6.15.2012

மாயக்குதிரை


அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு போய் அது திரும்பி வந்தது. எங்கிருந்தோ மேலும் இரண்டு ஏழுகள் வந்தன. கிர்ரென ஒரு வட்டமடித்து மூன்றும் ஒரே வரிசையில் நின்றன. இவள் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியில் கத்தினாள்.

கனவுக்கும் நனவுக்கும் இடையிலான அந்தரநிலையில் கொஞ்ச நேரம் படுத்துக்கிடந்தாள். ஏழின் பிசிறற்ற நேர்த்தியான வரிசை அவளை ஆட்கொண்டிருந்தது. தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் ஒருசேர வந்து அவளைச் சூழ்ந்தன. ‘கடவுள்தான் என்னைக் காப்பாற்றவேண்டும்’என்று சொல்லிக்கொண்டாள்.

எப்போதாவதுதான் அவளுக்கு கடவுளின் ஞாபகம் வரும். சூதாட்ட விடுதிக்குள் நுழையும்போது, வெல்லவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உள்நுழைவாள். தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அமிலமாய் சுரக்க ஆரம்பிக்கும்போது, முழுவதுமாக இழப்பதன் முன் அங்கிருந்து தன்னை எப்படியாவது வெளியேற்றிவிடுமாறு பிரார்த்தனை செய்வாள். மேற்படி சந்தர்ப்பங்கள் தவிர்த்து அவளுக்கு கடவுளின் ஞாபகம் வருவது குறைவு. அவளுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள அம்மா இருந்தார். அவளுடைய ஊதாரித்தனத்தைப் போக்கவேண்டும் என்பதும் அம்மாவின் பிரார்த்தனைகளுள் ஒன்று.

“காசிருந்தாத் தாங்கோ…”என்றவளை நிமிர்ந்து பார்த்தார் அம்மா.

“ஏன்…?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள். அப்படிச் செய்வதன் மூலம் ஒன்றிரண்டு கேள்விகளோடு காசு கிடைத்துவிடும் என்பதை அவளறிவாள். “உன் அம்மா உலக வங்கி போன்றவள்”என்று அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. வெளி,உள்,இரகசிய அடுக்குகள் என்றவாறான அம்மாவின் சேமிப்பானது பல தடவை கடன் வாங்குவதைத் தவிர்த்து குடும்ப மானத்தைக் காப்பாற்றியிருக்கிறது. அம்மா ஐந்து, பத்தாகச் சேமிப்பதை உருவிக்கொண்டு போய் ‘காசினோ’வின் இயந்திரத்துள் விடுவது குறித்து அவளுக்கும் வருத்தந்தான். அதுவொரு காசு விழுங்கிப் பூதம். இலக்கங்களையும் எழுத்துக்களையும் பூக்களையும் பன்றிகளையும் கடற்கன்னிகளையும் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் பூதம்.

“பெரிய தொகையாக விழுந்தால் அம்மாவுக்குக் கொடுப்பேன்தானே…”என்று சமாதானம் செய்துகொள்வாள். விழுந்திருக்கிறது. கொடுத்ததில்லை.

“சிநேகிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்…”என்றாள்.

“அதை எத்தினை தரந்தான் பாக்கிறது?”

அவள் பேசாமல் நின்றாள். அம்மாவுக்கு அவள் ஒற்றைப் பிள்ளை. எனவே, அவளது மௌனம் பரிச்சயமாயிருந்தது.

முன்னரெல்லாம் நேரம் காலம் மறந்து நயாகராவை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள். நீராலான கனவுலகில் நின்றுகொண்டிருப்பதைப் போல. கூட வந்தவர்கள் அந்த நீர்ப்புகையில் மறைந்தே போனார்கள். அந்த அமானுஷ்யம் ஒருவகையில் அவளைப் பயமூட்டியிருந்தது. பேரிரைச்சலோடு மனித ஆற்றலுக்கு எட்டாத ஆவேசத்தோடும் தூய்மையோடும் அதில் விழுந்து செத்துப்போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
காசினோவுக்குப் போகிற பழக்கம் பேய்போலத் தொற்றிக்கொண்ட பிறகு நீர்வீழ்ச்சியின் பக்கம் திரும்புவதில்லை. தோற்றுப் போய் மனதுக்குள் அழுதபடி விடுதியறைக்குத் திரும்பியதோர் நாளில் கண்ணருகில் நயாகரா கொட்டியது. கலக்கத்தோடு விழித்துப் பார்க்க யன்னல் வழியாக வெள்ளை வெளேரென நீர் பாய்ந்து இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஓசையற்ற பொழிவு. 

அம்மா நூறு டாலர்களை எடுத்து வந்து தந்தார். அவள் தனது அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

“தெரியாத இடத்திலை போய் காசில்லாமல் நிக்கிறதே…தற்சமயம் தங்கவேண்டி வந்தால்…?”

மேலும் ஒரு ஐம்பது வந்தது. அத்துடன் அவள் அன்றிரவு வருவது நிச்சயமில்லை என்பதையும் சந்தடிசாக்கில் சொல்லியாயிற்று.
பனியில் சறுக்கிவந்த ‘ஏழு’ பென்குவினை ஞாபகப்படுத்தியது. உயிர்காப்பு வண்டியின் ஓசைபோல இடைவிடாமல் ஒலித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அந்த மணியோசை இப்போது மண்டைக்குள் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. உள்ளுக்குள் அனல் அலை அடித்துக்கொண்டிருந்தது. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையாகவே உடல் தகித்தது.

உறவினர்களுடைய ஒழுக்க வரையறைகளான வீடு, வேலை,புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள்… ஒரேயொரு காதலன் இன்னபிறவற்றுள் அவள் சுலபமாக அடங்கினாள். அவளது காதலனாகிய சுதன் அவளை கேலி செய்ததுண்டு.

“அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு எல்லாரையும் ஏமாத்திறாய்”

அவன் மட்டுமே அவளது பலவீனத்தை அறிந்தவன். காசினோ ஞாபகம் வந்ததும் மேற்குறித்த யாவும் பின்னொதுங்கிவிட வேறொரு பெண்ணாக மாறிவிடுவாள் அவள். அந்த நினைவு ஒரு மாயச்செடி போல காலுக்குள் முளைத்து மளமளவென்று வளர்ந்து கிளைகள் மண்டையோட்டைப் பிய்த்துக்கொண்டு வெளியேற எத்தனிப்பதை பயத்தோடு கவனிப்பாள். பன்னிறங்களில் ஒளிரும் ‘நியான்’ விளக்குகள், கண்சிமிட்டும் இலக்கங்கள் அவளைப் பதட்டப்படுத்துவன. அதிலும் குறிப்பாக ஏழு என்ற இலக்கம் எங்காவது ஒளிரக் கண்டால்… அவ்வளவுதான்! நாணயங்கள் எண்ணப்படுவதற்காகக் கொட்டும் ஓசையும் அவளைக் கலவரப்படுத்துவதே. மணியோசைகள் இன்பமும் துன்பமும் கலந்த வாதையொன்றினைக் கொணர்ந்தன. அந்தக் காந்தக் குரலை நோக்கி இரும்புத்துகளென நகர்ந்து செல்வாள். உறவுகள், பொருட்கள், கடமைகள், ஒழுங்கான பிள்ளை என்ற பெயர் அனைத்தும் பனிக்காலத் தெருக்கள் போல மங்கத் தொடங்கிவிடும். எதையெதையெல்லாமோ ஞாபகப்படுத்தி தன்னிடம் கெஞ்சுவாள். அந்தக் கெஞ்சலை மயிரளவும் பொருட்படுத்தாத சூதாடியொருத்தியோ மாயக் குழலோசையைப் பின்தொடரும் எலிகளில் ஒன்றாகிவிடுவாள். புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மளமளவென்று நடந்தேறும்.


அவள் மனம் கணக்குப் போடத் தொடங்கியது. வங்கிக் கணக்கில் முந்நூற்று இருபது டாலர்கள் இருந்தன. கடனட்டையில் இருநூற்றுச் சொச்சம் தேறும். அம்மாவிடம் வாங்கிய நூற்றைம்பதைச் சேர்த்தால் அறுநூற்றைம்பதைத் தாண்டிவிடும். வழிச்செலவுக்கும் விடுதிக்கும் போக ஐந்நூற்றைம்பது டாலர்கள் மிஞ்சும். போதும்! மேலும், இம்முறை தோற்கப் போவதில்லை என மனக்குறளி சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆயிரத்து எண்ணூறு டாலர்களோடு வீடு திரும்பிய அந்தக் குளிர்கால இரவை நினைத்தாள்.
ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்று முதலில் சுதன்தான் அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். பின்னாளில் அவன் அதற்காக வருந்தியிருக்கிறான்.

“உண்மையிலை இது ஒரு முட்டாளும் செய்யக்கூடிய வேலைதான். இந்த வட்டத்திலை கையை வைச்சு ஒரு அமத்து அமத்தவேணும். மிசினுக்குள்ள இருக்கிற இலக்கங்களும் எழுத்துக்களும் ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வந்து நிக்கும். ஒரே இலக்கமோ பழ அடையாளமோ வேற என்னமோ நேர்வரிசையில வந்து நின்றால் வெற்றி. சறுக்கி மேல கீழ போனால் தோல்வி. சாதாரண தொகையும் விழும். ஜாக்பொட்டும் விழும். அவ்வளவுதான்!”

புதிதாக ஒன்றைத் தனது காதலிக்குக் கற்றுக்கொடுக்கும் குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். முதலில் அதை அவள் ‘விசர் விளையாட்டு’என்றாள். பிறகு அந்த விசர் விளையாட்டுக்குத் தன்னைக் கூட்டிப் போகும்படி சுதனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவன் பொறுப்புணர்வு பற்றிப் போதிக்க ஆரம்பித்ததும் அவனுக்குத் தெரியாமல் தனியாகப் போகத் தொடங்கினாள். எப்போதுமில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை திடும்மென மண்டைக்குள் விளக்கு எரியும். மணியடிக்கும். அவ்வளவுதான்! அதன்பிறகு, குண்டியில் நெருப்புப் பற்ற வைத்த ஏவுகணை போல விசுக்கென்று கிளம்பிவிடுவாள்.

பயணப்பைக்குள் ஒருநாளுக்குத் தேவையான உடைகளோடு சில புத்தகங்களையும் ஒலி, ஒளியிழைத் தகடுகளையும் எடுத்துவைத்தாள்.
“இந்தமுறை ஜாக்பொட் விழுந்தால் இரண்டு நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு வருவேன்.”என நினைத்தாள். அப்படி நினைத்த மறுகணமே அது சாத்தியமாகாது என்ற எண்ணம் மின்னி மறைந்தது. ‘சனியன்’என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 “சாப்பிட்டிட்டுப் போ…”என்றார் அம்மா.

சாப்பிடும் மனநிலையில் இல்லை. ஆனாலும், சாப்பிட்டுவிட்டுச் செல்வதன் மூலம் காசினோவுக்குள் நேரடியாகச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் அவளை இயக்கியது.

அன்று அவளது முகம் அருளிழந்து போயிருப்பதாக அம்மா சொன்னாள். சிலசமயம் அம்மா ஊகித்திருக்கக் கூடும் என்று நினைத்தாள். இல்லை… அவள்தான் எவ்வளவு பொறுப்பான மகள்…தனக்குள் சிரித்துக்கொண்டாள். அம்மாவை ஏமாற்றுகிறோமே என்று வேதனையாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டிலேயே அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம் என்று எண்ணினாள். கடற்கன்னியோ வாலில் செதில்கள் மினுங்க சிணுங்கி அழைத்தாள். ஏழு என்ற குதிரை, பிடரி மயிர்கள் அலைய தலையசைத்துக் கனைத்தது.

பேருந்துக்காகக் காத்திருக்கும்போது ஒரு குடும்பம் - தமிழர்கள் - காரில் தங்களுக்குள் பேசிச் சிரித்தபடி போவதைப் பார்த்தாள். சனிக்கிழமை, எங்காவது உணவகத்துக்குப் போகிறார்களாயிருக்கும். உணவுச் செலவு நாற்பது டாலருக்குள் முடிந்துவிடும். தான் காசினோவுக்குச் செல்வது தெரிந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தாள். ‘கொழுப்பு’ என்பார்கள். அநேகமானவர்கள் அவளை ஒரு விசித்திரப் பிராணியாக, கேவலமாக நோக்கவும் கூடும். “அந்தப் பெட்டையோ…”எனத் தொடங்கி ஆயிரம் கதை சொல்வார்கள். நடைப்பயிற்சிக்குத் தோதாக உடையணிந்த ஒருவன் பயணப்பெட்டியோடு நிற்கும் இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். அவள் எங்கு செல்கிறாள் என்பதை அவன் ஊகித்திருப்பான் என்று தோன்றியது. ஒருவேளை அவனுக்கும்கூட காசினோவுக்குச் செல்லும் பழக்கம் இருக்கலாம். அவளையறியாமலே தன்னைக் கடந்துசெல்லும் எல்லோரது கண்களையும் உற்றுப் பார்க்கத் தொடங்கியிருப்பதை சற்று நேரத்திற்குப் பின் உணர்ந்தாள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினாள். தன்னிரக்கம் பெருகியது. இளமையின் வறுமையையும், அகதியாக அலைந்ததையும், புலம்பெயர்ந்து பட்ட சிரமங்களையும் நினைத்துத் தன்னிரக்கம் கொள்வதனூடாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க விளைந்தாள்.

யாருடைய கண்களிலும் படாமல் போய்விட முடிந்தால்… இவ்வளவு தூரமாக இல்லாமல் ஒரே நொடியில் அங்கு சென்றுவிட முடிந்தால்…. அவளுக்கு மட்டும் வசதி இருக்குமானால் நயாகராவுக்குக் குடிபெயர்ந்துவிடுவாள். வேலை… வீடு என்று உழலும் மத்தியதர வர்க்க வாழ்வை நினைத்து எரிச்சலுற்றாள்.

அந்தக் கட்டிடந்தான் எத்தனை பிரமாண்டமும் அழகும் பொலிவதாயிருக்கிறது…! அரைக் கோளத்தைக் கவிழ்த்துவைத்தாற்போன்ற நுழைவாயில் இருபத்துநான்கு மணிநேரமும் ஒளியால் வேயப்பட்டிருக்கும். பின்னால் நெடிதுயர்ந்த விடுதியின் மீது ‘காசினோ’வைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் மினுங்கிக்கொண்டிருக்கும். தோற்றுப் போய் கண்ணீரை ஒளித்துக்கொண்டு வெளியேறிய ஒரு நாளில், அந்தச் செந்நிற எழுத்துக்களின் அழைப்பும் பசப்பும் மினுக்கும் குவீன் வீதியில் பளபளக்கும் கைப்பைகளோடும் குதியுயர்ந்த காலணிகளோடும் அலையும் பெண்களை ஞாபகப்படுத்தியிருந்தது. கொடிய மிருகங்கள் நிறைந்த குகையொன்றினுள் செல்வதான பதைபதைப்பை அவள் பல தடவைகள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், சூதாட்டம் தரக்கூடிய கிளர்ச்சி அந்தப் பதைப்பை மேவியதாக இருந்தது.


பிரதான நுழைவாயில் ஊடாக உள்ளே நுழைந்ததும் வட்டமான பளிங்கு அலங்கார மையம். அதனுள் எழுந்தெழுந்து அடங்கும் குட்டி நீர்வீழ்ச்சிகள். அலங்கார மையத்தின் விளிம்புகளில் எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டேயிருக்க, அவர்களோடு வந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  'சூதின் பேரின்பம் அறியாத மூடர்கள்' என்று, ஆரம்பத்தில் அவர்களைப் பற்றி அவள் நினைத்ததுண்டு.

ஏறத்தாழ இரண்டு மணிநேரப் பயணம். வழிநெடுக மொட்டை மரங்கள் கூதிரை அறிவித்தபடி நின்றிருந்தன. அடர்நீலத்தில் ஏரி சாதுவாகப் படுத்திருந்தது. அதன் கரையில் படகுகள் காற்றுக்குத் தளம்பியபடி நின்றன. துருவேறிய, ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப்பட்டிருந்த இரும்பினாலான இரண்டு ஓடங்கள் புராதன நாவாய்களை ஞாபகப்படுத்தின. அவை நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நினைத்தாள். படகுகள், கார் போன்ற உருவரைகளை ஏன் ஸ்லொட் இயந்திரங்களில் பயன்படுத்துவதில்லை என்று யோசித்தாள்.

