6.15.2012

மாயக்குதிரை


அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு போய் அது திரும்பி வந்தது. எங்கிருந்தோ மேலும் இரண்டு ஏழுகள் வந்தன. கிர்ரென ஒரு வட்டமடித்து மூன்றும் ஒரே வரிசையில் நின்றன. இவள் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியில் கத்தினாள்.

கனவுக்கும் நனவுக்கும் இடையிலான அந்தரநிலையில் கொஞ்ச நேரம் படுத்துக்கிடந்தாள். ஏழின் பிசிறற்ற நேர்த்தியான வரிசை அவளை ஆட்கொண்டிருந்தது. தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் ஒருசேர வந்து அவளைச் சூழ்ந்தன. ‘கடவுள்தான் என்னைக் காப்பாற்றவேண்டும்’என்று சொல்லிக்கொண்டாள்.

எப்போதாவதுதான் அவளுக்கு கடவுளின் ஞாபகம் வரும். சூதாட்ட விடுதிக்குள் நுழையும்போது, வெல்லவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உள்நுழைவாள். தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அமிலமாய் சுரக்க ஆரம்பிக்கும்போது, முழுவதுமாக இழப்பதன் முன் அங்கிருந்து தன்னை எப்படியாவது வெளியேற்றிவிடுமாறு பிரார்த்தனை செய்வாள். மேற்படி சந்தர்ப்பங்கள் தவிர்த்து அவளுக்கு கடவுளின் ஞாபகம் வருவது குறைவு. அவளுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள அம்மா இருந்தார். அவளுடைய ஊதாரித்தனத்தைப் போக்கவேண்டும் என்பதும் அம்மாவின் பிரார்த்தனைகளுள் ஒன்று.

“காசிருந்தாத் தாங்கோ…”என்றவளை நிமிர்ந்து பார்த்தார் அம்மா.

“ஏன்…?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள். அப்படிச் செய்வதன் மூலம் ஒன்றிரண்டு கேள்விகளோடு காசு கிடைத்துவிடும் என்பதை அவளறிவாள். “உன் அம்மா உலக வங்கி போன்றவள்”என்று அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. வெளி,உள்,இரகசிய அடுக்குகள் என்றவாறான அம்மாவின் சேமிப்பானது பல தடவை கடன் வாங்குவதைத் தவிர்த்து குடும்ப மானத்தைக் காப்பாற்றியிருக்கிறது. அம்மா ஐந்து, பத்தாகச் சேமிப்பதை உருவிக்கொண்டு போய் ‘காசினோ’வின் இயந்திரத்துள் விடுவது குறித்து அவளுக்கும் வருத்தந்தான். அதுவொரு காசு விழுங்கிப் பூதம். இலக்கங்களையும் எழுத்துக்களையும் பூக்களையும் பன்றிகளையும் கடற்கன்னிகளையும் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் பூதம்.

“பெரிய தொகையாக விழுந்தால் அம்மாவுக்குக் கொடுப்பேன்தானே…”என்று சமாதானம் செய்துகொள்வாள். விழுந்திருக்கிறது. கொடுத்ததில்லை.

“சிநேகிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்…”என்றாள்.

“அதை எத்தினை தரந்தான் பாக்கிறது?”

அவள் பேசாமல் நின்றாள். அம்மாவுக்கு அவள் ஒற்றைப் பிள்ளை. எனவே, அவளது மௌனம் பரிச்சயமாயிருந்தது.

முன்னரெல்லாம் நேரம் காலம் மறந்து நயாகராவை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள். நீராலான கனவுலகில் நின்றுகொண்டிருப்பதைப் போல. கூட வந்தவர்கள் அந்த நீர்ப்புகையில் மறைந்தே போனார்கள். அந்த அமானுஷ்யம் ஒருவகையில் அவளைப் பயமூட்டியிருந்தது. பேரிரைச்சலோடு மனித ஆற்றலுக்கு எட்டாத ஆவேசத்தோடும் தூய்மையோடும் அதில் விழுந்து செத்துப்போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
காசினோவுக்குப் போகிற பழக்கம் பேய்போலத் தொற்றிக்கொண்ட பிறகு நீர்வீழ்ச்சியின் பக்கம் திரும்புவதில்லை. தோற்றுப் போய் மனதுக்குள் அழுதபடி விடுதியறைக்குத் திரும்பியதோர் நாளில் கண்ணருகில் நயாகரா கொட்டியது. கலக்கத்தோடு விழித்துப் பார்க்க யன்னல் வழியாக வெள்ளை வெளேரென நீர் பாய்ந்து இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஓசையற்ற பொழிவு. 

அம்மா நூறு டாலர்களை எடுத்து வந்து தந்தார். அவள் தனது அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

“தெரியாத இடத்திலை போய் காசில்லாமல் நிக்கிறதே…தற்சமயம் தங்கவேண்டி வந்தால்…?”

மேலும் ஒரு ஐம்பது வந்தது. அத்துடன் அவள் அன்றிரவு வருவது நிச்சயமில்லை என்பதையும் சந்தடிசாக்கில் சொல்லியாயிற்று.
பனியில் சறுக்கிவந்த ‘ஏழு’ பென்குவினை ஞாபகப்படுத்தியது. உயிர்காப்பு வண்டியின் ஓசைபோல இடைவிடாமல் ஒலித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அந்த மணியோசை இப்போது மண்டைக்குள் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. உள்ளுக்குள் அனல் அலை அடித்துக்கொண்டிருந்தது. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையாகவே உடல் தகித்தது.

உறவினர்களுடைய ஒழுக்க வரையறைகளான வீடு, வேலை,புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள்… ஒரேயொரு காதலன் இன்னபிறவற்றுள் அவள் சுலபமாக அடங்கினாள். அவளது காதலனாகிய சுதன் அவளை கேலி செய்ததுண்டு.

“அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு எல்லாரையும் ஏமாத்திறாய்”

அவன் மட்டுமே அவளது பலவீனத்தை அறிந்தவன். காசினோ ஞாபகம் வந்ததும் மேற்குறித்த யாவும் பின்னொதுங்கிவிட வேறொரு பெண்ணாக மாறிவிடுவாள் அவள். அந்த நினைவு ஒரு மாயச்செடி போல காலுக்குள் முளைத்து மளமளவென்று வளர்ந்து கிளைகள் மண்டையோட்டைப் பிய்த்துக்கொண்டு வெளியேற எத்தனிப்பதை பயத்தோடு கவனிப்பாள். பன்னிறங்களில் ஒளிரும் ‘நியான்’ விளக்குகள், கண்சிமிட்டும் இலக்கங்கள் அவளைப் பதட்டப்படுத்துவன. அதிலும் குறிப்பாக ஏழு என்ற இலக்கம் எங்காவது ஒளிரக் கண்டால்… அவ்வளவுதான்! நாணயங்கள் எண்ணப்படுவதற்காகக் கொட்டும் ஓசையும் அவளைக் கலவரப்படுத்துவதே. மணியோசைகள் இன்பமும் துன்பமும் கலந்த வாதையொன்றினைக் கொணர்ந்தன. அந்தக் காந்தக் குரலை நோக்கி இரும்புத்துகளென நகர்ந்து செல்வாள். உறவுகள், பொருட்கள், கடமைகள், ஒழுங்கான பிள்ளை என்ற பெயர் அனைத்தும் பனிக்காலத் தெருக்கள் போல மங்கத் தொடங்கிவிடும். எதையெதையெல்லாமோ ஞாபகப்படுத்தி தன்னிடம் கெஞ்சுவாள். அந்தக் கெஞ்சலை மயிரளவும் பொருட்படுத்தாத சூதாடியொருத்தியோ மாயக் குழலோசையைப் பின்தொடரும் எலிகளில் ஒன்றாகிவிடுவாள். புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மளமளவென்று நடந்தேறும்.


