12.11.2006

ஒரு தன்னிலை விளக்கம்

வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். தங்களது தொடர்ந்த வாசிப்புக்கும் வரவேற்பு மற்றும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. ‘பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை’என்ற எனது அண்மைய பதிவைப் பற்றி உங்களோடு நான் பேசவிரும்புகிறேன். வாசிப்பவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக நிச்சயமாக இந்தப் பதிவை நான் போடவில்லை. அத்தகைய மலிவான தந்திரங்களைக் கடந்து வந்துவிட்டதாகவே என்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். குரங்கு வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்ப்பதல்ல எனது நோக்கம். அத்தகு செயல்கள், எழுத்து என்னும் உன்னதத்தைத் (அல்லது உன்னதம் என நம்பிக்கொண்டிருப்பதை) தரம்தாழ்த்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஆணாதிக்கம் உங்களது வாழ்க்கையை அழித்துவிட்டதா…? என்ன காரணத்தினால் நீங்கள் இப்படி எப்போதும் பெண்களுக்குச் சார்பாகவே எழுதுகிறீர்கள்…?” என்று. அந்தக் கேள்வி என்னை வெகுவாகப் பாதித்தது. ‘ஆணாதிக்கத்தினால் வாழ்க்கை அழிக்கப்பட்டவரால் மட்டும்தான் அவ்விதம் எழுதுதல் இயலுமா’ என்பது என்ற கேள்வியை மட்டுமே அவரிடம் என்னால் கேட்கமுடிந்தது. மிகுந்த அயர்ச்சியாக இருந்தது. எழுதும் கதையை எழுதுகிறவரோடு பொருத்திப் பார்க்கும் தன்மையிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் என்று தெரியவில்லை. பாலியல் தொழிலைப் பற்றி கதை எழுதுகிறவர் ஒரு பாலியல் தொழிலாளராக இருக்கவேண்டுமென்றோ, ஓரினச்சேர்க்கையாளரைப் பற்றி எழுதுகிறவர் ஓரினச்சேர்க்கையாளரில் ஒருவர் என்றோ, மதுவைப் பற்றியும் கலவியைப் பற்றியும் அதிகமாக எழுதுகிறவர் குடி மற்றும் காமத்தில் அதீத நாட்டமுள்ளவர் என்றோ எடுத்துக்கொள்வதற்கொப்பானதுதான் இதுவும். மிகுந்த ஆரோக்கியமான சிந்தனைகளையுடைய ஒரு மனிதரை, எனது ஆக்கங்களின் முதல் வாசகரை, நல்ல நண்பரை வாழ்க்கைத்துணையாகக் கொண்டிருக்கும் என்போன்றவர்களை இத்தகு கேள்வி எவ்விதம் பாதிக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

மற்றவரின் வலியை என்னால் எடுத்துக்கொள்ள முடியாதுதான். ஆனால், மற்றவரின் வலியைக் குறித்து ‘அவளுக்கு வலிக்கிறது’ என நான் பேசலாம் அல்லவா…? இல்லையெனில், ஆறறிவு, மனிதம், கருணை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்து என்ன கிழிக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

‘நீ பெண் பெண்’என நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்வது சிரமமானதுதான். கடைசியாக வாசிக்கக் கிடைத்த ‘உயிர்மை’இதழில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதியிருப்பதுபோல ‘இன்னும் ஐம்பதாண்டுகளில் நாம் ஒரு சிவில் சமூகத்தை வந்தடைந்துவிடுவோம்’என்ற நம்பிக்கையை நானும் நம்ப முயல்கிறேன்.

எழுத்து என்பது சமூகத்தை அவதானிப்பதிலிருந்து பிறக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. நான் அவதானித்த சமூகம் ஆண்-பெண் என்ற பாரபட்சங்களால் ஆனது. வளரும்போது வீட்டிலும் வெளியிலும் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகள், பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், புத்தகங்கள், குடும்பங்கள் எல்லாம் எல்லாமே ஆச்சரியப்படத்தக்கவிதமாக, பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவே இருந்தன. பழமொழிகள், புராணங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று வெறுப்பேற்றின.

