
பனிப்புலத்தில்
நாற்புறமும் நெருக்கும் சுவர்களுக்குள்
தனிமையின் விழிகளுள் உறுத்துநோக்கும் தோழியை
எனது அழைப்பின் வழி அழைத்திருக்கலாம்
மூச்சுவிடத்தகு காற்றுவெளிக்கு.
கணனிக்கோப்பொன்றினுள்
பறவைச் சிறகின் தன்மையையொத்து
காத்திருக்கும் கடிதத்திற்கு
எழுதியிருக்கலாம் ஒரு பதில்.
வன்முறைக்குத் தூண்டுகிற குழந்தைகளோடு
வளர்ந்தவர்களின் வலிகளைக் குறித்து
இன்றெனினும் பகிர்ந்திருக்கலாம்.
நேர ஒழுங்கமைவுக்குத் திரும்பு எனும்
கடிகாரத்தின் முட்குத்தலுக்கு
செவிசாய்த்திருக்கலாம்.
மோகித்து ஒரு தடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்.
இந்தக் கவிதையிலிருந்து
பொருத்தமான சொற்களுடன்
என்னை விடுவித்துக்கொள்ளக்கூட
தெரிந்திருக்கவில்லை எனக்கு.
இன்றைய நாளும்
இப்படித்தான் சிதைந்தது.
5 comments:
இருப்பின்வலி...
இழப்புகளின் ஏக்கம்..
ஏன் என்னால் முடியாது போகிறது
எனும் சுயவிமர்சனம்..
வார்த்தைகளுக்குள் அடங்க மறுக்கும்
கவிதையாய்...
புரிகிறது..!
நல்ல கவிதை...வாழ்த்துகள்.
சிதையாமல் சிந்தனையைத் தூண்டும்
நல்ல கவிதை...வாழ்த்துகள்
மீண்டுமொரு நல்ல கவிதை தமிழ்நதி !
வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம்ம்ம்....
very nice. normally i dont read kavithai.. this is special
Post a Comment