12.01.2006

ஞாபக அலை…“உங்களோடு யார் இருக்கிறார்கள்….?”என்ற கேள்விக்கு நொடியில் பதில் வருகிறது. “எப்போதும் கூடவே இருப்பது எது…?”என்று அழுத்திக் கேட்டால் கொஞ்சம் யோசித்துவிட்டு அல்லது யோசிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டு ‘நிழல்’என்கிறோம். எங்களை அறியாமலே எங்களோடு எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஞாபகத்தை ‘ஞாபகமாக’மறந்துவிடுகிறோம். அதிலும் கழிந்த நாட்களின் மீதான ஞாபகம் என்பது கண்சொருக வைக்கும் ஒரு போதை. எதிரே உட்கார்ந்திருப்பவர் பின்கழுத்தைச் சொறிந்து கொட்டாவி விட்டு கால் மாற்றி வைத்து பொறுமையிழந்துபோனதை அறிவிக்கும்வரை அடைமழையாகப் பேச்சு தொடரும். அப்போது இனிய கனவொன்றில் ஆழ்ந்திருப்பதைப் போன்று முகம் ஒளியில் தோய்ந்திருக்கும்.

இறந்த காலத்தை அன்றேல் இழந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதற்கென்று யாரும் உட்கார்ந்திருப்பதில்லை. எங்கிருந்தபோதிலும் என்ன செய்துகொண்டிருந்தபோதிலும் பனிப்போர்வையென அதுவாகவே வந்து நம்மீது கவிந்துகொள்கிறது. பால்யம் என்பது, பிடித்த கவிதை வரிகளைப்போல சிலருக்குத்தான் நினைவிருக்கிறது. மூத்த எழுத்தாளரான எஸ்.பொ.வின் ‘நனவிடை தோய்தல்’ மற்றும் அ.இரவியின் ‘காலம் ஆகிவந்த கதை’ ஆகியவை ஞாபகங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனது ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கத்தின் படைப்புகளிலும் புனைவு என்பதைக் காட்டிலும் நினைவடுக்குகளில் சேமித்து வைத்த ஞாபகங்களின் ஆளுமையே மேலோங்கியிருப்பதைக் கண்டிருக்கிறேன். இப்படித் துல்லியமாக சின்னச் சின்னச் சம்பவங்களைக் கூட கோவையாக நினைவில் வைத்திருத்தல் சாத்தியமா என வியந்து வியந்து வாசித்த எழுத்துக்கள் அவை. நினைவுகளைச் சேமித்து வைத்திருப்பதற்கு அசாத்திய கவனிப்பு அவசியம். சூழலை ஆழ்ந்து கவனிப்பவர்களால்தான் அற்புதமான வரிகளை எழுத முடிகிறது. உண்மையில் அவையெல்லாம் கதைகளல்ல, நமது சுவடுகள்தான். காலம் என்னும் காற்றடித்து பலரின் வாழ்வில் கலைந்துபோன சுவடுகள்.

எனக்கொரு நண்பர் இருக்கிறார். வவுனியாவின் குடியேற்றக் கிராமமொன்றில் இருந்த ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் நானும் அவரும் ஒன்றாகப் படித்தோம். (உண்மையைச் சொல்வதென்றால் பள்ளிக்கூடம் போனோம்.) போர் எங்களைத் திசைக்கொருவராக விசிறியடித்தது. குறிப்பிட்ட அந்த நண்பர் சுவிஸ்வாசியாகிவிட்டார் என்று, எங்களோடு படித்தவர்களுள் (அல்லது பள்ளிக்கூடம் வந்தவர்களுள்) யாராவது விசாரித்தால் சொல்வதுண்டு. ஆனால், அவர் அந்தக் கிராமத்தை விட்டு நீங்கவேயில்லையோ என்ற பிரமை அடிக்கடி எழுவதுண்டு. அவரோடு தொலைபேசும்போது அந்தக் கிராமத்திற்கு எங்களை எவ்வகையிலோ மறுபடியும் அழைத்துப்போய்விடுவார். திடீரெனப் பார்த்தால் சீப்புக்காய் பற்றைகள் அடர்ந்த பெரிய பெரிய வளவுகளுக்குள் சின்னச் சின்ன வீடுகளுக்குள் வாழ்ந்த காலங்களுக்குள் எங்களையறியாமலே நின்றுகொண்டிருப்போம்.

