1.22.2011

புத்தகக் கண்காட்சி - திருவிழா முடிந்தது - ஞாபகங்கள் முடியவில்லை


கோயில் திருவிழாவும் அதையொட்டிய ஓட்டமும் தேரும் தீர்த்தமும் முடிந்தபிறகு, வெறுந்திண்ணையில் சாய்ந்து படுத்து அந்த “தெய்வீகத் தருணங்களை“ நிறைவோடு சில நாட்களுக்குப் பேசியபடி இருக்கும் அம்மாவின் களைத்த விழிகளை என் கண்ணாடியில் காண்கிறேன்.

புத்தகத் திருவிழா முடிந்து போயிற்று. அதையொட்டிய எதிர்பார்ப்புகள் தீர்ந்து தரிப்புக்குத் திரும்பியாயிற்று. மாயந்தான் என்றறிந்தும் மறுபடி மறுபடி காதலில் காலிடறி விழும் விடலைகளின் மனம்போலும் ஒரு பித்து.

துண்டு துண்டான ஞாபகங்கள்...

தேடி அலைந்த புத்தகங்கள், தேடாமல் கிட்டிய புதையல்கள், தொலைபேசியில் அழைத்துச் சந்தித்த நண்பர்கள், நேரெதிர்ப்பட்டு நெற்றி சுருக்கி அடையாளங் கண்டு புசுக்கென்று மலர்ந்த முகங்கள், சுய அறிமுகம் செய்து கைகுலுக்கி கூட்டத்துள் கலந்து மறைந்துபோனவர்கள், புத்தகங்களின் அழைப்பிற்கு செவிமடுத்தபடி-அவசரங் கலந்த நிதானத்துடன் கோப்பிக் குவளையைக் கையில் ஏந்தியபடி சில நிமிடங்கள் பேசிக் கலைந்த பிரியங்கள், மேடையில் ஒலித்த பொன்மொழிகள், கதைகள், மரக்கறியின் துணிக்கையே மிதக்காத “வெஜிடபில் சுப்“, வெளியில் மக்கள் கூட்டங்களின் பின்னால் திரிந்துகொண்டிருந்த துாசி, வி.ஐ.பி.க்களின் சிற்றுாந்துகள், திருவிழாக் குதுாகலத்துடன் ஓடிப் பிடித்து விளையாடிப் பெற்றோரைப் பாடாய்ப் படுத்திய குழந்தைகள், புத்தகங்களைப் பொருட்படுத்தி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஓரிரு குழந்தைகள்...

