6.30.2009

மதுரையில் நடந்த ‘கூடல் சங்கமம்’ -01



ஜூன் 27,28 ஆகிய இரண்டு நாட்களும் ‘கடவு’இலக்கிய அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டோம். அழகர் கோயிலுக்குச் செல்லும் வழியில், ஒரு கிலோ மீற்றர் முன்னதாக ‘ஒயாசீஸ்’ உணவக மண்டபத்தில் அக்கூட்டம் நடைபெற்றது. கவின்மலர், உமா ஷக்தி, தமிழ்நதி ஆகிய மூவரும் ஒன்றாக அந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எங்களுக்குள் திருவிழாவுக்குச் செல்லும் குழந்தைகளின் உற்சாகம் ததும்பிக்கொண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்கள் என்பன ஒருவகையில் காதுகளைக் கழற்றி அடுத்தவர் கைகளில் அல்லது வாய்களில் கொடுத்துவிட்டு அரைத்தூக்கத்திலோ வேறு ஞாபகங்களிலோ இருப்பதுதான் என்றபோதிலும், ஒவ்வொரு தடவை கிளம்பிப்போகிறபோதும் ஏதோவொரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட மனோநிலை கிளரவே செய்கிறது. மக்களின் தேர்தல்கால மறதியையொத்த ஒன்றே மீண்டும் மீண்டும் இலக்கியக் கூட்டங்களை நோக்கி நம்மை இழுத்துச்செல்கிறது. நண்பர்களைச் சந்திப்பது, மிக அரிதாக யாராவது சுவாரஸ்யமாகப் பேசக்கேட்பது, சமகால இலக்கியம் பற்றிய அறிதல், பிரபலங்களின் முகதரிசனம் இன்னபிற அனுகூலங்களும் இல்லாமலில்லை.

அந்த இடத்தைத் தேர்ந்து அப்படியொரு பெயரையும் வைத்த ரசனைக்காரரைப் பார்க்க முடியவில்லை. பறவைகள், குரங்குகள், செழித்தடர்ந்த மரங்கள், பசுமைபடர்ந்த புல்தரைகள், சற்றே தொலைவில் மலை… இயற்கையின் அழகு அங்கு இறைந்து கிடந்தது. ஒரு நீளமான மண்டபத்தில் நாற்காலிகள் வழக்கம்போல நிரைகளாகப் போடப்பட்டிருந்தன. முதல் நாள் மேகமூட்டத்தோடு காலநிலை கொஞ்சம் கருணை காட்டியது. அடுத்த நாள் வெயில் அனலாய் பொரிந்து தள்ளிவிட்டது.

எழுதும் வசதி கருதி இந்த கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர்… இன்னபிறவற்றைத் தவிர்த்துவிடுகிறேன். கவிஞரும் உரைநடையாளருமாக இருப்பவர்களை எப்படி விளிப்பதென்பதில் மெல்லிய குழப்பம் இருக்கிறது. முதலில், கூட்டத்தை ஒழுங்கமைத்த தேவேந்திர பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார். அதுவொரு நன்றியுரை போலவே அமைந்திருந்தது.

‘காலச்சுவடு’ஆசிரியர் கண்ணனது வாழ்த்துரையில், தமிழிலக்கியம் உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மிகுந்திருந்தது.

“குடிப்பதற்கும் கும்மாளமிடுவதற்குமான நிகழ்ச்சிகளாக இலக்கியக் கூட்டங்கள் சில சமயங்களில் அமைந்துவிடுகின்றன. எனக்கு குடி தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகள் எதுவும் இல்லை என்றபோதிலும், போதையானது அவதூறுக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்லத்தக்கது என்றவகையில் இலக்கியக் கூட்டங்களில் அதைத் தவிர்த்துவிடலாம். டெல்லியில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது, என்.சி.பி.எச். பதிப்பகப் படைப்புகளைத் தவிர வேறெதையும் அங்கு காணமுடியாதிருந்தது வருத்தமளிப்பதாக இருந்தது. உலகப் புத்தகச் சந்தை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தமிழிலக்கியம் உலகளாவிய அளவில் அறியப்படவில்லையே என்ற வருத்தம் மேலிடுகிறது. மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலான புத்தகங்களை அங்கு காணும்போது, நமது மொழி தன்னுள்ளேயே சுருங்கிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக, நம்மிடையில் மொழிபெயர்க்கத்தகுந்த அறிவுடைய இருமொழிப் புலமையாளர்கள் குறைவாக இருப்பதைச் சொல்லலாம். தேசிய ரீதியிலும் தமிழ்ப்படைப்புகள் குறிப்பிடும்படியான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்லமுடியாது. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மொழிபெயர்ப்புகளே வெளிவந்திருக்கின்றன. சாகித்திய அகாடமி போன்ற அமைப்புகளில் ஒன்றேனும் தமிழ்நாட்டினை மையமாகக் கொண்டு இயங்காதிருப்பதை, மேற்குறிப்பிடுவனவற்றின் பிரதிபலிப்பெனவே கொள்ளவேண்டும்.”

அடுத்து சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை வழங்கினார்.

“நாங்கள் எழுதவந்த 1970களில் இருந்த நிலைமையிலும் பார்க்க இப்போது நிலைமை வேறுபட்டிருக்கிறது அன்றேல் மேம்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். முன்புபோலல்லாது இப்போது பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. அத்துடன் புதிது புதிதாக நிறையப்பேர் எழுதவந்திருக்கிறார்கள். கவிதைகள், சிறுகதைகள் என படைப்பூக்கம் அதிகரித்து நம்பிக்கையூட்டும் விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாசக மனோநிலை எதிர்வளமாகத் தொழிற்படுகிறதோ என்று தோன்றுகிறது.

கவிதைகளை அறிவோடு பார்ப்பதா? உணர்வோடு பார்ப்பதா? என்ற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு. ஆனால், இயல்பாக வந்து நமது மனதுள் உட்கார்ந்துவிடும் கவிதைகளே வெற்றிபெறுகின்றன.”

‘உயிரெழுத்து’ஆசிரியர் சுதிர் செந்திலை வாழ்த்துரை வழங்கும்படி அழைத்தபோது, ‘உயிர்மை’என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார் தேவேந்திர பூபதி. கூட்டத்தில் சிரிப்பலை சிதறியது. “காலச்சுவடு, உயிர்மை என்று சொல்லிப் பழகிய உதடுகள்”என்றார் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்.

‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதிர் செந்தில் தனது வாழ்த்துரையில், ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவதிலுள்ள சிரமங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். நிறைந்த சபையொன்றைக் கூட்டிய தேவேந்திர பூபதியை அவர் பாராட்டினார். தன்னால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுள் சாரு நிவேதிதாவை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகச் சொன்னார். புத்தக விமர்சனங்கள் பழகிய பாதையிலேயே செல்லாமல், அயர்ச்சி தராத புதிய பாணிக்கு நகர்த்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதாவது, விமர்சிக்கப்படும் புத்தகங்களிலுள்ள மதம், அவை முன்வைக்கும் வரலாறு ஆகியன தொடர்பாகவும் விவாதிக்கப்படல் அவசியமென்றார். விமர்சன வடிவ மாற்றத்தினை வலியுறுத்தி விடைபெற்றார் சுதிர் செந்தில்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தனது வாழ்த்துரையில் இப்படியொரு கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலுள்ள சிரமங்களையும் அதை எதிர்கொண்டு, தேவேந்திரபூபதி சிறப்பாக கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதையும் சிலாகித்துப் பேசினார்.

“ஏனைய அரங்கங்களைப் போலல்லாது இது நிறைந்ததொரு அரங்கம்@ இங்கே கூர்தீட்டப்பட்ட சிந்தனையுடைய படைப்பாளிகள் கூடியிருக்கிறீர்கள்.

இன்று மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்துகொண்டே போகிறது. அவர்கள் வெகுஜன இதழ்களைக் கூட வாசிப்பதில்லை. பரீட்சைகளின்போதுகூட நாம்தான் அவர்களுக்காகக் கவலைப்படவேண்டியதாக இருக்கிறது. கேட்டால், “அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். நீங்க கவலைப்படாதீங்க சார்”என்று எங்களுக்குத் தேறுதல் சொல்கிறார்கள். இந்நிலையில் மாணவர்களிடையே படைப்பாளிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கின்றன.”

பேராசிரியர் தொ.பரமசிவம் ‘பாராட்டுக்குரிய கவிஞர் தேவேந்திர பூபதி அவர்களே’என்ற விளிப்புடன் ஆரம்பித்தார்.

“ஒயாசிஸ் என்ற பாலைவனச்சோலையிலே இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இலக்கிய உலகமும் ஒரு பாலைவனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. கண்ணன் முன்வைத்துப் பேசிய விடயம் முக்கியமானது. இந்தியம், தேசியம் என்ற மைய நீரோட்டத்தில் தமிழகம் இணைந்திருக்கிறதா? அல்லது விலக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதா? எந்தத் தேசிய நிறுவனமும் தமிழ்நாட்டுக்குள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டுச் செயற்படுகிறார்களா?

அண்மைய நிகழ்வுகளால் மரணம் என்ற அச்சம் மரத்துப்போய்விட்டிருக்கிறது. சடலங்கள் காய்ந்து தீய்கிற வாடை இன்னமும் வந்துகொண்டுதானிருக்கிறது. அங்கே ஒரு நாள் குண்டுவீச்சு நிறுத்தப்பட்டால்கூட ஒரு கவிதை பூக்கிறது. இங்கே புதுக்கவிதையில் ‘சொற்களின் வறுமை’யை நான் பார்க்கிறேன். அதற்குக் காரணம் இவர்களிடம் வேர்களைப் பற்றிய ஞானம் இல்லை. பழந்தமிழிலக்கியங்களிடம் பரிச்சயம் செய்துகொள்வதில்லை. எழுத வருகிறவர்கள் பழந்தமிழிலக்கியங்களையும் படித்திருப்பது நல்லது.”

தேநீர் இடைவேளியின் பின் 12:15க்கு மீண்டும் கூட்டம் ஆரம்பமாகியது.

கவிஞர் கலாப்பிரியா தலைமையில் கவிதை நூல் விமர்சனம் இடம்பெற்றது. கலாப்பிரியா தனது தலைமையுரையில் பலருடைய கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். ‘கணந்தோறும் சிதைவுறும் சூழல் இன்றைய கவிதைக்கான காலம்’ என்ற வரிகள் கவிதையாய் மனதில் வந்து அமர்ந்துகொண்டன.

லஷ்மி மணிவண்ணனின் ‘எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம்’என்ற தொகுப்புக்கான விமர்சனத்தை குலசேகரன் வழங்கினார்.

“லஷ்மி மணிவண்ணனின் கவிதைகளிடையே ஒரு மையச் சரடு இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய தன்மையைக் காணமுடிகிறது. அவருடைய கவிதைகளுள் கடவுள் பல இடங்களில் பல வடிவங்களில் வந்து செல்கிறார். அவருடைய கிராமத்துச் சாமிகள் கலகக்காரர்களாயிருக்கிறார்கள்.

வீட்டைத் துறந்து வெளியேறும் அவாவை வெளிப்படுத்துகின்றன அவருடைய பல கவிதைகள். ‘சங்கருக்குக் கதவற்ற வீடு’என்ற தலைப்புக்கிணங்க வெளியேறல் மறுபடி மறுபடி நிகழ்கிறது. வெளியேறவும் மீண்டும் திரும்புவதற்கும் ஏற்புடைய வீடு இவர் கவிதைகளில் கனவாயிருக்கிறது.

பள்ளிகளை மியூசியம்களாக கவிஞர் சித்தரிக்கிறார். குடிப்பதென்பது எதிர்ப்புணர்வின் அடையாளமாக இவர் கவிதைகளில் வெளிப்படுகிறது. அன்பைக் குடியின் வாயிலாக இவர் தேடுகிறார். ஒரு மாற்று யதார்த்தத்தின் விழைவினை மணிவண்ணனின் கவிதைகளில் காணமுடிகிறது. சாத்தானைக் கடவுளாகவும் குடிப்பதை சாகசமாகவும் கொள்வதை எதிர் யதார்த்தத்தின் ஏதனங்களாகக் காண்கிறோம்.”

கரிகாலனின் ‘தேர்ந்தெடுத்த கவிதைகள்’தொகுப்புக்கான விமர்சனத்தை சாஹிப் கிரான் வழங்கினார்.

“ஏழு தொகுப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கும் கரிகாலனின் கவிதைகளை, இதுவரையில் ஒரு தொகுப்பையேனும் கொண்டுவந்திராத நான் விமர்சிப்பதென்பது கொஞ்சம் தயக்கம் தருவதும் சிரமமானதும்தான். கரிகாலன் அயராத உழைப்பின் வழியாக தொடர்ச்சியான இருப்பைப் பேணி வருகிறார். இவருடைய கவிதைகளில் தத்துவங்களின் மூலம் நிரப்பப்படும் வெளியினை அடையாளம் காணமுடிகிறது. ‘எதிர்வினை’என்ற கவிதையின் இறுதிவரிகள் பாலஸ்தீனியக் கவிஞர் மொஹம்மது தார்வீஷினை நினைவுபடுத்துகின்றன.

தத்துவத்தைக் கவிதையாக மாற்றும் முயற்சியானது மொழியாளுமையின் பலமாக இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே நீர்த்துப்போய் கசக்கிறது. கரிகாலனின் கவிதைகளில் சில இடங்களில் காணப்படும் பட்டியலிடும் தன்மை சலிப்பூட்டுவதாகவும் அமைந்துவிடுகிறது.

தொடர்ந்து எழுதுவதற்கான ஆத்ம ஊற்று எங்கிருந்து பெருகுகிறதென்று நான் யோசிக்கிறேன்.

விமர்சனத்தின் இறுதியில் சாஹிப் கிரானினால் வாசிக்கப்பட்ட சில வரிகள் கரிகாலனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என எழுதியிருந்தேன். அது லாவோட்சு அவர்களுடையது என அறியத்தந்த 'டாங்கு'விற்கு நன்றி. அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன.

“எவனொருவன் உண்மையாக இருக்கிறானோ
அவன் பகட்டுவதில்லை.
எவனொருவன் பகட்டுகிறானோ
அவன் உண்மையாக இருப்பதில்லை”

கலாப்பிரியா அவசரமாக வெளியில் செல்லவிருப்பதாகக் கூறி, தனது இடத்தில் யுவன் சந்திரசேகரை வந்தமர்ந்து நிகழ்ச்சியை நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

“அவருடைய இடத்தில் நான் இல்லை. அவர் விட்டுச்சென்ற இடத்தில் இருக்கிறேன்”என்ற தொனிப்படப் பேசி நிகழ்ச்சியைக் கையேற்றுத் தொடர்ந்து நடத்தினார் யுவன் சந்திரசேகர்.

கண்டராதித்தனின் ‘சீதமண்டலம்’தொகுப்புக்கான விமர்சனத்தை ‘புது எழுத்து’மனோன்மணி வாசித்தளித்தார்.

“பொருந்தாக் காமமும் பொருதும் கவிதையும் என்ற பொதுமையில் இதைப்பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். நகுலனுக்கு சுசீலாவைப் போல, கலாப்பிரியாவுக்கு சசியைப் போல, கண்டராதித்தனுக்கு நித்யா என்றொருத்தி இருக்கிறாள். ஆனால், இவள் கனவோ கற்பனையோ அல்ல. இரத்தமும் சதையுமான ஒருத்தி.

கண்டராதித்தனின் செய்நேர்த்தியும் அனுபவமும் அவருடைய கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன. ‘வானரம் இழந்த அருவி’என்ற கவிதை சிலாகிக்கத்தக்க அற்புதமானதொன்றாகும். ‘பாவம் கொடூரம்’என்ற தலைப்பு மலையாளத்திலிருந்தும், ‘சீதமண்டலம்’என்ற தலைப்பு சமஸ்கிருதத்திலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. (இதை மனோன்மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் கூட்டத்தில் அமர்ந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டேன்.)



அடுத்து, அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்புக்கான விமர்சனத்தை இசை வழங்கினார்.

“அய்யப்ப மாதவனை நினைக்கும்போதே, அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதுபவர் என்ற நினைப்பும் கூடவே வந்துவிடுகிறது. அவ்வாறு தொடர்ந்து நிறைய எழுதக் காரணம் என்ன என்று சிந்தித்திருக்கிறேன். அக உந்துதலா? கவிதை வழியாக அவர் தன்னை வெளியேற்றிக்கொள்கிறாரா? தன்னைக் கவிஞராக நிரூபித்துக்கொள்ளும் முயற்சியா?

கவிதைக்கான சொற்கள் அய்யப்பனுக்குள்ளேயே இருப்பதைப் போலவும் அவர் அவற்றை அவ்வப்போது எடுத்து வைத்துக்கொண்டு எழுதுவதுபோலவும் எனக்குத் தோன்றுகிறது. ‘கவிதையிடம் பயபக்தியற்றிருக்கும் நிலை’யை இவரிடம் காண்கிறேன். ‘எஸ். புல்லட்’ஆகிய தலைப்புகளை இதற்கு உதாரணமாகச் சொல்லாம். இத்தன்மையானது சாதகங்களையும் பாதகங்களையும் கொண்டிருக்கிறது. போதையின் கிறக்கமும் கலவியின் ஏக்கமும் மிக்கவை இவர் கவிதைகள்.

நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்: நண்பா! கவிதைகளை அவ்வளவு நம்பாதே”

‘எனக்கு கவிதை முகம்’என்ற, அனாரின் தொகுப்புக்கான விமர்சனத்தை சுகுமாரன் வழங்கினார்.

