6.30.2009

மதுரையில் நடந்த ‘கூடல் சங்கமம்’ -01



ஜூன் 27,28 ஆகிய இரண்டு நாட்களும் ‘கடவு’இலக்கிய அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டோம். அழகர் கோயிலுக்குச் செல்லும் வழியில், ஒரு கிலோ மீற்றர் முன்னதாக ‘ஒயாசீஸ்’ உணவக மண்டபத்தில் அக்கூட்டம் நடைபெற்றது. கவின்மலர், உமா ஷக்தி, தமிழ்நதி ஆகிய மூவரும் ஒன்றாக அந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எங்களுக்குள் திருவிழாவுக்குச் செல்லும் குழந்தைகளின் உற்சாகம் ததும்பிக்கொண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்கள் என்பன ஒருவகையில் காதுகளைக் கழற்றி அடுத்தவர் கைகளில் அல்லது வாய்களில் கொடுத்துவிட்டு அரைத்தூக்கத்திலோ வேறு ஞாபகங்களிலோ இருப்பதுதான் என்றபோதிலும், ஒவ்வொரு தடவை கிளம்பிப்போகிறபோதும் ஏதோவொரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட மனோநிலை கிளரவே செய்கிறது. மக்களின் தேர்தல்கால மறதியையொத்த ஒன்றே மீண்டும் மீண்டும் இலக்கியக் கூட்டங்களை நோக்கி நம்மை இழுத்துச்செல்கிறது. நண்பர்களைச் சந்திப்பது, மிக அரிதாக யாராவது சுவாரஸ்யமாகப் பேசக்கேட்பது, சமகால இலக்கியம் பற்றிய அறிதல், பிரபலங்களின் முகதரிசனம் இன்னபிற அனுகூலங்களும் இல்லாமலில்லை.

அந்த இடத்தைத் தேர்ந்து அப்படியொரு பெயரையும் வைத்த ரசனைக்காரரைப் பார்க்க முடியவில்லை. பறவைகள், குரங்குகள், செழித்தடர்ந்த மரங்கள், பசுமைபடர்ந்த புல்தரைகள், சற்றே தொலைவில் மலை… இயற்கையின் அழகு அங்கு இறைந்து கிடந்தது. ஒரு நீளமான மண்டபத்தில் நாற்காலிகள் வழக்கம்போல நிரைகளாகப் போடப்பட்டிருந்தன. முதல் நாள் மேகமூட்டத்தோடு காலநிலை கொஞ்சம் கருணை காட்டியது. அடுத்த நாள் வெயில் அனலாய் பொரிந்து தள்ளிவிட்டது.

எழுதும் வசதி கருதி இந்த கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர்… இன்னபிறவற்றைத் தவிர்த்துவிடுகிறேன். கவிஞரும் உரைநடையாளருமாக இருப்பவர்களை எப்படி விளிப்பதென்பதில் மெல்லிய குழப்பம் இருக்கிறது. முதலில், கூட்டத்தை ஒழுங்கமைத்த தேவேந்திர பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார். அதுவொரு நன்றியுரை போலவே அமைந்திருந்தது.

‘காலச்சுவடு’ஆசிரியர் கண்ணனது வாழ்த்துரையில், தமிழிலக்கியம் உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மிகுந்திருந்தது.

“குடிப்பதற்கும் கும்மாளமிடுவதற்குமான நிகழ்ச்சிகளாக இலக்கியக் கூட்டங்கள் சில சமயங்களில் அமைந்துவிடுகின்றன. எனக்கு குடி தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகள் எதுவும் இல்லை என்றபோதிலும், போதையானது அவதூறுக்கும் வன்முறைக்கும் இட்டுச்செல்லத்தக்கது என்றவகையில் இலக்கியக் கூட்டங்களில் அதைத் தவிர்த்துவிடலாம். டெல்லியில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது, என்.சி.பி.எச். பதிப்பகப் படைப்புகளைத் தவிர வேறெதையும் அங்கு காணமுடியாதிருந்தது வருத்தமளிப்பதாக இருந்தது. உலகப் புத்தகச் சந்தை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தமிழிலக்கியம் உலகளாவிய அளவில் அறியப்படவில்லையே என்ற வருத்தம் மேலிடுகிறது. மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலான புத்தகங்களை அங்கு காணும்போது, நமது மொழி தன்னுள்ளேயே சுருங்கிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு முக்கியமான காரணமாக, நம்மிடையில் மொழிபெயர்க்கத்தகுந்த அறிவுடைய இருமொழிப் புலமையாளர்கள் குறைவாக இருப்பதைச் சொல்லலாம். தேசிய ரீதியிலும் தமிழ்ப்படைப்புகள் குறிப்பிடும்படியான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்லமுடியாது. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மொழிபெயர்ப்புகளே வெளிவந்திருக்கின்றன. சாகித்திய அகாடமி போன்ற அமைப்புகளில் ஒன்றேனும் தமிழ்நாட்டினை மையமாகக் கொண்டு இயங்காதிருப்பதை, மேற்குறிப்பிடுவனவற்றின் பிரதிபலிப்பெனவே கொள்ளவேண்டும்.”

