6.15.2007

ஒரு நாளும் இரண்டு அறைகளும்


ஒரு கவிதையை
வாசலிலேயே வழிமறித்து அனுப்பிவிடும்
குழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்
மெல்ல அவிழ்க்கிறேன் என்னை.
இசை கலந்த தண்ணீர்
உடலையும் பாட அழைக்கிறது
மதுவின் நிறம் அறையெங்கும் படர
தொன்மத்தின் ஞாபகத்தில் ஏவாளுமாகிறேன்
ஒப்பனைகள் களைந்து
நானாய் நாகரிகமடையும்போதில்
உடல் பாழடைந்த நகரமெனப் புலம்புகிறது
அண்மைய தோழி சொன்னபடி
நெடுநாளாய் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த்துளிகளெனத் ததும்புகின்றன
நரம்புகள் இறுகிய கைகளை
காசுக்கு விட்டுக்கொடுத்தவளும்
காமமொரு பிறழ்நிலையென
ஊட்டப்பட்டவளுமான நான்
புனைவுலகை உடலுக்குப் பழக்குகிறேன்
(அ)திருப்தியுற்றுச் சாய்ந்து
கனவின் நூலேணி பற்றி
ஏறிக்கொண்டிருக்குமென்னை வீழ்த்துகிறது
தொலைபேசிவழி நுழையும்
நோயின் குரல்.

உப்பிய வயிறு ஏறியிறங்க
உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவினுள்
அளவெடுக்கப்பட்ட துளிகளாய்
இறங்கிக்கொண்டிருக்கிறது குருதி
மூத்திரவாடையடிக்கும்
401ஆம் இலக்கஅறையைத் தாண்டி
பிணவறை செல்கிறது சற்று முன்வரை
யாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.

யாராலும் எழுதமுடியாத கவிதையை
காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.



16 comments:

காயத்ரி சித்தார்த் said...

//ஒரு கவிதையை
வாசலிலேயே வழிமறித்து அனுப்பிவிடும்
குழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்
மெல்ல அவிழ்க்கிறேன் என்னை//

//யாராலும் எழுதமுடியாத கவிதையை
காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.//

ஐய்யோ என்றொரு ஆயாசம் வருகிறது தமிழ்.. என்ன இது? எப்படி சாத்தியமாகிறது உங்களுக்கு? உங்கள் வாசகியிலிருந்து இருந்து ரசிகையாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறேன்.

அம்மாவிற்கு என்னவாயிற்று?

கீர்த்தனா said...

"பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது"
எனும் கவிதையை வாசித்ததில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும் உங்கள் கவிதைகள் மீதான என் ஈர்ப்பு..அறுபட்டு புள்ளிகளற்று தடம் புரண்டே வாசித்ததில் ..பின்னூட்டம் கூட..போட முடியாமற் போனது.

அன்றிலிருந்து உங்கள் கவிதைகளை தொடர்ந்து ஆவலோடு எதிர் பார்த்து வாசித்து வருகிறேன்.

//யாராலும் எழுதமுடியாத கவிதையை காற்றில் எழுதி கொண்டு இருக்கிறது மரணம்//
வார்த்தைகள் வரவில்லை...

தமிழ்நதி said...

"அம்மாவிற்கு என்னவாயிற்று...?"
காயத்ரி! எங்கள் அம்மாவிற்கு ஒரு நேர்த்திக்கடன் உள்ளது. அதாவது ஆறு மாதத்திற்கொரு தடவை கீழே விழுந்து எதையாவது உடைத்துக்கொள்ளாவிட்டால் பிள்ளையார் கோபித்துக்கொள்வாராம் :) இம்முறை உடைந்தது முழங்கால். மறுபடி குழந்தையாகி ஒரு வண்டிலை உருட்டியபடி நடக்கிறா. இன்னும் இரண்டு வாரங்களில் சரியாகிவிடும். பழைய அனுபவங்கள் அப்படித்தான் நம்பிக்கையூட்டுகின்றன. அக்கறைக்கு நன்றி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீர்த்தனா! எனது கவிதைகள் (?) உங்களை ஈர்த்திருப்பதையிட்டு மகிழ்ச்சி.