அவள் மனம் கணக்குப் போடத் தொடங்கியது. வங்கிக் கணக்கில் முந்நூற்று இருபது டாலர்கள் இருந்தன. கடனட்டையில் இருநூற்றுச் சொச்சம் தேறும். அம்மாவிடம் வாங்கிய நூற்றைம்பதைச் சேர்த்தால் அறுநூற்றைம்பதைத் தாண்டிவிடும். வழிச்செலவுக்கும் விடுதிக்கும் போக ஐந்நூற்றைம்பது டாலர்கள் மிஞ்சும். போதும்! மேலும், இம்முறை தோற்கப் போவதில்லை என மனக்குறளி சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆயிரத்து எண்ணூறு டாலர்களோடு வீடு திரும்பிய அந்தக் குளிர்கால இரவை நினைத்தாள்.
ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்று முதலில் சுதன்தான் அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். பின்னாளில் அவன் அதற்காக வருந்தியிருக்கிறான்.

“உண்மையிலை இது ஒரு முட்டாளும் செய்யக்கூடிய வேலைதான். இந்த வட்டத்திலை கையை வைச்சு ஒரு அமத்து அமத்தவேணும். மிசினுக்குள்ள இருக்கிற இலக்கங்களும் எழுத்துக்களும் ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வந்து நிக்கும். ஒரே இலக்கமோ பழ அடையாளமோ வேற என்னமோ நேர்வரிசையில வந்து நின்றால் வெற்றி. சறுக்கி மேல கீழ போனால் தோல்வி. சாதாரண தொகையும் விழும். ஜாக்பொட்டும் விழும். அவ்வளவுதான்!”

புதிதாக ஒன்றைத் தனது காதலிக்குக் கற்றுக்கொடுக்கும் குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். முதலில் அதை அவள் ‘விசர் விளையாட்டு’என்றாள். பிறகு அந்த விசர் விளையாட்டுக்குத் தன்னைக் கூட்டிப் போகும்படி சுதனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவன் பொறுப்புணர்வு பற்றிப் போதிக்க ஆரம்பித்ததும் அவனுக்குத் தெரியாமல் தனியாகப் போகத் தொடங்கினாள். எப்போதுமில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை திடும்மென மண்டைக்குள் விளக்கு எரியும். மணியடிக்கும். அவ்வளவுதான்! அதன்பிறகு, குண்டியில் நெருப்புப் பற்ற வைத்த ஏவுகணை போல விசுக்கென்று கிளம்பிவிடுவாள்.

பயணப்பைக்குள் ஒருநாளுக்குத் தேவையான உடைகளோடு சில புத்தகங்களையும் ஒலி, ஒளியிழைத் தகடுகளையும் எடுத்துவைத்தாள்.
“இந்தமுறை ஜாக்பொட் விழுந்தால் இரண்டு நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு வருவேன்.”என நினைத்தாள். அப்படி நினைத்த மறுகணமே அது சாத்தியமாகாது என்ற எண்ணம் மின்னி மறைந்தது. ‘சனியன்’என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 “சாப்பிட்டிட்டுப் போ…”என்றார் அம்மா.

சாப்பிடும் மனநிலையில் இல்லை. ஆனாலும், சாப்பிட்டுவிட்டுச் செல்வதன் மூலம் காசினோவுக்குள் நேரடியாகச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் அவளை இயக்கியது.

அன்று அவளது முகம் அருளிழந்து போயிருப்பதாக அம்மா சொன்னாள். சிலசமயம் அம்மா ஊகித்திருக்கக் கூடும் என்று நினைத்தாள். இல்லை… அவள்தான் எவ்வளவு பொறுப்பான மகள்…தனக்குள் சிரித்துக்கொண்டாள். அம்மாவை ஏமாற்றுகிறோமே என்று வேதனையாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டிலேயே அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம் என்று எண்ணினாள். கடற்கன்னியோ வாலில் செதில்கள் மினுங்க சிணுங்கி அழைத்தாள். ஏழு என்ற குதிரை, பிடரி மயிர்கள் அலைய தலையசைத்துக் கனைத்தது.

பேருந்துக்காகக் காத்திருக்கும்போது ஒரு குடும்பம் - தமிழர்கள் - காரில் தங்களுக்குள் பேசிச் சிரித்தபடி போவதைப் பார்த்தாள். சனிக்கிழமை, எங்காவது உணவகத்துக்குப் போகிறார்களாயிருக்கும். உணவுச் செலவு நாற்பது டாலருக்குள் முடிந்துவிடும். தான் காசினோவுக்குச் செல்வது தெரிந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தாள். ‘கொழுப்பு’ என்பார்கள். அநேகமானவர்கள் அவளை ஒரு விசித்திரப் பிராணியாக, கேவலமாக நோக்கவும் கூடும். “அந்தப் பெட்டையோ…”எனத் தொடங்கி ஆயிரம் கதை சொல்வார்கள். நடைப்பயிற்சிக்குத் தோதாக உடையணிந்த ஒருவன் பயணப்பெட்டியோடு நிற்கும் இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். அவள் எங்கு செல்கிறாள் என்பதை அவன் ஊகித்திருப்பான் என்று தோன்றியது. ஒருவேளை அவனுக்கும்கூட காசினோவுக்குச் செல்லும் பழக்கம் இருக்கலாம். அவளையறியாமலே தன்னைக் கடந்துசெல்லும் எல்லோரது கண்களையும் உற்றுப் பார்க்கத் தொடங்கியிருப்பதை சற்று நேரத்திற்குப் பின் உணர்ந்தாள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினாள். தன்னிரக்கம் பெருகியது. இளமையின் வறுமையையும், அகதியாக அலைந்ததையும், புலம்பெயர்ந்து பட்ட சிரமங்களையும் நினைத்துத் தன்னிரக்கம் கொள்வதனூடாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க விளைந்தாள்.

யாருடைய கண்களிலும் படாமல் போய்விட முடிந்தால்… இவ்வளவு தூரமாக இல்லாமல் ஒரே நொடியில் அங்கு சென்றுவிட முடிந்தால்…. அவளுக்கு மட்டும் வசதி இருக்குமானால் நயாகராவுக்குக் குடிபெயர்ந்துவிடுவாள். வேலை… வீடு என்று உழலும் மத்தியதர வர்க்க வாழ்வை நினைத்து எரிச்சலுற்றாள்.

அந்தக் கட்டிடந்தான் எத்தனை பிரமாண்டமும் அழகும் பொலிவதாயிருக்கிறது…! அரைக் கோளத்தைக் கவிழ்த்துவைத்தாற்போன்ற நுழைவாயில் இருபத்துநான்கு மணிநேரமும் ஒளியால் வேயப்பட்டிருக்கும். பின்னால் நெடிதுயர்ந்த விடுதியின் மீது ‘காசினோ’வைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் மினுங்கிக்கொண்டிருக்கும். தோற்றுப் போய் கண்ணீரை ஒளித்துக்கொண்டு வெளியேறிய ஒரு நாளில், அந்தச் செந்நிற எழுத்துக்களின் அழைப்பும் பசப்பும் மினுக்கும் குவீன் வீதியில் பளபளக்கும் கைப்பைகளோடும் குதியுயர்ந்த காலணிகளோடும் அலையும் பெண்களை ஞாபகப்படுத்தியிருந்தது. கொடிய மிருகங்கள் நிறைந்த குகையொன்றினுள் செல்வதான பதைபதைப்பை அவள் பல தடவைகள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், சூதாட்டம் தரக்கூடிய கிளர்ச்சி அந்தப் பதைப்பை மேவியதாக இருந்தது.


பிரதான நுழைவாயில் ஊடாக உள்ளே நுழைந்ததும் வட்டமான பளிங்கு அலங்கார மையம். அதனுள் எழுந்தெழுந்து அடங்கும் குட்டி நீர்வீழ்ச்சிகள். அலங்கார மையத்தின் விளிம்புகளில் எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டேயிருக்க, அவர்களோடு வந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  'சூதின் பேரின்பம் அறியாத மூடர்கள்' என்று, ஆரம்பத்தில் அவர்களைப் பற்றி அவள் நினைத்ததுண்டு.

ஏறத்தாழ இரண்டு மணிநேரப் பயணம். வழிநெடுக மொட்டை மரங்கள் கூதிரை அறிவித்தபடி நின்றிருந்தன. அடர்நீலத்தில் ஏரி சாதுவாகப் படுத்திருந்தது. அதன் கரையில் படகுகள் காற்றுக்குத் தளம்பியபடி நின்றன. துருவேறிய, ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப்பட்டிருந்த இரும்பினாலான இரண்டு ஓடங்கள் புராதன நாவாய்களை ஞாபகப்படுத்தின. அவை நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நினைத்தாள். படகுகள், கார் போன்ற உருவரைகளை ஏன் ஸ்லொட் இயந்திரங்களில் பயன்படுத்துவதில்லை என்று யோசித்தாள்.