அவளுக்கு மேசையில் ஆடும் சூதாட்டம் தெரியாது. அதை அவள் விரும்பியதோ முயற்சித்ததோ இல்லை. நாணயப் பெறுமதிக்கேற்ப காசினோவில் வழங்கப்படும் வட்டவட்டமான நாணயங்களின் விளிம்புகளைக் கையால் வருடியபடி ஆழ்ந்த சிந்தனையில் இறுகிய முகங்களோடு அவர்கள் இருப்பதை அவதானித்திருக்கிறாள். மேசையில் சூதாடுபவர்களில் தமிழ் முகங்களும் உண்டு. பெரும்பாலும் ஆண்கள். மிக அரிதாக பெண்கள். ‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.

இம்முறையும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லொட் இயந்திரத்தில் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த நாளை பல தடவை மீள்ஞாபகித்துப் பார்த்திருக்கிறாள்.

அதுவொரு இனிய பரவசம்!

அந்த ஸ்லொட் இயந்திரம் ஒரு தொலைபேசி கோபுரத்தின் வடிவத்தை ஒத்தது. அவள் வென்ற நாணயங்களின் எண்ணிக்கையைக் காட்டும் விளக்கு முதலில் இருபதில் ஏறிநின்றது. பிறகு நாற்பதுக்கு ஏறியது. அதன்பிறகு அறுபது, எண்பது, நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று ஏறி உச்சிக்குப் போய்விட்டது.

ஆறாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து டாலர்கள்!
‘ஜாக்பொட்’!!!

‘ஜாக்பொட்’விழுந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்கான மணி அடிக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு இயந்திரத்தின் தலையில் இருந்த விளக்கு வேறு ‘வெற்றி… வெற்றி’என்று சுழலவாரம்பித்துவிட்டது. மகிழ்ச்சியில் உரக்கக் கூவவேண்டும் போலிருந்தது. வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஆனால், ஒரு தேர்ந்த சூதாடிக்குரிய பக்குவத்தோடு புன்னகை புரிந்தபடி அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். சுற்றி ஆட்கள் கூடிவிட்டார்கள். வேறு இயந்திரங்களில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் பொறாமை கலந்த விழிகளால் எட்டிப் பார்த்தார்கள். முகங்களில் இருள் கவிந்துவிட்டபோதிலும், அதை நாகரிகப் புன்னகையால் போர்த்தியபடி உதடுகளால் வாழ்த்துத் தெரிவித்தனர். அவள் அவர்களுக்காக உண்மையிலேயே வருந்தினாள். அவர்களது விழிகளில் முந்தைய கணம்வரை தோற்றுப் போயிருந்த தன்னைக் கண்டாள். ஆனால், வெற்றியின் எக்களிப்பு அந்த வருத்தத்தை விஞ்சிநின்றது. அந்நேரம் உடலை பஞ்சுப்பொதி போலவோ பறவையின் இறகு போலவோ எடையற்று உணர்ந்தது நினைவிருக்கிறது. இருபத்தைந்து சதத்துக்குப் பந்தயம் கட்டக்கூடிய அந்த இயந்திரத்தில் அவ்வளவு பெரிய தொகையை வெல்வதென்பது அதிசயந்தான்.


அறுபத்து இரண்டு நூறு டாலர் நோட்டுக்களை ஒன்று… இரண்டு… என்று பணியாளர் நிதானமாக எண்ணி, விரிக்கப்பட்டிருந்த அவளது உள்ளங்கைகளுள் வைத்தார். மீதம் முப்பத்தைந்து டாலர்களைத் தனியாகக் கொடுத்தார். அந்த முப்பத்தைந்து டாலர்களையும் பணியாளருக்கு அவள் அன்பளிப்பாகக் கொடுத்தாள். அப்போது அவள், தான் விளையாடிய இயந்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘நன்றி… நன்றி’என்று பல தடவை சொல்லியபடி அதை வாங்கிச் செல்லும்போது கண்களில் வியப்பு இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தாள். பணியாளர்களுக்கும் அவளுக்குமான இரகசிய விளையாட்டு அது. அப்படியொன்றும் பகட்டாகத் தோன்றாத ஆசியப்பெண்ணொருத்தி எதிர்பாராத ‘டிப்ஸ்’ஐ வழங்கும்போது மேசைப் பணியாளர்களின் தோரணை மாறிவிடுவதை அவள் அவதானித்திருக்கிறாள். சில சமயங்களில் அவர்களை மகிழ்ச்சியூட்டவும் சில சமயங்களில் தோல் நிறத்தின் காரணமாக அலட்சியப்படுத்தும் பணியாளர்களை தற்காலிகமாக வீழ்த்தவும் அவள் அதைச் செய்வதுண்டு. ஆம்…ஆசியர்களின் கௌரவத்திற்காக!

இனி ஜாக்பொட்டில் பெரிய தொகை விழுந்தால் யார் யாருக்கெல்லாம் காசு கொடுக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு கணக்கு உண்டு. அவளளவில் அது சூது என்ற பாவத்தைப் புரிந்தமைக்கான குற்றப்பணமே. அங்கு வந்து விளையாடும் வெள்ளைக்காரப் பெண்களோ மஞ்சள் முகப் பெண்களோ அப்படி நினைக்கமாட்டார்கள் என்று தோன்றியது.

ஒருவழியாக விடுதியை வந்தடைந்து பயணப்பையைத் தூக்கிக் கட்டிலில் போட்டாள். இலேசாக ஒப்பனை செய்துகொண்டு காசினோவை நோக்கி விரைந்துபோனாள். சிக்னல் பச்சையாக மாறக் காத்திருந்தபோது, அறைக்குத் திரும்பிப் போய் ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது மடிக்கணனியில் படம் பார்க்கலாம் என்று நினைத்தாள். வரிசையாக நிற்கும் செர்ரி பழங்கள் அவளை அழைத்தன. பன்றிகள் குர்குர்ரென்றன. அவள் விரைந்து நடந்தாள். அன்று காற்றில் குளிர் அதிகமாக இருந்ததாகத் தோன்றியது. நீர்வீழ்ச்சி அருகிலிருப்பது காரணமாய் இருக்கலாம். காற்று பேயாட்டம் ஆடித் தலையைக் கலைத்துப் போட்டது.

தொலைபேசி கோபுர வடிவத்தினையொத்த ஸ்லொட் இயந்திரங்கள் ஒன்றிலும் இடமில்லை. காத்திருந்தாள்.

ஆரம்ப நாட்களில் அவள் விசித்திரமான விளையாட்டொன்று ஆடிப் பார்த்திருக்கிறாள். வெளியில் நின்று, தான் வெல்லாமலும் தோற்காமலும் இருப்பதான மானசீக விளையாட்டொன்றை ஆடுவாள். பின்னாட்களில் அதன் பொய்மையில் அயர்ச்சியுற்று நிறுத்திவிட்டாள். வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் பயணித்து காசினோவுக்குள் நுழைந்து ஸ்லொட் இயந்திரத்தின் முன் அமர்ந்தபின்னரே மூச்சுவிடுகிறவளாக மாறிப்போன பிற்பாடு, காத்திருப்புகள் கசந்துபோயின.

அந்தக் குறிப்பிட்ட ‘ஸ்லொட் மெசின்’களிலிருந்து யாரும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. வேறொன்றைத் தேடிப் போனாள்.

இன்று நான் தோற்றுப் போகமாட்டேன் என்று சங்கற்பம் செய்துகொண்டதற்கேற்றபடி, ஒரு சத இயந்திரத்தின் முன் போயமர்ந்தாள். ஒரு சத, இரண்டு சத விளையாட்டுக்களை வழங்கும் இயந்திரங்கள் புதிதாகப் போடப்பட்டிருந்தன. அதுவொரு ஏமாற்று வேலை என்பதை அவள் சற்று நேரத்திற்கெல்லாம் கண்டுபிடித்தாள். ஒரு சத விளையாட்டை வழங்கும் இயந்திரத்தில் ஒரு சதத்திற்கான ஆட்டமே இல்லை. குறைந்தபட்சம் தொண்ணூறு சதங்களைப் பந்தயம் வைத்து ஆளியை அழுத்தினால் மட்டுமே வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதை அவள் உணர்ந்தபோது நூற்றி அறுபது டாலர்களை இழந்துவிட்டிருந்தாள். அந்த இயந்திரம் ‘இதோ… இதோ… வெல்லப்போகிறாய்’என்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு சுழன்றது. ஏதேதோ வார்த்தைகளை உச்சாடனம் செய்து உருவேற்றியது. அவளுக்குள் பதட்டம் பரவத் தொடங்கியது.

எழுந்து மற்றொரு இயந்திரத்தைத் தேடிப் போனாள். வழியில் இரண்டு இருபது டாலர்களை இழந்தாள். அன்று சனிக்கிழமையாதலால் கூட்டம் நெரிபட்டது. விளையாடுபவர்கள் தவிர, பொழுதுபோக்கவும் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவும் என்று வந்த கூட்டம். மதுபானச்சாலையில் ஆண்களும் பெண்களும் சோடி சோடியாகவும் தனியாகவும் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். தனியாக இருந்தவர்கள் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். தோற்றுப்போனவர்களாயிருக்கலாம் என்று நினைத்தாள். வழியில், அகன்ற மஞ்சள் முகத்தில் தோல்வியின் கண்ணீர்க் கோடுகள் தெரிய ஒரு பெண் தனியாக அமர்ந்திருந்தாள். சீனா அல்லது கொரியாவைச் சேர்ந்தவளாயிருக்கலாம்.


மார்பில் பாதி தெரிய உடையணிந்த பெண்கள் உரக்கச் சிரித்தபடி ஆண்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு போனார்கள். சிலர் கோப்பி குடிப்பதற்கென்றே அங்கு வந்தவர்கள் போல இலவசமாக வழங்கப்பட்ட கோப்பியை வாங்கிக் குடித்துக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மனதுள் காரணமற்ற எரிச்சல் மூண்டது.

சற்றுநேரத்தில் மனிதர்கள் மறைந்துபோனார்கள். அந்த இயந்திரங்கள் நடுவில் அவள் மட்டும் முடிவில்லாத தெருவொன்றில் நடந்துகொண்டிருப்பதான களைப்பை உணர்ந்தாள். பல தடவை ஆட்களில் மோதிக்கொள்ளத் தெரிந்தாள். அந்தப் பிரமாண்டமான கூடம் அவள்மீது கவிழ்ந்து மூடியது. மூச்சுத் திணறியது.

கூட்டமற்ற இடத்தில், அநாதரவாகக் கிடந்த இயந்திரமொன்றின் முன் போயமர்ந்தாள். அதன் வயிற்றுக்குள் பன்னிற ஏழுகள் இருந்தன. – கடுஞ்சிவப்பு ஏழும் அதிலொன்று. ஏழின் விளிம்புகளில் கறுப்பு நிறத் தீற்றல் அதையொரு பந்தயக் குதிரையென உருமாற்றியிருந்தது. காரணமின்றி கனவுகள் வருவதில்லை என்று அம்மா சொல்வதை நினைத்தாள். ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்றத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு தடவையும் ஆளியை அழுத்திவிட்டு ‘விழப் போகிறது… விழப் போகிறது…’என்ற படபடப்போடு காத்திருந்தாள். அதுவொன்றும் மோசமான இயந்திரமல்ல. விழுத்தியது. பிறகு விழுங்கியது. விழுத்தியது. பிறகு விழுங்கியது. ஒரு தடவை கறுப்புக் குதிரைகள் நேரே அணிவகுத்தன. நூறு டாலர்களை அவள் வென்றாள். சுழலவாரம்பிக்கும்போது இதயம் துடிதுடிக்கும். நேர்வரிசையில் வந்து நிற்பதுபோல பாசாங்கு காட்டிவிட்டு நழுவிச் செல்லும். என்னவொரு மயக்குப் புன்னகை! ‘உனக்கில்லாமலா…’என்ற சாகசம்…! ஏழு… ஏழு… மூன்றாவது பட்டையிலும் ஏழு வந்து நின்றுவிட்டால்… ஏழு வழுக்கிச் சுற்றி எங்கோ உள்ளொளிந்துகொண்டுவிட்டது. வென்ற நூறு டாலர்களையும் இயந்திரம் பிடுங்கிக்கொண்டுவிட்டது. குறைந்தபட்சம் அந்த இயந்திரம் அவளை சற்று நேரம் விளையாட அனுமதித்தது என்பதில் திருப்தி. அவள் அறுபது டாலர்களை கபளீகரம் செய்த அந்த இயந்திரத்திலிருந்து எழுந்திருந்தாள். ‘நாசமாய் போனவள்’என்று தன்னையே வைதுகொண்டாள். அவளையறியாமல் அதை உரக்கச் சொல்லியிருப்பாள் போலும். வெள்ளையினப் பெண்ணொருத்தி வினோதமான பார்வையை அவள்மீது விட்டெறிந்துவிட்டுப் போனாள். அவமானமாக இருந்தது.

கைப்பையைத் திறந்து மீதமிருந்த காசை எண்ணிப் பார்த்தாள். சரியாக பத்து இருபது டாலர் நோட்டுகளும் சில நாணயங்களும் இருந்தன. இருநூறு டாலர்கள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அம்மாவின் முகத்தை நினைத்தாள். அவள் முகம் அருளிழந்து போயிருப்பதாகச் சொன்னதை நினைத்தாள். குற்றவுணர்வாக இருந்தது.

இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது என்று அவள் அப்போதும் நம்பினாள். அப்படி நடந்திருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும். அந்த மாய நொடி… பிறகு இங்கு நடந்து திரியும் மனிதர்கள் எல்லோரும் தேவன்களும் தேவதைகளும் ஆகிவிடுவார்கள். வென்ற பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் வெளியேறும் வாயிலை நோக்கி விரைந்துசெல்வாள். வாயிற்புறத்திலுள்ள குட்டி நீர்வீழ்ச்சிகளை இன்றைக்கு நின்று கவனிப்பாள். மகிழ்ச்சி ததும்பி வழியும் மனதோடு விடுதியறைக்குச் செல்வாள். முடிந்தால் நீர்வீழ்ச்சி வரை நடந்து செல்வாள். வீதியெல்லாம் இரவின் பிரகாசம் பொன்துகள்களென இறைந்துகிடக்கும். அறைக்குப் போய் 'பிட்சா'வோ 'கென்ரேக்கி'யோ வரவழைத்துச் சாப்பிடுவாள். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். சரியான இயந்திரத்தை தேர்ந்து விளையாடுவது.

 “உன்னிட்ட இருக்கிற காசைத்தான் மெசினுக்குள்ள குடுக்கிறாய். பிறகு அது விழுங்கின காசை எப்பிடியெண்டாலும் திருப்பித் தரச் சொல்லி அதின்ரை காலிலை விழுந்து கெஞ்சிறாய். காசினோ நடத்துறவங்கள் பைத்தியக்காரங்கள் எண்டு நினைக்கிறியா… விளையாடுற எல்லாருக்கும் ஜாக்பொட் விழுத்தினால் இழுத்து மூடிப் போட்டு அவங்கள் வீட்டை போக வேண்டியதுதான். இங்கை விளையாட வாற ஒவ்வொருத்தரும் தங்களுக்கு ஜாக்பொட் விழும் எண்டுதான் நினைச்சுக்கொண்டு வருகினம். ஆனா… எப்பவும் வெல்லுறது இல்லை… எப்பவாவது வெல்லுறதுதான் சூதாட்டத்தின்ரை பொதுவிதி”என்ற சுதனின் வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன.

பசித்தது. கைத்தொலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். இரவு பதினொன்றரையாகிவிட்டிருந்தது. இரைச்சலில் அம்மாவின் அழைப்பைத் தவறவிட்டிருந்தாள். யார் மீதென்று தெரியாத கோபம் தலைக்கேற ‘சைலன்ட் மோட்’ஐ அழுத்தினாள். இன்னும் அரை மணி நேரத்தில் காசினோவின் உள்ளிருக்கும் உணவு விடுதியைப் பூட்டிவிடுவார்கள்.


அந்த இடமே புகையடர்ந்ததுபோல மாறியிருந்தது. சூதாட்ட விடுதிகள் உள்ளடங்கலான பொது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதனால், அது சிகரெட் புகையல்ல என்பதை உணர்ந்தாள். ஒரே இடத்தில் கண்களைப் பதித்து உற்று நோக்கிக்கொண்டிருந்த காரணத்தால் பார்வை மங்கலாகியிருக்கக்கூடும். இலேசாகத் தலைசுற்றியது.
போதும்… திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தாள். வெளியேறும் வாயிலைச் சுட்டும் எழுத்துக்கள் செந்நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ‘போ… போ…’என்றாள் தேவதை. ‘போறியாக்கும்…’என்றது என்று செல்லமாகக் கொஞ்சினாள் கடற்கன்னி. அவள் அருகிலிருந்த வாயிலை நோக்கி நடந்தாள். அதனருகிலேயே உணவகம் அமைந்திருந்தது.
வழியில் ஒரு இயந்திரத்தின் முன் ஏழெட்டுப் பேர் கூடி நின்றிருந்தார்கள். எட்டிப் பார்த்தாள். ஜாக்பொட் விழுந்திருந்தது.