“ஈழத்துப் பெண் கவிஞர்களை அடையாளப்படுத்தும் முகங்களில் முக்கியமானதாக அனாருடையதைச் சொல்லலாம். பெண்ணால் எதிர்கொள்ளப்படும் சமூகச் சிறுமைகள், புறக்கணிப்புகள் ஆகிய அனுபவங்களை அனார் தன் கவிதைகளில் பதிவாக்கியிருக்கிறார். பெண்ணுக்கு மட்டுமே சாத்தியமான – பெண் நிலையிலிருந்து தோன்றும் அனுபவ வெளிப்பாட்டினை அவருடைய கவிதைகளில் காணலாம்.

இவரது கவிதைகளில் ஒரு ஆணை முன்னிலைப்படுத்தி, விளிக்கும் தொனியினைப் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, தன்னிருப்பு சார்ந்த அலைக்கழிவு ஆகியனவற்றைப் பேசும் அனார் கவிதைகளின் சிறப்பம்சமாக, நேரடியான கவிதைகளிலிருந்து வேறுபட்டிருக்கும் தன்மையினைச் சொல்லலாம். அதனாலேயே அனார் கவிதைகளை ஈழத்தின் நவீன கவிதை முகம் என்று சொல்கிறேன்.

இரண்டு மையங்களைக் கொண்டு இயங்குகின்றன இவரது கவிதைகள். முதன்மையாக இயங்குவது காதல். இரண்டாவது, வெளித்தெரியாத நுட்பமான அரசியல். முன்னைய ஈழத்துக் கவிதைகளிலிருந்து அனாரின் கவிதைகள் வேறுபடுமிடமாக ஒன்றைச் சொல்லலாம். இவருடைய கவிதைகளில் ஈரக்கசிவு தணிந்து ஒரு வெப்பம் இருக்கிறது.”

அதுவரை நிகழ்த்தப்பட்ட கவிதை விமர்சனங்களைப் பற்றிக் கருத்துரை வழங்குமாறு வியாகுலன் அழைக்கப்பட்டார். விமர்சகர்களது கருத்துக்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல் தனக்குள் அந்தக் கவிதைகள் விளைவித்த எண்ண அலைகளை அவர் சபையோடு பகிர்ந்துகொண்டமையானது, எடுத்துக்கொண்ட விசயம் தொடர்பில் அவரது நேர்த்தியாக உழைத்திருப்பதைக் காட்டியது.

அதனையடுத்து வந்த சில மணிநேரம் எனதாக இருக்கவில்லை. திடீரென தலைசுழன்றது. கண்கள் இருண்டுபோக காலம் தன்பாட்டில் விரைந்தது. உறைந்தது. பாலைநிலவனின் ‘பறவையிடம் இருக்கிறது வீடு’தொகுப்பைப் பற்றி பா.வெங்கடேசன் பேசியதில் கவனம் குவிக்க முயன்றேன். முடியவில்லை. அத்தொகுப்பைக் குறித்து பா.வெங்கடேசன் சற்று கடிந்து பேசியதாக உமா ஷக்தியிடமிருந்து பிறகு தெரிந்துகொண்டேன். க.மோகனரங்கனின்‘இடம்பெயர்ந்த கடல்’ பற்றி ராணி திலக் பேசினார். கடலின் ஒரு துளியைக் கூட உறிஞ்ச முடியாதபடி உடல் ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. யவனிகா சிறீராமின் ‘திருடர்களின் சந்தை’யைப் பற்றி எச்.ஜி.ரசூல் பேசியது எங்கோ தொலைவில் ஒலித்தது. கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’ குறித்து ஆனந்த் விமர்சித்துக்கொண்டிருந்தவேளையில் எழுந்து கூட்டத்திலிருந்து வெளியேறினேன். சங்கரராம சுப்பிரமணியனின் ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’என்ற தொகுப்புக்கான விமர்சனத்தை நரன் வழங்கியதாகச் சொன்னார்கள். கடற்கரை இரண்டாம் அமர்வினை முடித்துவைத்து கருத்துரை வழங்கினார். நரனின் விமர்சனம் நன்றாக இருந்ததா இல்லையா தெரியாது, அன்று எட்டு மணியளவில் தொலைபேசியில் அழைத்து “சாப்பாடு வாங்கி வந்து தரவா? ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்”என்ற பண்பும் பரிவும் நெகிழ வைத்தது. வெளியூர் வந்திருக்கும்போது நமக்குத் தெரிந்தவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அக்கறை எல்லோரிடமும் இருக்குமென்று தோன்றவில்லை.

கவிதை குறித்த மூன்றாம் அமர்வு கொஞ்சம் ஆரவாரத்தோடு ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் அமர்விற்குத் தலைமையேற்று நடத்த அழைக்கப்பட்டிருந்த தேவதச்சன் வராத காரணத்தால் ஆதவன் தீட்சண்யா தலைமையில் அந்நிகழ்வு நடைபெற்றது.

தேவேந்திர பூபதியின் ‘அந்தர மீன்’தொகுப்பினை விமர்சிக்க க.மோகனரங்கன் வந்தபோது, ‘தேவேந்திர பூபதி தன் கையாலேயே எழுதிய அந்தர மீன் தொகுப்பைப் பற்றி இப்போது க.மோகனரங்கன் விமர்சிக்கவிருக்கிறார்’என்று ஆதவன் தீட்சண்யா ஆரம்பித்துவைத்திருக்கிறார். “தேவேந்திர பூபதிக்கு யவனிகா சிறீராம்தான் கவிதைகளை எழுதிக்கொடுக்கிறார்” என்று வால்பாறைக் கூட்டத்தில் பேசியதன் நீட்சியாகவே அந்த ‘முன்னுரை’வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆதவன் பேசுகையில், “தேவேந்திர பூபதியை எனக்கு ஆறேழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் கவிதை எழுதும்போது கூட நான் உடன் இருந்திருக்கிறேன். அவருக்கு யவனிகா கவிதைகள் எழுதிக்கொடுக்கிறார் என்று சொல்வது அநியாயமாக இருக்கிறது”என்றாராம்.

“நீங்களே அவரது கவிதைகளைப் பற்றிச் சொல்லிவிட்டால் நான் எதைப் பேசுவது?”என்று மோகனரங்கன் கேட்டிருக்கிறார்.

(இலக்கியக்காரர்களது அக்கப்போர் தாங்க முடியவில்லை என்று இதை எழுதும்நேரம் தோன்றுகிறது.)

சம்பந்தப்பட்ட யவனிகா சிறீராம் வந்து கொஞ்ச நேரம் இழுத்துப் பறித்து விசயத்திற்கு வராமல் பேச்சை எங்கோ அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்போது தேவேந்திர பூபதி இடைமறித்து “விசயத்துக்கு வாங்கப்பா… நீங்களா எனக்குக் கவிதை எழுதிக்கொடுக்கிறீர்கள்?”என்று கேட்டாராம்.

“ஐயையோ! யார் சொன்னது? உங்க கவிதையை நீங்க எழுதுறீங்க. என் கவிதையை நான் எழுதுகிறேன்”என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து ‘காலச்சுவடு’கண்ணன் ஒலிபெருக்கியை வாங்கி தானும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புவதாகக் கூறினாராம்.

(கிசுகிசு எழுதுகிற தொனி இப்போது முற்றிலுமாக வந்துவிட்டது)

“சம்பந்தப்பட்டவருடைய கவிதைகளைப் பிரசுரிக்கிறவன் என்ற வகையில் நானும் இதில் கருத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தேவேந்திர பூபதியை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். அவருடைய சொல்லாடல்களுக்கும் யவனிகாவின் சொல்லாடலுக்குமிடையிலான வித்தியாசமும் எனக்குத் தெரியும். ஒருவருடைய எழுத்தை அவரதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளாமலா நாங்கள் பதிப்பிற்கு எடுத்துக்கொள்கிறோம்? எழுதி வாங்குவது எத்தனை அவமானமோ எழுதிக் கொடுப்பதும் அல்லது அப்படிச் சொல்வதும்கூட அதற்கிணையான அவமானத்தைக் கொடுக்கக்கூடியதே”என்றார் கண்ணன்.

ந.முருகேசபாண்டியன் தானும் சில வார்த்தைகள் சொல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.

“யவனிகா சிறீராம் போல இப்போது ஏறத்தாழ முப்பது பேர் எழுதிக்கொண்டிருக்கிறார். பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. அந்தச் சாயலில் எதையும் தேவேந்திர பூபதியின் எழுத்துக்களில் நான் காணவில்லை. அவருடைய ‘வெளிச்சத்தின் வாசனை’தொகுப்புக்கு நான் உயிரெழுத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறேன். தேவேந்திரபூவதி மீதான இந்த அவதூறை நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சொந்தப் பிரச்சனைகளுக்காக இப்படி மற்றவரது எழுத்தின் மீது சேற்றை வாரியிறைப்பது நியாயமான செயலாகத் தோன்றவில்லை.”என்றார்.

மூன்றாம் அமர்வில் சி.மோகனின் ‘தண்ணீர் சிற்பம்’பற்றி சமயவேலும், யூமா வாசுகியின் ‘என் தந்தையின் வசிப்பிடத்தைச் சந்தை மடமாக்காதீர்’குறித்து கூத்தலிங்கமும், தமிழச்சி தங்கபாண்டியனின் ‘வனப்பேச்சி’யை விமர்சித்து யவனிகா சிறீராமும் கட்டுரை வாசித்தார்கள்.

கவிதை நூல் விமர்சனங்கள் மற்றும் ‘எழுதிக் கொடுப்பது’என்ற அக்கப்போருக்குப் பிறகு மாலை நடைபெற்ற உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.

‘நிகழ்ச்சி எப்படி நடந்தது?’என்று, அன்றிரவு குறுஞ்செய்திகளும், தொலைபேசிகளும் விசாரித்தன.

“மிகத் திறம்பட ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நேரம் கைக்குள் இருந்தது. வந்திருந்த அனைவரும் ‘இப்படி ஒருவர் சிரமப்பட்டு நடத்துகிறாரே’என்ற பொறுப்புணர்வோடு நடந்துகொண்டார்கள். வழக்கமாக எதிர்பார்க்கப்படும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. குறையற்ற ஒரு குறை இருந்தது. அதாவது, சுதிர் செந்தில் சொன்னதுபோல விமர்சன வடிவ மாற்றத்தின் அவசியத்தினை உணர்ந்தேன். ஒரு புத்தகத்தை எடுத்து, (கூட்டத்தில் இருப்பவர் அதை வாசிக்காமலும் இருப்பார்) தவளையின் வயிற்றைக் கீறிப் பிரேதப் பரிசோதனை நடத்துவதுபோல சிறிது நேரம் பேசிவிட்டுப் போவது சலிப்பூட்டுவதாக இருக்கிறது. வேறெந்த முறைகளைக் கையாண்டு விமர்சிக்கலாம் என்பதைக் குறித்து நாம் இனிச் சிந்திக்க வேண்டும்.”

பாதி நாளைக் கழித்தும், பதிவு மிகவும் நீளமாக அமைந்துவிட்டது. அதைச் சுருக்கினால் எதுவோ குறைகிறது. 28ஆம் திகதியன்று நடந்த சிறுகதை குறித்த கலந்துரையாடல் பற்றிய பதிவை நாளை வலையேற்றுகிறேன். அது இத்தனை நீளமாக இருக்குமெனத் தோன்றவில்லை.

சில திருத்தங்கள் இருந்தன. சுட்டிக்காட்டிய 'டாங்கு'விற்கு நன்றி.

6.29.2009

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!

முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.

‘நான் மநுவிரோதன்’என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும்.(புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும்‘புது விசை’குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் 'மீட்டர்' மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.

ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது.

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.

எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன்.

“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றை, எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.

சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?

இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில்- எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”

கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.

அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.

“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.

‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.

“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித்தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா?

எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”

ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.

“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.

ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.

இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.

“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.

அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.

பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.

“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.

இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.

இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக்கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப்போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.

இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.

என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம்; இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்?

சமூகத்திலுள்ள சாதி, மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.

எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?

ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?

ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.

பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது”என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.

சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.

நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்”என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!

மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.

ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.

6.28.2009

உதிரும் நட்சத்திரம்




என் அன்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

கடந்த 22ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு தமிழ்மணத்தின் நட்சத்திரமாக எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மிகுந்த மகிழ்வடைகிறேன். முன்பே சொன்னதுபோல அச்சு ஊடகங்களில் கிடைக்காத அனுகூலங்களில் ஒன்றாகிய உடனடி எதிர்வினையை இணையத்தில் எழுதுவதன் மூலம் அனுபவிக்க முடிவதும் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். உடனடி எதிர்வினைகள் யாவுமே மகிழ்ச்சியை அளிக்கத்தக்கதாக இருக்காது என்பதையும் சொல்லவேண்டியதில்லை. எமது அரசியல், சமூக பார்வைகளுக்கு (அப்படி ஒன்று இருந்தால்) மாற்றுக் கருத்துடையவர்கள், ஏனையோரைப் புண்படுத்துவதொன்றே தொழிலாகக் கொண்டவர்களால் வழக்கம்போல சில மனவுளைச்சல்களுக்கும் ஆளாக வேண்டியேற்பட்டது. எது எவ்வாறு இருந்தபோதிலும், கடந்த மூன்றாண்டுகளாக ‘இளவேனில்’என்ற வலைப்பூவில் எழுதிவரும் என்னை, இணையம் என்ற வாசல் வழியாக ஏராளமான நண்பர்கள் வந்து சேர்ந்ததை வாழ்வில் நான் அடைந்த பெரும் பேறாகவே கருதுகிறேன்.

ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் பொருட்டு நேற்றும் இன்றும் மதுரையில் தங்கவேண்டியதாயிற்று. இணையவசதி, நேரம் ஆகியன நான் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதனால் நேற்று (ஜூன் 27) அன்று பதிவு எதுவும் போட இயலவில்லை. மேலும், உங்களால் இடப்பட்ட பின்னூட்டங்களுக்கும் சரிவரப் பதிலளிக்கவும் இயலவில்லை. மன்னிக்கவும். இந்தக் கூட்டம் நிறைவுற்றதும் உங்களோடான தொடர்பாடலை ஒழுங்காகப் பேணுவேன் என்று உறுதியளிக்கிறேன். வழக்கத்தைக் காட்டிலும் அதிக கவனம் குவியக்கூடிய- அரிதாகக் கிடைத்த வாய்ப்பை உதறவிரும்பாமல் ஒரு வாரம் நட்சத்திரமாக இருக்கச் சம்மதித்தேன். ஆனால் மனநிலையும் சூழ்நிலையும் எனக்கு எதிராகவே இயங்கின. இருந்தபோதிலும், இந்த ஒரு வாரமும் ஓரளவுக்காவது பதிவுகளை வலையேற்றி, உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருப்பதாகவே நம்புகிறேன்.

எனது எழுத்துக்களை வந்து வாசிப்பதோடல்லாமல் தொடர்ந்து பின்னூட்டமும் இட்டு எனக்கு உற்சாகமூட்டும் எனது இனிய நண்பர்களின் தோளணைத்து நன்றி சொல்கிறேன். ஒவ்வொருவராகப் குறிப்பிட்டுச் சொன்னால் பெயர்கள் தவறவிடப்பட்டுவிடுமோ என்றஞ்சுவதால், ஒட்டுமொத்தமாகச் சொல்கிறேன் ‘நன்றி… நன்றி… நன்றி’

எழுதவந்த காலத்திலிருந்து இன்றுவரை ஒரு சிறு மனக்கசங்கலும் ஏற்படாதபடி அனுசரணையோடும் அன்போடும் உற்சாகப்படுத்திவரும் தமிழ்மண நிர்வாகத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள். நட்சத்திரமாக இரண்டாவது முறையும் என்னைப் பரிந்துரைத்த உள்ளத்துக்கு பிரத்தியேக நன்றி:) நிறையச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. சொல்லப்பட்ட வார்த்தைகளைக் காட்டிலும் சொல்லப்படாத வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் என்று இன்னமும் நம்புவதால் இதைக் கடந்து செல்கிறேன்.

பலவழிகளிலும் வாழ்வும் வரலாறும் நம்மைக் கைவிட்டுவிட்டாலும், மீதி நாட்களை வாழ்ந்தே கடக்கவேண்டிய துயரத்தோடு, மீண்டும் நன்றி சொல்லி விடைபெற்றுச் செல்கிறேன். தொடர்ந்தும் எனது எழுத்துக்களுக்கு நீங்களும் உங்கள் எழுத்துக்களுக்கு நானும் பரஸ்பரம் நண்பர்களாயிருப்போம்.