அவளுக்கு மேசையில் ஆடும் சூதாட்டம் தெரியாது. அதை அவள் விரும்பியதோ முயற்சித்ததோ இல்லை. நாணயப் பெறுமதிக்கேற்ப காசினோவில் வழங்கப்படும் வட்டவட்டமான நாணயங்களின் விளிம்புகளைக் கையால் வருடியபடி ஆழ்ந்த சிந்தனையில் இறுகிய முகங்களோடு அவர்கள் இருப்பதை அவதானித்திருக்கிறாள். மேசையில் சூதாடுபவர்களில் தமிழ் முகங்களும் உண்டு. பெரும்பாலும் ஆண்கள். மிக அரிதாக பெண்கள். ‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.

இம்முறையும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லொட் இயந்திரத்தில் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த நாளை பல தடவை மீள்ஞாபகித்துப் பார்த்திருக்கிறாள்.

அதுவொரு இனிய பரவசம்!

அந்த ஸ்லொட் இயந்திரம் ஒரு தொலைபேசி கோபுரத்தின் வடிவத்தை ஒத்தது. அவள் வென்ற நாணயங்களின் எண்ணிக்கையைக் காட்டும் விளக்கு முதலில் இருபதில் ஏறிநின்றது. பிறகு நாற்பதுக்கு ஏறியது. அதன்பிறகு அறுபது, எண்பது, நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று ஏறி உச்சிக்குப் போய்விட்டது.

ஆறாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து டாலர்கள்!
‘ஜாக்பொட்’!!!

‘ஜாக்பொட்’விழுந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்கான மணி அடிக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு இயந்திரத்தின் தலையில் இருந்த விளக்கு வேறு ‘வெற்றி… வெற்றி’என்று சுழலவாரம்பித்துவிட்டது. மகிழ்ச்சியில் உரக்கக் கூவவேண்டும் போலிருந்தது. வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஆனால், ஒரு தேர்ந்த சூதாடிக்குரிய பக்குவத்தோடு புன்னகை புரிந்தபடி அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். சுற்றி ஆட்கள் கூடிவிட்டார்கள். வேறு இயந்திரங்களில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் பொறாமை கலந்த விழிகளால் எட்டிப் பார்த்தார்கள். முகங்களில் இருள் கவிந்துவிட்டபோதிலும், அதை நாகரிகப் புன்னகையால் போர்த்தியபடி உதடுகளால் வாழ்த்துத் தெரிவித்தனர். அவள் அவர்களுக்காக உண்மையிலேயே வருந்தினாள். அவர்களது விழிகளில் முந்தைய கணம்வரை தோற்றுப் போயிருந்த தன்னைக் கண்டாள். ஆனால், வெற்றியின் எக்களிப்பு அந்த வருத்தத்தை விஞ்சிநின்றது. அந்நேரம் உடலை பஞ்சுப்பொதி போலவோ பறவையின் இறகு போலவோ எடையற்று உணர்ந்தது நினைவிருக்கிறது. இருபத்தைந்து சதத்துக்குப் பந்தயம் கட்டக்கூடிய அந்த இயந்திரத்தில் அவ்வளவு பெரிய தொகையை வெல்வதென்பது அதிசயந்தான்.


அறுபத்து இரண்டு நூறு டாலர் நோட்டுக்களை ஒன்று… இரண்டு… என்று பணியாளர் நிதானமாக எண்ணி, விரிக்கப்பட்டிருந்த அவளது உள்ளங்கைகளுள் வைத்தார். மீதம் முப்பத்தைந்து டாலர்களைத் தனியாகக் கொடுத்தார். அந்த முப்பத்தைந்து டாலர்களையும் பணியாளருக்கு அவள் அன்பளிப்பாகக் கொடுத்தாள். அப்போது அவள், தான் விளையாடிய இயந்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘நன்றி… நன்றி’என்று பல தடவை சொல்லியபடி அதை வாங்கிச் செல்லும்போது கண்களில் வியப்பு இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தாள். பணியாளர்களுக்கும் அவளுக்குமான இரகசிய விளையாட்டு அது. அப்படியொன்றும் பகட்டாகத் தோன்றாத ஆசியப்பெண்ணொருத்தி எதிர்பாராத ‘டிப்ஸ்’ஐ வழங்கும்போது மேசைப் பணியாளர்களின் தோரணை மாறிவிடுவதை அவள் அவதானித்திருக்கிறாள். சில சமயங்களில் அவர்களை மகிழ்ச்சியூட்டவும் சில சமயங்களில் தோல் நிறத்தின் காரணமாக அலட்சியப்படுத்தும் பணியாளர்களை தற்காலிகமாக வீழ்த்தவும் அவள் அதைச் செய்வதுண்டு. ஆம்…ஆசியர்களின் கௌரவத்திற்காக!

இனி ஜாக்பொட்டில் பெரிய தொகை விழுந்தால் யார் யாருக்கெல்லாம் காசு கொடுக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு கணக்கு உண்டு. அவளளவில் அது சூது என்ற பாவத்தைப் புரிந்தமைக்கான குற்றப்பணமே. அங்கு வந்து விளையாடும் வெள்ளைக்காரப் பெண்களோ மஞ்சள் முகப் பெண்களோ அப்படி நினைக்கமாட்டார்கள் என்று தோன்றியது.

ஒருவழியாக விடுதியை வந்தடைந்து பயணப்பையைத் தூக்கிக் கட்டிலில் போட்டாள். இலேசாக ஒப்பனை செய்துகொண்டு காசினோவை நோக்கி விரைந்துபோனாள். சிக்னல் பச்சையாக மாறக் காத்திருந்தபோது, அறைக்குத் திரும்பிப் போய் ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது மடிக்கணனியில் படம் பார்க்கலாம் என்று நினைத்தாள். வரிசையாக நிற்கும் செர்ரி பழங்கள் அவளை அழைத்தன. பன்றிகள் குர்குர்ரென்றன. அவள் விரைந்து நடந்தாள். அன்று காற்றில் குளிர் அதிகமாக இருந்ததாகத் தோன்றியது. நீர்வீழ்ச்சி அருகிலிருப்பது காரணமாய் இருக்கலாம். காற்று பேயாட்டம் ஆடித் தலையைக் கலைத்துப் போட்டது.

தொலைபேசி கோபுர வடிவத்தினையொத்த ஸ்லொட் இயந்திரங்கள் ஒன்றிலும் இடமில்லை. காத்திருந்தாள்.

ஆரம்ப நாட்களில் அவள் விசித்திரமான விளையாட்டொன்று ஆடிப் பார்த்திருக்கிறாள். வெளியில் நின்று, தான் வெல்லாமலும் தோற்காமலும் இருப்பதான மானசீக விளையாட்டொன்றை ஆடுவாள். பின்னாட்களில் அதன் பொய்மையில் அயர்ச்சியுற்று நிறுத்திவிட்டாள். வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் பயணித்து காசினோவுக்குள் நுழைந்து ஸ்லொட் இயந்திரத்தின் முன் அமர்ந்தபின்னரே மூச்சுவிடுகிறவளாக மாறிப்போன பிற்பாடு, காத்திருப்புகள் கசந்துபோயின.

அந்தக் குறிப்பிட்ட ‘ஸ்லொட் மெசின்’களிலிருந்து யாரும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. வேறொன்றைத் தேடிப் போனாள்.

இன்று நான் தோற்றுப் போகமாட்டேன் என்று சங்கற்பம் செய்துகொண்டதற்கேற்றபடி, ஒரு சத இயந்திரத்தின் முன் போயமர்ந்தாள். ஒரு சத, இரண்டு சத விளையாட்டுக்களை வழங்கும் இயந்திரங்கள் புதிதாகப் போடப்பட்டிருந்தன. அதுவொரு ஏமாற்று வேலை என்பதை அவள் சற்று நேரத்திற்கெல்லாம் கண்டுபிடித்தாள். ஒரு சத விளையாட்டை வழங்கும் இயந்திரத்தில் ஒரு சதத்திற்கான ஆட்டமே இல்லை. குறைந்தபட்சம் தொண்ணூறு சதங்களைப் பந்தயம் வைத்து ஆளியை அழுத்தினால் மட்டுமே வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதை அவள் உணர்ந்தபோது நூற்றி அறுபது டாலர்களை இழந்துவிட்டிருந்தாள். அந்த இயந்திரம் ‘இதோ… இதோ… வெல்லப்போகிறாய்’என்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு சுழன்றது. ஏதேதோ வார்த்தைகளை உச்சாடனம் செய்து உருவேற்றியது. அவளுக்குள் பதட்டம் பரவத் தொடங்கியது.