அடுத்து சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை வழங்கினார்.

“நாங்கள் எழுதவந்த 1970களில் இருந்த நிலைமையிலும் பார்க்க இப்போது நிலைமை வேறுபட்டிருக்கிறது அன்றேல் மேம்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். முன்புபோலல்லாது இப்போது பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. அத்துடன் புதிது புதிதாக நிறையப்பேர் எழுதவந்திருக்கிறார்கள். கவிதைகள், சிறுகதைகள் என படைப்பூக்கம் அதிகரித்து நம்பிக்கையூட்டும் விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாசக மனோநிலை எதிர்வளமாகத் தொழிற்படுகிறதோ என்று தோன்றுகிறது.

கவிதைகளை அறிவோடு பார்ப்பதா? உணர்வோடு பார்ப்பதா? என்ற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு. ஆனால், இயல்பாக வந்து நமது மனதுள் உட்கார்ந்துவிடும் கவிதைகளே வெற்றிபெறுகின்றன.”

‘உயிரெழுத்து’ஆசிரியர் சுதிர் செந்திலை வாழ்த்துரை வழங்கும்படி அழைத்தபோது, ‘உயிர்மை’என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார் தேவேந்திர பூபதி. கூட்டத்தில் சிரிப்பலை சிதறியது. “காலச்சுவடு, உயிர்மை என்று சொல்லிப் பழகிய உதடுகள்”என்றார் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்.

‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதிர் செந்தில் தனது வாழ்த்துரையில், ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவதிலுள்ள சிரமங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். நிறைந்த சபையொன்றைக் கூட்டிய தேவேந்திர பூபதியை அவர் பாராட்டினார். தன்னால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுள் சாரு நிவேதிதாவை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகச் சொன்னார். புத்தக விமர்சனங்கள் பழகிய பாதையிலேயே செல்லாமல், அயர்ச்சி தராத புதிய பாணிக்கு நகர்த்தப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதாவது, விமர்சிக்கப்படும் புத்தகங்களிலுள்ள மதம், அவை முன்வைக்கும் வரலாறு ஆகியன தொடர்பாகவும் விவாதிக்கப்படல் அவசியமென்றார். விமர்சன வடிவ மாற்றத்தினை வலியுறுத்தி விடைபெற்றார் சுதிர் செந்தில்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தனது வாழ்த்துரையில் இப்படியொரு கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலுள்ள சிரமங்களையும் அதை எதிர்கொண்டு, தேவேந்திரபூபதி சிறப்பாக கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதையும் சிலாகித்துப் பேசினார்.

“ஏனைய அரங்கங்களைப் போலல்லாது இது நிறைந்ததொரு அரங்கம்@ இங்கே கூர்தீட்டப்பட்ட சிந்தனையுடைய படைப்பாளிகள் கூடியிருக்கிறீர்கள்.

இன்று மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்துகொண்டே போகிறது. அவர்கள் வெகுஜன இதழ்களைக் கூட வாசிப்பதில்லை. பரீட்சைகளின்போதுகூட நாம்தான் அவர்களுக்காகக் கவலைப்படவேண்டியதாக இருக்கிறது. கேட்டால், “அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். நீங்க கவலைப்படாதீங்க சார்”என்று எங்களுக்குத் தேறுதல் சொல்கிறார்கள். இந்நிலையில் மாணவர்களிடையே படைப்பாளிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கின்றன.”

பேராசிரியர் தொ.பரமசிவம் ‘பாராட்டுக்குரிய கவிஞர் தேவேந்திர பூபதி அவர்களே’என்ற விளிப்புடன் ஆரம்பித்தார்.