யார் யாரைச் சந்தித்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதிகமும் கூடித் திரிந்தது உமா ஷக்தியுடன். அங்கு ஆசுவாசமாக உரையாடியது குட்டி ரேவதியுடன். பரமேஸ்வரி, மணிகண்டன் இருவரும் இந்தப் புத்தகக் கண்காட்சியுடன் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இருவருமே அரசியல் தெளிவு உள்ளவர்கள். அ.முத்துக்கிருஷ்ணன் சோஃபியாவுடன் வந்திருந்தார். பாலஸ்தீனப் பயணம் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ச.விஜயலட்சுமியின் சிரிப்பு நெஞ்சுக்குள் நிற்கிறது. பேச இலகுவான தோழி. ஈழவாணி அறிமுகம் ஆனார். சந்தித்துப் பேச நினைத்திருக்கிறேன். பெருந்தேவியின் “உலோக ருசி“யில் கையெழுத்து வாங்கினேன். அத்தொகுப்பில் “68வது பிரிவு“கவிதை பிடித்திருக்கிறது. மேலும், அவருடைய சிரிப்பு அழகாக இருந்தது. சந்திரா, கவின்மலரை கண்காட்சிக்குப் போன நாட்களெல்லாம் கண்டேன். அவசரத்தில் சில வார்த்தைகள் பேசிப் பிரிந்தோம். அஜயன் பாலாவை அடிக்கடி பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி அவரது விசிறிகள் எப்போதும் இருந்தார்கள். நேசமித்ரன் வெளியில் கிளம்பிச் செல்லும்போது என்னைக் கண்டுபிடித்தார். அவரை அழைத்துப்போய் உயிர்மையில் அவருடைய கவிதைத் தொகுப்பை வாங்கி, கையெழுத்தும் வாங்கினேன். (கையெழுத்து இருக்கும் புத்தகங்களை யாரும் இரவல் கேட்பதில்லை) நேசமித்ரன் அவசரத்தில் இருந்தார். முகநுால் நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். பி.கு.சரவணனைப் பார்த்துப் பேசி, புத்தகங்கள் பரிமாறிக்கொண்டோம். அவருடைய தம்பி “கானல் வரி“பிடித்திருந்ததாகச் சொன்னார். பிரபஞ்சன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு காலச்சுவடு “ஸ்டால்“இல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை நான் பெற்றுக்கொள்ள, பழ.அதியமான் அதைப் பற்றிப் பேசினார். அன்று குவளைக் கண்ணனின் கவிதைத் தொகுப்பைக் குறித்து (மொழிபெயர்ப்பு)உரையாற்றிய சுகிர்தராணி ஈழச் சிக்கலைப் பற்றி மனங் கலங்கிப் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்களும் மனங்கலங்கினார்கள்.

நரனின் “உப்பு நீர் முதலைகள்“கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு தாமதமாகவே செல்லமுடிந்தது. நரனைப் பார்க்கவில்லை. செல்லும் வழியில் மகாகவி இசை, இளங்கோ கிருஷ்ணன் இருவரையும் பார்க்க வாய்த்தது. வழக்கம்போல- நண்பர்களின் ஏறுவரிசை, இறங்குவரிசை தரத்திற்கிணங்க அவர் நடந்துகொள்வதாக நான் குற்றஞ்சாட்டினேன். வழக்கம்போல- நண்பர்களைப் பொறுத்தவரை தனக்கு பாரபட்சங்கள் கிடையாது என்று அவர் அழுத்தமாக காரணகாரியங்களை அடுக்கி மறுத்துரைத்தார். இளங்கோ வழக்கம்போல சம்பிரதாயமாகப் பேசினார். அவருக்குத் தொப்பை போட்டிருக்கிறது. ஆழி செந்தில்நாதனோடு கடந்த ஆண்டு ஒரு அட்டைப் பட விடயமாக கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்ட குற்றவுணர்வு எனக்குள் மீதம் இருந்தது. அவரோ, அதைப் பொருட்படுத்தாமல் மிகவும் பெருந்தன்மையோடு கைகளைக் குலுக்கினார். அவர் மனிதர்.

சாரு நிவேதிதாவைப் பார்த்தபோது (பார்த்தும் பார்க்காமல் போனது எனக்குத் தெரியாது) ”பெண் எழுத்தாளர்களைக் கண்டால் ஓடிவிடுவதாக உங்கள் வலைத்தளத்தில் எழுதியிருந்தீர்களே... அது ஏன்?”என்று கேட்டேன். ”எல்லோரையும் பார்த்து அல்ல”என்று பதிலளித்தார். அவருடைய குரல் மென்மையாக இருந்தது. “இந்த மனிதரைப் பற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்“ என்று நினைத்துக்கொண்டேன்.