தமிழ்நதி

ஒரு காதல் கடிதம்

வினோதாவின் கடிதம் எனது கைகளை வந்தடைந்தபோது உண்மையில் அவள் இறந்து ஏறத்தாழ ஒருநாளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். குப்பியிலிருந்த நாற்பத்திரண்டு தூக்கமாத்திரைகளில் 26ஆவதை விழுங்கிக்கொண்டிருந்தபோது அவளது தங்கையால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். 26 என்ற இலக்கம் அவளுக்கு எப்போதும் ஆகாது. தற்கொலைக்கு முயற்சி செய்வதன் முன் ஒரு கடிதத்தை எழுதி எனது அலுவலக முகவரிக்கு அஞ்சலில் அனுப்பியிருந்தாள். அவளுக்கும் எனக்குமிடையில் மின்னஞ்சல் தொடர்பு இருந்தபோதிலும், தனது தற்கொலை முயற்சிக்கு நான் தடையாகிவிடுவேனோ என்ற காரணத்தினால் அவள் அதை சாதாரண அஞ்சலில் அனுப்பியிருந்தாள். செய்தி அறிந்து நான் அவளைப் பார்க்க ஓடியபோது வாசித்து முடிக்கப்பட்ட கடிதம் பத்திரமாக எனது கைப்பைக்குள் இருந்தது. மயங்கிச் சரிந்திருந்த அவளது கை நரம்புகள் வழியாக குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. துவண்டு வெளிறிக் கிடந்த இடது கையைப் பற்றியபடி, கட்டிலின் பக்கத்திலமர்ந்து அவளது கடிதத்தை மீண்டும் வாசிக்கவாரம்பித்தேன். அப்போது வினோதாவின் தாயும் தங்கையும் குரூரமான இருபத்துநான்கு மணிநேரங்களின் பின் கிடைத்த இடைவெளியில் குளிக்கவும் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளவுமென்று வீட்டிற்குப் போயிருந்தார்கள்.

எனதன்பு நித்திலா,

தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்தபோதுதான் இந்த உலகம் எத்தனை அழகியது என்பது நினைவிற்கு வருகிறது. இந்த அறையினை எட்டிப்பார்க்கும் ஆவலில் நீண்டிருக்கும் வேப்பங்கிளைகள் இத்தனை பச்சையாயிருந்து நான் பார்த்ததேயில்லை. இந்தக் கொளுத்தும் வெயிலில் மேய்ச்சல் முடித்து வீதி வழியாக ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைதளர்ந்த பெண்ணை மீறித் துள்ளியோடுகின்றன குட்டிகள். பின்மதியங்களிலும் குயில்கள் கூவும் ஓசையைச் செவிமடுக்க முடிகிறது. இத்தனை நிச்சலனமாய் ஒரு தற்கொலைக் குறிப்பை எழுதமுடியுமா என்று நினைக்கும்போது, ‘நான் சாக விரும்பவில்லையோ… என் பாரத்தைத் தற்காலிகமாக ஒரு காகிதத்தில் இறக்கிவைக்கிறேனோ’என்று எண்ணுகிறேன். நமது சிநேகிதன் முகிலனோடு வீணாகச் சண்டையிட்டேன். செத்துப்போவதென்று முடிவெடுத்த இந்தக் கணத்தில் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு ‘என்னை மன்னித்து விடடா’என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.

அம்மா பாவம்! என்னை அன்பு செய்ததன்றி ஏதுமறியாத என் தாய்க்கு நான் விட்டுச்செல்வது வழிந்து தீராத கண்ணீரையே! என்னைக் காரணமாகக் காட்டி அப்பா இன்னமும் அதிகமாகக் குடித்துச் சீரழிந்து போவார் என்றே எண்ணுகிறேன். தங்கச்சி… சின்னவள்… தனித்து, தவித்துப்போவாள். அவளுக்கு நான் தோழியாகவுமிருந்தேன் எனது உடைகளுள் முகம்புதைத்து சில நாட்கள் அவள் அழக்கூடும். நான் எத்தனை சுயநலவாதி@ நிறைவேறாத காதலின் பொருட்டு என் உறவுகளை கரையேற முடியாத துயரத்தில் தள்ளிவிட்டுச் செல்லும் நான் அப்பட்டமான சுயநலவாதி.

ஆனால் நித்திலா, இனியும் இந்த உலகத்தில் என்னால் உயிர்தரித்திருக்க முடியுமென்று தோன்றவில்லை. என்னுடைய அறிவும் தெளிவும் வாசிப்பும் சிரிப்பும் தோழமையும் கவிதையும் எல்லாமும் காதல் என்ற ஒற்றைச் சொல்லின் முன் அடிபட்டுப் போய்விட்டன. அதுவொரு வெள்ளம்போல வந்து என்னையே அடித்துச் செல்கிறது. நான் தோற்றுவிட்டேன் நித்திலா. ‘காதலுக்காக உயிரைக் கொடுப்பேன்’என்று சொன்னவர்களைப் பார்த்து உன்னோடு சேர்ந்து கேலி செய்தவள் நான்தான். ‘உயிரைக் கொடுப்பதாகச் சொல்பவர்கள் திருமணத்தின் பின் உயிரை எடுப்பார்கள்’என்று கெக்கலி கொட்டி நகைத்தது நான்தான்.

மௌலி எங்கள் குடும்பநண்பன் மட்டுமே என்று நீ கூட பலநாட்களாக நம்பியிருந்தாய். திருமணமாகியவன் என்று தெரிந்தும் நான் மௌலியைக் காதலித்தேன். நானும் அவனும் சுற்றாத இடமில்லை. அனுபவிக்காத சுகம் இல்லை. காதலின் கடைசிச்சொட்டு வரை மாந்தியும் தீராத தாகம் எங்களுடையது. கடைசியில் ஒருநாள் அவனது மனைவிக்கு எங்கள் உறவு தெரிந்துபோனதும், கொதித்துக் குமுறியதும் வெளியில் மெல்லக் கசிந்தது. உனக்கும் அது தெரியும். ஆனால், நீ ஒரு வார்த்தைகூட என்னிடத்தில் அதைக்குறித்துக் கேட்கவில்லை. நீ எப்பொழுதும் அனுமதி கொடுத்தாலன்றி அடுத்தவர் அந்தரங்கத்தினுள் பிரவேசிக்க விரும்பாதவள். அவள் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய்வீட்டுக்குப் போய்விடப் போவதாக மௌலியோடு சண்டையிட்டாள். மௌலி தன் குழந்தை மீது அளவிறந்த அன்பு வைத்திருந்தான். ‘அவள் என் கண்முன் வளரும் அபிராமி’என்பான். அதுவும் அவனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு பிறந்ததேபோல அப்படி அவனோடு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனைப் பார்க்காமல் அவனால் ஒருநாள்கூட இருக்கமுடியாது. ஈற்றில் நான்தான் பலியுயிர் ஆனேன் நித்திலா.

அவன் என் கண்களைப் பார்த்துச் சொன்னான் ‘வினோதா! என்னை மறந்துவிடு’. நான் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தேன். திரைப்படப் பாடல்களிலும் வசனங்களிலும் எழுதப்படுபவற்றில் சில உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அந்தக் கணம் எனக்கொரு யுகமாக நீண்டது. வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டேன். கண்ணாடியைப் பார்த்து காறியுமிழ்ந்தேன். ஒரு கோழையைக் காதலித்த குற்றவாளிக்கு எத்தகைய தண்டனை கொடுத்தாலும் தகும் இல்லையா நித்திலா? அவனை மறந்து வாழ்வதொன்றும் சிரமமாக இருக்காதென்று எனக்குள் கிளர்ந்த வன்மம் சொன்னது. வீட்டில் வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தேன். உன்னிடம் புத்தகங்களை இரவல் வாங்கிவந்து வாசித்தேன். அக்காவின் பிள்ளைகளோடு விளையாடினேன். நிறைய எழுதினேன். நடுநிசியில் எழுந்திருந்து இருளை ஊடறுத்து மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருந்தேன். கெட்டித்துக் கிடந்த எனது துக்கத்தை கண்ணீராகக் கரைத்து வெளியேற்ற முயன்றேன். இழந்த காதலுக்கு நீ எதை ஒப்பிடுவாய் நித்திலா? முள்… நெருப்பு… போர்க்களம்… பசி… வஞ்சகம்… நஞ்சு…. கொடுவாள்…?

யாரோ ஒரு கவிஞன் சொன்னதுபோல ‘பூமியில் காலினை உதைத்து உந்தி வாழவே விளைந்தேன்’. ஆனால், முடியவில்லையடி! அவன் சுகித்த உடல்… முத்தமிட்ட உதடுகள்… கோதிய கூந்தல் சுருள்… புதைந்த கழுத்து…. மண்டியிட்டுத் தலைபுதைத்த என் மடி… என் பாதங்களில் முகம்புதைத்துச் சிந்திய கண்ணீர்… எழுதிய மடல்கள்… உருகிய இணைய அரட்டைகள்… அனுப்பிய குறுஞ்செய்திகள்…

கண்ணாடியைப் பார்க்குந்தோறும் அதில் அவனைத்தான் கண்டேன். ‘என் வாழ்வில் ஏனடா வந்தாய்?’என்று விம்மி வெடித்து அழுதேன். நீ கூட பொறுக்கமாட்டாமல் ஒருநாள் கேட்டாய்… ‘எத்தனை காலந்தான் இப்படி இருப்பாய்?’என்று. ‘நான் சாதாரணமாகத்தானே இருக்கிறேன்?’என்று எதிர்க்கேள்வி கேட்டேன். காதல் என்பது எனது தனிப்பட்ட துயரம். அதை உன்னைப்போன்ற நெருங்கிய தோழியிடம்கூடப் பகிர்ந்துகொள்ளுமளவு எனக்குத் துணிச்சலில்லை. அதிலும் நான் இன்னொருத்தியின் கணவனைக் காதலித்தேன். அவனைக் கலவினேன். அவனது உதடுகளின் வழியாக உயிரை உறிஞ்சி நானும் அவனும் ஓருயிராகக் கலந்துவிட முடியாதா என்று அவாவினேன். சாதாரணமாக ஒருத்தி ஒருவனைக் காதலித்தாலே புருவம் உயர்த்தி வெறிக்கும்-வெறுக்கும் உலகம் இது… திருமணமான ஒருவனுடன் நான் கொண்ட காதலுக்கு ‘கள்ளக்காதல்’ என்ற அழகான பெயரை இந்தச் சமூகம் சூட்டிவிட்டது. கள்ளமில்லாத காதல் ஒன்று இருக்கிறதா? மேலும், காதலில் கள்ளக்காதல் என்று ஒன்று தனியாக இருக்கிறதா என்ன?

கண்ணீரில் ஓராண்டு கழிந்தது. கடந்த வாரம் அவனைப் பேரங்காடியொன்றில் சந்தித்தேன். இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். கண்களில் தூக்கமின்மையும் துயரமும் அப்பிக்கிடந்தன. “எப்படிப் போனாய் என்னைவிட்டு?” என் கண்கள் நதியாகின. பொது இடம் என்பது என் நினைவிலிருந்து மறைந்தது. நாம் கண்ணீரால் செய்யப்பட்டவளானேன். இத்தனை கண்ணீர் என் உடலுக்குள் இருந்ததுவா? இரத்தமெல்லாம் கண்ணீராய் வடிகிறதா? கைகளும் கால்களும் நடுங்கின. உள்ளம் பதறியது.

“நான் உன்னைவிட்டு எப்படிப் போவேன்… ஞாபக வடிவில் நீ என்னோடுதான் இருக்கிறாய். நீயும் நானும் பழகிய விடயம் அறிந்ததிலிருந்து அவள் என்னைக் கைதியாக்கிவிட்டாள். முற்றத்தில் இலை அசைந்தாலும் சந்தேகப்படுகிறாள். நான் நண்பர்களோடு கூட தனியாகப் பேசமுடியாது. தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் அவள் பார்வையால் வடிகட்டப்பட்டபின்னரே என்னிடம் வருகின்றன. கொஞ்சம் அயர்ந்துபோய் இருந்தாலும் ‘அவள் நினைவா?’என்று குத்திப் பேசுகிறாள். விவாகரத்து, தற்கொலை என்ற விளிம்புகளுக்கெல்லாம் சென்று வந்துவிட்டாள். அந்த நாட்களின் பயங்கரம் என்னை அச்சுறுத்துகிறது. என் குழந்தை… அவளுக்காக இன்னமும் இந்த உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன். நான் நடைபிணமாகிவிட்டேன். வேலை… என் வீடு… என் குழந்தை… இதைத் தவிர்த்து வேறு உலகமில்லை”

நித்திலா! வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து கலங்கிய அவன் கண்களையே நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அத்தனை சோகத்திலும் அவன் அழகாக இருந்தான். அவனது நீண்ட கண்களை அந்நேரம் நான் முத்தமிட விரும்பினேன். அவனுள் கரைந்துபோகலாகாதா என்று வெறியேறிற்று. நானும் அவனும் இனி வாழ்நாளில் சேரவே முடியாது. ஒரு பெண்ணைக் கலங்கடித்து அவள் கணவனைப் பிடுங்கிக்கொள்ளவும் முடியாது. என்னால் அவனை மறந்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்து வாழவும் முடியாது. நான் என்ன செய்வேன் நித்திலா! அன்பு அடுத்தவள் கணவன் என்று பார்த்துக்கொண்டா வருகிறது?

அவன் என் உயிர். ஆத்மாவினுள் தளதளக்கும் கண்ணீர். எனது சொர்க்கமும் நரகமும் அவன்தான். அவனது மார்புக்குள் ஒடுங்க ஏங்கும் சிறுபறவை நான். இந்த உடலின் சுகங்களெல்லாம் அவன் அறியக்கொடுத்தவைதான். என் மனதின் நாதங்களெல்லாம் அவனால் மீட்டப்பட்டவைதான். அவன் என்றென்றைக்குமாக எனக்கு இல்லை என்றானபிறகு இந்த உலகம் ஒளியிழந்து போயிற்று. எனது நாட்களின் மீது துயரத்தின் நிழல் நிரந்தரமாகப் படிந்துவிட்டது. இதை எழுதும்போது, நெஞ்சுக்குழிக்குள் கண்ணீர் திரள்வதையும் அது கண்கள் வழியாகப் பீறிட்டுக் கிளம்புவதையும் உன்னால் உணரமுடிகிறது அல்லவா?

நான் எனது துயரங்களிலிருந்து மரணம் வழியாகத் தப்பிச்செல்ல முடிவெடுத்துவிட்டேன்.

எனது மரணம் யாருமறியாத இரகசியமாக முடிந்துபோவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. என் வயதான பெற்றோரையும் விபரமறியாத தங்கையையும் உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். வாழ்வதற்கு அவர்களிடத்தில் வசதி உண்டு. வாஞ்சை செலுத்த நான்தான் இருக்கமாட்டேன். எனக்குப் பதிலாக இல்லாவிட்டாலும் இதமாகவாவது நீ இருப்பாய்.

இந்த உலகில் எல்லோரும் கண்ணகிக்காகத்தானே இரங்குகிறார்கள் நித்திலா? கண்ணகியின் கணவன் என்ற சலுகையில் கோவலனையும் மன்னித்துவிட்டார்கள். எனக்கென்றால் மாதவியைத்தான் எப்போதும் பிடிக்கிறது. அவள் நான்தான். சகல குணங்களோடும் அவள் நானேதான்.

அன்பு முத்தங்களுடன்
வினோதா
--

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ வினோதா உயிர்தப்பிவிட்டாள். ஏறத்தாழ ஒருவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து குணமடைந்தபின் வீட்டிற்குத் திரும்பிவந்தாள். வெயில் மயங்கிச் சரிவதைப் பார்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்த ஒரு மாலையில் அவளைக் கேட்டேன்.

“குழந்தையையும் மனைவியையும் உனக்காக விட்டுவிட்டு வரமுடியாதபடிக்குத்தானே அவனது காதல் இருந்தது…? அவனுக்காகப் போய் தற்கொலை செய்துகொள்ள முயன்றாயே…”

அவள் என் கண்களுக்குள் ஆழமாக ஊருவும் பார்வையொன்றை எறிந்தாள். பிறகு தொடுவானம் கடலுடன் இணையும் புள்ளியில் கண்களைப் பதித்திருந்தாள். பிறகு சொன்னாள்:

“அவன் என்னோடு சேரமுடியாமற் போனதைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், அவன் என்னைச் சந்தேகித்தான். அவன் என்னைப் பிரிந்தபிறகும் நான் அவனுடைய உடமையாக, சந்நியாசினியைப் போல வாழ்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். அந்தச் சந்தேகத்தைத் தாளமாட்டாமல்தான் தற்கொலைக்கு முயன்றேன். அது ஒரு கணத்தின் தடுமாற்றம்.”

“ஏன் எனக்கு அப்படி ஒரு கடிதம் எழுதினாய் வினோதா?”

“காதல் ஒருபோதும் தன் இணையைக் காட்டிக்கொடுப்பதில்லை. இல்லாமல் போகப் போகிறவள் இருப்பவனை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்? அவனை யாரும் குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது. அந்தக் கடைசிக் கணங்களில் எனக்கு யாருடனாவது பேசவேண்டும் போலிருந்தது. உன்னோடு பேசினேன்.”

நான் அவளை வியப்போடு பார்த்தேன். காதலை நான் எப்படியெல்லாம் பரிகசித்தேன். எள்ளி நகையாடினேன். ஒருவேளை அது அப்படியில்லையோ…? காதல் என்பது கழுத்து மாலையா? காலன் ஓலையா? அமுதமா? விஷமா? உடலின் அழைப்பா? உயிரின் தகிப்பா?

இரண்டு ஆண்டுகளின் பின் வினோதா திருமணமாகி கனடாவுக்குக் குடிபெயர்ந்தாள்.

என்னால் கடைசிவரையில் என் தோழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை! நீங்கள் நினைப்பது சரி. எல்லோரையும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவசியமென்ன இருக்கிறது?

6.26.2009

‘பிரபாகரன்’ என்ற பெயர் காலச்சரிவில் புதையுறும் ஞாபகமா?



