வல்லுறவுக்கிடையில்
தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின்
நெஞ்சு கிழிபடும் ஓலத்தைப்போல
எனது குரலையும் விழுங்க முனைகிறது தொலைவு
முதலில் துயரத்தின் நிலத்திலிருந்து
கொஞ்சம் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள்
தசைத்துணுக்குகளும் கண்ணீரும் வடிகட்டப்பட்டபின்
அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்
பாத்திரம் வாங்கினால் குவளை இலவசம் என்பதாய்
சில வாக்குறுதிகளைச் சேர்த்துக் குலுக்கியபின்
பெட்டிகளில் அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்
சலிக்காமல் பரப்பப்படும் தேவதைக்கதைகள்
நம் பாட்டிமார் சொன்னதை விஞ்சுகின்றன.
எறிகணைகள் கூவிக்கொண்டிருக்கும் இவ்விரவின் முடிவில்
இந்தக் காகிதத்தில்
குருதி எழுதிக்கொண்டிருக்கலாம்
காற்றோடு சர்ச்சையிடும் யுனிசெப்பின் கூடாரத்தை
கார்காலக் குளிரும் கனல்சொரியும் வெயிலும்
மாறி மாறிச் சொடுக்கியதில்
இறந்துபோன குழந்தையை
அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்
இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது
என் மழலையின் பசிக்குரலில்
எஞ்சிய குழந்தைகளை முன்னிட்டு
மூதாட்டியொருத்தியைச் சாகவிட்டேன்
அவளை மூட்டிய சிதைநெருப்பு
தீராத நோயைப்போல்
வயிற்றினில் வளர்ந்துகொண்டேயிருக்கிறது
அவளை எரித்து வந்த அன்றிரா
இருவருக்குப் போதுமான உணவை
நான்காகப் பிரித்துண்டு
வாழும் நாளொன்றை நீடித்தோம்.
நேற்று முன்தினம்
என் தோழி விடுமுறையில் வந்திருந்தாள்
அவள் மடியில்
சாதுவான குழந்தையைப் போலிருந்த துப்பாக்கியை
பிரியம் பொங்கத் தடவிக்கொண்டிருந்தாள்
இசையை
விழிகள் கிறங்க
ஒருவனொடு கூடிக்களித்துலவும் இனிமையை
குழந்தைகளின் பட்டுக்கன்னங்களை
வாழ்வின் நிறங்களையெல்லாம்
துப்பாக்கியினால் இட்டுநிரப்பியிருந்தாள்
தற்கொடையின் தாய்மை வழிந்த விழிகளை
முத்தமிட அவாவினேன்
கூச்சம் பொங்க அவள் விரல்பற்றி அழுத்தி
‘போய் வா’என்று சொல்லவே முடிந்தது
பாலை மரத்தினடியில் ஒருகணம் தயங்கினாள்
மண்மேட்டைத் தொட்டு வணங்கிக் கடந்தாள்
தானுமோர் எறிகணையாய்.
நகக்கண்களில் குருதி வடிய
மலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க
வயல்வெளியில்
என் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்
காதல் வழிந்த கண்கள்
குருதிநிறை குழிகளாகக் கிடந்தான்
எரியூட்டித் திரும்பிய அன்று
மூன்றாவது குழந்தை
இப்பிரபஞ்சம் காணும் பேராவலில்
தன் பிஞ்சுக்கால்களால்
உள்ளிருந்து உதைத்துக்கொண்டிருந்தாள்
குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி
இதை வாசிக்கிற கனவான்களே!
மன்னித்துக்கொள்ளுங்கள்
மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்
உங்கள் மெல்லுணர்வுகளின் மீது
அமிலம் எறிவதற்கு.
கண்ணீரால் எழுதப்படும் வரலாற்றை
கண் மூடி வாசிக்கும் வித்தையைக்
காணுந்தோறெல்லாம்
‘மனிதர்காள்… மனிதர்காள்…!’என்றிருக்கிறது.