ஜெயமோகன் “தமிழினி“யில் நாஞ்சில் நாடனோடும் பொ.கருணாகரமூர்த்தியோடும் அமர்ந்திருந்தார். நாஞ்சில் நாடனைப் பாராட்டி “விஷ்ணுபுரம்“நடத்திய கூட்டம் “நிறைவான கூட்டம்“என்றேன். காக்கா பிடிப்பதாக நினைத்துக்கொள்வாரோ என்று உள்ளுர யோசனை ஓடியது. (எப்படியெல்லாம் அஞ்சும் காலமாயிற்று இது) அவர் ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

கவிஞர் சுகுமாரனை மாமல்லனோடு பார்த்தேன். என்னைப் பார்த்ததும் கவிஞர் சுகுமாரன் கைகளை உயர்த்தி வணக்கம் சொன்னார். ”என்ன அரசியல்ல சேர்ந்துட்டீங்களா சார்?”என்றேன். ”இல்ல பெரிய எழுத்தாளர் நீங்க... இல்லைன்னா வருசத்துக்கொரு புத்தகம் எப்படிப் போடமுடியும்?”என்றார் புன்னகையுடன். பொருள் பொதிந்த புன்னகை அது. ”இப்போது இல்லை என்றாலும், உங்களைப்போல எப்போதாவது ஆகிவிட மாட்டோமா என்ற நப்பாசை உண்டு”என்று சொல்ல நினைத்தேன். நினைப்பதை எல்லாம் சொல்வதற்கா வார்த்தைகள் இருக்கின்றன? நெஞ்சுக்குள் கல்லெனவோ பூவெனவோ கிடக்கவுந்தானே...?

ஜேர்மனியிலிருந்து வந்திருந்த பொ.கருணாகரமூர்த்தியைப் பார்த்தேன். அருமையான மனிதர். அவருடைய அக்காவை அறிமுகம் செய்துவைத்தார். அவரும் “கானல் வரி“வாசித்திருப்பதாகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். கருணாகரமூர்த்தியை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அதற்குள் அவர் திரும்பிப் போய்விட்டிருந்தார். அடுத்த முறை... அடுத்த முறை... என்று ஒப்புக்காகச் சொல்லி மன்னிப்புக் கேட்க நினைத்திருக்கிறேன். அவர் நிச்சயம் மன்னிப்பார்.

பிரான்சிலிருந்து வந்திருந்த சிவராஜாவைச் சந்தித்தேன். அங்கு புத்தக நிலையம் வைத்திருப்பதாகச் சொன்னார். அவரையும் மீண்டும் சந்திப்பதாக ஒப்புக்கொண்டு.... வழக்கம்போல... என்னத்தைச் சொல்றது?

மாமல்லனை எங்கெங்கும் கண்டேன். நிறையப் புத்தகங்கள் வாங்கினார் என்று நினைக்கிறேன். film festival இல் மீசையோடு பார்த்தபோது அவர் இன்னும் நன்றாக இருந்ததாக நினைவு. புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது மீசையை எடுத்துவிட்டிருந்தார். I.T. க்கு நெருக்கமான முகம். அவருடைய சிறுகதைகள் உயிர்மையில் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. ந.முருகேசபாண்டியனை காலச்சுவடு பதிப்பகத்தில் பார்த்தேன். பேசவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்காது. பெருமாள் முருகனைப் பார்த்தேன். பேச உந்தியது மனம். வழக்கமான சங்கோஜம்... பார்க்காததுபோலவும் தெரியாததுபோலவும் கடந்துபோய்விட்டேன். அவருடைய “மாதொருபாகன்“சிறந்த நாவல் என்று முகநுாலில் கதைத்துக்கொள்கிறார்கள். அவசியம் வாசிக்க வேண்டும்.

கவிஞர்-பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்தான் சிரித்த முகத்தோடு நன்றாகவே பேசினார். ”அன்றைக்கு தமிழச்சியின் புத்தக வெளியீட்டு விழா நடக்காமல் இருந்திருந்தால் உங்களது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பேன்”என்று அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஆனாலும், அதை அவரிடம் சொல்லவில்லை. நாகரிகம் முக்கியம் மக்களே. ஆரபி என்ற அழகான பெண்ணை அழைத்து, ”இவர்தான் தமிழ்நதி. கானல் வரி எழுதியவர்”என்று அறிமுகப்படுத்தினார். ஆரபி என்ன சொன்னார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். நம் எழுத்தைப் பற்றி யாராவது நல்ல வார்த்தை சொல்லக் கேட்டால் ஏன் காதுமடல் சுடுகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?