இரண்டாயிரத்து ஐந்நூறு டாலர்கள்!


அந்த  மனிதர் - வயதானவர் நடுங்கும் கைகளோடு அகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஒருபோதும் வென்றிராதவர் போல தோன்றினார். ஏழ்மையைப் பறைசாற்றும் முகம்… உடைகள். கடந்த வாரம் ஒருவருக்கு பதினைந்தாயிரம் டாலர்கள் விழுந்ததைப் பற்றி ஒரு பெண் உரக்க விபரித்துக்கொண்டிருந்தாள். உண்மையில் அதில் விபரிக்க ஒன்றுமேயில்லை. ஒரு அழுத்து… நேர்கோட்டில் உருக்கள்… அவ்வளவுதான்!
ஜக்பொட்’விழுந்திருக்கும்போது நேராக வந்து நிற்கும் அந்த உருக்களைக் காணக் கண் கோடி வேண்டும். ஒரு தடவை பன்றிக்குட்டிகள் அவளுக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்களை ஈட்டித் தந்தன. அந்த வெற்றி, அவள் துயரம் ஊறிய முகத்தோடு வெளியேறிச் செல்வதற்கு முன்பாக கையிலிருந்த கடைசி இருபது டாலர்களால் கிட்டியிருந்தது. அன்றிலிருந்து பன்றிகள் மீது அவளுக்கு பிரியம் அதிகமாகிவிட்டது. பிறகொரு தடவை கடற்கன்னிகள் நேர்வரிசையில் வந்து நின்றார்கள். செதில்நிறைந்த வால்களை அவள் வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். கைகளில் தூசி ஒட்டிக்கொண்டது. தீக்கொழுந்துகள் சுற்றிப்படர்ந்த செந்நிற ஏழுகள், ஐந்நூறு டாலர்களை வென்றெடுத்துத் தந்த நாட்கள் அநேகம்.

இன்னும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றிற்று. வயிறோ பசியில் அழுது அடம்பிடித்தது. தலை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தது. பொருட்கள் இடம்மாறித் தெரிந்தன. மயங்கி விழுந்து விடுவேனோ என அஞ்சினாள். இம்முறை தேர்ந்த இயந்திரம் கபகபவென விழுங்கியது. திருப்பித் தரமாட்டேனெனக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போல… ஏறுக்கு மாறாகவே சுற்றியது. தோற்கிறோம் என்று அறிந்தும் யாரையோ பழிவாங்குவதுபோல நோட்டுக்களைத் திணித்துக்கொண்டே இருந்தாள்.


வயிறு ஒட்டி இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக்கொண்டே இருந்தது. கண்களைச் சுற்றி கருவளையம் படர்ந்திருக்கும் என்பதை கண்ணாடியைப் பார்க்காமலே அவள் ஊகித்தாள். முகம் காய்ந்து தலை கலைந்து ஒரு பிச்சைக்காரியைப் போல இரக்கமற்ற அந்த இயந்திரங்களிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதை நினைக்க அழுகை வந்தது. சுயவெறுப்பு மிகுந்தது. இந்த நாகரிக உலகம் மட்டும் இல்லையென்றால்…. உண்மையில் அவள் அங்கிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தியபடி வெளியே ஓட விரும்பினாள். ஆனால், அவள் நினைத்தபடியெல்லாம் அங்கு அவளால் நடந்துகொள்ள முடியாது.
‘ஷிட்’என்று வாய்க்குள் நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டாள். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தால், வன்முறையாக நடந்துகொண்டால் விரட்டிவிடுவார்கள் என்ற அச்சம் அவளைத் தடுத்தது. 


சூதாடும் பழக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கென்றே ‘புனர்வாழ்வு’நிலையங்கள் இருக்கின்றன. தோற்றுப் போய் வாய்விட்டு அழுத, கண்களில் உலகத்தின் துயரமெல்லாம் தேக்கப்பட்டிருக்க தளர்ந்து வெளியேறும் பலரை அவள் பார்த்திருக்கிறாள். விரல்களைக் கோர்த்துக்கொண்டு உள்ளே வந்து, பணத்தை இழந்தபின் வாக்குவாதப்பட்டபடி எதிரிகளைப் போல வெளியேறிச் சென்ற இணைகளையும் பார்த்திருக்கிறாள்.

அவள் எத்தனை நாட்கள் அப்படித் திரும்பிப் பாராமல் சூறைக்காற்றென தன்னைத் தானே இழுத்துக்கொண்டு ஓடிப்போயிருக்கிறாள்! நரகத்தினுள் தள்ளப்பட்டவளைப் போல ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்ற அந்தக் கூடமெங்கும் பரிதபித்து அலைந்திருக்கிறாள்! நள்ளிரவு கடந்து மயங்கி விழும் நிலை வந்த பிற்பாடு சாப்பிடுவதற்காக உணவகத்தினுள் நுழையும் அந்த ஆசியப் பெண்ணை உணவகத்தினருக்குக் கூட நினைவிருக்கலாம்.
முற்றிலும் மூழ்கிப் போவதன் முன்பான சுயவிசாரணை ஆரம்பித்துவிட்டது.

“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?”

‘நான் தனிமையாக இருக்கிறேன்’என்று சொல்லிக்கொண்டாள். 

மானசீகமாக கண்ணாடியைப் பார்த்துக் காறியுமிழ்ந்தாள்.
“இனிமேல் இல்லை… இனிமேல் இல்லை”என்று பிதற்றியபோது ஏறத்தாழ அவள் தோற்றுவிட்டிருந்தாள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருளற்ற சொற்கள் அவளது மனப்பரப்பில் மிதக்கவாரம்பித்தன. கையில் இருபது டாலர் மீந்திருந்தது. இரவு உணவுக்கு அது போதுமானது. விடுதியில் முற்பணமாக அவளிடமிருந்து பிடித்தம் செய்த நூறு டாலர்கள் இருந்தன. அறையைக் காலி செய்யும்போதுதான் அதைக் கொடுப்பார்கள். பயணச் செலவுக்கு அது தாராளமாகப் போதும். பயமா பசியா என்று பிரித்தறிய முடியாத உணர்வில் வயிறு இம்சித்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். விசும்பி விசும்பி அழத்தோன்றியது. அம்மாதம் தொலைபேசி, தொலைக்காட்சிக் கட்டணங்களுக்கென்று கணக்கில் விட்டுவைக்கப்பட்டிருந்த எண்பது டாலர்களில் கடைசித்தடவையாக அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியதும், வங்கியின் தானியங்கி இயந்திரத்தை நோக்கிப் போனாள். அந்தப் பணம் தன்னை இந்தப் பாதாளத்திலிருந்து கைதூக்கிவிடும் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
எல்லாம் ஒரு நொடியில் மாறிவிடும்! ஆம்!

ஒவ்வொரு இருபது டாலராக இயந்திரத்தின் வாயினுள் செலுத்திக்கொண்டிருந்தபோது, கௌரவத்தைப் பார்க்காமல், தான் கொஞ்சம்போல நம்பிக் கொண்டிருக்கிற கடவுளிடம் தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து விடுவித்துவிடும்படி யாசித்தாள். சூதாட்ட விடுதியின் இரைச்சலில் அவளது குரல் கடவுளுக்குக் கேட்கவேயில்லை.
அந்த எண்பது டாலர்களும் தீர்ந்துபோயின. கடனட்டையை தானியங்கி இயந்திரத்தினுள் செலுத்தி இருபது டாலராவது கொடுக்கும்படி மன்றாடினாள். அது கையை விரித்துவிட்டது. யாரிடமாவது கடன் கேட்கலாமென்றாலும் அந்த நள்ளிரவில் என்ன சொல்லிக் கேட்பது…? நள்ளிரவு ஒன்றரை மணி. உணவு விடுதி மூடப்பட்டுவிட்டிருந்தது. பசி தனது இருப்பை பிடிவாதமாக ஞாபகமூட்டிக்கொண்டேயிருந்தது.

“எண்டைக்காவது நீ எனக்குத் துரோகம் செய்ய நினைச்சிருக்கிறியா…?” என்று சுதன் ஒருநாள் விளையாட்டாகக் கேட்டான்.

“அதைத் துரோகம் எண்டு சொல்லலாமா எண்டு எனக்குத் தெரியேல்லை. ஆனா… காசினோவில நான் தோற்றுப்போய் என்ன செய்யிறதெண்டு தெரியாம யோசிச்சுக்கொண்டிருக்கேக்கை எவனாவது வந்து ஐந்நூறு டொலர் தாறன் வா எண்டு கூப்பிட்டிருந்தால் போயிருப்பன்”என்றாள்.
அவள் அப்படி ஏடாகூடமாகப் பேசும் பழக்கமுடையவள் என்பதால், சுதன் அந்தப் பதிலை அன்று பொருட்படுத்தவில்லை.

துயரத்தில் கரிந்துபோன முகத்தோடு சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தாள். அன்று சுதனுக்கு அளித்த பதிலை நோக்கித் தான் நகர்ந்துகொண்டிருப்பதை திடீரென உணர்ந்து திடுக்கிட்டாள். தற்கொலை எண்ணம் மனதின் அடியாழத்திலிருந்து மேற்பரப்பை நோக்கி வருவதை பயத்தோடு அவதானித்தாள். தலையை அசைத்தபடி எழுந்து கழிப்பறையை நோக்கிப் போனாள்.

கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது கண்கள் உள்ளொடுங்கிப் போயிருந்ததைக் கண்டாள். சுயவெறுப்பின் உச்சம் பிடரியைப் பிடித்துத் தள்ள சூதாட்ட விடுதியின் கனத்த கதவுகளைத் திறந்துகொண்டு வெளியேறினாள். வழியில் சான்ட்விச்சும் தண்ணீர்ப் போத்தலும் வாங்கிக்கொண்டாள். விடிய விடியத் திறந்திருக்கும் அந்தக் கடையில் அதற்காக பதினெட்டு டாலர்களை அறவிட்டார்கள். மீதமிருக்கும் சில்லறை, காலை உணவுக்குப் போதுமானது என்று மனம் கணக்கிட்டது.

விடுதியறைக்குத் திரும்பி கட்டிலில் தன்னை எறிந்தபோது இனிமேல் ஒருபோதுமில்லை என்று மனம் அரற்றிக்கொண்டிருந்தது. கன்னங்களில் வலிக்கும்படியாக அறைந்தாள். தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அம்மா மீண்டும் அழைத்திருந்தார். சுதன் ஆறு தடவைகள் அழைத்திருந்தான். அவனை அழைத்து இந்தக் கீழ்மையான உலகிலிருந்து என்னை அழைத்துக்கொண்டு போ என்று கதறவேண்டும் போலிருந்தது.
அவனது இலக்கம் மீண்டும் தொலைபேசியில் மினுங்கவும் எடுத்து காதில் பொருத்தினாள்.

“எவ்வளவு தோற்றனீ?”என்றான் அவன்.
அவள் மௌனமாக இருந்தாள்.
“நீ திருந்த மாட்டியா…?”
மீண்டும் கேட்டான்.
“எவ்வளவு?”
“ஐந்நூற்று நாற்பது”
“எழுபதாயிரம் ரூபாய்”அவன் கடுமையான குரலில் சொன்னான்.
அவள் மௌனமாக அழுதுகொண்டிருந்தாள். விக்கலில் உடல் தூக்கித் தூக்கிப் போட்டது. அவனுக்குத் தாங்கவில்லை.
“இதுதான் கடைசி. இனி வர மாட்டன்…”
“மெசினுக்குள்ள எவ்வளவு விட்டனி எண்டு உண்மையைச் சொல்லு. நான் தாறன்… ஆனா உடனை வெளிக்கிட்டு வந்திட வேணும்…”
அவள் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். மகிழ்ச்சி ஒரு மின்னலைப் போல வெட்டி விரைந்தது. அக்கணமே மண்டியிட்டு கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பினாள். சுதன் அவள் மனதில் அதிமனிதனாக வளர்ந்துகொண்டே போனான்.
“இந்நேரம் பஸ் இருக்காது”
“சரி… காலமை முதல் பஸ்ஸிலை வெளிக்கிட வேணும்..”
“ம்…இனி இஞ்சை வர மாட்டன். அப்பிடி வந்தா என்னை விட்டிடுங்கோ”
“சரி…”அவன் அந்தப் பக்கத்தில் மெலிதாகச் சிரித்தது கேட்டது.
--- --- ---
நன்றாக உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கண் விழித்ததும் முதல் நாளின் ஞாபகங்கள் நெருஞ்சியாய் நெருடின. தன்னிரக்கம் மிகுந்து கண்கள் பனித்தன. சுதனை நினைக்குந்தோறும் நெஞ்சம் காதலில் விம்மியது. அறையைக் காலி செய்தாள். முன்பணமாகப் பிடித்தம் செய்யப்பட்டிருந்த நூறு டாலர்களை வாங்கியபின், ரொறன்ரோவுக்கான பேருந்து அட்டவணையைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

விடுதியை விட்டு வெளியே வந்ததும் அந்த நூறு டாலர்களையும் வெளியில் எடுத்தாள். அதில் பேருந்துக் கட்டணத்திற்கென இருபத்தைந்து டாலர்களை எண்ணித் தனியாக வைத்தாள். பிறகு, காசினோவை நோக்கி வெகுவேகமாக நடக்கத் தொடங்கினாள். 

நன்றி: 'அம்ருதா'சஞ்சிகை, யூன் மாத இதழ்



6.11.2012

என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு


 என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லை
அவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்
நான் நினைக்கவில்லை
அவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்
அப்பாவையும் போலத்தான்
அவரும் கவிதைகள் ஏதும் எழுதவதில்லை
என் சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்
எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விட
செத்துப் போவதையே விரும்புவார்
இது - ஏற்கெனவே நிலவும் ஒரு கவிதையைப் போல
எனக்குத் தோன்றுகிறது - எனது சொந்தக்காரர்கள்
எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது..

எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்
ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லை
அவளது கைப்பையிலும் கூட
புதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லை
எனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோது
அவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிற
திட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்
அவளது சு+ப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறது
அவளது கையெழுத்துப் பிரதிகளில்
காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை

நிறைய குடும்பங்கள் இருக்கின்றன 
எவருமே கவிதைகள் எழுதாமல்
அப்படியே எங்கேயேனும் எழுதுபவரிருப்பாரானால்
அநேகமாக ஒரே ஒருவராகத்தான் இருப்பார்
சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத் 
தெளித்துக் கொண்டிருக்கும்
பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்

எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்
அவளது கருத்துகள் விடுமுறை காலத் தபால் கார்டு
எழுதுவதற்கு அப்பால் போனதில்லை
ஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்
இருக்கும்
ஆனால், அவள் திரும்பவும் என்னிடம் வரும்போது
அவள் சொல்வாள்
அனைத்தும் பற்றி
அனைத்தும் பற்றி
அந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி.

-விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

'ஹிட்லரின் முதல் புகைப்படம்' தொகுப்பிலிருந்து....
தமிழில்: ஆர்.பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்

5.17.2012

அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்….



ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத் திடலில் அந்த வானூர்தி ஒரு மாயப்பறவையின் வசீகரத்தோடு தரையிறங்கியது. அதன் விசிறி சடசடவென்று பேரோசை எழுப்பியபடி சுற்றித் தணிய, புற்கள் நளினமாக மடங்கித் தலைசாய்த்திருக்க, ‘நியாயத்தின் திருவுரு’க்களாக அவர்கள் இறங்கிவந்த அந்தக் காட்சியை மாணவர்களாகிய நாங்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். ‘இதோ எமது பாதுகாவலர்கள்’என்று மனம் குதியிட்டது. அந்தப் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள், சில மாதங்களிலேயே எங்களுக்கு எதிராகத் திரும்பவிருக்கின்றன என்று, அப்போது யாராவது எதிர்வு கூறியிருந்தால் எள்ளி நகையாடியிருப்போம்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால்பதித்தது. ‘இனி இந்த மண்ணில் போர் இல்லை’என்ற நினைவு எத்தகைய ஆசுவாசம் தரக்கூடியது! ‘இனி எங்கள் தெருக்களில் விடுதலையடைந்தவர்களாக நாங்கள் உலவமுடியும்’என்ற நம்பிக்கை எத்தகைய புளகாங்கிதத்தைப் பரத்தக்கூடியது!  தொடர்ந்து வந்த நாட்களில், ஒளிரும் விழிகளுடன் திருநெல்வேலியின் பரமேஸ்வராச் சந்தியிலும் அதனையொட்டிய வீதிகளிலும் நாங்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைபேசினோம்.  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள் சாதாரண உடைகளில் இராணுவ பயமற்று உலவித் திரிந்தார்கள். துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரும் (அது எந்த நாட்டு இராணுவமாக இருந்தபோதிலும்) போராளிகளும் ஒரே இடத்தில் உலவியதானது காட்சிப்பிழையாகவே எங்கள் கண்களுக்குத் தோன்றியது.