மனைவியை அடித்துத் துன்புறுத்தும் உரிமையை திருமணம் தனக்கு அளித்திருப்பதாக சந்தேகத்திற்கிடமின்றி நம்பும் ஆண்கள்: மது அருந்திவிட்டு கையில் ஒரு கட்டையோடு மனைவியைத் துரத்தித் துரத்தி அடித்து வீழ்த்தும் ஆண்களைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். மனைவியின் முதுகில் சவாரி செய்துகொண்டு அவள் கூந்தலை ஒரு கையால் சுற்றிக் கடிவாளம் போல பற்றிக்கொண்டு மறுகையால் ஓங்கி ஓங்கி முதுகில் அறைந்த மிருகத்தைக் கண்டிருக்கிறேன். ‘நான் ஆம்பிளை… நான் ஆம்பிளை’என மணிக்கு நான்கு தடவையாவது அறிவித்துக்கொள்ளும் பெரிய மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.
மனிதம், நாகரீகம், பண்பாடு, சுயமதிப்பு….மண்ணாங்கட்டி எல்லாம் வீட்டுவாசலுக்கு வெளியேதானா என்று குமுறியிருக்கிறேன். (அதற்காக வீதி வரை விரட்டிச் சென்று தாக்கமாட்டார்கள் என்றில்லை.)

எழுதிக்கொண்டு போகும்போது ஒரு விடயத்தை மறந்துவிடுவேன் என்பதனால் இப்போதே சேர்த்துக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியில் விசுவமடு என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த உறவினரின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் ஒவ்வொரு மாலையிலும் அங்கே இங்கேயென்று தலைகாட்டிக்கொண்டே இருப்பார். அன்று மாலை அவரது ‘அசுமாத்தத்தை’க் காணவில்லை. எங்கேயென்று கேட்டேன். ஒவ்வொரு இரவும் மதுவருந்திவிட்டு வந்து மனைவியை அவர் துன்புறுத்துவாரெனவும் முதல் நாள் இரவும் அந்தக் ‘கூத்து’நடைபெற்றதாகவும் அதைக் காணச் சகிக்காத யாரோ ஒருவர் முறைப்பாடு செய்ததன் பேரில், காலையில் அவரை விடுதலைப்புலிகளின் காவற்துறை வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டதாகவும் சொன்னார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் சரி… அங்கொரு தேசம் மலருமானால் காந்தி சொன்னதுபோல நள்ளிரவிலும் பெண்கள் தைரியமாக நடமாடக்கூடிய ஒரே தேசம் அதுவாகத்தானிருக்கும். இப்போதும் அப்படித்தானிருக்கிறது என்பதை அறிந்தவர்; அறிவர்.

ஒரு பெண்ணை அவளது ஒப்புதலின்றி காமத்தோடு தொடுவது எத்தகைய வலிமிக்கது என்பதை உணர்ந்தவர்கள் அறிவர். பாலியல் பண்டமாகத் தான் பார்க்கப்படுவதென்பது சுயமதிப்பை அழித்து தீரா மனவிருளில் ஆழ்த்திவிடும். நெரிசல் மிகுந்த பேரூந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் தலையும் உடையும் மட்டும் கசங்குவதில்லை. ‘ஐயோ! பணப்பற்றாக்குறையால் இதையெல்லாம் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறதே…!’என்ற ஆதங்கத்தைக் கேட்கும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். சென்னை மாநகரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும், இருள் சூழ்ந்தபின் பணி முடித்து வீடு திரும்பவென ஆட்டோவில் ஏறிய பெண்களிற் சிலர் எதிர்கொண்ட அனுபவங்கள், இப்படிக்கூடவா இழிவுசெய்ய முடியும் எனப் பதைக்கவைத்தன. வன்புணர்ச்சி என்ற வன்முறையைப் பெண்கள்மீது பிரயோகிக்கும் உரிமையை ஆண் என்ற பிறப்புரிமையால் தான் பெற்றிருப்பதாக தனிப்பட்டவர்கள் நினைத்துக்கொள்வதற்கு ‘ஆம்பிளை அவனுக்கென்ன’என்ற சமூகத்தின் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டமும் ஒருவகையில் காரணந்தான்.

ஏதோ இந்தியாவிலும் இலங்கையிலும்தான் இவ்விதமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் அரசியலில், இலக்கியத்தில், அலுவலகத்தில், அறிவியலில் ஆண்-பெண் என்ற பாரபட்சங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் குடிவரவாளர்களிடையே மனவுளைச்சல், மனவிறுக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக எனது தோழி கடந்த வாரம் கூறினா. அதைப் பற்றிப் பேசுவதாயின் தனிக்கட்டுரைதான் எழுதவேண்டும்.