“எண்ணெய் வழிய வழிய அவ வருவாவாம். இவர் பெரிய பென்ஸிலை சாய்ஞ்சு நிண்டுகொண்டிருக்கிறது மாதிரி ஓட்டைச் சைக்கிள்ளை சாய்ஞ்சு நிண்டு அவவைப் பாத்து வழிவாராம்”

“இங்கிலீஸ் பாடமெண்டால் பொட்டுக்குள்ளாலை பூந்து மாயமாயிடுவாய். இப்ப என்னெண்டு கனடாவிலை சமாளிக்கிறாய்….”

“முந்தி உங்கடை அம்மா சீனி வாங்கியரச் சொன்னா ‘ப்றும் ப்றும்’எண்டொரு ‘சவுண்டு’ விட்டுக்கொண்டு ‘ஸ்ராட்’எடுத்து ஓடுறனீயல்லே… பாத்து… பழைய ஞாபகத்திலை காரின்ரை கோனை அடிக்காமல் வாயாலை சத்தம் போடப் போறாய்”

“என்ன இருந்தாலும் அண்ணையின்ரை பொக்கெற்றிலை இருந்து சுருட்டின அஞ்சு சதத்துக்கு வாங்கித் திண்ட ‘புளுட்டோ’ரொபிக்கு ஈடாகுமே…”

“ஈரச்சாக்காலை அமத்திக்கொண்டுபோய் உரிச்சுத் திண்ட கோழியின்ரை ரேஸ்ற்ரை எப்பிடி மறக்கிறது… இங்கை சுவிசிலை எனக்கு முந்திப் பிறந்த கோழியை ‘பிறிஜ்’க்குள்ளை இருந்து எடுத்துச் சமைக்கேக்கை அது ‘தம்பீ’எண்டு கூப்பிடுற மாதிரி ஒரு பிரமை”

“அந்தாள் ஊரிலை செருப்பே போடாது…. ஒரு மாதிரி காச்சட்டை சப்பாத்து குரங்குக் குல்லாய் எல்லாம் போட்டு ஆளைக் கொண்டந்து இறக்கிப்போட்டாய் போலை”

“காசிநாதன்ரை சுவாவும் சின்னான்ரை ராசனும் அஞ்சியத்துக்கும் உதவாதுகள்”

இத்தகு தொனியில் உரையாடுவார். எதிர்ப்புறம் பேசிக்கொண்டிருப்பவர் சிரித்து செத்துப்போவார். (எத்தனை காலத்திற்குத்தான் ‘புண்ணாகிவிடும்’என்று எழுதுவது)

ஞாபகங்கள்…! ஞாபகங்கள்…! எத்தனை இனிமையானவை…! சிலசமயம் கொடுமையானவையும்கூட. மரணம் வாழும் பூமியில் நினைப்பையும் இழப்பையும் பிரித்துப் பார்த்தல் இயலாது.

வெயில் தினமும் எங்களோடு சமரிடும். கோடையில் கிணறுகள் கைவிரித்துவிடும். ஒரு வாளி தண்ணீருக்கும் மறுவாளி தண்ணீருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நனைந்த உடல் காய்ந்துவிடும். வாடிச் சோர்ந்த செடிகள் மனதில் வெறுமையைக் கிளறும். அடுப்புக்குப் பதில் வயிறு எரிந்துகொண்டிருக்கும். எனினும் அங்குதான் வாழ்ந்தோம்; கனவுகள் கண்டோம்; காதலிக்கவும் செய்தோம்; அந்த ஊர்களில் உலவித்திரிந்த தேவதைக்குஞ்சுகள் இன்னமும் மாறாத இளமையோடு பலரின் மனசுக்குள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