அவர்கள்தாம் (அமைதிப்படையினர்) எவ்வளவு அழகாகப் புன்னகைக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தார்கள்! இந்தியாவைப் பற்றி எங்கள் மூதாதையர்களால் அதுநாள்வரை கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பங்கள் மேலும் கொஞ்சம் ஊதிப் பெருத்தன. ‘காந்தி தேசம்’, ‘கலாச்சாரத் திருநிலம்’, ‘புத்தரின் பூமி’, ‘இரண்டாவது தாய்நாடு’, ‘தொப்பூள் கொடி உறவு’ இன்னபிற அடைமொழிகள் உருவேற்ற உணர்ச்சிப் பெருக்கில் (நன்றி ஒரு துளி தூக்கலாக) மிதந்து திரிந்தோம்.

ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று (ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆறு நாட்களின் பின்) சுதுமலையை நோக்கி பெருந் திரளாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனத்திரளை என் வாழ்நாளில் கண்டதில்லை. (நான்கு இலட்சம் பேர் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.) எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடக்கும் இடம்வரை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டு சுதுமலை அம்மன் கோயிலை நோக்கி நடந்து போனோம். கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க ஒருவரோடொருவர் தட்டுப்படாமல் நடக்கமுடியாத அளவிற்கு அடர்த்தியாயிற்று சனத்திரள். அவ்வளவு கூட்டத்தில் மேடையைச் சரிவரப் பார்க்க முடியாதென்பதனால் அருகிருந்த மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும்கூட இளைஞர்கள் ஏறியிருக்கக் கண்டோம். அன்றுஇ இந்தியாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்து (முழுமையாக அல்ல) ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்’என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில், “எமது மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை எங்களிடமிருந்து (விடுதலைப் புலிகள்) இந்திய அரசு கையேற்றுக்கொள்கிறது”என்ற வாசகம் இடம்பெற்றது. மேலும், “மிகப் பெரிய வல்லரசொன்று எங்கள் மக்களின் அரசியல் விதியை முடிவுசெய்யத் தீர்மானித்துவிட்டிருக்கும்போது, அதை மீறி எதையும் செய்வதென்பது எமது இயலுமைக்கு அப்பாற்பட்டது.”எனவும் கூறியிருந்தார் (ஆனால், மிகப் பெரிய வல்லரசை அவர்களால் தோற்கடிக்க முடிந்தது என்பது வரலாறு.)

போர் அல்லது போராட்டம் நடைபெறும் நாடுகளில் வாழும் எவரும் அரசியல் கலவாத தன்வரலாறுகளையோ சம்பவங்களையோ எழுதுவதென்பது சாத்தியமேயில்லை. அமைதிப் படையின் அநீதிக் காலத்தில் நான் அங்கே இருந்தேன் என்பதனால் ‘என்’, ‘நான்’என்று பிரயோகிக்க வேண்டியுள்ளது. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத ஒருவரது கண்களில் அமைதிப் படையினர் எங்ஙனம் தோன்றினார்கள் என்பதைப் பதியவேண்டிய அவசியம் உள்ளது.

ஈழத்தமிழர்கள்பால் ‘கருணை’கூர்ந்து இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த இனம் துடிக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டதோ, தமது வாழ்விடங்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதோ, பெரும்பான்மையாளர்கள் ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால் கல்வி உள்ளடங்கலான உரிமைகளில் எவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதோ, அவர்களைக் கலந்தாராயாமல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு, தமிழர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதுதான்.


‘ஈழமுரசு’பத்திரிகைக் காரியாலயத்தின் அச்சகப் பகுதியும் அச்சியந்திரமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதாக ஒரு நாள் (ஒக்டோபர் 10, 1987) காலையில் நாங்கள் அறிந்தோம். அன்றே ‘முரசொலி’பத்திரிகையின் அச்சியந்திரமும் சிதைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதனிடையில்- குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகள் உட்பட பதினேழு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிகளை அடாவடித்தனமாக மீறினார்கள். இலங்கையின் அதிகாரத் தரப்பினைத் தட்டிக் கேட்க இந்தியத் தரப்பு தயங்கியது. விளைவு, சிறைப்பிடிக்கப்பட்ட பதினேழு பேரும் ‘சயனைட்’அருந்தினார்கள். பன்னிரு விடுதலைப் புலிகள் இந்திய-இலங்கை கூட்டுச்சதிக்குப் பலியாகப்பட்டார்கள். ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்கள். நிலைமை வரவர பதட்டமடைந்துகொண்டே சென்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீரும் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர்க் கோயிலுக்கு அண்மையிலேதான் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஆகவே ஒவ்வொரு நாட்களும் அங்கே போகக் கிடைத்தது. அந்த மெல்லிய உருவம் மேலும் உருக்குலைந்து ஈற்றில் சருகாக உதிர்ந்தபோது (செப்டெம்பர் 26, 1987) அங்கிருந்து பெரும் அழுகைச் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து ஒரே பாய்ச்சலாக ஓடிச்சென்றேன். ‘காந்தி தேசம்’ எங்களைக் கைவிட்டுவிட்டது. ‘அஹிம்சைநெறியால் ஈழத்தை வென்றிருக்க முடியும்; ஆயுதப் போராட்டத்தால் மக்களைக் கொன்றுவிட்டார்கள்’என்று சொல்பவர்களின் மனச்சாட்சியை ‘திலீபன்’என்ற பெயரும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பிற்குரியதே.

நல்லூர்க் கோயில் முன்றல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் கண்ணீரும் ஆற்றாமையும் ஆயாசப்பொருமலுமாய் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். ‘கண்கெட்டுப் போவார்’என்று, மண்ணை வாரியிறைத்து இந்திய அமைதிப் படையினரை பெண்கள் சபித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையிலிருந்த திலீபனின் உயிரற்ற உடலை நோக்கிச் செல்ல முயன்றார்கள். தொண்டர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் கைவிடப்படுகிறோம்? மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் ஏமாற்றப்படுகிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களைக் குதறிக்கொண்டிருந்தன. இலங்கை இராணுவத்தின் இனவெறியாட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்கள், இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாக்க முற்பட்டனரேயன்றி, எளிய மக்களது உயிர்களையோ உரிமைகளையோ ஒரு பொருட்டாகக் கருதினார்களில்லை.

ஒக்டோபர் 21இ 1987 தீபாவளியன்று இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நடத்தப்பட்ட நரவேட்டை இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! ‘இறுதிப் போர்’என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் சண்டையின்போது இலங்கை இராணுவத்தினரும் வான்படையும் வைத்தியசாலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன. அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்ததாக, முன்னுதாரணமாக யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி மீது இந்தியப் படைகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலைச் சொல்லலாம். வைத்தியசாலை வளவினுள் விடுதலைப் புலிகள் ஒளிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு உள்நுழைந்த ‘அமைதி’ப் படையினர்‘ வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் உள்ளடங்கலாக 70 பேரைச் சுட்டுக்கொன்றனர். பிணங்களோடு பிணங்கள் போலவே கிடந்து உயிர்தப்பிய சிலரது வாக்குமூலங்கள் நெஞ்சை அதிரவைத்தன.

‘இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா?’என்ற அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. ‘ஒரு தாய் தன் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொன்றாள்’ என்ற செய்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிர்ச்சியூட்டுமோ அதனிலும் அதிகமதிகமான அதிர்ச்சியில் திகைத்துப்போனோம்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் சண்டை தொடங்கிய பிற்பாடு, பொதுசனங்களெல்லாம் புலிகளானார்கள். பெரும்பான்மைச் சிங்களச் சிப்பாய்களுக்குப் பதிலாக, ‘இறையாண்மை’மிக்க இந்தியாவின் பன்மொழி பேசும் சிப்பாய்கள் இனவழிப்பைச் சிரமேற்கொண்டார்கள்.

நல்லூர்க் கோயில் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம், பசியின் ஞாபகமும் கூடவே வந்துவிடுகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு அஞ்சி கோயிலுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். ஒரு துண்டு பாணுக்காக (தமிழகத்தில் ரொட்டி) ஏங்கிப் பசித்திருந்த அந்த நாட்கள் மறக்கப்படக்கூடியனவல்ல. ஓயாத பேச்சொலிகள், கைது செய்யப்படுவோம் என்ற பதட்டம், உயிர்ப்பயம், குழந்தைகளின் அழுகுரல், இரவுகளில் எப்போதாவது வெடித்தெழும் விசும்பல்கள், மூத்திர-மல நாற்றம் என்று கோயிலின் முகமே மாறிவிட்டது.

இது எங்கள் குடும்பத்தின் கதை மட்டுமன்று; அந்த மண்ணில் வாழ்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அவலம். அமைதிப்படை என்று வந்தவர்கள் சாதாரணர்களின் வாழ்வில் எத்தகைய கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளின் மீது எப்படிக் காறியுமிழ்ந்தார்கள் என்பதைப் பேச விரும்புகிறேன். இந்தியா என்ற வல்லரசு எளிய மக்களின் வெறுப்புக்கு எவ்விதம் ஆளானது என்பதைப் பகிர விரும்புகிறேன். காரணமற்ற வெறுப்பை ஈழத்தமிழர்களோ தண்டகாரண்யவாசிகளோ நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், காஷ்மீரைச் சேர்ந்தவர்களோ கொண்டிருக்கவில்லை என்பதை, இந்தியாவின் ‘தேசபக்தர்கள்’புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ சார்புடைய, மக்கள் விரோத அரசுகளன்று; மக்களே கரிசனைக்குரியவர்கள்.

பசி பொறுக்கமாட்டாத ஒருநாளில் எனது பெற்றோரும் நானும் நல்லூர்க் கோயிலை விட்டு வெளியேறி எங்கள் பெற்றோரின் கிராமத்துக்குப் போனோம். தெருவோரம் விழுந்து கிடந்த பிணமொன்றின் தலையை நாய் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்கெங்கோ எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. துப்பாக்கி வேட்டுகளின் விடாத சத்தம். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடந்துகொண்டிருந்தது.

எனது பெற்றோரின் ஊரில் சில நாட்களே அமைதி நீடித்தது. ‘அமைதி’ப்படை நெருங்கி வந்த பிறகு அமைதி நிலவுதல் எங்ஙனம் சாத்தியம்? அவர்கள் ஊரை நோக்கி வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அடுத்த நிமிடமே, புயலில் அலைக்கழியும் பறவைகள் போல தெருக்களில் அலைமோத ஆரம்பித்துவிட்டோம். உயிர்ப்பயம் எங்களை விரட்டியது. வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும், ஓரிரு ஆடைகளுடனும் சொற்ப கையிருப்புகளோடும் வெளியேறி நடக்கத் தொடங்கினோம். எங்கே செல்வது என்ற சர்ச்சைகளின் பின் கோயில்களுக்குச் செல்வது என்று முடிவாயிற்று. சிலர் தேவாலயங்களை நோக்கிப் போனார்கள். வேறு சிலர் இந்துக் கோயில்களை நோக்கிப் போனார்கள். என் தாயார் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத் தலையில் சுமந்து வந்தார். அது எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெளியில் குண்டுச் சத்தங்கள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மூளாய் என்ற ஊர் வழியாக அமைதிப் படை உள்நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். நாங்கள் ‘கடவுளே… கடவுளே’என்று அரற்றியபடி தஞ்சம் புகுந்த இடங்களுள் தவித்தபடியிருந்தோம். ஈற்றில் இந்திய இராணுவம் பேராரவாரத்துடன் ஊர்மனைக்குள் நுழைந்தது.

கண்ணிமைத்து மூடும் நேரத்திற்குள் வானைக் கீறி மறையும் மிராஜ் விமானங்கள் பேரிடி போன்ற சத்தத்தோடு பறந்து அச்சுறுத்தின.  கோயில் அர்ச்சகரது கழிப்பறையை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கோயிலைச் சுற்றவர இருந்த வயல்களுக்குள் மலங்கழித்தார்கள். கழிப்பறைக்கு இருக்கும்போது அங்கேயே குண்டு வீழ்ந்து இறந்துவிடலாகாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவரவர் கொண்டு வந்திருந்த அரிசியில் உணவு சமைத்து உண்டோம். இராணுவத்தினரால் ‘ரேஷன்’கணக்கில் எப்போதாவது அரிசி வழங்கப்பட்டது. பெரும்பாலும் பீற்றூட் கறியும் பருப்பும்தான். நல்ல உணவு என்பதைக் கனவில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வீடுகளில் தானியங்கள் இருந்தபோதிலும் அங்கு சென்று எடுத்துவர எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்படிச் சென்றுவருவது ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஆகவே,  நாங்கள் எப்போதாவது அல்லது கிடைக்கும்போது உணவு உண்ண எங்கள் வயிறுகளைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

இருந்திருந்துவிட்டு எங்களை வரிசையாக கோயிலிலிருந்து வெளியே வரச் சொல்வார்கள். கைகளை உயர்த்திக்கொண்டு வெளிவரவேண்டும். அடையாள அணிவகுப்பு போல ஒன்று நடத்தப்படும். குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது தாங்கமுடியாத அவமானத்தை அளித்தது. அப்போது ஒருவர் கண்களை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவோம். குறிப்பாக வயதானவர்களின் கண்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. மரியாதைக்குரிய அவர்கள் இழிவாக நடத்தப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் கோபநெருப்பு கனன்றுகொண்டேயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதைக் காட்டிலும் அது பாதுகாப்பானது என்று நினைத்தது மட்டும் போராட்டத்தில் தம்மை இணைந்துகொள்ளக் காரணமாக இருக்கவில்லை. ‘இழிவுசெய்யப்பட்டோம்’ என்ற சுடுநினைவும் அவர்களை போராட்டம் நோக்கி உந்தித் தள்ளியது.

அன்று மட்டுமென்றில்லை; காலகாலங்களாக ‘நீங்கள் மனிதர்களல்ல… மனிதர்களல்ல…’என்று இடைவிடாது ஒலித்த இனவெறி, பிராந்திய வல்லாதிக்கக் கூச்சல்களே  இளைஞர்களையும் பெண்களையும் களமாடத் தூண்டியது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அமைதிப் படை பலத்த தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில் அந்தத் தாக்குதல் அகதி முகாம்களில் எதிரொலிக்கும். இரவுகளில் சப்பாத்துக் கால்கள் பேரோசையெழுப்ப அகதி முகாம்களுக்குள் நுழையும் படையினர், ஒவ்வொரு முகங்களாக ‘டார்ச்’வெளிச்சத்தில் பார்ப்பார்கள். துணியால் முகம் மறைத்து அவர்களோடு வந்திருக்கும் முகமூடி (காட்டிக் கொடுப்பவர்) விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்களை அடையாளங் காட்டுவார். (அந்தப் புண்ணிய கைங்கரியத்தை பெரும்பாலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே செய்துவந்தனர்.) அடையாளங் காட்டப்பட்டவரை கூட்டத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பார்கள். அவரை அழைத்துச் செல்லவிடாமல் உறவினர்கள் காலைப் பிடித்து இழுப்பார்கள். அல்லது அமைதிப் படையின் கால்களில் விழுவார்கள். காலில் விழும் உறவினரை மிலேச்சத்தனமாகத் தாக்கிவிட்டு ‘சந்தேக நபர்’களை இழுத்துச் செல்வார்கள்.

இளம்பெண்களை வைத்திருக்கும் தாய்மார்கள் படையினரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். ‘அமைதி’ப்படையினரின் தலையாய பணிகளுள் ஒன்றாக பாலியல் வல்லுறவும் அமைந்திருந்ததே அந்த அச்சத்திற்குக் காரணம்.
உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனத்துப் பெண்களை வல்லுறவு செய்வதன் மூலமாக, அந்த நிலத்தையே வெற்றிகொண்டதாக இறையாண்மையுள்ள அதிகாரங்கள் மமதை கொள்ளும் ‘போர்நெறி’களை நாமறிவோம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பயணங்களின்போதும் சுற்றிவளைத்துத் தேடுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் பெண்கள் தங்கள் உடல்களையே தமக்கு எதிரிகளாகக் கருதவேண்டியிருந்தது. சோதனைச் சாவடிகளில் பேருந்துகளிலிருந்து ஆண்கள் இறக்கிவிடப்படுவர். அது பெண்கள் என்ற இரக்கத்தின்பாற்பட்டதன்று; இராணுவத்தின் பாலியல் தினவின்பாற்பட்டதே. மார்புகளை அழுத்தி, ‘குண்டு இருக்கிறதா?’என்று பற்களைக் காட்டும்போதும், பையைச் சோதனையிடும் சாக்கில் பெண்களது முழங்கால்களில் தங்களது ‘ஆண்மை’யை அழுத்திப் பரிசோதிக்கும்போதும் நாங்கள் கண்களில் நீர்முட்டச் சகித்துக்கொண்டோம். அருவருப்போடு அழுத்தி அழுத்தித் தேய்த்தாலும் போகாத அழுக்கைப் போல அந்த ஞாபகம் காலம் முழுவதும் இருக்கும். அமைதிப் படையினர் தமது உணவுத் தயாரிப்பின்போது கடலை எண்ணெயையே பயன்படுத்தினார்கள். பாம்புகளின் அருகாமையை உழுந்து வாசனை மூலம் அறிந்துகொள்வதுபோல, (பாம்புகளின் கொட்டாவி உழுந்து வாசனையுடையது என்பார்கள்) கடலை எண்ணெய் வாசனை இந்தியப் படையினரது பிரசன்னத்தை அறிவித்துவிடும்.