ஒரேயொரு கேள்விக்கு தன்னிலை விளக்கம் அளிக்கப்போய் மதிப்பிற்குரிய சில வலைப்பதிவாளர்கள் கூறுவதுபோல ‘புலம்பலாக’நீண்டுவிட்டது எனது பதிவு. எல்லாவற்றுக்கும் ‘தன்னிலை விளக்கம்’அளிக்கமுடியாதுதான். கூடாதுதான். என்றாலும் ‘உனக்கு வீடு சரியில்லை என்பதால்தான் இப்படி எழுதுகிறாயா..’என்ற கேள்வி எனது சுயத்தைச் சுட்டுவிட்டது. எனது இனிய நண்பரை நான் ஏதோவொரு வகையில் காயப்படுத்துகிறேனோ என்று தோன்றிவிட்டது.

சிகை திருத்துபவரின் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும் என்பார்கள். சிலவேளைகளில் இந்தச் சமூகத்தை நினைக்கும்போது அந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் போன்ற துக்கம் மேலிடுகிறது.

9 comments:

Anonymous said...

//எழுத்து என்பது சமூகத்தை அவதானிப்பதிலிருந்து பிறக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. நான் அவதானித்த சமூகம் ஆண்-பெண் என்ற பாரபட்சங்களால் ஆனது. வளரும்போது வீட்டிலும் வெளியிலும் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகள், பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், புத்தகங்கள், குடும்பங்கள் எல்லாம் எல்லாமே ஆச்சரியப்படத்தக்கவிதமாக, பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவே இருந்தன. பழமொழிகள், புராணங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று வெறுப்பேற்றின.//

மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
இவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

dondu(#4800161) said...

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்று நான் இங்கு கூறுவது வெறும் உபசாரத்துக்கு இல்லை. ஆண் பெண் கற்பு சம்பந்தமாக நமது சமூகம் எடுக்கும் இரட்டை நிலையை சாடி நான் பதிவுகள் போட, அதற்கான எதிர்வினைகளை நீங்கள் பார்த்திருந்தால் நான் இப்போது கூறுவதை முழுக்க புரிந்து கொள்ள முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

செந்தில் குமரன் said...

பல சமயங்களில் ஆண்கள் பெண்கள் செல்லும் பாதையில் இருக்கும் முட்களினால் ஏற்படும் வலியைப் பற்றி அறிந்து கொள்வதில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது.

பேருந்தில் பெண்ணிடம் முறை தவறி நடந்து கொள்வதால் எந்த அளவு வேதனை உண்டாகும் என்பதை ஆண் உணர்வதில்லை.

லிவிங் ஸ்மைல் வித்யா என்ற ஒருவர் வரும் வரை திருநங்கைகளின் வலி எனக்கு புரியவில்லை.

இன்று பல ஆண்களும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆண்களுக்கு பல சமயம் ஏற்படுவதே இல்லை.

தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பிரமாண்டமானவை என்று நினைத்துக் கொண்டே, இதற்கெல்லாம் வருந்துகிறார்களே என்று கூச்சலிடுகிறார்கள்.

ஒரு ஆணை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தினாலோ இல்லை பேருந்தில் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தாலோ எப்படி இருக்கும் என்று பொதுவாக ஆண்கள் யோசிப்பதில்லை.

இது போன்ற பிரச்சனையால் ஏற்படும் மனரீதியான வேதனைகளை புரிந்து கொள்வதில்லை.

இன்று வலைப் பதிவுகளிலும் அது போலவே இருக்கிறது. பொன்ஸ் அவர்கள் பதிவில் சொல்லி இருப்பது போன்ற நிலைமை ஆண்களுக்கு ஏற்படுவதே இல்லை.

பொன்ஸிடம் சொன்னது போல ஒரு ஓரினச் சேர்க்கையாளர் ஒரு ஆண் பதிவரிடம் சொல்லி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த ஆண் பதிவருக்கு எந்த அளவு அருவெருப்பாக இருக்குமோ எந்த அளவு தொல்லையாக இதனைக் கருதுவாரோ அதே போலத்தான் இதுவும் என்பதை பதிவர்கள் உணர வேண்டும்.

இது போன்ற பிரச்சனைகளை பதிவர்கள் சந்திக்காததால் தான் அவர்கள் இன்று இது போன்ற தொல்லைகளை புலம்பல்கள் என்று பேசி வருகிறார்கள்.

இது போன்ற பிரச்சனையை எவ்வாறு கையாள வேண்டும் என்று எடுத்துரைக்கும் பெண் பதிவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது. இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கா விட்டால் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் சொல்லா விட்டால் அல்லது பதிவு செய்யாமல் விட்டால், இது போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும்.