“ஒயாசிஸ் என்ற பாலைவனச்சோலையிலே இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இலக்கிய உலகமும் ஒரு பாலைவனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. கண்ணன் முன்வைத்துப் பேசிய விடயம் முக்கியமானது. இந்தியம், தேசியம் என்ற மைய நீரோட்டத்தில் தமிழகம் இணைந்திருக்கிறதா? அல்லது விலக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதா? எந்தத் தேசிய நிறுவனமும் தமிழ்நாட்டுக்குள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டுச் செயற்படுகிறார்களா?

அண்மைய நிகழ்வுகளால் மரணம் என்ற அச்சம் மரத்துப்போய்விட்டிருக்கிறது. சடலங்கள் காய்ந்து தீய்கிற வாடை இன்னமும் வந்துகொண்டுதானிருக்கிறது. அங்கே ஒரு நாள் குண்டுவீச்சு நிறுத்தப்பட்டால்கூட ஒரு கவிதை பூக்கிறது. இங்கே புதுக்கவிதையில் ‘சொற்களின் வறுமை’யை நான் பார்க்கிறேன். அதற்குக் காரணம் இவர்களிடம் வேர்களைப் பற்றிய ஞானம் இல்லை. பழந்தமிழிலக்கியங்களிடம் பரிச்சயம் செய்துகொள்வதில்லை. எழுத வருகிறவர்கள் பழந்தமிழிலக்கியங்களையும் படித்திருப்பது நல்லது.”

தேநீர் இடைவேளியின் பின் 12:15க்கு மீண்டும் கூட்டம் ஆரம்பமாகியது.

கவிஞர் கலாப்பிரியா தலைமையில் கவிதை நூல் விமர்சனம் இடம்பெற்றது. கலாப்பிரியா தனது தலைமையுரையில் பலருடைய கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். ‘கணந்தோறும் சிதைவுறும் சூழல் இன்றைய கவிதைக்கான காலம்’ என்ற வரிகள் கவிதையாய் மனதில் வந்து அமர்ந்துகொண்டன.

லஷ்மி மணிவண்ணனின் ‘எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம்’என்ற தொகுப்புக்கான விமர்சனத்தை குலசேகரன் வழங்கினார்.

“லஷ்மி மணிவண்ணனின் கவிதைகளிடையே ஒரு மையச் சரடு இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய தன்மையைக் காணமுடிகிறது. அவருடைய கவிதைகளுள் கடவுள் பல இடங்களில் பல வடிவங்களில் வந்து செல்கிறார். அவருடைய கிராமத்துச் சாமிகள் கலகக்காரர்களாயிருக்கிறார்கள்.

வீட்டைத் துறந்து வெளியேறும் அவாவை வெளிப்படுத்துகின்றன அவருடைய பல கவிதைகள். ‘சங்கருக்குக் கதவற்ற வீடு’என்ற தலைப்புக்கிணங்க வெளியேறல் மறுபடி மறுபடி நிகழ்கிறது. வெளியேறவும் மீண்டும் திரும்புவதற்கும் ஏற்புடைய வீடு இவர் கவிதைகளில் கனவாயிருக்கிறது.

பள்ளிகளை மியூசியம்களாக கவிஞர் சித்தரிக்கிறார். குடிப்பதென்பது எதிர்ப்புணர்வின் அடையாளமாக இவர் கவிதைகளில் வெளிப்படுகிறது. அன்பைக் குடியின் வாயிலாக இவர் தேடுகிறார். ஒரு மாற்று யதார்த்தத்தின் விழைவினை மணிவண்ணனின் கவிதைகளில் காணமுடிகிறது. சாத்தானைக் கடவுளாகவும் குடிப்பதை சாகசமாகவும் கொள்வதை எதிர் யதார்த்தத்தின் ஏதனங்களாகக் காண்கிறோம்.”

கரிகாலனின் ‘தேர்ந்தெடுத்த கவிதைகள்’தொகுப்புக்கான விமர்சனத்தை சாஹிப் கிரான் வழங்கினார்.

“ஏழு தொகுப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கும் கரிகாலனின் கவிதைகளை, இதுவரையில் ஒரு தொகுப்பையேனும் கொண்டுவந்திராத நான் விமர்சிப்பதென்பது கொஞ்சம் தயக்கம் தருவதும் சிரமமானதும்தான். கரிகாலன் அயராத உழைப்பின் வழியாக தொடர்ச்சியான இருப்பைப் பேணி வருகிறார். இவருடைய கவிதைகளில் தத்துவங்களின் மூலம் நிரப்பப்படும் வெளியினை அடையாளம் காணமுடிகிறது. ‘எதிர்வினை’என்ற கவிதையின் இறுதிவரிகள் பாலஸ்தீனியக் கவிஞர் மொஹம்மது தார்வீஷினை நினைவுபடுத்துகின்றன.

