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடிய மகோன்னதன்’ என்று உங்கள் பெயர் வரலாற்றில் பதியப்படத்தான் போகிறது. எங்களைப் போன்றவர்களின் வாயை உங்கள் வாதத்திறமையால் மூடிவிடலாம். வரலாற்றின் வாயை எதைக்கொண்டு மூடுவதாக உத்தேசம்?

7.10.2009

நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு கதைசொல்லி


ஒரு ஊரிலே ஒரு அக்கா இருந்தாள். அவளுக்குத் தங்கச்சி இருந்தபடியால்தான் அவள் அக்காவானாள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. தங்கச்சியின் உலகம் இரவில் பேய்களாலும் துர்க்கனவுகளாலும், பகலில் பள்ளிக்கூடத்தாலும் மிகுதி அக்காவாலும் நிரம்பியிருந்தது. அக்கா ஒரே சமயத்தில் வெள்ளந்தியாயும் துணிச்சல்காரியாகவும் வாயாடியாகவும் இருந்தாள். அவளளவில் பள்ளிக்கூடம் என்பது கதைப்பதற்கு நிறையப் பேர்களைக் கொண்டதோர் இடம். புளியங்கொட்டைகளையும் மாங்காய்களையும் பள்ளிக்கூடப் பையினுள் தவறாது எடுத்துப்போனாள். தங்கச்சியோவெனில் அம்மாவின் சேலைத்தலைப்பிலிருந்து நேரடியாக அக்காவின் பாவாடை நுனிக்குப் பெயர்ந்தவள். இரவில் ஒன்றுக்கிருக்கப்போகும்போது அக்காவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வாள். வளவின் இருண்ட மூலைகளில் கண்கள் அப்போது பதிந்திருக்கும். தங்கச்சி அக்காவைப் போலில்லை அழுத்தக்காரி என்றாள் அம்மா. மேலும் யாருமறியாத இரகசியங்களாலானது தங்கச்சியின் மனம்.

அவர்கள் தட்டான்கள் பறந்து திரியும் வெளிகளில் ஏனைய சிறுவர்களோடு விளையாடினார்கள். நாயுண்ணிப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டார்கள். மரங்களுக்குப் பின்னாலும், வீட்டின் புழக்கமில்லாத பகுதிகளிலும் கழிப்பறையிலும் அவர்கள் ஒளித்துப் பிடித்து விளையாடினார்கள். சில சமயங்களில் அம்மாவின் சேலையை எடுத்துச் சுற்றிக்கொண்டு அக்கா ஆசிரியையாகிவிடுவாள். அவர்கள் வீட்டுச் சுவர்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளாகி, பூவரசந்தடியின் பச்சைத்தழும்புகளைத் தாங்கின. அக்கா சட்டி பானையில் பாவனைச் சமையல் செய்தாள். தெருவில் திரியும் பூனை, நாய்களை குழந்தைகளின் பெயர்சொல்லி சாப்பிட வருமாறு அழைத்தாள். தொளதொளவென்ற ‘சேர்ட்’டைப் போட்டிருக்கும் அப்பா வீடு திரும்பும்போது எல்லோரும் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டிருக்கவேண்டுமென்பது தற்காலிக அம்மாவாகிய அக்காவின் கட்டளை.

சில வருடங்களில் அக்கா பெரிய பெண்ணாகினாள். கன்னங்களும் நெற்றியும் மினுமினுக்க திண்ணென்றிருந்த அக்காவையிட்டுத் தங்கச்சிக்குப் பெருமிதந்தான். அக்கா ஏதோவொரு சினிமாவில் பார்த்த எவளோவொரு கதாநாயகியை நினைவூட்டினாள். அக்கா அருமையான கதைசொல்லி. எப்போதோ பார்த்த சினிமாவில் வந்த கதாநாயகன் எப்படி பத்தடிக்கு மேல் எகிறிப் பாய்ந்;து சண்டைபிடித்தான் என்பதை அக்கா சொல்லும்போது தோழிகள் வாய்பிளந்து கேட்டிருப்பதைத் தங்கச்சி அவதானித்திருக்கிறாள். கதைக்கு உபரிச் சுவை சேர்க்க அக்கா இடையிடையே ஓசைகளையும் எழுப்புவதுண்டு. ‘விசுக்கெண்டு பாய்ஞ்செழும்பி அடிக்கேக்கை ஒம்பது பேர் றொக்கெட் போலை அங்காலை போய் விழுந்தாங்கள் பாக்கோணும்’என்பாள். இடையிடையே அந்தப் படத்தின் பாடல்களைப் பாடியும் காண்பிப்பாள். அவள் பாடும்போது இராகம் முற்றிலும் மாறிவிட்டிருக்கும். தோழிப்பெண்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. இலவசமாக ஒரு முழுநீளப்படம் பார்த்த திருப்தியோடு மனசில்லாமலே எழுந்திருந்து தங்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள். மிட்டாய்காரனைத் தொடரும் குழந்தைகளைப் போல அவளை யாராவது தொடர்ந்தபடியிருந்தார்கள். அவளோடு கதைப்பதற்கு எல்லோரும் விரும்பினார்கள். குறிப்பாக இளைஞர்கள். அக்கா எவருடைய சமையலறைக்குள்ளும் சுவாதீனமாக நுழைந்து கோப்பையில் சோற்றை எடுத்துப்போட்டுச் சாப்பிடுமளவிற்கு அக்கம்பக்கங்களில் அனுக்கத்தைச் சம்பாதித்திருந்தாள். கூடப்போகும் தங்கச்சி கூச்சப்பட்டுக்கொண்டே அங்கிருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சின்னக்குரலில் பதிலளித்துக்கொண்டிருப்பாள். “வாக்கா போகலாம்”என்பவளின் குரல் அன்றைய சங்கதிகள் தீர்ந்தபிற்பாடுதான் அக்காவின் காதில் விழும். ஆனால், அக்கா தங்கச்சியோடு மிகுந்த பிரியமாயிருந்தாள். எங்குபோனாலும் அவளைக் கூட்டிக்கொண்டே போனாள். அக்காவின் பாவாடை நுனி அன்றேல் சட்டையின் நுனி தங்கச்சியின் கையில் மற்றொரு விரலைப் போல இருந்தது. கடைகளுக்குள் தேங்காயை எடுக்கக் குனியும்போது தங்கச்சியும் அக்காவோடே சேர்ந்து குனிவதைப் பார்த்து கடைக்காரர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள்.