எழுந்து மற்றொரு இயந்திரத்தைத் தேடிப் போனாள். வழியில் இரண்டு இருபது டாலர்களை இழந்தாள். அன்று சனிக்கிழமையாதலால் கூட்டம் நெரிபட்டது. விளையாடுபவர்கள் தவிர, பொழுதுபோக்கவும் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவும் என்று வந்த கூட்டம். மதுபானச்சாலையில் ஆண்களும் பெண்களும் சோடி சோடியாகவும் தனியாகவும் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். தனியாக இருந்தவர்கள் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். தோற்றுப்போனவர்களாயிருக்கலாம் என்று நினைத்தாள். வழியில், அகன்ற மஞ்சள் முகத்தில் தோல்வியின் கண்ணீர்க் கோடுகள் தெரிய ஒரு பெண் தனியாக அமர்ந்திருந்தாள். சீனா அல்லது கொரியாவைச் சேர்ந்தவளாயிருக்கலாம்.


மார்பில் பாதி தெரிய உடையணிந்த பெண்கள் உரக்கச் சிரித்தபடி ஆண்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு போனார்கள். சிலர் கோப்பி குடிப்பதற்கென்றே அங்கு வந்தவர்கள் போல இலவசமாக வழங்கப்பட்ட கோப்பியை வாங்கிக் குடித்துக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மனதுள் காரணமற்ற எரிச்சல் மூண்டது.

சற்றுநேரத்தில் மனிதர்கள் மறைந்துபோனார்கள். அந்த இயந்திரங்கள் நடுவில் அவள் மட்டும் முடிவில்லாத தெருவொன்றில் நடந்துகொண்டிருப்பதான களைப்பை உணர்ந்தாள். பல தடவை ஆட்களில் மோதிக்கொள்ளத் தெரிந்தாள். அந்தப் பிரமாண்டமான கூடம் அவள்மீது கவிழ்ந்து மூடியது. மூச்சுத் திணறியது.

கூட்டமற்ற இடத்தில், அநாதரவாகக் கிடந்த இயந்திரமொன்றின் முன் போயமர்ந்தாள். அதன் வயிற்றுக்குள் பன்னிற ஏழுகள் இருந்தன. – கடுஞ்சிவப்பு ஏழும் அதிலொன்று. ஏழின் விளிம்புகளில் கறுப்பு நிறத் தீற்றல் அதையொரு பந்தயக் குதிரையென உருமாற்றியிருந்தது. காரணமின்றி கனவுகள் வருவதில்லை என்று அம்மா சொல்வதை நினைத்தாள். ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்றத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு தடவையும் ஆளியை அழுத்திவிட்டு ‘விழப் போகிறது… விழப் போகிறது…’என்ற படபடப்போடு காத்திருந்தாள். அதுவொன்றும் மோசமான இயந்திரமல்ல. விழுத்தியது. பிறகு விழுங்கியது. விழுத்தியது. பிறகு விழுங்கியது. ஒரு தடவை கறுப்புக் குதிரைகள் நேரே அணிவகுத்தன. நூறு டாலர்களை அவள் வென்றாள். சுழலவாரம்பிக்கும்போது இதயம் துடிதுடிக்கும். நேர்வரிசையில் வந்து நிற்பதுபோல பாசாங்கு காட்டிவிட்டு நழுவிச் செல்லும். என்னவொரு மயக்குப் புன்னகை! ‘உனக்கில்லாமலா…’என்ற சாகசம்…! ஏழு… ஏழு… மூன்றாவது பட்டையிலும் ஏழு வந்து நின்றுவிட்டால்… ஏழு வழுக்கிச் சுற்றி எங்கோ உள்ளொளிந்துகொண்டுவிட்டது. வென்ற நூறு டாலர்களையும் இயந்திரம் பிடுங்கிக்கொண்டுவிட்டது. குறைந்தபட்சம் அந்த இயந்திரம் அவளை சற்று நேரம் விளையாட அனுமதித்தது என்பதில் திருப்தி. அவள் அறுபது டாலர்களை கபளீகரம் செய்த அந்த இயந்திரத்திலிருந்து எழுந்திருந்தாள். ‘நாசமாய் போனவள்’என்று தன்னையே வைதுகொண்டாள். அவளையறியாமல் அதை உரக்கச் சொல்லியிருப்பாள் போலும். வெள்ளையினப் பெண்ணொருத்தி வினோதமான பார்வையை அவள்மீது விட்டெறிந்துவிட்டுப் போனாள். அவமானமாக இருந்தது.

கைப்பையைத் திறந்து மீதமிருந்த காசை எண்ணிப் பார்த்தாள். சரியாக பத்து இருபது டாலர் நோட்டுகளும் சில நாணயங்களும் இருந்தன. இருநூறு டாலர்கள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அம்மாவின் முகத்தை நினைத்தாள். அவள் முகம் அருளிழந்து போயிருப்பதாகச் சொன்னதை நினைத்தாள். குற்றவுணர்வாக இருந்தது.

இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது என்று அவள் அப்போதும் நம்பினாள். அப்படி நடந்திருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும். அந்த மாய நொடி… பிறகு இங்கு நடந்து திரியும் மனிதர்கள் எல்லோரும் தேவன்களும் தேவதைகளும் ஆகிவிடுவார்கள். வென்ற பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் வெளியேறும் வாயிலை நோக்கி விரைந்துசெல்வாள். வாயிற்புறத்திலுள்ள குட்டி நீர்வீழ்ச்சிகளை இன்றைக்கு நின்று கவனிப்பாள். மகிழ்ச்சி ததும்பி வழியும் மனதோடு விடுதியறைக்குச் செல்வாள். முடிந்தால் நீர்வீழ்ச்சி வரை நடந்து செல்வாள். வீதியெல்லாம் இரவின் பிரகாசம் பொன்துகள்களென இறைந்துகிடக்கும். அறைக்குப் போய் 'பிட்சா'வோ 'கென்ரேக்கி'யோ வரவழைத்துச் சாப்பிடுவாள். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். சரியான இயந்திரத்தை தேர்ந்து விளையாடுவது.

 “உன்னிட்ட இருக்கிற காசைத்தான் மெசினுக்குள்ள குடுக்கிறாய். பிறகு அது விழுங்கின காசை எப்பிடியெண்டாலும் திருப்பித் தரச் சொல்லி அதின்ரை காலிலை விழுந்து கெஞ்சிறாய். காசினோ நடத்துறவங்கள் பைத்தியக்காரங்கள் எண்டு நினைக்கிறியா… விளையாடுற எல்லாருக்கும் ஜாக்பொட் விழுத்தினால் இழுத்து மூடிப் போட்டு அவங்கள் வீட்டை போக வேண்டியதுதான். இங்கை விளையாட வாற ஒவ்வொருத்தரும் தங்களுக்கு ஜாக்பொட் விழும் எண்டுதான் நினைச்சுக்கொண்டு வருகினம். ஆனா… எப்பவும் வெல்லுறது இல்லை… எப்பவாவது வெல்லுறதுதான் சூதாட்டத்தின்ரை பொதுவிதி”என்ற சுதனின் வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன.

பசித்தது. கைத்தொலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். இரவு பதினொன்றரையாகிவிட்டிருந்தது. இரைச்சலில் அம்மாவின் அழைப்பைத் தவறவிட்டிருந்தாள். யார் மீதென்று தெரியாத கோபம் தலைக்கேற ‘சைலன்ட் மோட்’ஐ அழுத்தினாள். இன்னும் அரை மணி நேரத்தில் காசினோவின் உள்ளிருக்கும் உணவு விடுதியைப் பூட்டிவிடுவார்கள்.