தத்துவத்தைக் கவிதையாக மாற்றும் முயற்சியானது மொழியாளுமையின் பலமாக இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே நீர்த்துப்போய் கசக்கிறது. கரிகாலனின் கவிதைகளில் சில இடங்களில் காணப்படும் பட்டியலிடும் தன்மை சலிப்பூட்டுவதாகவும் அமைந்துவிடுகிறது.

தொடர்ந்து எழுதுவதற்கான ஆத்ம ஊற்று எங்கிருந்து பெருகுகிறதென்று நான் யோசிக்கிறேன்.

விமர்சனத்தின் இறுதியில் சாஹிப் கிரானினால் வாசிக்கப்பட்ட சில வரிகள் கரிகாலனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என எழுதியிருந்தேன். அது லாவோட்சு அவர்களுடையது என அறியத்தந்த 'டாங்கு'விற்கு நன்றி. அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன.

“எவனொருவன் உண்மையாக இருக்கிறானோ
அவன் பகட்டுவதில்லை.
எவனொருவன் பகட்டுகிறானோ
அவன் உண்மையாக இருப்பதில்லை”

கலாப்பிரியா அவசரமாக வெளியில் செல்லவிருப்பதாகக் கூறி, தனது இடத்தில் யுவன் சந்திரசேகரை வந்தமர்ந்து நிகழ்ச்சியை நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

“அவருடைய இடத்தில் நான் இல்லை. அவர் விட்டுச்சென்ற இடத்தில் இருக்கிறேன்”என்ற தொனிப்படப் பேசி நிகழ்ச்சியைக் கையேற்றுத் தொடர்ந்து நடத்தினார் யுவன் சந்திரசேகர்.

கண்டராதித்தனின் ‘சீதமண்டலம்’தொகுப்புக்கான விமர்சனத்தை ‘புது எழுத்து’மனோன்மணி வாசித்தளித்தார்.

“பொருந்தாக் காமமும் பொருதும் கவிதையும் என்ற பொதுமையில் இதைப்பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். நகுலனுக்கு சுசீலாவைப் போல, கலாப்பிரியாவுக்கு சசியைப் போல, கண்டராதித்தனுக்கு நித்யா என்றொருத்தி இருக்கிறாள். ஆனால், இவள் கனவோ கற்பனையோ அல்ல. இரத்தமும் சதையுமான ஒருத்தி.

கண்டராதித்தனின் செய்நேர்த்தியும் அனுபவமும் அவருடைய கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன. ‘வானரம் இழந்த அருவி’என்ற கவிதை சிலாகிக்கத்தக்க அற்புதமானதொன்றாகும். ‘பாவம் கொடூரம்’என்ற தலைப்பு மலையாளத்திலிருந்தும், ‘சீதமண்டலம்’என்ற தலைப்பு சமஸ்கிருதத்திலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. (இதை மனோன்மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் கூட்டத்தில் அமர்ந்த நிலையில் வெளியில் சென்றுவிட்டேன்.)



அடுத்து, அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்புக்கான விமர்சனத்தை இசை வழங்கினார்.

“அய்யப்ப மாதவனை நினைக்கும்போதே, அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதுபவர் என்ற நினைப்பும் கூடவே வந்துவிடுகிறது. அவ்வாறு தொடர்ந்து நிறைய எழுதக் காரணம் என்ன என்று சிந்தித்திருக்கிறேன். அக உந்துதலா? கவிதை வழியாக அவர் தன்னை வெளியேற்றிக்கொள்கிறாரா? தன்னைக் கவிஞராக நிரூபித்துக்கொள்ளும் முயற்சியா?

கவிதைக்கான சொற்கள் அய்யப்பனுக்குள்ளேயே இருப்பதைப் போலவும் அவர் அவற்றை அவ்வப்போது எடுத்து வைத்துக்கொண்டு எழுதுவதுபோலவும் எனக்குத் தோன்றுகிறது. ‘கவிதையிடம் பயபக்தியற்றிருக்கும் நிலை’யை இவரிடம் காண்கிறேன். ‘எஸ். புல்லட்’ஆகிய தலைப்புகளை இதற்கு உதாரணமாகச் சொல்லாம். இத்தன்மையானது சாதகங்களையும் பாதகங்களையும் கொண்டிருக்கிறது. போதையின் கிறக்கமும் கலவியின் ஏக்கமும் மிக்கவை இவர் கவிதைகள்.