அக்காவும் அவளும் சண்டைபோட்டதேயில்லை; ஒருநாளைத் தவிர. அன்றைக்கு அக்கா ஒரு இளைஞனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் சின்னதாக ரோஜாப் பூ பூத்திருந்தது. கண்களில் ஒளியின் அலையடித்தது. நீலத்தில் வெள்ளைக்கோடுகள் போட்ட சட்டையை அன்றைக்கு அக்கா அணிந்திருந்தாள். அவன் ஒல்லியாக- முற்றத்தில் நின்ற வாழைமரம் போல நெடுத்திருந்தான். அவனது பேச்சுக்கு அக்கா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். தெருவில் யாராவது தடக்கி விழுந்தாலே சிரிக்கிற ஆள்தான் அவள். என்றாலும், தங்கச்சிக்கு எரிச்சலாக இருந்தது. “வாக்கா…”என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். “கொஞ்சம் பொறு… அப்பிடி உனக்கென்ன அவசரம்? நீ போறதெண்டால் போ”என்றாள் அக்கா இலேசாகக் கோபம் தொனிக்கும் குரலில். தங்கச்சிக்கு அழுகை வந்துவிட்டது. வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.

பிறகென்னடாவென்றால் அந்த நெடுவலை அக்கா காதலிப்பதாக ஊருக்குள் கதைக்கத் தொடங்கினார்கள். அண்ணா செருப்பால் அடித்தார். அம்மா விளக்குமாற்றால் அடித்தா. அப்பா கன்னங்களில் ஓங்கி ஓங்கி அறைந்தார். அக்கா அழுதாள். ஆனாலும், அவனைத்தான் ‘கலியாணம் கட்டுவன்’என்று சொல்லிவிட்டாள். இல்லையென்றால் மருந்து குடித்துச் செத்துப்போவேன் என்று மிரட்டினாள். அம்மா பட்டினி கிடந்து பார்த்தா. அக்கா அம்மாவுக்கு மேல் கிடந்தாள். அக்காவின் மருந்துக் கதை இந்தக் கதையின் கடைசிவரையில் வேலை செய்தது. முடிவில் அக்காவின் பிடிவாதம் வென்று, அந்த நெடுவலும் அக்காவும் பாலும் பழமும் சாப்பிட்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு அக்கா இன்னமும் அழகாகிவிட்டாள். அழகழகான சேலைகளைக் கட்டிக்கொண்டு அத்தானாகிவிட்டவனோடு வெளியில் போய்வந்தாள். தங்கச்சியால் அக்காவின் சேலை நுனியைப் பற்றிக்கொண்டு கூடப் போக முடியவில்லை. படுத்திருந்து இரகசியமாக அழுதாள். என்றாலும் அக்காவின் மீதான பாசம் குறையவில்லை. அக்காவும் அன்பு குறையாமல்தானிருந்தாள்.

அக்காவின் அறைக்குள் இருந்திருந்தாற்போல அழுகைச் சத்தம் கேட்டது. பிறகு கண்கள் சிவந்துபோய் வெளியில் வந்த அக்காவைத் தங்கச்சி குழப்பத்தோடு பார்த்தாள். அம்மாவும் அக்காவும் குசுகுசுப்பது எதுவும் தங்கச்சிக்குப் புரியவில்லை. பிறகு அக்கா வீடு மாற்றிக்கொண்டு போய்விட்டாள்.

அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்தது. அது சின்னச்சூரியன் போல இருந்தது. விடுமுறை நாட்களில் அக்கா சமைத்து முடிக்கும்வரையில் அதைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டோ, காகம், குருவி காட்டிக்கொண்டோ இருப்பாள் தங்கச்சி. “சித்தியோடை இருக்கிறியா… செல்லக்குட்டி”என்று அக்கா இடையிடையே வந்து செல்லம் கொட்டிவிட்டுப்போவாள். போகும்போது தங்கச்சியை சின்னதாய் ஒரு அணைஅணைத்துவிட்டுப் போவாள்.

இப்போதெல்லாம் யாருடனும் அக்கா அதிகம் பேசுவதில்லை. குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாள். இல்லையென்றால் எங்கோ வெளியில் அவள் பார்வை சிக்கிக்கொண்டு விடும். அத்தான் வேலை முடிந்தாலும் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை. அவரைப் பற்றி ஊருக்குள் நிறையக் கதைகள் உலாவின.

இரண்டாவது குழந்தை பிறந்தது. அதுவும் ஆண் குழந்தைதான். அது உரித்துப் படைத்து அக்காவைப் போலவே இருந்தது. “உனக்கொரு பெட்டைச் சட்டை போட்டால் சரியாய் அவள்தான்”என்று அம்மா கொஞ்சுவாள். இடைவெளி விடாமலே மற்றுமொரு குழந்தையையும் பெற்றெடுத்தாள் அக்கா. மூன்றாவதும் ஆண் குழந்தையாக இருந்ததில் அக்காவுக்கு கொஞ்சம் மனச்சிணுக்கம்தான்.

அக்காவின் இடுப்பில் மூன்று குழந்தைகளோடு சதையும் ஏறிக்கொண்டது. கன்னங்கள் அதைத்து கைகால்கள் தடித்து அக்கா அகலமாகிவிட்டாள். ஒரு நாள் தங்கச்சி ஒரு காட்சியைக் கண்டாள். அக்கா குனிந்து அமர்ந்திருக்க அக்காவின் முதுகில் பதிந்திருந்த நீலத் தழும்புகளில் அம்மா எண்ணெய் போட்டுத் தடவிக்கொண்டிருந்தா. ‘பிளெவ்ஸ்’ மறைத்திருந்த இடங்களில் எல்லாம் நீலக் கண்டல்கள். அக்கா விசும்பி விசும்பி சத்தம் எழுப்பாமல் அழுதுகொண்டிருந்தாள். தங்கச்சிக்கு அக்காவைப் பார்க்கப் பார்க்க என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. அக்காவை, அத்தானை எல்லோரையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் போலிருந்தது. ஒருவிதமான பயம் மனதுக்குள் வளர்ந்துகொண்டே வந்தது. சற்றே தள்ளி சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள்.

“நீ ஏன் இந்தக் கண்ராவியெல்லாம் பாக்கிறாய்…?”அம்மா அழுதாள்.

“நான் செத்துப்போனால் என்ரை பிள்ளையளை நீ பாத்துக்கொள்ளுவியா?”அக்கா தங்கச்சியைப் பார்த்துக் கேட்டாள்.

“உனக்கென்ன பைத்தியமா?”அம்மா கலங்கிப்போய்க் கேட்டா.

“சொல்லேனடி…”
தங்கச்சி விருட்டென்று எழுந்து வெளியில் வந்துவிட்டாள். யார்மீதென்று தெரியாத கோபம். இருளைப் பார்த்து வெகுநேரம் அழுதுகொண்டேயிருந்தாள். எல்லோருடனும் சிரித்தபடி கதைபேசும் அக்கா நினைவில் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டேயிருந்தாள்.

அக்கா இப்போதெல்லாம் அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டாள். ஒவ்வொரு தடவை வரும்போதும் ஒவ்வொரு இடத்தில் காயம். ஒருநாள் நெற்றியில் ‘பிளாஸ்டர்’ போட்டிருந்தது. இன்னொரு நாள் கால் வீங்கியிருந்தது. மற்றுமோர் நாள் உதடு கிழிந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருக்க தலைவிரிகோலமாக வந்தாள். மூன்று பிள்ளைகளும் அவளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தன. அக்கா சாமி அறைக்குள் போய் படுத்தவள்தான். நான்கு நாட்களாக காய்ச்சல் அனலெறிந்தது. அவன் வரவேயில்லை. அவள்தான் போனாள். அக்காவுக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

மதியச் சாப்பாட்டின் பின் வீடு உறங்கிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி வந்தது. அக்கா வயலுக்கு அடிக்கும் பூச்சிநாசினியைக் குடித்துவிட்டாள். ஆஸ்பத்திரிக்கு இவர்கள் போனபோது, அக்காவின் வாய்க்குள் ஒரு குழாயை விட்டு எதையோ ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அம்மா தலையிலடித்தபடி உரத்து அழுதா. தங்கச்சியைக் கண்டதும் அக்காவின் கண்களினோரம் கண்ணீர் வழிந்தது. அக்காவின் கைகள் மெதுமெதுவென்றிருந்தன.

