2.22.2008

கவிதைச் சுழி

புனிதமென விதந்துரைக்கப்பட்ட யாவற்றின் மீதும் கேள்விகள் எழுகின்றன. அவற்றின் மீது படிந்திருந்த மாயப்புகை மெல்ல மெல்லக் கலைந்துசெல்கிறது. அதற்கிணங்க, எழுத்து என்பதும்கூட வாழ்வினை உயர்த்திப் பிடிப்பதற்காக எம்மால் கற்பிக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்றுதானோ… என்ற ஐயம் மிகுந்துவருகிறது. இத்தனைக்குள்ளும் கவிதையானது, மேற்குறித்த புறநிலை யதார்த்தத்தைத் தோற்கடிக்கும் ஆழ்நிலை அனுபவமென்பதை எழுதுந்தோறும் மெய்ப்பித்துவருகிறது.

தன்னனுபவம் சார்ந்தோ அன்றேல் காணும் காட்சியின் வழியாகவோ கவிதை நமக்குள் பிரவேசிக்கிறது. சிறுகதை, கட்டுரை போன்ற உரைநடை வடிவங்களைக் காட்டிலும் கவிதையில் தன்னைப் பேசுதல் அதிகமாக உள்ளது. என்னளவில் நெடிய தனிமையும் அதன் உபவிளைவாகிய வெறுமையுமே கவிதைகளாகக் கருக்கொள்கின்றன. கொண்டாட்டங்களை நெருங்குவதற்கு கவிதை அஞ்சுவதைப் பார்க்கமுடிகிறது. மேலும், எந்த வடிவத்திலேனும் திணிக்கப்படும் அதிகாரத்தின் மீதான எதிர்க்குரலாக கவிதைகள் அமையவேண்டும் என விளைவதானது, நான் பிறந்து வளர்ந்த நிலத்தில் எதிர்கொள்ள நேர்ந்த ஒடுக்குமுறை சார்ந்ததாக இருக்கலாம். வலி தெறிக்கும் ஒரு பார்வை, தளர் நடை, தனிமையில் மூச்சுத்திணறுமொரு உயிர், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள்… இத்தகைய சித்திரங்கள் காட்சிகளாக கண்களில் தங்கிவிடுகின்றன. போகுமிடமெல்லாம் கூடவே வருமொரு பார்வையின் வலியானது ஈற்றில் வரிகளாகத் தன்னைப் பெயர்த்துக்கொள்கிறது. ஒரு கவிதை முதலில் ஒரு சொல்லாக அன்றேல் ஒரு வரியாகத்தான் உருக்கொள்கிறது. அதுவே மையப்புள்ளி…சொல்லப்போனால் அதுவே கவிதை! மற்றெல்லாம் அதை விரித்து விளக்குவதற்கான எத்தனங்களே! அந்தச் சொல் தன்னைக் கவிதையாக்கும்வரை என்னுள் அலையடித்துக்கொண்டேயிருக்கும். தன்னை எவ்விதமேனும் இறக்கிவைக்கும்படியாக அது இறைஞ்சிக்கொண்டேயிருக்கும்.

‘இன்றொரு நாள் எனினும்’என்ற கவிதையின் மையப்புள்ளி, மறுக்கப்பட்ட உரிமையைக் கையிலெடுத்துக்கொள்ள அவாவும் ஒரு மனதிலிருந்து பிறந்தது. ‘இந்தப் பீங்கானை உடைக்கக்கூட என்னால் முடியவில்லையே?’என்ற ஆற்றாமையின் விளைவே அக்கவிதை.
இந்தச் சமூகத்திலே சகல உரிமைகளோடும் வாழும் ஆசீர்வாதம் பெற்றவர்கள் ஆண்கள்தான். மதுவருந்திக் களிப்பதும் அதனுள் அடங்கும். குடிபோதையில் வீட்டையொரு தூக்கணாங்குருவிக்கூடு போல பிய்த்துப்போடவும் மனைவி மற்றும் குழந்தைகளின் மனவுணர்வுகளைச் சிதைக்கவும் அவர்களே ஏகபாத்தியதை பெற்றவர்கள். இந்த சமூகத்தினால் கீறப்பட்டிருக்கும் ‘இலட்சுமணக் கோட்டை’த் தாண்டி மதுவருந்தும் பெண்கள், போதையில் கூட, தாங்கள் ‘பெண் குணங்களாலாகிய பெண்கள்’ என்பதை மறத்தலாகாது. போதையில் நரம்புகள் இறுக எழும் மூர்க்கத்தை அதன் இயல்போடு வெளிப்படுத்த நமது மரபுமனம் அனுமதிப்பதில்லை. பெண்களானவர்கள், கோபத்தை மிதப்படுத்தி அல்லது வடிகட்டி ஆதங்கமாகவோ ஆற்றாமையாகவோதான் வெளிப்படுத்த வேண்டுமென்பது எழுதப்படாத விதிகளில் ஒன்றாயிருக்கிறது.

உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே அம்மா!’

என்றுதான் அந்தக் கவிதை முடிகிறது. கையாலாகாத்தனத்தின் வலியை அவ்விதம்தான் கொட்ட முடிந்தது. கவிதையிற் கூட ஒரு பீங்கானைச் சிதறடிக்கத் தயங்குமளவிற்கே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

யதார்த்தத்தைப் பின்தொடர்கிறவர்களாக நாம் கொள்ளும் பெருமிதத்தின்மீது நகையாடுகிறது கவிதை. அதன் மாயக்கதவுகள் திறக்கப்பட்டு எம்மையறியாமலே அதற்குள் விழுந்துவிடுகிறோம். ஒரு கட்டத்தில் பார்த்தால், ‘நானே மகோன்னதம்’என்ற அதன் இசைக்கு இயைபுற நடனமிடுகிறவர்களாகிவிடுகிறோம். நம்மில் பெரும்பாலானோர் மனசுக்குள் வரிகள் அனைத்தையும் வடிவமைத்த பின்னால்தான் எழுத அமர்கிறோம். கடைசியில் பார்த்தால் முன்தீர்மானிக்கப்பட்ட வரிகளை விரல்களால் ஒதுக்கிவிட்டு அது தன்னை எழுதிக்கொள்கிறது (இது பலராலும் சொல்லப்பட்ட ஒன்றே) அதுவொரு சுழியாகி நம்மை இழுக்கிறது. நாமறியாத ஆழங்களுக்குள் கொண்டுசெல்கிறது. ஆழ்ந்த தியானத்தின்போது தன்னைப் பார்க்க முடியும் என்கிறார்கள். கவிதை தன்னை எழுதிக்கொள்ளும் தருணங்களில் பயங்கலந்த பரவசத்தோடு அதைத் தொடர்ந்துசெல்லவேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை போரும் புலப்பெயர்வும் அது சார்ந்த துயரங்களுமே பெரும்பாலும் பாடுபொருளாயிருக்கின்றன. ஆனால், அவை வெறுமனே விசும்பல்களாக மட்டுமன்றி அதைக்கடந்துசெல்ல வேண்டுமென்ற தன்னுணர்வு,விழிப்பு அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. வேரெறிந்த நிலத்திற்கும் விழுதுவிட்ட நிலத்திற்கும் இடையில் பாலமாகிறது கவிதை. முடியாத போர்நிலத்தின் விடியாத இரவுகளை தொலைவின் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க விதிக்கப்பட்டவர்களாயிருக்கிறோம். உயிராசையானது வேற்று நிலங்களில் எங்களைப் பதியனிட்டுவிட்டது.

போர் பொய்யுறக்கம் கொண்டிருந்த காலத்தில் பிறந்த மண் திரும்பி தம் இறந்தகாலத்தை மீட்டுக்கொண்டு வந்தவர்கள் பலர். அவ்வாறு சென்றபோதில், எறிகணைகளால் சிதிலமாக்கப்பட்டுவிட்ட வீடொன்றினுள் மரணம் விட்டுச்சென்ற எச்சங்களைப் பற்றி எழுதிய கவிதைதான் ‘இறந்த நகரத்தில் இருந்த நாள்’