நான் சொல்லக்கூடியது ஒன்றுதான்: நண்பா! கவிதைகளை அவ்வளவு நம்பாதே”

‘எனக்கு கவிதை முகம்’என்ற, அனாரின் தொகுப்புக்கான விமர்சனத்தை சுகுமாரன் வழங்கினார்.

“ஈழத்துப் பெண் கவிஞர்களை அடையாளப்படுத்தும் முகங்களில் முக்கியமானதாக அனாருடையதைச் சொல்லலாம். பெண்ணால் எதிர்கொள்ளப்படும் சமூகச் சிறுமைகள், புறக்கணிப்புகள் ஆகிய அனுபவங்களை அனார் தன் கவிதைகளில் பதிவாக்கியிருக்கிறார். பெண்ணுக்கு மட்டுமே சாத்தியமான – பெண் நிலையிலிருந்து தோன்றும் அனுபவ வெளிப்பாட்டினை அவருடைய கவிதைகளில் காணலாம்.

இவரது கவிதைகளில் ஒரு ஆணை முன்னிலைப்படுத்தி, விளிக்கும் தொனியினைப் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, தன்னிருப்பு சார்ந்த அலைக்கழிவு ஆகியனவற்றைப் பேசும் அனார் கவிதைகளின் சிறப்பம்சமாக, நேரடியான கவிதைகளிலிருந்து வேறுபட்டிருக்கும் தன்மையினைச் சொல்லலாம். அதனாலேயே அனார் கவிதைகளை ஈழத்தின் நவீன கவிதை முகம் என்று சொல்கிறேன்.

இரண்டு மையங்களைக் கொண்டு இயங்குகின்றன இவரது கவிதைகள். முதன்மையாக இயங்குவது காதல். இரண்டாவது, வெளித்தெரியாத நுட்பமான அரசியல். முன்னைய ஈழத்துக் கவிதைகளிலிருந்து அனாரின் கவிதைகள் வேறுபடுமிடமாக ஒன்றைச் சொல்லலாம். இவருடைய கவிதைகளில் ஈரக்கசிவு தணிந்து ஒரு வெப்பம் இருக்கிறது.”

அதுவரை நிகழ்த்தப்பட்ட கவிதை விமர்சனங்களைப் பற்றிக் கருத்துரை வழங்குமாறு வியாகுலன் அழைக்கப்பட்டார். விமர்சகர்களது கருத்துக்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல் தனக்குள் அந்தக் கவிதைகள் விளைவித்த எண்ண அலைகளை அவர் சபையோடு பகிர்ந்துகொண்டமையானது, எடுத்துக்கொண்ட விசயம் தொடர்பில் அவரது நேர்த்தியாக உழைத்திருப்பதைக் காட்டியது.

அதனையடுத்து வந்த சில மணிநேரம் எனதாக இருக்கவில்லை. திடீரென தலைசுழன்றது. கண்கள் இருண்டுபோக காலம் தன்பாட்டில் விரைந்தது. உறைந்தது. பாலைநிலவனின் ‘பறவையிடம் இருக்கிறது வீடு’தொகுப்பைப் பற்றி பா.வெங்கடேசன் பேசியதில் கவனம் குவிக்க முயன்றேன். முடியவில்லை. அத்தொகுப்பைக் குறித்து பா.வெங்கடேசன் சற்று கடிந்து பேசியதாக உமா ஷக்தியிடமிருந்து பிறகு தெரிந்துகொண்டேன். க.மோகனரங்கனின்‘இடம்பெயர்ந்த கடல்’ பற்றி ராணி திலக் பேசினார். கடலின் ஒரு துளியைக் கூட உறிஞ்ச முடியாதபடி உடல் ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. யவனிகா சிறீராமின் ‘திருடர்களின் சந்தை’யைப் பற்றி எச்.ஜி.ரசூல் பேசியது எங்கோ தொலைவில் ஒலித்தது. கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’ குறித்து ஆனந்த் விமர்சித்துக்கொண்டிருந்தவேளையில் எழுந்து கூட்டத்திலிருந்து வெளியேறினேன். சங்கரராம சுப்பிரமணியனின் ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’என்ற தொகுப்புக்கான விமர்சனத்தை நரன் வழங்கியதாகச் சொன்னார்கள். கடற்கரை இரண்டாம் அமர்வினை முடித்துவைத்து கருத்துரை வழங்கினார். நரனின் விமர்சனம் நன்றாக இருந்ததா இல்லையா தெரியாது, அன்று எட்டு மணியளவில் தொலைபேசியில் அழைத்து “சாப்பாடு வாங்கி வந்து தரவா? ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்”என்ற பண்பும் பரிவும் நெகிழ வைத்தது. வெளியூர் வந்திருக்கும்போது நமக்குத் தெரிந்தவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அக்கறை எல்லோரிடமும் இருக்குமென்று தோன்றவில்லை.