‘மூன்றாம் பிறை’கமலஹாசனாகவும் ஸ்ரீதேவியாகவும் நம்மை நாமே உருவகித்துக்கொண்டு, அந்த இனிய பொய்களுக்குள் உலவித் திரிந்த காலங்கள்தான் எத்தனை அற்புதமானவை! கறுப்பு வழியும் மூஞ்சியும், பாவாடையா ஜீன்சா என்று பிரித்தறிய முடியாது திணறவைக்கும் பெல்பொட்டம்களும், சிகையலங்கார நிலையங்களுக்கான தேவையே இல்லை எனும்படியாக தலையிலிருந்து முப்புறமும் வழியும் ‘ஹிப்பி’யும் (அதில் தொத்தியிருக்கும் மீன் கிளிப்பும்) மரத்தில் அல்லது செடியில் ஒரு கையும் இடுப்பில் மறுகையுமாக வெகு ‘கம்பீரமாக’க் காட்சியளிக்கும் பழைய புகைப்படங்களை எடுத்துப்பார்க்கும் எவருக்கும் ‘ஐயோ அநியாயமே…!’என்று தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும். பெண்களோவெனில் எண்ணெய் தேய்த்து இழைத்து இழைத்து பின்னிய கூந்தலும், துருத்திய கழுத்தெலும்பும், ஒட்டிய கன்னமுமாக ‘களை’யாகத்தானிருந்தோம்.

போர் கொடியதுதான்! இரக்கமற்றதுதான்! கையில் சாட்டையோடு ஊரூராக எங்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், தீமையிலும் ஒரு நன்மையுண்டு என்று வழங்கிவருவது பொய்யில்லை. ஊரில் இருக்கும்போது வைத்திருந்த ஓட்டைச்சைக்கிளுக்கு பூ வாங்கிப் சுற்றவும் வழியற்றிருந்த நம்மில் பலர் ‘லெக்சஸ்’இலும், ‘வோல்வோ’விலும் ‘ஜகுவார்’இலும் வலம் வருவதைப் பார்க்கும்போது உயிருக்குப் பயந்து ஓடிவராவிட்டால் இவற்றையெல்லாம் கண்ணாலும் கண்டிருக்க முடியுமா… என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (வசதி மட்டுந்தான் வாழ்க்கையா என்றொரு விவாதத்தைத் தொடக்கினால் ‘இல்லை’என்ற பக்கம் எனதாயிருக்கும்) அப்போது பிரபலமான சினிமாப்பாட்டை அலறவிட்டுக்கொண்டு ஊருக்குள் நுழையும் ஆமை வடிவக் காரிலிருந்து எறியப்படும் நோட்டீசைப் பொறுக்க காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவ நழுவ ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஓடிய பையன்கள் இன்று எங்கிருக்கிறார்கள் என்பதைப் பிரமிப்போடு பார்க்கிறோம்.

மிகத் துல்லியமான ஒலியமைப்புடன்கூடிய பிரமாண்டமான திரையரங்குகளில் ஏ.சி. குளிர் உடல் தழுவப் பார்க்கும் திரைப்படங்கள் எல்லாம் மனத்திரையிலிருந்து எத்தனை விரைவில் மறைந்து மறந்து போகின்றன. அந்தப் பழைய பள்ளிக்கூடக் கட்டிடம்… அதிலொரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி… உழுந்து மணம் வீசும் சாக்குப் படுதா இருக்கை… ‘ரிக்கெற்’எடுக்காதவர்கள் பள்ளிக்கூடத்தின் அரைச்சுவர் மூலம் ஏறிக்குதித்து சந்தடிசாக்கில் நுழைந்துவிடக்கூடாதென்பதற்காக சுற்றவரக் கட்டப்பட்ட படங்கு… இத்தகு ஆரவாரங்களுடன் பார்த்த ரிஷிமூலம், ஒரு தலை ராகம் இன்னபிற படங்கள் மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் மனசுக்குள் ஓடியிருக்கின்றன. பையன்கள் தங்களுக்குப் பிடித்த தேவதைக்குஞ்சுகளைப் பார்க்கக்கூடிய இடத்தில் (கச்சான் எறியத் தோதாகவும்) இடம்பிடித்துவிடுவார்கள். ‘ஒரு தலை ராகம்’வந்த காலத்தில் அதன் பாடல்களில் தங்களைப் பொருத்திக் காதலில் கரையாத ‘மன்மதன்’கள் ‘ரதி’கள் மிகச்சிலரே. அதுவொரு கனாக்காலமாய்… முழுநிலாக்காலமாய் இன்னமும் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதாவது இளைஞர்களாக இருக்கும்போதே - குடும்பம் என்ற சுகமான சுமை வந்து தோள்களில் இறங்குவதன் முன்னமே இனவெறி அந்த ஊரைவிட்டு எங்களைத் துடைத்தெறிந்துவிட்டது.