“ஒருவகையில் போராளியின் வாழ்வே ஒரு அழகிய கனவைப் போன்றது எனக் கூறலாம். கனவிலிருந்து விழித்தெழுதல் என்பது விடுதலை அடைவதுதான்”- மஹ்மூத் தார்வீஷ்

கண்கள் இரு நதிகளாய் பெருக்கெடுத்த பிரிவுகளை, இந்தக் கணமே பூமி பிளந்து நம்மை விழுங்கிவிடலாகாதா என்று உயிரை வெறுத்த கணங்களை, ‘இது பொய்… இது பொய்’என்;று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு பதறிக்கடந்த மரணங்களை காலம்தான் மறக்கடித்தது. அவ்வகையில் காலத்தை வணங்குதல் செய்வோம். ஆனால், காலத்தைச் செழுமைசெய்த மாமனிதர்களையும் அவர்தம் மகோன்னதக் கனவுகளையும் அந்தக் காலமே மறக்கடிக்குமெனில், காலத்தை வணங்கிய கைகளைக் கீழிறக்குவோம்.

‘பிரபாகரன்’என்ற பெயரில் ஒரு வசீகரம் இருந்தது. அந்த மந்திரச்சொல் உலகெங்கிலும் வாழ்ந்த கோடிக்கணக்கானவர்களை இயக்கியது. அவரைக் கண்ணால் காண்பதொன்றே இப்பிறப்பின் பெரும்பேறு என்று கருதிய மனிதர்களும் இருந்தார்கள். அவரை நினைக்குந்தோறும் பெருமிதமும் வீரமும் நன்றியுணர்ச்சியும் நெகிழ்வும் பரிவும் பரவசமும் புளகாங்கிதமும் புத்துணர்வும் பொங்கிவழியத் தூண்டும் அபரிமித ஆற்றல் பொருந்தியவராக அவர் விளங்கினார். பல்கலைக்கழகத்தில் எனக்கு வரலாற்றுப் பாடம் எடுத்த ஒரு பேராசிரியர் சொல்வார்: “நான் எவ்வளவோ கதைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் செல்வேன். ஆனால், அவரது கண்களைப் பார்த்ததும் எனக்கு எல்லாம் மறந்துபோய்விடும். பிரபாகரன் சொல்வதற்கு மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிக்கொண்டு அவர் முன் அமர்ந்திருப்பேன். அந்தக் கண்களின் ஈர்ப்பின் முன்னால், வார்த்தைகளிலுள்ள சத்தியத்தின் முன்னால், பேரறிவோடு கூடிய ஆளுமைக்கு முன்னால் என்னை மறந்து நான் கட்டுண்டு இருப்பேன்”. இப்படிச் சொன்னவர் சாதாரண மனிதரல்ல. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர். பின்னாளில் தமிழீழத்தின் அறிவுஜீவிகளில், விரல்விட்டு எண்ணத்தகுந்தவர்களில் ஒருவராகவும் சிறந்த அரசியல் ஆய்வாளராகவும் அறியப்பட்டார். சில காரணங்களால் அவரது பெயரை இங்கு குறிப்பிட முடியவில்லை. ஆளுமையின் மறுபெயர்தான் பிரபாகரன். மற்றுமொரு நண்பர் சொல்வார்: “சக மனிதர்களின் கால்களில் விழும் கேடுகெட்ட இழிசெயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஒருவர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு; அவர் எங்கள் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”

1987ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதையடுத்து, புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்காக முன்வந்தனர். அப்போது சுதுமலையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளுக்குள் ஆற்றாமைபொங்க உரையொன்றை ஆற்றினார். அதைக் கேட்கவும் அவரைப் பார்க்கவுமென குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நான்கு இலட்சம் மக்கள் திரண்டுவந்தனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. லொறிகளிலும் பேருந்துகளிலும் கார்களிலும் கால்நடையுமாக சாரிசாரியாக எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து சேர்ந்தனர். கூட்டம் நடைபெறுவதற்கு சற்று தள்ளியே வாகனங்கள் நிறுத்தப்பட நாங்கள் நெருக்கியடித்துக்கொண்டு நடந்துபோனோம். ஒருவர் மீது மற்றவர் படாமல் நடக்கவே முடியாது. மரங்கள் மீதும் வீட்டின் கூரைகள் மீதும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் அமர்ந்திருந்தனர். அன்றைக்கு அந்தக் கூட்டத்தை அங்கு இழுத்துவந்தது ‘பிரபாகரன்’என்ற பெயர்தான். அவர் என்னதான் பேசப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல்தான்.

குரல் தளுதளுக்க கண்கள் பளபளக்க அவர் பெயரை நெஞ்சுகொள்ளாத பரிவோடு உச்சரித்த இலட்சக்கணக்கான மக்கள் இன்றைக்கு மனமிடிந்து கிடக்கிறார்கள். எவருடைய வாழ்வும் வரலாறும் தன்னைப் போராட்டத்தை நோக்கிச் செலுத்தியதென்றும், தூண்டியதென்றும் பிரபாகரன் சொன்னாரோ- அந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் போலவே அவருடைய ‘மறைவும்’அமைந்துபோன அதிசயத்தை என்னவென்பது?

‘பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா?’என்பதுதான் தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. இருக்கிறார் என்றால் எப்போது தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்? இல்லையென்றால், இனி நம் கதி என்ன? சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் கால்களை நக்கிப் பிழைக்கும் அடிமை நாய்களாக வாழ்ந்திருப்பது (அன்றேல் செத்துக்கிடப்பது) எத்தனை காலம்? ‘தமிழர்களுக்கான தீர்வுகள்’ என்ற பெயரில் ராஜபக்ஷே அரசால் அவிழ்க்கப்படவிருக்கும் ஊசிப்போய் முடைநாற்றமெடுக்கும் பொதிகளில் அணைந்துவிடுமா தாயகத்திற்கான தாகமும் பசியும்?

இப்போது சில இணையத்தளங்களின் தொனியே மாறிவிட்டது. ‘கடைசியில் போர் முடிந்துபோய்விட்டது. செத்தவர்கள் பட்டியலில் எங்களவர் பெயர் இல்லை. அந்தளவில் தப்பிவிட்டோம்’என்ற நிம்மதி அற்பத்தனமாக இருக்கிறது. அத்தோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறைபாடுகளைப் பட்டியலிட்டுத் தம்மை நடுநிலையாளராகத் தோற்றம் காட்டும் புதிய கலாச்சாரம் ஆரம்பித்திருக்கிறது. இதே குரலில், இதைவிடக் காட்டத்தோடும் காழ்ப்புணர்ச்சியோடும் முன்னரும் பல இணையத்தளங்கள் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன என்பது உண்மைதான். அவர்களுக்கு ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் தேவை, நோக்கம், பின்னணி இருந்தது. ஆனால், இதுநாள்வரை போராட்டத்தின் பக்கம் நின்று பேசியவர்களிற் சிலர், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை அடுத்து தங்கள் தொனியை மாற்றிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‘கண்டால் கட்டாடி… காணாட்டில் வண்ணான்’என்று ஊர்களில் சொல்வது ஏனோ நினைவுக்கு வந்துதொலைக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் விமர்சனங்களை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அதற்கிணங்க செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆயுதப்போராட்டத்தில் அவர்களுக்கு இருந்த கவனம் அரசியல் சிந்தனைகளைக் கட்டியெழுப்புவதில் இருக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனாலும் அவர்கள் அர்ப்பணிப்போடு போராடினார்கள். களமாடிக் கல்லறைகளுள் விழிமூடி உறைந்தார்கள். விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள் ஒருபுறமிருக்க, போர்விதிகளைச் சற்றும் கவனத்திற்கெடுக்காத வல்லாதிக்கக் கரங்களின் கூட்டிணைவையே போராட்டத்தின் தோல்விக்கான முதன்மைக் காரணியாகக் கொள்ளவேண்டும்.

இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்தை பிடரியில் பின்னங்கால் பட விரட்டியடித்திருந்தால் நாம் எப்படிப் பெருமிதத்தோடு பேசிக்கொண்டிருந்திருப்போம்! யாழ் குடாநாட்டின் நுழைவாயிலில் தொண்டை முள்ளாகக் கிடந்த ஆனையிறவு இராணுவத்தளம் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது களிகூர்ந்து கொண்டாடிய அந்நாள் நினைவில் வருகிறதா? தோற்றவர்களைக் கைவிட்டுவிடுவதை எந்தத் தார்மீகத்திலும் சேர்க்க முடியாது. நமது மனந்தான் எத்தனை கசடுகளோடிருக்கிறது? அன்றாட வாழ்வில் அணுவளவு திசைமாற்றத்தை ஏற்படுத்தும் எதையும் நம்மால் சகிக்கமுடியாதிருக்கிறது. அது உன்னதங்களாயிருந்தாலும் அவற்றை உதறிவிட்டு சுயநலச் சேற்றுள் உழலும் பன்றிகளாயிருக்கவே பிரியப்படுகிறோம்.

நாங்கள் சாதாரணர்களிலும் சாதாரணர்களாயிருந்தோம். அதிமானுடர்களை குறித்து புராணங்களிலும் இதிகாசங்களிலும் படித்து, அவர்களை உதாரணங் காட்டிப் பேசுகிறவர்களாகத்தான் வாழ்ந்திருந்தோம் அந்நாளில். ‘அல்பேனியன்’என்ற வார்த்தை நமக்கு எவ்வளவு அந்நியமாய் ஒலிக்கிறதோ, அவ்வளவுக்கு ‘தமிழன்’என்ற வார்த்தைக்கு உலகப் பரப்பில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது. பெருங்காயம் வைத்த பாண்டமாக அல்லாது, பழம்பெருமையாக அல்லாது, ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய…’என்ற உப்புச்சப்பில்லாத- பொய்ப்பெருமிதமாக அல்லாது, உண்மையிலும் உண்மையாக தமிழன் என்ற இனத்தை உலகறியச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனுந்தான்!

தியாகம், அர்ப்பணிப்பு, தற்கொடை, மனிதநேயம் இன்னோரன்ன அகராதியிலுள்ள சொற்கள் உயிர்பெற்று உலவுவதை நாம் அனைத்துப் போராளிகளிலும் கண்டிருந்தோம். தமிழகத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அடிக்கடி சொல்வார்: “ஈழத்தமிழர்களாகிய உங்களுக்குள் ஒரு உண்மை இருக்கிறது. நெருப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் உங்கள் வாழ்க்கையே அநீதிக்கெதிரான போராட்டமாக இருந்ததுதான். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மனம் பண்பட்டிருக்கிறது. இழப்புகள் உங்களை ஆத்மார்த்தமாக செழுமைப்படுத்தியிருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்நாளில் எந்தப் போராட்டங்களையும் சந்தித்ததில்லை. திரைப்படங்களில் வரும் அட்டைக் கத்தி வீரர்களைப் போன்றவர்கள் நாங்கள். அதனால்தான் இத்தனை ஊழலையும் இலஞ்சத்தையும் அரசியல் பொய்மைகளையும் எங்களால் சகித்துக்கொண்டு அசிரத்தையாக வாழமுடிகிறது.”

அவருடைய வார்த்தைகள் எந்தளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. அவர் விதந்தோதும் தன்மைக்கு விதிவிலக்காக எங்கள் மண்ணில்தான் காக்கைவன்னியனும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும் பிள்ளையானும் பிறந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஓரளவிற்கேனும் இந்த உலகில் மனிதர்களாகத் தலைநிமிர்ந்து வாழ்ந்திருந்தோம்.

எங்கள் தலைநிமிர்வுக்கும் பெருமிதத்திற்கும் நம்பிக்கைக்கும் காரணமான எங்கள் தலைவர் இன்று ‘மறைந்து’விட்டார். மழையில் கரைந்த ஓவியமாக… பனியில் மறைந்த தொலைவிலக்காக… பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்.

மகத்தான அந்த மனிதனை, மகோன்னதமான ஆளுமையை, கிறுக்கல்கள் மத்தியில் ‘காலப்பதிவாக’வாழ்ந்தவரை நாங்கள் மறந்துகொண்டிருக்கிறோமா நண்பர்களே? அவ்விதம் காலம் அவரது ஞாபகங்களை நம்மிலிருந்து கழித்துவிடுமானால் நாம் சக்கையாகத்தான் எஞ்சுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.

6.25.2009

நான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்!

அன்புள்ள ராஜன்,

இப்போதெல்லாம் ஓரிடத்தில் தரிக்கவே முடிவதில்லை. செயலற்று ஒரு கணம்கூட அமரவும் முடிவதில்லை. எழுத்து, வாசிப்பு, சமையல், துப்பரவு, பாட்டு, பயணம், தொலைபேசி… எதிலாவது பொருத்திக்கொள்ளாமல் சும்மா அமர்ந்திருந்து யோசிப்பது குறைந்துபோய்விட்டது. எங்காவது எதற்காவது ஓடிக்கொண்டேயிருக்கும்படியாக ஒரு பிசாசு உள்நின்று என்னை விரட்டிக்கொண்டேயிருக்கிறது. ஏதோ மன அவசம், இன்னதென்று புரியாத துயரம். இல்லை… அது எனக்குப் புரிந்துதான் இருக்கிறது. எங்களுக்கு உரிமையுள்ள சாலைகளை இழந்து நாடோடிகளாக அலைவதைப் போன்ற துயரம் என்ன இருக்கிறது? இன்று பகல் வான்வழியாக மதுரையை வந்தடைந்தேன். ஊர்சுற்ற எனக்கு மட்டும் எப்படியோ காரணங்கள் கிடைத்துவிடுகின்றன. இம்முறை இலக்கியக் கூட்டம் என்றொரு சிறப்புக் காரணம்.

மேகக் கூட்டங்களுக்கிடையே வீட்டையும் தூக்கிக்கொண்டு பறந்துவந்தேன். எனது அறை விளக்குகள் எல்லாவற்றையும் ஞாபகமாக அணைத்தேனா என்று யோசித்தேன். பின்வாசல் கம்பிக்கதவை நினைவாகப் பூட்டினேன். மொட்டைமாடியில் காயப் போட்டிருந்த உடைகளை எடுத்துவைக்க மறந்துபோனது நினைவில் வந்தது. மின்சாரக் கட்டணத்திற்கு, இணையத்தொடர்புக்கு, பேருந்துக் கட்டணத்திற்கு பணம் கொடுத்தாயிற்று. பிள்ளைகளுக்கு சாப்பிட இடம் ஒழுங்குசெய்தாயிற்று. இரண்டு மணியானால் எங்கள் வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் தெருநாய்களுக்குக்கூட சாப்பாட்டிற்கு ஒழுங்குசெய்துவிட்டே கிளம்பிவந்தேன்.

ஆனாலும் வீடு என்னோடு வருகிறது. எத்தனை பாரம் அது! அது சீமெந்தும் கல்லும் கம்பியும் மரமும் மட்டுமல்ல; பெண்கள் அளவில் அதுவொரு ஆடை, செருப்பு, கைப்பை. வீட்டைப் பத்திரப்படுத்தாமல் தெருவில் இறங்கமுடியாது.

விதிவிலக்காக, திருமணத்திற்குப் பிறகு சிறகுகள் முளைத்த பறவை நான். கணவனே ஆத்மார்த்த தோழனாக அமைவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் என் வார்த்தைகளில் ஏதோ இடறுகிறது. “கணவன் சிநேகிதனாக இருப்பது அவனுடைய கடமை; அது நான் உங்களுக்கு அளிக்கும் சலுகை அல்ல” என்பீர்கள். உள்ளுர பெருமிதந்தான். அவ்வாறு துணை கிடைக்காத பெண்களுக்காக நான் இரங்குகிறேன் ராஜன். காலில் ஈயக்குண்டாக எந்த உறவுமில்லை என்றபோதிலும், ஏன் இத்தனை குற்றவுணர்ச்சி? ஒருவேளை நான் ‘பெண்ணாக’வளர்க்கப்பட்டதாலா? பெண் எனும் ஞாபகம் கண்ணுக்குத் தெரியாத கால்விலங்காக கனத்துக் கிடப்பதிலிருந்து என்னை எப்போது விடுவித்துக் கொள்ளப்போகிறேன் என்று தெரியவில்லை. பயணங்களின்போது என்றில்லை; சமையலறை வெக்கையிலிருந்து தப்பிப்பதற்காக- அலுத்துச் சலித்த உணவுப் பட்டியலிலிருந்து ஒரு மாறுதலுக்காக உணவகத்திற்குச் செல்லும் நாட்களில் ஒரு குற்றவாளியைப் போலவே உணர்கிறேன். ‘இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?’என்று அன்றைக்கு யாராவது கேட்டுவிட்டால், நான் பொய்சொல்லத் தலைப்படுகிறேன். அறைகளுள் பொருட்கள் சிதறிக்கிடந்தால் ஏன் அத்தனை பதட்டமடைகிறேன் என்பது எனக்குப் புரியத்தானில்லை. அழுக்கடைந்த ஆடைகளை எனது மூளைக்குள் திணிப்பது யார்? கழுவப்படாத பாத்திரங்கள் ஏன் என்னைத் தொந்தரவு செய்கின்றன? அந்த 32 கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, ‘எனக்கு வைன் பிடிக்கும்’என்று சொல்லமுடியாமல் செய்த ‘ஒழுங்கான பெண்ணை’நான் ஒருநாளைக்குக் கொல்வேன் ராஜன்.

ஒழுங்கின் அரசியல் குரூரமானது. அது கையில் சாட்டையோடு வீடு முழுவதும் அலைகிறது. வெளியிலும் என்னைத் (எங்களை-பெண்களை) தொடர்கிறது.