அந்த இடமே புகையடர்ந்ததுபோல மாறியிருந்தது. சூதாட்ட விடுதிகள் உள்ளடங்கலான பொது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதனால், அது சிகரெட் புகையல்ல என்பதை உணர்ந்தாள். ஒரே இடத்தில் கண்களைப் பதித்து உற்று நோக்கிக்கொண்டிருந்த காரணத்தால் பார்வை மங்கலாகியிருக்கக்கூடும். இலேசாகத் தலைசுற்றியது.
போதும்… திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தாள். வெளியேறும் வாயிலைச் சுட்டும் எழுத்துக்கள் செந்நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ‘போ… போ…’என்றாள் தேவதை. ‘போறியாக்கும்…’என்றது என்று செல்லமாகக் கொஞ்சினாள் கடற்கன்னி. அவள் அருகிலிருந்த வாயிலை நோக்கி நடந்தாள். அதனருகிலேயே உணவகம் அமைந்திருந்தது.
வழியில் ஒரு இயந்திரத்தின் முன் ஏழெட்டுப் பேர் கூடி நின்றிருந்தார்கள். எட்டிப் பார்த்தாள். ஜாக்பொட் விழுந்திருந்தது.


இரண்டாயிரத்து ஐந்நூறு டாலர்கள்!


அந்த  மனிதர் - வயதானவர் நடுங்கும் கைகளோடு அகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஒருபோதும் வென்றிராதவர் போல தோன்றினார். ஏழ்மையைப் பறைசாற்றும் முகம்… உடைகள். கடந்த வாரம் ஒருவருக்கு பதினைந்தாயிரம் டாலர்கள் விழுந்ததைப் பற்றி ஒரு பெண் உரக்க விபரித்துக்கொண்டிருந்தாள். உண்மையில் அதில் விபரிக்க ஒன்றுமேயில்லை. ஒரு அழுத்து… நேர்கோட்டில் உருக்கள்… அவ்வளவுதான்!
ஜக்பொட்’விழுந்திருக்கும்போது நேராக வந்து நிற்கும் அந்த உருக்களைக் காணக் கண் கோடி வேண்டும். ஒரு தடவை பன்றிக்குட்டிகள் அவளுக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்களை ஈட்டித் தந்தன. அந்த வெற்றி, அவள் துயரம் ஊறிய முகத்தோடு வெளியேறிச் செல்வதற்கு முன்பாக கையிலிருந்த கடைசி இருபது டாலர்களால் கிட்டியிருந்தது. அன்றிலிருந்து பன்றிகள் மீது அவளுக்கு பிரியம் அதிகமாகிவிட்டது. பிறகொரு தடவை கடற்கன்னிகள் நேர்வரிசையில் வந்து நின்றார்கள். செதில்நிறைந்த வால்களை அவள் வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். கைகளில் தூசி ஒட்டிக்கொண்டது. தீக்கொழுந்துகள் சுற்றிப்படர்ந்த செந்நிற ஏழுகள், ஐந்நூறு டாலர்களை வென்றெடுத்துத் தந்த நாட்கள் அநேகம்.

இன்னும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றிற்று. வயிறோ பசியில் அழுது அடம்பிடித்தது. தலை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தது. பொருட்கள் இடம்மாறித் தெரிந்தன. மயங்கி விழுந்து விடுவேனோ என அஞ்சினாள். இம்முறை தேர்ந்த இயந்திரம் கபகபவென விழுங்கியது. திருப்பித் தரமாட்டேனெனக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போல… ஏறுக்கு மாறாகவே சுற்றியது. தோற்கிறோம் என்று அறிந்தும் யாரையோ பழிவாங்குவதுபோல நோட்டுக்களைத் திணித்துக்கொண்டே இருந்தாள்.


வயிறு ஒட்டி இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக்கொண்டே இருந்தது. கண்களைச் சுற்றி கருவளையம் படர்ந்திருக்கும் என்பதை கண்ணாடியைப் பார்க்காமலே அவள் ஊகித்தாள். முகம் காய்ந்து தலை கலைந்து ஒரு பிச்சைக்காரியைப் போல இரக்கமற்ற அந்த இயந்திரங்களிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதை நினைக்க அழுகை வந்தது. சுயவெறுப்பு மிகுந்தது. இந்த நாகரிக உலகம் மட்டும் இல்லையென்றால்…. உண்மையில் அவள் அங்கிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தியபடி வெளியே ஓட விரும்பினாள். ஆனால், அவள் நினைத்தபடியெல்லாம் அங்கு அவளால் நடந்துகொள்ள முடியாது.
‘ஷிட்’என்று வாய்க்குள் நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டாள். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தால், வன்முறையாக நடந்துகொண்டால் விரட்டிவிடுவார்கள் என்ற அச்சம் அவளைத் தடுத்தது. 


சூதாடும் பழக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கென்றே ‘புனர்வாழ்வு’நிலையங்கள் இருக்கின்றன. தோற்றுப் போய் வாய்விட்டு அழுத, கண்களில் உலகத்தின் துயரமெல்லாம் தேக்கப்பட்டிருக்க தளர்ந்து வெளியேறும் பலரை அவள் பார்த்திருக்கிறாள். விரல்களைக் கோர்த்துக்கொண்டு உள்ளே வந்து, பணத்தை இழந்தபின் வாக்குவாதப்பட்டபடி எதிரிகளைப் போல வெளியேறிச் சென்ற இணைகளையும் பார்த்திருக்கிறாள்.

அவள் எத்தனை நாட்கள் அப்படித் திரும்பிப் பாராமல் சூறைக்காற்றென தன்னைத் தானே இழுத்துக்கொண்டு ஓடிப்போயிருக்கிறாள்! நரகத்தினுள் தள்ளப்பட்டவளைப் போல ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்ற அந்தக் கூடமெங்கும் பரிதபித்து அலைந்திருக்கிறாள்! நள்ளிரவு கடந்து மயங்கி விழும் நிலை வந்த பிற்பாடு சாப்பிடுவதற்காக உணவகத்தினுள் நுழையும் அந்த ஆசியப் பெண்ணை உணவகத்தினருக்குக் கூட நினைவிருக்கலாம்.
முற்றிலும் மூழ்கிப் போவதன் முன்பான சுயவிசாரணை ஆரம்பித்துவிட்டது.

“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?”

‘நான் தனிமையாக இருக்கிறேன்’என்று சொல்லிக்கொண்டாள். 

மானசீகமாக கண்ணாடியைப் பார்த்துக் காறியுமிழ்ந்தாள்.
“இனிமேல் இல்லை… இனிமேல் இல்லை”என்று பிதற்றியபோது ஏறத்தாழ அவள் தோற்றுவிட்டிருந்தாள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருளற்ற சொற்கள் அவளது மனப்பரப்பில் மிதக்கவாரம்பித்தன. கையில் இருபது டாலர் மீந்திருந்தது. இரவு உணவுக்கு அது போதுமானது. விடுதியில் முற்பணமாக அவளிடமிருந்து பிடித்தம் செய்த நூறு டாலர்கள் இருந்தன. அறையைக் காலி செய்யும்போதுதான் அதைக் கொடுப்பார்கள். பயணச் செலவுக்கு அது தாராளமாகப் போதும். பயமா பசியா என்று பிரித்தறிய முடியாத உணர்வில் வயிறு இம்சித்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். விசும்பி விசும்பி அழத்தோன்றியது. அம்மாதம் தொலைபேசி, தொலைக்காட்சிக் கட்டணங்களுக்கென்று கணக்கில் விட்டுவைக்கப்பட்டிருந்த எண்பது டாலர்களில் கடைசித்தடவையாக அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியதும், வங்கியின் தானியங்கி இயந்திரத்தை நோக்கிப் போனாள். அந்தப் பணம் தன்னை இந்தப் பாதாளத்திலிருந்து கைதூக்கிவிடும் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
எல்லாம் ஒரு நொடியில் மாறிவிடும்! ஆம்!