இது போன்ற பிரச்சனைகளை பதிவு செய்து வெளிக் கொண்ர்ந்து இதுவும் இருக்கிறது என்பதை உணர்த்துவது மிகவும் அவசியமானது என்றே கருதுகிறேன்.

Anonymous said...

சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்.

உங்கள் கருத்துக்களை 100 க்கு 100 வீதம் அங்கிகரிக்கின்றேன்.

நான் ஒவ்வொரு முறையும் தமிழ் தேசியத்தின் விழாக்களுக்கு செல்கிற போது "இதில் எத்தனை ஆண்கள் ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள்? இதில் எத்தனை பெண்கள் ஆணாதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பார்கள்? என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் எங்கள் சமுகத்தில் மனைவியை அடிப்பது ஒரு அங்கிகரிக்கப்பட்ட செயல். எந்த ஆணும் மனைவியை துண்பருத்துவததை தனது கடமைப்பாடு என நினைக்கின்றார்கள்.

எனது குறும்படத்தை பார்த்துவிட்டு எனது உற்ற நண்பர்கள் எனக்கு சொன்னது "காட்டிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று".

எனது குறும்படத்தில் வன்முறையினை ஏவி விடும் மிருகங்களை காட்டிக்கொடுக்கும் படி கேட்டிருந்தேன். கனடாவில் கைது செய்யப்படும் ஆண்கள் எத்தனையோ பேர் விடுவிக்கப்படுகிறார்கள். காரணம் அவர்கள் அடித்து துண்புறுத்தியதற்கு வெளிக்காயங்களோ அல்லது தகுந்த சாட்சியங்களோ இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே. பெண்ணிலை வாதிகள் எமது சமூகத்தில் ஒரு மாறுபட்டு நோக்கில் பார்க்கபடுபவர்கள். "அவளுக்கு மண்டையில் தட்டிப்போட்டுது". ஆண்களுக்குள்ளே இருக்கும் எனக்கு அவர்களின் உள் மனதை எனக்கு நன்றாகவே புரியும்.


பல பெண்கள் முன்வரவேண்டும். ஆண்கள் இன்றி வாழ முடியும் என்கின்ற நிலையினை எடுக்கும் போதே ஆண்களும் பெண்களின்றி வாழ்வு இல்லை என்னும் உண்மை புலப்படும் அவர்களுக்கு.

நன்றி.
இளவரசன்

sooryakumar said...

மிகச் சரியாகவும் நிதானமாகவும் தர்க்கரீதியாகவும் சொல்லியுள்ளீர்கள்.
இதில் விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்க இவர்கள் தயங்குவதிலிருந்து புரியவில்லையா..இவர்களும் ஆணாதிக்க சமூகத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்று. நிற்க..அம்பையின் >சிறகுகள் முறியும்< ல் வரும் கடைசி நாடகம் பயங்கள்! பசி என்று தவறாக எழுதிவிட்டேன். அந்த எழுத்துகளைப் படிப்பது...கருத்துக்களைக் காட்டிலும்..எழுத்து வன்மையைக் கூட்ட உங்களுக்குப் பயன் படும். நன்றி.

tamilnathy said...

அன்புள்ள நண்பர்களுக்கு,

தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் உற்சாகத்துக்கும் புரிந்துணர்வுடன் கூடிய பகிர்தலுக்கும் நன்றி. ‘தான்’என்ற அகங்காரம் உள்ளவர்களுடன், கருத்து ரீதியாக எந்தப் புள்ளியிலும் சந்திக்க விரும்பாதவர்களுடன் பேசிக்கொண்டிருந்து பயனில்லை என்பதை உணர்கிறேன். ஆனால், ஒரு பிரச்சனையைக் கண்டுகொள்ளாதது போல கடந்துசென்றுவிட என்னால் முடியவில்லை. ஒரு சாக்கடைக்குப் பக்கத்தில் வாழ்ந்துகொண்டு ‘நாற்றமடிக்கிறதா… எனக்குத் தெரியவில்லையே… ஊதுபத்தி, சந்தன வாசனை மாதிரியல்லவா இருக்கிறது’என்று நடிப்பது போலிருக்கிறது சிலரின் நடத்தைகள். இப்படியொரு பிரச்சனை இருக்கிறதென்று சொல்லாமல் அதைத் தீர்ப்பதெப்படி என்று ‘பொசிற்றிவ்’ஆக நீங்கள் எழுதலாமே என்றொருவர் கேட்டார். ‘காயத்தைப் பரிசோதிக்காமல் அதற்கு மருந்திடுவதுபோலவா’என்று நான் திருப்பிக் கேட்டேன். ஏதோ கூறி மழுப்பிவிட்டார். மற்றொரு பெண் இதைப்பற்றிப் பேசும்போது ‘இருட்டைப் பற்றி நாம் பேச வேண்டாமே… அங்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைப்பதென்பது குறித்துப் பேசலாமே’என்று கேட்டார். மெழுகுவர்த்தியை ஏற்றிவைப்பதற்கு முன் நாம் இருட்டில் இருக்கிறோமென்பதை உணர்ந்துகொள்ள வேண்டுமல்லவா… மற்றவர்களுக்கு உணர்த்தவும் வேண்டுமல்லவா…?