ஒருவழியாக, அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டோம். ஊரின் முகமே மாறியிருந்தது. எறிகணை வீச்சினால் கட்டிடங்கள் சிதைந்திருந்தன. எங்களுக்குத் தெரிந்த பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எங்கெங்கு திரும்பினும் இந்திய இராணுவச் சிப்பாய்களே தென்பட்டார்கள். பல வீடுகள் அவர்களால் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிகமாகத் தங்கவந்த இடத்திலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் திரும்பிவிட நாங்கள் தீர்மானித்தோம். அங்குதான் எங்களது உடமைகள் இருந்தன. மேலும், அந்தக் கடின காலத்தில் உறவினர்களது வீடுகளில் அவர்களுக்குச் சுமையாக நீண்ட நாட்கள் தங்கியிருப்பது உவப்பானதாகவோ நியாயமானதாகவோ இருக்கவில்லை.

ஏறக்குறைய பத்து மைல் தூரத்தை கால்நடையாகவே நாங்கள் கடக்கவேண்டியிருந்தது. பேருந்துகள் ஓடவில்லை. பத்திரிகைகள் கிடைக்கப் பெறவில்லை. அஞ்சலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகமும் இயங்காத காரணத்தால் தனித் தனித் தீவுகளில் தொடர்பறுந்தவர்களாக நாங்கள் வாழவேண்டியிருந்தது. யாழ்நகருக்குத் திரும்பும் வழியெங்கும் நாட்பட்ட பிணங்களை நாங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து எழுந்த துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. கட்டிடங்கள் உருக்குலைந்து கிடந்தன. இடிபாடுகள் நிறைந்த நகரமொன்றினூடாக காலமற்ற காலமொன்றினுள் நடப்பதைப் போல நாங்கள் நடந்துபோனோம். எந்நேரமும் கொல்லப்படலாம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. துப்பாக்கிச் சன்னங்களை நினைத்து முதுகு கூசியது. வழிவழியே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டோம்.

யாழ் நகருக்கு அண்மையிலிருந்த (பெயர் மறந்துபோய்விட்டது) மயானத்திற்கு அருகிலிருந்த இராணுவ முகாமில் ஒரு சீக்கிய இராணுவத்தினன் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அப்படியொரு உயரமும் பருமனுமான மனிதனை நான் இன்னமுந்தான் கண்டதில்லை. வேற்றுலகவாசியோவென்று ஐயுறும்படியான தோற்றம். திடீரெனத் திரும்பி கண்களைப் பார்த்தபோது உயிரே உறைந்துபோனாற்போலிருந்தது. கட்டளை இன்றியே நின்றுவிட்டிருந்த எங்களைப் பார்த்து அதிசயிக்கத்தக்க விதமாகச் சிரித்தபடி ‘போ’என்று கையசைத்தான். நாங்கள் ஏறத்தாழ ஓடி அவ்விடத்தை நீங்கினோம். அன்றைக்கு மட்டுமல்ல; வேறு சில சூழ்நிலைகளிலும் இந்திய அமைதிப்படையிலிருந்த சீக்கியப் படையினர் தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் கருணையோடு நடந்துகொண்டதை அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் வாழ்ந்திருந்த தெருவே வெறிச்சிட்டிருந்தது. அயலவர்களில் பலர் எங்கேயென்றே தெரியாதபடி காணாமல் போயிருந்தார்கள். பக்கத்து வீடு இந்திய அமைதிப் படையின் இருப்பிடமாகியிருந்தது. ஒரு இரவுகூட அங்கு நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதாக உணர்ந்தோம். இவை போதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி எழுந்த அழுகுரல்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. “ஐயோ… ஐயோ””என்று பெண்கள் அலறியழும் ஓசைகளைக் கேட்டோம். “என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ…”என்று மன்றாடும் குரல்களைச் செவியுற்றோம். பாலியல் வதைகூடமொன்றின் அருகில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைவு பதைபதைக்கச் செய்தது. என் தாயின் முகம் பித்துப் பிடித்தாற்போல மாறியிருக்கக் கண்டேன். தந்தையோ இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார். அந்த இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தோம். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருந்தோம். எங்கள் குடும்பம் வவுனியாவை நோக்கிப் பயணப்பட்டது. அங்கு எனது அண்ணா இருந்தார். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது,வவுனியாவில் நிலைமை சகித்துக்கொள்ளத்தக்கதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கூட நாங்கள் யாழ்ப்பாண வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.

ஆனால், ஞாபகங்கள் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கின்றன. ‘ஐயோ… ஐயோ’என்ற அலறல் இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்காவது கடலை எண்ணெய் மணத்தை நுகர நேர்ந்தால், இரு தசாப்தங்களுக்கு முந்தைய அந்தக் கொடிய காலத்துள் சென்று விழுந்துவிடுகிறேன். தலை பிய்ந்து கிடந்த அந்தப் பெயரறியாப் பிணத்தையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டிருந்த பெண்ணின் நீரில் ஊறிச் சிதைந்த கண்களையும் எங்ஙனம் மறப்பது?

1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஈழத்திலிருந்து இந்திய ‘அமைதி’ப் படை வெளியேறிவிட்டதாக (அல்லது வெளியேற்றப்பட்டதாக) எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அவர்கள் எப்போதும் வெளியேறவில்லை என்பதை நாமறிவோம்.

நன்றி: 'பறை' சஞ்சிகை, பொதியவெற்பன் ஐயா
25 நவம்பர், 2011

 

5.08.2012

பேரினவாதத்தின் போராயுதம்


மூன்றாவது முறையாக
மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை


அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்.


அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.


எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொழுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது திறந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.

வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’


விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.


இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.



“போர்த் தந்திரோபாயங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு பிரயோகிக்கப்படுவது கொங்கோ, சூடான் போன்ற சில இடங்களில் எங்காவது எப்போதாவது நடக்கும் ஒரு விடயம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதனைக் காட்டிலும் மிக மோசமானது. பொஸ்னியா, பர்மா, சிறிலங்கா என பெரும்பாலான இடங்களிலும் பாலியல் வல்லுறவு போர்த் தந்திரங்களில் ஒன்றாகப் பிரயோகிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய கொடுமைகளை இழைப்பவர்கள் பல நாடுகளில், பல சம்பவங்களில் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அவர்களைத் தப்பிக்க விடுவதானது மேலும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனது மேற்கண்ட வாசகங்கள் இலங்கை அரச தரப்பைக் கொதித்தெழச் செய்தன. இலங்கை போன்ற, ஜனநாயகத்தை ‘கண்ணில் வைத்துப் போற்றும்’ ஒரு நாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கூற்றின் மூலம் இழிவுபடுத்திவிட்டதாக கடுஞ்சினத்தோடு குற்றஞ்சாட்டினார்கள். பின்னர் வழக்கம்போல, ‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிடும்போது தற்செயலாக இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம்’என்ற தற்சமாதானத்தின் மூலம் இலங்கை அரச தரப்பு தனது கொதிப்பை ஆற்ற முயன்றது. மேலும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின்போது, ‘2006-2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக அறியவில்லை’என்ற குளிர்ந்த வார்த்தைகளை அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றதனோடு அடங்கினார்கள்.

ஆனால், ‘இலங்கை அரச படைகள் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் எதையும் இழைக்கவில்லை; அமெரிக்காவும் ஐரோப்பாவின் சில ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புகளும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை போன்ற உன்னத தேசத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்’ என்ற வார்த்தைகளை, அதைச் சொல்லும் சிங்கள மேலாதிக்கமே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
விடுதலைப் புலிகளுடனான போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தகைய காடைத்தனத்தை இலங்கையின் அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. 1958, 1971, 1983 எனத் தொடர்ந்த இனக்கலவரங்களின்போது தமிழ்ப் பெண்களிடம் தனது ‘ஆண்மை’யை நிரூபித்து வந்திருக்கிறது சிங்கள மேலாதிக்கம்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற அனுமதிச்சீட்டின் மூலமாக எந்தவொரு அத்துமீறலுக்கும் அரசாங்கங்களால் துணிய முடிகிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும், பொஸ்னியாவிலும், ருவாண்டாவிலும் கெயிட்டியிலும் கிழக்குத் திமோரிலும் என எங்கெங்கும் இருக்கும் பெண்கள், அரச மற்றும் அமைதிப் படைகளின் வக்கிரங்களுக்குப் பலியானதும் தொடர்ந்து பலியாகி வருவதும் அந்த அனுமதிச் சீட்டின் மூலமாகவே. ருவாண்டாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. 1990இல் 5000 குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டனர்.  ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம் அதே சூறையாடலை ஈராக்கியப் பெண்கள் மீது நிகழ்த்தியது. பொஸ்னியப் பெண்களைச் சிறைப்பிடித்து அடைத்துவைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பந்தரிக்கச் செய்தபிற்பாடு சேர்பிய இராணுவம் சொன்னது: ‘இனக்கலப்பு செய்தாயிற்று. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்’.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையடுத்து, அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தில் கால்பதித்த இந்திய இராணுவம் ஏறத்தாழ எட்டாயிரம் தமிழ்ப்பெண்களை தனது பாலியல் வெறிக்குப் பலியாக்கியிருக்கிறது. உலகெங்கிலும் பெண்ணுடல்களில் களமாடித் தங்கள் கொடியை ஊன்றியவர்கள் விருதுகளாலும் பதக்கங்களாலும் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகளுக்கான- பாலியல் வதைகளுக்கெதிரான பெண்கள் அமைப்பு கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது.
“சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். உண்மையான எண்ணிக்கை அதனிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான வல்லுறவுகள் அச்சம் காரணமாக வெளியிடப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.”

1996ஆம் ஆண்டு மட்டும் 150 தமிழ்ப் பெண்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’என்ற பத்திரிகை ஜனவரி, 1997 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

‘இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்களே’என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவருகிறது இலங்கை அரசு. மேலும், தன்னுடைய இராணுவத்தின் கட்டுப்பாடு, கடமையுணர்வு, தேசாபிமானம் குறித்தெல்லாம் உலக அரங்கில் பெருந்தன்மை பொங்கிப் பிரவகிக்கப் பேசி வருகிறது. மனிதவுரிமை அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய எவருமோ முறைப்பாடு செய்யும் வேளைகளில், ‘இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பொய்ப்பிரச்சாரம்’என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிறது. அல்லது, விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. மறுக்கவியலாத ஆதாரங்களோடு முன்வைத்தால், ‘நீ மட்டும் ஒழுங்கோ…?’என்ற அடாவடித்தனமான கேள்விகளோடு குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளுகிறது. இலங்கையில் நிகழ்ந்தேறிய பல்லாயிரக் கணக்கான பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாமல் அதிகாரங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், அத்தகைய எத்தனங்களையும் மீறி வெளிவந்த சில கொடூர சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பனவாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 7, 1996 - கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

“வீண் அவதூறை அள்ளிச் சொரிகிறார்கள்”என்று கண்கசக்கும் பேரினவாதிகளும் கிருஷாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்தே இருக்கிறார்கள். இந்த வழக்கு அதிர்ச்சி தரும் வகையில் மனிதப் புதைகுழிகளுக்கு இட்டுச் சென்றதானது, தடயங்களை துடைத்தழித்து குற்றங்களிலிருந்து தப்பிக்கும் பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தது.
இறந்தகாலம் கற்பித்த, தடயம் அழிக்கும் உத்தியை, காவற்துறையினர் கோணேஸ்வரி படுகொலையில் பிரயோகித்தார்கள். 

கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை என்ற 35 வயதான, நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண், 1997 மே 17ஆம் திகதியன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘சென்றல் காம்ப் கொலனி’யிலிருந்த பொலிசாரால் இரவு பதினொரு மணியளவில் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டபின் கொல்லப்பட்டார். நான்கு வயதான மகள் மட்டுமே அந்தக் கொடூர நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தாள். அவரது ஏனைய மூன்று பிள்ளைகளும் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கோணேஸ்வரி கொலை செய்யப்பட்ட விதம் ‘கசாப்புக்கடைத்தனமானது’என்று மனிதவுரிமை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. கோணேஸ்வரியின் பிறப்புறுப்பினுள் கைக்குண்டு ஒன்றைத் திணித்து அதை வெடிக்கவைத்து வல்லுறவின் தடயங்களை அழித்திருந்தார்கள் இலங்கையின் காவற்துறையைச் சேர்ந்த அந்த நான்கு பேரும்.

28 டிசம்பர், 1999 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற 29 வயதான பெண் (ஒரு பெண் குழந்தைக்குத் தாய்)அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சாரதாம்பாளின் தந்தையையும் சகோதரரையும் கட்டிப் போட்டுவிட்டு அவரைத் தூக்கிச் சென்றவர்கள் புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரே. மறுநாட் காலை அந்தப் பெண்ணின் உயிரும் ஆடையுமற்ற உடல் புதர்களால் மூடியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணை நடத்த அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு ‘நீதி’நிலைநாட்டப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிவரஜனி, விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து பொலிசாராலும் அந்த விடுதியின் ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்றபோது அவர்கள் வேசிகளெனத் தூற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோலவே, குண்டு வைத்திருப்பதாகக் கூறி ஒரு பெண் நடுவீதியில் மக்கள் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்டார். (விசாரணையின் பிறகு அவர் ஒரு சிங்களப் பெண் என்பது தெரியவந்தது.) அவர் குண்டு வைத்திருக்கவில்லையென அறிந்தவுடன் அவரையும் வேசியாக்கிவிட்டனர். அதாவது, பாதுகாப்புப் படையினரை நிரபராதிகளாக்க வேண்டி சம்பந்தப்பட்ட பெண்களை வேசிகளாக்கினர். கவனிக்கவும்… அவர்கள் பாலியல் தொழிலாளர்களுமல்லர்; வேசிகள்! வேசிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற  பொதுப்புத்தியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கோணேஸ்வரி, ஐடா கமாலிற்றா, சிவமணி, விஜிகலா கூட குற்றவாளிகளால் மறைமுகமாக அவ்வாறு பழிசுமத்தப்பட்டவர்களே.