விஜயமகேந்திரனையும் சங்கரராமசுப்பிரமணியனையும் பார்த்தேன். வணக்கம் வைத்தேன். நின்று பேசமுடியாமல் புத்தகங்கள் அழைத்துக்கொண்டிருந்தன.

அஜயன் பாலாவின் புத்தக வெளியீடு “ஆழி“பதிப்பக “ஸ்டால்“இல் நடைபெற்றது. தாமதமாகவே கலந்துகொள்ள முடிந்தது. அங்கு மீனா கந்தசாமியை அறிமுகம் செய்துகொள்ளக் கிடைத்தது. பிறகு, அவருடைய புகைப்படத்தை பெரிய அளவில் ஏதோவொரு “ஸ்டால்“இல் பார்த்த ஞாபகம். ஆழியில் கீரனுார் ராஜாவைச் சந்தித்தேன். அவருடைய “மீள்குகைவாசிகள்“ என்ற நுாலும், “காஃபிரர்களின் கதைகள்“என்ற தொகுப்பும் இம்முறை ஆழி வெளியீடாக வந்திருக்கின்றன. எளிமையான மனிதர். எனது கவிதைத் தொகுப்பான “இரவுகளில் பொழியும் துயரப்பனி“யை சிலாகித்துச் சொன்னார்.

நாஞ்சில் நாடன் அவர்கள்தான் இந்தப் புத்தகத் திருவிழாவின் மூலவர். இவ்வாண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற அவருடைய “சூடிய பூ சூடற்க“ தமிழினியில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது. அவரது முகம் நிறைவில் விகசித்துக்கொண்டிருந்ததுபோல தோன்றியது என் கற்பனையோ... வழக்கமாகவே அவர் அப்படித்தானே...? “கான் சாகிப்“மூன்றாவது முறையாக வாங்கினேன். இரண்டை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று“, “பச்சை நாயகி“இரண்டும் புதிதாக கண்ணில் பட்டன. ”சாகித்திய அகாடமி வழங்கப்பட்ட பிறகு ரொம்பவும் கவனிக்கப்படுகிறீர்கள் இல்லையா...?”என்று கேட்டேன். ”இந்தப் பரபரப்பு இன்னுஞ் சில நாள் ஓடும்“என்ற தொனியில் பதில் சொன்னார். உண்மையில் சாகித்திய அகாடமி பெருமைப்படவேண்டும்.

சுந்தரராஜன் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்தார். அவர் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கும் தொடர்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

இனிய நண்பர் பாஸ்கர் சக்தி படப்பிடிப்புக்காக தேனிக்குப் போய்விட்டார். அவரை நானும் உமா ஷக்தியும் “மிஸ்“பண்ணினோம். இந்த “மிஸ்“க்கு தமிழ் என்ன? ஒருவேளை அப்படி ஒன்று தமிழில் இல்லையா?

உயிரெழுத்து சுதிர் செந்தில் தன்னை கவிஞர் என்று நான் அறிந்துவைத்திருக்கவில்லையே என்று வருத்தப்பட்டார். அவருடைய கவிதைத் தொகுப்பாகிய “உயிரில் கசியும் மௌனம்“வாங்கினேன். ”இதன்பிறகும் என்னை உரைநடை எழுத்தாளராகவா நினைப்பீர்கள்?”என்று கேட்டார். வாசித்தால் தெரிந்துவிடும். தெரிந்துகொள்ள, எனக்கும் கவிதை தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரிதான்.