“என்ரை பிள்ளைகளைப் பாத்துக்கொள்”

மெதுவாய் மிக மெதுவாய் உதடுகோணச் சொன்ன அக்காவின் வார்த்தைகளை அவள் புரிந்துகொண்டாள். வாயிலிருந்து குபுக்கென்று புறப்பட்ட திரவம் கட்டிலை நனைத்தது. அது தாங்கமுடியாத நாற்றமாக இருந்தது. அக்காவின் வாழ்க்கையைப் போல.

அக்கா அருமையான கதைசொல்லி. இப்போதும் நட்சத்திரங்களுக்கிடையில் அமர்ந்து அக்கா கதைசொல்லிக்கொண்டிருப்பாளென்றே தங்கச்சி நம்பிக்கொண்டிருக்கிறாள்.
-- --

இந்தக் கதையோடு தொடர்புடைய பிற்குறிப்பு: பதினாறு வருடங்களுக்கு முன் இதே நாளில் அக்கா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனாள்.
திதி: 10.07.1993

7.07.2009

பூனைக்குட்டிப் புராணம்


அன்பு நண்பர்களுக்கு,

உங்களில் பலருக்கு பூனை நாய்கள் பிடிக்காது என்பதை நான் அறிவேன். அதுவும் என் வலைப்பூவுக்கு வந்துபோகிறவர்களுக்கு பூனைகள் மீது கடும் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். அது உங்களை வாசிக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ‘வாசிப்பைத் தடைசெய்கிறது… அதைத் தூக்குங்கள்… தூக்குங்கள்’என்று பலரும் சொல்லிவிட்டார்கள். அமிர்தவர்ஷினி அம்மா மட்டுந்தான் ‘பாவம் அது அங்கேயே இருக்கட்டும்’என்று சொன்னதாக ஞாபகம். இன்று என் செல்லப் பூனைக்குட்டியை வலைப்பூவிலிருந்து தூக்கி என்னோடு வைத்துக்கொண்டேன். அதற்கு உருவமில்லை. அதன் பஞ்சு உடலை நான் தொட்டுக்கொண்டிருக்கவுமில்லை. ஒருநாள்கூட என்னைப் பார்த்து ‘மியாவ்’என்றதில்லை. என்றாலும் அது என்னோடு இருந்தது. அதன்மேல் வாஞ்சை மிகுந்திருந்ததற்கு அதுவொரு குட்டிப்பூனையாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு நரிகளைப் பிடிப்பதுபோல, எனக்குப் புலிகளைப் பிடிக்கும். பூனைகளையும் பிடிக்கும். இதுவொரு முரண்தான். என்ன செய்வது? பலவகைப்பட்ட உணர்ச்சிகளாலான மனிதர்கள் முரண்களாக உலவுவதில் வியப்பொன்றுமில்லை. இந்தப் பூனைக்குட்டிகளில் பிரியம் பெருகுவதற்கான மூலகாரணம் அப்பாதான். அவர் மாலை நேரங்களில் ‘தீர்த்தமாட’ச் செல்வார். ஒரு குவளை மதுவில் எவ்வளவு அன்புவெள்ளம் பெருக்கெடுக்கும் என்பதை அருந்தியவர் அறிவர். அவர் வழிதெருவிலுள்ள நாய்களுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிவைப்பார். சில சமயம் வீட்டுக்கும் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார். ‘அர்ச்சனை’களுக்கு அவருடைய பதில் பெரும்பாலும் ஒரு சிரிப்பாகவோ ஞானியின் தத்துவமாகவோ இருக்கும்.

அப்படி வந்து சேர்ந்ததுதான் பூக்குட்டி. ‘ஏன் இதைப் பிடித்துக்கொண்டு வந்தீர்கள்?’என்றதற்கு, ‘அது வீதியைக் கடக்கமுடியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தது’என்பதற்கு மேல் எங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஐந்தாம் இலக்க செருப்புக்குள் உடல் முழுவதையும் அடக்கிவிடக்கூடிய சின்னப்பஞ்சாக அது எங்களிடம் வந்தது. நான் அப்போது மிகுந்த தனிமையில் இருந்தேன். பிறகு பூக்குட்டியைக் குழந்தையாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அது எந்தளவு விபரீதமாக வளர்ந்ததென்றால், பூக்குட்டி ஒரு நிமிடம் எங்காவது காணாமல் போனாலும், வீட்டிலுள்ளவர்களைப் பதட்டம் கொள்ளவைத்துவிடுமளவுக்கு கூச்சலிடும்படியாக. அது பல தடவை காணாமல் போய் கற்களுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் மரங்களின் மேலிருந்தும் திரும்பி வந்தது. நான் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பதை அது நன்றாகத் தெரிந்துவைத்திருந்தது. பசிக்காதபோதிலும் அதற்கு உணவு வைத்தோம். ஆனாலும், என்னருகில் வந்து கத்தி என்னைச் சமையலறைக்கு இழுத்துப் போவதற்கு அது கற்றுவைத்திருந்தது. பூக்குட்டி கொஞ்ச நாட்களில் பேசக்கூடுமென்று நான் எதிர்பார்க்குமளவிற்கு புத்திசாலியாக இருந்தது. மாலை வேளைகளில் குடும்பமாய் குந்தியிருந்து ‘விண்ணாணம்’ பேசும் வேளைகளில் பூக்குட்டி மிக சாவதானமாக எனது மடியில் ஏறி தன்னைச் சுருட்டிக்கொண்டு ஆழ்ந்து உறங்கிவிடும். மற்றவர்கள் ‘இதப் பார்றா’எனப் பார்ப்பார்கள்.