கவிதை குறித்த மூன்றாம் அமர்வு கொஞ்சம் ஆரவாரத்தோடு ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். மூன்றாம் அமர்விற்குத் தலைமையேற்று நடத்த அழைக்கப்பட்டிருந்த தேவதச்சன் வராத காரணத்தால் ஆதவன் தீட்சண்யா தலைமையில் அந்நிகழ்வு நடைபெற்றது.

தேவேந்திர பூபதியின் ‘அந்தர மீன்’தொகுப்பினை விமர்சிக்க க.மோகனரங்கன் வந்தபோது, ‘தேவேந்திர பூபதி தன் கையாலேயே எழுதிய அந்தர மீன் தொகுப்பைப் பற்றி இப்போது க.மோகனரங்கன் விமர்சிக்கவிருக்கிறார்’என்று ஆதவன் தீட்சண்யா ஆரம்பித்துவைத்திருக்கிறார். “தேவேந்திர பூபதிக்கு யவனிகா சிறீராம்தான் கவிதைகளை எழுதிக்கொடுக்கிறார்” என்று வால்பாறைக் கூட்டத்தில் பேசியதன் நீட்சியாகவே அந்த ‘முன்னுரை’வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆதவன் பேசுகையில், “தேவேந்திர பூபதியை எனக்கு ஆறேழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் கவிதை எழுதும்போது கூட நான் உடன் இருந்திருக்கிறேன். அவருக்கு யவனிகா கவிதைகள் எழுதிக்கொடுக்கிறார் என்று சொல்வது அநியாயமாக இருக்கிறது”என்றாராம்.

“நீங்களே அவரது கவிதைகளைப் பற்றிச் சொல்லிவிட்டால் நான் எதைப் பேசுவது?”என்று மோகனரங்கன் கேட்டிருக்கிறார்.

(இலக்கியக்காரர்களது அக்கப்போர் தாங்க முடியவில்லை என்று இதை எழுதும்நேரம் தோன்றுகிறது.)

சம்பந்தப்பட்ட யவனிகா சிறீராம் வந்து கொஞ்ச நேரம் இழுத்துப் பறித்து விசயத்திற்கு வராமல் பேச்சை எங்கோ அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்போது தேவேந்திர பூபதி இடைமறித்து “விசயத்துக்கு வாங்கப்பா… நீங்களா எனக்குக் கவிதை எழுதிக்கொடுக்கிறீர்கள்?”என்று கேட்டாராம்.

“ஐயையோ! யார் சொன்னது? உங்க கவிதையை நீங்க எழுதுறீங்க. என் கவிதையை நான் எழுதுகிறேன்”என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து ‘காலச்சுவடு’கண்ணன் ஒலிபெருக்கியை வாங்கி தானும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புவதாகக் கூறினாராம்.

(கிசுகிசு எழுதுகிற தொனி இப்போது முற்றிலுமாக வந்துவிட்டது)

“சம்பந்தப்பட்டவருடைய கவிதைகளைப் பிரசுரிக்கிறவன் என்ற வகையில் நானும் இதில் கருத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தேவேந்திர பூபதியை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். அவருடைய சொல்லாடல்களுக்கும் யவனிகாவின் சொல்லாடலுக்குமிடையிலான வித்தியாசமும் எனக்குத் தெரியும். ஒருவருடைய எழுத்தை அவரதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளாமலா நாங்கள் பதிப்பிற்கு எடுத்துக்கொள்கிறோம்? எழுதி வாங்குவது எத்தனை அவமானமோ எழுதிக் கொடுப்பதும் அல்லது அப்படிச் சொல்வதும்கூட அதற்கிணையான அவமானத்தைக் கொடுக்கக்கூடியதே”என்றார் கண்ணன்.

ந.முருகேசபாண்டியன் தானும் சில வார்த்தைகள் சொல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.