பதிப்பகங்கள் என்று பார்த்தால், ஆனந்தவிகடனுக்குள்ளும் கிழக்கு பதிப்பக “ஸ்டால்“இலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனந்த விகடனுக்குள் நுழைய முயற்சித்து இடிபட விரும்பாமல் திரும்பினேன். கிழக்கில் ஜெயமோகனின் “உலோகம்“மட்டும் வாங்கினேன். முன்னட்டையில் ”ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!”என்று போட்டிருக்கிறார்கள். அந்த “திரில்“என்னவென்று அறியும் ஆவல் மண்டை முழுக்க நிறைந்திருக்கிறது. இன்னும், “நாய்க்கு நடக்க நேரமில்லாத“ நிலை தொடர்கிறது. விடியலில் மிக அருமையான புத்தகங்கள் கிடைத்தன. அவர்... (பெயர் தெரியவில்லை) ”இதை நாங்கள் ஒரு தொழிலாகச் செய்யவில்லை. ஆத்மார்த்தமாகச் செய்கிறோம்”என்றார். இப்படியும் சில ஆத்மாக்கள் இன்னமும் - அருகிப் போன உயிரினம் போல - எஞ்சியிருக்கின்றன.

காலச்சுவடு, உயிர்மையில் நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். காயத்ரி எவ்வளவு அழகாகச் சிரிக்கிறார்!!! மனதின் வெண்மை வெளியில் தெரிகிற சிரிப்பு. அவருக்காக இன்னொரு தடவை உயிர்மை போகலாமா என்றிருந்தது. காலச்சுவட்டில் எனது கட்டுரைத் தொகுப்பு “ஈழம்:தேவதைகளும் கைவிட்ட தேசம்“வெளிவந்திருக்கிறது. 1000 ரூபாய் கட்டி வாசகர் சந்தாத் திட்டத்தில் சேர்ந்தேன். 25வீத கழிவில் புத்தகங்கள் வாங்கலாம் என்றார்கள். தாமதமாகச் சேர்ந்ததில் உள்ளுக்குள் வருத்தம். அதை வெளிக்காட்டாமல் ”கழிவு விலையைப் பயன்படுத்தி என் தோழிகளுக்கு வாங்கிக் கொடுப்பேன்”என்றேன். ”ஆத்தா... அப்படிச் செய்யலாமா...?“என்பதுபோல பார்த்தார்கள். “தோழிகள் ஒன்றிரண்டு பேர்களே உண்டு”என்று சமாளித்தேன். கவிதா முரளிதரனால் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்று காலச்சுவட்டில் வெளிவந்திருக்கிறது. நிறைய புதிய தலைப்புகளில் போட்டிருக்கிறார்கள். எனது புத்தகத்தை வெளியிட்ட காரணத்தால் விளம்பரம் செய்கிறேனோ என்று இந்த வாக்கியத்தை எழுதும்போது ஏன் எனக்குத் தோன்றுகிறது. மனக்குரங்கே! அடங்கு.

தேடலின் பயணம் தொடர்கிறது. சில சமயங்களில் நகராமல் தரித்துவிடுகிறேன். சில சமயங்களில் நானே களைத்துச் சாய்ந்துவிடுகிறேன். சில சமயங்களில் சிலர் திட்டமிட்டுச் சாய்த்துவிடுகிறார்கள். ஆனாலும், சளைக்காமல் மறுபடியும் எழுந்து ஓடும் ஆன்மத்துணிவு உண்டு. அதுவரை எழுத்தும் ஓடும்.

கீழே, இம்முறை புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்... கண்ணைப் போட்டுடாதீங்கப்பா...!


