இருண்ட காலத்தில் பிறந்த ‘சூரியன் தனித்தலையும் பகல்’
தற்காலிக வாழிடமாக சென்னையை நான் தேர்ந்தது எவ்வளவு தற்செயலானதோ அவ்வளவு தற்செயலானதே எனது கவிதைத் தொகுப்பு வெளிவந்ததும் என்று சொல்லலாம். இங்கு வரும்போது தொகுப்பொன்றைக் கொண்டுவருவது குறித்த எண்ணமே எனக்கு இருக்கவில்லை. கையில் சில கவிதைகள் இருந்தன. ஆனால், அவை கவிதைகள்தானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. எனக்கான வடிவத்தைக் கண்டடையும் தேடலில் அதையும் இதையும் அப்படியும் இப்படியுமாக எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கையிலிருந்த அநேக கவிதைகள் தனிமையின் குரலாகவே இருந்தன. புலம்பெயர் வாழ்வின் (கனடா) சிறப்புப்பண்பாகிய தனிமை என்னை எழுத்தை நோக்கிச் செலுத்தியது. அங்கே வாழ்ந்த காலத்தில் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக எனது ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. நான் ஒரு எழுத்தாளராக ஏனையோரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், எனது எழுத்தின் போதாமை எனக்குத் தெரிந்தே இருந்தது. நிறைய வாசிக்கவும் எழுதவும் விரும்பினேன். ஆனால், வேலை அங்கிங்கு அசையவிடாமல் என்னை நாற்காலியோடு கட்டிவைத்திருந்தது. படைப்பு மனத்திற்கும் அன்றாட வாழ்வின் இருப்புச் சிக்கலுக்கும் இடையில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தேன்.
இந்நிலையில்தான் எனது தாய்மண்ணுக்குச் சென்று வாழவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அப்போது (2003) இலங்கையில் யுத்தநிறுத்தம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெயரளவிலேனும் சமாதானம் போல ஒன்று நிலவியது. 2003ஆம் ஆண்டு நவம்பரில் எண்ணற்ற கனவுகளோடு இலங்கைக்குத் திரும்பிச்சென்றேன். ஆனால், மீண்டும் தொடங்கிய போரினால் சென்னை எனது இடைத்தங்கல் முகாமாயிற்று. ஒரே மொழி, இனம், காலநிலை இவற்றோடு வாசிக்க நிறையப் புத்தகங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே என்னை உள்நின்று இயக்கியிருக்க வேண்டும்.
ஓராண்டு காலம் வாசிப்பில் கழிந்தபின், இணையத்தில் வலைப்பூவொன்றை ஆரம்பித்து அதில் எழுதவாரம்பித்தேன். இணையவெளி எல்லையற்றதாக விரிந்துகிடந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ‘நீங்கள் ஏன் கவிதைத் தொகுப்பொன்றைப் போடக்கூடாது?’என்ற நண்பர்களின் கேள்வியைக் குறித்து சிந்திக்கவாரம்பித்தேன். எனது பெயரைத் தாங்கிய ஒரு புத்தகம் என்பது இனிய கனவாகத்தான் இருந்தது. இயல்பிலேயே நிறைய மனக்கூச்சங்களை உடைய எனக்கு யாரை முதலில் அணுகுவதென்று தெரியவில்லை. நண்பர்கள் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களின் பெயர்களைப் பரிந்துரைத்தார்கள்.
உயிர்மை அலுவலகத்திற்குப் போய், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கவிதைகளைக் கையளித்துவிட்டு ஊருக்குக் கிளம்பிப்போய்விட்டேன். சில மாதங்களில் திரும்பி வந்து அதைப் பற்றிக் கேட்டேன். அவர் நிறைய வேலைகளோடிருந்தார். நேரில் சென்று பேசவும் மனம்வரவில்லை. பிறகு சென்னையிலுள்ள காலச்சுவடு அலுவலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கும் பாவனையில் போனேன். அன்றைக்கென்று அதன் ஆசிரியர் அரவிந்தன் அலுவலகத்தில் இல்லை. ‘சரி… நண்பர்கள் கூறியதற்காக முயற்சித்துப் பார்த்தாயிற்று…’ எனது பணி முடிந்ததென்று வழமையான எனது வேலைகளுக்குத் திரும்பிவிட்டேன்.
இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ‘வீரகேசரி’பத்திரிகைக்காரர்கள் கவிஞர் குட்டி ரேவதியை நேர்காணல் செய்து தரும்படி கேட்டிருந்தார்கள். அதற்கிணங்க அவரைச் சந்தித்தபோது, ‘பனிக்குடம்’என்ற பதிப்பகம் வாயிலாக பெண்ணிய சஞ்சிகையொன்றை வெளியிடுவதாகவும் புத்தகங்கள் பிரசுரிப்பதாகவும் கூறினார். நான் எனது கவிதைகளைப் பற்றிச் சொன்னேன். ‘அதற்கென்ன… வெளியிடலாமே…’என்றார் உடனே ஆர்வத்தோடு. கவிதைகளைக் காட்டியபோது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். பதிப்பாசிரியராக இருந்த திரு.வேணுகோபாலுடன் பேசினார். எனது இயல்பான சோம்பேறித்தனத்தினாலும் முன்செல்லும் பயத்தினாலும் அதைத் தள்ளிப்போடவே நினைத்தேன். ஆனால், அந்தத் தொகுப்பை வெளிக்கொண்டுவருவதற்கு கவிஞர் குட்டி ரேவதி மிகுந்த உற்சாகமும் உந்துதலும் தந்தார். புத்தகத்தில் இடம்பெறவேண்டிய எனது புகைப்படத்தையும் (அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர்) அவரே எடுத்தார். ஓவியர் கிருஷ்ணப்பிரியாவைத் தொடர்புகொண்டு அட்டைப்படத்தை வரைந்து வாங்கினார். எனக்குப் பிடித்த நீலநிறத்தில் அழகாக அமைந்திருந்தது அட்டைப்படம்.
பனிக்குடத்தின் இணையாசிரியர்களான கவிஞர் நந்தமிழ்நங்கை,மிதிலா, குட்டி ரேவதி, நான் ஆகிய நால்வரும் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சந்தித்து கவிதைகளை முன்பின்னாக ஒழுங்கமைத்தோம். மாற்றவேண்டிய இடங்களில் ஒரு சில சொற்களை மாற்றினோம். என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. ‘இருப்பற்று அலையும் துயர்’என்ற கவிதையில் வரும் ‘சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்’என்ற வரி தலைப்பாகப் பொருந்தி வருவதாக குட்டி ரேவதி சொன்னார். போர் நடக்கும் ஈழப்புலத்தில், இராணுவப் பிரசன்னத்திற்கு அஞ்சி, மக்கள் வீட்டுக்குள் முடங்கிய சூனியப் பகலில் சூரியன் மட்டும் தனித்து அலையும் காட்சி கண்முன் விரிந்தது. ‘சூரியன் தனித்தலையும் பகல்’என்ற தலைப்போடு தொகுப்பு என் கையில் கிடைத்த நாளை மறக்கமுடியாது. அதையொரு குழந்தையைப் போல நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதைத் தொடுவதானது குளிர்காலத்தில் கம்பளியின் கதகதப்பை ஒத்திருந்தது. கவிஞர் குட்டி ரேவதி வழங்கிய உற்சாகமேயன்றி அத்தொகுப்பு வெளிவர வேறெந்தச் சாத்தியங்களும் இருக்கவில்லை.
உதிரியாக கவிதைகள் பிரசுரமாகியபோது கிடைக்காத அறிமுகமும் அடையாளமும் அங்கீகாரமும் தொகுப்பாக வந்தபோது கிடைத்திருப்பதாக உணர்கிறேன். ‘சூரியன் தனித்தலையும் பகல் படித்தேன்’என்று யாராவது சொல்லக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி தரும் உந்துதலோடு தொடர்ந்து எழுதுகிறேன். உலகமெல்லாம் சிதறி வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போல, தாய்மண்ணுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அயலகத்தில் காத்திருக்கிறேன். எழுத்து என்னை உயிர்ப்போடிருக்கச் செய்கிறது. எழுத்து என்னை இயக்குகிறது. இப்போதைக்கு எழுத்தே என் தாய்மடி!
நன்றி: புத்தகம் பேசுது
பிற்குறிப்பு: எனது அடுத்த கவிதைத் தொகுப்பும் குறுநாவலொன்றும் வரவிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு எங்காவது தொலைந்து, இந்தத் தொலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டால் 'எடிட்'பண்ணிவிடலாம். இரண்டும் நடப்பதாக இல்லை:)
--
விசாரணைச் சாவடி
எப்போதும் நானெழுதும் கடல்போல
விரிந்த அதிகாரத்தின் பெயரால்
தெருவொன்றில் என்னை நிறுத்துகிறாய்
“உனது பெயர் என்ன…?”
எனது கடவுச்சீட்டு உனது கையிலிருக்கிறது
‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்’
நகுலனை நினைத்தபடி உச்சரிக்கும் எனது பெயர்
யாருடையதோ போலிருக்கிறது
உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது
“இங்கெதற்கு வந்தாய்?”
எனது பூர்வீக கிராமத்து வீட்டில்
பாக்கு மரங்கள் நிழல்விழுத்தி
குளிர்ச்சியுற்ற கிணறுளது..