நடப்பதையெல்லாம் நாமெல்லோரும் அறிவோம். இருந்தும் ஒத்துக்கொள்வதனால் அல்லது உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதால் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த ‘மேலாண்மை’பறிபோய்விடுமோ என்ற பயம். பெண்களும் ‘தெரிந்த வழி பயமில்லை’என்பதிலிருந்து மாறவேண்டும். அதாவது, கொஞ்சம் அடக்குமுறைதான், இருந்திருந்துவிட்டு அடி உதைதான் என்றாலுமென்ன… வாழும்வரை இப்படியே இருந்துவிட்டுப் போவதனால் என்ன வந்துவிடப்போகிறது என்று விட்டேற்றியாகச் சிந்திப்பதிலிருந்து விடுபடவேண்டும்.

sooryakumar said...

ஒரு இடத்தில் நான் ஒரு நாடகம் போட்டேன். என்னை நாடகம் போட அழைத்தவர்கள் சொன்னார்கள்..நடைமுறை அரசியல்தான் வேணும், வேறு ஒன்றும் வேண்டாம் என்று..!
சமூகம் பற்றியும் சொல்ல வேண்டும்..குறிப்பாக பெண்கள் பற்றியும் சொல்ல வேண்டும்..என்று கூறி..அவர்களின் ஒப்புதலூடு..பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
அதில் வரும் ஒரு வரி..பாடலாக..
....அடுப்படியில் பெண்ணொருத்தி அழுது புலம்புகிறாள், அவளைச் சிதைத்த ஆண் மிருகம் குடித்துக் குழம்புகிறான்.....
என்று வரும்,,
இதில் பகிடி என்னவென்றால்----------
அதில் நடித்த ஆண் நடிகர் என்னிடம் வந்து,,
எல்லாம் சரி, ஆனால் மிருகம் அதுவும் ஆண் மிருகம் என்பதை மாற்றுங்கோ என்றார்.
...முடியாது மிருக வேலை செய்பவர்களுக்கு மனிதர் என்று பெயரில்லை....என்றேன்.
அந்த நடிகருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகரைப் போட்டு அதை மேடையேற்றினேன்.
அவர் எங்கே என்று தெரியாது.
அவரும் குடித்து விட்டு ஒரு பெண்ணைக் கொடுமைப் படுதிக்கொண்டேயிருக்கிறார்,,என்ற நினைவிலிருந்து என்னால் இன்னமும் மீள முடியவில்லை.

சென்ஷி said...

உண்மையை சரியா எழுதியிருக்கீங்க.
நான் உங்கள் பக்கத்திற்கு வருவது இது முதல் முறை இல்லையெனினும் பின்னூட்டமிடுவது இதுவே முதல் முறை. மங்கை அக்கா தங்களின் இந்த பதிவை பற்றி குறிப்பிட்ட்டு இங்கு எழுதியுள்ளார்கள்

http://blogintamil.blogspot.com/2007/05/blog-post_08.html

சென்ஷி

Chandravathanaa said...

தமிழ்நதி,

உங்கள் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இன்னும் கூட நான் எழுதிய அனேக விடயங்களை என் வீட்டுப் பிரச்சனை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும்.

ஒரு தரம் ஐபிசி வானொலியில் பெண்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்னுடன் நேரடியாகக் கதைக்க அது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கதைத்து முடிந்து தொலைபேசியை வைக்கவே அழைப்பு வருகிறது. ஒரு தெரிந்தவர் எடுத்து எனது கணவரிடம் கேட்ட கேள்வி "என்ன வீட்டிலை பிரச்சனையோ