'துன்பியல் நிகழ்வுகளை'
நெடுநாளாய் நினைவில் வைத்திருக்கும்
மகத்தான ஞாபகசக்தியுடையோரே!
எம்மை ஏன் கைவிட்டீர்?
எம்மை ஏன் கைவிட்டீர்?
16 comments:
'துன்பியல் நிகழ்வுகளை'
நெடுநாளாகியும் மறவாதவர்களே!
எம்மை மட்டும் ஏன் மறந்தீர்?
என்பது போல முடித்திருக்கலாமோ?
ஆகா மிக நீண்ட நாளைக்கப்புறம்...
ஒரு கவிதை படித்தேன்.
நெஞ்சமெலாம்..புடுங்கி எடுக்கிறது..தோழி.
idharku emmidam badhil illai.. thalai kunindhu nirpadhai thavira veru vazhi illai........
என்ன சொல்ல என தெரியவில்லை தமிழ்.
சொல் தாங்காது வலிக்கிறது மனது. சொல்லின் விதையாகிய அனுபவத்தின் வலியின் ஒரு சிறு விகிதம் தான் இது எனினும், அருகே கொண்டு வந்துவிடுகிறது அந்த பயங்கரத்தை...
மிஞ்சுவதெல்லாம் ஆற்றாமை மட்டும்...
என்றுமே அதிகாரத்தின் உச்சத்திலிருப்பவனின் உயிர் மட்டுமே வெல்லம் நதி. மக்களும் சரி மாக்களும் சரி எல்லா ராஜ்ஜியங்களிலும் பலியிடுவதற்காகவே கிடைப்பவர்கள். பலிக்கான தேவையில்லையெனில் அது வரை வாழவும் அனுமதிக்கப்படுவர். அவ்வளவே...
வாழ்க்கையில் கொடுமையானது நம் ஆற்றாமையை கடந்து/மறந்து செல்லும் நேரங்கள்...
ஆனால் அதுவே வாழ்க்கைமுறையானால்...
வேற ஒண்ணும் சொல்ல தோணலை,தமிழ்நதி...
/இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது
என் மழலையின் பசிக்குரலில்/
welldone!
/நகக்கண்களில் குருதி வடிய
மலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க
வயல்வெளியில்
என் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்/
கண்ணீரில் மறையும் உருவகவெளி. இது கண்ணகி வரைக்கும் விரியும்தானே!
ஆனால் 'அந்தக் கடைசிப்பத்தி கவிதைக்குள் தேவையில்லாமல் வாசிப்பாளியின் அனுதாபம் வேண்டிநிற்கும் பாவனையில் உறுத்திநிற்கிறது' என்று சொல்ல ஆசைதான். ஆனால் மீண்டும் 'நீ மட்டும் யோக்கியமா?' என்று (ஏலவே பிடித்தைப் போல) சட்டையைப் பிடிப்பீர்களோ என்று பயமாக இருக்கிறது.((-
மரணத்தை மட்டுமே ஒரு மண் பிரசவித்து கொண்டிருந்தால் ,
சோகத்தை மட்டுமே மக்கள் சுவாசித்து கொண்டிருந்தால்,
குளிரூட்ட பட்ட அறைகளில் இருக்கும்
நபர்களுக்கென
தளிர் நடை கதைகளையாசொல்ல முடியும்
சொல்லிய சோகத்தை விட சொல்லாத சோக மேகங்களை விதைக்கிறது தங்கள் கவிதை !
துன்பத்தை எப்படி நான் அருமை என்பது !
சொல்லாதீர்கள் என்பேன் ஏனெனில் அதை கேட்கும் அருகதை எங்களுக்கில்லை !
//குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி
இதை வாசிக்கிற கனவான்களே!
மன்னித்துக்கொள்ளுங்கள்
மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்
உங்கள் மெல்லுணர்வுகளின் மீது
அமிலம் எறிவதற்கு.//
பாப்லோ நெரூதாவினதைப் போன்ற வரிகள்.
