6.03.2009

கோடை இரவுகள்


அணைக்கவியலாத பெருந்தீயாய்
பகல் பற்றியெரிகிறது.
வெயிலுறிஞ்சிய சுவர்களுள்
ஒரு சொல்லும் உயிர்பெறாமல்
வீணே கரைகிறது காலம்.
பாதி இரவில்
மூளை கரைந்தொழுகும்
கனவைக் கலைக்கிறது
மின்வெட்டு.
நரம்புகளுள் ஓடுவது
குருதியில்லை; அனல்குழம்பே!

வெளியில்
ஓரிலையும் அசையவில்லை
நாய்களும் பேயுறக்கம்
சுடுகாட்டில் பிணமொன்று
தீவாயால் மினுக்மினுக்கென்று
அசைந்தசைந்து அழைக்கும்.
இரைந்து கடல் கூப்பிட
ஏதோ துயர் நினைவு....

பகிர
நீயுமில்லை! யாருமில்லை!

‘வான் பரந்த நட்சத்திரங்களுக்கு
வியர்க்குமா? வியர்க்காதா?’
இந்நேரம் எங்கேயோ
சைக்கிளில் பாய்ந்துழக்கி
ஓடி மறைகிறான்
ஒரு சிறுவன்.

நாளை அவன் கதைகளில்
மோகினிகள் உலவக்கூடும்.

10 comments:

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

அருமையான வரிகள்.
பால்யத்தை நினைக்கச் செய்துவிட்டீர்கள் சகோதரி.

அந்தச் சிறுவனாக நானாகிப் பார்த்தேன்.
அன்று தொற்றிக் கொண்ட மோகினி தேவதைகள் இன்னும் விட்டுவிலகவில்லை என்னை விட்டும்...கதைகளிலும்..கனவுகளிலும் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரவினை அழகாக மொழிப்பெயர்த்திருக்கிறீர்கள்.

அருமை

நேசமித்ரன் said...

தணல் எரியும் கோடை பகலுக்குப் பிறகான
யாருமற்ற காற்றறுந்த இரவில்
ஒரு கவிதைக்கு முந்தைய மனவெறுமையை
ஒரு ஓவியன் தனது கையெழுத்தை
ஓவியத்தோடு இணைத்திருக்கும் புள்ளியிலிருந்து
பேசுகிறது இக்கவிதை ...!

bavachelladurai said...

அருமையான வரிகள்

bavachelladurai said...

அருமையான வரிகள்.

கோகுலன் said...

கோடையிரவை அதன் வெம்மையினை அழகாய்ச் சொல்லும் கவிதை தமிழ்நதி...

இறுதிவரிகள் மிக நன்று..

தமிழ்நதி said...

ரிஷான்,

'அன்று தொற்றிக் கொண்ட மோகினிகள், தேவதைகள் இன்னும் விலகவில்லை'என்று எழுதியிருந்தீர்கள். மோகினிகளைப் பிடித்துலுப்பும் முனிகளை என்ன செய்வது:)

நன்றி சாரதா,

சென்னையின் புழுக்கத்தில் மின்வெட்டு என்பது தாங்கவியலாததாக இருக்கிறது. அந்த இரவுகள் நரகத்திற்கு இணையானவை. தப்பியோடிவிடும் திட்டத்தில் இருக்கிறேன்.

நேசமித்திரன்,

உங்கள் பின்னூட்டம் ஒரு கவிதையைப் போலிருக்கிறது. இது பழிக்குப் பழி அல்ல:)

வாருங்கள் பவா,

உங்களைப் போன்றவர்களும் வலையுலகத்தில் பிரவேசித்திருப்பதும் மகிழ்ச்சி தருகிறது. எழுதுங்கள். வாசிக்க ஆவலோடு இருக்கிறோம். திருவண்ணாமலை என்றால், பலருக்கு மலை நினைவில் வரும். சிலருக்குத் தீபம். சிலருக்குச் சித்தர்கள். எனக்கென்றால் வம்சி புத்தக நிலையமே.

கோகுலன்,

இந்தக் கோடையிரவுகளை ஒரு கவிதையைத் தந்தமைக்காக மன்னித்துவிட்டுவிடலாம் என்கிறீர்களா:)

உக்கிர புத்தன் said...

தங்கள் கவிதை படித்தேன்,

கோடை காலத்தை படம் பிடித்து காட்டிவிட்டது.

பதி said...

அருமையான வரிகள் !!!!!!

//சென்னையின் புழுக்கத்தில் மின்வெட்டு என்பது தாங்கவியலாததாக இருக்கிறது. அந்த இரவுகள் நரகத்திற்கு இணையானவை.//

2007ல் மட்டுமே எனக்கு அப்படியொரு அனுபவம் வாய்த்தது !!!!!

//தப்பியோடிவிடும் திட்டத்தில் இருக்கிறேன்.//

அங்கிருந்து தப்பியதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்....!!!!!!!!

butterfly Surya said...

அருமை. அருமை..