பூக்குட்டி மூன்று குட்டிகள் போட்டது. அதில், மை தடவியதே போன்ற கண்களால் எல்லாவற்றையும் பிரமித்துப் பார்க்கும் ‘புதினம்’மட்டுந்தான் மிஞ்சியது. புதினம் தாயைவிடச் சமத்தாயும் செல்லமாயும் இருந்தது. அதன் கண்கள்தான் அதன் சிறப்பு.

பூனைகள் நாய்களைப் போல விசுவாசமற்றவை என்றொரு கதை உலவுகிறது. ஆனால், அந்தக் கட்டுக்கதையை முறியடித்தன எங்கள் பூனைகள். கடந்த ஆண்டு வீட்டிற்குப் போயிருந்தபோது, ‘புதினம்’நோக்காடு எடுத்துக் கத்தித் திரிந்தது. எனது பாதங்களில் முகம் வைத்து முனகியது. பிறகு நாங்கள் பதறிப் பார்த்திருக்க எனது காலடியில் ஒரு குட்டியை ஈன்றது. ‘பூனை குட்டி போடுவதைப் பார்ப்பது நல்லது’என்றார் அம்மா.

‘புதினம்’வளர்ந்து ஆளாகியதும் பூக்குட்டி பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டது. நாங்கள் எத்தனையோ தடவை தூக்கிக் கொண்டு வந்து விட்டும் அது எங்கள் வீட்டில் நிலைகொள்ளவில்லை. சாப்பாடு கொண்டுபோய் வைத்தால் சாப்பிடும். சோர்ந்துபோய் படுத்திருக்கும். மனிதர்களின் மனங்களையே படித்தறிய முடியவில்லை. பூனைகளின் உளவியல் யாரிடம் கேட்க? எங்கள் செல்லப் பூக்குட்டி இப்போதும் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது. சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போது, ‘ஏன் போனாய்?’என்று துக்கமாக இருக்கும்.

அதே துக்கத்தை வலைப்பூவிலிருந்து பூனைக்குட்டியைத் தூக்கிய இன்றைக்கு மீண்டும் உணர்ந்தேன்.

7.05.2009

அகதி நாடு

கைவிடப்பட்டதும் துரோகிக்கப்பட்டதுமான
கண்களோடிருந்த அந்தப்
பூஞ்ஞை உடம்புக்காரனுக்கு
அழுத்தித் தரைதுடைக்கக் கற்றுக்கொடுத்தேன்.

பீங்கான்கள் கழுவும் இயந்திரத்தருகில்
சொதசொதவென்றிருந்த ஈரத்தில்
கால் விறைத்திருந்த அவனுக்கு
எனது
பழைய ஈரமுறிஞ்சா சப்பாத்துக்களைத்
தந்துவிடுவதாகவும் வாக்களித்தேன்.

சிருங்காரப் பாடலொன்றை முணுமுணுத்தபடி
எங்களைக் கடந்துபோன
இடைமெலிந்த பரிசாரகப் பெண்ணின்
அதிரும் பிருஷ்டங்களில்
அலையும் மார்புகளில் கண்புதைத்தபடி
அவளிடம் அவதானமாயிருக்கும்படி
வினயத்தோடு வேண்டிக்கேட்டேன்.

சமையலறைப் பகுதிக்குள்
திடீரென உள்நுழையும் மேற்பார்வையாளனின்
ஏகாதிபத்தியக் கண்களின் முன்
குரங்கு நடனம் புரிவதன் வழியாக
வேலையில் நீடித்திருக்கலாம்
என்ற விசயத்தையும்
கொஞ்சம் உரைத்து வைத்தேன்.

மேலும்
கள்ள இலக்கத்தில்
வேலை செய்வதை
குடிமயக்கத்திலும் உளறிவிடாதிருக்க
எச்சரித்த பிற்பாடு
அந்தப் புதிய வேலையாளின்
பெயரைக் கேட்டேன்.

‘நாடு’என்றான்.

அதிர்ந்தேன்
அயராமல்
அவன் இருப்பிடம் விசாரித்தேன்

‘இங்கே’என்றான்
சுட்டுவிரலை திடுக்கென நீட்டி
என் இதயத்தில் குத்தி.


கள்ள இலக்கம்: வேலை அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெற்றிராத அகதிகள் இன்னொருவரின் இலக்கத்தில் வேலை செய்வதை ‘கள்ள இலக்கம்’என்பார்கள்.

சப்பாத்து: 'ஷு' எனப்படும் காலணி (இந்தக் கேள்வி முன்பும் சிலரால் கேட்கப்பட்டதால் விளக்க வேண்டியதாயிற்று.)