‘நீங்கள் என்னை இப்படி வளர்த்திருக்கக்கூடாது’என்று சின்ன வயதில் அம்மாவை மனசுக்குள் கோபித்த பட்டியல் நீளமானது. ஆனால், இப்போது நினைக்கிறேன் “அம்மா! நீங்கள் என்னைப் போலல்லாது மூன்று வேளை சமைத்தீர்கள். இரவு எத்தனை மணியானாலும் அப்பாவுக்காகக் காத்திருந்து அவர் வந்தபிறகே சாப்பிட்டீர்கள். கோழிக்கறி வைக்கும் அன்று நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை (மிஞ்சியிருந்தால்) மட்டுமே நீங்கள் சாப்பிட்டீர்கள். போதையில் அப்பா அடித்தாலும், திருப்பி ஒரு சொல்லும் பேசாதிருந்தீர்கள். ஊரைவிட்டுத் தனியாக எங்கும் போயறியாத பெண் நீங்கள். நான் நாடுவிட்டு வந்து எங்கெங்கோ அலைந்து, எங்கோ ஒரு நகரத்தின் விடுதியறையினுள் தனியாக அமர்ந்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

ராஜன், எனது பிரார்த்தனை எல்லாம், எங்கள் பிள்ளைகளின் (பையன்களின்) மனைவிகளாவது பயணங்களின்போது வீடுகளைத் தூக்கிச் செல்லக்கூடாதென்பதுதான்.

கல்யாணி

6.24.2009

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மெளனமாயிருந்தாள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்
படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
கடல் ஒரு
நீர்க்கல்லறை என்பதன்றி.

கழிப்பறை வரிசை...
கல் அரிசி...
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?


என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொரு நாளில்
பூர்வீக வீட்டைப் பிரிய மறுத்து
போருள் தங்கிவிட்ட
என் தாய்முன் இளகலாம்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்.

"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"


---

தேவ வசனம்


தனிமைத் தாழியுள்
தன்னைக் கிடத்தியவளைப் பார்த்துவரப் போனேன்
அவள் கண்ணிலிருந்து
சுண்டியெறிந்த துளி
பல்திவலைகளாகப் பெருக
வீட்டினுள்ளே மூழ்கிக்கொண்டிருந்தாள்.

வெளியே அழைத்துப்போனேன்
மஞ்சள் பூவலைவுறும் வெளிகளில்
இல்லாத பட்டாம்பூச்சிகளை
குசலம் கேட்டாள்.
காலம் கால் நழுவும் கோயில்களில்
தானுமோர் கல்லென
இறுகிச் சொன்னாள்.
மதுச்சாலையொன்றில் ஒலித்த
ஒற்றை சாக்சபோன் இசையை
நிறுத்தும்படி பரிசாரகரிடம்
பணிந்து கேட்டாள்.

வெயில் கருக்கும் கூடல்மாநகரை
'நினைவின் மது'என்கிறாள்
'வின்கானிஸ்'உபயத்தில்
யன்னல்கள் பெயர்ந்து திரியும் இவ்விரவில்
மணிக்கூண்டில் ஒரு மணி அடித்து
பைபிள் ஒலிக்கிறது
'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை'
எழுந்தமர்ந்து சிலுவைக்குறியிட்டு
'நெகிழும்படியான தேவவசனங்களை
சந்தர்ப்பத்திற்கேற்றபடி எதிரொலிக்கிறவர்களை
செருப்பாலடியும் என் தேவனே!'என்றவள்
தன் தனிமைத் தாழியுள்
இறங்கி மரிக்கிறாள்.


'வின்கானிஸ்'-ஒருவகை வைன்

----

திரும்பவியலாத வீடுகள்

மிகுதொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
இல்லை...
கல்லாலாய கனவு
இருள்பச்சை நிற வாகனங்கள்
மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்வேலிகள்
இரும்புத்தொப்பிகளின் அடியில்
வெறியில் மினுக்கிடும் விழிகள்
இவை தாண்டி
கண்ணிக்குத் தப்பி
விதை பொறுக்கும் பறவையென வருகிறேன்.

குளிர்தரையினுள்ளே துடிக்குமோ
வீட்டின்
வெம்மைசூழ் இதயம்...!

உருக்கி ஊற்றிய தங்கமென
முற்றம் படரும் வெயிலை
கண்களுள் சேமிப்பேன்
கிணற்றின் ஆழ இருளினுள்
பளிச்சிடும் நாணயங்களை
ஓராண்டு செலவழிக்க
பொறுக்கிக் கொள்வேன்
ஓ கிளைகொள்ளாத லசந்தரா!
என் கனவினில் சொரிக சொரிக
நின் இளஞ்சிவப்பு மலர்கள்.

பூனைக்குட்டி
என் வாசனையைத் தொடராதே
தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டவளாயினேன்
பூட்டப்பட்ட என் அறையின் முன்னமர்ந்து
தீனமாய் அழைக்காதே என் செல்லமே!
அங்கில்லை நான்.

திரும்பவியலாத
யாரோ ஒருவர்
இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்
விழி பனிக்க.

----

பிதாமகனின் மீள்வருகை


இம்முறை பிதாமகன்
புத்தக அடுக்குப் பக்கம் வரவில்லை
மாமிசவாடை தூக்கலாக இருப்பதாக
சலித்துக்கொண்டார்.
அவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை
தம்பி பட்டத்திற்கு வாலென
எடுத்துப் போனபிறகு
அடுக்களைக்குள் வந்து தண்ணீர் கேட்டார்.
என் வீட்டுக் குழாயில்
கடல் வருவதில்லை என்றதற்கு
அஞ்சலோட்டத்தில் நான் பின்தங்கிவிட்டதாக
குறைப்பட்டார்.
வெறுங்கால்கள் = அடிடாய்ஸ்
என்ற சூத்திரம் எனக்குப் பிடிபடவில்லை
கைதட்டல்களின் ஓசையில்
தன்னால் உறங்கமுடிவதில்லை
என்றவரைக் குறித்து
தோழியிடம் கேட்டேன்
'ஓடுகளத்தில் அவரைக் கண்டதேயில்லை'என்றாள்.

---

ஒரே மாதிரி

காலையில் எழுந்ததும்
இந்தக் கண்ணாடியைத்தான் பார்க்கிறேன்
கண்ணில் ஒற்றும்
அம்மன் முகத்தில்
பன்னிரு வருசப் பழமைக் கருணை
நேரே நடந்து
இடதுபுறம் திரும்ப குளியலறை
தண்ணீர் நிறமற்றது
தேநீரில் துளி சுவை மாற்றமில்லை
பகல் கனவுகளின் நீட்சியாய்
துரோகமும் கோபமும்.
மாலை நடக்கப்போகும் தெருவில்
மிஞ்சி மிஞ்சிப் போனால்
ஒரு பூ அதிகமாகப் பூத்திருக்கலாம்
'பாப்பா'என்ற பைத்தியக்காரி
இன்றைக்கும் அதே சேலையோடும்
மாறாத வார்த்தைகளோடும்.

இரண்டாவது தலையணை
எப்போதும் நீள்வாட்டில்
டார்ச் லைட்
பாம்புக் கறுப்பாய் பழுப்பு மஞ்சளாய்
10.32 ஆகலாம் இன்று தூங்க
நாளை
இந்த மின்விசிறியில்தான்
தொங்குவேனாயிருக்கும்
அப்போதும் கால்கள்
ஒரே மாதிரியாகவா இருக்கும்?


---

குருதியினும் கனம் மது

நாங்கள் உங்களைப்போலவே வெளியேறினோம்
அன்றேல் வெளியேற்றப்பட்டோம்
பிரிவு கொடியது
எனினும் மரணத்திலும் மெலியது
நெஞ்சுக்கூட்டுக்குள்
குண்டுகள் சிதறும் அதிர்வுடன்
தேசங்களின் எல்லைகளைக் கடந்தோம்.

ஒரு நிந்தனையில்லை

செய்திகளாலும் மரணங்களாலும்
மட்டுமே அறியப்படும் நிலத்தை
காலப்புல் படர்ந்து மூடுகிறது.
மீட்சியிலா பனிச்சேற்றுள்
புதைந்தன எங்கள் பாதங்கள்.

இழித்தொரு சொல்லும் எழுதேன்

எது உனக்குத் திருப்திதரும்?
சமாதானப் பணியாளர்களின் வெளியேற்றம்?
ஆட்சியாளரின் கொடியேற்றம்?
போராளிகளின் பின்னடைவு?

வேலை சப்பித் துப்பிய
விடுமுறை நாட்களில்
சலித்த இசங்களையும்
அழகிய நாட்களையும்
பேசித் தீர்ந்த பொழுதில்
மதுவின் புளித்த வாசனையில்
மிதக்கவாரம்பிக்கிறது தாய்தேசம்.
ஊறுகாயிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
எதிர் அரசியல்.

வெள்ளை மாளிகையும்
மெளனம் கலைத்த இந்நாட்களில்
உன் மூளைச்சலவை
மிக நன்று.

பேசு!

அவன்...
விமானங்கள் சிதைத்துப்போன
தசைத்துணுக்குகளைப் பொறுக்குகிறான்
தலைகளையும் உடல்களையும்
சரிபார்த்துப் பொருத்துகிறான்
அவள்...
இடம்பெயர்ந்து
சேலைத்திரை மறைவில்
இறுதி இழுபறிபடும் கர்ப்பிணியின்
கைகளைப் பற்றியபடியிருக்கிறாள்
மேலும்
அவனும் அவளும்
எல்லைகளில் இறந்துபோகிறார்கள்
ஒரு புகைப்படமாய்...
தாயின் முகத்தில் கண்ணீர்த்துளியாய்...
தோழர்களின் விழிகளில் கோபமாய்...
துயரம் ததும்பும் ஞாபகமாய்...
உறைகிறான் உறைகிறாள்.

நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட!

-இந்தக் கவிதை தோழர் ஷோபா சக்திக்கும் போல்வார்க்கும் சமர்ப்பணம்:)


இம்மாதம் வெளிவந்த 'புது எழுத்து'சஞ்சிகையில் மேற்கண்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. அனைத்து அதிகாரங்களும் கைகோர்த்து எங்கள் கதையை முடித்துவைப்பதன் முன் எழுதப்பட்ட கவிதைகள்(?)இவை.

நன்றி:புது எழுத்து

6.23.2009

ஒரு கவிதைத் தொகுப்பின் நதிமூலம்

இருண்ட காலத்தில் பிறந்த ‘சூரியன் தனித்தலையும் பகல்’

தற்காலிக வாழிடமாக சென்னையை நான் தேர்ந்தது எவ்வளவு தற்செயலானதோ அவ்வளவு தற்செயலானதே எனது கவிதைத் தொகுப்பு வெளிவந்ததும் என்று சொல்லலாம். இங்கு வரும்போது தொகுப்பொன்றைக் கொண்டுவருவது குறித்த எண்ணமே எனக்கு இருக்கவில்லை. கையில் சில கவிதைகள் இருந்தன. ஆனால், அவை கவிதைகள்தானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. எனக்கான வடிவத்தைக் கண்டடையும் தேடலில் அதையும் இதையும் அப்படியும் இப்படியுமாக எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது கையிலிருந்த அநேக கவிதைகள் தனிமையின் குரலாகவே இருந்தன. புலம்பெயர் வாழ்வின் (கனடா) சிறப்புப்பண்பாகிய தனிமை என்னை எழுத்தை நோக்கிச் செலுத்தியது. அங்கே வாழ்ந்த காலத்தில் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக எனது ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. நான் ஒரு எழுத்தாளராக ஏனையோரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், எனது எழுத்தின் போதாமை எனக்குத் தெரிந்தே இருந்தது. நிறைய வாசிக்கவும் எழுதவும் விரும்பினேன். ஆனால், வேலை அங்கிங்கு அசையவிடாமல் என்னை நாற்காலியோடு கட்டிவைத்திருந்தது. படைப்பு மனத்திற்கும் அன்றாட வாழ்வின் இருப்புச் சிக்கலுக்கும் இடையில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில்தான் எனது தாய்மண்ணுக்குச் சென்று வாழவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அப்போது (2003) இலங்கையில் யுத்தநிறுத்தம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெயரளவிலேனும் சமாதானம் போல ஒன்று நிலவியது. 2003ஆம் ஆண்டு நவம்பரில் எண்ணற்ற கனவுகளோடு இலங்கைக்குத் திரும்பிச்சென்றேன். ஆனால், மீண்டும் தொடங்கிய போரினால் சென்னை எனது இடைத்தங்கல் முகாமாயிற்று. ஒரே மொழி, இனம், காலநிலை இவற்றோடு வாசிக்க நிறையப் புத்தகங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே என்னை உள்நின்று இயக்கியிருக்க வேண்டும்.

ஓராண்டு காலம் வாசிப்பில் கழிந்தபின், இணையத்தில் வலைப்பூவொன்றை ஆரம்பித்து அதில் எழுதவாரம்பித்தேன். இணையவெளி எல்லையற்றதாக விரிந்துகிடந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ‘நீங்கள் ஏன் கவிதைத் தொகுப்பொன்றைப் போடக்கூடாது?’என்ற நண்பர்களின் கேள்வியைக் குறித்து சிந்திக்கவாரம்பித்தேன். எனது பெயரைத் தாங்கிய ஒரு புத்தகம் என்பது இனிய கனவாகத்தான் இருந்தது. இயல்பிலேயே நிறைய மனக்கூச்சங்களை உடைய எனக்கு யாரை முதலில் அணுகுவதென்று தெரியவில்லை. நண்பர்கள் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களின் பெயர்களைப் பரிந்துரைத்தார்கள்.

உயிர்மை அலுவலகத்திற்குப் போய், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கவிதைகளைக் கையளித்துவிட்டு ஊருக்குக் கிளம்பிப்போய்விட்டேன். சில மாதங்களில் திரும்பி வந்து அதைப் பற்றிக் கேட்டேன். அவர் நிறைய வேலைகளோடிருந்தார். நேரில் சென்று பேசவும் மனம்வரவில்லை. பிறகு சென்னையிலுள்ள காலச்சுவடு அலுவலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கும் பாவனையில் போனேன். அன்றைக்கென்று அதன் ஆசிரியர் அரவிந்தன் அலுவலகத்தில் இல்லை. ‘சரி… நண்பர்கள் கூறியதற்காக முயற்சித்துப் பார்த்தாயிற்று…’ எனது பணி முடிந்ததென்று வழமையான எனது வேலைகளுக்குத் திரும்பிவிட்டேன்.

இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ‘வீரகேசரி’பத்திரிகைக்காரர்கள் கவிஞர் குட்டி ரேவதியை நேர்காணல் செய்து தரும்படி கேட்டிருந்தார்கள். அதற்கிணங்க அவரைச் சந்தித்தபோது, ‘பனிக்குடம்’என்ற பதிப்பகம் வாயிலாக பெண்ணிய சஞ்சிகையொன்றை வெளியிடுவதாகவும் புத்தகங்கள் பிரசுரிப்பதாகவும் கூறினார். நான் எனது கவிதைகளைப் பற்றிச் சொன்னேன். ‘அதற்கென்ன… வெளியிடலாமே…’என்றார் உடனே ஆர்வத்தோடு. கவிதைகளைக் காட்டியபோது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். பதிப்பாசிரியராக இருந்த திரு.வேணுகோபாலுடன் பேசினார். எனது இயல்பான சோம்பேறித்தனத்தினாலும் முன்செல்லும் பயத்தினாலும் அதைத் தள்ளிப்போடவே நினைத்தேன். ஆனால், அந்தத் தொகுப்பை வெளிக்கொண்டுவருவதற்கு கவிஞர் குட்டி ரேவதி மிகுந்த உற்சாகமும் உந்துதலும் தந்தார். புத்தகத்தில் இடம்பெறவேண்டிய எனது புகைப்படத்தையும் (அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர்) அவரே எடுத்தார். ஓவியர் கிருஷ்ணப்பிரியாவைத் தொடர்புகொண்டு அட்டைப்படத்தை வரைந்து வாங்கினார். எனக்குப் பிடித்த நீலநிறத்தில் அழகாக அமைந்திருந்தது அட்டைப்படம்.


பனிக்குடத்தின் இணையாசிரியர்களான கவிஞர் நந்தமிழ்நங்கை,மிதிலா, குட்டி ரேவதி, நான் ஆகிய நால்வரும் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சந்தித்து கவிதைகளை முன்பின்னாக ஒழுங்கமைத்தோம். மாற்றவேண்டிய இடங்களில் ஒரு சில சொற்களை மாற்றினோம். என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. ‘இருப்பற்று அலையும் துயர்’என்ற கவிதையில் வரும் ‘சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்’என்ற வரி தலைப்பாகப் பொருந்தி வருவதாக குட்டி ரேவதி சொன்னார். போர் நடக்கும் ஈழப்புலத்தில், இராணுவப் பிரசன்னத்திற்கு அஞ்சி, மக்கள் வீட்டுக்குள் முடங்கிய சூனியப் பகலில் சூரியன் மட்டும் தனித்து அலையும் காட்சி கண்முன் விரிந்தது. ‘சூரியன் தனித்தலையும் பகல்’என்ற தலைப்போடு தொகுப்பு என் கையில் கிடைத்த நாளை மறக்கமுடியாது. அதையொரு குழந்தையைப் போல நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதைத் தொடுவதானது குளிர்காலத்தில் கம்பளியின் கதகதப்பை ஒத்திருந்தது. கவிஞர் குட்டி ரேவதி வழங்கிய உற்சாகமேயன்றி அத்தொகுப்பு வெளிவர வேறெந்தச் சாத்தியங்களும் இருக்கவில்லை.