குழந்தையொன்றின் சிறிய சட்டையில் தீ தின்றது போக எஞ்சிய பகுதி கையில் படபடக்கிறது. இந்தச் சட்டைக்குரிய குழந்தை எங்காவது உயிருடன் இருத்தல் கூடுமா? இந்த வீட்டிலிருந்த மனிதர்கள் எல்லோரும் எங்கு போயினர்? தன் அமானுஷ்யக் கண்களால் இங்கு நடந்ததையெல்லாம் இந்த வீடு கண்டிருக்குமல்லவா? தன்னைப் பிரிந்து சென்றவர்களின் ஞாபகங்களுடன் மீள்திரும்புகைக்காகத் தவமியற்றிக் காத்திருக்கிறதா இவ்வீடு?
.................................................
மணிக்கட்டுவரை உள்ள எலும்புக்கை
எழுதியிருக்கக்கூடும் காதலூறிய கவிதைகளை
பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை
நடுங்கும் விரல்களால் பற்றுகிறேன்
ஐயோ என் சிறுமொட்டே!
.................
‘ஞாபக வாசனை’என்ற கவிதை மிகவும் நுண்ணுணர்வு சார்ந்தது. அதைச் சரியாக வெளிக்கொணர்வதில் நான் தவறிவிட்டேன். நிகழ்காலத்தில் நின்றுகொண்டு இறந்தகாலத்தைத் தொடுவதான ஒரு பிரமை அடிக்கடி ஏற்படுகிறது. “இதே மாதிரியான மழைப்பொழுதில் இதே சாயலுடைய ஒரு சாலையில் பவழமல்லிப் பூக்கள் சொரிந்திருக்க நான் நடந்துகொண்டிருந்தேன்.”என்றால், கற்பனைக்களி முற்றிவிட்டது அல்லது சித்தம் சிதைந்த பேதலிப்பு என்றெவரும் எள்ளி நகையாடல் கூடும். காலம் தன்னை மீளக்கொணர்கிறதான உணர்வு மிகுவுற்ற ஒரு நாளில் ‘ஞாபக வாசனை’யை எழுதினேன்.

முன்னொருகாலம்
வயல்நடுவிலொரு மண்சுவர் வீட்டில்
கிடுகு கிழிந்து
மண்சட்டியுள்ளும் மழை பொழிந்தது
இரவல் வானொலியில்
எவனோ உருகிய பாடலிலிருந்து
ஆண்டாண்டுகளாய் கசிந்துகொண்டிருக்கிறது
மழையில் சிலிர்த்தாடிய வயலின் வாசம்

படைப்பாற்றலுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் தீராத இழுபறி நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் படைப்பாளி பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் உருவாகிச் சில பொழுதில் சருகாகி உதிரும் நிலமாகவே மனம் இருக்கிறது. கவிதையின் குரல் இரகசியமாக அழைக்கவாரம்பித்து மெதுமெதுவாக உயர்ந்துசெல்கிறது. புளி கரைக்குமொரு நேரத்தில் அது உச்சம் கொள்கிறது. சமையல் முடிந்து துணிகளைத் துவைத்துக்கொண்டிருக்கும் பொழுதில் தலைகுனிந்தபடி இறங்கிச் செல்கிறது. அதன் குரல் மெல்ல காலவெளியில் கரைந்துபோகிறது. அழைத்த குரலைப் புறந்தள்ளிவிட்டு நமக்கு நேரம் கிடைக்கிறபோது எழுத உட்கார்வதென்பது புதைத்த பிணத்தைத் தோண்டி வைத்து அழுவதற்கொப்பானதாகும்.