வாணியின் வீடு - கவிஞர் சுகுமாரன்

வாணியின் வீடு

எவருக்கும் எங்கேயும் போக இடமில்லை
எனினும் எல்லோரும் போகிறார்கள்

அவர்கள் இவர்கள் நான் நாம்
எல்லாரும் போய்க்கொண்டிருக்கிறோம்

இந்தக் கைவிடப்பட்ட நிலத்தில்
வாணி, நீ மட்டும்

ஒருவேளை
உன்னோடு இருக்கலாம்
அநாதைப் பிள்ளைகள்
அநாதைப் பெற்றோர்
அநாதைப் பறவைகள்
அநாதைப் பிராணிகள்
அநாதைக் கடல்
அநாதைக் கானகம்
அநாதைக் காற்று
அநாதை இதயம்

ஒருவேளை
நாமும் நானும் இவர்களும் அவர்களும்
திரும்பி வரும்போது நீயும் இருக்கக் கூடுமோ?

புதையுண்ட எலும்பாக
புழுவரித்த சதையாக
கல்லில் உறைந்த கண்ணீராக
எல்லாராலும் கைவிடப்பட்ட
நீ வசித்த வீட்டின்
இடிந்த சுவரில் கீறிய பெயராக.


நன்றி: காலச்சுவடு

7.04.2009

தனிப்பட்ட தாக்குதல்களால் தன்னையே தரந்தாழ்த்துகிறார் ஆதவன்

ஆதவன் தீட்சண்யாவின் கடிதம் இங்கே இருக்கிறது.

http://www.keetru.com/literature/essays/aadhavan_21.php


சர்ச்சைகள் தொடர்வது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக வலியையும் மனவுளைச்சலையும் நேர விரயத்தையும் தரக்கூடியது. பழிக்குப் பழி பதிலுக்குப் பதில் என்பது அபத்தமாயிருக்கிறபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னைப் பேசத்தூண்டுகின்றன. ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவரது வாழ்வனுபவங்கள், வாசித்து அறிந்துகொண்டவை, தாம் சார்ந்திருக்கும் கட்சி, சூழல் சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. பட்டறிவில்லாத விவாதங்கள் அதில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் என்று நான் நம்பவில்லை. என்னுடைய தொனியும் விவாதமும் எப்படி இருந்தபோதிலும், ‘புலிகளை விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்பவர் அன்றேல் புலிகள் மீது ஒற்றை வாக்கியத்தில் விமர்சனங்களை முன்வைத்து அதைக் கடந்து செல்பவர்’என்ற மையப் புள்ளியிலேயே நின்றுசுழல்கிறது என்னைப் பற்றிய பிம்பம். மாற்றுக் கருத்து, மாற்றுக் கதையாடல் என்று பேசிக்கொண்டிருக்கிற சில இணையத்தளங்களும் இவ்வாறு அழுத்தந்திருத்தமாக ‘அவர் அதற்கு மேலில்லை’என்று முத்திரை குத்தி விடுவது வருத்தமாகவே இருக்கிறது.

எனவே அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆதவன் தீட்சண்யாவின் கடிதத்தைப் படித்தபோது, பால்யத்திலிருந்து ஒரு சொல் மிதந்து மேல்வந்தது. ‘ஆத்தாப் போக்கிலி’என்பதுதான் அந்தச் சொல். பேசவந்த, பேசவேண்டிய விடயத்தைவிட்டு வெளியில் சென்று சம்பந்தமில்லாத விடயங்களைப் பேசுவதன் வழியாகத் தனது வாதத்துக்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார் ஆதவன். தனது பக்கத் தராசைத் தாழ்த்தவேண்டுமே (உண்மையான அர்த்தத்தில் உயர்த்துவது) என்ற பதட்டத்தில் என்மீது சேற்றை வாரியிறைக்க விழைந்திருக்கிறார். ‘இது அறியப்பட்ட ஒரு படைப்பாளிக்கு அழகல்ல’ என்ற வார்த்தைகளை அதை வாசித்த பலரிடமிருந்து நான் கேட்டுவிட்டேன். ‘தமிழ்நதியைத் தாழ்த்துகிறேன் பேர்வழி’ என்று தரந்தாழ்ந்து நிற்பது அவர்தான். அவரது பதில் நெடுகிலும் இழையோடியிருக்கும் நக்கலும் நையாண்டியும் மூன்றாந்தர, வக்கிரமான நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சற்றும் குறைந்தனவல்ல.

“ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்”என்று கீற்று.காம் நேர்காணலில் நான் சொல்லியிருந்தது உண்மை. பதினொரு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபின் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச்சென்று 2006வரை அங்கேதான் வாழ்ந்திருந்தேன் என்பதை இதைப் படிப்பவர்களது தகவலுக்காகச் சொல்லிவைக்கிறேன். மீண்டும் தொடங்கிய போரினால் தமிழகத்திற்குத் தூக்கியெறிப்பட்டவள் நான்.