நந்தா said...

//யாராலும் எழுதமுடியாத கவிதையை காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.//

உங்களுடன் இதேதாங்க தொந்தரவு. மொத்தம் 10 வரியில் 5 வரி சுமாராவும், 5 வரியை சூப்பராகவும் எழுதி இருந்தால் இந்த 5 வரிகள் சூப்பர் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடலாம். இப்படியா உயிரை இழுக்கற மாதிரி எல்லா வரிகளையும் இழைச்சு இழைச்சு எழுதறது.

அம்மா இப்போ கொஞ்சம் தேறியிருப்பாங்கன்னு நினக்கிறேன்....

அப்புறம் //401ஆம் இலக்கஅறையைத் தாண்டிபிணவறை செல்கிறது சற்று முன்வரையாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.//

இந்த வரிகளைப் படிக்கு போது நீல.பத்மனாபன் எழுதிய உறவுகள் கதை ஞாபகத்திற்கு வருகிறது. நீங்க படிச்சிருக்கீங்களா?

sooryakumar said...

மிக மிக...இருப்பு வாதத்த்ற்குள் போய்க்கொண்டிருக்கின்றன தங்கள் கவிதைகள். இருப்புவதம் ஒன்றும்..நெகடிவ் ஆனதல்ல.
அழகாக வெளிப்படுத்துகிறீர்கள்.

மிதக்கும்வெளி said...

/நெடுநாளாய் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த்துளிகளெனத் ததும்புகின்றன/

ஏற்கனவே குட்டிரேவதி தனது 'முலைகள்' தொகுப்பில் 'முலைகள் கண்ணீர்த்துளிகளைப் போல ததும்பிக்கிடப்பதாய்' எழுதியிருக்கிறாரே?

தமிழ்நதி said...

"அண்மைய தோழி சொன்னபடி
நெடுநாளாய் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த்துளிகளெனத் ததும்புகின்றன"

Thivagar!please read the poem again.

soorya and nanda i'm unable to type in tamil. when i return, will reply okay...

Devendhirapoopathi said...

your poetry lacks somthing,not able to point it out very specific.But thanks to your style,which makes the poetry meaningful.
How is mother?Take care of her and yourself.
Poopathy/Dharmapury

தமிழ்நதி said...

மக்களே! நான் திரும்பி வந்துவிட்டேன். தமிழில் தட்டச்சவும் முடிகிறது :)

நந்தா!எனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது. நேற்றொரு பக்கத்திலும் நான் 'கவிதை'எழுதுவதாக நீங்கள் சொல்லியிருந்ததைப் பார்த்தேன். புகழ்ச்சி என்ற போதையில் மயங்கித்தான் சிலர் எழுதவோ எழுந்திருக்கவோ மாட்டாமல் போனார்கள். நான் நல்ல முழிப்பாக்கும்:) 'உறவுகள்'இன்னும் வாசிக்கவில்லை நந்தா. இனி வாசிக்கிறேன்.
சூர்யா!இப்போதெல்லாம் எனது வலைப்பக்கம் நீங்கள் வருவதில்லை என்றிருந்தேன். அவ்வப்போது வருகிறீர்கள் போலும் :) கருத்துக்கு நன்றி.
சுகுணா திவாகர்! 'அண்மைய தோழி சொன்னபடி'என்று குறிப்பிட்டிருப்பது குட்டி ரேவதியைத்தான். நான் மற்றவர்களுக்குத் தெரியக்கூடியவிதமாக வரிகளைத் திருடுவதில்லை :)

பூபதி!என்னவோ குறைகிறதென்று எனக்கும் தெரிகிறது... கண்டுபிடித்தால் சொல்லுங்கள். அம்மா குணமடைந்து வருகிறார். இந்தச் சூழலின் கலகலப்பால் விரைவில் நடக்கவும் கூடும். நன்றி.

-ganeshkj said...

