12.31.2006

நேற்றிருந்தேன் அந்த ஊரினிலே….



ஊராசைக்கும் உயிராசைக்கும் இடையில் தீராத போட்டி. வேகவெறியால் உந்தப்படும் ஓட்டக்காரர்களைப் போல- ஒன்றை மற்றொன்று பின்தள்ளுவதும், பின்தள்ளப்பட்டது முண்டியடித்துக்கொண்டு முன்னே வருவதுமாக மனம் சில நாட்களாக அலைக்கழிந்துகொண்டிருந்தது. ஈற்றில், விமானத்தின் குறுகிய சாளரத்தின் ஊடாக மேகத்தின் வெண்மையைக் கண்டு வியந்துகொண்டிருப்பதில் முடிந்தது.

விமானம் தலைதெறிக்க ஓடி நிற்கும்போது வழக்கமாக மனசுள் ஒரு மலர்ச்சி பரவும். மிகப் பிடித்த பாடலை எதிர்பாராத இடத்தில் கேட்டதுபோலிருக்கும். ஆனால், இம்முறை அதைக் காணவில்லை. விடுதிக்குப் போகும் வழியெல்லாம் போர் குறித்த பயம் அலைந்துகொண்டிருப்பது போலிருந்தது. பயத்தின் விழிகளால் பார்ப்பதாக என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், கொழும்பை அடைந்ததும், என்னை நானே ஏமாற்றிக்கொண்டது புரிந்தது. எந்தக் கணத்திலும் வெடித்துவிடக்கூடிய குண்டின் நிலையிலிருக்கிறது கொழும்பு. இராணுவத்தின் துப்பாக்கி தயார்நிலையில் விழித்திருக்கிறது. பரிசோதனைச் சாவடிகளில் உயர்த்திய கையுடன் வேற்றுக் கரங்கள் உடல் தடவப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். ஆனால், அந்நிய மொழிக்கும், கடவுச்சீட்டுக்கும் இன்னும் மதிப்பு அழிந்துவிடவில்லை.

ஞாபகங்களாய் அழைக்கிறது ஊர். யாழ்ப்பாணத்தில் வீடு கட்டாமல் இடைநடுவில் வவுனியாவில் ஒரு கிராமத்தில் கட்டியது தற்செயலாக நிகழ்ந்த, இருந்திருந்து மகிழ்வு தரும் விடயம். “மாதங்களில் அவள் மார்கழி”என்று கவிஞர் அனுபவித்துத்தான் எழுதியிருக்க வேண்டும். ஊருக்குப் போகும் வழியெல்லாம் பச்சை விரிப்புத்தான். கண்களை மூடினாலும் உள்ளேயே படிந்துவிட்டாற்போன்ற மார்கழிப் பச்சை! வீதியை அண்டி வயல்கள் தொடங்கி உள்ளேகி சற்று தொலைவில் தென்னை மரங்களில் முடிகிறது. சில இடங்களில் தம் தொலைவால் நீலச் சாயத் தோற்றத்தில் மாயை காட்டும் மலைகள் பரவசப்படுத்துகின்றன. “ஐயோ…!இந்த அழகிய தீவில் வாழ முடியவில்லையே…”என்ற ஏக்கம் என்றைக்கும்போல அன்றைக்கும் எழுந்தது. உரிமைகள் அற்றது சொர்க்கமெனினும் வாழ உகந்தது அல்ல என்று சமாதானப்படுத்திக்கொள்வதன்றி வேறென்ன வழி…?

கிறிஸ்மஸ் இற்கு முந்தைய நாள் பரபரப்பில் வாழத் தேர்ந்தெடுத்த ஊர் இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட சனப்புழக்கம் குறைவுதான். விழிகளில் பதுங்கியிருக்கிறது பயம். ஒரு வெடிச்சத்தத்தில் உயிரிழந்து உள்ளொடுங்கிப்போவதற்குரிய சாத்தியங்களையே அதிகம் கொண்டிருக்கும் நிச்சயமின்மையில் வாழ்ந்துகொண்டிருப்பது எத்தனை துயர்மிக்கது.

வீடு என்பது ஆசுவாசம், தாய் மடி, ஞாபகங்களின் பெட்டகம். போர் சிரிப்பை உறிஞ்சியிருக்கலாம், உறவுகளையெல்லாம் தூரதேசங்களுக்கு அனுப்பிவிட்டிருக்கலாம், வீட்டைப் பார்த்தபோது அது தன் பிரமாண்டமான கரங்களால் இழுத்து தன்னுள் அமிழ்த்திக் கொண்டதை உணர்ந்தேன். விருப்பத்திற்குரிய தோழியின் மடியில் படுத்திருந்து கதை பேசும் சுகத்திற்கு ஈடானது வீட்டில் இருப்பது. இரவு… மொட்டை மாடி… மெல்லிய வெளிச்சம்… இதமான குளிர் எல்லாம் சொல்கின்றன வாழ்வின் அற்புதமான தருணங்களை இழந்துகொண்டிருக்கிறேனென.

மார்கழி மாதம் கிணற்றை நிரப்பியிருக்கிறது. செடிகொடிகளில் பச்சையை ஊற்றியிருக்கிறது. பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் இந்த வேம்புகள்… அவற்றைக் கட்டியணைத்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே தீராத வேட்கையாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேம்புகளை விட்டு வீட்டைப் பற்றிப் பேச முடிந்ததேயில்லை. நகரத்தின் மாசு படியாத கிராமமொன்றில், பனி பொழியும் விடியலில் உறக்கமும் விழிப்புமாகப் படுத்திருக்கும் நாட்களை நீடிக்க முடியவில்லை. பணிகள் அழைக்க பயம் துரத்த புறப்பட வேண்டியிருக்கிறது. எனது கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு எங்கிருந்தோ ஓடிவரும் பூனைக்குட்டி இனி ஏமாறப் போகிறதே என்ற துயர் சுடுகிறது. கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்த அம்மாவின் மூக்குத்தி குத்திய தடம் வழியெல்லாம் வலிக்கிறது. விரும்பிய இடத்தில் வாழமுடியாமற் போவதற்கு ஈடான துயரத்தை எழுத முடியவில்லை. மொழிக்கு வலிமையில்லை என்றால் அது தமிழைப் பழிப்பது போலாகும். எல்லோர் மனங்களிலும் சொற்களில் இறக்கவியலாத சுமைகள் இருக்கும்.

பிரிவின் துயரை மீறி எரிச்சல் மண்ட பரிசோதனைச் சாவடியில் காத்திருக்கிறேன். ஊருக்குள் நுழையும்போது இத்தனை கெடுபிடி இல்லை. திரும்பி கொழும்புக்குச் செல்லும்போது ‘தலைநகரின் பாதுகாப்பு’என்ற பெயரில் புரட்டியெடுத்துவிடுகிறார்கள். கடவுச்சீட்டு, வாகன இலக்கம், சாரதியின் விபரங்கள், செல்லும் நோக்கம் இன்னபிற பதிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விடியலின் குளிருக்கு மாற்றாக வெயில் அனல் பொழிகிறது. பதியும் ‘சடங்கு’முடிந்ததும் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடுகிறார்கள். பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகத் தூக்கிக் காட்ட ‘ஷம்போ’, ‘கொண்டிஷனர்’ என்று படம் பார்த்துப் பாடம் சொல்லும் கிளிப்பிள்ளையாக கொஞ்ச நேரம் இருந்தேன். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பொலிஸ்காரர் ‘குறத்தி முடுக்கு’என்று வாசித்தபோது வியப்பாக இருந்தது. ‘சிங்களம் மட்டும்’ என்று முதுகில் குத்தியவருக்குத் தகுந்த பாடம்…! பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரையேனும் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது போர். ஆள் அடையாளம், வாகனம், பெட்டி எல்லாவற்றையும் சோதனையிட்டபோது சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவளை ‘என்னாங்கடா இது’என்று திகைக்க வைத்த சம்பவம் அடுத்து நிகழ்ந்தது. வாகனத்தின் சக்கரத்திலிருந்த காற்றைத் திறந்துவிட்டு அதற்குள் ஏதும் ஆயுதங்கள் கடத்திச்செல்லப்படுகின்றனவா என்று பரிசோதித்தார்கள். பரிதாபமாகப் படுத்துக் கிடக்கும் வாகனத்தை காற்றடித்து நிமிரவைத்து அனுப்புவதற்கென்று ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவர் வெற்றிலை வாயோடு ‘ளாளா’என்று நிறையப் பேசிக்கொண்டே காற்றடித்தார்.

‘விட்டது சனி’ என்று புறப்பட்டால் மற்றுமொரு எரிச்சல்மிகு காத்திருப்பு. பதிந்த பத்திரங்களை பிரதான வீதியில் ஏறுவதன் முன் மற்றுமோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமாம். சாரதி ‘நாசமறுவார்’என்று திட்டிக்கொண்டே இறங்கிப்போக, முக்கால் மணி நேரம் அருகிலிருந்த முந்திரிகை மரங்களையும் தேக்கு மரங்களையும் வெறித்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

பிரதான வீதியில் ஏறி விரையும்போது ‘இன்றைய நாள் இப்படித்தான் என்று எழுதியிருந்தால் என்ன செய்வது’என்று வேதாந்தம் பேசி சமாதானப்பட்டுக்கொண்டதை, அடுத்து வந்த பரிசோதனைச் சாவடி சாவடித்தது. வாகனத்தைப் பிரிந்து வனாந்தரத்தை நினைவுறுத்தும் உடை மரத்தின் கீழ் மீண்டும் நீண்ட கடும் தவம். அரசுப் பேரூந்துகளில் வந்து காத்திருந்தவர்களுள் பசியிலோ தாகத்திலோ வெயிலின் வெம்மையினாலோ அழும் கைக்குழந்தைகளைக் காண கையாலாகாத கோபம் பொங்கியது. பாதிரியார்களும் பரிசோதனைக்கு விலக்கல்ல என்பதைக் கண்டபோது, தலைநகரிலுள்ள பயத்தின் ஆதிக்கம் புரிந்தது.

ஒருவழியாய் கொழும்பு மாநகர் வந்து விமானமேறி சென்னையில் வந்து இறங்கியபோது, கவலையும் நிம்மதியும் கலந்த ஓருணர்வு பரவியது. கவிதை என்கிறோம். காதல் என்கிறோம். மனிதாபிமானம், கற்பு, சாதி, பார்ப்பனர்-திராவிடர், அழகு, ஆண்டவன் என ஆயிரம் பேசுகிறோம். அண்மையில் ஒருவர் கூறினார்: காமம்தான் எல்லாவற்றிற்கும் அடிநாதம் என்று. எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உலகெல்லாம் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழவேண்டும் போலிருக்கிறது.

12.29.2006

மெல்லத் தமிழ் இனி….




இன்றைக்கும் கனவில் நான் எழுதிய கவிதையை விழிப்பு விழுங்கிவிட்டிருந்தது. கனவை முழுமையாகக் காட்சிப்படுத்த காலையில் முடிந்ததேயில்லை. உறக்கத்தின் பாதையில் அது எங்கோ தொலைந்துவிட்டிருக்க வேண்டும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. அலாரத்தின் தலையில் ஓங்கி அடிக்கத் தேவையற்ற இந்த நாளை எனக்குப் பிடிக்கும். போர்வையை உதறி பதறி எழுந்து, அவசரமாய் மலங்கழித்து, துருவக்குளிரின் கொடுமையை பல்கடித்துப் பொறுத்து கொதிநீரில் குளித்து, தலை-கை-கால்-உடல் என எங்கும் நீக்கமற சந்திரமண்டலத்துக்குப் புறப்படும் கோலத்தில் உடையணிந்து, பேரூந்தில் ஒரே திசையில் பிரயாணித்து கையெழுத்துப் போட்டு இயந்திரமாய் படபடக்கும் வாழ்வு கசந்துவிட்டிருந்தது.

எழுந்து வெளியில் வந்தபோது வீடு இன்னும் உறங்கிக்கொண்டிருந்தது. பத்தொன்பதாவது மாடியிலிருந்து பார்க்க கண்ணாடிச் சுவருக்கப்பால் நகரம் விடிகாலையின் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் மரங்களின் பின்னணியில் தெரிந்த ஏரி ஊரின் ஞாபகங்களைத் தூண்டியது.

திடீரென ஒரு நூதனமான காட்சி மூளையில் பதிந்தது. தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்னாலிருந்த மரங்களைக் காணவில்லை. நெடிதுயர்ந்திருந்த கட்டிடம் ஒன்று மரங்கள் இருந்த இடத்தில் முளைத்திருந்தது. கதைகளில் சொல்வதுபோல கண்களைக் கசக்கிப் பார்த்தேன். கைகளை நுள்ளிப் பார்த்தேன். வலித்தது.