ஆதவன் எழுதுகிறார்:

“எனக்குத் தெரியும் இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று. இலங்கை இராணுவத்தாலும் உங்கள் பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்கள் தாய்நாட்டுப்பக்தி. ஏனென்றால், நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல. புலிகளை…”

புலிகள் இல்லாத மண்ணுக்குப் போவதென்பது என்னளவில் அச்சமும் துயரும் பாதுகாப்பின்மையும் தரக்கூடியதே. நாடு திரும்பமுடியாத ஒருவரை நக்கலடிக்குமளவிற்கு, எள்ளிநகையாடுமளவிற்கு இருக்கிறது ஒரு மார்க்ஸிஸ்டின் மனிதாபிமானம். ‘முடிஞ்சா உங்க ஊருக்குப் போய்ப் பாரேன்…வெவ்வெவ்வே’என்கிற சிறுபிள்ளைத்தனத்தை அதில் பார்த்தேன். மேலும், ‘இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும் நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்’என்பதன் பின்னுள்ள எள்ளலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில சுயவிளக்கங்களை ஆதவனுக்காக அல்லாது இதனை வாசிக்கும் எனது நண்பர்களுக்காகக் கூறத் தள்ளப்பட்டுள்ளேன். ‘ஐயோ! நான் கஷ்டப்படுகிறேனே…’என்ற அனுதாபம் வேண்டி இதை எழுதவில்லை. சுயபச்சாத்தாபம் என்னிடம் துளியளவும் இல்லை. 2003ஆம் ஆண்டு கனடாவிலிருந்து திரும்பி இலங்கை வந்தபோது கைவசமிருந்த நிலத்தில் கொட்டில் (குடிசை) கட்டி சில காலம் வாழ்ந்திருந்த பின்னால்தான் வீடு கட்டிக் குடிபோனோம். மனிதர்களைப் போல சர்வசாதாரணமாக பாம்புகள் திரிந்த இடம் அது. வெக்கை பிடுங்கித் தின்ற நிலம் அது. அங்கே ஏ.சி.இருக்கவில்லை தூசிதான் இருந்தது. அவ்விதமிருக்க எந்த அடிப்படையிலிருந்து இந்த ஏ.சி.க் கதையை இவர் எழுதுகிறார் என்று தெரியவில்லை. தவிர, ஒருவர் ஏ.சி.யில் வாழ்வதா? வெக்கையைக் குடிப்பதா என்பதெல்லாம் அவரவர் வசதியும் தெரிவும். கடவு கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யா பேசியதற்கு நான் எழுதிய எதிர்வினைக்கும் மேற்கண்ட தனிப்பட்ட கதைகளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பிருக்கிறது என்று அவர்தான் சொல்லவேண்டும்.

‘தாக்கப்படும்போது மனிதர்கள் சரிந்துவிடுகிறார்கள்’என்பதை இப்போது வேறொரு அர்த்தத்தில் பார்க்கவேண்டியிருக்கிறது.

“ஆதவன் என்னைத் தாக்க வந்தார்’ என்று பதிவில் தலைவிரிகோலமாக எழுதாமல் விட்ட உங்கள் பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்”

“ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான் என்று திரித்து அடுத்த பதிவில் எழுதி மூக்குச் சிந்தப் பதைக்காதீர்கள் தமிழ்நதி.”

என்ற வாசகங்களையும் அவரது கீற்று கடிதத்தில் பார்த்தேன். அந்த வாசகங்கள் வழியாக அவர் தனது ஆழ்மனதிலிருக்கும் கசடுகளை வெளியில் கொட்டிவிட்டார். ஏதோ சில படைப்புகளை அண்மைக்காலங்களில் எழுதியவள் என்பதிலும் பார்க்க நான் ஒரு பெண் என்பதுதான் அவருடைய ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. ஆக, பெண் என்பதை என்மீதான அனுதாப வாக்குச் சீட்டாக, பச்சாத்தாபத்தைத் தூண்டும் ஆயுதமாக நான் பயன்படுத்தக்கூடியவள் என்று அவர் நினைத்திருக்கிறார். ‘மூக்குச் சிந்துவது’, ‘தலைவிரிகோலமாக எழுதுவது’இந்த மலினமான உத்திகளெல்லாம் கைவரப்பெறாதவள் நான். அப்படி எழுதி கூட்டம் சேர்க்கவேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா என்ன? ‘எழுதுகிறேன் என்பதனால் எழுதுகிறேன்’ என்பதை விட்டுக் கீழிறங்கி கைதட்டல் தேடவேண்டிய தேவையொன்றும் எனக்கில்லை. ஒரு பொதுவெளிக்கு வரும்போது பெண் என்ற விடயத்தை மறந்து தன்னியல்பாக நடந்துகொள்ளவேண்டுமென்ற அறிவும் பிரக்ஞையும் எனக்கு எப்போதுமுண்டு. உண்மையில் காதல் வயப்பட்ட ஆணோடு மட்டுமே பெண்தன்மைகள் எனக் கருதப்படுபவைகள் அன்றேல் வளர்ப்பின் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பவைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆள் நான். மற்றபடி பொதுவெளியில் பழகும்போதோ எழுதும்போதோ ஆண்கள் எனக்கு ஆண் என்ற வேறொரு பாலினமாகத் தோன்றுவதேயில்லை. நெளிவது, குழைவது, உதட்டைச் சுளித்துச் சிரிப்பது, எனக்காக நீ இதைச் செய்யக்கூடாதா என்று கிறங்குவது, சாகசங்கள் செய்வது இன்னபிற விடயங்களையெல்லாம் நான் கடந்துவந்து நாளாகிறது. பழகும்போது கொஞ்சம் தன்மையாகப் பழகுகிறேன் என்பதைவைத்து, ஆதவன் என்னைப் ‘பெண்ணிலும் பெண்ணாக’ச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆணுக்குள்ள கம்பீரம் பெண்ணுக்கும் உண்டு. ‘அவன் மூக்கைச் சிந்துகிறான் என்றோ, தலைவிரிகோலமாக எழுதுகிறான்’என்றோ அவரால் எழுதிவிட முடியுமா? மேற்கண்ட வார்த்தைகள் ஊடாக அவர் ஒரு ‘ஆணாக’ப் வெளிப்பட்டிருக்கிறார், அவரையறியாமலே. அவரது வார்த்தைகள் அவரைக் கைவிட்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: பேசிய விடயத்திற்குள் நின்று பேசுவதுதான் அறிவாளிக்கு அன்றேல் அறிவாளி என்று தம்மைக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு அழகு. ‘ஏண்டா என்னைத் தள்ளிவிட்டாய்?’என்றால், ‘எங்கம்மா கடைக்குப் போய்விட்டாள்’என்ற வகையிலான அபத்தங்களைக் கொண்டிருக்கிறது கீற்றுவில் வெளியாகியுள்ள அவரது கடிதம்.