தமிழ்நதி,

உங்கள் கவிதைகளின் பொருள் முழுமையாக எனக்குப் புரிந்து விடுவதில்லை. இருந்தாலும் புரியும் வரிகள் எல்லாம் மிக மிக நன்றாக இருக்கிறது :)

த.அகிலன் said...

வர வர பொறமையைக் கிளப்புகின்றன. உங்கள் கவிதைகள் வாழ்வின் எல்லாக் கணங்களையும் அனுபவங்களையும் கவிதைகள் ஆக்கிவிடுகிற சாத்தியம் உங்களிற்கு மட்டும் எப்படி நிகழ்கிறது...(தொகுப்பு ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கிறீர்களா)

லக்ஷ்மி said...

//வர வர பொறமையைக் கிளப்புகின்றன. உங்கள் கவிதைகள் //
அகிலனின் கூற்றை வழிமொழிகிறேன். ;)

தமிழ்நதி said...

நன்றி கணேஷ்,அகிலன்,லஷ்மி!

கணேஷ்!எனது கவிதைகளுட் சில புரிவதில்லை என்பது உண்மையிலேயே எனக்கு வியப்பளிக்கும் விடயமாக இருக்கிறது. புரியக்கூடிய விதமாக எழுதுகிறேன் என்று ஆரம்பித்தால், தன்னை எழுதிக்கொள்ளும் கவிதையை நான் எழுதுவதாக ஆகிவிடும்:)

அகிலன்!வாழ்வின் எல்லாக் கணங்களையும் கவிதைகள் ஆக்கிவிட முடிவதில்லை. அப்படி ஆக்கினால் அண்மையில் ஒரு கவிஞர் பத்துப் புத்தகங்களை ஒருசேர வெளியிட்டார் அப்படித்தான் வெளியிடவேண்டும். மனதில் சென்று படிந்து நெடுநேரம் உறுத்துவதை மட்டுமே எழுதுகிறேன். ஆம்! கவிதைத் தொகுப்பை ஆகஸ்ட் அளவில் கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன். ஆனால், உங்களுக்குத்தான் தெரியுமே... எங்களது சுறுசுறுப்பைப் பற்றி.

லஷ்மி!வர வர பொறாமையைக் கிளப்புவதை வழிமொழிந்திருக்கிறீர்கள். ம்.... அவளவள்-அவனவன் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கையில் நான்........ ம்! பெருமூச்சுக் கேட்கிறதா...?

-ganeshkj said...

//புரியக்கூடிய விதமாக எழுதுகிறேன் என்று ஆரம்பித்தால், தன்னை எழுதிக்கொள்ளும் கவிதையை நான் எழுதுவதாக ஆகிவிடும்:) //

:)) I agree !! உங்கள் style-laye கலக்குங்க... உங்கள் கவிதை தொகுப்பு தயாரானதும் சொல்லுங்க.

Anonymous said...

"காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்"

இதைத்தான் மாலதி மைத்ரி "காலத்தின் பக்கங்களில்....எழுதிச் செல்கிறது இறப்பின் கரம்" என்கிறார்.

இதற்கெல்லாம் முன்னரே பிரமிள் "சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது" என்கிறார்.

நீங்கள் காற்றில் மரணம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு முன் மாலதி மைத்ரி, காலத்தில் இறப்பு எழுதுவதாகச் சொல்கிறார். உங்கள் இருவருக்கும் முன் காற்றில் வாழ்வு எழுதப்படுவதாகச் சொல்கிறார் பிரமிள். original பிரமிள் தான்.
தீபா

பாலு மணிமாறன் said...

"காலகால அழுத்தங்களையெல்லாம் மீறி, உணர்வுகளின் உதடுகள் ஊதி ஊதி பெரிதாக்கிய பலூனை ஒற்றை குத்தலில் உடைத்தது ஒரு மரண ஊசி" என்பது சரியாகுமெனில், உங்கள் கவிதையின் ஆதமாவை ஓரளவேனும் புரிந்து கொண்டேன் எனக் கொள்வேன்!