1. ரெட் சன் -சுதீப் சக்ரவர்த்தி – எதிர் வெளியீடு
2. தீண்டப்படாத நூல்கள் - ஸ்டாலின் ராஜாங்கம் - ஆழி
3. எங்கே போகிறோம் நாம்?- தமிழருவி மணியன் -விகடன் பிரசுரம்
4. கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை அடையாளம்
5. ஓசை புதையும் வெளி – தி.பரமேசுவரி – வம்சி
6. காகங்கள் வந்த வெயில் - சங்கர ராமசுப்ரமணியன் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
7. ஈழம்: மக்களின் கனவு – தீபச்செல்வன் - தோழமை வெளியீடு
8. அருந்ததி ராய் - கரண்தபார் விவாதம் - கீழைக்காற்று
9. நிலம் புகும் சொற்கள் - உயிர் எழுத்து
10. புனைவும் வாசிப்பும் - வேதசகாய குமார் - யுனைற்றட் ரைட்டர்ஸ்
11. ராஜிவ் காந்தி கொலை வழக்கு – கே.ரகோத்தமன் - கிழக்கு
12. ஒலிக்காத இளவேனில் - தொகுப்பு தான்யா, பிரதீபா தில்லைநாதன் - வடலி
13. ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது மீரான் - அடையாளம்
14. அடுத்த வீடு ஐம்பது மைல் -தி.ஜானகிராமன் - ஐந்திணை
15. அபூர்வ மனிதர்கள் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
16. அடி – தி.ஜானகிராமன் - ஐந்திணை
17. அன்பே ஆரமுதே – தி.ஜானகிராமன் - ஐந்திணை
18. ஈழத்தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு – கு.பூபதி –
தோழமை வெளியீடு
19. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் - தையல் வெளியீடு
20. காஃப்கா: கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் - தமிழில்: சா.தேவதாஸ் - வ.உ.சி. நூலகம்
21. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் - தமிழினி
22. கான் சாகிப் - நாஞ்சில் நாடன் - தமிழினி
23. புதுமைப் பித்தனும் கயிற்றரவும் - ராஜமார்த்தாண்டன் - தமிழினி
24. அய்யன் காளி – நிர்மால்யா – தமிழினி
25. கடைத்தெருவின் கலைஞன் (ஆ.மாதவனின் புனைவுலகம்) ஜெயமோகன் - தமிழினி
26. இரவு – ஜெயமோகன் - தமிழினி
27. சென்னையின் கதை – கிளின் பார்லோ – சந்தியா பதிப்பகம்
28. ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம்
29. அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிலா – காலச்சுவடு
30. அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ. கிருஷ்ணன்
31. சின்ன அரயத்தி – நாராயண்
32. உலோக ருசி – பெருந்தேவி
33. பஞ்சமர் - கே.டானியல் - அடையாளம்
34. தீண்டப்படாத முத்தம் - சுகிர்தராணி – காலச்சுவடு
35. ஒரு சூத்திரனின் கதை – ஏ.என். சட்டநாதன் - காலச்சுவடு
36. ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி – காலச்சுவடு
37. சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர் - தமிழில்: குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு
38. உப்புநீர் முதலை – நரன் - காலச்சுவடு
39. இரவுச் சுடர் - ஆர் சூடாமணி – காலச்சுவடு
40. புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - நேர்காணல்கள் (தொகுப்பு: கண்ணன்)
41. மாதொருபாகன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
42. சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - சண்முகம் சிவலிங்கம் - காலச்சுவடு, தமிழியல்
43. பாழ் நகரத்தின் பொழுது – தீபச்செல்வன் - காலச்சுவடு

44. புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தர ராமசாமி –
காலச்சுவடு

45. பாம்படம் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை
46. காற்று கொணர்ந்த கடிதங்கள் - தமிழச்சி தங்கபாண்டியன் - உயிர்மை
47. பற்றி எரியும் பாக்தாத் - ரிவர்பெண்ட் (தமிழில்.கவிதா முரளிதரன்) காலச்சுவடு
48. பாப் மார்லி இசைப்போராளி – ரவிக்குமார் - உயிர்மை
49. தேகம் - சாரு நிவேதிதா – உயிர்மை
50. இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன்
51. மழையா பெய்கிறது? சாரு நிவேதிதா
52. கலையும் காமமும் - சாரு நிவேதிதா
53. விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை
54. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை – பொன். வாசுதேவன் - உயிர்மை
55. வேருலகு – மெலிஞ்சி முத்தன் - உயிர்மை
56. இருள் இனிது ஒளி இனிது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
57. காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை

58. அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது – எஸ்.ராமகிருஷ்ணன்
59. குறத்தி முடுக்கின் கனவுகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
60. துயில் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
61. செகாவின் மீது பனி பெய்கிறது – எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
62. உலோகம் - ஜெயமோகன் - கிழக்கு
63. அமெரிக்க உளவாளி – அ.முத்துலிங்கம் - கிழக்கு
64. தனிக்குரல் - ஜெயமோகன் - உயிர்மை
65. வெயில் தின்ற மழை – நிலாரசிகன் -உயிர்மை
66. எனக்கு அரசியல் பிடிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்
67. மண் கட்டியை காற்று அடித்துப் போகாது- பாஸ{ அலீயெவா –தமிழில் பூ.சோமசுந்தரம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
68. போர்க் குதிரை – லாரி மேக்மர்த்ரி – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
69. வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்-விக்டர் பிராங்கல் -தமிழில்: ச.சரவணன் - சந்தியா பதிப்பகம்
70. தபால்காரன் - ரோஜர் மார்ட்டீன் தூ.கார்டு – தமிழில்: க.நா.சுப்பிரமணியன் - பானு பதிப்பகம்
71. அழகும் உண்மையும் - ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் - தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை
72. போர் தொடர்கிறது – அகஸ்டோ ருவா பஸ்டோஸ் - எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
73. ஆப்பிரிக்கக் கனவு – எர்னஸ்டோ சேகுவேரா – தமிழில்: எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
74. கண்ணாடிக் கிணறு – கடற்கரய் - காலச்சுவடு
75. வண்ணநிலவன் கவிதைகள் - மீனாள் பதிப்பகம்
76. நமக்கான சினிமா – மாரி மகேந்திரன் - வம்சி
77. நூறு சதவீத பொருத்தமான… ஹாருகி முரகாமி (ஜி.குப்புசாமி) – வம்சி
78. மூன்றாம் பிறை –மம்முட்டி – கே.வி.ஷைலஜா – வம்சி
79. தென்னிந்தியச் சிறுகதைகள் -கே.வி.ஷைலஜா – வம்சி
80. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி – காலச்சுவடு
81. எங்கே அந்தப் பாடல்கள்? – ஆபிரிக்கக் கவிதைகள்- மொழியாக்கம் - ரவி
82. முகில் பூக்கள் - பி.கு.சரவணன் - தகிதா பதிப்பகம்
83. குடியின்றி அமையா உலகு… - புலம்
84. அம்பர்தோ எகோ (நேர்காணல்கள்) – ரஃபேல் -அகம்புறம் பதிப்பகம்
85. எம்.கே.தியாகராஜ பாகவதர் - இரா.செழியன் - ஆழி
86. ஷோபியன் காஷ்மீரின் கண்ணீர்க் கதை – எஸ்.வி.ராஜதுரை – விடியல்
87. இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு – அருந்ததி ராய் - விடியல்
88. பெட்ரோ பராNமுh – யுவான் ருல்ஃபோ – எஸ்.பாலச்சந்திரன் - விடியல்
89. நந்திகிராமம்: நடந்தது என்ன?-மொழியாக்கம்: ஈஸ்வரன், அரவிந்தன் - விடியல்
90. சித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன் - காலச்சுவடு
91. வனம் எழுதும் வரலாறு – சத்நாம்- பிரசன்னா- விடியல்
92. சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்-ஈழம்: காலச்சுவடு பதிவுகள்
93. டால்ஸ்டாய் கதைகள் - வ.உ.சி.நூலகம்