இலங்கை போன்றதொரு நாட்டின் நீதிமன்றங்களும் அரசுசார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடையனவாக இருக்கின்றன. காரணம், அவர்கள் அரச இயந்திரத்தின் சக்கரங்கள். அவர்கள் மீது முற்று முழுதான குற்றஞ்சாட்டுதல்களைச் சுமத்தும்போது அரசும் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்துவிடுகிறார்கள். அல்லது, வழக்குகளை இழுத்தடிப்பதன் வழியாக சம்பந்தப்பட்டவர்களை சலிப்படையவும் பின்வாங்கவும் செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் மௌனமாக இருக்கும்படி மிரட்டப்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியேறும்படியாக அதிகாரங்களால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது குற்றவாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறார்கள். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு புதிய இடம் அவர்களுக்கு அருளப்பட்டுவிடுகிறது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. தர்ஷினியின் கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வழக்கம்போலவே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் வங்காலை என்ற இடத்தில் நடந்தேறிய கொடூரம் மனிதநேயமுள்ள எவராலும் மறக்கப்படக் கூடியதன்று. அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் (மேரி மெற்றலின் - மூர்த்தி மார்ட்டின், அவர்களது 9 வயதான மகள் லக்ஷிகா, 7 வயதான மகன் டிலக்ஷன் ஆகியோர் கொடூரமான முறையில் உளியாலும் துப்பாக்கியின் பின்புறமுள்ள கூர்முனையாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தாயைத் தவிர ஏனைய மூவரும் வெட்டுக் காயங்களுடன் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தனர். மேரி மெற்றலின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் பெருகிய நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். 9 வயதான லக்ஷிகாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அன்று காலையில் தேடுதல் சோதனை நடத்த வந்த இராணுவத்தினரே அந்தக் குரூரமான கொலைகளைச் செய்தவர்களென அந்தக் கிராமத்தினர் சாட்சியமளித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சில உதாரணங்களே. வெளிவந்தவை சில ஆயிரம். வெளிவராதவை பல்லாயிரம்.
‘ஆயிரத்தில் ஒரு சம்பவம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அல்லது கவனத்திற்குக்  கொண்டுவரப்படுவதாக’மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பாதுகாப்புப் (?) படைகளால் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிருடன் விடப்படும் பெண்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ‘உனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்’என்று மிரட்டப்படுகிறார்கள். ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உள்ளுக்குள் வைத்து மறுகியபடி காலமெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுபவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புஷ்பமலர் (கச்சாய்), பாலேஸ்வரி (கெருடாவில்), வாசுகி (யாழ்ப்பாணம்), தனலட்சுமி (கிளிவெட்டி, மூதூர்), லெட்சுமிப்பிள்ளை (திருகோணமலை-மகன்களுக்கு முன்னால் வைத்து வதையும் வல்லுறவும்) சிறீறஞ்சனி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி (சரசாலை, தாய்-மகள்-சிறிய தாய் உறவு), சந்திரகலா கிருஷ்ணபிள்ளை (அளவை),  கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (கல்குடா), தேனுகா (10 வயது, பத்தமேனி, அச்சுவேலி), சிவசோதி (மண்டூர்), வனிதா (மயிலம்பாவெளி), நவமணி, ஜெயந்தி, மேகலா (ஜெயந்தியும் மேகலாவும் நவமணியின் மகள்கள் - தியாவெட்டுவான்), நூர் லெப்பை சித்தி உம்மா (ஓட்டமாவடி), அலி முஹம்மத் அதாபியா(ஏறாவூர்), காளிக்குட்டி ராகினி (பனிச்சங்கேணி), கிருபாதேவி (மட்டுவில் வடக்கு), விஜயராணி (அராலி), புவனேஸ்வரி (மந்துவில்-உறவினர் மூவர் கொலை செய்யப்பட்டபின்பு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்), நாகலிங்கம் பவானி (திருநெல்வேலி), சின்னப்பு பாக்கியம் (மாவடிவேம்பு), ரஜனி (வாழைச்சேனை), பாலந்தி (6 வயது, அச்சுவேலி), பிறேமினி தனுஷ்கோடி, ரஜனி வேலாயுதப்பிள்ளை (உரும்பிராய்), தங்கநாயகி (அம்பாறை), சந்திரகலா (அல்வாய்), யோகலிங்கம் விஜிதா(நீர்கொழும்பு), சியாமளா (பளை), அமுதா (விடத்தல்தீவு, மன்னார்), சவரி மெடலின் (சொறிக்கல்முனை), ஐடா கமாலிற்றா (பள்ளிமுனை, மன்னார்), செல்வராணி (மீசாலை), அஜந்தனா (அரியாலை), ரஜனி (பனிச்சங்கேணி), பவானி (திருநெல்வேலி), விஜயலட்சுமி (கல்மடு, வாழைச்சேனை), ஆனந்தி (செட்டிப்பாளையம்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை இலங்கை அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிலரது பெயர்கள். அவர்களுள் கொல்லப்பட்டவர்களும் ‘கருணை கூர்ந்து’தப்ப விடப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.


கொலைபடு களத்தில் வீழ்ந்தவர்கள் இலக்கங்களாக்கப்பட்டு விடுதல் போல, பாலியல் வெறிக்குப் பலியானவர்கள் காலவோட்டத்தில் வெறும் பெயர்களும் சம்பவங்களும் ஆக்கப்பட்டுவிட்டனர்.

மெல்லிய சோகம் கலந்த நீண்ட கண்களும் அழகான தமிழ் உச்சரிப்பும் கொண்ட இசைப்பிரியாவை விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இசை, நடனம், நடிப்புத்திறன் என பல்வகை படைப்பாளுமைகளும் கொண்ட பெண் எனவும் பின்னர் அறியக்கிடைத்தது. 2009 மே மாத பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தடயங்களோடு உயிரற்றுக் கிடந்த இசைப்பிரியாவின் உடலை உலகம் பார்த்தது. இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
“இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் நாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளது”என்று முதன்முறையாக அந்தக் காணொளியை வெளியிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி நிலையமாகிய ‘சானல் 4’அறிவித்தது.
ஆனால், வழக்கம்போல, தனது பழக்கப்பட்ட ‘கனவான்’ வார்த்தைகளால் இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இசைப்பிரியா அரசுக்கெதிரான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ‘அவ்வாறெனில், கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பது எதனால்?’என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த பேரனர்த்தத்தின் பிற்பாடு காயங்களோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக அங்கு அவ்வேளையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ‘விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’என்ற ஆரவாரத்தோடு, இலட்சக்கணக்கான மக்களை விலங்குகளைப் போன்று- சுகாதார, உணவு, குடிநீர், இடவசதி அற்ற தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்திருந்தது இலங்கை அரசாங்கம். அவை பெயருக்குத்தான் தடுப்புமுகாம்களாக இருந்தனவேயன்றி, உண்மையில் அவை எஞ்சிய விடுதலைப் புலிகளை வடிகட்டுவதற்கான வதைமுகாம்களாகவே அமைந்திருந்தன. இன்னமும்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள், மீள்குடியேற்றப்படாமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியாவின் தடுப்பு முகாமொன்றில் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம் இது:

“முகாமிலிருந்த பல பெண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் இருந்த முகாமில், குளிக்கும் இடத்திற்கு அருகில் நான்கு பேரின் சடலங்களை நாங்கள் பார்த்தோம். அவர்களில் மூவர் பெண்கள். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். அங்குள்ள அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகள் எதையும் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் மௌனமாக அந்தச் சடலங்களைக் கடந்து சென்றோம்.”

முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள்  தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தென்பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்று சொல்லப்பட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. அவர்களுட் சிலர் அரசாங்கத்தின் கருணையால் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்பட்டு மீள்குடியேற்றப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லை. இறந்தகாலத்தின் கொடுங்கனவுகளோடும் வறுமையோடும் ஏதிலிகளாக வாழ விதிக்கப்பட்டவர்களாயினர்.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. பெரும்பாலான ஆண்கள் போருக்குப் பலியாகிவிட்டார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமற் போய்விட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனியாக விடப்பட்ட பெண்கள் அரசபடைகளின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இன்னபிற சொற்கள் ஈழமண்ணைப் பொறுத்தமட்டில் தம்மளவில் பொருளுடையவை அன்று. அல்லது அபத்தமானவை. மேற்கண்டவர்களில் பலர் சித்தம் கலங்கிப் பேதலித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு விடப்பட்டவர்களின் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கொடூர சம்பவம் நிகழ்த்திப் பார்க்கப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லவே முடிவதில்லை என்றும் அந்த மனவுளைச்சலையும் மீறி உறங்க நேர்கையில் தாம் துன்புறுத்தப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட, மரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் துர்க்கனவுகளாகத் தோன்றி நடு இரவுகளில் விழித்தெழத் தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். பாலியல் வதையை எதிர்கொண்ட பலர் ஆழ்ந்த மௌனத்துக்குள் புதைந்து போய்விடுகிறார்கள். அவ்வாறு, சமூக மதிப்பில் தாழ்ந்துபோய்விடுவேனோ என்று அஞ்சி, தனக்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்லாது மௌனத்துள் ஆழ்ந்திருந்த பெண்களில் பலர் தற்கொலையில், புத்தி சுவாதீனமிழப்பில் முடிந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை ஈழத்திலும் காணலாம்.

“நான் எனது கணவருடன் வாழும் தகுதியிலிருந்து இறங்கிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்.”என்று, பாதிக்கப்பட்ட பல பெண்கள் உளவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பல பெண்களும் இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானியாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அலறுகிறார்கள். சிலரது பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருக்கின்றன. சிலர் எவரையும் (ஆண்களோ பெண்களோ) அருகில் நெருங்க விடுவதில்லை. அருகில் போனால் பயந்துபோய் உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள். துர்நினைவுகள் அவர்களைத் துரத்துகின்றன. என்னிடம் பேசிய ஒரு பெண், 18 மாதங்களாகத் தொடர்ந்து தன்னை இராணுவத்தினர் பாலியல் வதைகளுக்குட்படுத்தி வந்துள்ளதாகச் சொன்னார். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.”

போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சில அறங்கள், விதிமுறைகள் உள்ளன. போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டவர்களது மனிதாபிமான உரிமைகள் பற்றிய விளக்கப் பகுதியில், நான்காவது ஜெனிவா உடன்படிக்கையில் (27வது ஆவணம்) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

“போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள், அவர்களது கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவு, வலுக்கட்டாயமான விபச்சாரம் மற்றும் சுயமதிப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பெண் போராளி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்:
“உயிரற்ற சக பெண்போராளியின் உடலை எதிரி கையகப்படுத்த விட்டுச் செல்வது மிகவும் அபாயகரமானது. முடிந்தவரையில், எனது உயிரைப் பணயம் வைத்தேனும் நான் களத்திலிருந்து அந்த உடலைத் தூக்கிச் செல்லவே முயல்வேன். காரணம், அந்த உடல் எவ்விதம் இழிவுசெய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மேற்குறிப்பிடப்படும் வார்த்தைகளை இணையத்தில் காணக் கிடைக்கிற காணொளிகளோடு நாம் பொருத்திப் பார்க்கலாம். கோணேஸ்வரி போன்ற பெண்களது பிறப்புறுப்புகளே கைக்குண்டுகளால் சிதறடிக்கப்படும்போது, பெண் போராளிகள் எத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதும் கலங்கடிப்பதுமாகும். போரில் காயம்பட்ட காரணத்தால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போன பெண் போராளிகள் சிலரது தலைகள் மண்வெட்டிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிராகக் கிடந்த அவர்களை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் பிறப்புறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறது. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களில் மறைவிடங்கள் குதறப்பட்டிருக்கின்றன. உதடுகள் துண்டாடப்பட்டிருக்கின்றன. மார்புகள் கடிக்கப்பட்டும் அரியப்பட்டுமிருக்கின்றன. பாலுறுப்புகளுள் போத்தல்களும் கம்பிகளும் செலுத்தி குடையப்பட்டிருக்கின்றன. நிர்வாணமான உடல்களை இராணுவத்தினர் கால்களால் உதைத்துக் களிகூரும் காட்சிகளைக் காணும்போதில், போராளிகளின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைக் கேட்கும்போதில், இறந்துபோன மிருகங்களின் உடல்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட மறுக்கப்படும்போதில், ‘இக்கணமே இவ்வுலகம் வெடித்துச் சாம்பலாகி விடக்கூடாதா?’என்று சபிக்கவே தோன்றுகிறது.

சமூகத்தின் பாரபட்சமான கண்களில் பெண் என்பவள் ஏற்கெனவே இரண்டாவது பிரஜையாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஒப்பீட்டளவில் ஆணுக்குள்ள சமூக மதிப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மேலும் ஒரு படி சமூகத்தின் கண்களில் இறங்கிவிடுகிறாள். சமூகத்தின் கண்களில் அவள் ‘களங்கப்பட்டவள்’. ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறாள். சில விதிவிலக்குகள் தவிர்த்து குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறான வெளிப்படுத்தலை அவமானமாகவே கருதுகிறார்கள். காலகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து சரிந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஒரு இனத்தை இழிவுசெய்ய நினைக்கும் எதிரிகளுக்கு எளிய கருவியாக அமைந்துவிடுகிறது பெண்ணுடல். அதிலும், நிலத்தையும் பெண்ணையும் சொத்துடமையாகக் கருதும் சமூகத்தின் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவதன் வழியாக அந்த இனத்தையும் அதன் ஆண்களையும் வெற்றிகொண்டுவிடுவதாக நினைக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பொஸ்னியப் பெண்களது உடல்களுள் தங்கள் வக்கிரத்தை ஊற்றியபின் சேர்பியப் படைகள் சொன்ன வார்த்தைகள் அந்த அடிப்படையிலிருந்து எழுந்தவையே. காஷ்மீர் போராளிகளது விடுதலை உணர்வை அவர்தம் பெண்ணுடல்களுள் நுழைந்ததன் வழியாக இந்திய இராணுவம் சிதைக்க முயன்றது. வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் உள்ள பெண்கள் மீது களமாடிய அமெரிக்க இராணுவத்தை இயக்கியது பாலியல் வெறி மட்டுமன்று. ஒரு இனத்தின் உளவுறுதியைச் சிதைக்கும் ஆயுதமாகவும் வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் ஆன்மா பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேதலிப்பின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வதைகளின் மூலம் வாகை சூடுவதே பேரினவாதத்தின் நோக்கம். தங்களது வக்கிரத்தை, வெறியை பலவந்தமாக பெண்ணுடலுள் ஊற்றுவதன் வழியாக அவர்தம் சுயமதிப்பையும் விடுதலை வேட்கையையும் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் எதிர்காலம் குறித்த கனவுகளையும் அழித்துவிட வேண்டுமென்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலுள்ள மனிதர்கள் எவ்விதம் மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்களோ, அவ்விதமே பெண்களும் பாலியல் பண்டங்களாக ஆக்கிரமிப்பாளர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

பலியுயிர்களாக்கப்பட்ட பெண்கள் உன்னதமான உலகத்தை இழந்தவர்களாக, செய்யாத குற்றத்திற்கான குற்றவுணர்வோடு எஞ்சியுள்ள காலம் முழுவதும் வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். (நமது சமூகம் அப்படித்தான் கற்பித்திருக்கிறது.) இனி அவர்களது கனவுகளில் என்ன தோன்றக்கூடும்…? சீருடைகள், குண்டாந்தடிகள், வெறி வழியும் கண்களுடன் குனியும் பேய்கள், வாய்க்குள் திணிக்கப்பட்ட உள்ளாடைகள், காலிடுக்கில் வழிந்த குருதி…

இந்தியா, சீனா போன்ற வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பினால் மட்டுமன்றி, பேரினவாதிகளின் குறிகளாலும் வெல்லப்பட்டிருக்கிறது-இலங்கையின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ போர்!

நன்றி -'தீராநதி 'மே மாத இதழ்

 

4.22.2012

நாடு கடத்தப்பட்ட சொற்கள்



உளவுக் கண்கள் பொருத்தப்பட்ட கணனிகளோடு
கண்ணிவைத்துக் காத்திருக்கிறது
விமான நிலையம்.

மழை நிறைத்த கிணற்றில்
முகம் பார்த்துக் களிக்கும் மார்கழி
இம்முறையும் எனக்கில்லை.
செவ்விளநீர் மரம் சொட்டும்
“இரண்டாம் மழை“யுமில்லை.
இங்கு இலையுதிர்காலம்
மேப்பிள் மரங்களிலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கின்றன பூவரசமிலைகள்.

நிலம் குறித்த கனவுகளில் மணக்கிறது…
வல்லரக்கர்களின் சிறுநீர்
வல்லரசுகளின் எச்சில்
எனது சனங்களின் குருதி.

திரும்பவியலாத உன் தெருக்களில்
எத்தனை காலந்தான்
சொற்களால் அலைந்துகொண்டிருப்பது
என்னருந் தாய்தேசமே…?


பொன்னெனச் சுடர்விடும் மணல்படர்ந்த கடற்கரைகள், கரையோரங்களில் சூரிய ஒளியில் மினுங்கும் உடல்களோடு சாய்ந்திருக்கும் உல்லாசப் பயணிகள், நட்சத்திர விடுதிகள், பணிவும் கனிவுமான புன்னகைகளுடன் விருந்தோம்பலை வாக்களிக்கும் அழகிய பெண்கள், தேயிலைத் தோட்டங்கள், பனிதுாங்கும் மலைச்சிகரங்கள், கண்சுருக்கிச் சிரிக்கும் கிராமத்துச் சிறுவர்-சிறுமியர், பளீரிடும் கீற்றுக்களை அசைத்து வா வாவென்றழைக்கும் தென்னைகள் என, இலங்கையை உல்லாசபுரியாகச் சித்தரிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் இறைந்துகிடக்கின்றன. வானத்தை வகிர்ந்து பறக்கும் விமானத்தின் படங்களோடு கூடிய விளம்பரங்கள் சலுகைக் கட்டணங்களை அறிவிக்கின்றன.

இலங்கை: இந்துமகா சமுத்திரத்தின் இரத்தினக் கல்!

ஈழத்தமிழர்களுக்கோ அது கடல் நடுவில் கெட்டித்துக் கிடக்கும் கண்ணீர்த்துளி! இலங்கை அரசால் உலகெங்கிலும் விளம்பரப்படுத்தப்படுவதைப்போல, அது ஒளிசிதறும் உப்பரிகையல்ல; கனவுகள் உதிர்ந்துபோனவர்களின் கல்லறை. ஒப்பனையில் பளபளக்கும் சருமத்தின் பின் ஒளிந்து கிடக்கிறது முதலைத்தோல். ‘வருக’என்றழைத்துக் குவிக்கும் கைகளின் உட்புறத்தில் படிந்திருக்கிறது குருதி.