“யவனிகா சிறீராம் போல இப்போது ஏறத்தாழ முப்பது பேர் எழுதிக்கொண்டிருக்கிறார். பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. அந்தச் சாயலில் எதையும் தேவேந்திர பூபதியின் எழுத்துக்களில் நான் காணவில்லை. அவருடைய ‘வெளிச்சத்தின் வாசனை’தொகுப்புக்கு நான் உயிரெழுத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறேன். தேவேந்திரபூவதி மீதான இந்த அவதூறை நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சொந்தப் பிரச்சனைகளுக்காக இப்படி மற்றவரது எழுத்தின் மீது சேற்றை வாரியிறைப்பது நியாயமான செயலாகத் தோன்றவில்லை.”என்றார்.

மூன்றாம் அமர்வில் சி.மோகனின் ‘தண்ணீர் சிற்பம்’பற்றி சமயவேலும், யூமா வாசுகியின் ‘என் தந்தையின் வசிப்பிடத்தைச் சந்தை மடமாக்காதீர்’குறித்து கூத்தலிங்கமும், தமிழச்சி தங்கபாண்டியனின் ‘வனப்பேச்சி’யை விமர்சித்து யவனிகா சிறீராமும் கட்டுரை வாசித்தார்கள்.

கவிதை நூல் விமர்சனங்கள் மற்றும் ‘எழுதிக் கொடுப்பது’என்ற அக்கப்போருக்குப் பிறகு மாலை நடைபெற்ற உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.

‘நிகழ்ச்சி எப்படி நடந்தது?’என்று, அன்றிரவு குறுஞ்செய்திகளும், தொலைபேசிகளும் விசாரித்தன.

“மிகத் திறம்பட ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நேரம் கைக்குள் இருந்தது. வந்திருந்த அனைவரும் ‘இப்படி ஒருவர் சிரமப்பட்டு நடத்துகிறாரே’என்ற பொறுப்புணர்வோடு நடந்துகொண்டார்கள். வழக்கமாக எதிர்பார்க்கப்படும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. குறையற்ற ஒரு குறை இருந்தது. அதாவது, சுதிர் செந்தில் சொன்னதுபோல விமர்சன வடிவ மாற்றத்தின் அவசியத்தினை உணர்ந்தேன். ஒரு புத்தகத்தை எடுத்து, (கூட்டத்தில் இருப்பவர் அதை வாசிக்காமலும் இருப்பார்) தவளையின் வயிற்றைக் கீறிப் பிரேதப் பரிசோதனை நடத்துவதுபோல சிறிது நேரம் பேசிவிட்டுப் போவது சலிப்பூட்டுவதாக இருக்கிறது. வேறெந்த முறைகளைக் கையாண்டு விமர்சிக்கலாம் என்பதைக் குறித்து நாம் இனிச் சிந்திக்க வேண்டும்.”

பாதி நாளைக் கழித்தும், பதிவு மிகவும் நீளமாக அமைந்துவிட்டது. அதைச் சுருக்கினால் எதுவோ குறைகிறது. 28ஆம் திகதியன்று நடந்த சிறுகதை குறித்த கலந்துரையாடல் பற்றிய பதிவை நாளை வலையேற்றுகிறேன். அது இத்தனை நீளமாக இருக்குமெனத் தோன்றவில்லை.

சில திருத்தங்கள் இருந்தன. சுட்டிக்காட்டிய 'டாங்கு'விற்கு நன்றி.

11 comments:

rvelkannan said...

நன்று.
நா.ஜெயபாஸ்கரன் உடைய கருத்துரையும் குறுப்பிட தகுந்ததாக
இருந்தது.
முக்கிய குறிப்புக்களை அழகாக, வரிசையாக கூறும் திறம் உள்ளது உங்களிடம்.

தமிழ்நதி said...

மன்னிக்க வேண்டும் வேல்கண்ணன்,

ந.ஜெயபாஸ்கரன் உரை நிகழ்த்தியபோது நான் அங்கு இருக்கவில்லை. வேறு பரபரப்புகளில் அதைப் பற்றி யாரும் சொல்லவுமில்லை. அவர் என்ன பேசினார்? அறிய ஆவலாக இருக்கிறேன். வேறு யாரிடமாவது கேட்டென்றாலும் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம். அப்போதுதான் இப்பதிவு முழுமை பெறும்.

நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மெதுவாக, முழுசும் படித்தேன், நிறைய எழுத்தாளர்களை, புத்தகங்களைப் பற்றி அறிய முடிந்தது.