வெளிநாட்டில் எதுவும் நடக்கலாம்(உள்நாட்டில் மட்டுமென்ன) என்றபோதிலும் இரவோடிரவாக எந்தப் பூதம் இந்த வேலையைச் செய்துமுடித்ததென்று எனக்கு மலைப்பாக இருந்தது. கைகால்கள் பதறின. முரளியிடம் கேட்டால் சொல்லக்கூடும். ஆனால், அவர் இரவுப் பணியிலிருந்து இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

வீட்டிலிருந்த பொருட்களும் வழமையான இடத்தில் இல்லை. யாரோ ஒரு மாயவித்தைக்காரன் புகுந்து எல்லாவற்றையும் இடம்மாற்றிவைத்துவிட்டாற் போலிருந்தது. பயமாக இருந்தது. பசித்தது. அடிக்கடி நுள்ளி நுள்ளிப் பார்த்ததில் கையெல்லாம் வலித்தது.

நல்லவேளையாக கார்ச்சாவி சுவரில் இருந்தது. ‘எலிவேற்றர்’இல் கீழிறங்கியபோது வயதான ஜோனாதன் போலிருந்த ஒருவன் ‘ஹாய்’என்றான்.

“ஹாய்…”என பதிலுக்கு அகவிவிட்டு “ஜோனாதனின் சகோதரரா…?”என்றேன் மரியாதை நிமித்தம்.

அவன் விசித்திரமான பார்வையொன்றை எறிந்து திறந்த கதவினூடாக மறைந்துபோனான்.

எனக்கு என்னவோ ஆகிவிட்டது என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அண்மை நாட்களில் இரவு அதிகநேரம் கண்விழித்திருந்ததால் இவ்வாறு நேர்ந்திருக்கலாம். இடையறாத வேலையினால் மூளை களைத்துப்போயிருக்கலாம். பைத்தியத்திற்கும் தெளிவுக்கும் இடையில் நூலிழைதான் வித்தியாசம் என்று எங்கோ வாசித்தது நினைவில் வந்தது. நான் அந்த நூலிழையைக் கடந்துவிடக்கூடாது. முதலில் அடம்பிடித்து அழும் வயிற்றைச் சமாதானப்படுத்த வேண்டும். காரை வழக்கமாக நாம் போகும் இடத்தை நோக்கிச் செலுத்தினேன். அந்தச் சந்திப்பில் ஒரு தமிழ்க்கடை இருந்தது. அதில் ஊதிப் பெருத்த வடையும், மீன் அடைத்த பணிசும் சுவையாக இருக்கும்.

உங்களால் நம்ப முடிகிறதா…? கடையைக் காணவில்லை! வயிற்றுக்குள் பசியின் தடம் மாறி ஒரு கனம் பரவியது. அந்தச் சந்திப்பில் நேற்றுவரை சுமார் பத்துத் தமிழ்க்கடைகள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கிருந்த மீன் விற்கும் கடையில் நீலக்கால் நண்டு வாங்குவோம். உறைந்த முருங்கையிலையை இளகவைத்துப் போட்டுச் சமைக்கும் நண்டுக்கறியை முரளி சிலாகித்து மூக்கொழுகச் சாப்பிடுவார்.

“கலி! இந்த நண்டுக்கறிக்காகவே உம்மை டிவோர்ஸ் பண்ணாமலிருக்கலாம்”

‘கலி’என்பது எனது பெயர்தான். அதற்கு தமிழில் ‘சனி’என்று பொருள். ‘கல்யாணி’என்றழைக்க வெள்ளைக்காரர்களின் நாக்கு இலகுவில் வளைந்துகொடுக்காத காரணத்தால் இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. பெயர் மாற்றத்தில் முரளிக்குக் கொஞ்சம் மனவருத்தந்தான். என்றாலும் “பெயரில் என்ன இருக்கிறது…?”என்று ‘சேக்ஸ்பியர்’நினைப்பில் சொல்லி கவலையை ஆற்றிக்கொள்வார்.

குழப்பமும் பயமும் களைப்பும் கலந்த உணர்வொன்றினுள் நான் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். நேற்றுவரை ‘பேக்கரி’யாக இருந்த கடைக்குள் போய், தமிழன் போல தெரிந்த இளைஞனிடம் போய் ‘வடை கிடைக்குமா…?’என்றேன்.

முன்பொருபோதும் அவன் ‘வடை’என்ற அந்த வார்த்தையை அறிந்ததில்லைப் போலும். விழி சுருக்கி “என்ன…?”என்றான் ஆங்கிலத்தில்.

“ஓ…!இவன் கயானாக்காரன்”நினைத்துக்கொண்டேன். அசப்பில் தமிழர்களைப்போலவே இருக்கும் அவர்களின் தோற்றத்தில் ஏமாந்தது இது முதற்தடவையல்ல.

“ஒன்றுமில்லை”

வெளியில் வந்து கடையின் பெயர்ப்பலகையை நிமிர்ந்து பார்த்தேன். ‘மாடிஸ் கொன்வீனியன்ஸ்’என்றிருந்தது. எனக்குள் ஏதோ பொறிதட்ட மீண்டும் உள்நுழைந்து “உங்கள் பெயரை அறியலாமா…?”என்றேன்.

வியப்போடு என்னைக் கண்களுக்குள் பார்த்தபடி “ஸ்ரீவ் மதியழகன்”என்றான்.

அடுத்த சந்திப்பில் ஒரு கடையில் ‘பரபரப்பு’என்ற பெயரில் வெளிவரும் ஒரு பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் ‘உள்ளே நடந்தது என்ன….?’என்ற மாதிரியான தொனியில் உள்ளுர் மற்றும் வெளியூர் அரசியற் கட்டுரைகளை ஒருவர் சுவைபட எழுதுவதுண்டு. அரசியல்… அதிலும் கட்டுரை என்றால் பத்தடி தள்ளியே நிற்கும் என்னை அந்த நகைச்சுவை இழையோடும், கிண்டல் வழியும் பாணி ஈர்த்திருந்தது.

உள்ளுக்குள் ‘என்னவோ நடந்துகொண்டிருக்கிறது’ என்றொரு பல்லி அமர்க்களமாகச் சொல்லிக்கொண்டேயிருந்தது. ‘பரபரப்பு’என்ற பெயரை நான் நினைவில் வைத்திருப்பது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு கடைக்குள் பிரவேசிக்க காலெடுத்து வைத்தவள் திகைப்பின் இருளில் தள்ளி விடப்பட்டது போல நின்றுவிட்டேன். கடையுமில்லை. பையில் அடைத்த கத்தரிக்காயுமில்லை.

‘ஐயோ… இது என்ன…?’மனம் பதறியது.

‘சிந்தி…சிந்தி…’மூளையை அதட்டினேன். அது கோமாவில் கிடந்தது. நகரும் வண்டிகள், நடக்கும் மனிதர்கள், கட்டிடங்கள் எல்லாம் ஒருகணம் உறைநிலைக்குச் சென்று திரும்பின. ஒரு நிமிடந்தான்… பூமி குளிர்காய்ச்சல் வந்தாற்போல நடுங்கியது. குனிந்து கால் நிலத்திலே படிந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.

தமிழ்ப்பையன்போல தோற்றமளித்த ஒருவன் என்னெதிரே வந்துகொண்டிருந்தான். தொப்பியை மறுவளமாகத் திருப்பிப்போட்டு, காற்சட்டைப் நடுப்பொருத்து முழங்கால்வரை இறங்கி ‘விழுந்துவிடுவேன்’என்று அச்சுறுத்த, இளஞ்சிவப்பும் ஊதாவும் கலந்த மேலங்கி அணிந்து, தலையை கரட்டி ஓணான்போல ஆட்டி ஆட்டி வந்துகொண்டிருந்தான். இங்கு என்ன நடக்கிறதென்று இவனிடம் கேட்டால் சொல்லக்கூடும்.

“தம்பீ”என்றே நெருங்கி.

“உங்களுக்கு என்ன வேண்டும்…?”என்றான் ஆங்கிலத்தில்.

“நாசமாய்ப் போக! உனக்கும் தமிழ் தெரியாதா” ஆங்கிலம் தந்த துணிவில் தமிழில் கோபப்பட்டேன்.

“இங்கே ஒரு தமிழ்க்கடை இருந்ததே… இடம் மாற்றி விட்டார்களா…?”ஆங்கிலத்தில் கேட்டேன்.

“நான் அறிந்தவரை அப்படி ஒன்று இருந்ததாக நினைவில்லை.”

“இரவு பெய்த மழைக்கு முளைத்த காளான்”மனசுக்குள் திட்டிக்கொண்டு “நேற்று இங்கிருந்தது”என்றேன் நலிந்த குரலில்.

“உங்கள் உடல் நலத்திற்கு ஒன்றுமில்லையே”என்று கேட்டுவிட்டு நகரப் பார்த்தான்.

சட்டைப் பையிலிருந்து அவன் காதுகளை நோக்கிப் போன ஒன்றை அப்போதுதான் கவனித்தேன். அதனுள்ளிருந்து “பார்த்த முதல் நாளே….”பாட்டுக் கேட்டது.

“நீ தமிழனா…?”

‘உனக்கு ஏதோ பிரச்சனை’என்பதுபோல அவன் இடதும் வலதுமாகத் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டான்.

அவன் போன மறுநொடியே கைப்பைக்குள்ளிருந்த சிறுகண்ணாடியை எடுத்து முகம் பார்த்தேன். அதன் பிம்பம் தந்த பயத்தில் ‘படக்’கென்று மூடிவைத்துவிட்டேன்.

என்ன இது விந்தை! ஓரிரவிற்குள் தமிழ்க்கடை இல்லை. பத்திரிகை இல்லை. தமிழர்கள் இல்லை. பொறாமைப்படவும் நம்மவர்கள் இல்லையென்றால்…. பயமாக இருந்தது.

போகும் வழியெல்லாம் புது மெருகேறிப் பளபளத்த கட்டிடங்களைப் பார்த்தேன். கோவிலுக்குப் போனால் தெளிந்துவிடுவேன் என்று தோன்றியது. கடவுளிடம் விண்ணப்பங்களைக் கையளித்து சிரமப்படுத்துவதில்லை என்றாலும், அங்கு போய்விட்டு வரும்போது மனசு மழையின் பின்னான செடிகொடிகளைப் போல ஆகிவிடுவதைக் கவனித்திருக்கிறேன். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்குப் போவதை வலிந்து தவிர்ப்பேன். சிவனுக்குப் போட்டியாக விரித்த சடைகளை மீறி என்னால் சாமியைப் பார்க்க முடிந்ததில்லை. தவிர, பின்னால் நிற்பவர்களுக்கு தங்கள் முதுகின் தரிசனம் போதும் என்று நினைப்பவர்களோடு என்னால் சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை.

கடவுளுக்கு நன்றி! கோயில் இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஆரவாரத்தின் சுவடுகளையே காணோம். முன்கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. சரி… சாமிக்கு விடுமுறை நாள் என்றெண்ணித் திரும்பியவளை ஒரு குரல் அழைத்தது. ‘சாமிதான் அழைக்கிறாரோ…’என்ற சந்தேகத்தில் திரும்பிப் பார்த்தேன். பராசக்தி படம் பார்த்தபிறகும் அந்த மாயை விலகவில்லை. கோவிலின் பக்கவாட்டில் இருந்த யன்னலினூடாக ஒரு முகம் தோன்றியது.

“அர்ச்சனை செய்யவில்லையா…?”என்று ஆங்கிலத்தில் அந்த முகத்துக்குரியவர் கேட்டார். அவர் அடர்ந்த சாம்பல் நிறத்தில் ‘கோட்’அணிந்து கறுப்பு நிறத்தில் கழுத்துப்பட்டி கட்டியிருந்தார்.

“பூட்டியிருக்கும் கோவிலில் அர்ச்சனை செய்வதெப்படி…?” என்று வியந்துகொண்டே அந்தப் பக்கமாகப் போனேன்.

‘மக் டொனால்ட்’ மற்றும் ‘கென் ரேக்கி’யை நினைவுபடுத்தும் வகையில் ‘ஹெட்போன்’போல ஒன்றை அணிந்திருந்தவர் “எந்தப் பெயரில்? என்ன சாமிக்கு?”என்றார்.

எனக்கு தூக்கத்தில் எழுப்பிவைத்து கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. இந்த நாள் இவ்வளவு விசித்திரமாக இருந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், ‘ஏதோ நடக்கிறது நடக்கட்டும்’என்ற வேதாந்தம் பிறந்துவிட்டது. எல்லாம் கைமீறிப் போனது போலிருந்தது.

ஆதியிலிருந்தே அம்பாள்தான் பிடிக்கும். பாலர் பள்ளிக்குப் போய்வந்த காலத்தில் தோடம்பழ இனிப்பு வழங்கப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த எனக்கு, அம்பாளின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது.
‘இன்றைக்கு ரீச்சர் வரக்கூடாது’என்று, வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் என்ன காரணத்தினாலோ அன்றைக்கு ஆசிரியை வரமாட்டார்.

“அம்பாள் பெயருக்கு”

“இருபத்தைந்து டாலர்” மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டார். ‘இது அநியாயம்’என்று சொல்ல வாயெடுத்தேன். எதிர்ப்பு உதட்டுக்குள்ளேயே மடிந்துபோயிற்று.