உதிரியாக கவிதைகள் பிரசுரமாகியபோது கிடைக்காத அறிமுகமும் அடையாளமும் அங்கீகாரமும் தொகுப்பாக வந்தபோது கிடைத்திருப்பதாக உணர்கிறேன். ‘சூரியன் தனித்தலையும் பகல் படித்தேன்’என்று யாராவது சொல்லக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி தரும் உந்துதலோடு தொடர்ந்து எழுதுகிறேன். உலகமெல்லாம் சிதறி வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போல, தாய்மண்ணுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அயலகத்தில் காத்திருக்கிறேன். எழுத்து என்னை உயிர்ப்போடிருக்கச் செய்கிறது. எழுத்து என்னை இயக்குகிறது. இப்போதைக்கு எழுத்தே என் தாய்மடி!


நன்றி: புத்தகம் பேசுது


பிற்குறிப்பு: எனது அடுத்த கவிதைத் தொகுப்பும் குறுநாவலொன்றும் வரவிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு எங்காவது தொலைந்து, இந்தத் தொலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டால் 'எடிட்'பண்ணிவிடலாம். இரண்டும் நடப்பதாக இல்லை:)


--


விசாரணைச் சாவடி

எப்போதும் நானெழுதும் கடல்போல

விரிந்த அதிகாரத்தின் பெயரால்

தெருவொன்றில் என்னை நிறுத்துகிறாய்

“உனது பெயர் என்ன…?”

எனது கடவுச்சீட்டு உனது கையிலிருக்கிறது

‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்

ராமச்சந்திரன் என்றார்’

நகுலனை நினைத்தபடி உச்சரிக்கும் எனது பெயர்

யாருடையதோ போலிருக்கிறது

உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது

“இங்கெதற்கு வந்தாய்?”

எனது பூர்வீக கிராமத்து வீட்டில்

பாக்கு மரங்கள் நிழல்விழுத்தி

குளிர்ச்சியுற்ற கிணறுளது..

அதில் எனது பாட்டனின் காலடித் தடமுளதை

1914 எனும் ஆண்டுப் பதிவுளதை

பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறேன்

உன் சீருடை அச்சுறுத்துகிறது.

கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்

உன்னைக் குறித்தெழும் வசவு

உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது

நான் பணிவானவள்

நகங்களும் விழிகளும் பிடுங்கப்படுவதில்

எனக்கும் ஒப்புதலில்லை.

“உனக்கு சிங்களம் தெரியுமா…?”

‘சிங்களம் மட்டும்’தெரியாமற் போனதற்காக

வருத்தத்தில் தோய்த்தெடுத்த புன்னகையோடு

தாழும் தலையை இடம் வலதசைக்கிறேன்

மேலும் பெண்ணுக்குரிய நளினம் மிளிர

கேவலமாகப் புன்னகைக்கிறேன்

எனக்கு அவசரமாகப் போகவேண்டும்.

நீ கேள்விகளாலானவன்

நான் இணக்கமான பதில்களாலானவள்

நன்றி சொல்லிப் பிரியும்போது

இருவருக்கும் மகிழ்ச்சியே!

ஈற்றில் எஞ்சியிருக்கின்றன

இறுகிவிட்ட சில வார்த்தைகள் என்னிடத்திலும்

வெடித்திருக்கக்கூடிய குண்டொன்று உன்னிடத்திலும்.

நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…


அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே. நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த கிறக்கத்துடனும் என்னால் உச்சரிக்கப்பட்டதையுணர்ந்து நிறுத்திக்கொண்டேன். ஏதோவொரு கணத்தில் வெறுமையும் உண்மையும் சூழ்ந்துகொண்டநிலையில் அயர்ச்சி மேலிட மௌனமாக அந்தக் கூட்டத்தில் நடந்துபோனேன். ‘எனது சொந்த மக்கள் வகைதொகையின்றிக் கொன்று குவிக்கப்படும்போது, ஊனமாக்கப்படும்போது, சிறைகளுள் சித்திரவதை செய்யப்படும்போது, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும்போது, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தான்களின் முன்னால் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் கையேந்தி நிற்கும்படியான பிச்சைக்காரர்களாக்கப்படும்போது எதுவும் செய்யத் திராணியற்றுப் போன அரசாங்கம் ஆண்டுகொண்டிருக்கிற இந்த மண்ணில் இப்படியான கூட்டங்கள் வியர்த்தமானவை’ என்ற எண்ணம் தந்த அயர்ச்சியே அது.

‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா விடுவான்?’என விண்டுவிளம்பி விலாவாரியாக எழுதிவைத்துவிட்டு, முத்துக்குமார் என்ற இளைஞன் தன்னையெரித்துக் கருகி மறைந்தது இந்த மண்ணில்தான் என்பதை அறிந்திருக்கிறபோதிலும்- முழுமையான அரசியல் புரிதலுடனோ அன்றேல் ‘என்னினம் அழிகிறதே’என்றொரு கணம் எழுந்த உணர்ச்சிவேகத்திலோ முத்துக்குமாரைத் தொடர்ந்து அந்தத் தீயின் தடத்தில் மேலும் சிலர் தம் வாழ்வை முடித்துக்கொண்டார்கள் என உணர்ந்திருக்கிறபோதிலும்- அரசியல் இலாபங்களுக்காக, அதிகார வேட்டைக்காக, ஈழத்தமிழர் பிரச்சனையைத் தோளில் தூக்கிவைத்துக் காவடியாடியவர்கள் மத்தியில், தனிப்பட்ட வாழ்வைத் தள்ளிவைத்து வீதிகளில் இறங்கித் தடியடிபட்டவர்களும் இன்னமும் சிறையிருளினுள் சித்திரவதைப்படுபவர்களும் இருக்கவே இருக்கிறார்கள் என்று நினைக்குந்தோறும் நெஞ்சினுள் பரிவின் கண்ணீர் திரண்டு தளும்புகிறபோதிலும்- ஈழத்தமிழருக்கு நல்லது நடக்காதா என்ற நப்பாசையினால், எப்போதும் அதிகாரத்தின் குரலிலேயே பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதா அம்மையாரையே விதந்தேற்றவும் வியந்துபோற்றவும் வேண்டிய கெடுவிதிக்கு தேர்தல் காலத்தில் தள்ளப்பட்ட இனவுணர்வாளர்களின் உள்ளக்கொதிப்பை உணரமுடிகிறபோதிலும்- ஈழத்தமிழர் கதை தற்காலிகமாக துயரத்தில் முடிந்தாலும் விடியும்வரை எமது பணி தொடருமென்று மதிப்பிற்குரிய சீமானும் மணியரசனும், தாமரையும், அறிவுமதியும் பாரதிராஜாவும், கொளத்தூர் மணியும், நெடுமாறன் ஐயாவும், வை.கோ அவர்களும் இவர்களைப்போன்ற பலரும் துடித்துக்கொண்டிருக்கிறபோதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை,‘அதிகாரங்களை அசைக்க முடியாது’என்ற மொட்டைச்சுவரிலேயே வந்து மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு நிற்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆம்! நாங்கள் செவிட்டு மலைகளிடம் வியர்த்த வார்த்தைகளால் உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் யாரை எதிர்த்து ஊர்வலங்களை நடத்துகிறோமோ அவர்கள் அந்நேரம் பல்லிடுக்கில் குச்சி வைத்துக் கிண்டிக்கொண்டோ, உண்ட களைப்பில் ஏப்பம் விட்டபடியோ வாயு பறிந்தபடியோ இத்தகைய கூட்டங்களை அசுவாரசியத்தோடும் அலட்சியத்தோடும் பார்த்துக்கொண்டிருப்பர் என்ற நினைப்பை அழிக்கமுடியவில்லை. தமிழகத்தையும் இந்தியாவையும் பொறுத்தவரை இப்போது வேண்டியிருப்பது ஆட்சி மாற்றங்களல்ல; மனோரீதியிலான அடிப்படை மாற்றங்களே. காட்சி மாற்றங்களல்ல; இங்கே வேண்டியது கருத்தியல் மாற்றங்களே.

அன்றாட வாழ்வுக்குப் பங்கம் வராமல் சில அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு, இலவசத் தொலைக்காட்சியைக் கொடுத்து அவர்களைச் சரிகைக் கனவுகளுள் ஆழ்த்திவிட்டு, கேள்வி கேட்பவர்களின் வாய்களை பணத்தினாலோ அடியாள்தனத்தினாலோ அடைத்துவிட்டு தமிழகம் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இலஞ்சம், ஊழல், அடியாள் அரசியல், ஒற்றையாதிக்கம் இவைகளல்லாத நீதியான ஆட்சியமைப்பை நிறுவுவதென்பது பல நூறாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை சிலரைத் தவிர யாரும் உணரவில்லை. எனது நண்பர்களிடம் பேசும்போது அடிக்கடி சொல்வேன் “ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அழிந்துவிட்டோமென்றே வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் அரசுகள் வஞ்சகத்தினால் எங்களை அழித்துவிட்டன. ஆனால், நாங்கள் எப்படியோ துளிர்த்துவருவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்… நீங்கள்தான் பாவம். அழிவது தெரியாமல் அழிந்துகொண்டிருக்கிறீர்கள்”என்று. உண்மையில் தமிழகத்திற்கும் ஒரு புரட்சி வேண்டியிருக்கிறது. இங்கே நான் ஆயுதப்புரட்சியைச் சொல்லவில்லை; ஜெயமோகன், சாரு நிவேதிதா வகையறாக்கள் அஞ்சவேண்டியதில்லை. ‘அரசியல்வாதிகளுக்கான மக்கள்’ என்பதிலிருந்து ‘மக்களுக்கான அரசியல்வாதிகள்’ஐ உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. நீங்கள் நடந்துகொண்டிருப்பது பொருக்கேறிக் கெட்டிப்பட்ட பாதை… கீழே புதைகுழி இருக்கிறது என்பதை யாராவது உணர்த்தியாக வேண்டியதாயிருக்கிறது. இறுகிய பனிப்பாளங்களின் கீழ் உயிரை வெட்டும் குளிர்நீர் இருக்கிறதென்பது பொறிந்து விழும் காலம் வந்தால்தான் புலப்படும்.

‘இதோ கைக்கெட்டும் தொலைவில் இருக்கிறது கடவுளின் உலகம்’என்ற மதவியாபாரிகளின் வாக்குறுதிகள் போன்றதல்ல அந்த ஆதர்ச உலகம். பொறுமையும் தொலைநோக்கும் எதிர்கால சந்ததிக்காக இன்றைய நாட்களை இழக்கத்தகு தியாகமும் வேண்டும் மக்களிடத்தில். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெரியாரைப் போன்றதொரு மானமும் தீரமும் கொண்ட, தீர்மானங்களை எடுக்கத்தகு தலைவன் ஒருவன் உருவாகவேண்டும். அவன் ஏற்கெனவே பிறந்துவிட்டான். அவனை மக்கள்தான் கண்டெடுக்கவேண்டும்.

தமிழகம் ஆதர்ச பூமியாக வேண்டும் என்ற விருப்பின் பின்னால் சுயநலம் இல்லாமலில்லை. விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற பேராதிக்கத்தின் காலடியில், பூகோள ரீதியாக கண்ணீர்த்துளி வடிவில் எமது இருப்பு அமைந்துவிட்டது துரதிர்ஷ்டமே. புயல் கடந்தாலும் மழை பொழிந்தாலும் பூகம்பம் வந்தாலும் அது ஈழத்தமிழர்களையும் பாதிக்கவே பாதிக்கும். அதன் அக,புறநிலைகள் எங்களுக்குச் சாதகமாக்குவதையன்றி வேறு வழியில்லை நமக்கு. மாடு காலால் உதைக்கிறதென்பதற்காக பால் கறக்காமல் விட்டுவிடுகிறோமா என்ன?

எங்கள் விடுதலை பற்றிய கனவு ஒரு புகையைப் போல கலைந்துபோவதைப் பார்த்தோம். பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போலவே எங்களது நாடும் நாடுகடத்தப்பட்டுவிட்டது. அது எங்களைப் போலவே அகதியாகிவிட்டது. ‘நாடு கடந்த அரசாங்கம்’என்பதைப் பற்றிப் பேசவாரம்பித்திருக்கிறோம். கட்டியெழுப்பிய அரசாங்கத்தைக் கடைசியில் ஒருநாள் கட்டித்தூக்கிக்கொண்டு இங்குதான் வந்தாகவேண்டும். இந்தியாவின் காலடியில் கண்ணீர்த்துளியாக அல்லாமல் சமுத்திர அலைகளாகத் திரும்பிவரவேண்டும்.

மரத்தை நடுகிறவன் பழங்களைச் சிந்திப்பதில்லை. வலசைப் பறவைகள் தூரத்தை அஞ்சுவதில்லை. நாங்களும் விதைகளைத் தூவி வைப்போம். விருட்சமாகட்டும்.

கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி


மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த கதைகளிலும் பார்க்க அவரைப் பற்றிப் புனையப்படும் கதைகள் அதிகமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும், சமூக அளவுகோல்கள், மதிப்பீடுகளை மறுத்தோடவும் கேள்வி கேட்கவும் விழைந்த கமலாதாஸைப் போன்ற எழுத்தாளர், இறப்பின் பின்னும் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுவது இயல்பானதே.

1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். குமுதத்திலும் அந்நூல் தொடராக வந்தது. “‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.
அவர் சொல்கிறார்:

“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.

குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் கமலாதாஸ் சித்தரிக்கப்பட்டார். பெண் என்பவள் வார்க்கப்பட்ட வெண்கலச் சிலைபோல இருக்கவேண்டும்; நெகிழ்வு கூடாது என்ற புனிதத் தத்துவங்களில் ஒன்றாகவே மேற்கண்ட விமர்சனத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும், காலாகாலமாகப் பின்பற்றப்பட்ட, அச்சில் ஊற்றி எடுக்கப்பட்ட மரபுகளுக்கு எதிர்நிலையில் நின்று பெண்ணானவள் பேசுவதும் நடந்துகொள்வதும் படுபாதகமாகவே கருதப்படுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் ஆணிவேராகிய மதம் தொடர்பாகவும் அந்த எதிர்நிலை அமைந்துவிடுமாயின் சொல்ல வேண்டியதில்லை. ‘ஐயோ! கைமீறிப் போகிறாளே’என்ற பதட்டம் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. கமலாதாஸ் எழுத்திலும் வாழ்விலும் கலகக்காரியாக அறியப்பட்டவர். மரணத்தின் பிறகும் அவர்மீதான ஆதிக்கம் விமர்சன வடிவில் தொடர்வது வேதனைக்குரியது.

அண்மைக்காலமாக இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களுக்கு சமாந்தரமாக இயங்க முற்பட்டுவருகின்றன அன்றேல் நெருங்கிவந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். இன்றைக்குத் தமிழிலே பிரபலமாகப் பேசப்படும் பல எழுத்தாளர்கள் இணையத்திலே எழுதவாரம்பித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது எழுபத்தைந்தாவது வயதில் புனேயில் கமலாதாஸ் மரணமடைந்ததையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவொன்றினைத் தனது இணையத்தளத்திலே இட்டிருந்தார். வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

இதை வாசித்து முடிந்ததும் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. கறுப்பான, குண்டான பெண்கள் அழகற்றவர்கள் என்ற பொதுப்புத்தியை, அறியப்பட்ட எழுத்தாளரான ஒருவரால் எந்தவித தயக்கமின்றி எப்படிப் பொதுவெளியில் பேசமுடிகிறது? ஒருவருடைய அழகு அவருடைய எழுத்தில் பொருட்படுத்தத்தக்க பாதிப்பினை உண்டுபண்ணுகிறதா? அழகிகளாயிருக்கும்-அழகன்களாயிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளில் காமம் அளந்து பரிமாறப்படுகிறதா? தனது படைப்பாற்றல் வழியாகச் சிந்தனைத் தளத்தினுள் வாசகர்களைச் செலுத்துவதில் பெரும் பங்காற்றிய கமலாதாசுடைய எழுத்தின் பின்னணியில் இயங்கும் உளவியலை ஆராய்வதன் மூலம் தனது பிதாமகத்தன்மையை ஜெயமோகன் நிறுவ முயல்கிறாரா? காமம் என்பது பாவமே போன்ற தொனி மேற்கண்ட வாசகங்கள் ஊடாக வெளிப்படுவதிலுள்ள அபத்தத்தை ஜெயமோகன் உணரவில்லையா? ஒருவர் இறந்தபின்னால் அவரது இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், மேற்கண்ட வாசகங்கள் வாயிலாக கமலாதாஸின் ஆளுமை பற்றிய மதிப்பீட்டைச் சரிக்கவே ஜெயமோகன் முயல்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் அதீத காமத்தோடு நடந்துகொள்வது அன்றேல் அப்படிப் பேசுவது மற்றும் எழுதுவது, சமூகத்தினால் ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண் பிம்பத்தைச் சிதைக்கிற செயல் என்ற பதட்டத்தை மேற்கண்ட வார்த்தைகளில் என்னால் இனங்காணமுடிகிறது. பழமைச் சேற்றில் ஊறிய பொச்சுமட்டைகளால் எத்தனை காலத்திற்குத்தான் அரிக்கும் தங்கள் முதுகுகளைச் சொறிந்துகொள்ளப்போகிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

ஜெயமோகன் மட்டுமென்றில்லை; மதவாதமும் ஆண்வாதமும் இந்தச் சமூகத்தினைச் சீரழிக்கும் நோய்க்கூறுகளாகத் தொடர்ந்திருக்கின்றன. கமலாதாஸ் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட மாதவிக்குட்டி தனது 65ஆவது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறி கமலா சுரையாவாகிறார். புகழ்பெற்ற இஸ்லாமியப் பேச்சாளர் ஒருவரை மணந்துகொள்ளும்பொருட்டு மதம் மாறியதாகக் கூறும் அவரை, அந்தப் பேச்சாளர் பிறகு ஏமாற்றிவிட்டதாக கமலாதாஸே ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார். தனிமையின் துயர் தாளாமல் துணையை அடைய வேண்டி மதம் மாறியது அவருடைய சொந்தப் பிரச்சனை. “நீ எப்படி மதம் மாறலாம்?”என்று கேட்டு இந்துத்துவா அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். கொலை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதும் உயிராபத்து நிறைந்த சூழலிலேயே அவர் வாழவேண்டியேற்பட்டது. பத்திரிகைகள் அவர் மதம் மாறியதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. தான் ஆமியாக சிறுபெண்ணாய் பால்யத்தில் வாழ்ந்த பழைய வீட்டிற்கு கமலாதாஸ் சென்று வந்தபிறகு, அந்த வீட்டை அங்குள்ளவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவுகிறார்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் பெண்ணின் பாதங்களால் அந்த வீடு தீட்டுப்பட்டுவிட்டதாம். மதமாற்றத்தின் காரணமாக எழுந்த சர்ச்சைகளால், விமர்சனங்களால் புண்பட்ட கமலாதாஸ் தனது தாய்பூமியான கேரளத்தைவிட்டு வெளியேறி, வயோதிபத்தில் புனேயில் வசிக்கவும் அங்கேயே இறக்கவும் நேரிடுகிறது. இந்தியா பல மதங்கள், மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட புண்ணிய பூமி என்று போற்றப்படுகிறது. அந்தப் புண்ணிய பூமியில் எழுத்தாளராகக் கொண்டாடப்படும் ஒரு பெண், மதம் மாறுவதென்பது அவளது சொந்தப் பிரச்சனையாக அல்லாது சமூகத்தின் பிரச்சனையாக இருப்பதென்பது அபத்தத்திலும் அபத்தமானதாகத் தோன்றுகிறது. மதம் என்பதை ஒரு விடயமாகக் கருதியதில், பொருட்படுத்தியதில் கமலாதாஸ் என்ற ஆளுமையுடைய பெண் தோற்றுவிட்டாள்தான். என்றாலும், தான் யாராக வாழவிரும்புகிறாளோ அதை அவளுடைய தெரிவுக்கு விட்டுவிடுவதன்றோ நியாயம்?