தேவேந்திர பூபதியை வேறு தேவையில்லாமல் இதற்குள் இழுத்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையை (அப்படி ஒன்று இருந்தால்) நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். ஆதவனைக் காட்டிலும் புரிதலுள்ளவர்தான் பூபதி. ‘ஐயகோ! என்னைக் காப்பாற்றுங்கள்’என்று அபலையாக ஆதவனிடம் வந்து தஞ்சமடைந்ததாக எனக்கு நினைவில்லை. இப்படிச் சிண்டு முடிந்துவிடுவதுதான் நான் கேட்ட கேள்விகளுக்கு ஆதவன் ஆற்றுகிற எதிர்வினையா?

இனியொருபோதிலும் இவ்விடயத்தைக் குறித்துப் பேசுவதில்லை என்று ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன். ஆனால், மௌனமாயிருப்பது அதிகாரத்துக்குத் துணைபோவதற்கொப்பானது என்ற பழகிப் புளித்த வாசகம் என்னை இருக்கவிடுவதாயில்லை.

‘கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தெரியாமல் மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றார்கள்’என்று புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆதவன் வகையறாக்கள், தம் உதடுகளிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? தன் வாதங்களுக்கு வலுச்சேர்க்க தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியிருக்கும் அவர் இதைக்குறித்துச் சிந்திக்கவேண்டும்.

உயிர்க்கொலைக்கு சற்றும் குறைந்ததன்று மனக்கொலை!

-தமிழ்நதி

7.03.2009

ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு

You can read Aathavan's article here: http://www.keetru.com/literature/essays/aadhavan_21.php

-டி.அருள் எழிலன்

அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,

நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.

நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை.

மதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தீனீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.

நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.

நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.

தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.

தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ - ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ - இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.

இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.

இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.

தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை.

ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு.

புலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ தொடர்பாகவோ எங்களுக்கு மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லை என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) - இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் - உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.

புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.

பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.

நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.

தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிறபடுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.

தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.

தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறோம். மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.

தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து...

பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன?

தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதாராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ, எம் -க்குப் பொருந்தும்.

வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள்

பெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளையும் குட்டி காமுகனுமான விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.

சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.

ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மாகா கண்டு பிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!

சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.

ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”

குறிப்பு:

(ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)

இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி

கட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.

மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.

உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடவியளார்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை... பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த செய்தி இதோ,

சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

நன்றி- http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=11424&cat=1

வாங்குன காசுக்கு sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா கூவுறான்...கொய்யா...ல. என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.

ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மாதிரி மநுவாதிகளை மக்கள் விரோதிகளை, ஆதவன், முடிந்தால் அம்பலப்படுத்துங்கள்.

- டி.அருள் எழிலன் (arulezhiland@gmail.com)

Nanri: Keetru.com













































மேலும்...





About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us

All Rights Reserved. Copyrights Keetru.com

Hosted & Maintained by india intellect

Best viewed in Windows 2000/XP

7.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு,

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். "ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?" என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், 'எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?'என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது 'செலிபிரிட்டீஸ்' என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். "எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்..." என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், "அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?" என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்... எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர், நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல 'எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.


வருத்தங்களுடன்

தமிழ்நதி