9.15.2006
Tweet | |||||
ஞாபக வாசனை
அடர்நீலம் கடும்மஞ்சள் துணி கண்டால்
பால்யத்தில் என் பொம்மை அணிந்திருந்த
சட்டை வாசம்…!
பதின்பருவம்…
குளக்கரையோரம் தேன்பிலிற்றும் மருதமணம்
அவன் காதலைச்சொன்ன ஒரு காலைநேரம்…
எங்கு குளம் பார்த்தாலும்
அந்த வார்த்தைகளின் வாசனை…!
உறக்கம் தொலைந்த இரவுகளில்
கட்டிடக்காட்டினின்றும் விழிபெயர்த்தால்
காடுறைந்த அழகு
வன்னியில் பனிபெய்த விடியலொன்றின் பிரதி
உழுந்து வாசனை எடுத்துவருகிறது
பாம்புகளின் நினைவை.
எங்கேயோ எப்போதோ கேட்ட பாடல்
அரிதாய் ஒலிக்கிறது
நெஞ்சுக்குள்ளே நதியின் குளிர்மை
அறிவைக் கடந்தொரு கரைவு
ஆண்டாண்டுகளாய் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது
காற்றிலாடிய அந்த வயல்வாசம்.
மழை இறங்கும்போதெல்லாம்
பள்ளிக்கூடத்தின் அரைச்சுவர் தாண்டி
மூக்கில் இறங்கும் மண்வாசம்.
சிறுமியாகி அந்த மூலை நாற்காலியில்
அடிக்கடி அமரக்கிடைக்கிறது.
ஞாபகவாசனை நாளை கொணர்தல்கூடும்
இதனை எழுதிய இந்நாளையும்
இலைகள் அசையாது புழுங்கும் கோடையில்
யன்னல் வழி
கேசம் கலைக்கும் காற்றையும்.
0
photo
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஞாபக வாசனையை அருமையாகச் சொல்லி...
என் ஞாபகங்களையும் கூடவே கிளறி விட்டீர்கள்.
கவிதைக்குப் பாராட்டுக்கள்!
நன்றி சத்யா!
மேலைத்தேயங்களில் நாம் வாழும்போது ஏதோ ஒரு கணத்தில் ஊர் நினைவு, பிரிவு கிளறப்பட்டுவிடுகிறது. அந்த வலி உணர்ந்தவர்களுக்குப் புரியும். சொந்த நாட்டில் வாழ முடியாமற் போவதைக் காட்டிலும் வேதனை என்ன இருக்கப்போகிறது…?
தமிழ்நதி
நல்ல கவிதை
Post a Comment