வேற்றுநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் போல, புலம்பெயர்ந்த தமிழர்களால் அத்தனை எளிதாக அங்கு சென்றுவிட இயலாது. குறிப்பாக, இலங்கை அரசை விமர்சித்துப் பேசியவர்களால்(சிங்களவர்கள் உள்ளடங்கலாக) வெளிநாடுகளில் அதற்கெதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்களால், அதன் இருண்ட பக்கங்கள் மீது ஊடக வெளிச்சம் பாய்ச்சியவர்களால், இனப்படுகொலை குறித்து எழுதியவர்களால் அங்கு செல்லமுடியாது. சென்றால் திரும்புதல் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

எவராலும் தமது வேர்களைப் பற்றிய ஞாபகத்தை அடியோடு அறுத்தெறிந்துவிட இயலாது. பிரிவு தற்காலிகமானதெனில், பொருளாதார நோக்கத்தின் பொருட்டெனில் அதைச் சகித்துக்கொள்ளவியலும். ஆனால், தாய்நிலத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லவியலாதபடி புறஅழுத்தங்கள் இருக்குமாயின் அது மரணத்திற்கு நிகரானது. திரும்பிச் செல்லக்கூடிய நிலத்திற்குத் திரும்ப விரும்பாமல் இருப்பதும்- நாடு திரும்பினால் கொல்லப்படுவோம், சிறைப்பிடிக்கப்படுவோம், வந்த சுவடுமின்றிக் காணாமலடிக்கப்படுவோம் என்று பயங்கொள்ளத் துாண்டும் பேரினவாத-எதேச்சாதிகார அரசுகளால் ஆளப்படும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் அந்நிய நிலங்களில் தாய்நாட்டின் நினைவுகளோடு அலைந்துழல்வதும் ஒன்றல்ல.

“எல்லோரும் போய்விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்துசெல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.”


(சேரன்- ‘நீ இப்பொழுது இறங்கும்’ ஆறு தொகுப்பு)

திரும்பி வருவோம் என்னும் நினைவோடுதான் எல்லோரும் போனார்கள்; போனோம். இன்று, “இது சிங்களவர்களின் நாடு; நீங்கள் இலங்கை அரசுக்கெதிராகப் பரப்புரை செய்தவர்கள்; தேசத்துரோகிகள்”என்கிறது பேரினவாதம். இரட்டைக் குடியுரிமை இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை வழக்கத்தில் இருந்துவந்த ‘உள்நுழைவு விசா’நடைமுறை மாற்றப்பட்டு, இணையத்தளம் மூலம் (கண்காணிக்க ஏதுவாக) விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமுலுக்கு வந்திருக்கிறது. விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் உளவுக் கண்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகத்திற்குரியவர்கள் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்படுகிறார்கள்.

‘ஓடிப் போனவர்களுக்கு தாய்நிலத்தை நினைத்து உருக என்ன தகுதி இருக்கிறது?’என்று பேசும் ஊதுகுழல்களை தமிழர்களுக்குள்ளேயே உருவாக்கி, உருவேற்றி உள்நாட்டிலும் உலகெங்கிலும் உலவ விட்டிருக்கிறது இலங்கை அரசு. அதிகாரம் நுாலிழுக்கும் திசையிலெல்லாம் வாயசைக்கக் கற்றிருக்கிறார்கள் அந்தப் பொம்மலாட்டச் சலனிகள். வல்லாதிக்கச் சக்திகளின் கூட்டுச்சதியால் ‘முடித்துவைக்கப்பட்ட’போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசும், எழுதும், போராடும் புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழகத்திலும் உலகெங்கிலும் தமிழ்த்தேசியம் பேசுவோருக்கும் எதிரான குரலை- இணையப் பரப்புரைகளிலும், தமக்கு இசைவாகத் தாளம் போடும் ‘இள(க்)கிய’மட்டங்களிலும் இயன்றமட்டிலும் எழுப்புவதன் மூலமாகத் தமது ‘இருப்பை’த் தக்கவைத்துக்கொள்வது சிலரது அரசியலாகத் தொடர்ந்துவருகிறது. இலங்கையில் தொங்கவிடப்பட்டிருக்கும் இரும்புத் திரையை நியாயப்படுத்துவதன் வழி கிடைக்கப்பெறும் இலாபங்களுக்காக சொந்த இனத்தையே வஞ்சிக்கிறார்கள் அவர்கள். துணைக் குழுக்களின் துப்பாக்கிப் பின்பல உபயத்தில் தமது சொந்த மக்களையே பலியாடுகளாக நடத்துகிறார்கள்.

றஷீத் ஹூசைன் என்ற பாலஸ்தீனியக் கவிஞனின் வரிகள் மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்குச் சாலப் பொருந்தும்.

எங்கள் மத்தியில்
இன்னும் ஒரு கும்பல் எஞ்சியுள்ளது
அவமானத்தை அது சாப்பிடுகின்றது
தலைகுனிந்து நடந்து செல்கின்றது
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?


(தொகுப்பு: மண்ணும் சொல்லும், மொழியாக்கம்: வ.கீதா-எஸ்.வி.ராஜதுரை)

“அவ்வளவு அக்கறை உடையவர்களாக இருந்தால், நீங்கள் ஏன் உள்நாட்டிலேயே சனங்களோடு சனங்களாக வாழ்ந்திருக்கக்கூடாது? எழுதக்கூடாது?”என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்புகிறவர்களுக்குச் சொல்லவென ஒரேயொரு பதில்தான் உண்டு. “உயிராபத்துக்கு அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினோம். சித்திரவதைக்குள்ளாகி அநாதைப் பிணங்களாகத் தெருக்களில் துாக்கியெறியப்படுவதையும், கண்காணாத இடங்களில் புதைக்கப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை”. ஊடகவியலாளர்களுக்கெதிராக தாக்குதல்கள், கொலை, மிரட்டல், ஆட்கடத்தல், கடுமையான செய்தித் தணிக்கை என குரூரமான வன்முறையைப் பிரயோகிக்கும் நாடுகளுள், இலங்கை முதல் ஐந்திற்குள் இடம்பிடித்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து 13க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். நுாற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியிருக்கிறார்கள். மயில்வாகனம் நிமலராஜன் (2000), ஐயாத்துரை நடேசன் (2004), தர்மரத்தினம் சிவராம் (தராக்கி-2005), “ஈற்றில் நான் கொல்லப்படுவேனாக இருந்தால், அந்தக் கொலை அரசாங்கத்தின் கைகளால் செய்யப்பட்டதாகவே இருக்கும்.” என்று, கொலையாளிகளைக் குறித்து இறப்பதற்கு முன்னம் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிவைத்த ‘சன்டே லீடர்’ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க (2009, ஜனவரி), பிரகீத் எக்னெலிகொட (2009 ஜனவரியில் கடத்திச்செல்லப்பட்ட அரசியல் கார்ட்டூனிஸ்ட், ஊடகவியலாளர்) என நீளும் கொலையுண்டோர் பட்டியல், காலகாலமாக இலங்கையில் நிலைத்திருக்கும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. அரசாங்கங்கள் மாறியபோதிலும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் மட்டும் மாறுவதேயில்லை. இலங்கையை விட்டுத் தப்பியோடியவர்களும் (சிங்களவர்கள் உள்ளடங்கலாக), கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறையுண்டிருப்போரும் காணாமல் போனோரும் கணக்கிலர். விடுதலைப் புலிகளின் அரசவைக் கவிஞர் என்று அறியப்பட்ட புதுவை இரத்தினதுரை அவர்கள், மே 2009 பேரனர்த்தத்தின் பிற்பாடு வவுனியா தடுப்புமுகாமொன்றிலிருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவரைக் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நாட்பட நாட்பட மிகுந்துவருகிறது.

சொந்த நிலத்தில் உயிர் வாழும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டவர்கள் வேறு வழியற்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். உலகெங்கிலும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களில், புலம்பெயர் எழுத்தாளர்களது பங்கை வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. ‘குளிரூட்டப்பட்ட அறைகளுள் சொகுசாக இருந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்’என்று இணையத்தளங்களிலும் அரச சார்பு ஊடகங்களிலும் அவதுாறு செய்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள் அவை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கலிலீயிலிருந்த அல்-பேர்வா என்ற கிராமத்தை இஸ்ரேலியர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு விரட்டப்பட்டவர்களுள் தார்விஷ் என்ற ஆறு வயதுச் சிறுவனும் ஒருவன். தார்விஷின் குடும்பத்தினர் அகதிகளாக எங்கெங்கோ அலைந்துவிட்டு ஓராண்டின் பின் சொந்த மண்ணுக்குத் திரும்பியபோது, அவர்களது மண் இஸ்ரேலாக மாற்றப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.





“நாங்கள் மீண்டும் அகதிகளாக வாழத் தொடங்கினோம்; இம்முறை எங்களது சொந்த மண்ணிலேயே. அந்தக் காயத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.”

பின்னாளில், ‘பாலஸ்தீனத்தின் தேசிய கவி’என்று கொண்டாடப்பட்ட மஹ்மூத் தார்வீஷால் கூறப்பட்ட வார்த்தைகளே மேற்கண்டவை.

‘அரபுலகின் ஆன்மா’எனப் புகழப்பட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் பல இலட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. அரங்கம் நிறைந்த (25,000 பேருக்கும் மேற்பட்டோர்) கவிதை ஆர்வலர்கள் அவரது கவிதைகளைக் கேட்கக் கூடினார்கள். அவர் போகுமிடமெல்லாம் விடுதலையின் அலை பரவியது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. எழுத்தில் எத்தனை உயரத்திற்குச் சென்றபோதிலும், சொந்தமண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தை அவரால் தன் வாழ்நாளில் மறக்கமுடியவில்லை.

“நாடு திரும்புதல் குறித்த காலவரையறையற்ற இழுத்தடிப்பை, இழப்பின் பாடல் வரிகளாக மாற்றியமைக்கும் காவிய முயற்சி” என்று, தார்வீஷின் கவிதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் எட்வர்ட் செய்த்.

இஸ்ரேலின் ஒரு பகுதியாக மாறிவிட்ட தாய்மண்ணில் தார்விஷூக்கு மேற்படிப்பு மறுக்கப்பட்டது. (தரப்படுத்தல் ஞாபகம் வருகிறது) அதனால், மேற்படிப்பைத் தொடரும் நிமித்தம் 1970இல் மொஸ்கோவுக்குச் செல்லவேண்டியேற்பட்டது. 1973இல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்துகொண்ட பிற்பாடு, அவரது மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அனுமதி இஸ்ரேலிய அதிகாரத்தினால் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. 1973-1982 வரை பெய்ரூட்டில் நாடு துறந்த வாழ்வு, 1982 இல் லெபனானை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டபோது அங்கிருந்து தப்பியோட்டம் என அலைந்துலைய நேர்ந்தது. 26 ஆண்டுகள் சிரியா, சைப்ரஸ், கெய்ரோ, டூனிஸ், பாரிஸ் என நாடற்றவராக அலைந்து திரிந்த பிறகு, 1996ஆம் ஆண்டில் றமல்லாவுக்குத் (பாலஸ்தீன அதிகார மையம் இருக்குமிடம்)திரும்பி வாழத் தொடங்கினார். சொந்தமண் மீதான தீராத காதலை கீழ்க்காணும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்...

“நாடு கடத்தப்படுவதென்பது புவியியல் எல்லைக்கோடுகளாலானதன்று. நான் போகுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்கிறேன். எனது தாய்நாட்டை என்னோடு எடுத்துச் செல்வதைப் போல…”

‘பாலஸ்தீனத்தின் வழக்குரைஞர்’, ‘பயங்கரவாதத்தின் பேராசிரியர்’என்றெல்லாம் வலதுசாரிகளாலும் இஸ்ரேலிய ‘ஜியோனிஸ்ட்’டுகளாலும் அடைமொழிகளிட்டு அழைக்கப்பட்டவர் பேராசிரியர் எட்வர்ட் செய்த். ஜெருசலேமில் பிறந்து, பதினாறு வயதிலேயே அமெரிக்காவிற்கு வந்து வாழத் தொடங்கியவர். என்றாலும், பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகத் தொடர்ந்திருந்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடவும் தவறினாரில்லை. தனது சொந்த மண்ணின் மீதான ஆக்கிரமிப்பைச் சாட அந்த மண்ணிலேயே இருக்கவேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்பதற்கு அவரைக் காட்டிலும் ‘அறிவுபூர்வமான’ எடுத்துக்காட்டு தேவையில்லை. ‘பாலஸ்தீனத்தின் பக்கம் சாய்கிறார்’ என்று, செய்த் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அவர் அதை உறுதியாக மறுத்துரைக்கிறார்.

“யூதர்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையை ஒத்துக்கொள்வதற்கும், அதையொரு கவசமாகப் பிரயோகித்து அவர்கள் வேறொரு இனத்தை (பாலஸ்தீனியர்களை) அடக்குவதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.”

எங்களது ஜெருசலேம் ஈழமே! நாங்கள் அங்குதான் பிறந்தோம். குடியேற்றத் திட்டங்கள் மூலமாக எந்த மண்ணைக் கபளீகரம் செய்ய பேரினவாதம் திட்டமிட்டுச் வஞ்சகமாகச் செயற்படுத்துகிறதோ அந்த மண்ணில்தான் எங்களுடைய பால்யம் கழிந்தது. இளமையின் இளவேனிலை நாங்கள் கடந்துவந்த மரத்தடிகளும் வயல்வெளிகளும் புழுதித் தெருக்களும் இன்னமும் அங்குதான் இருக்கின்றன. விதிவசத்தால் வேறு தேசங்களில் விழுதெறிய விதிக்கப்பட்டோமேயன்றி, எங்களது வேர்கள் அங்குதான் இருக்கின்றன. ஆகவே, எங்களது மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் எழுதவும் எங்களுக்கு உரிமை இல்லையென்று எவராலும் மறுக்கமுடியாது.



புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களது வாழ்க்கை சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதுபோல, இலையுதிர்கால மரங்களைப் போல வண்ணமயமானதன்று; சிலசமயங்களில் அது கண்ணீரைப் போல நிறமற்றதும்கூட. மே, 2009 இற்குப் பிறகு நடைபிணங்களாக அலையும் பலரை புலம்பெயர்ந்த தேசங்களில் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களளவில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருந்த பெருங்கனவு கலைந்துவிட்டது. பெருமிதம் மங்கிய விழிகளை விலக்கிக்கொண்டு, பழகிய எவரையும் சந்திக்க விரும்பாமல் விரைந்து செல்கிறார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஒரு நண்பர் சொன்னார்... “எனது உறவினர்களில் அறுபத்திரண்டு பேர் வன்னியில் படுகொலை செய்யப்பட்டார்கள்.”என்று. “அந்த மாதம் முழுவதும் செத்தவீடுகளுக்குப் போவதிலேயே கழிந்தது”என்றார். தனது இழப்பிற்காக அவர் யாரையும் பழித்துரைக்கவில்லை; “எங்கள் போராட்டத்தை அழித்தொழித்துவிட்டார்களே படுபாவிகள்!”என்பதே அவரது குமுறலாக இருந்தது.

கடந்த புத்தகக் கண்காட்சியில்,(2011 ஜனவரி) ‘ஈழப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட த்ரில்லர்’என்ற பரபரப்பு அட்டைப்பட வாசகத்துடன் விற்பனைக்கு வந்தது ஜெயமோகனின் ‘உலோகம்’என்ற நாவல்(?). அதற்கு ஈழத்தவர்களால் எழுதப்பட்ட எதிர்வினைகளுக்கு தனது இணையத் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன்.

“பொதுவாக இந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் அதிக தீவிரத்துடன் எழுதியவர்கள் விடுதலை இயக்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலேயே புலம்பெயர்ந்து வசதியாக வாழ ஆரம்பித்தவர்கள். அவர்கள் ஒரு குற்ற உணர்ச்சியாலோ ஒரு பிம்ப உற்பத்திக்காகவோ இன்று அதிதீவிர உணர்ச்சி நிலைப்பாடு எடுக்கிறார்கள்.”

எத்தகைய பொறுப்பற்ற, அசிரத்தையான, மேம்போக்கான வார்த்தைகள்!!! “வரலாற்றுப் புரட்டுப் புரட்சி“ செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகூட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு இல்லையென்கிறார் அவர். நன்று! ஈழப் போராட்டத்தைப் பற்றி தெளிவான விளக்கமின்றி எழுதப்பட்ட தனது படைப்பை நியாயப்படுத்துவதற்காக, இத்தகைய அபத்தாபத்தமான எதிர்வினையை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரால் ஆற்ற முடிவதும் இலக்கிய உலகின் துயரங்களில் ஒன்றே. விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே அந்நாவலுக்கு எதிர்வினையாற்றத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதையும், எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற அதீத கற்பனையையும் என்னவென்பது? இது, “குரங்குகளுக்கு நீண்ட வாலுண்டு; ஆகவே நீளமான வாலுள்ள யாவும் குரங்குகளே”என்பதை இது நினைவுறுத்துகிறது. இரண்டு உலகங்களில் வாழ விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள், தங்களது பொருளாதார நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தல் இயலாது; அவர்களால் விட்டுவிட்டு (கைவிட்டு அல்ல) வரப்பட்ட நிலத்தின் அரசியல், சமூக, பொருளாதாரக் கடமைகளுக்குப் பொறுப்பானவர்களாகவும் அவர;கள் இருக்கவேண்டியிருக்கிறது.