ஆயிரமாயிரம் கனவுகளோடு எந்த வீதிகளில் நாங்களெல்லாம் உலா வந்தோமோ அந்த வீதிகளை காடு அடர்ந்து மூடிவிட்டது. ஒரேயொரு மெலிந்த ஒற்றையடிப்பாதை ஊர் இருந்த இடம் நோக்கிப் போகிறது. ‘இதுதான் என் முற்றம்’- ‘இதுதான் என் வாசல்’ என்று சுட்டும்படியாக ஏதுமில்லை. எங்கேயாகிலும் இருக்கும் குட்டிச்சுவர்களைக் கொண்டு வீடுகளை சுலபத்தில் அடையாளம் கண்டுவிடமுடியவில்லை. பாம்புகள் சாவதானமாக உலவும் அடர்வனமாயிருக்கிறது ஊர். போரின் எச்சமாய், இனவழிப்பின் மௌன சாட்சிகளில் ஒன்றாய் தனித்து துக்கித்துக் கிடக்கிறது அக்கிராமம். பிரியும்போது ஊரழுத கண்ணீராய் பின்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது வாய்க்கால். முன்னொருபொழுதில் கதிராடிப் பொலிந்த வயல்களில் ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை காய்ந்துபோயிருக்கின்றன.

எத்தனை இழப்பு! எத்தனை பிரிவு! என்றாலும் ‘போகிறேன்’என்று இந்த உலகத்திற்குக் கையசைத்து பிரிந்துபோய்விட முடிகிறதா என்ன…! எங்கேயோ எப்படியோ வாழ்ந்துகொண்டுதானிருக்கிறோம்.

போர் எங்களைத் தூரதேசங்களில் தூக்கி எறிந்தது. அந்நியமொழி பேசும் பழக்கப்படாத தெருக்களில் மிரட்சியோடு எழுந்து நின்ற அந்த ஆரம்ப நாட்கள் நினைவிருக்கிறதா…? போய் விழுந்த தேசங்களின் மொழி புரியாததால் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம். ‘பாக்கி’என்றும், ‘சோச்சான்’என்றும் ‘கறுப்பன்’ என்றும் எங்களை அவர்கள் ‘செல்லமாக’அழைத்தபோது விசுவாசமுள்ள நாய்க்குட்டி மாதிரி வாலாட்டிக் குழைந்துகொண்டுதானிருந்தோம். ஆரம்ப காலங்களில் அந்நிய தேசங்களில் இருப்பு என்பது எங்களுக்கெல்லாம் நெருப்பிற்குச் சமானமாகத்தானே இருந்தது. ஆங்கிலத்திலாவது ஓரளவு பரிச்சயம் இருந்தது. ஜேர்மன், பிரெஞ்ச், டொச்… பரிச்சயமேயில்லாத அந்த மொழிகளைக் கற்றுக்கொள்ளும்வரை ஆதி நாட்களின் ‘சைகை’மொழிதான் கைகொடுத்தது. அந்நாட்களில் “என்னை ஏன் இங்கெறிந்தாய் என் தேசமே…!”என்று எத்தனை இரவுகள் ஏங்கி அழுதிருப்போம்…!

உலகமெல்லாம் விழுதெறிந்து கிடக்கின்ற நம் ஒவ்வொருவரது வேரும் ஆழப்பதிந்திருப்பது ஊரில்தான். துயரம் நெஞ்சை அடைக்கும்போது ‘என்ரை நல்லூரானே...’, ‘என்ரை நாகம்மாளே’, ‘கண்ணகைத் தாயே’, ‘முறுகண்டியானே’, ‘கதிர்காம சுவாமீ’என்று இவர்களைத்தான் துணைக்கு அழைக்கிறோம். மண்பற்றுள்ள ஒவ்வொரு மனசுக்குள்ளும் உள்ளோடும் நீரோடையாய் ஊர்நினைவுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் எப்போதாவது அலையடிக்கும். மனசெல்லாம் ஈரமாகும். கடல்கள் துளியெனச் சுருங்க, மலைகள் பூமிக்குள் ஒடுங்க ‘நாமெல்லாம் ஓரினம்’ எனக் கரைந்து விரல் நீட்டுகிறோம்.