உள்ளிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. கூடவே ஆங்கிலத்தில் மந்திரமும். சாமந்தியும் ரோஜாவும் கலந்த மணம் ஒன்று யன்னலூடாக வந்து நாசியில் மோதியது. மஞ்சள் நாடாவால் கட்டப்பட்ட சிறு பெட்டியொன்று பிரசாதமாகக் கிடைத்தது. அதைத் திறந்து பார்க்கத் துணிவு வரவில்லை.

அந்தக் கோவிலுக்கு இணையத்தளம் இருப்பதாகவும் அதன்மூலமும் தரிசனம் பெறலாமென்ற உபரித்தகவலைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

மிட்லான்ட்டும் எக்லின்ரனும் சந்திக்கும் இடத்தைக் கடக்கும்போது எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த நீளமான கட்டிடம் செங்கல் பெயர்ந்து பாழடைந்திருந்தது. அங்கேதான் எனது கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஏற்புரை என்ற பெயரில் மேடைக் கூச்சத்தோடு அன்று ஏதோ உளறியது நினைவிருக்கிறது.

பிறிம்லி சந்திப்பைக் கடக்கும்போது ‘வீட்டிற்குப் போய் என்ன செய்வது…?’ என்ற பயம் சூழ பூங்காவை நோக்கிக் காரைத் திருப்பினேன். நான் வழக்கமாக உட்காரும் ‘பென்ச்’சையும் எதுவோ தின்றுவிட்டிருந்தது. காற்றலைக்கும் பாரிய மரங்களைக் கடந்து பூங்காவின் நடுவே ஓடிக்கொண்டிருக்கும் ஏரியை வந்தடைந்தேன். மரப்பாலம் இருந்தது. பாதுகாப்புக்கெனக் கட்டப்பட்டிருந்த கம்பியில் சாய்ந்தபடி பெரியவர் ஒருவர் நீரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஏதோவொரு அமானுஷ்யம் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. அதிலிருந்து தப்பித்து எங்கு ஓடுவதென்றுதான் தெரியவில்லை.

“மகளே…! நீ தமிழா…?”அந்தப் பெரியவரின் நலிந்த குரலால் திடுக்குற்றேன்.

“இவர் தமிழில் அல்லவா பேசுகிறார்…?”எனக்குள் மகிழ்ச்சி பிரவகித்தது.

“ஆம் பெரியவரே…! நான்… நான் குழப்பத்தில் இருக்கிறேன்” அறிமுகமற்றவரிடம் இப்படிப் பேசுதல் எனது இயல்பல்ல எனினும் அப்படித்தான் பேசமுடிந்தது.

நரைத்த புருவங்களின் கீழ் குறுகலாகத் தெரிந்த விழிகளில் பரிவு மின்னியது.

“இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா… இங்கிருந்த எனது மக்கள் எங்கே…? கடைகள், பத்திரிகைகள், கோயில்கள், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், விருந்துச் சாப்பாடு என்று விளம்பரங்கள் ஊடாக கூவிக் கூவி அழைக்கும் உணவகங்கள்… எல்லாம் எங்கே ஐயா?”

“போயின போயின காண் புலம்பெயர்ந்த நாட்டினிலே”என்றார்.

“ஐயா…! எனக்குப் பயமாக இருக்கிறது”

“எனக்கும்தான். தமிழ் கேட்டு எத்தனை நாளாயிற்று தெரியுமா… என்னை என் ஊருக்கு அழைத்துப் போகிறாயா…?”

என்னருகில் நெருங்கி வந்தார். சுருங்கிய கன்னங்களைக் கண்ணீர் நனைத்திருந்தது.

“என்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள்… நான் இங்கு ஒற்றைப் பறவையெனத் தனித்துத் தங்கிவிட்டேன்…”

அவருடைய கண்களிலிருந்து ஒரு நெருப்புக்கீற்றொன்று புறப்பட்டு என்னை நோக்கி வந்தது.

“நீங்கள் எப்போது கனடாவிற்கு வந்தீர்கள்…?”

“2012ஆம் ஆண்டு”

திகைப்பின் இருளுக்குள் யாரோ என்னை இழுத்துக்கொண்டிருந்தார்கள்.

“எத்தனை ஆண்டுகளாக இங்கிருக்கிறீர்கள்…?”

“முப்பத்தெட்டு ஆண்டுகளாக… இன்று 2050ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மகளே…!”

நான் பேச்சறுந்தவளாக நின்றுகொண்டிருந்தேன். காற்று ‘ஊய்…ஊய்’என்றது. மரங்கள் பெயர்ந்து நகரத்தொடங்கின. ஏரி தன் நீலக்கண்களால் என்னை உற்றுப் பார்த்தது. பெரியவரைக் காணவில்லை.

“ஐயா…! ஐயா…! பெரியவரே…!”

யாருமில்லை! யாருமேயில்லை! மரங்கள் என்னை நெரித்துவிடப் போகின்றன. நான் பெருங்குரலெடுத்து அழுதேன்.

“கலி…! கனவா…?”

முரளி என்னை உலுப்பி எழுப்பினார்.

“என்னைக் கல்யாணி எண்டே கூப்பிடுங்கோ…”

ஏறக்குறைய அலறினேன். அவர் பேசாமல் திகைப்போடு திரும்பிப் படுத்துக்கொண்டார்.

12.20.2006

சிதைந்த நாள்




பனிப்புலத்தில்
நாற்புறமும் நெருக்கும் சுவர்களுக்குள்
தனிமையின் விழிகளுள் உறுத்துநோக்கும் தோழியை
எனது அழைப்பின் வழி அழைத்திருக்கலாம்
மூச்சுவிடத்தகு காற்றுவெளிக்கு.

கணனிக்கோப்பொன்றினுள்
பறவைச் சிறகின் தன்மையையொத்து
காத்திருக்கும் கடிதத்திற்கு
எழுதியிருக்கலாம் ஒரு பதில்.

வன்முறைக்குத் தூண்டுகிற குழந்தைகளோடு
வளர்ந்தவர்களின் வலிகளைக் குறித்து
இன்றெனினும் பகிர்ந்திருக்கலாம்.

நேர ஒழுங்கமைவுக்குத் திரும்பு எனும்
கடிகாரத்தின் முட்குத்தலுக்கு
செவிசாய்த்திருக்கலாம்.

மோகித்து ஒரு தடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்.

இந்தக் கவிதையிலிருந்து
பொருத்தமான சொற்களுடன்
என்னை விடுவித்துக்கொள்ளக்கூட
தெரிந்திருக்கவில்லை எனக்கு.

இன்றைய நாளும்
இப்படித்தான் சிதைந்தது.

12.19.2006

தேசத்தின் குரலே! சென்று வருக!



ஒரு தேசத்தின் குரலை
ஏந்திவந்த காற்று இன்று மௌனித்தது
விடுதலையின் பொறியை
உலகமெங்கும் ஏற்றிவைத்த சுடரை
நோய் அணைத்தது.

கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த ஓரினத்தை
வார்த்தைப் படகேற்றி
விடியல் கரையோரம் கொண்டுவந்தாய்
இன்னும் சிலகாலம் இருந்திருக்கக்கூடாதா…
மண்ணில் ஒளிபடர்ந்த ஒருநாளில்
நீ மறைந்திருக்கக் கூடாதா…?

நேசித்த நிலத்திலே நீளுறக்கம் கொள்ளாமல்
நெடுந்தொலைவு நீ போனாய்
பொன்னுடலைக் காணாமல்
புலன்கள் அதை ஏற்கவில்லை.
இல்லாமற் போன அந்த இடைவெளியை
எதையிட்டு நிரப்புவது என்று
எங்கேனும் ஒரு நூலில்
எழுதி வைத்துப் போனாயா…?

மேலைத்தேசத்தின் மேட்டுக்குடிவாழ்வில்
சுயத்தைத் தொலைத்தவர்க்கு
சுட்டிருக்கும் உன் வாழ்வு.
நீயும் நினதினிய துணையும்
இந்த ஏழை தேசத்தில்
இடருற்று வாழ்ந்ததனை
சொல்லக் கேட்டிருந்தோம்.

தத்துவத்தில் வித்தகனாய்…
தலைவன் வாசித்து
நெகிழ்ந்த புத்தகமாய்…
கொள்கை வகுப்பதிலே ஆசானாய்…
அரசியல் களத்திலே
தர்க்கித்து வெல்லரிய சான்றோனாய்…
ராஜதந்திரியாய்
தம்பிக்கே மந்திரியாய்…
மனசைப் படித்தெழுதும்
மாயஎழுதுகோலாய்…
உலகின் மனச்சாட்சி உரசி
‘நாமும் மனிதர்களே’என
உறைக்கச் சொன்ன குரல்முரசே!
பன்முக ஆளுமையாய் பரிணமித்து நின்றவனே!
உன் அன்பில் திளைத்த அவன் குரலில் சொன்னால்
உன் இழப்பை எழுத
“மனித மொழியில் இடமில்லை”

நிராதரவு…
தனிமை…
துரோகம்…
பாராமுகம்…
எல்லாம் சூழ்ந்திருக்கும் ஒரு பொழுதில்
விழிகளை மூடிக்கொண்டபோது
இரவு எங்கள் மேல் கவிந்தது.
உன் உதடுகள் ஓய்வெடுத்துக்கொண்டபோது
மௌனமே எங்கள் மொழியாயிற்று.

ஆயினும் என்ன…
கண்ணீரிலிருந்து நெருப்பையும்
மௌனத்திலிருந்து சொற்களையும்
மரணத்திலிருந்து வாழ்வையும்
புதைகுழியிலிருந்து விதைகளையும்
இழப்பிலிருந்து இருப்பையும்
பெற்றுக்கொள்ள கற்றுத்தந்திருக்கிறது காலம்.

தேசத்தின் குரலே…!
சென்று வருக…!
விழிகள் கடலாக விடைதருகிறோம்
எங்கள் கண்ணிலிருந்தே மறைகிறாய்
இந்த மண்ணிலிருந்தோ
எங்கள் மனங்களிலிருந்தோ அல்ல!

12.17.2006

பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை

தி.நகர் பனகல் பூங்காவை நெருங்கும்போதுதான் அவ்வளவு நேரமும் கைத்தொலைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவில் வந்தது. எடுத்து உயிர்கொடுத்ததும் காத்திருந்தாற்போல பொன்ஸின் அழைப்பு வந்தது. பனகல் பூங்கா சந்திப்புக்கு உகந்ததாக இல்லாமையால், அருகே இருக்கும் நடேசன் பூங்காவிற்கு வரும்படி அழைத்தார். அதற்குள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வேறு அனுப்பியிருந்தார். பூங்காவிற்குள் வட்டமாக இருப்பவர்கள்தான் ‘பதிவர் வட்டம்’என்பது தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. சப்பாணி கொட்டி அமர்ந்திருந்ததைப் பார்த்து “என்ன சோறு போடுறாங்களா…?”என்று வழக்கமான நமது பாணியில் கேட்டுக்கொண்டே ஜோதியில் கலந்துகொண்டேன்.

போகும்போதே ஏறக்குறைய பதினைந்து பேரளவில் கூடியிருந்தார்கள். வட்டம் பெரிதாகிக்கொண்டே வந்தது. கடந்த தடவை தமிழ்நதி என்கிற நானும் பொன்ஸ் உம்தான் பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமாக்கும்?’ என்று சந்திப்பில் தலைகாட்டி பேர்பதிந்திருந்தோம். கடந்தமுறை சந்திப்பு பற்றி எழுதும்போது ‘தனித்துப்போனோம்’ என்று நிறையப் புலம்பியிருப்போம் போலும்… சற்றைக்கெல்லாம் சிவஞானம்ஜியோடு துளசி கோபால் வந்தார். (பெண்களுக்கும் மரியாதை கருதி ‘ர்’விகுதி போடலாமல்லவா…) “வாங்க ஹெட்மாஸ்டர்” என்று சிவஞானம்ஜிக்கு கூட்டுக்குரல் கொடுத்து வரவேற்றார்கள். அவரையடுத்து நிர்மலா வந்தார். ஆட்களும் மணியும் அதிகரித்ததன்றி இன்னதுதான் பேசப்போகிறோம் என்று யாரும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. கூடியிருந்தவர்களில் ஒருவர் எல்லோரையும் சுய அறிமுகம் செய்துகொள்ளும்படி கேட்டார். “இந்த முகத்துக்குரியவர் யாரு…? அவங்களுக்கு வலைப்பதிவில் என்ன பேரு…?” என்று ‘கிராண்ட் மாஸ்ரர்’பாணியில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டோம். சந்திப்பின் பிரதான காரணராகிய ‘ஆலமரம் திரு’என்று அறியப்பட்டவரது முறை வந்தபோது இலங்கைத் தமிழ் கேட்கப்போகிறோம் என்று நான் எதிர்பார்த்திருக்க, அவர் இந்தியத் தமிழில் அறிமுகத்தோடு தனது செயற்பாடுகள் குறித்தும் பேசினார். ஒரு இலங்கைத் தமிழர்தான் இத்தனை முனைப்போடும் ஈடுபாட்டோடும் செயலூக்கத்தோடும் மானுட நேயத்தோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் தனது சகோதரர்களுக்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனது புத்தியை (அதுக்குப் பேர் புத்தியா…ச்சே!)யாருமறியாமல் …… ஆல் அடித்துக்கொள்ளத் தோன்றியது.