ஒவ்வொரு இருபது டாலராக இயந்திரத்தின் வாயினுள் செலுத்திக்கொண்டிருந்தபோது, கௌரவத்தைப் பார்க்காமல், தான் கொஞ்சம்போல நம்பிக் கொண்டிருக்கிற கடவுளிடம் தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து விடுவித்துவிடும்படி யாசித்தாள். சூதாட்ட விடுதியின் இரைச்சலில் அவளது குரல் கடவுளுக்குக் கேட்கவேயில்லை.
அந்த எண்பது டாலர்களும் தீர்ந்துபோயின. கடனட்டையை தானியங்கி இயந்திரத்தினுள் செலுத்தி இருபது டாலராவது கொடுக்கும்படி மன்றாடினாள். அது கையை விரித்துவிட்டது. யாரிடமாவது கடன் கேட்கலாமென்றாலும் அந்த நள்ளிரவில் என்ன சொல்லிக் கேட்பது…? நள்ளிரவு ஒன்றரை மணி. உணவு விடுதி மூடப்பட்டுவிட்டிருந்தது. பசி தனது இருப்பை பிடிவாதமாக ஞாபகமூட்டிக்கொண்டேயிருந்தது.

“எண்டைக்காவது நீ எனக்குத் துரோகம் செய்ய நினைச்சிருக்கிறியா…?” என்று சுதன் ஒருநாள் விளையாட்டாகக் கேட்டான்.

“அதைத் துரோகம் எண்டு சொல்லலாமா எண்டு எனக்குத் தெரியேல்லை. ஆனா… காசினோவில நான் தோற்றுப்போய் என்ன செய்யிறதெண்டு தெரியாம யோசிச்சுக்கொண்டிருக்கேக்கை எவனாவது வந்து ஐந்நூறு டொலர் தாறன் வா எண்டு கூப்பிட்டிருந்தால் போயிருப்பன்”என்றாள்.
அவள் அப்படி ஏடாகூடமாகப் பேசும் பழக்கமுடையவள் என்பதால், சுதன் அந்தப் பதிலை அன்று பொருட்படுத்தவில்லை.

துயரத்தில் கரிந்துபோன முகத்தோடு சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தாள். அன்று சுதனுக்கு அளித்த பதிலை நோக்கித் தான் நகர்ந்துகொண்டிருப்பதை திடீரென உணர்ந்து திடுக்கிட்டாள். தற்கொலை எண்ணம் மனதின் அடியாழத்திலிருந்து மேற்பரப்பை நோக்கி வருவதை பயத்தோடு அவதானித்தாள். தலையை அசைத்தபடி எழுந்து கழிப்பறையை நோக்கிப் போனாள்.

கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது கண்கள் உள்ளொடுங்கிப் போயிருந்ததைக் கண்டாள். சுயவெறுப்பின் உச்சம் பிடரியைப் பிடித்துத் தள்ள சூதாட்ட விடுதியின் கனத்த கதவுகளைத் திறந்துகொண்டு வெளியேறினாள். வழியில் சான்ட்விச்சும் தண்ணீர்ப் போத்தலும் வாங்கிக்கொண்டாள். விடிய விடியத் திறந்திருக்கும் அந்தக் கடையில் அதற்காக பதினெட்டு டாலர்களை அறவிட்டார்கள். மீதமிருக்கும் சில்லறை, காலை உணவுக்குப் போதுமானது என்று மனம் கணக்கிட்டது.

விடுதியறைக்குத் திரும்பி கட்டிலில் தன்னை எறிந்தபோது இனிமேல் ஒருபோதுமில்லை என்று மனம் அரற்றிக்கொண்டிருந்தது. கன்னங்களில் வலிக்கும்படியாக அறைந்தாள். தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அம்மா மீண்டும் அழைத்திருந்தார். சுதன் ஆறு தடவைகள் அழைத்திருந்தான். அவனை அழைத்து இந்தக் கீழ்மையான உலகிலிருந்து என்னை அழைத்துக்கொண்டு போ என்று கதறவேண்டும் போலிருந்தது.
அவனது இலக்கம் மீண்டும் தொலைபேசியில் மினுங்கவும் எடுத்து காதில் பொருத்தினாள்.

“எவ்வளவு தோற்றனீ?”என்றான் அவன்.
அவள் மௌனமாக இருந்தாள்.
“நீ திருந்த மாட்டியா…?”
மீண்டும் கேட்டான்.
“எவ்வளவு?”
“ஐந்நூற்று நாற்பது”
“எழுபதாயிரம் ரூபாய்”அவன் கடுமையான குரலில் சொன்னான்.
அவள் மௌனமாக அழுதுகொண்டிருந்தாள். விக்கலில் உடல் தூக்கித் தூக்கிப் போட்டது. அவனுக்குத் தாங்கவில்லை.
“இதுதான் கடைசி. இனி வர மாட்டன்…”
“மெசினுக்குள்ள எவ்வளவு விட்டனி எண்டு உண்மையைச் சொல்லு. நான் தாறன்… ஆனா உடனை வெளிக்கிட்டு வந்திட வேணும்…”
அவள் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். மகிழ்ச்சி ஒரு மின்னலைப் போல வெட்டி விரைந்தது. அக்கணமே மண்டியிட்டு கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பினாள். சுதன் அவள் மனதில் அதிமனிதனாக வளர்ந்துகொண்டே போனான்.
“இந்நேரம் பஸ் இருக்காது”
“சரி… காலமை முதல் பஸ்ஸிலை வெளிக்கிட வேணும்..”
“ம்…இனி இஞ்சை வர மாட்டன். அப்பிடி வந்தா என்னை விட்டிடுங்கோ”
“சரி…”அவன் அந்தப் பக்கத்தில் மெலிதாகச் சிரித்தது கேட்டது.
--- --- ---
நன்றாக உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கண் விழித்ததும் முதல் நாளின் ஞாபகங்கள் நெருஞ்சியாய் நெருடின. தன்னிரக்கம் மிகுந்து கண்கள் பனித்தன. சுதனை நினைக்குந்தோறும் நெஞ்சம் காதலில் விம்மியது. அறையைக் காலி செய்தாள். முன்பணமாகப் பிடித்தம் செய்யப்பட்டிருந்த நூறு டாலர்களை வாங்கியபின், ரொறன்ரோவுக்கான பேருந்து அட்டவணையைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

விடுதியை விட்டு வெளியே வந்ததும் அந்த நூறு டாலர்களையும் வெளியில் எடுத்தாள். அதில் பேருந்துக் கட்டணத்திற்கென இருபத்தைந்து டாலர்களை எண்ணித் தனியாக வைத்தாள். பிறகு, காசினோவை நோக்கி வெகுவேகமாக நடக்கத் தொடங்கினாள். 

நன்றி: 'அம்ருதா'சஞ்சிகை, யூன் மாத இதழ்



25 comments:

தீபிகா(Theepika) said...

காசினோ என்கிற சூதாட்டம் ஆண்-பெண் வேறுபாடுகளற்று தொற்றிக் கொள்ளும் ஒரு போதை என்பதை அழகாக சொல்கிறது கதையோட்டம். விடவிரும்பும் மனதுக்கும் விடமுடியாமல் தவிக்கும் மனதுக்கும் இடையேயான போராடட்டத்தின் இயல்பை அப்படியே சொல்லி வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

தமிழ்நதி said...

தீபிகா,

ஆம்.. அதுவொரு மிகப்பெரிய போராட்டமே. சூதாட்டத்தின் மாயவலையில் வீழ்ந்தவர்கள் தம்மை விடுவித்துக்கொள்வது மிகக் கடினம்.

பிச்சைப்பாத்திரம் said...

தமி்ழ்நதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அந்தப் பெண்ணின் பதட்டமும் அகவயமான தவிப்பும் மிகக் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. இறுதிவரி அப்படி அமையாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.:)

SS JAYAMOHAN said...

நவீனமானதொரு சிறுகதை.
சிறப்பான வெளிப்பாடு...
மிகவும் ரசித்தேன் !

'சுதன்' என்று உங்கள் கதை- நாயகியின் காதலனுக்கு அழகான ஒரு பெயரை சூட்டி இருந்தீர்கள்.
அனால், கதைநாயகின் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை. அவள்-இவள் என்று
கதை முழுவதும் வருகிறது.

அவளுக்கும் ஒரு பெயர் வைத்து,
அவளது பெயரையும் குறிப்பிட்டு எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

தமிழ்நதி said...