அதில் எனது பாட்டனின் காலடித் தடமுளதை
1914 எனும் ஆண்டுப் பதிவுளதை
பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறேன்
உன் சீருடை அச்சுறுத்துகிறது.
கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்
உன்னைக் குறித்தெழும் வசவு
உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது
நான் பணிவானவள்
நகங்களும் விழிகளும் பிடுங்கப்படுவதில்
எனக்கும் ஒப்புதலில்லை.
“உனக்கு சிங்களம் தெரியுமா…?”
‘சிங்களம் மட்டும்’தெரியாமற் போனதற்காக
வருத்தத்தில் தோய்த்தெடுத்த புன்னகையோடு
தாழும் தலையை இடம் வலதசைக்கிறேன்
மேலும் பெண்ணுக்குரிய நளினம் மிளிர
கேவலமாகப் புன்னகைக்கிறேன்
எனக்கு அவசரமாகப் போகவேண்டும்.
நீ கேள்விகளாலானவன்
நான் இணக்கமான பதில்களாலானவள்
நன்றி சொல்லிப் பிரியும்போது
இருவருக்கும் மகிழ்ச்சியே!
ஈற்றில் எஞ்சியிருக்கின்றன
இறுகிவிட்ட சில வார்த்தைகள் என்னிடத்திலும்
வெடித்திருக்கக்கூடிய குண்டொன்று உன்னிடத்திலும்.
16 comments:
தங்களின் இளவேனில் ஊடாக படைப்புக்களை வாசித்தேன் ஈழச்சிந்தனை உண்மையாய் அவற்றில் அமர்ந்திரக்கின்றன்.தொடர்ந்து வாசிக்கிறேன் நல்லது நல்லது
வணக்கம் தமிழ் நதி அவர்களே!
ஒரு படைப்பினை அச்சில் கொண்டுவருவது என்பது தமிழ்ச்சூழல் கடினமான பணிதான். அதற்காக செலவிடும் நேரத்தில் புதிதாக இரண்டு படைப்புகளை உருவாக்கிவிட இயலும். அச்சில் வந்த படைப்புகள் விற்பனையாவது அதனினும் கடினமே.
விற்பனைச்சுமை கருதிதான் பதிப்பாளர்கள் பிரதியை அச்சாக்குவதில் முடிந்தவரை காலத்தைத் தள்ளுகின்றனர். தங்களின் படைப்புகள் தரமாகவே வெளிவந்துள்ளன. தங்களின் படைப்பு பற்றி நான் “தமிழ்நதியில் மிதக்கும் பெண்மை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவருகிறேன். விரைவில் தமிழ்மணத்தில் வெளியிடுவேன்.
நன்றி
தங்கள் வாசகன்
சரவணன்
pop-ups varudhu unga sitela.
must be some javascript. look into it. thanks.
பகிர்வுக்கு நன்றிங்க :-)
வாழ்த்துக்கள். புத்தகத்தின் அட்டைப்படத்தை தளத்தில் வெளியிட்டால் மிக நன்றாக இருந்திருக்கும்.
பிரமிப்பாய், பெருமையுடன் பார்க்கிறேன். இந்த தமிழ்நதி வற்றாத ஜீவ நதியாகட்டும். உங்கள் மனம் அமைதியுரட்டும். வாழ்த்துக்கள்.
//உன்னைக் குறித்தெழும் வசவு
உதடுகளில் கத்தியெனத் துருத்துகிறது//
நிஜம்
இடையில் வந்த "நந்தகுமாரனிற்கு மாதங்கி எழுதுவது" பற்றி ஒண்ணையும் காணோம். அதைப் பற்றி எப்போ சொல்லப் போறீங்க.
அடுத்த தொகுப்பா? நாங்க வேட்டைக்கு காத்திட்டிருக்கோம். ரொம்ப ஏமாத்தாம சீக்கிரம் கொண்டு வாங்க தாயி. புண்ணியமா போகும்.
தமிழ்மணத்தில் உங்கள் முகத்தை மறுபடி பார்க்கின்றேன். மகிழ்ச்சியாக இருந்தது.இன்னமும் சூரியன் தனித்தலையும் பகலை நான் வாசிக்கவில்லையே என்ற வருத்தம் உண்டு.
\\தொகுப்பு என் கையில் கிடைத்த நாளை மறக்கமுடியாது. அதையொரு குழந்தையைப் போல நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதைத் தொடுவதானது குளிர்காலத்தில் கம்பளியின் கதகதப்பை ஒத்திருந்தது. கவிஞர் குட்டி ரேவதி வழங்கிய உற்சாகமேயன்றி அத்தொகுப்பு வெளிவர வேறெந்தச் சாத்தியங்களும் இருக்கவில்லை.\\
என்கின்ற சத்திய வாக்குமூலத்தை நல்ல மனிதர்கள் மட்டுமே வழங்கமுடியும். எறிய ஏணிகளை எட்டி உதைக்கும் கூட்டத்திற்குள் மட்டுமே வாழ்கின்ற எனக்கு அவ்வாக்கு மூலம் மிக மிக மகிழ்வைத்தருகிறது. உங்கள் தமிழ்ப்பணி வளர்க.