94. டால்ஸ்டாய் கட்டுரைகள் - வ.உ.சி.நூலகம்
95. சித்தார்த்தா – ஹெர்மென் ஹெஸ்ஸே – திருலோக சீதாராம் - பானு பதிப்பகம்
96. உயிரில் கசியும் மௌனம் - சுதிர் செந்தில் - உயிர் எழுத்து
97. நிறுவனங்களின் கடவுள் - யவனிகா ஸ்ரீராம் - உயிர் எழுத்து பதிப்பகம்
98. நளபாகம் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
99. குள்ளன் - பேர் லாகர் குவிஸ்ட் - தி.ஜானகிராமன் - ஐந்திணை
100. அன்னை – கிரேசியா டெலடா – தி.ஜானகிராமன் - ஐந்திணை
101. சஹீர் - பாவ்லோ கொய்லோ – பி.எஸ்.வி.குமாரசாமி - காலச்சுவடு
102. நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
103. காரட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் - நேசமித்ரன் - உயிர்மை
104. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் - சமயவேல் -ஆழி
105. த பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் - அஜயன் பாலா – ஆழி
106. முள்ளிவாய்க்காலுக்குப் பின் - தொகுப்பு: குட்டி ரேவதி – ஆழி
107. அனுபவ சித்தனின் குறிப்புகள் - ராஜா சந்திரசேகர் - நதி
108. ஏரிக்கரையில் வசிப்பவன் - ஸ்ரீநேசன் - ஆழி
109. மீள்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி
110. காஃபிரர்களின் கதைகள் - தொகுப்பு: ஜாகிர்ராஜா – ஆழி
111. சிறைப்பட்ட கற்பனை – வரவர ராவ்- க.பூரணச்சந்திரன் -எதிர்
112. குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
113. அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் - ஃபனான் - டேவிட் மாசி – விடியல்
114. ஹேம்ஸ் என்னும் காற்று – தேவதச்சன் - உயிர்மை
115. சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ – அமரந்த்தா, சிங்கராயர்
116. சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான் - காலச்சுவடு
117. வெள்ளைப் பல்லி விவகாரம் - லஷ்மி மணிவண்ணன்
118. பொய் - அபத்தம் - உண்மை – ராஜ் கௌதமன் - விடியல்
119. க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ – ஆனந்த், ரவி – காலச்சுவடு
120. வர்ணங்கள் கரைந்த வெளி – தா.பாலகணேசன் - காலச்சுவடு, தமிழியல்
121. பச்சை நாயகி – நாஞ்சில் நாடன் - உயிர் எழுத்து
122. கடல் - ஜான் பான்வில் - ஜி.குப்புசாமி – காலச்சுவடு
123. இடையில் ஓடும் நதி – கூகி வா தியாங்கோ - இரா.நடராசன்- பாரதி புத்தகாலயம்
124. சாயாவனம் - சா.கந்தசாமி – காலச்சுவடு
125. கே அலைவரிசை – முகுந்த் நாகராஜன் - உயிர்மை
126. பதுங்குகுழி – பொ.கருணாகரமூர்ததி – உயிர்மை
127. ம.பொ.சி.யின் சிறுகதைகள் - தொகுப்பு: தி.பரமேசுவரி
128. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன் - தமிழினி
129. என்ன நடக்குது இலங்கையில்? – அ.மார்க்ஸ் - பயணி
130. லா.ச.ராமாமிருதம் கதைகள் - இரண்டாம் தொகுதி – உயிர்மை
131. கலையும் மொழியும் - கான்ஸ்டான்டின் ஃபெடின் - தி.சு.நடராசன் - விடியல்
132. வன்மம் - பாமா – விடியல்
133. இரவு – தொகுப்பு: மதுமிதா – சந்தியா பதிப்பகம்
அகாந்தக் - சத்யஜித் ரே – செழியன் - ஆழி