வாழ்க்கை அழகியது! எப்போதாவது மனிதராகும் கணங்களில் அது அதியற்புதமானது!

5 comments:

துளசி கோபால் said...

ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே!

நினைவுகள் = பொக்கிஷங்கள்.

டிசே தமிழன் said...

நதி,நல்லாயிருக்கிறது என்று தொடர்ந்து கூற கூற உங்களுக்கு அலுத்திவிடுமோ என்று பயமாயிருக்கிறது. உங்களின் நினைவுப்பதிவுகள் மிக நெருக்கமாய் வந்து மனதில் உட்கார்ந்து கொள்கின்றன. ஆர்ப்பாட்டமில்லாது இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றது முடியும்வரை ஒரு நதியைப்போலவே. உங்களின் ஆரம்பப்பதிவுகளில் ஒன்றை வாசித்தபோது பற்றை மண்டிக்கிடந்த வீட்டுக்கு ஒரு கல்லை எறிந்துவிட்டு வந்தேன் என்று எழுதியிருந்தீர்கள். கிட்டத்தட்ட அதைத்தான் நானும் ஊருக்குப் போயிருந்தபோது (வீடிருக்கா இல்லையா என்று தெரியாது ஊரின் எல்லையில் நின்று) கல்லை வீட்டித்திசை நோக்கி எறிந்துவிட்டு ஞாபகத்து சில பாதிரிப்பூக்களை எடுத்துவந்திருந்தேன். சிலவேளை நமக்கான அனுபவங்கள் கிட்டத்தட்டவாய் இருப்பதாலோ என்னவோ என்னைப்போன்ற ஊரற்றவர்கள் பலரை உங்களில் எழுத்துக்களில் பார்க்கின்றேன். நன்றி.

நாமக்கல் சிபி said...

தமிழ்நதி,
எளிய அழகிய நடையில் மனதோடு ஒன்றிவிடுமாறு இருக்கின்றன வரிகள்.

//சூழலை ஆழ்ந்து கவனிப்பவர்களால்தான் அற்புதமான வரிகளை எழுத முடிகிறது.//

உங்களையும் அப்படித்தான் உணர முடிகிறது.

tamilnathy said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் துளசி கோபால், டி.சே., நாமக்கல் சிபி நன்றிகள்.

‘நல்லாயிருக்கிறது என்று தொடர்ந்து கூறக் கூற உங்களுக்கு அலுத்துவிடுமோ என்று பயமாயிருக்கிறது’
அந்தப் பயம் மட்டும் வேண்டவே வேண்டாம் டி.சே. ஏனென்றால், எனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் எமது படைப்பைப் புகழ்வது உள்ளுக்குள் பிடித்துத்தானிருக்கும்.
“சூழலை ஆழ்ந்து கவனிப்பவர்களால்தான் அற்புதமான வரிகளை எழுத முடிகிறது. உங்களையும் அப்படித்தான் உணர முடிகிறது”
அப்படியா சிபி…! நான் புறக்கவனம் குறைந்தவள் என்று இவ்வளவு நாட்களும் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அதையும் மீறி மனம் பதிவுசெய்துவைத்திருக்கிறது என்பதை எழுத உட்காரும்போதுதான் என்னாலேயே உணரமுடிகிறது. மனம் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொடுக்கும்போதுதான் அடடா என்னைவிட ஒருவர் உள்ளே உட்கார்ந்திருக்கிறார் என்ற எண்ணமே தோன்றியது.

நட்புடன் நதி

sooryakumar said...

அற்புதமான உங்கள் இந்தப் பதிவைப் படிக்கையில்...படித்து முடிக்கையில்..நீண்ட..பெருமூச்சும்...கண்களில் ..ஒரு கசிவும்..அது கண்ணீரா,,தெரியவில்லை...!
ஏதோ ஒரு மூலையில்...என்னோடு உறவு கொள்கிறது..தங்கள் எழுத்து எனும்..நிழலின் நினைவுச் சுவடுகள்.