ஞாபகத்தில் உள்ளவரை, சமூகமளித்திருந்தவர்களின் பெயர்கள்: பொன்ஸ், பாலபாரதி, மா.சிவகுமார், ப்ரியன், தமிழி, ஓகை, நிர்மலா, துளசி கோபால், சிவஞானம்ஜி, லக்கிலுக், சுந்தர், சுகுணா திவாகர், சா.சங்கர், வீ த பிப்பிள், விக்கி, த.அகிலன், பகுத்தறிவு, வீரமணி, அருள்குமார் மற்றும் பலர். பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்-இருண்டதும் ஞாபகசக்தி மங்கிவிட்டது.

இம்முறை அறிமுகம் என்பது ‘என்னோட பேர்’என்று பாலர்பள்ளி மாணவர் தரத்தில் இல்லாமல் சற்று விரிவானதாகவே இருந்தது. “நான்தான் ப்ரியன்”-என்றதும் “ஓ! அந்தக் காதல் கவிதைகள் எழுதுகிற ப்ரியனா…?” என்னைத்தவிர மேலும் இருவர் கேட்டது காதில் விழுந்தது. (எழுதக்கூடிய வயதுதான்) எந்த மையப்புள்ளியிலும் தரிக்காமல் கலந்துரையாடல் போல பேச்சு நெடுநேரமாக வளர்ந்துகொண்டிருந்தது.

திருமணத்துக்குப் போய் ‘மொய்’எழுதுவதனோடு பின்னூட்டம் இடுவதை “மொய் வைச்சா திரும்ப மொய் வைக்கணும்ல” ஒப்பிட்டுப் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது. பின்னூட்டக் கயமை பற்றி, தமிழ்மண அறிவிப்புகள் பற்றி, பின்னூட்டம் இடுபவர்கள் விமர்சனமாக இல்லாமல் ‘வந்தியா மச்சி வா’ என்று ‘கலாய்ப்பதற்காக’பயன்படுத்துவது பற்றி அங்கிங்கெனாதபடி பேச்சு அலைந்தது.

கடந்த தடவை எழுந்த சிறு (???) சர்ச்சைகளைக்கூட இம்முறை காணமுடியவில்லை. மிகுந்த புரிந்துணர்வு பொருந்திய நண்பர்கள் சந்தித்துப் பேசியதுபோல சந்திப்பு வெகு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. பயனுள்ள ஒரு தளத்தை சண்டைக்களமாகப் பயன்படுத்தி வீணடிப்பதைக் குறித்த ஆதங்கமும் “அந்தப் பக்கம் வரவே பயமா இருக்குப்பா”என்பது போன்ற சலிப்பும் பெரும்பாலானோரின் குரல்களில் வெளிப்பட்டது.

சுற்றிச்சுழன்று பேச்சு ஒருவழியாக பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த திரு அவர்களால் முன்மொழியப்பட்ட ஈழத்தமிழர்களது பிரச்சனையில் வந்து நின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலே இருக்கும் ஆறு இலட்சம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கூட அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்து, அவர்களை பட்டினிச்சாவை நோக்கி விரட்டிக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தினது மனிதாபிமானமற்ற செயல் குறித்து திரு அவர்கள் எடுத்துரைத்தார். தனது கையெழுத்து இயக்கம் ஊடாக அந்தப் பேரவலத்தை ஐ.நா. சபை மற்றும் ஏனைய நாடுகளுக்கும் தெரியப்படுத்த முயற்சித்து வருவதைப் பற்றிக் கூறினார். மேலும், வாகரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாற்பதினாயிரம் மக்களுக்கு பாரஊர்திகள் மூலம் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்ட கொடுமையைப் பற்றிச் சொன்னார். மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட நாம் அவர்களுக்காகச் செய்யக்கூடியது என்ன என்பதைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.

“இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதனால் பாதுகாப்புப் பிரச்சனை ஏதாயினும் ஏற்படாதா…?”என்றொருவர் எழுப்பிய கேள்விக்கு, “இது விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகப் பேசுவது அல்லது இயங்குவதனோடு தொடர்புடையது அல்ல. எமது சகோதரர்களான ஈழத்தமிழ் மக்களது அத்தியாவசியத் தேவையான உணவு மறுக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உலகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை வெளிக்கொணர்வதென்பது மனிதாபிமானத்தோடு தொடர்புடைய செயல். அவ்வாறு பாதிக்கப்படுகிற இனம் சிங்கள இனமாக இருந்திருந்தாலும் சகமனிதர்கள் என்ற வகையில் நாம் தட்டிக் கேட்டிருப்போம்”என்றார்.

தமிழ் மீதிருந்த பற்றுக் காரணமாக ‘தமிழி’என்ற பெயரில் வலையில் பதிந்து வருவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பர் ஒருவர், “எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக தமிழ்நாடே தஞ்சம் என்று வந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை”என்ற விசனத்தைப் பகிர்ந்துகொண்டார். “சொந்த மக்களிற் சிலரே அகதிகளைவிட மோசமான நிலையில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க இயலும்…?”என்பது அதற்கான எதிர்வினையாக இருந்தது. மண்டபம் போன்ற முகாம்களுக்குச் சென்று அகதிகளைப் புகைப்படம் எடுப்பதென்பதும் அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வெளியிடுவதும் கூட ‘முயற்கொம்பு’தான் என்று அவர் மேலும் கூறினார்.

பதிவர்கள் வட்டத்திலிருந்து குழுவொன்றை உருவாக்கி அதனூடாக அல்லற்படும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அதை யாரும் மறுத்துரைக்கவில்லை. எனினும் “நான் செய்கிறேன்”என்று யாரும் முன்வராததும் அந்த மௌனத்தின் பின்னாலிருந்த காரணங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது. ஈழத்தமிழர்களின் கண்ணீரை ஊடகங்கள் வாயிலாக ஏனைய மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியதன் அவசியமே பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக தமிழகத் தமிழர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பலரும் ஒப்புக்கொண்டனர்.

“பேசுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது…?”என்ற கேள்வி பலரது மனதையும் நெருடிக்கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ஊடகங்கள் தமது குரலால் பேசுவதென்பது தமிழகத் தமிழர்களிடையே ஈழத்தமிழர்களது நிலைப்பாடு தொடர்பான கூர்ந்த கவனத்தையும் அனுதாபத்தையும் கொண்டுவரும் என்பதில் ஓரிருவரைத் தவிர ஏனையோர் உடன்பட்டனர்.

கடந்த சந்திப்பில் சிவப்புச் சட்டையோடு வந்திருந்து கூட்டத்தை ஒழுங்கமைத்த பாலபாரதி இம்முறை ‘அல்லாரும் தலைவர்களே…’என்று கமுக்கமாக இருந்துவிட்டார். ‘நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க’என்று பொன்ஸ் எனக்குப் பக்கத்தில் இருந்து அடிக்கடி ஆதங்கப்பட்டார். ஆலமரத்தாருக்கு இந்தக் கையெழுத்து முயற்சியில் பொன்ஸ் உதவி செய்ததாக ஒரு உபரித் தகவல் எனக்குக் கிட்டவே, உதவி செய்து விட்டு ஒன்றுமே செய்யாதது போலிருந்த அந்த ‘பெருந்தன்மை’யால் எனக்கு அவவில் பாசம் பெருகியது. நடேசன் பூங்காவில்தான் பா.க.ச. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று பொன்ஸ் எனது காதோடு கூறியதை நான் யாருக்கும் சொல்லப்போவதில்லை.

“நாம பேசி என்ன ஆகப்போகிறது…?”என்று நிர்மலா திருவிடம் விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தார். திருவும் விடாமல் பொறுமையாக விளக்கம் அளித்துக்கொண்டே இருந்தார்.

இறுதியாக, கடந்த சந்திப்பின்போது ‘இட்லி….. வடை….’என்று பெருத்த சர்ச்சையைக் கிளப்பிய, புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. நிறையப் பேர் புகைப்படத்துக்கென உறைந்த புன்னகையோடு நிற்க மூன்று புகைப்படக் கருவிகள் கண்ணடித்தன.

அகிலனோடு கொஞ்சநேரம் ‘சொந்தக் கதை’பேசிவிட்டு, திரு. திருவிடமும் ஏனையோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன். பூங்காவிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல (சும்மா ஒரு பேச்சுக்கு) நின்றிருந்ததைப் பார்த்தோ என்னவோ பொன்ஸ் வாசல்வரை கொண்டுவந்து வழியனுப்பிவைத்துவிட்டுப் போனார். எங்கோ யாழ்ப்பாணத்திலும், வாகரையிலும், மண்டபம் போன்ற அகதி முகாம்களிலும் இருக்கிற முகம்தெரியாத உறவுகளுக்காக பேசுகிற திரு, தமிழி போன்ற ‘மனிதர்களை’நினைத்து வழியெல்லாம் மனசு நெகிழ்ந்துகொண்டே வீட்டிற்குப் போனேன்.

12.14.2006

மனிதர்கள் மீதான மீள்வாசிப்பு

உங்களில் எத்தனை பேருக்கு அறிவுரை கேட்கப் பிடிக்கும்…? எமக்குப் பரிச்சயமான வார்த்தைகளை மற்றொருவர் உதிர்ப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். ஆனால், தனது செவிகளைத் தாரை வார்க்க ஒருவர் கிடைத்துவிட்டாரெனில், பேச்சு என்பது பேரின்பம். இப்போது நீங்கள் செவிகளையல்ல, விழிகளைச் சற்றைக்கு இதை வாசிப்பதற்கு வியர்த்தமாக்குங்கள். (பொருள் புரிந்துதான் எழுதுகிறேன்) ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’-‘உம்மோடும் இருப்பாராக’என்ற தொனியை நான் எழுதத் தொடங்கும்போதே உணர்கிறேன். நாமெல்லோரும் பொதுவாக என்ன பேசிக்கொள்வோம்….

“காலம் கெட்டுப்போய்விட்டது”

“உண்மையான அன்பு இருக்கிறதா என்ன… எல்லாம் பணந்தான்”

“வர வர மனிதாபிமானம் என்பதே இல்லாமற் போய்விட்டது”

“அவனிடம் கவனமாக இருங்கள்… ஏமாந்த ஆள் அகப்பட்டா பிரிச்சுப் பேன் பார்த்துவிடுவான்”

ஒருவரையொருவர் கோள்சொல்வதும் குற்றஞ்சாட்டுவதும் தாழ்த்திப் பேசுவதும் தரமிறக்குவதும் ஏமாற்றுவதும் இழிவுசெய்வதும் தொல்லை செய்வதும் துரோகம் இழைப்பதும் புண்படுத்துவதும் பொறாமைப்படுவதும் காழ்ப்புணர்வும் கரித்துக்கொட்டுவதும் வம்புபேசுவதும் வலுச்சண்டைக்கிழுப்பதும் என சக மனிதரின்மீது வெறுப்பைச் சுமந்துகொண்டு அலைகிறோம். மனம் வேண்டாதவைகளைக் கொட்டும் குப்பை வண்டியாகி நாற்றமடிக்கத் தொடங்கிவிட்டது.

நாங்கள் எல்லோரும் பேசிக்கொள்வது போல ‘மனிதம் செத்துவிட்டதா…?’ என்ற கேள்வி எழும்போது பயமாகத்தானிருக்கிறது. புத்தரும் காந்தியும் இயேசுவும் அன்னை தெரசாவும் இனி எந்த உருவத்திலும் திரும்பி வருவதற்கான எதிர்வுகூறலைக் கொண்டிராத சமூகத்தில் வாழ்வதென்பது நிச்சயமாக பயங்கொள்ளத்தக்கதுதான்.

அண்மையில் வலைப்பரப்பில் செய்தியொன்றை வாசித்தேன். நடக்க முடியாமல் வீதியோரத்தில் கிடந்த ஒரு முதியவரை பொலிஸ்காரர்கள் சுடுகாட்டில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டுப் போனதாகவும் அவர் சாவை எதிர்பார்த்து இலையான்கள் மொய்க்க முனகியபடி கிடப்பதாகவும் அந்தச் செய்தி சொன்னது. ‘சே!’ என்று மனம் வெறுத்துப் போயிற்று. முகம் தெரியாதவர்கள் மீதெல்லாம் கோபம் வந்தது. வழக்கம்போல வார்த்தைப் பிச்சை போட்டதோடும், யார்யாரையோ கோபித்துக்கொண்டதோடும் எனது மனிதாபிமானம் கண்ணை மூடிக்கொண்டுவிட்டது.