பால்யகால ஸ்மரணங்கள், பூதகாலம், பஷியுடைய மரணம், யா அல்லாஹ் ஆகிய பேசப்பட்ட நாவல்களையும் சிறந்த பல சிறுகதைகளையும் எழுதிய- கேரள சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகிய பெருமைகளைப் பெற்ற கமலாதாஸின் மறைவு கேரளத்தின் துக்கமாயிருந்தது சில தினங்கள். அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியெல்லாம் கேரள மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். மிக அண்மையில் கவிஞரும் பல எழுத்தாளர்களின் நண்பரும் நல்லிதயம் கொண்ட மனிதருமாகிய ராஜமார்த்தாண்டனைத் தமிழிலக்கிய உலகம் விபத்தொன்றில் இழந்தது. சில சஞ்சிகைகள், இணையத்தளங்களைத் தவிர மற்றெல்லாம் மகாமௌனம் காத்தன. இழப்பின் துயரத்தைக் காட்டிலும் மாபெரிய துயரம், ஒரு கவிஞனின் மரணத்தைக்கூடத் தமிழ்கூறும் இந்தப் பொய்யுலகம் பெரியளவில் கண்டுகொள்ளாமலிருந்ததுதான்.

ஜூன் 13ஆம் திகதியன்று வால்பாறையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
-----

கமலாதாஸின் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்


அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.

அவர்கள் சொன்னார்கள்
'ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.'
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
.உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின்-
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின்-
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.

நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.

அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….

ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்“யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.

தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும் எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.

நண்பர் மாதவராஜின் ‘தீராத பக்கங்கள்’இல் மேற்கண்ட கவிதை வெளியாகியிருந்தது. அவருக்கு என் நன்றிகள்.

6.22.2009

வால்பாறை இலக்கியக் கூட்டம்: மழையைத் தேடித் தொடரும் பயணம்


கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என்று ஏறத்தாழ நாற்பதுபேரை உள்ளடக்கியபடி, வால்பாறையை நோக்கி அந்த மலைப்பாதையில் விரைந்துகொண்டிருந்தது பேருந்து. அபாயமும் அழகும் எப்போதும் சமாந்தரத்தில் பயணிப்பனபோல. கொண்டையூசி வளைவுகளில் திரும்பும்போதும், ஆழத்தில் அபாய அழைப்போடு கிடந்த பள்ளத்தாக்குகளை நம்மை மீறி எழும் கற்பனைகளுடன் பார்க்கும்போதும் உடல் சிறிது கூசியடங்கியது. எப்போதாவது தென்படும் மலையருவிகள், மிக நேர்த்தியான வரிசையிலமைந்த தேயிலைச்செடிகளால் பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட மலைகள், வெள்ளையும் மெலிதான சாம்பலும் கலந்து அள்ளிச் சாப்பிடத் தூண்டியபடி மலைகளில் செல்லங்கொட்டிக் கிடக்கும் மேகப்பஞ்சுகள்... பொள்ளாச்சியிலிருந்து இரண்டே மணிப் பயண தூரத்தில் இப்படியொரு அழகு கொட்டிக்கிடப்பதை நம்பமுடியாமல்தானிருந்தது.

அ.மார்க்ஸ், மலர்விழி, அமுதா, கவின்மலர், நீலகண்டன், இசை, நரன், இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், மதிவண்ணன், ஜெயந்தி, சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம், லீனா மணிமேகலை, செல்மா பிரியதர்சன், விஷ்ணுபுரம் சரவணன், யாழன் ஆதி, கம்பீரன், அய்யப்ப மாதவன், மஞ்சு, வித்யாசாகர், சுகன்(பிரான்ஸ்), சஃபி, எஸ்.தேன்மொழி, எழில்செல்வன், முஜிபுர் ரகுமான், எச்.ஜி.ரசூல், ராஜன் குறை, இளங்கவி அருள், அசதா, க.மோகனரங்கன், சுரேஷ்வரன், சிறிதர், சாஹிப் ஹிரண், நடா.சிவகுமார், கரிகாலன், காந்தி (ஓவியர்), மணிவண்ணன் (ஓவியர்), தமிழ்நதி கலந்துகொண்டவர்களில் நினைவில் நின்ற பெயர்கள் இவ்வளவுதான்.

பயணங்கள் நெடுகிலும் ஏதாவது ஞாபகங்கள் கூடக் கூட ஓடிவரும். ‘மழையைத் தேடித் தொடரும் பயணம்’என்ற வாக்கியம் அன்று அடிக்கடி தோன்றி மறைந்தது. சென்னையிலிருந்து கிளம்பியபோது ‘தேனி சில்லென்றிருக்கும். சிலசமயம் மழைகூடப் பெய்யலாம்’என்றார்கள். பெய்யவில்லை. ‘பொள்ளாச்சி அற்புதமாக இருக்கும்’என்றார்கள். நான் தங்கிய விடுதி நகரமத்தியில் இருந்தது. நகரங்களில் அற்புதங்களைக் காண்பதற்கில்லை. வால்பாறையை நோக்கி கொழுத்தும் வெய்யிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது மழைக்காகவும் குறைந்தபட்சம் குளிருக்காகவும் உள்மனசு ஏங்கிக்கொண்டிருந்தது. நாற்பது கொண்டையூசி வளைவுகளில் இருபதுக்குமேல் கடந்தபிறகு குளிர் மெல்லென முகத்தைத் தடவியது. நெடுநாள் பிரிந்திருந்தவனின் கண்களை எதேச்சையாக எதிர்கொள்ள நேர்ந்த பரவசத்தைக் குளிர் தந்தது.

நாங்கள் தங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், தோழிகள் சிலருடன் ஒரு அறைக்குள் இடம்பிடித்துக்கொண்டேன். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களான லீனா மணிமேகலை, செல்மா பிரியதர்சன், சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம் ஆகியோரால் அந்தக் கவிதை விமர்சன நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 13ஆம் திகதி எழுத்தாளர் கமலாதாஸ் நினைவரங்கமாகவும், ஜூன் 14ஆம் திகதி கவிஞர் ராஜமார்த்தாண்டன் நினைவரங்கமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரவேற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை பேசும்போது, தொடர்ந்து நினைவரங்கமாகவே நடத்தவேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம், அப்பாஸ், சி.மணி, கமலாதாஸ், ராஜமார்த்தாண்டன் எனத் தொடர்வது வருந்தத்தக்கது என்றார். லீனாவைத் தொடர்ந்து அ.மார்க்ஸ் மற்றும் கரிகாலன் உரையாற்றினார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் கூடிப் பேசுவதற்கு இவ்வகையான கூட்டங்கள் உதவுவதாக கரிகாலன் சொன்னார். எழுத்து, கசடதபற, மீட்சி என அவ்வக்காலங்களில் கவிதைக்கு உறுதுணையாக இருந்த பல சஞ்சிகை மற்றும் எழுத்தியக்கங்களைக் குறித்து அ.மார்க்ஸ் பேசினார். புலப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது என்று கூறிய அவர் அவற்றுக்கு உதாரணமாக, நக்சல்பாரிகளால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசிகள் வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்படுவது, நகரை அழகுபடுத்துகிறோம் என்ற அரச முன்னெடுப்புகளால் பலவந்தமாக இடம்பெயர்க்கப்படுவோர் ஆகியவற்றை முன்வைத்துப் பேசினார். இந்த இயந்திரமயமான உலகில் நம்மைப் புதுக்கிக்கொள்ள உதவும் காரணங்களில் ஒன்றாக கவிதை தொழிற்படுகிறது என்றார்.

கமலாதாஸ் அரங்கினைத் தொடக்கிவைத்துப் பேசவேண்டிய கவிஞர் மாலதி மைத்ரி வரமுடியாமற் போனமையால், என்னை ஒரு கட்டுரை எழுதி வந்து வாசிக்கமுடியுமா என்று கேட்டிருந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு நாள் அவகாசத்தில் ஒருவழியாக அதை எழுதி ஒப்பேற்றி முடித்தேன். கட்டுரையில், கமலாதாஸ் இறந்தபிற்பாடு அவரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். ஜெயமோகனின் திருவாய்மொழிதல் குறித்து பலருக்கும் பரவலான அதிருப்தியும் கசப்பும் இருந்ததைக் கூட்டத்தில் காணமுடிந்தது. “ஜெயமோகனது இணையத்தளங்களில் இடப்படும் கடிதங்களில் பல அவரே அவருக்கு எழுதிக்கொண்டவை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?”என்றொரு நண்பர் கேட்டார். இத்தகைய சித்துவிளையாட்டுக்களை, சுயசொறிதல்களை நான் அறியாதிருந்ததை அவரிடம் ஒத்துக்கொண்டேன்.

ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’கவிதைத் தொகுப்பைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் கட்டுரை வாசித்தார். பித்து, போதை, கவித்துவம் இம்மூன்றும் கலந்த கவிதைகளே ரமேஷ் பிரேதனுடையவை என்றார் அவர். தோற்கடிக்கப்பட்ட மனிதனின் வன்மம், துரோகத்தினால் நொய்மையடைந்த ஒரு மனம் ஆகியவற்றை அவற்றில் காணலாம் என்று மேலும் சொன்னார். ‘சாராயக்கடை’ எழுதப்பட்ட பின்னணி பற்றி இளங்கவி அருள் பேசுகையில், ரமேஷ் பிரேதன் தற்கொலைக்கு நெருக்கமான ஒரு மனோநிலையிலும் பித்து நிலையிலும் இருந்து அக்கவிதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டார்.

அடுத்து, இசையின் ‘உறுமீன்களற்ற நதி’கவிதைத் தொகுப்பை கரிகாலன் விமர்சித்துப் பேசினார். அவருடைய வார்த்தைகளில் சொன்னால் அது ‘விமர்சனமாக அல்லாது கொண்டாடுவதாகவே’அமைந்திருந்தது. ஒரு மகாகவிக்குரிய சாத்தியக்கூறுகளைத் தான் இசையின் கவிதைகளில் காண்பதாக கரிகாலன் சொன்னபோது, கைதட்டல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. (அப்போதிருந்து எங்களது நண்பர் வட்டத்தில் இசையை ‘மகாகவி’என்றே அழைக்கவாரம்பித்திருக்கிறோம்.) மிக எளிமையான சொற்களைக்கொண்டு கவிதை புனைவதோடல்லாமல், புதிய வடிவங்களையும் அவர் பரீட்சித்துப் பார்ப்பதாகவும், முன்னதன் சாயல் பின்னதில் இல்லாமலிருக்க முடிந்தளவு முயற்சிப்பதாகவும் கரிகாலன் மேலும் வியந்தார். ஆதர்ச உலகிற்கும் நடைமுறை உலகிற்கும் இடையிலான கவிஞனின் தத்தளிப்பை இசையின் கவிதைகளில் காணமுடிவதாகவும் கூறினார்.

அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்பைக் குறித்து அசதா கட்டுரை வாசித்தார். அந்தத் தொகுப்பை ஒரு இரயில் பயணத்தின்போது வாசித்ததாகவும், மனதில் பெரியதொரு பாதிப்பை நிகழ்த்தக்கூடிய தொகுப்பாக நிசி அகவலை இனங்கண்டதாகவும் அவர் சொன்னார். ஆழ்மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணத்தக்க அந்தக் கவிதைகளின் சிறப்பம்சமாக, தன்முனைப்பு அதாவது கவிஞனின் குறுக்கீடு இல்லாதிருந்ததைக் குறிப்பிட்டார். கவிதையே உச்சபட்ச சாத்தியங்களை நோக்கித் தன்னை நகர்த்திச் செல்லும் பாங்கினை அய்யப்ப மாதவனின் கவிதைகளில் கண்ணுற்றதாக அவர் பாராட்டினார்.

லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைக்கான விமர்சனத்தை வழங்கவிருந்த க.பஞ்சாங்கம் அவர்கள் வரமுடியாமற் போன காரணத்தால், பஞ்சாங்கத்தின் கட்டுரையை செல்மா பிரியதர்சன் வாசித்தளித்தார். நவீன பெண் எழுத்தின் உச்சமாக லீனாவின் கவிதைகளை பஞ்சாங்கம் கொண்டாடியிருந்தார். நனவெளி மனதை நனவெளி வார்த்தைகளாலும் கவிதைப் பக்கங்களிலிருந்த குகை ஓவியங்களாலும் வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். பாலினம் கடந்த எழுத்து பற்றிய லீனாவின் கனவைச் சிலாகித்திருந்தார். ‘ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றமே இலக்கியம்’என்ற ஃபிராய்டின் வாக்கியத்தை ஓரிடத்தில் மேற்கோள் காட்டி, ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாக இந்தக் கவிதைகளைப் பார்ப்பதாகவும் சொல்லியிருந்தார்.
பஞ்சாங்கத்தின் விமர்சனத்தில் இடம்பெற்ற ‘காமக்களியாட்டம்’என்ற சொல்லின் விபரீத அர்த்தம் குறித்து முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்வியினையடுத்து, கூட்டம் கொஞ்ச நேரம் அதைப் பற்றிச் சலசலத்தது. “விமர்சனம் என்பது பாராட்டாக, புகழாரமாக இருத்தல் தகாது; ஆனால், இதுவரையில் வாசிக்கப்பட்ட நான்கு கட்டுரைகளிலும் அத்தன்மையினையே அவதானிக்க முடிந்தது”என்று முஜிபுர் ரகுமான் விமர்சித்தார்.


அவரையடுத்துப் பேசிய ராஜன் குறை, அக்கருத்துக்கு எதிர்வளமாகச் சொன்னார். அதாவது, “கோட்பாட்டு ரீதியான வாதங்களில் இருக்கக்கூடிய வரண்ட தன்மையை விடுத்து, சககவிஞரை உற்சாகப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாக நாம் ஏன் இதைப் பார்த்தலாகாது?” என்று கேள்வியெழுப்பினார். அ.மார்க்ஸ் குறைகளும் சுட்டிக்காட்டப்படுவதே சிறந்த விமர்சனமாக இருக்கமுடியும் என்றார்.

அடுத்து, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’யை விமர்சித்துப் பேசிய மதிவண்ணன் அதீத கோபத்துடன் கூட்டத்தைப் பார்த்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினார். ஊரானது சேரி என்றும் ஊர் என்றும் எவ்விதம் பிரித்துவைக்கப்பட்டிருக்கிறதோ அவ்விதமே இலக்கியமும் ஊர் இலக்கியம், சேரி இலக்கியம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருப்பதாக மதிவண்ணன் சாடினார். ஏகாதிபத்தியங்களின் அடக்குமுறை அரசியலைப் பற்றித் தன் கவிதைகளில் பேசும் யவனிகா, ஏன் உள்ளுரில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்தோ, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்தோ குரலெழுப்பவில்லை என்று கேட்டார். உடலையும் காமத்தையும் கொண்டாடுவது மட்டும்தான் பின்னவீனத்துவமா…? சமூக அடக்குமுறை, சாதி ஒடுக்குமுறை பற்றிக் கேள்வி கேட்காமல் புலன்களை மட்டும் கொண்டாடுவது எவ்விதம் தகும்? இத்தகைய காரணங்களால் அவரது கவிதையில் இருப்பதாக மற்றவர்களால் சொல்லப்படும் அரசியல்தன்மையைத் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். வேசிகள் போன்ற பதங்களைப் பிரயோகிப்பதன் வழியாக தான் ஒரு ஆண் என்பதை அடிக்கடி நிரூபணம் செய்கிறார் என்றும் சொன்னார். ஆத்மாநாம்தான் அரசியல் கவிதைகளின் 'அத்தாரிட்டி' என்று அ.மார்க்ஸ் சொல்வதை நான் மறுக்கிறேன் என்றார் மதிவண்ணன்.

அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவுமான விவாதங்கள் களைகட்டின. மதிவண்ணனுடைய அதீத கோபத்தின் பின்னாலிருக்கக்கூடிய துயரத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கரிகாலனை நோக்கி மதிவண்ணன் எழுப்பிய கேள்விக்கு அவர் பொறுமையோடும் பொறுப்போடும் பதிலளித்தமையால் பெரிய சச்சரவிலிருந்து அக்கூட்டம் தப்பித்து முன்னகரமுடிந்தது.

‘கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்’என்ற தொகுப்பைப் பற்றி க.மோகனரங்கன் கட்டுரை வாசித்தார். கிராமங்கள் நகரமயமாக்கப்படுதலின் வலியை கரிகாலன் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதாக அவர் சொன்னார். அடையாளங்கள் மற்றும் அறச்சிக்கல்களைப் பேசும் கரிகாலனது கவிதைகள், கலாப்பிரியாவுக்கு அடுத்தபடியாக சித்திரத்தன்மையுடன் கூடியதாக அமைந்திருப்பதாக மோகனரங்கன் குறிப்பிட்டார். தன் எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான இடைவெளிதான் ஒரு கவிஞன் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால்… அதைக் கரிகாலன் சரியாக எதிர்கொண்டிருப்பதாகப் பாராட்டினார்.

எஸ்.தேன்மொழியின் ‘துறவி நண்டு’தொகுப்பினை விஷ்ணுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார். பெண்ணைக் குறித்தும் அவளது எண்ணங்கள் குறித்தும் ஆண்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் போய், பெண்ணே தன்னைப் பற்றி எழுத ஆரம்பித்ததானது ஆண்களைப் பதட்டம் கொள்ளவைத்ததாக சரவணன் சொன்னார். குறிப்பாக கவிதைகளில் பெண் கவிஞர்களின் ஆளுமையுடைய முன்னகர்வு ஆண்களை அச்சங்கொள்ள வைத்ததாகவும் குறிப்பிட்டார். தேன்மொழியின் கவிதைகள் உரையாடல்தன்மை பொருந்தியவையாகவும் ஒன்றுடன் மற்றொன்று சக்கரத்தன்மையுடைய தொடர்ச்சியைக் கொண்டிருப்பவையாகவும் தன்னால் அடையாளங்காண முடிந்தது என்றார். பெண்மையை எதிர்ப்பற்ற உருவமாக வைக்க தாய்மை பயன்படுகிறது என்ற இடத்தில் பெரியாரை மேற்கோள் காட்டிப் பேசினார். தாய்மை என்ற விடயத்தின் மேல் புனிதச்சாயம் பூசப்படுவதன் வழியாக பெண்களை மறைமுக அடிமைகளாக்கும் சதியினைச் சமுதாயம் செய்துகொண்டிருப்பதை தேன்மொழியின் கவிதைகளிலும் காண வாய்த்ததாக சரவணன் குறிப்பிட்டார். ஆண்மைய சிந்தனையிலிருந்து பெண்களால் முற்றிலும் விடுபட முடியாமலிருப்பதற்குரிய உதாரணங்களாக தேன்மொழியின் ‘இழிந்த இரத்தம்’, ‘கவிச்சி வாடை’போன்ற சொற்களைச் சுட்டிக்காட்டினார்.

‘கடலுக்குச் சொந்தக்காரி’என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட மரகதமணியின் கவிதைகளைக் குறித்து எஸ்.தேன்மொழி கட்டுரை வாசித்தார். ‘கடல் குறித்த உயில்’ என்று வழக்கமான தனது பாணியில் குறிப்பிட்ட தேன்மொழி, கடலைச் சொந்தங் கொண்டாடுதல் என்பது வாழ்க்கையை நேசித்தல் என்றார். தொலைந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முன் நம்மை அடையாளப்படுத்தும் குரலாக மரகதமணியின் கவிதைகளைப் பார்ப்பதாகச் சொன்னார். பெண் மொழி உடலை அரசியலாக்கிப் பேசியது தேக்கநிலைக்குச் சென்றுவிட்டதாக தேன்மொழி ஆதங்கப்பட்டார். மரகதமணியின் தொகுப்பில் மொழிச்சிக்கல் தொகுப்பெங்கும் விரவிக்கிடப்பதைக் காணமுடிந்ததாகவும், சமூகக் கரிசனை கூர்தீட்டப்படவில்லை என்றும் விமர்சித்த தேன்மொழி இனிவருங்காலத்தில் அவை கவனத்திற்கெடுக்கப்பட்டு நிரப்பப்படல் வேண்டுமென்றார்.

இதனிடையில் மதிவண்ணனின் விமர்சனத்திற்கெதிரான விமர்சனமொன்றை செல்மா பிரியதர்சன் முன்வைத்தார். அதாவது, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’தொகுப்பை ஒற்றைமையப் பார்வையோடு அதாவது தலித்தியப் பார்வையோடு மதிவண்ணன் அணுகியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு மதிவண்ணன் பதிலளிக்கையில், ‘சாதி ஒழிப்பைப் பேசாத ஒரு கவிதை அரசியல் கவிதையாக எப்படி இருக்க முடியும்…? சாதியொழிப்பைப் பேசாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து என்ன பயன்?’என்று கேள்வியெழுப்பினார். இலக்கியத்திலும் ஒரு சாதியச் சதி நடப்பதாக அவர் கொதித்துப்போய்ச் சொன்னார்.

அதையடுத்து வந்த விவாதங்களுடன் ‘கமலாதாஸ் அரங்கம்’நிறைவுபெற்றது. அன்றைய இரவைக் கொண்டாட்டத்திற்குக் கொடுத்தோம். ‘மகாகவி’இசையும் சரவணனும் நானும் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’என்ற இசையின் பேச்சை வெகு சுவாரசியத்தோடு நானும் சரவணனும் கேட்டுக்கொண்டிருந்தோம். காலையில் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சொன்னார் “திரும்பத் திரும்பப் பேசினாலும் நான் உண்மையைத்தானே பேசினேன்”என்று. நாங்கள் உறங்கச் செல்லும்போது நள்ளிரவு இரண்டரை மணி.
-------


நாங்கள் தங்கியிருந்த அறையினுள் தட்டுமுட்டுச் சாமான்கள் போடும் குட்டி அறையொன்று இருந்தது. கட்டிலில் இடிபட்டு உருளவிரும்பாது அந்த அறைக்குள் ஒரு துணியை விரித்து கோழிபோல கொடுகிப்போய் நாலரை மணிநேரம் தூங்கி எழுந்திருந்து வந்தால், சிலரைத் தவிர எவரும் எழுந்திருக்கவில்லை. ஆற்றுக்கு குளிக்கப் போனவர்கள், சாப்பிடப் போனவர்கள், இன்னமும் எழுந்திருக்காதவர்கள் எல்லோரும் தயாராகிக் கிளம்பும்போது மதியமாகிவிட்டது. எப்போதும் மண்டபங்களுள் மூச்சுத் திணறி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மாற்றாக, நதிக்கரையோரத்தில் கவிதை வாசிக்கலாம் என்ற யோசனை உவப்பாகவே இருந்தது.

நாங்கள் உயர உயரப் போனோம்…. போனோம்… தேயிலைச்செடிகளின் பசுமை கண்குளிர்த்தியது. ‘இங்கயும் கவிதை படிக்க (படுத்த) வந்துவிட்டார்களா?’என்பதுபோல குரங்குகள் பார்த்தன. பேருந்து வீதியில் நிறுத்தப்பட்டு நாங்கள் நதிக்கரையைத் தேடி நடந்தபோதுதான் அது எவ்வளவு ‘அபாயகரமான கவிதை வாசிப்பு’என்பது புலனாக ஆரம்பித்தது. ஏற்ற இறக்கமான நிலப்பரப்பில் மெலிந்த ஒற்றையடிப்பாதை, கீழே பெருகிச் சுழித்து நதி பாய்ந்துகொண்டிருக்க- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்த- பலகைகள் உடைந்து ஆடும் தொங்குபாலம், பிடிமானமற்ற சறுக்குப் பாறைகள், காலை இழுத்துச் சரிக்கக் காத்திருக்கும் பாசிபடிந்த கற்கள்… இவைதாண்டி சிலுவைப்பாதை முடிந்த இடத்தில் அழகான காட்சியொன்று விரிந்தது. பாறைகளில் நீர் விழுந்து வெள்ளை நுரையோடு சலசலத்து விரைந்தோடும் ஒயிலில் மனங்கிறங்கியது. சூழநின்ற மரங்களும் காற்றில் கலந்திருந்த குளிரும் கனவில் எழும் ஓசைபோன்ற அந்தச் சத்தமும்… அந்த இடமே ஒரு கவிதையைப் போலத்தான் இருந்தது. எங்கள் கவிதைகளை வாசிப்பதனால் அச்சூழலின் தவங்கலைந்து போகுமென்றொரு எண்ணம் தோன்றி மறைந்தது. ஓடும் நீரில் காலளைந்து திளைத்தபோது காலகாலமாக அங்கேயே இருந்துவிடத் தோன்றியது. கனவின் பாதைகள் எப்போதும் கனவிலேயே முடிந்துவிடுகின்றன.

14ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில் வால்பாறை நதிக்கரையில் ‘ராஜமார்த்தாண்டன் அரங்கம்’களைகட்டியது. ஆரம்ப நிகழ்வாக மோகனரங்கன் கவிஞர் ராஜமார்த்தாண்டனைப் பற்றிப் பேசினார். ‘கொங்குதேர் வாழ்க்கை’தொகுப்பை ராஜமார்த்தாண்டன் கொணர்ந்தபோது எழுந்த சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். கவிதையோடு கவிதைக்காக நிறைய ஆண்டுகளைச் செலவிட்டவர் எனினும், அத்தகைய பெருமைகள் எதனையும் இளையவரிடத்தில் காட்டாமல் எல்லோருடனும் சர்வசாதாரணமாக நட்புப் பாராட்டக்கூடியவர் ராஜமார்த்தாண்டன் என்று சிலாகித்தார். ராஜமார்த்தாண்டனின் ‘புதுக்கவிதை வரலாறு’என்பது எழுதவரும் புதியவர்களுக்குக் கைகாட்டக்கூடிய சிறந்த படைப்பு எனக் குறிப்பிட்ட மோகனரங்கன், அவருடைய மரணம் தமிழிலக்கியத்திற்குப் பெரும் இழப்பு என்றார்.

அடுத்து, ஜி.எச்.ரசூல் செல்மா பிரியதர்சனின் ‘தெய்வத்தைப் புசித்தல்’கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனக் கட்டுரையை வாசித்தார். கனவின் உடைபடலைக் குறியீடாக்கிக் கவிதைகளை எழுதியவர் சல்மா எனச்சொன்னார். குடும்பம் என்ற நிறுவனத்திற்கெதிரான உரத்த குரலை அவருடைய கவிதைகளில் கேட்கமுடியும் என்றார். பிரதி முழுவதிலும் அலையும் சாவு பற்றிய குறிப்புகள், குழந்தைகளின் உலகம், எல்லாவற்றையும் நேரடியான ஒன்றாக இல்லாமல் புனைவு கலந்த ஒன்றாகப் பேசும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். பெருங்கதையாடல்களைத் தகர்க்கவேண்டியதன் அவசியம் பற்றிப் பெரிதும் பேசப்படும் சூழலில் சல்மா கண்ணன்-ராதா போன்ற பிரதிமைகளுள் மீண்டும் நுழைவது விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டியது என்றார்.

களைப்பு தூரத்து மழையெனக் கவிவதை உணரமுடிந்தது. தொடர்ந்து பல மனஅயர்ச்சிகளுக்கு ஆளானதால் நான் மட்டும் அதை உணர்ந்தேனா…? உண்மையிலேயே மழைத்துளிகள் விழ ஆரம்பித்திருந்தன. மழையைத் தேடித் தொடர்ந்திருந்த வேட்கை தீர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை’தொகுப்பிற்கான விமர்சனத்தை எழுதிவந்திருந்த இளஞ்சேரல் அவசர வேலைநிமித்தம் ஊர்திரும்பிப்போயிருந்த காரணத்தால், அந்தக் கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். தண்ணீரின் இரைச்சல் அவருடைய மெல்லிய குரலை மூழ்கடித்தது. அவர் வாசித்ததிலிருந்து ஒரு விடயம் மட்டுமே என்னால் கிரகிக்க முடிந்தது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சமூகம் குறித்த அதிருப்தியையும், வாழ்வின் மீதான எள்ளல் கலந்த குற்றச்சாட்டையும் கொண்டிருந்தன. ‘காயசண்டிகை’எனது அடுத்த வாசிப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. வாசித்துவிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன்.

அழகிய பெரியவனின் ‘உனக்கும் எனக்குமான சொல்’கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தை யாழன் ஆதி வழங்கினார். மொழிசார்ந்த மௌனமும் அதிகாரத்தின் வெற்றியாகிறது என்றார். அதிகாரத்தினின்றும் அடையாளங்களை மீட்கும் பணியைச் செய்யவேண்டிய கடப்பாடு எழுதுகோல்களுக்கு உள்ளதென்றார். அழகிய பெரியவனின் கவிதைகள் அறிவுஜீவித்தனமான சொற்களின் கட்டுமானம் அல்ல, அவரது வாழ்வனுபவங்களிலிருந்து பெற்ற எளிமையான அறிவிலிருந்து பிறந்தவை அவை என்றார். ‘நீ’, ‘உன்’ போன்ற முன்னிலை விளித்தல்களால் அழகிய பெரியவனின் கவிதைகள் நவீன மொழியிலிருந்து சற்றே பின்தங்கியவைபோல தோற்றங்காட்டுவதாகக் குறிப்பிட்டார். கவிதைகளில் கதையைச் சொல்லிச் செல்லும் தன்மையானது, அதன் வடிவங் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இருப்பதாக யாழன் ஆதி கூறினார்.

வீடு திரும்பும் அவரவர் கவலைகள் மழையென மூடிக்கொண்டிருக்குமொரு தருணத்தில், ‘மீதி அமர்வை தங்குமிடத்திற்குத் திரும்பி அங்கே வைத்துக்கொள்ளலாமென்று’ ஆலோசனைக்கிணங்க நாங்கள் மீண்டும் அபாயகரமான பாதையைக் கடந்து அறைக்குத் திரும்பினோம்.
நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டிருந்தது. இன்னொரு அமர்விற்கான பொறுமை தீர்ந்துபோயிருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் போல அவரவர் திசையில் சிலர் சிதறிப்போயிருந்தபடியால் திட்டமிட்டபடி நேரத்தைக் கையில் வைத்திருக்கமுடியாமல் போனது. யாரும் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவும் முடியாத சூழல். அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’தொகுப்புக்கான விமர்சனத்தை சல்மா பிரியதர்சன் வாசிப்பதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக அந்த விமர்சனக் கட்டுரை வாசிக்கப்படவில்லை. அதே நிலைதான் இளம்பிறையின் ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’தொகுப்புக்கும் நேர்ந்தது. இளம்பிறையின் கவிதைகளை விமர்சிக்க வந்திருந்த கம்பீரனும் கட்டுரையை வாசிக்காமலே திரும்பவேண்டியதாயிற்று. தமிழ்நதியின் (என்னுடையதே) ‘சூரியன் தனித்தலையும் பகல்’தொகுப்பைப்பற்றி விமர்சனக் கட்டுரை வாசிப்பதாகச் சொல்லியிருந்த ‘புது எழுத்து’மனோன்மணி 14ஆம் திகதி காலையாவது வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசிவரை அவர் வரவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவருடைய ஊரிலிருந்து வந்திருந்த சாஹிப் கிரண் ‘திடீர் உடல்நலக்குறைவால் மனோன்மணி பங்கேற்கவில்லை; ஆனால், கட்டுரையை ஏற்கெனவே எழுதிவைத்திருந்தார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்தப்படவிருக்கும், ஈழத்தமிழ் கவிதைகள் தொடர்பான விமர்சனக்கூட்டத்தில் அந்தக் கட்டுரை வாசிக்கப்படவிருக்கிறது.


இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களிடம் கூட்டம் பற்றிக் கருத்துக் கேட்டபோது, பெரும்பாலானோர் நேரம் சரிவரக் கையாளப்படவில்லை என்ற கருத்தையே தெரிவித்தனர். மற்றபடி அதுவொரு இனிமையான ஒன்றுகூடல்தான். கவிதை தொடர்பாக எனது மண்டைக்குள் புதிதாக ஏதாவது ஏறியிருக்கிறதா என்று தட்டிப்பார்த்தேன்…ம்கூம்… நிறைய நண்பர்கள்தான் தேறியிருந்தார்கள்.

இருள் படர்ந்த கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தபோது, வெப்பத்தை நோக்கிய பயணம் என்ற எண்ணம் தோன்றி அச்சுறுத்தியது. வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது.

பிற்குறிப்பு: அந்த விமர்சனக் கூட்டத்தைப் பற்றி பலவாறான விமர்சனங்கள் நிலவுவதாக அறிகிறேன். அவரவர் வசதிக்கும் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் புறணி மனோபாவத்திற்கும் ஏற்ப கொஞ்சம் ‘சரக்கு’சேர்த்துப் பெருப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்லமுடியும்.