4.10.2007

கற்பின் இருப்பு


தொலைக்காட்சியை எதேச்சையாய் கடக்கையில்
பண்பாடு குறித்தெவரோ
நாத்தழுதழுக்க பரிதவிக்கப் பார்த்தேன்
பட்டிமன்ற மேடைகளில்
கண்ணகியும் சீதையும் இருதரப்பாலும்
எந்நாளும் இழுபறியில்…
முன்தயாரிக்கப்பட்ட திடுக்கிட வைக்கும் பகீர்த்தலைப்புகள் புகைப்படக்கருவிகள் சகிதம்
பத்திரிகையாளர்களும் விழிப்பாய்த்தான்.
அக்கம்பக்கத்தவர்களையும் குறைசொல்வதற்கில்லை
‘ஐயோ… இப்பிடியா செய்வா ஒருத்தி’
மோவாயில் கைவைத்துப் பிரலாபிக்கவும்
சாராயத்திற்குத் தொட்டுக்கொள்ள
கதை கிடைத்த மகிழ்வில் வெடித்துச் சிரிக்கவும்
எக்காலமும் எந்நிலத்திலும் இருக்கவே இருக்கிறார்கள்
ஆண்களும் பெண்களும்.

வேகநெடுஞ்சாலைகளில்
நள்ளிரவிலும் உதட்டுச்சாயமும் மல்லிகைப்பூவுமாய்
பாரவூர்தி ஓட்டுனர்களிடம் பேரம் பேசுகிற பெண்களுக்கு…
புறநகர் விடுதிகளில்
கணவனல்லாதவனுடனும் மனைவியல்லாதவளுடனும்
மதுவுண்டு கூடித் திளைப்போருக்கு…
காவலர்களின் வண்டிகளிலிருந்து
குதித்திறங்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு…
மெல்லிருளில் இசை உருவேற்ற
அவிழ்த்தெறியும் அழகிக்கு…
எவரேனும் நினைவுபடுத்தவேண்டும்
அவர்கள் இருப்பது எங்கென.

கடற்கரைச்சாலையின் இருட்டு மூலைவரை
நடந்துசெல்லவியலாத பெண்ணிடம்
“கற்பென்றால் என்ன”என்றேன்
‘உனதும் எனதும் இடுப்பிற்குக் கீழ் இருக்கிறது
எல்லோரின் கற்பு’மென
சொல்லிச் சிரித்தபடி போனாள்
கடற்கரையில் இன்னும் அலைகிறது
அவள் சிரிப்பு!

3 comments:

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை தமிழ்நதி

புராணத்திலிருந்து நிகழ் வரை கற்பென்ற சொல்லை வைத்தே ஒரு கூட்டம் தனது ஆண்மையை நிரூபித்துக் கொண்டு வந்திருக்கிறது

அதன் இருப்பிடம் சுட்டி
கடற்கரையில் அலையும் சிரிப்பு தீர்த்துக் கொண்டது தன் ஆதியின் வெஞ்சினத்தை...

Anonymous said...

//‘ஐயோ… இப்பிடியா செய்வா ஒருத்தி’
மோவாயில் கைவைத்துப் பிரலாபிக்கவும்
சாராயத்திற்குத் தொட்டுக்கொள்ள
கதை கிடைத்த மகிழ்வில் வெடித்துச் சிரிக்கவும்
எக்காலமும் எந்நிலத்திலும் இருக்கவே இருக்கிறார்கள்
ஆண்களும் பெண்களும்.//
என்பதற்கு மேலுள்ள பந்தி தேவையில்லப் போல... தோன்றியது.


sort of liked the ending.
--தீபா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலை நிமிரிந்து வேற்று ஆணைக் காண்பதுவும் கற்புக்கு இழுக்கு என்று சொன்ன காலத்திலிருந்து இப்போது
தான் விடுபட்டிருக்கிறார்கள்.

கடற்கரையில் சிரித்தவளை
பைத்தியக்காரி என்று சொல்வார்கள்.