கவிதையின் முன் தலைகவிழ்ந்து நிற்கலாம் !!! கண்ணீர் சொரியலாம்!!!
அன்புள்ள தமிழ் நதி …
//வல்லுறவுக்கிடையில்
தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின்
நெஞ்சு கிழிபடும் ஓலத்தைப்போல//
1.வல்லுறவு எனும் சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை.
வன்மை + உறவு = வல்லுறவு
ஆக அதில் உறவு எனும் வார்த்தை உள்ளடக்கப்படுகிறது.
வன்புணர்வு வல்லுறவு… இப்படியான வார்த்தைகள்
பாலியல் பலாத்காரம் எனும் வார்த்தை தரும் அளவுக்கு ஒரு
தெளிவான புரிதலை தருவதில்லை.
கிருஷாந்தி… பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்.
2. இந்த கவிவரிகளினூடாக நீங்கள் சொல்ல விளையும் உணர்வு புரிகிறது
இருப்பினும் சொல்லும் உவமானம் தான் பொருந்துவதாய் இல்லை.அது
நிற்க,
கிருஷாந்திக்கு நிகழ்ந்த வன்முறையின் கொடூரத்தை … அதிகாரத்தின்…. ஆணாதிக்கத்தின் வெறித்தனத்தை .... வல்லுறவு என்றும்….
//“தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின் நெஞ்சு கிழிபடும்…ஓலம் “// என்றும்…
சொல்லுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இது அதை எல்லாம் தாண்டியது…
3. கிருஷாந்தி யார் எனும் விடயத்தை உங்கள் கவிதைக்கு கீழே
குறிப்பிட்டு இருந்தால் .. அவரை பற்றி அவருக்கு நடந்த கொடுமையை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்.
இது தவிர கவிதை மிக நன்றாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
கீர்த்தனா! கவிதைக்கென்று ஒரு மொழிப்பிரயோகம் இருக்கிறது. நான் 'வல்லுறவு'என்று போட்டிருக்கும் இடத்தில் 'பாலியல் பலாத்காரம்'என்று போட்டுப்பாருங்கள். நீங்கள் பரிந்துரைத்த வார்த்தை கட்டுரைக்கானது.
\\இந்த கவிவரிகளினூடாக நீங்கள் சொல்ல விளையும் உணர்வு புரிகிறது
இருப்பினும் சொல்லும் உவமானம் தான் பொருந்துவதாய் இல்லை\\
எந்த உவமானமென்று குறிப்பிடவில்லையே நீங்கள்?
மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கவிதை என்பது எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லிவிடக்கூடிய இடமன்று. மிகக் குறைந்த சொற்களில் செறிவாக நாம் உணர்வதை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் கவிதையின் வேலை. அந்தச் சம்பவத்தைக் கட்டுரையில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருக்க இயலும்.
நான்கைந்து இராணுவத்தினர் கிருஷாந்தியை ஒருவர் மாற்றி மற்றவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது, சற்றே இடைவெளி தருமாறும், தண்ணீர் கொடுக்கும்படியும் அவள் கெஞ்சினாள். ஆனால், தண்ணீர் குடிக்கும் அந்த சொற்ப நேரத்தையும் வீணாக்க விரும்பாத 'வீரர்கள்'அந்தச் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. இது வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட ஒருவரது வாக்குமூலத்தின் வழியாகத் தெரியவந்தது.
கீர்த்தனா! இதை நான் கிருஷாந்தி பற்றி எழுதிய கவிதையொன்றில் விபரமாக எழுதியிருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட கவிதையில் கிருஷாந்தி ஒரு பகுதி மட்டுமே. அதை ஓரிரு சொற்களால் மட்டுமே குறிக்க முடியும். கிருஷாந்தி பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய பதிவுகளை வாசியுங்கள்.