நன்றி சுரேஷ் கண்ணன்,

சூதாடிகளும் குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவருதல் அரிதிலும் அரிதென நினைக்கிறேன். அந்தக் கதையை எழுதும்போது, அவள் அதிலிருந்து வெளிவந்து விடவேண்டுமே என்ற பரிதவிப்போடே எழுதினேன். ஆனால், அவள் வரமாட்டாள் என்பதை உள்ளுக்குள் அறிந்திருந்தேன்.:)))

வணக்கம் எஸ்.எஸ்.ஜெயமோகன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆம்...அவளுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கலாந்தான். அதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தேன். இப்போதெல்லாம் பொருத்தமற்ற பெயர்களை வைக்கத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், அந்தப் பெண் எனக்குப் பரிச்சயமானவள்.

ரௌத்ரன் said...

சொக்கத்தான் வைக்கிறது..சூதும் இந்த எழுத்தும்.வாசித்த பொழுது ஏதேதோ எழுத தோன்றியது.கெரகம் இப்பொழுது எல்லாம் மறந்து விட்டது...

வெகு நாளில் வலையில் வாசித்த மிக அழகான கதை.

தமிழ்நதி said...

நன்றி ரௌத்ரன்,

யாராவது பாராட்டினால் என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை:)))

Unknown said...

சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் போன குரல் என் காதுகளுக்குள் ரீங்கரிப்பதை நான் எங்ஙனம் நிறுத்த? கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?

Unknown said...

சூதாட்டவிடுதியின் இரைச்சலில் கடவுளுக்கு கேட்காமல் போன குரல் என் காதுகளுக்குள் ரீங்கரிப்பதை நான் எங்ஙனம் நிறுத்த? கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?

Garunyan Konfuzius said...

மிகச்சிறப்பானதொரு வார்ப்பு. ஜெ.மோவின் ‘அறம்’ கதையில் வரும் அப்பாவி எழுத்தாளன் ஒரே மகளின் கல்யாணத்தை நிறைவேற்றமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பார். “ அவன் (அந்த பிரசுரகர்த்தா) மட்டும் எனக்குத்தரவேண்டிய இரண்டாயிரத்தையும் தூக்கிக்கடாசிட்டு கொஞ்சம் ஊம்பிட்டுப்போடான்னா உக்கார்ந்திருப்பேன்னு” சொல்வார். // காசினோவில நான் தோற்றுப்போய் என்ன செய்யிறதெண்டு தெரியாம யோசிச்சுக்கொண்டிருக்கேக்கை எவனாவது வந்து ஐந்நூறு டொலர் தாறன் வா எண்டு கூப்பிட்டிருந்தால் போயிருப்பன்”//என்கிற வரிகள் தேவைகள் மனிதனை என்னவென்னவெல்லாம் பண்ணவைக்கும் என்பதைத் துணிச்சலாக வடித்த வரிகள். அனுபவித்துப்படித்தேன். வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

நன்றி kurusu socrates,

//கதையின் சூதாட்டகூடத்திலிருந்து நான் வெளியேற வேண்டி திறந்த கதவுகள் இன்னொரு சூதாட்ட அரங்கினுள்ளே அழைத்துபோகும் தந்திரத்திலிருந்து எப்படி தப்பிப்பது?//

எந்த சூதாட்ட அரங்கு அது? நீங்கள் வாழும் பாலையில் அப்படி அரங்குகள் உள்ளனவா?

நன்றி கருணாகரமூர்த்தி...

அந்நேரம் அப்படித்தான் உணர்வுகள் இருக்கும்:))) உங்கள் பெயரைப் பார்த்ததும் யாரோ என்று நினைத்தேன்.

Garunyan Konfuzius said...

என்ன அப்படிச்சொல்லிவிட்டீர்கள். பெர்லின் என்றால் அது இன்னொரு லாஸ் வெகாஸாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு நகரம். அதன் சூதாட்ட மையங்கள் பற்றி பெர்லின் இரவுகளில் லேசாகக்குறிப்பிட்டுள்ளேன். அதன் புகுத்திய பதிப்பில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத எண்ணம். ‘ காருண்யன்’ நான் கவிதை பெய்யும் வேளைகளில் சூடிக்கொள்ளும் பெயர்களில் ஒன்று.

Unknown said...

வாசிப்பவனின் ஞாபக அடுக்கிலேயே கதைசொல்லி இயங்கத்துவங்குகிறான் என்பதை நம்பும் மரபிலேயே என் வாசிப்புதளம் இருக்கிறது. சூதாட்டகூடத்திலிருந்து அவள் வெளியேறிவிட்டாலும் கண்ணீரையும் அன்பையும் போண் வழியே செலுத்தி புதிய சூதாட்டத்தை அவள் துவக்கிவிடுகிறாள். பந்தயபணம் நிபந்தனையுடன் கிடைத்துவிடுமென்றாலும் அது புதிய சூதாட்டமென்றே நான் நம்புகிறேன். சூதாட்டகூடத்திலிருந்து திறக்கப்பட்ட கதவு புதிய சூதாட்டகூடத்திற்கே அழைத்து செல்கிறது. புதிய வாசிப்பனுபவத்தை கதைசொல்லி திறந்துவிடுகிறார்.

அம்பேதன் said...

அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் தன் இளவயது வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க இயலாது லட்சியங்களற்று வெற்று ஆளாய்ப் போனாள் ஒரு ஈழப் பெண் என்பது அதிர்ச்சியாய் இறங்கியது. அது நிஜவாழ்வில் நீங்கள் சந்தித்த நிஜமென்றதும் மேலும் அதிகமானது.
>>>>
‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.
>>>>>>
பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

சமீபத்தில் அஸ்ஸாமில் இப்படி பாரில் தனது பெண் தோழிக்காக பார்ட்டி கொடுக்க ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வந்து குடித்து விட்டு, கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட முடியாமல் பாரிலிருந்த வெளியேற்றப்பட்டு, நண்பர்களை குற்றம் சொல்லி அவர்களுடன் சண்டை போட, அப்போது பாருக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு குடிகார ஆண்களின் கும்பல் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உட்புகுந்து அந்தப் பெண்ணிடம் அத்துமீற ஆரம்பிக்க, இவளின் நண்பர்கள் எஸ்கேப்பாக, இரவு 10 மணிக்கு நடுரோட்டில் நடந்த அவலத்தை ரோட்டில் ரோந்து வந்த போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார்.

மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.

மது,சூது,மாது இவற்றில் விழுந்தவன் எழவே முடியாது என்பது பழைய (ஆண்களுக்கான) பழமொழி. மது,சூது,புருஷன் இவற்றில் விழுந்தவள் எழவே முடியாது என்று சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.

அம்பேதன் said...

அருமையான நடை. முடிவு எதிர்பார்த்தது தான். கதையில் தன் இளவயது வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க இயலாது லட்சியங்களற்று வெற்று ஆளாய்ப் போனாள் ஒரு ஈழப் பெண் என்பது அதிர்ச்சியாய் இறங்கியது. அது நிஜவாழ்வில் நீங்கள் சந்தித்த நிஜமென்றதும் மேலும் அதிகமானது.
>>>>
‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.
>>>>>>
பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

சமீபத்தில் அஸ்ஸாமில் இப்படி பாரில் தனது பெண் தோழிக்காக பார்ட்டி கொடுக்க ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வந்து குடித்து விட்டு, கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட முடியாமல் பாரிலிருந்த வெளியேற்றப்பட்டு, நண்பர்களை குற்றம் சொல்லி அவர்களுடன் சண்டை போட, அப்போது பாருக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு குடிகார ஆண்களின் கும்பல் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உட்புகுந்து அந்தப் பெண்ணிடம் அத்துமீற ஆரம்பிக்க, இவளின் நண்பர்கள் எஸ்கேப்பாக, இரவு 10 மணிக்கு நடுரோட்டில் நடந்த அவலத்தை ரோட்டில் ரோந்து வந்த போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார்.

மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.

மது,சூது,மாது இவற்றில் விழுந்தவன் எழவே முடியாது என்பது பழைய (ஆண்களுக்கான) பழமொழி. மது,சூது,புருஷன் இவற்றில் விழுந்தவள் எழவே முடியாது என்று சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.

தமிழ்நதி said...