வெண்பஞ்சுப்பொதியான தலை கழுத்தில் நிற்கமுடியாமல் முன்னே சரிய மெலிந்து வற்றிய தோற்றத்தில் நாம் பேசுவதைக் கூட சரியாகக் கிரகித்துக்கொள்ள முடியாத தொண்ணூறைத் தாண்டிய மூதாட்டி ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் கிருஷ்ணன் கோயில் முன்னால் பூ விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய பிள்ளைகள் எங்கே…? உறவினர்கள் எவருமில்லையா…? மழையிலும் வெயிலிலும் கோயில் வாசலில்தான் ஒடுங்கிக் கிடப்பாரா…? கோயில் பிரகாரத்தைச் சுற்றும்போது கேள்விகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. விசாரித்தபோது, அவரது ஏனையோரில் ‘தங்கியிருக்க விரும்பாத் தன்மை’யே அதற்குக் காரணமென ஒருவர் சொன்னார். என்றபோதிலும், நிராதரவாகத் தோன்றிய அந்த மூதாட்டியை பல நாட்களுக்கு எனது ஞாபகத்தில் சுமந்துகொண்டிருந்தேன்.

‘யாழ்ப்பாணத்தில் பசியில் துடித்து முதியவர் மரணம்’என்றது மற்றொரு செய்தி: நோய் வந்து காலன் அழைப்பதும் ஷெல் விழுந்து இரத்தமும் சதையுமாய் சிதறிச் செத்துப்போவதும் கூட பரவாயில்லை என்று சிந்திக்குமளவிற்கு, எமது மென்மையான உணர்வுகளைப் போர் தின்றுவிட்டிருக்கிறது. பசி வயிற்றை முறுக்கிப் பிசைய, கைகாலெல்லாம் நடுங்க, உடல் முழுவதும் பசியின் வெம்மை பரவி எரிய, கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாப் புலன்களும் ஒடுங்கி உயிர் பிரிவது என்பது… ‘ஐயோ! ஐயோ!’ என்று நெஞ்சிலடித்துக் கதறவைக்கும் கொடுமை. அந்தக் கொடுமை நாளாந்தம் நடந்துகொண்டுதானிருக்கிறது. பசியாலும் போராலும் செத்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் அக்கறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு அப்பால் நகர்ந்துவிடுகிறவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.

கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது கடவுளால் கிறுக்கப்பட்ட ஓவியங்கள் போல கைகால்கள் அற்ற சில பிச்சைக்காரர்கள் பிண்டங்களாய் நிலத்தில் கிடந்தபடி குரல்கொடுக்கின்றனர். காசை எறிந்து காற்றாய் விரைகிறோம். குஷ்டத்தில் உதிர்ந்து போன விரல்களை துணிப்பந்துகளால் சுற்றி மறைத்துக்கொண்டு கக்கத்தில் இடுக்கப்பட்ட தகரத்தை முன்நீட்டி இறைஞ்சுபவர்களைத் தவிர்த்துப் பறக்கிறோம். தம்பியையோ தங்கையையோ இடுப்பில் சுமந்துகொண்டு கையேந்தும் சற்றே பெரிய குழந்தைகளிலிருந்து கண்களை அவசரமாக விடுவித்துக்கொண்டு தப்பியோடுகிறோம். கடந்துசெல்லும் வண்டிகள் சிதைத்துவிடுமளவிற்கு வீதிக்கு மிக அருகில் ஒரு உடல் கிடக்கிறது. உயிர் இருக்கிறதா இல்லையா என்றுகூட நின்று பார்க்கவொட்டாமல் சுயநலம் நம்மைச் செலுத்திவிடுகிறது. ஒட்டிய வயிற்றோடு குப்பை வண்டியைக் கிளறிக்கொண்டிருக்கும் நாய்… முழங்கையில் தோல்பட்டை கட்டி தவழ்ந்தே சிக்னலைக் கடக்கக் காத்திருக்கும் கால்களற்ற இளைஞன்… வாடிக்கை கிடைக்காமல் நள்ளிரவிலும் மல்லிகைப்பூ மணக்க நெடுஞ்சாலையோரத்தில் துக்கித்திருக்கும் பெண்… இவர்களிடமிருந்தெல்லாம் நாம் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறோம். வாழ்வு இதர மனிதர்கள் மீது எழுதிப்போகும் துயர்மிகு வரிகளை வாசிப்பதற்கு மறுத்துவிடுகிறோம்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு பைத்தியம் பிடிக்காமல் மனம் பதைக்காமல் தொடர்ந்தும் வாழமுடிகிற எமக்கு உண்மையில் இரும்புமனந்தான். அந்த மனத்திண்மை இல்லாத காரணத்தால்தான், யசோதரையையும் அரசபோகத்தையும் துறந்து இரவோடிரவாக புத்தர் வெளியேறிப்போயிருக்க வேண்டும். என்ன விதமான உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சிந்திக்கவாரம்பித்தால் மனப்பிறழ்வில் கொண்டுபோய் நிறுத்திவிடுமளவிற்கு மோசமாயிருக்கின்றது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம். நோய்க்கூறுகளுடையதொரு சமூகத்தில் நொய்ந்த மனமுடையோர் தம்மை மாய்த்துக்கொள்வதொன்றே இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வழியோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ஆனால், ‘இந்த உலகம் பிடிக்காமல் செத்துப்போகிறேன்’என்றெழுதிவைத்துவிட்டு இறந்தவனின்-இறந்தவளின் கல்லறையில் வாரியிறைக்கப்படும் சொற்சகதிக்கஞ்சியோ என்னவோ பெரும்பாலோர் அவ்விதம் செய்வதில்லை.

‘தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னக்கதைகள் பேசி’வாழும் நாம், சின்னச் சின்னத் தருணங்களிலாவது மனிதராக வெளிப்படல் வேண்டும். பாதையில் கிடக்கும் ஒரு கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதற்கு எவ்வளவு செலவாகப்போகிறது? சாலையைக் கடக்கக் காத்திருக்கும் விழிப்புலனற்றவருக்கு உதவுவதில் எத்தனை மணித்துளிகளை நாம் இழக்கப்போகிறோம்? சுருங்கிய கைகளை விரித்து போவோர் வருவோரையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தபடி இருக்கும் மூதாட்டியின் முகத்தில் சிறுபுன்னகையை மலர்த்தலாகாதா? ‘இன்று நீ அழகாய் இருக்கிறாய்’, ‘மன்னித்துக்கொள்’, ‘உன்னை நான் நினைத்துக்கொண்டேன்’, ‘நன்றி’ இன்னவகைச் சொற்கள் மூலம் சக மனிதரிடம் மெல்லுணர்வைத் தூண்ட ஏன் மறுக்கிறோம்? தன்மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தூண்டுகிற குழந்தையிடம் ‘உன்னால் நான் வருத்தமடைந்திருக்கிறேன்’என்று அருகில் உட்கார்ந்து பேசி உணர்த்த முடியாதிருப்பது ஏன்?

சின்னச் சின்னச் செயல்கள் மூலம் சக மனிதரை மகிழ்ச்சிகொள்ளவைப்பதன் மூலமே ‘மனிதர்’என்ற சொல்லைப் பூரணப்படுத்துகிறோம். செலவில்லாத நேசத்தில்கூட நம்பிக்கையற்றவர்களா நாம்! ‘இந்த உலகத்தில் எனக்கென யாருமில்லை’-‘யாரையும் நம்ப முடிவதில்லை’என்ற சொற்களால் எமக்கு நாம் கல்லறை கட்டிக்கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்புவரை எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்துக்கொண்டிருந்த என் தோழி இன்று சொல்லுகிறாள்: “உலகம் அத்தனை மோசமாக இல்லை. குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்ததில் நான் உறவுகளை இழந்துவிட்டேன்”என்று. நானொரு ஆன்மீக சொற்பொழிவாளரின் தொனிக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறேனோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், இந்தக் கணத்தின் அற்புதத்தை இழப்பதற்குள் நான் பகிர்ந்துகொண்டுவிடவேண்டும். எப்போதாவது உள்ளிருக்கும் மெல்லிய இதயம் பிறருக்காக விசும்பும். அந்தக் கண்ணீர்த்துளிகளால் அன்பின் இழையொன்றை நெய்துவிடும் சந்தர்ப்பத்தைப் புறங்கையால் ஒதுக்குவதுகூட யாருக்கோ இழைக்கிற துரோகமாகத்தான் படுகிறது.

பிடித்த ஒரு புத்தகத்தை மீள்வாசிப்புச் செய்கிறோம். அப்படி நாம் பழகும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் மீள்வாசிப்புச் செய்தாலென்ன…?

தி.ஜானகிராமனின் மோக முள்ளை முதலில் வாசித்தபோது “ஐயோ… தன்னைவிட மூத்த பெண்ணில் ஒருவன் காதல் கொள்ளலாமா..”என்றிருந்தது. (அப்போது நான் பெரிய கலாச்சார காவற்காரியாய் இருந்தேன்) ‘மரப்பசு’அம்மிணி நீண்ட நெடுநாட்களாய் என்னுள் உறுத்திக்கொண்டேயிருந்தாள். ஊரில் வாழ்ந்த காலங்களில் விவாகரத்து என்று யாரும் பிரிந்துபோனால் பெரிய குற்றம்போல அலசப்பட்டது. பெண்ணும் பெண்ணும் கூடுவது பாவத்தில் பெரும் பாவம், வியத்தகு விசித்திரம் என்று முன்பொருநாளில் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. பெரியவர்கள் சொல்லித்தந்த மரபுசார்ந்த முன்தீர்மானங்களின் தடங்களின் மீதுதான் நாங்களெல்லாம் கால்பதித்துச்சென்றோம். வாய்ப்பாடு சொல்வதுபோல ஒரே பிற்பாட்டுத்தான். (“ஈரெண்டு நாலு”)இப்போது ‘மோக முள்’ தன் அழகிய சொல்லாடலால் நெஞ்சுள் பூவாகிவிட்டது. வீட்டிற்குள் கணவன்-மனைவி எதிரிகளாக வாழ்வதைவிட வெளியில் நண்பர்களாக இருப்பதே ஆரோக்கியமானதென நாம் பேசத் தொடங்கிவிட்டோம். ஒருபால் திருமணம் சில நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. காலம்தாழ்த்தி எனினும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படலாம்.

நம்மால் வியக்கப்பட்டவையும் கைநீட்டி விமர்சிக்கப்பட்டவையும் நமது வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிட்டன.

காலம் நிறையக் கற்றுத்தந்திருக்கிறது. பார்வைகளை மாற்றியிருக்கிறது. புதிய நிலங்களும், புதிய காலநிலை மாறுதல்களும், புத்தகங்களும், நண்பர்களும், தனிமையும்கூட எமக்குப் போதிமரமாயிருந்திருக்கின்றனர்-கின்றன.

கருத்துருவில் மாறுதல்களை ஏற்றுக்கொள்ள முடிகிற எம்மால், மீள்வாசிப்புச் செய்ய முடிகிற எம்மால், ஏன் மனிதர்கள் தொடர்பாக அவ்வாறு இயங்க முடிவதில்லை? இன்றிலிருந்து - எனது இரக்கத்தை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்துபவனை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என்னைப் புறக்கணித்து ஓடுபவனின் பயத்தை நான் புரிந்துகொள்கிறேன். என்னைத் துன்பத்தில் தள்ளியவனை வெறுக்காமல் விலகிச்செல்கிறேன். வீட்டில், தெருவில், வேலைத்தளத்தில் நேசத்தை விதைக்கிறேன். கதைகளில் காட்டப்படுவதுபோல ஒரு திருடன், ஏமாற்றுக்காரன், கொலைகாரன், வன்புணர்ச்சி செய்தவன், துரோகி கூட ஏதோவொரு கணத்தில் மனிதனாகிறான். சுயநலத்தின் வழி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமேயன்றி நாம் இன்னமும் கொடுமை செய்யத் துணியாதவர்கள். சின்னச் சின்ன வெளிப்பாடுகளின் மூலம் நாம் மனிதராவதற்கு ஒரு கணம் போதும். இன்றிலிருந்து மனிதர்களை மீள்வாசிப்பு செய்யமுடிந்தால்… இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களால் முடியும் என்றுதான் தோன்றுகிறது.

பி.குறிப்பு: பிரசங்கிக்கும் தொனியைத் தவிர்க்க வேண்டுமென்றிருந்தும், ஒரு பிடிவாதக்கார குழந்தையைப் போல அது கூடவே இழுபட்டுக்கொண்டிருந்ததை முடிவில் கண்டேன். அதனாலென்ன… ஒரு நாளைக்கு பிரசங்கியாக என்னைச் சகித்துக்கொள்ளுங்கள்.