மேலும், தமது தாய் மண்ணில் வாழ முடியாமல் அதை நீங்கிச்சென்றவர்கள் அல்லது மறைமுகமானதும் நேரடியானதுமான அச்சுறுத்தல்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஏன் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும்? அவர்கள் பொருளாதார நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ ஈழத்தைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அங்கே பிறக்காதவர்களானாலும் கூட தமது மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தகுதிவாய்ந்தவர;களே. இன்னுஞ் சொல்லப்போனால் உரிமைகள் மறுக்கப்பட்ட எந்தவொரு மனிதனுக்காகவும் இனத்துக்காகவும் குரல்கொடுக்கும் தார்மீகக் கடமையும் உரிமையும் இப்பூவுலகில் வாழும் யாவருக்கும் உள்ளது; விலங்குகள் உள்ளடங்கலாக எவ்வுயிர்க்கும் உரியது இவ்வுலகம். அறியாததை ‘அறியேன்’என்று ஏற்றுக்கொள்வதே அறிவுடமை; அஃதல்லாதது மடமை.

உலகெங்கிலும் இருக்கும் வல்லரசுகளாலும், பேரினவாதிகளாலும், ஏகாதிபத்திய எதேச்சாதிகாரிகளாலும் எளிய-சிறுபான்மை-சுதேச மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்கள், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து போன எல்லா மக்களும் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியவர்கள்தானா? அப்படியானால், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவு வாழ்வு வாழ்ந்த பாரதிக்கும் இது பொருந்துமா? தனது பதினாறு வயதிலேயே நியூயோர்க் நகருக்கு வந்து சேர்ந்து தனது 37 ஆவது வயதில் பாலஸ்தீனத்திற்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்த எட்வேர்ட் செய்த்தும்- தனது 22ஆவது வயதிலேயே ‘குறித்துக்கொள் நான் ஒரு அராபியன்’எனும் புகழ்பெற்ற கவிதையை எழுதி அரபுலகில் விடுதலையுணர்வைத் துாண்டியவரும், இருபத்தாறு ஆண்டு காலமாக இஸ்ரேலுக்குத் (பாலஸ்தீனமே) திரும்பிவரத் தடை விதிக்கப்பட்டிருந்தவருமாகிய கவிஞர் மஹ்மூத் தார்விஷூம் குற்றவுணர்ச்சி கொண்டிருக்கவேண்டியவர்கள்தானா?

அவர்கள் உன்னதமான படைப்புகளைத் தந்த உலகறிந்த அறிவுஜீவிகள், கவிஞர்கள்தாம்! ஆயினும், ‘தன்னளவில் சிறுபுல்லும் முழுமை’யன்றோ?

உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர் உயிருக்கும் சுயபங்க இழிவுக்கும் அஞ்சி வெளிநாடுகளில் புகலிடம் தேடுவதும், அங்கிருந்தபடி உள்நாட்டில் துயரைத் தின்று வாழும் தமது மக்களுக்காகக் குரல்கொடுப்பதும் காலாகாலமாக நடந்துவருவது. குர்திஷ்கள், காஷ்மீரிகள், திபெத்தியர்கள் இன்னபிறரை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகக் காட்டவியலும்.

நாடற்று உலகெங்கிலும் அகதிகளாக பரந்துள்ளவர்களுள் குர்திஷ் இனத்தவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜேர்மனியில் மட்டும் ஏறத்தாழ எட்டு இலட்சம் குர்திஷ் இனத்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதைவிடவும் அமெரிக்கா, கனடா, லெபனான், நெதர்லான்ட், பிரிட்டன், ஸ்வீடன், பின்லான்ட், அவுஸ்திரேலியா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த ஆர்மேனியா, உஸ்பெக்கிஸ்தான், அஸர்பைஜ்ஜான், கஸகஸ்தான் இங்கெல்லாம் அவர்கள் சிதறிப்போய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஈராக்-ஈரான்-துருக்கி-சிரியா என்ற நாற் கணங்களுக்கும் நடுவில் கிடந்து நசிபட்டுக் கொண்டிருக்கிறது ‘குர்திஷ்தான்’எனும் கனவு. ஆயினும், வன்முறையினாலோ அழுத்தங்களாலோ ஒரு இனத்தை அடக்கியொடுக்க முடியாது என்பதை, அண்மைக்காலத்தில் துருக்கிக்குக் கற்பித்திருக்கிறார்கள் உலகெங்கிலும் பரந்துவாழும் குர்திஷ்கள். ‘நாலு நிலங்களில் பரந்திருக்கும் ஒரே தேச’த்தின் தொழிலாளர் கட்சித் தலைவராகிய சுபையிர் அய்தர் (Zubeyir Aydar) நேர்காணல் ஒன்றில் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“17 ஆண்டுகளாக நான் நாடற்றவனாக அலைந்துகொண்டிருக்கிறேன். தடைசெய்யப்பட்ட நாடொன்றைச் சேர்ந்த ஒருவனது விருப்பம் என்னவாக இருக்கமுடியும்? எனது ஒரே விருப்பம் சுதந்திர குர்திஷ்தானுக்கு கௌரவத்தோடு செல்வது மட்டுமே.”

சீனாவின் மேலாதிக்கப் பிடியிலிருந்து விடுபட்டு தனித்தன்மையுள்ள சுயாட்சி அமைப்பதற்காகப் போராடிவரும் திபெத்தியர்களின் குரலானது உள்நாட்டிலிருந்து மட்டும் ஒலிக்கவில்லை. சீனாவின் அடக்குமுறைக்கு அஞ்சி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் வெளிநாடுகளிலிருந்தபடி தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரலெழுப்பி வருகிறார்கள். விடுதலைக்காகக் குரலெழுப்பும் தொண்டைகளில் அழுத்தப்படவென துப்பாக்கிக் குழல்களோடும், எழுதுபவர்களின் விரல்களை முறித்தெறிவதற்கான சிறைகளோடும் காத்திருக்கிறது சீன வல்லாதிக்கம். ஜமான் கீ, டொல்மா கியாப் போன்ற பல நுாறு எழுத்தாளர்கள் அங்கு சிறையிடப்பட்டிருக்கிறார்கள். திபெத்தியர்களின் அரசியல் மற்றும் ஆன்மீகக் குருவாகிய தலாய் லாமா உள்ளிட்டோரின் மீள்திரும்புதலுக்காக இரத்தப்பசியோடு காத்திருக்கின்றன சீனாவின் சிறையறைகள்.

1959ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசின் துன்புறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோருக்கு, இந்தியாவின் வீதியோரக் கூடாரமொன்றில் பிறந்தவர்தான் டென்சின் ட்சூண்டு (Tenzin Tsundue).-பெயர்களைத் தமிழ்ப்படுத்தினால் விசித்திரமாக ஒலிக்கிறது. திபெத்திய விடுதலைக்காக ஒலிக்கும் குரல்களில் அவருடைய குரலும் குறிப்பிடத்தகுந்தது.) அவரது பெற்றோர் இந்தியாவில் வீதி செப்பனிடும் தொழிலாளர்களாக வேலை செய்யவேண்டியேற்பட்டது. ஒருபோதும் பார்த்தறியாத தன் தாய் தேசத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை கீழ்வருமாறு:

…………………………………

…………………………………


ஒவ்வொரு காவல் நிறுத்தங்களிலும் அலுவலகங்களிலும்,
நான் ஒரு ‘இந்தியன்-திபெத்தியன்.’
ஒவ்வொரு ஆண்டும், ஒரு சலாமுடன் புதுப்பிக்கப்படும்
எனது பதிவுப் பத்திரத்தின்படி
நான் இந்தியாவில் பிறந்துவிட்ட வெளிநாட்டவன்.

இந்தியனே போலிருப்பேன்
ஒடுங்கிய திபெத்திய முகம் தவிர்த்து,
“நேபாளி?” “தாய்? “யப்பானியன்?”
“சீனன்?” “நாகா?” “மணிப்புரி?”
ஆனால், ஒருபோதும் கேட்கப்பட்டதில்லை -“திபெத்தியன்?”

நான் ஒரு திபெத்தியன்.
ஆனால், அங்கிருந்து வரவில்லை
ஒருபோதும் அங்கு இருந்ததுமில்லை.
ஆயினும்
எனது கனவெல்லாம்
அங்கு மரணிப்பதே!



மலர்கள் பூத்துக் குலுங்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நீரேரிகளுமாக இயற்கை எழுதிய கவிதையென மலர்ந்திருக்கும் காஷ்மீருக்காக, பல்லாண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஆதிக்கப் போட்டியில் அழிந்துகொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் அமைதி மற்றும் விடுதலை குறித்த கனவு. கீழைத்தேசங்களின் தலைவிதியை நிர்ணயிக்கிற மேலைத்தேசங்களோ, காஷ்மீரின் விசயத்திலும் சுயலாப நட்டக் கணக்குப் பார்ப்பதைத் தொடர்ந்து செய்கின்றன. இந்நிலையில், அந்த மண்ணின் இரத்தக் களரியிலிருந்து தமது மக்களை விடுவிப்பதற்காக புலம்பெயர்ந்த காஷ்மீர்கள் உலக அரங்கில் குரலெழுப்பிவருகிறார்கள்.

நியூயோர்க் மற்றும் மசாசுசெற்ஸ் பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளரும், காஷ்மீரி-அமெரிக்கக் கவிஞருமான அஹா சாஹிட் அலியின் வார்த்தைகளில் விரியும் ஸ்ரீநகர் அச்சந்தருவது.

“மேலும், இரவுகளிலும் ஸ்ரீநகரில் சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கிறதா? வானத்திலுள்ள நட்சத்திரங்களைச் சுட்டுவீழ்த்துகின்றன துப்பாக்கிகள். விண்மீன் கூட்டங்களின் ஓயாத புயல்களால் கிழித்தெறியப்படுகின்றன இரவுகள். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீநகரில்….அந்த சித்தம் கலங்கவைக்கும் ஓசைகளுள் உங்களது அடையாளப் பத்திரங்கள் உங்களுக்கு உதவியிருக்கக்கூடும் அல்லது, இல்லை. பிடித்துச் செல்லப்பட்ட எங்களது பிள்ளைகள் திரும்பியதேயில்லை சித்திரவதை இரவுகளுக்குத் தப்பி.”

புலம்பெயர்ந்த குர்திஷ்களுக்கும் காஷ்மீரிகளுக்கும் திபெத்தியர்களுக்கும் இருக்கும் அதே உரிமை ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் மீது எதிரிகளின் குதர்க்க மூளைகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் வினோதமானவை. அள்ளி விசிறும் அவதுாறுகள் மனவுளைச்சல் தருபவை. ‘விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் விமர;சனத்திற்கு அப்பாற்பட்டவை’ என்ற வார்த்தைகளை ஆதரவு நிலைப்பாடுடையவர்களின் சார்பில் தாங்களாகவே உற்பத்தி செய்து உலவவிடுவதன் வழியாகத் தங்களது இருப்பினை உறுதிசெய்துகொள்கிறார்கள். போராட்டம் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும், திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்படும் அதிகார நலன்சார்ந்த பரப்புரைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை இனங்காண வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும். பாலஸ்தீனச் சிக்கலில் ஆழ்ந்த அவதானிப்புக் கொண்டவரும், புலம்பெயர்ந்து வாழும் அறிவுஜீவியுமாகிய காடா கர்மி(Ghada Karmi) அவர்களின் வார்த்தைகளை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தப்பாடுடையது.

“யாசர் அரபாத்தின் மீது எந்தத் தவறுமில்லை என்றோ அவர் குறித்த விமர்சனங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட வேண்டியவை என்றோ நான் சொல்லவரவில்லை. மக்கள் தமது தலைமையை விமர்சித்து சீர்திருத்த வேண்டுமென்பது சரியே. ஆனால், அத்தகைய விமர்சனங்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மூடிமறைப்பதற்கோ, பாலஸ்தீன வரலாற்றில் யாசர் அரபாத்தின் ஈடிணையற்றதும் நியாயமானதுமான இடத்தை மறுதலிப்பதற்கோ அனுமதிக்கக்கூடாது. வரலாற்றில் பின்னொதுக்கப்பட்டிருந்த நிலைமையில் இருந்த பாலஸ்தீனப் பிரச்சனையை உலக அரங்கின் முன் எடுத்துவந்தவர் அவரே. ஆங்காங்கு சிதறியிருந்த மக்களை ஒன்று திரட்டி - 60 வீதமானவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்- ஆக்கிரமிக்கப்பட்ட தாய்மண் அவர்களுடையது; அது மீட்கப்படவேண்டியது என்ற எண்ணத்தை வலுவடையச் செய்ததும் அரபாத்தே. பாலஸ்தீனப் பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே போகும் இன்றைய ஆபத்தான நிலையில், இஸ்ரேலின் மிகப்பலம்வாய்ந்த கபளீகரத்தை எதிர்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த பாலஸ்தீன அடையாளமாக அவரே திகழ்கிறார்.”

(‘யாசர் அரபாத்தைக் கொன்றது யார்?’என்ற தலைப்பில், காடா கர்மி அவர்களால் 2004ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து…)

யாசர் அரபாத் கூட அழுத்தங்கள் காரணமாக சில சமரசங்களுக்கு உடன்பட்டார்; ஆனால், தலைவர் பிரபாகரனின் வரலாற்றில் மலினமான சமரசங்களுக்கு இடமிருக்கவில்லை. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை அனைத்துலக அரங்கில் வெளிக்கொணர்ந்ததில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்கினை மறுதலிப்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு ‘இருட்டு’ என்று சொல்பவர்கள். அத்தகைய போராட்டத்தையும், தாங்கள் நேசித்த மக்களுக்காக, மண்ணுக்காகத் தம்முயிரை ஈந்த முப்பத்தாறாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களது அர்ப்பணிப்பையும் நாங்கள் மறந்துவிடவேண்டும் என்று பேராசை கொண்டலைகிறது பேரினவாதம். அதாவது, “முப்பதாண்டு கால வரலாறு உங்களுக்கு இல்லை; நீங்கள் நீளுறக்கம் கொண்டிருந்தீர்கள். உங்களை நாங்கள் ‘அடித்து’எழுப்பியிருக்கிறோம். உங்கள் முன் இருப்பது வேறு உலகம்”என்பதே அதன் சாரம். “ஆமாம்… நாங்கள் முப்பதாண்டு காலம் உயிரோடு இருந்திருக்கவில்லை”என்று ஆட்டாத தமிழரது தலைகள் கழுத்தில் இருக்காது என்பது இலங்கையின் அராஜக நியதி. அந்தக் கொலைபடுகளத்தில் உறவுகளையும் உடமைகளையும் பறிகொடுத்து, உணர்வுகள் சிதைக்கப்பட்ட மக்களே தங்களுக்காகப் பேசும் முன்னுரிமை கொண்டவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், பேரினவாதத்திற்கு எதிராக சிறு ஒலியையும் எழுப்ப முடியாத அளவிற்கு அராஜகம் அங்கு தலைவிரித்தாடும் நிலையில், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை புலம்பெயர் தமிழர்களுக்கும் (புலம்பெயர் தமிழர்களுக்கும் என்பதைக் கவனிக்க) உண்டு.

இராஜபக்சே அரசும் அதன் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகளே என்று நிரூபிக்கும் பிரயத்தனம் தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், ‘அந்த எத்தனத்தில் வெற்றி கொண்டுவிடுவார்களோ தமிழர்கள்’ என்ற அச்சம் பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல; சில அதமிழர்களுக்கும் உண்டு.

அத்தகைய அதிகாரச் சார்பு ஊதுகுழல்களுக்கும், அவர்களின் எசமானவர்களுக்கும் விடுதலைக் கவிஞன் மஹ்மூத் தார்விஷின் கீழ்க்காணும் வரிகளைச் சமர்ப்பித்து முடிக்கலாம்.

“அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதையும், எவரையும் ஆக்கிரமிக்கவும் கொலை செய்யவும் முடியும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், எனது வார்த்தைகளைச் சிதைக்கவோ அதனை ஆக்கிரமிக்கவோ அவர்களால் ஒருபோதும் முடியாது.”



-நன்றி - அம்ருதா நவம்பர் இதழ்