தமிழ்சித்தன்
தங்கள் தமிழ்மண நட்சத்திர பதிவுகள் சிறக்க வாழ்த்துகிறேன்!!
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
'எங்களுக்குள்ளும் எஞ்சியிருக்கிறது..உங்கள் அடுத்த படைப்புகளுக்கான வாழ்த்துக்களும்!'
அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் என்னைத்தூண்டுகின்றன.. இன்னும் இன்னும் இது போல கவிதைகளை உங்கள் வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன்.. ஏமாத்திடாதீங்க…. மன்னிச்சிருங்க என்னிடம் பிளாகர் இல்ல அன்புள்ள பிளாகர் பயனாளிகளே….! நான் உங்களிடம் ஒரு உதவியாக இதை கேட்கிறேன் நான் ஒரு பிளாகர் உருவாக்கியும் அதை என்னால publish panna முடியல எல்லோரிடமும் கேட்டுப்பார்த்திட்டன் யாருமே உதவல. நானும் எனது கன்னிப்படைப்புகளை வெளியிட ஒரு வாய்ப்பு தருவீங்களா….? தமிழ்நதிக்கு இந்த பையனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி…
அக்கா!
நீங்கள் ஏன் இலங்கைக்கு செல்லவேண்டும்? இங்கேயே உங்களுக்கான பணிகள் பல உள்ளன..சுய பரிதாபம் என்று சிலர் சொல்லுவார்கள்..உங்கள் கவிதைகளை பல வாசிக்கும் போது அதுவே மேலிடுகிறது.. அது உங்களுக்கு வடிகாலாக அமையலாம்..ஆனால் எங்களில் பலருக்கு அது அழுகையையே வரவழைக்கிறது.. தாங்கள் புரட்சி கவிதைகளை தமிழர் விடுதலைக்காக பாரதி போன்று புனைய வேண்டும்..அடிமைபட்டு கிடக்கும் தமிழ்நாட்டு மக்களை விழித்தெழ செய்யவேண்டும்!
வெறுமனே தொப்புள் கொடி உறவு..அவரை கொடி உறவு.. தமிழினம் என்று இருந்தால் சில தமிழ் இன உணர்வாளர்கள் தான் கவலைபடுவார்கள்..எவனுக்கும் தன் வீட்டுக்கு வராத வரை தமிழ்நாட்டில் தெருவில் இறங்கி போராடுவதில்லை..தொப்புள் கொடி உறவு ரீதியாக சொந்தங்களின் பிணைப்பு ஏற்படவேண்டும். ஈழத்தவனுக்கு தங்கள் அக்காவையொ அல்லது தங்கையை பெண் கொடுத்திருந்தால் கட்டாயம் அவன் தன் தங்கைக்காக தெருவில் இறங்கி இருப்பான்..ஏன் போராளியாகவே மாறி இருப்பான்.. எவனுக்கும் இங்கு பாதிப்பு இல்லாததால் 'உச்' கொட்டி கொண்டு திரிகிறான்.. ஏதோ சினிமா போலவும் பிரபாகரன் வருவார் மீண்டும் பழிதீர்ப்பார் என சொல்லுவதோடு
இங்குள்ளவனின் கடமை முடிந்துவிடுகிறது.. இன்றைய தேவை ஈழ தமிழனுக்கு அணுஆயுத வல்லமை ! வெறுமனே போராட்டம் நடத்தி கொண்டிருந்தால் எவனும் மதிக்கமாட்டான் !சாதாரண இசுரேல் இவ்வளவு அரபுநாடுகள் இருந்தும் பாலஸ்தீனனை இந்த பிரட்டு பிரட்டு பிரட்டுகிறதே காரணம் என்ன வலிமை! ஈழ தமிழர்கள் அணு ஆயுததினையும் தாண்டி தங்கள் வல்லமையை பெருக்க வேண்டும் அதை தங்கள் தாய் மண்ணில் போராடுகிறவர்களுக்கு கொடுக்க வேண்டும்! அதுவரை முட்கம்பி வேலியை தான் வைத்திருப்பன் சிங்களன்!
நட்சத்திரப் பதிவராகியதற்கு வாழ்த்துகள் தமிழ்நதி.
நல்ல விசயம். பகிர்வுக்கு நன்றி
இந்தப் பதிவை படிக்கும்போது உற்சாகமாக இருந்தது தமிழ்
Post a Comment