கருணாகரமூர்த்தி,

உங்கள் மகள் காருண்யாவிலிருந்து அந்தப் பெயரை எடுத்துக்கொண்டீர்கள் போலும். இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்போது வாழும் ஜேர்மனியைப் பற்றிய தெளிந்த சித்திரம் அதன்பிறகு எனக்குக் கிட்டலாம். அங்கு குறிப்பிடத்தக்க அளவில் சூதாட்ட விடுதிகள் உண்டு என்பது இதுவரையில் அறிந்திராதது.

நன்றி Kurusu. socrates,

ஆம். அது புதிய சூதாட்டந்தான். ஆனால், தோல்வி புதிதாக இருக்காது. தொடங்கும் உற்சாகம் மட்டுமே புதியது.

வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி பிரபு.

வழக்கம்போல பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது அம்பேதன்.

முடிவு உங்களைப் போன்றவர்களால் ஊகிக்கத்தக்கதே. அப்படித்தானே இருக்கமுடியும்? திருந்துகிறேன் வருந்துகிறேன் என்று முடிப்பது இயல்பை மீறியதல்லவா:))

ஆம். அந்தப் பெண்ணை நான் சந்தித்திருக்கிறேன். சில காரணங்களால் அவளுடைய பெயரை வெளிப்படுத்த முடியவில்லை.

//பொதுவாக குடும்பத்தையும், வெளிப்படையாக தமிழ்க் குடும்பப் பெண்ணையும் 'அடிமைகளாக' சித்தரிக்கும் இடம்; (Mocking at stereotype roles); ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.///

பிடிப்பதும் பிடிக்காதிருப்பதும் வாசகனின் உரிமை. ஆனால், ஆண்-பெண்களுக்கிடையிலான பாரபட்சங்கள் குறைந்தபட்சம் பேசப்படவாவது வேண்டுந்தானே...

///மறுநாள் மாதர் இயக்கங்கள், என்ஜிஒக்கள் முதல், அஸ்ஸாம் மாநில முதல்வர் வரை கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் போராட, ஊர்வலம் போக ஆரம்பித்தனர். யாரும் குடிக்கு எதிராக சம்பிரதாயமாகவேனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இங்கே சம உரிமை மட்டுமே பார்க்கப்படுகிறது. சமூக நலன் பார்க்கப்படவே இல்லை.//

நீங்கள் சொன்ன குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், 'இப்படியொரு மனப்பாங்குடைய தேசத்தில் பாதுகாப்பின் நிமித்தம் பெண்கள் பொது இடங்களில் குடிக்கக்கூடாது'என்பதைப் புரிந்துகொள்கிறேன். சமூகப் பாதுகாப்பு முக்கியம்.

ஆனால், குடிப்பது உள்ளடங்கலாக அனைத்து உரிமைகளும் எப்பாலினருக்கும் பொதுவானதாக இந்தச் சமூகம் மாறவேண்டும் என்றொரு கனவுண்டு.

குடிப்பது சரியா? தவறா? என்பது வேறொரு விவாதத்துள் செல்லும்.

எஸ் சக்திவேல் said...

Addiction என்பது ஆண்/பெண் என்று இல்லாமல் பொதுவானது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

போனமாதம்தான் நயாகரா போயிருந்தபோது அந்தக் கசீனோ'வையும் பார்த்தேன்.

தமிழ்நதி said...

சக்திவேல்,

//போனமாதம்தான் நயாகரா போயிருந்தபோது அந்தக் கசீனோ'வையும் பார்த்தேன்.//

அங்கு விளையாடினீர்களா? இங்கு பெரும்பாலான தமிழ் ஆட்கள் கௌரவப் பிரச்சனை காரணமாக 'பார்த்தேன்'என்றுதான் கதைப்பார்கள். விளையாடியதைச் சொல்லமாட்டார்கள். அங்கே இரண்டு பெரிய 'காசினோ'க்கள் இருக்கின்றன. நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழியில் ஒன்று. எதிரே ஒன்று.

எஸ் சக்திவேல் said...

>அங்கு விளையாடினீர்களா? இங்கு பெரும்பாலான தமிழ் ஆட்கள் கௌரவப் பிரச்சனை காரணமாக 'பார்த்தேன்'என்றுதான் கதைப்பார்கள்

இல்லை, நான் கசீனோ விளையாடுவதில்லை, ஒரு சதம், இரண்டு சதத்திற்குக் கூட. போனமாதம் கனடா வந்திருந்தேன். தம்பி குடும்பம் கனடாவில். குடும்பமாக நயாகரா வந்தோம். கார் பார்க் பண்ணியது நீர்வீழ்ச்சிக்கு எதிரில் இருந்த கசீனோவில். முன்பு பார்க்கிங் இலவசம் என்று ஆரோ சொன்னார்கள். இப்ப நாளொரு கட்டணம். (இரண்டு முறை நயாகரா வந்தபோதும் இரு வேறு கட்டணங்கள்).

தமிழ்நதி said...

நல்லது சக்திவேல். அதுவொரு மாயச்சகதி. விழுந்தால் எழுந்திருப்பது கடினம்.

Michaelpillai said...

மிக அழகாக இயற்கையாக எம் அவலம் சொல்லப்பட்ட படைப்பு. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5868.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

S. Hameeth said...

சிறுகதைகள் வாசித்துச் சில வருடங்கள் கடந்துவிட்டன. அனால், எதேச்சையாக அண்மையில் 'மாயக் குதிரை'படித்தேன். தங்களின் முக நூலிலா அல்லது தங்களின் வேறு தளத்திலா..என்பது ஞாபகத்திலில்லை. அன்று தொடக்கம் இந்தக் கதை எனக்குள் ஆழப் புதைந்து, அடிக்கடித் தானிருப்பதை ஓர் அதிர்வின் மூலமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த 777, அதை அடையத் துடிக்கும் அவள், அவளின் உள்மனப் போராட்டம், தோல்விகளில் எழும் அந்த மனதின் இரணம் கலந்த ஓலம், மீண்டுமான நம்பிக்கை,அதற்கான எத்தனங்கள்...

சத்தியமாகச் சொல்கிறேன்...மிக நீண்ட காலங்களின் பின்னர் ஒரு சிறந்த க(வி)தையை வாசித்தேன். இன்னொரு முறை படிக்க வேண்டுமென இருந்த ஆவல் இப்போது நிறைவேறுகிறது.

ஒரு விடயம்: சூது என்பது புகைப் பழக்கம் போல-குடிப் பழக்கம் போல உடலோடு கலந்துவிட்ட பழக்கமல்ல. அது மனதோடு மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. ஆன்மீகத்தின் மூலம்,'இனி மரணம் வரை சூதைத் தொட மாட்டேன்' என்று நாம் மிக நேசிக்கும் இறைவன் மேல் ஆணையிட்டு, தியானம் போன்ற விடயங்களில் ஈடுபட்டு வரலாம். 'யாரோ தோற்கும் காசை வென்று நான் வாழ வேண்டுமா..?' என்று எமக்குள் கேள்விகளை எழுப்பி, விடை காணும் பட்சத்தில் சூதின் மேலே வெறுப்பு வரும்; விட்டு விடலாம். இப்படி இன்னும் பல வழிகள் இருக்கின்றன...

திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்: ''சூதை விட்டு விடுங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.''

சிந்தித்துப் பார்த்தால் இந்த வசனம் எத்தனையோ விடயங்களைப் பேசுவதைக் காணலாம்.

தமிழ்நதி said...

அன்புள்ள ஹமீத்,

இந்தச் சிறுகதை குறித்து நான் மதிக்கும் வேறு சிலரும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஓரளவுக்கு என் வாழ்வோடு தொடர்புடையது என்பதால் நுணுக்கமாக எழுதமுடிந்தது. இறைவன் மீது சத்தியம் செய்தெல்லாம் இதனைக் கடந்து செல்வதற்கு அளவிறந்த மனவுறுதி வேண்டும். அது இல்லாதவர்கள் என்னதான் செய்வார்கள்...; இந்த மாயச்சகதியினுள் மீண்டும் மீண்டும் சென்று விழுவதைத் தவிர.

உங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி தோழர்.

Anonymous said...

தங்களிடம் இரவல் வாங்கி படித்த தஸ்தாவெஸ்கியின் சூதாடி ஞாபகத்துக்கு வருகிறது.. நண்றி தமிழ்நதி அக்கா..( prasanna)