12.11.2006

ஒரு தன்னிலை விளக்கம்

வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். தங்களது தொடர்ந்த வாசிப்புக்கும் வரவேற்பு மற்றும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. ‘பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை’என்ற எனது அண்மைய பதிவைப் பற்றி உங்களோடு நான் பேசவிரும்புகிறேன். வாசிப்பவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக நிச்சயமாக இந்தப் பதிவை நான் போடவில்லை. அத்தகைய மலிவான தந்திரங்களைக் கடந்து வந்துவிட்டதாகவே என்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். குரங்கு வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்ப்பதல்ல எனது நோக்கம். அத்தகு செயல்கள், எழுத்து என்னும் உன்னதத்தைத் (அல்லது உன்னதம் என நம்பிக்கொண்டிருப்பதை) தரம்தாழ்த்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஆணாதிக்கம் உங்களது வாழ்க்கையை அழித்துவிட்டதா…? என்ன காரணத்தினால் நீங்கள் இப்படி எப்போதும் பெண்களுக்குச் சார்பாகவே எழுதுகிறீர்கள்…?” என்று. அந்தக் கேள்வி என்னை வெகுவாகப் பாதித்தது. ‘ஆணாதிக்கத்தினால் வாழ்க்கை அழிக்கப்பட்டவரால் மட்டும்தான் அவ்விதம் எழுதுதல் இயலுமா’ என்பது என்ற கேள்வியை மட்டுமே அவரிடம் என்னால் கேட்கமுடிந்தது. மிகுந்த அயர்ச்சியாக இருந்தது. எழுதும் கதையை எழுதுகிறவரோடு பொருத்திப் பார்க்கும் தன்மையிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் என்று தெரியவில்லை. பாலியல் தொழிலைப் பற்றி கதை எழுதுகிறவர் ஒரு பாலியல் தொழிலாளராக இருக்கவேண்டுமென்றோ, ஓரினச்சேர்க்கையாளரைப் பற்றி எழுதுகிறவர் ஓரினச்சேர்க்கையாளரில் ஒருவர் என்றோ, மதுவைப் பற்றியும் கலவியைப் பற்றியும் அதிகமாக எழுதுகிறவர் குடி மற்றும் காமத்தில் அதீத நாட்டமுள்ளவர் என்றோ எடுத்துக்கொள்வதற்கொப்பானதுதான் இதுவும். மிகுந்த ஆரோக்கியமான சிந்தனைகளையுடைய ஒரு மனிதரை, எனது ஆக்கங்களின் முதல் வாசகரை, நல்ல நண்பரை வாழ்க்கைத்துணையாகக் கொண்டிருக்கும் என்போன்றவர்களை இத்தகு கேள்வி எவ்விதம் பாதிக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

மற்றவரின் வலியை என்னால் எடுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால், மற்றவரின் வலியைக் குறித்து ‘அவளுக்கு வலிக்கிறது’ என நான் பேசலாம் அல்லவா…? இல்லையெனில், ஆறறிவு, மனிதம், கருணை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்து என்ன கிழிக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

‘நீ பெண் பெண்’என நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்வது சிரமமானதுதான். கடைசியாக வாசிக்கக் கிடைத்த ‘உயிர்மை’இதழில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதியிருப்பதுபோல ‘இன்னும் ஐம்பதாண்டுகளில் நாம் ஒரு சிவில் சமூகத்தை வந்தடைந்துவிடுவோம்’என்ற நம்பிக்கையை நானும் நம்ப முயல்கிறேன்.

எழுத்து என்பது சமூகத்தை அவதானிப்பதிலிருந்து பிறக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. நான் அவதானித்த சமூகம் ஆண்-பெண் என்ற பாரபட்சங்களால் ஆனது. வளரும்போது வீட்டிலும் வெளியிலும் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகள், பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், புத்தகங்கள், குடும்பங்கள் எல்லாம் எல்லாமே ஆச்சரியப்படத்தக்கவிதமாக, பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவே இருந்தன. பழமொழிகள், புராணங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று வெறுப்பேற்றின.

மனைவியை அடித்துத் துன்புறுத்தும் உரிமையை திருமணம் தனக்கு அளித்திருப்பதாக சந்தேகத்திற்கிடமின்றி நம்பும் ஆண்கள்: மது அருந்திவிட்டு கையில் ஒரு கட்டையோடு மனைவியைத் துரத்தித் துரத்தி அடித்து வீழ்த்தும் ஆண்களைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். மனைவியின் முதுகில் சவாரி செய்துகொண்டு அவள் கூந்தலை ஒரு கையால் சுற்றிக் கடிவாளம் போல பற்றிக்கொண்டு மறுகையால் ஓங்கி ஓங்கி முதுகில் அறைந்த மிருகத்தைக் கண்டிருக்கிறேன். ‘நான் ஆம்பிளை… நான் ஆம்பிளை’என மணிக்கு நான்கு தடவையாவது அறிவித்துக்கொள்ளும் பெரிய மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.
மனிதம், நாகரீகம், பண்பாடு, சுயமதிப்பு….மண்ணாங்கட்டி எல்லாம் வீட்டுவாசலுக்கு வெளியேதானா என்று குமுறியிருக்கிறேன். (அதற்காக வீதி வரை விரட்டிச் சென்று தாக்கமாட்டார்கள் என்றில்லை.)

எழுதிக்கொண்டு போகும்போது ஒரு விடயத்தை மறந்துவிடுவேன் என்பதனால் இப்போதே சேர்த்துக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியில் விசுவமடு என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் ஒவ்வொரு மாலையிலும் அங்கே இங்கேயென்று தலைகாட்டிக்கொண்டே இருப்பார். அன்று மாலை அவரது ‘அசுமாத்தத்தை’க் காணவில்லை. எங்கேயென்று கேட்டேன். ஒவ்வொரு இரவும் மதுவருந்திவிட்டு வந்து மனைவியை அவர் துன்புறுத்துவாரெனவும் முதல் நாள் இரவும் அந்தக் ‘கூத்து’நடைபெற்றதாகவும் அதைக் காணச் சகிக்காத யாரோ ஒருவர் முறைப்பாடு செய்ததன் பேரில், காலையில் அவரை விடுதலைப்புலிகளின் காவற்துறை வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டதாகவும் சொன்னார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் சரி… அங்கொரு தேசம் மலருமானால் காந்தி சொன்னதுபோல நள்ளிரவிலும் பெண்கள் தைரியமாக நடமாடக்கூடிய ஒரே தேசம் அதுவாகத்தானிருக்கும். இப்போதும் அப்படித்தானிருக்கிறது என்பதை அறிந்தவர்; அறிவர்.

ஒரு பெண்ணை அவளது ஒப்புதலின்றி காமத்தோடு தொடுவது எத்தகைய வலிமிக்கது என்பதை உணர்ந்தவர்கள் அறிவர். பாலியல் பண்டமாகத் தான் பார்க்கப்படுவதென்பது சுயமதிப்பை அழித்து தீரா மனவிருளில் ஆழ்த்திவிடும். நெரிசல் மிகுந்த பேரூந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் தலையும் உடையும் மட்டும் கசங்குவதில்லை. ‘ஐயோ! பணப்பற்றாக்குறையால் இதையெல்லாம் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறதே…!’என்ற ஆதங்கத்தைக் கேட்கும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். சென்னை மாநகரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும், இருள் சூழ்ந்தபின் பணி முடித்து வீடு திரும்பவென ஆட்டோவில் ஏறிய பெண்களிற் சிலர் எதிர்கொண்ட அனுபவங்கள், இப்படிக்கூடவா இழிவுசெய்ய முடியும் எனப் பதைக்கவைத்தன. வன்புணர்ச்சி என்ற வன்முறையைப் பெண்கள்மீது பிரயோகிக்கும் உரிமையை ஆண் என்ற பிறப்புரிமையால் தான் பெற்றிருப்பதாக தனிப்பட்டவர்கள் நினைத்துக்கொள்வதற்கு ‘ஆம்பிளை அவனுக்கென்ன’என்ற சமூகத்தின் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டமும் ஒருவகையில் காரணந்தான்.

ஏதோ இந்தியாவிலும் இலங்கையிலும்தான் இவ்விதமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் அரசியலில், இலக்கியத்தில், அலுவலகத்தில், அறிவியலில் ஆண்-பெண் என்ற பாரபட்சங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் குடிவரவாளர்களிடையே மனவுளைச்சல், மனவிறுக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக எனது தோழி கடந்த வாரம் கூறினா. அதைப் பற்றிப் பேசுவதாயின் தனிக்கட்டுரைதான் எழுதவேண்டும்.

ஒரேயொரு கேள்விக்கு தன்னிலை விளக்கம் அளிக்கப்போய் மதிப்பிற்குரிய சில வலைப்பதிவாளர்கள் கூறுவதுபோல ‘புலம்பலாக’நீண்டுவிட்டது எனது பதிவு. எல்லாவற்றுக்கும் ‘தன்னிலை விளக்கம்’அளிக்கமுடியாதுதான். கூடாதுதான். என்றாலும் ‘உனக்கு வீடு சரியில்லை என்பதால்தான் இப்படி எழுதுகிறாயா..’என்ற கேள்வி எனது சுயத்தைச் சுட்டுவிட்டது. எனது இனிய நண்பரை நான் ஏதோவொரு வகையில் காயப்படுத்துகிறேனோ என்று தோன்றிவிட்டது.

சிகை திருத்துபவரின் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும் என்பார்கள். சிலவேளைகளில் இந்தச் சமூகத்தை நினைக்கும்போது அந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் போன்ற துக்கம் மேலிடுகிறது.

12.08.2006

பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை



ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்கவேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்துவிடமுடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.

‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.

‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.

‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.

சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.

‘பெண்ணாதிக்கம் பெருகிவிட்டது’
…………………………………
…………………………………
போகிறான்
வேண்டுகோள்களைக் கையேந்தி
தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும்
பெண் வாழும் தெருவால்…
அறிவார்ந்த சபைகளில்
பரிமாறும் பணி மட்டும் விதிக்கப்பட்ட
அவளைக் கடந்து
அதிர்ந்தொலித்துப் போகிறது பறை.

பூமியென பெண் உவமிக்கப்படுகிறாள். ஆண் பெரும்பாலும் புயலோடு ஒப்பிடப்படுகிறான். பெரும் காற்றாய் வந்து மரங்களைச் சாய்த்து, கூரைகளைப் பிய்த்தெறிந்து, எதிர்ப்படுவனவெல்லாவற்றையும் துவம்சம் செய்து சுழன்றடித்துப் போய்விடுகிறது புயல். பூமி இருக்கிறது துக்கித்து. அதனால் பெயர்ந்து செல்லவியலாது. பெண்ணும் இருக்கிறாள் செயலற்று. குழந்தைகளின் அடைக்கலமாக, வீட்டை அடைகாப்பவளாக, சமூகத்தால் சூட்டப்படும் ‘ஓடுகாலி’ என்ற பட்டத்தைச் சுமக்கத் திராணியற்றவளாக வீட்டோடு அவளைக் கட்டிவைத்திருக்கிறது ஒரு மாயக்கயிறு.

பாட்டும், சத்தமும் என தன்னியல்பாக இருக்கும் வீடு ஒரு ஆணின் வருகையால் எப்படி ஒடுங்குகிறது என நாம் பார்க்கிறோம். ஓசைகள் ஒரு செருப்பொலியில் உறிஞ்சப்பட மௌனப்பந்தாய் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறது மகிழ்ச்சி. (இதற்கு விதிவிலக்கான வீடுகள் உண்டு. ஆனால், எத்தனை வீதம்…?)

“அப்பா வாறார்… ஓடிப்போய் படியுங்கோ…!”

“செருப்பெல்லாம் இப்பிடிச் சிதறிக்கிடந்தால் அவருக்குப் பிடிக்காது”

“அவருக்கு மச்சமில்லாட்டில் சரிவராது…”

அவரால், அவருக்காகவே இயங்கும் வீட்டில் பெண்ணின் இடம் எது…?

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய வீட்டு வேலை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா…? என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘இல்லை’என்றே பதிலளிப்பர். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பிள்ளைகளைப் பராமரிப்பது, இன்முகத்துடன் இருப்பது… இவையே நல்ல பெண்ணுக்குரிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து பிறழ்பவள் ‘நீலி’என்றும் ‘அடங்காப்பிடாரி’என்றும் அடைமொழிகளால் சுட்டப்படுகிறாள்.

‘பெண் இரண்டாம் பிரஜைதான்’ என்று, எம்மால் கொண்டாடப்படும் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கின்றன.

சீதைக்குக் கோடு…
நளாயினிக்குக் கூடை…
கண்ணகிக்கு பத்தினிப் பட்டம்…
அருந்ததிக்கு வானம்…
புராணம் படி! புரிந்துகொள்…!
நீ அகாலத்தில் இறந்தால்
புன்னகை உறைந்த
உன் புகைப்படத்திற்கு
மாலை போட
மூன்றே மாதங்களில் மற்றொருத்தி…!