கவிதை என்பது என்னைப் பொறுத்தளவில் தன்னை எழுதிக்கொள்ளும் அனுபவம். அது எப்படி உருக்கொள்கிறதோ அவ்வடிவத்தில் அச்சொற்பதங்களுடன் உலவவிடும்போது 'ஒப்பனையற்று'இருக்கிறது. 'இப்படி எழுதியிருக்கலாமே... அப்படி எழுதியிருக்கலாமே... என்று யாராவது சொல்லும்போது பிரம்போடு நின்று படிப்பிக்கும் ஒரு 'வாத்தியார்'பிம்பம் மனக்கண்ணில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதை என்பது அவரவருக்குத் தோன்றும் அனுபவம். அனுபவத்தை உணரும் மொழியில்தான் பகிர்ந்துகொள்ள முடியும். ஏன் பிடித்திருக்கிறது, ஏன் பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு. 'ஏன் இப்படி எழுதவில்லை?'என்று கேட்கும்போது உண்மையில் அங்கு அதிகாரத்தொனி வந்துவிடுகிறது. நான் யாரிடமும் அப்படிக் கேட்பதில்லை.நன்றி.
//அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்
...
பெட்டிகளில் அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்//
போன்ற சொல்லாடல்கள் கவிதையின் அழகை சிதைக்கவில்லை. அஃதிருக்க 'பாலியல் பலாத்காரம்'
என்பது மட்டும் கவிதையின் நடையை எப்படி சிதைத்துவிடும் என்று எனக்குப் புரியவில்லை
கிருஷாந்திக்குப் பதில் தீபா என்று நீங்கள் கவிதையில் குறிப்பிட்டு இருந்தால் உங்களது வார்த்தைப் பிரயோகத்தை - ஒப்பனை அற்று இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு - நீங்கள் நியாயப்படுத்தலாம். ஆனால் வரலாற்றை எழுதும் போது அழகு உணர்ச்சியை விட உண்மையும், மரணித்தவர்களை மதித்தலுமே முக்கியம்.
இதனையும் வாத்தியார்த்தனம் என்று சொல்லி நீங்களே பிரம்பு எடுக்க வேண்டாம் :)
வாசித்துவிட்டு மெளனமாகப் போய்விடாமல் நினைத்ததைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் கதிர்,சூரியகுமார்,ஒரு சென்னைத் தமிழன்,சித்தார்த்,லஷ்மி,தென்றல்,தியாகு,மிதக்கும் வெளி,முபாரக்,கீர்த்தனா யாவருக்கும் நன்றி.
சித்தார்த் சொல்லியிருப்பதைப் போல "அனுபவத்தின் வலியின் ஒரு சிறு விகிதம் தான்"இக் கவிதை. உண்மையில் அந்த மண்ணில் மக்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளையும், அதனால் பாதிக்கப்பட்டு நடைபிணமாக உலவிக்கொண்டிருப்பவர்களையும் முதன்முதலில் பார்க்கவும் கேட்கவும் நேருபவர்கள் (வெளியாட்களாக இருந்தால்) பித்துபிடித்தாற்போல அங்கிருந்து ஓடிவந்துவிட வேண்டியிருக்கும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தின் குரூரம் எம்மை உறையவைத்துவிடும். எழுத்தின் மூலம் எல்லா பயங்கரங்களையும், இழப்புகளையும், வலியையும்,இடப்பெயர்வையும்,கண்ணீரையும்,தார்மீக கோபத்தையும்,தற்கொடையையும் பதிவு செய்துவிட முடியுமா என்றால் என் பதில் 'இல்லை'என்பதாகவே இருக்கும். கடலில் ஒரு துளிதான் என்னைப் போன்றவர்கள் எழுதுவதும்.
என்ன செய்வது நண்பர்களே! பார்வையாளர்களாக மாறிவிட்ட எங்களைப் போன்றவர்கள் சொல்வதற்கும் என்னதான் இருக்கிறது ஓரிரு வரிகளைத் தவிர?
