3.04.2007

நட்சத்திரம்: அறிமுகம்

கலைவாணி: உங்களைப் பற்றி…

தமிழ்நதி:என்னுடைய வலைப்பக்கம் சொல்வதை விட என்னைப்பற்றி அதிகமாக நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. அதில் எழுதுவதும் பெரும்பாலும் எழுதப்படுவதும் நானே.(சகலமும் நானாக்கும்…ம்!!!)

கலைவாணி: நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

தமிழ்நதி:இப்படி நிறையப் பேர் கோபத்தோடு(?) கேட்டுவிட்டார்கள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைப்பது, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்றெல்லாம் கதையளக்க ஆசைதான். ஆனால், உண்மையைச் சொன்னால், நான் ‘வேடிக்கை மனிதரைப் போல வீழ’விரும்பாதிருந்தேன். அத்துடன் எழுத்து என்ற அற்புதம் எனக்குக் காட்டிய மாய உலகத்தில் ஒரு பக்கத்தையேனும் மற்றவர்களுக்கு என்னால் காட்ட இயலுமா என்பதை முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். எழுதுகிறேன்.

கலைவாணி: எழுதுவதன் மூலம் பெரியளவில் எதையாவது சாதிக்க முடியுமென்று நம்புகிறீர்களா…?

தமிழ்நதி: நான் அறிந்தளவில் நிச்சயமாக இல்லை.

கலைவாணி: அவ்வாறெனில் ஏன் எழுதுகிறீர்கள்…?

தமிழ்நதி:எழுதுவது இதமான அனுபவம். அதை இழக்க விரும்பாமல் எழுதுகிறேன்.

கலைவாணி: தமிழ்மணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

தமிழ்நதி:கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைப் போல தற்செயலானது அல்ல. உங்களுக்கெல்லாம் அறிமுகமான பொடிச்சி என்றொரு தோழி வலைப்பதிவுலகைப் பற்றிச் சொன்னதோடு, எனது பக்கத்தை வடிவமைக்கவும் உதவி செய்தா. அன்று தொட்டது உங்களுக்குச் சனி. வாழ்த்தும் வசையும் பொடிச்சிக்கே!

கலைவாணி: தமிழ்மணத்தில் பிடித்தது, பிடிக்காதது?

தமிழ்நதி: பிடித்தது: முகமறியாத பலரை நண்பர்களாக்கியது பிடித்திருக்கிறது. எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிற எல்லோருக்கும் பாரபட்சமற்ற அற்புதமான களம். தேர்ந்து வாசித்தால் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது. பல்வகைப்பட்ட நுட்பமான உணர்வுகளைத் தெரிந்து புரிந்துகொள்ள முடிகிறது.

பிடிக்காதது: சண்டைகள்! ‘பாப்பாரப் பன்னாடை’ என்பதுவும், ‘திராவிடப் புண்ணாக்கு’என்பதுவும், ‘நல்லைநகர் வழிவந்த நான் வேளாளன்’ என்பதுவும், ‘இழிசாதிப் பயலுக்கு என்னடா பேச்சு’என்பதுவும், ‘ஈழத்தமிழர்கள் ஈழைத்தமிழர்கள்’என்பதுவும், ‘இந்தியத்தமிழருக்கு எமைக் குறித்து என்ன தெரியும்’என்பதுவும் கேட்கச் சகிக்கவில்லை. எழுதுபவர்களிடையிலே இத்தனை காழ்ப்புணர்ச்சி என்றால் மற்றவர்களைச் சொல்லக் கேட்பானேன்…? திட்டித் தீர்ப்பதிலே சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்தால் இலக்கியம் பிறக்காது. இழிநிலைக்கே கொண்டுவிடும்.

கலைவாணி: நட்சத்திர வாரம் குறித்து?

தமிழ்நதி:நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது சராசரி உணர்வுகளைக் கொண்ட எல்லோருக்குமே மகிழ்வளிக்கும் ஒன்று. ஆனால்,கால நிபந்தனைகள் வழங்கப்படும்போது படைப்பாற்றல் தொட்டாற்சுருங்கியாகிவிடுகிறது. மேலும், ‘அதிக எதிர்பார்ப்பை வளர்க்கும்போது எழுத்தின் காத்திரமும் வீரியமும் சிதிலமாகி நீர்த்துப் போய்ச் சரிந்துவிடும்’ என்று அண்மையில் ஒருவர் சொன்னார். அதனால் எதிர்பார்ப்பைத் தூண்டவில்லை. சமாளித்திருக்கிறேன்.
இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், எனது ஆக்கங்களை (ஆய்க்கினையை) வாசித்துவிட்டு ஒன்றும் பேசாமல்(சொல்ல என்ன இருக்கெண்டிறியள்) போகவிருக்கும் நண்பர்களுக்கும், ‘நல்லாய் இரு’ அல்லது ‘நாசமாய்ப் போக’எனப் பின்னூட்டமிடவிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி!

அப்பாடா! என்னை நானே செவ்வி கண்டு ஒருவழியாக (பேசாமப் போவியா… ஒன்னய வேற யாரு பேட்டி எடுப்பாய்ங்க - மி.வெ.) பெரிய ஆளென்று நிரூபித்துவிட்டேன்.