மாதவியின் மீது கொண்ட மயக்கம் தீர்ந்து திரும்பிவந்த கோவலனை குற்றம்சொல்லாமல் ஏற்றுக்கொண்ட கண்ணகி கற்புத்தெய்வம். வயதான கணவனை கூடையில் வைத்து பரத்தை வீட்டிற்குத் தூக்கிச்சென்ற நளாயினி போற்றுதற்குரியவள். கல்லிலும் முள்ளிலும் கணவனை நிழலெனத் தொடர்ந்த சீதையின் மீது சந்தேகித்த இராமன் கடவுள். தோற்ற மயக்கத்தால் இந்திரனோடு கூடிய அகலிகை கல்லாய் சபிக்கத்தக்கவள். கோபியரோடு கூடிக்களித்த கிருஷ்ணன் வணங்கத்தக்கவன். நினைத்துப் பாருங்கள்… கிருஷ்ணனைப் போன்று ஒரு பெண் (அவள் தெய்வமேயானாலும்) யாதவர்களோடு கூடிக்களித்திருந்தால் அவளை வணங்கியிருப்போமா என்று. இந்த புராணங்கள், இதிகாசங்கள் வாழ்வியல் நீதியைப் போதித்திருக்கின்றன என்பது ஒரு பக்கம்தான். மறுபக்கம் பெண்ணைக் கீழ்மைப்படுத்தவும் செய்திருக்கின்றன.

புராணங்கள்தான் இப்படியென்றால் நம் பொழுதுபோக்குச் சாதனங்களுள் முதலிடம் வகிக்கும் சினிமாவைப் பாருங்கள். ஆணை முதன்மைப்படுத்தும் கதைகள்…! நேர்மையானவனாக, பத்துப் பேரை பந்தாடும் பலம்பொருந்தியவனாக, இலட்சியவாதியாக, இரக்கமுள்ளவனாக… சற்றேறக்குறைய கடவுளாக கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான். பெண் அவனைச் சார்ந்தவளாக, அரைகுறை ஆடைகளோடு வெண்ணிற மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து நடனமாடுபவளாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறாள். அதாவது கதாநாயகன் விருந்தின்போது தொட்டுக்கொள்ளும் ‘ஊறுகாய்’ மட்டுந்தான் அவள்.

பெண்கள் மீதான அநீதி என்பது காலகாலங்களுக்கும் தொடரும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. போரில் வெற்றிவாகை சூடிய தரப்பின் முதற் பார்வை விழுந்த இடமாக அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. கைப்பற்றப்பட்ட நிலத்திற்குரிய பெண்ணை இழிவுசெய்வது அந்த நிலத்தைச் சார்ந்த ஆண்களை இழிவுசெய்வதற்கொப்பானதாகக் கருதப்பட்டது. நிலத்தைப்போல, ஆநிரைகளைப் போல பெண்ணும் ஆணின் உடமை. அவளைக் கவர்ந்து அவள் உடலையும் ஆன்மாவையும் சிதைப்பது ஆண்மையாம். அதை நாம் இன்று எமது நாட்டிலேயே கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும், ஓசைநயம் என்பது காதுக்கு இனிமையான விடயமே. ஆனால், அந்த ஓசை நயத்தை பழமொழிகளை இயற்றியவர்கள் எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும்.
‘க’ல்லானாலும் ‘க’ணவன்-‘பு’ல்லானாலும் ‘பு’ருசன்
‘க’ணவனே ‘க’ண்கண்ட தெய்வம்
பொம்பிளை சிரிச்சாப் போச்சு… புகையிலை விரிச்சாப் போச்சு!

சிரிப்பிற்கும் சிறை! 21ஆம் நூற்றாண்டிற்கூட இத்தகைய பழமொழிகள் பிரயோகத்தில் இருக்கின்றன என்பது இன்னும் வேதனையான விடயம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று பலரும் பேசக் கேட்டிருக்கிறோம். அந்தக் காலக்கண்ணாடியைப் படைக்கும் சிருஷ்டிகர்த்தாக்கள் எழுத்தாளர்கள். சமூகத்தில் ஏனைய எல்லோரையும் விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாக, உணர்வுகளை வாசிப்பவர்களாக, அறிவுஜீவிகளாகப் போற்றப்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையும் ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. அந்த உலகத்திற்குள் எப்போதாவது வந்துபோகும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். வீட்டில், வேலைத்தளங்களில், அரசியலில், அறிவியலில், கலையுலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பழக்கதோஷம் விடவில்லை. அண்மைக்காலங்களில் பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் மொழியை வரையறுப்பவர்களாகவும் இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தையை நீ எப்படிப் பிரயோகிக்கலாம்’என ஆவேசம் கொள்ளுமளவிற்கு விரிந்திருக்கிறது அவர்களது கட்டற்ற அதிகார வெளி.

பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள். வெளிமனிதரைப் புரிதல் இரண்டாம் கட்டம். முதலில் வீட்டிலிருந்து பெருகட்டும் அன்பு. வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும். எனது சக உயிர் பெண் என்று ஆண்கள் நினைக்கும் நாளுக்காக எத்தனை நூற்றாண்டுதான் துயரத்தோடு காத்திருப்பது…?

12.06.2006

பழைய கவிதை ஒன்று

ஒரு மாதத்தின் முன் வாங்கிய புத்தகங்களை எடுத்துப் புரட்டியபோது ‘பறத்தல் அதன் சுதந்திரம்’என்ற கவிதைத் தொகுப்பு அல்லது தொகுப்புக் கவிதைகள் அகப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் என்ற வகைக்குள் க்ருஷாங்கனி மற்றும் மாலதி மைத்ரி தொகுத்திருந்தனர். புரட்டிக்கொண்டு போனபோது தற்செயலாக எனது பெயர் (தமிழ்நதி அல்ல-இயற்பெயர்) தட்டுப்படவே மகிழ்ச்சி கலந்த வியப்படைந்தேன். ‘யாரிடத்தில் முறையிட’என்ற தலைப்பிலான அந்தக் கவிதை 2001ஆம் ஆண்டு எழுதப்பட்டிருந்தது. கணையாழி கனடா சிறப்பிதழில் வெளிவந்தது. அக்கவிதையை தெரிந்தெடுத்தவருக்கும் தொகுப்பில் சேர்த்தவருக்கும் காலம்தாழ்த்திய எனது நன்றி. பழையதுதான், பெரிய கவித்துவம் மிக்கதென்று சொல்வதற்கும் இல்லைத்தான். எனினும் பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்க்கும்போது எழுவதைப்போல அதன்பால் ஒரு நேசம் கிளர்ந்தது உண்மை. அது தந்த நெகிழ்வோடு பதிவில் இடுகிறேன்.

வானமும் ஏரியும்
கூடும் அழகு குறித்து
ஓடுகின்ற பேரூந்தில் வைத்தென்
தோழி சொன்னாள்.
இலையுதிர்கால மரங்களின்
நிறங்கள் பற்றி
வானொலியில் யாரோ ஆச்சரியப்படுகிறார்கள்.
மேலும்…
பனியின் வெண்மை குறித்தும்கூட.

என் பேனா மௌனித்திருக்கிறது.

வீதியோரத்தில் உறங்கும் குழந்தைகளை…
உயிரையே உண்டுயிர்க்கும் பசியை…
என்கூடப் படித்தவள்
கபாலம் பிளந்திறந்த கொடுமையை…
இன்னும்…
என் வீட்டுக் கிணற்றடிச் செம்பரத்தை
செத்துப் போனதை…
நாங்கள் திரும்பி வருவோமெனக் காத்திருந்து
எலும்புந்தோலுமாய் செத்துக்கிடந்த
நாய்க்குட்டியைப் பற்றி…
போகிற போக்கில் காதில் விழுகிறது.

என் பேனா செவிடாயிருக்கிறது.

உள்ளுலவும் ஒளியை
ஏந்திவரும் வழியில்
எந்தக் காற்றோ அணைக்கும்.
சங்கீதம் போல ஒன்று
உதடு தொடும் நேரம்
வெறும் சத்தமாய் தேய்ந்துபோகிறது.
அற்பாயுளில் மடியும் கவிதைகட்கு
கருவறையே கல்லறையாகிறது.
புணரும் பொழுதில் கூட
கடிகாரமே கண்களில் நிற்கிறது.

என் பேனா மலடாயிருக்கிறது.

12.01.2006

ஞாபக அலை…



“உங்களோடு யார் இருக்கிறார்கள்….?”என்ற கேள்விக்கு நொடியில் பதில் வருகிறது. “எப்போதும் கூடவே இருப்பது எது…?”என்று அழுத்திக் கேட்டால் கொஞ்சம் யோசித்துவிட்டு அல்லது யோசிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டு ‘நிழல்’என்கிறோம். எங்களை அறியாமலே எங்களோடு எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஞாபகத்தை ‘ஞாபகமாக’மறந்துவிடுகிறோம். அதிலும் கழிந்த நாட்களின் மீதான ஞாபகம் என்பது கண்சொருக வைக்கும் ஒரு போதை. எதிரே உட்கார்ந்திருப்பவர் பின்கழுத்தைச் சொறிந்து கொட்டாவி விட்டு கால் மாற்றி வைத்து பொறுமையிழந்துபோனதை அறிவிக்கும்வரை அடைமழையாகப் பேச்சு தொடரும். அப்போது இனிய கனவொன்றில் ஆழ்ந்திருப்பதைப் போன்று முகம் ஒளியில் தோய்ந்திருக்கும்.

இறந்த காலத்தை அன்றேல் இழந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதற்கென்று யாரும் உட்கார்ந்திருப்பதில்லை. எங்கிருந்தபோதிலும் என்ன செய்துகொண்டிருந்தபோதிலும் பனிப்போர்வையென அதுவாகவே வந்து நம்மீது கவிந்துகொள்கிறது. பால்யம் என்பது, பிடித்த கவிதை வரிகளைப்போல சிலருக்குத்தான் நினைவிருக்கிறது. மூத்த எழுத்தாளரான எஸ்.பொ.வின் ‘நனவிடை தோய்தல்’ மற்றும் அ.இரவியின் ‘காலம் ஆகிவந்த கதை’ ஆகியவை ஞாபகங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனது ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கத்தின் படைப்புகளிலும் புனைவு என்பதைக் காட்டிலும் நினைவடுக்குகளில் சேமித்து வைத்த ஞாபகங்களின் ஆளுமையே மேலோங்கியிருப்பதைக் கண்டிருக்கிறேன். இப்படித் துல்லியமாக சின்னச் சின்னச் சம்பவங்களைக் கூட கோவையாக நினைவில் வைத்திருத்தல் சாத்தியமா என வியந்து வியந்து வாசித்த எழுத்துக்கள் அவை. நினைவுகளைச் சேமித்து வைத்திருப்பதற்கு அசாத்திய கவனிப்பு அவசியம். சூழலை ஆழ்ந்து கவனிப்பவர்களால்தான் அற்புதமான வரிகளை எழுத முடிகிறது. உண்மையில் அவையெல்லாம் கதைகளல்ல, நமது சுவடுகள்தான். காலம் என்னும் காற்றடித்து பலரின் வாழ்வில் கலைந்துபோன சுவடுகள்.

எனக்கொரு நண்பர் இருக்கிறார். வவுனியாவின் குடியேற்றக் கிராமமொன்றில் இருந்த ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் நானும் அவரும் ஒன்றாகப் படித்தோம். (உண்மையைச் சொல்வதென்றால் பள்ளிக்கூடம் போனோம்.) போர் எங்களைத் திசைக்கொருவராக விசிறியடித்தது. குறிப்பிட்ட அந்த நண்பர் சுவிஸ்வாசியாகிவிட்டார் என்று, எங்களோடு படித்தவர்களுள் (அல்லது பள்ளிக்கூடம் வந்தவர்களுள்) யாராவது விசாரித்தால் சொல்வதுண்டு. ஆனால், அவர் அந்தக் கிராமத்தை விட்டு நீங்கவேயில்லையோ என்ற பிரமை அடிக்கடி எழுவதுண்டு. அவரோடு தொலைபேசும்போது அந்தக் கிராமத்திற்கு எங்களை எவ்வகையிலோ மறுபடியும் அழைத்துப்போய்விடுவார். திடீரெனப் பார்த்தால் சீப்புக்காய் பற்றைகள் அடர்ந்த பெரிய பெரிய வளவுகளுக்குள் சின்னச் சின்ன வீடுகளுக்குள் வாழ்ந்த காலங்களுக்குள் எங்களையறியாமலே நின்றுகொண்டிருப்போம்.

“எண்ணெய் வழிய வழிய அவ வருவாவாம். இவர் பெரிய பென்ஸிலை சாய்ஞ்சு நிண்டுகொண்டிருக்கிறது மாதிரி ஓட்டைச் சைக்கிள்ளை சாய்ஞ்சு நிண்டு அவவைப் பாத்து வழிவாராம்”

“இங்கிலீஸ் பாடமெண்டால் பொட்டுக்குள்ளாலை பூந்து மாயமாயிடுவாய். இப்ப என்னெண்டு கனடாவிலை சமாளிக்கிறாய்….”