சரி கதிர்! நீங்கள் சொல்வதே மிகச்சரி!நான் பிரம்பை எடுக்கவில்லை. உங்களைப் போலவே எனக்கும் வன்முறையில் நாட்டமில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இவ்வளவு எழுத்து 'வன்மை'யுள்ள உங்களுக்கென்றொரு வலைப்பூ இல்லாமல் 'யாரோ'வாக வந்து பின்னூட்டமிடுவது ஏன்...? குறைந்தபட்சம் பின்னூட்டமிடுவதற்கென்றாவது ஒரு வலைப்பூவை உருவாக்கினால் நாங்களும் கதிரை 'யார் யாரோ'வாக கற்பனை செய்துகொள்ளாமல் கதிர் என்றே ஏற்றுக்கொள்வோம் அல்லவா... முகமற்றவர்களோடு பேசுவது சிரமமாக இருக்கிறது. மேலும், கவிதை எழுதுவதற்கும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையும்தான் இந்த அக்கறைக்குக் காரணம்.
//கீர்த்தனா! இதை நான் கிருஷாந்தி பற்றி எழுதிய கவிதையொன்றில் விபரமாக எழுதியிருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட கவிதையில் கிருஷாந்தி ஒரு பகுதி மட்டுமே. அதை ஓரிரு சொற்களால் மட்டுமே குறிக்க முடியும். கிருஷாந்தி பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பழைய பதிவுகளை வாசியுங்கள்//
தகவலுக்கு நன்றி.வாசிக்கிறேன்
“ பேசப்படாதவள் “ எனும் கவிதைக்கு.. நான் வளர்மதிக்கு எழுதிய பின்னூட்டங்களின் வாயிலாக கவிதை பற்றிய எனது புரிதலை நீங்கள புரிந்துகொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது.
நான் ஏன் அந்த பின்னூட்டங்களை எழுதினேன் எனும் காரணத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
:-)
தமிழ்நதி..
வன்முறை எழுத்துக்களினூடாகவும் செய்யப்படக்கூடியது :-)
எனது செறிவற்ற மொழிஆளுமை உங்களுக்கு பிழையான விளக்கத்தை தந்திருக்கலாம். வருந்துகிறேன்.மன்னித்துவிடுங்கள்!
மீண்டும் நான் என்ன சொல்லவந்தேன் என விளங்கப்படுத்தும் மனநிலையில் இல்லை.
அது நான் என்பக்க நியாயங்களை சொல்வதாய் ஆகிவிடும்.
//அழகு உணர்ச்சியை விட உண்மையும், மரணித்தவர்களை மதித்தலுமே முக்கியம்//
புரிதலுக்கு நன்றி கதிர்.
பிரியத்திற்குரிய கீர்த்தனா! நான் எனது பதிலின் வாயிலாக உங்களைப் புண்படுத்திவிட்டேன் என்பதை உணர்கிறேன்.
சட்டெனக் கிளர்ந்த எரிச்சலில் அந்த வார்த்தைகளை எழுதியிருக்கக் கூடும். எல்லோருக்குள்ளும் இருக்கும் 'நான்'அதை எழுதத்தூண்டிவிட்டதென நினைக்கிறேன். மற்றபடி விமர்சனங்களை வரவேற்கிற ஆள்தான்.
'உன்னோடு என்னால் பேசமுடியாது. நான் போகிறேன்'என்ற தொனியைப் பார்த்ததும் கவலையாகிவிட்டது. என்னோடு சண்டை பிடித்துக்கொண்டு போகிறவர்கள் மீது எனக்கு ஏற்படும் விருப்பு இருக்கிறதே... அது வியப்பளிக்கும் ஒன்று. இப்போது 'தயவுசெய்து போகவேண்டாம்'என்று உங்களைப் பார்த்துச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் சொல்ல எனது 'நான்'விடவில்லை கீர்த்தனா. மன்னித்துவிடுங்கள்.
Post a Comment