அழகாக தொகுத்தளித்திருக்கிறீர்கள் தமிழ்.

நன்றி.

ச.முத்துவேல் said...

பதிவிற்கு நன்றி அக்கா. இப்போதுதான் நான் மதுரை சென்றது முழுமையடைந்ததுபோல் இருக்கிறது( அடுத்த பதிவுடன்). உங்கள் மற்றும் உமாஷக்தியின் பதிவைத்தான் நம்பி எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பாலைவனச்சோலை பற்றி நீங்கள் சிலாகித்து எழுதுவீர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
எழுதிவிட்டீர்கள்.

நேசமித்ரன் said...

வழக்கம் போல் உங்கள் 'கருப்பு பெட்டி' தெளிவாக பதிவு செய்திருக்கிறது
உடல்நலக்குறைவிலும்.உங்கள் விசைப்பலகையும் தன் பங்குக்கு அழகு சேர்த்திருக்கிறது .கவிதை உரைநடை சட்டை போட்டுக்கொண்டு ....

rvelkannan said...

நா.ஜெயபாஸ்கரன் கருத்துரையின் சுருக்கம்:
"தமிழில் இளைய தலைமுறையினரிடம் விமர்சன போக்கு இன்னும் ஆழமாகவும் பர ந் து விரிவடைய வேண்டும். உதாரணமாக யூமா. வாசுகியின் 'என் த ந் தை இருப்பிடத்தை ' என்ற பதம் எளிமையாக
ஏற்றுக்கொள்ள கூடாது. ஒரு நிண்ட தொன்மத்தின் பின்புலமாகவே நான் கருதுகிறேன். மேலும் இதை பற்றிய விமர்சன போக்கு இதனைப்பற்றிய் படிமத்தை நீர்த்து போகமல் இருக்க வேண்டும் "

எஸ். எஸ். ஜெயமோகன் said...

தமிழ் நதி,

இரண்டு தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், அங்கே ஒரு போலிஸ் காரரை நிறுத்த வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.

அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது.

எஸ். எஸ். ஜெயமோகன்

soorya said...

அமைதியாக இருந்து வாசித்தேன்.
நன்றி.
எப்பொழுதாவது நான் எழுதும் கிறுக்கல்களை உவந்தேற்கும் ஒரு போராளி இருந்தான்.(அவன் இப்போ வீரச்சாவு). அவனைக் கூட்டிக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போனேன்.
கூட்டமுடிவில் அவன் சொன்னான்..
...அண்ணை, எனக்கு இலக்கியம் பிடிக்கும். ஆனால் இலக்கியக்காரரைப் பிடிக்காது......!
என்று.

ஈரோடு கதிர் said...

ஒருவார காலமாக நானும் கூடல் சங்கமத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டு கடைசி நேரத்தில் கைவிட்டேன். பெரியதொரு இழப்பாகவே கருதுகிறேன். உங்க‌ள் தொகுப்பை ப‌டிக்கும் போது மேலும் வ‌ருத்த‌ம் வ‌ருகிற‌து.

எப்ப‌டியாயினும் நல்ல தொரு தொகுப்பிற்கு நன்றி தமிழ்நதி

Kavitha said...

நல்ல பதிவு. கண்ணன் பேசும்
போது பூபதி பற்றி மட்டும் பேசவில்லை. பெண் கவிஞர்கள் எழுத தொடங்கியிருந்த
போது அவர்களுடைய கவிதைகளை பிற ஆண் கவிஞர்கள் எழுதித் தருவதாக பரவலாக இருந்த கிசு கிசுக்களை பற்றி சொன்னார்.
(இது போன்ற கிசு கிசுக்கள் பெண் எதிர்ப்பு மனோ நிலையிலிருந்து உருவாவதாக எனக்கு தோன்றியது.)
அதே போல அவர் குற்றஞ் சாட்டும் போது கிசு கிசு பாணியில் குற்றஞ் சாட்டாமல் ஆதாரபூர்வமாக அவர்களுடைய ஸ்டைல், டெக்ஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் பேச வேண்டும் என்றார்.
எனக்கு இந்த இரண்டு விஷயங்களுமே முக்கியமாக பட்டது.
நன்றி.

jerry eshananda said...

beloved tamilnathi,i've been reading your blog for the last couple of months.you are making stupendous success on tamil blogging.you rock tamilnathi.all expectin your blog will be perennial flow forever and ever.