“முந்தி உங்கடை அம்மா சீனி வாங்கியரச் சொன்னா ‘ப்றும் ப்றும்’எண்டொரு ‘சவுண்டு’ விட்டுக்கொண்டு ‘ஸ்ராட்’எடுத்து ஓடுறனீயல்லே… பாத்து… பழைய ஞாபகத்திலை காரின்ரை கோனை அடிக்காமல் வாயாலை சத்தம் போடப் போறாய்”

“என்ன இருந்தாலும் அண்ணையின்ரை பொக்கெற்றிலை இருந்து சுருட்டின அஞ்சு சதத்துக்கு வாங்கித் திண்ட ‘புளுட்டோ’ரொபிக்கு ஈடாகுமே…”

“ஈரச்சாக்காலை அமத்திக்கொண்டுபோய் உரிச்சுத் திண்ட கோழியின்ரை ரேஸ்ற்ரை எப்பிடி மறக்கிறது… இங்கை சுவிசிலை எனக்கு முந்திப் பிறந்த கோழியை ‘பிறிஜ்’க்குள்ளை இருந்து எடுத்துச் சமைக்கேக்கை அது ‘தம்பீ’எண்டு கூப்பிடுற மாதிரி ஒரு பிரமை”

“அந்தாள் ஊரிலை செருப்பே போடாது…. ஒரு மாதிரி காச்சட்டை சப்பாத்து குரங்குக் குல்லாய் எல்லாம் போட்டு ஆளைக் கொண்டந்து இறக்கிப்போட்டாய் போலை”

“காசிநாதன்ரை சுவாவும் சின்னான்ரை ராசனும் அஞ்சியத்துக்கும் உதவாதுகள்”

இத்தகு தொனியில் உரையாடுவார். எதிர்ப்புறம் பேசிக்கொண்டிருப்பவர் சிரித்து செத்துப்போவார். (எத்தனை காலத்திற்குத்தான் ‘புண்ணாகிவிடும்’என்று எழுதுவது)

ஞாபகங்கள்…! ஞாபகங்கள்…! எத்தனை இனிமையானவை…! சிலசமயம் கொடுமையானவையும்கூட. மரணம் வாழும் பூமியில் நினைப்பையும் இழப்பையும் பிரித்துப் பார்த்தல் இயலாது.

வெயில் தினமும் எங்களோடு சமரிடும். கோடையில் கிணறுகள் கைவிரித்துவிடும். ஒரு வாளி தண்ணீருக்கும் மறுவாளி தண்ணீருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நனைந்த உடல் காய்ந்துவிடும். வாடிச் சோர்ந்த செடிகள் மனதில் வெறுமையைக் கிளறும். அடுப்புக்குப் பதில் வயிறு எரிந்துகொண்டிருக்கும். எனினும் அங்குதான் வாழ்ந்தோம்; கனவுகள் கண்டோம்; காதலிக்கவும் செய்தோம்; அந்த ஊர்களில் உலவித்திரிந்த தேவதைக்குஞ்சுகள் இன்னமும் மாறாத இளமையோடு பலரின் மனசுக்குள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

‘மூன்றாம் பிறை’கமலஹாசனாகவும் ஸ்ரீதேவியாகவும் நம்மை நாமே உருவகித்துக்கொண்டு, அந்த இனிய பொய்களுக்குள் உலவித் திரிந்த காலங்கள்தான் எத்தனை அற்புதமானவை! கறுப்பு வழியும் மூஞ்சியும், பாவாடையா ஜீன்சா என்று பிரித்தறிய முடியாது திணறவைக்கும் பெல்பொட்டம்களும், சிகையலங்கார நிலையங்களுக்கான தேவையே இல்லை எனும்படியாக தலையிலிருந்து முப்புறமும் வழியும் ‘ஹிப்பி’யும் (அதில் தொத்தியிருக்கும் மீன் கிளிப்பும்) மரத்தில் அல்லது செடியில் ஒரு கையும் இடுப்பில் மறுகையுமாக வெகு ‘கம்பீரமாக’க் காட்சியளிக்கும் பழைய புகைப்படங்களை எடுத்துப்பார்க்கும் எவருக்கும் ‘ஐயோ அநியாயமே…!’என்று தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும். பெண்களோவெனில் எண்ணெய் தேய்த்து இழைத்து இழைத்து பின்னிய கூந்தலும், துருத்திய கழுத்தெலும்பும், ஒட்டிய கன்னமுமாக ‘களை’யாகத்தானிருந்தோம்.

போர் கொடியதுதான்! இரக்கமற்றதுதான்! கையில் சாட்டையோடு ஊரூராக எங்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், தீமையிலும் ஒரு நன்மையுண்டு என்று வழங்கிவருவது பொய்யில்லை. ஊரில் இருக்கும்போது வைத்திருந்த ஓட்டைச்சைக்கிளுக்கு பூ வாங்கிப் சுற்றவும் வழியற்றிருந்த நம்மில் பலர் ‘லெக்சஸ்’இலும், ‘வோல்வோ’விலும் ‘ஜகுவார்’இலும் வலம் வருவதைப் பார்க்கும்போது உயிருக்குப் பயந்து ஓடிவராவிட்டால் இவற்றையெல்லாம் கண்ணாலும் கண்டிருக்க முடியுமா… என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (வசதி மட்டுந்தான் வாழ்க்கையா என்றொரு விவாதத்தைத் தொடக்கினால் ‘இல்லை’என்ற பக்கம் எனதாயிருக்கும்) அப்போது பிரபலமான சினிமாப்பாட்டை அலறவிட்டுக்கொண்டு ஊருக்குள் நுழையும் ஆமை வடிவக் காரிலிருந்து எறியப்படும் நோட்டீசைப் பொறுக்க காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவ நழுவ ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஓடிய பையன்கள் இன்று எங்கிருக்கிறார்கள் என்பதைப் பிரமிப்போடு பார்க்கிறோம்.

மிகத் துல்லியமான ஒலியமைப்புடன்கூடிய பிரமாண்டமான திரையரங்குகளில் ஏ.சி. குளிர் உடல் தழுவப் பார்க்கும் திரைப்படங்கள் எல்லாம் மனத்திரையிலிருந்து எத்தனை விரைவில் மறைந்து மறந்து போகின்றன. அந்தப் பழைய பள்ளிக்கூடக் கட்டிடம்… அதிலொரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி… உழுந்து மணம் வீசும் சாக்குப் படுதா இருக்கை… ‘ரிக்கெற்’எடுக்காதவர்கள் பள்ளிக்கூடத்தின் அரைச்சுவர் மூலம் ஏறிக்குதித்து சந்தடிசாக்கில் நுழைந்துவிடக்கூடாதென்பதற்காக சுற்றவரக் கட்டப்பட்ட படங்கு… இத்தகு ஆரவாரங்களுடன் பார்த்த ரிஷிமூலம், ஒரு தலை ராகம் இன்னபிற படங்கள் மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் மனசுக்குள் ஓடியிருக்கின்றன. பையன்கள் தங்களுக்குப் பிடித்த தேவதைக்குஞ்சுகளைப் பார்க்கக்கூடிய இடத்தில் (கச்சான் எறியத் தோதாகவும்) இடம்பிடித்துவிடுவார்கள். ‘ஒரு தலை ராகம்’வந்த காலத்தில் அதன் பாடல்களில் தங்களைப் பொருத்திக் காதலில் கரையாத ‘மன்மதன்’கள் ‘ரதி’கள் மிகச்சிலரே. அதுவொரு கனாக்காலமாய்… முழுநிலாக்காலமாய் இன்னமும் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதாவது இளைஞர்களாக இருக்கும்போதே - குடும்பம் என்ற சுகமான சுமை வந்து தோள்களில் இறங்குவதன் முன்னமே இனவெறி அந்த ஊரைவிட்டு எங்களைத் துடைத்தெறிந்துவிட்டது.

ஆயிரமாயிரம் கனவுகளோடு எந்த வீதிகளில் நாங்களெல்லாம் உலா வந்தோமோ அந்த வீதிகளை காடு அடர்ந்து மூடிவிட்டது. ஒரேயொரு மெலிந்த ஒற்றையடிப்பாதை ஊர் இருந்த இடம் நோக்கிப் போகிறது. ‘இதுதான் என் முற்றம்’- ‘இதுதான் என் வாசல்’ என்று சுட்டும்படியாக ஏதுமில்லை. எங்கேயாகிலும் இருக்கும் குட்டிச்சுவர்களைக் கொண்டு வீடுகளை சுலபத்தில் அடையாளம் கண்டுவிடமுடியவில்லை. பாம்புகள் சாவதானமாக உலவும் அடர்வனமாயிருக்கிறது ஊர். போரின் எச்சமாய், இனவழிப்பின் மௌன சாட்சிகளில் ஒன்றாய் தனித்து துக்கித்துக் கிடக்கிறது அக்கிராமம். பிரியும்போது ஊரழுத கண்ணீராய் பின்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது வாய்க்கால். முன்னொருபொழுதில் கதிராடிப் பொலிந்த வயல்களில் ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை காய்ந்துபோயிருக்கின்றன.

எத்தனை இழப்பு! எத்தனை பிரிவு! என்றாலும் ‘போகிறேன்’என்று இந்த உலகத்திற்குக் கையசைத்து பிரிந்துபோய்விட முடிகிறதா என்ன…! எங்கேயோ எப்படியோ வாழ்ந்துகொண்டுதானிருக்கிறோம்.

போர் எங்களைத் தூரதேசங்களில் தூக்கி எறிந்தது. அந்நியமொழி பேசும் பழக்கப்படாத தெருக்களில் மிரட்சியோடு எழுந்து நின்ற அந்த ஆரம்ப நாட்கள் நினைவிருக்கிறதா…? போய் விழுந்த தேசங்களின் மொழி புரியாததால் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம். ‘பாக்கி’என்றும், ‘சோச்சான்’என்றும் ‘கறுப்பன்’ என்றும் எங்களை அவர்கள் ‘செல்லமாக’அழைத்தபோது விசுவாசமுள்ள நாய்க்குட்டி மாதிரி வாலாட்டிக் குழைந்துகொண்டுதானிருந்தோம். ஆரம்ப காலங்களில் அந்நிய தேசங்களில் இருப்பு என்பது எங்களுக்கெல்லாம் நெருப்பிற்குச் சமானமாகத்தானே இருந்தது. ஆங்கிலத்திலாவது ஓரளவு பரிச்சயம் இருந்தது. ஜேர்மன், பிரெஞ்ச், டொச்… பரிச்சயமேயில்லாத அந்த மொழிகளைக் கற்றுக்கொள்ளும்வரை ஆதி நாட்களின் ‘சைகை’மொழிதான் கைகொடுத்தது. அந்நாட்களில் “என்னை ஏன் இங்கெறிந்தாய் என் தேசமே…!”என்று எத்தனை இரவுகள் ஏங்கி அழுதிருப்போம்…!

உலகமெல்லாம் விழுதெறிந்து கிடக்கின்ற நம் ஒவ்வொருவரது வேரும் ஆழப்பதிந்திருப்பது ஊரில்தான். துயரம் நெஞ்சை அடைக்கும்போது ‘என்ரை நல்லூரானே...’, ‘என்ரை நாகம்மாளே’, ‘கண்ணகைத் தாயே’, ‘முறுகண்டியானே’, ‘கதிர்காம சுவாமீ’என்று இவர்களைத்தான் துணைக்கு அழைக்கிறோம். மண்பற்றுள்ள ஒவ்வொரு மனசுக்குள்ளும் உள்ளோடும் நீரோடையாய் ஊர்நினைவுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் எப்போதாவது அலையடிக்கும். மனசெல்லாம் ஈரமாகும். கடல்கள் துளியெனச் சுருங்க, மலைகள் பூமிக்குள் ஒடுங்க ‘நாமெல்லாம் ஓரினம்’ எனக் கரைந்து விரல் நீட்டுகிறோம்.

வாழ்க்கை அழகியது! எப்போதாவது மனிதராகும் கணங்களில் அது அதியற்புதமானது!

யன்னல்



கம்பி இழைத்த சிறு சதுரத்தின் வழி
உயிர்ப்பு உள்நுழைகிறது.
மழை பாடுகிறது அதனூடாக
திருப்தியுறாத ஓவியன்போல
அதன் வழியே வெயில்
வரைந்து வரைந்து அழிக்கிறது

யன்னலை அடைப்பதன் மூலம்
உலகத்தைத் துண்டிக்கிறோம்.

எங்கோ அசையும் தென்னங்கீற்று
உன்னறையில் கவிதையாகிறது

தொலைவில் தெரியும் கடல்
எனக்குப் போதிக்கிறது
மௌனத்தின் மகத்துவத்தை.

ஒவ்வொரு காலையிலும்
முகம் தெரியாத ஒருவரின் காதலை
எடுத்துவருகிறது தந்திகளின் அதிர்வு.

உள்ளே நுழையும்
ஒரு வண்ணாத்திப்பூச்சியால்
அழைத்துச்செல்ல முடிகிறது பால்யத்துள்.

பூட்டிவைக்கும் உனக்குள்ளும் எனக்குள்ளும்
எப்போதும் புகமுடியாது வெளிச்சம்!