“கவிதை மோகனமான கனவு”என்றார் புதுமைப்பித்தன். (நன்றி:நினைவில் கொணர்ந்த வலைப்பக்கத்திற்கு) கைக்குள் சிக்காமல் நழுவிச்செல்லும் அதன் வசீகரத்தைப் பார்க்கும்போது,மேற்சொன்ன வார்த்தைகளின் உண்மை புரிகிறது. ‘இதோ… இதோ…’என்று முகம்காட்டி மாயமானாக முன்னகர்ந்து முன்னகர்ந்து செல்கிறது. அதன் நுட்பமும் சூட்சுமமும் எத்தனை முயன்றாலும் புரியத்தானில்லை. உணர்ந்ததைச் சொற்களாய் உருமாற்றும்போது ஒருபோதும் முழுமை கண்டதில்லை. பிடிபட்டுவிட்டது என்று கருதி விரித்துப் பார்க்கும் கைகளுள் வெறுமையே எஞ்சுகிறது. கையகப்படாத பொருளின் மீது காதல் பெருகுவதுபோல, கண்டடைய முடியாத கவிதையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வாழ்வும் ஒரு கனவென்றாகி மரணம் வந்து ‘விழி திற’என்று சொல்வதற்கிடையில் எழுதிவிடவேண்டும் ஒரு கவிதையை எனினும்.

ஜூலை-டிசம்பர் ‘பனிக்குடம்’இதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன். நன்றி:பனிக்குடம்

11 comments:

ரா.நாகப்பன் said...

வணக்கம் தோழி,
தென்றலாகவும் கொஞ்சம் வல்லினம் பேசுவதாகவும் இருந்தது உங்கள் கட்டுரை.....
வாசிக்கவும் பல செய்திகளை யோசிக்கவும் முடிந்தது.

நன்றி,
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.

soorya said...

இப்போதைக்கு, சபாஷ் என்று மட்டுமே
சொல்கிறேன் இந்தக் கட்டுரைக்கு.
ஆனால் இது குறித்த ஆழமான தேடல்களை இது வேண்டி நிற்கிறது என்பதிலும், அந்தத் தேடல்களே எம்மை அந்நியப் படுத்தி விடுமோ என்கிற இயல்பான பயமும் கூடவே வருகிறது.
வழமைபோலவே....உங்கள் எழுத்துகள் வாசிக்க இதமானவை.சின்னப் பூக்களையும் சின்ன முட்களையும் போல.
நன்றி நதி.

Anonymous said...

கொஞ்சம் நிதானமாய் படிக்கவேண்டும்...அச்செடுத்திருக்கிறேன்....

படிச்சிட்டு வர்றேன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

தோழி இந்த மறுமொழி எழுத வேண்டி முதலில் சில வரிகளை படிவெடுக்க முயன்றேன், பின் மொத்த பதிவியையும் படிவெடுக்க வேண்டும் என்ற உண்மை உணர்ந்த பின் செயலற்று நின்றேன்... என்ன சொல்ல கவிதையும் கவிஞனும் எப்போதும் பயணிக்கும் தளங்கள் ஒன்று தானே.. அதனால் தானே உணர்வுகள் அங்கே ஒருங்கே சங்கமிக்கின்றன.. பல வரிகளை நானும்.. நானும் என்றோ இல்லை எனக்கும் இதுதான் என்றோ அனுபவ பங்களிப்புக்களை கொணர்கிறது. இன்னும் சொல்ல வந்ததை சொல்ல முயன்றால் இதுவும் ஒரு நீள் மறுமொழி ஆகிவிடும் என்றெண்ணி வாழ்த்துக்களோடு முடிக்கின்றேன்.. ஆனாலும் இதெற்கென ஒருபதிவிற்கான விதை என்னுள் விழுந்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால் எப்போது அது தன்னை பிரசவிக்கும் தெரியவில்லை பொறுத்திருப்போம்....

Anonymous said...

ம்ம்..நானும் முயற்சிக்கிறேன். என் சொந்த அனுபவமின்றி வேறெதனையும் கவிதையாக எழுத முடிவதில்லை எனக்கும்.

King... said...

கொஞ்சம் நிதானமாய் படிக்கவேண்டும்...


........

varuven...

தமிழ்நதி said...

தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். நாய்க்கு வேலையில்லாவிட்டாலும்,அது நடந்து திரிவதில்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்:)

"வல்லினம் பேசுவதாகவும் இருந்தது உங்கள் கட்டுரை....."-நாகப்பன்

என்ன செய்வது நண்பரே!மெல்லினம் என்று சொல்லிப் பழகிவிட்டது. வல்லினமானால் வலிக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையில் அப்படியொன்றுமில்லையே...!

சூரியா!வாழ்வே பூக்களும் முட்களும் நிறைந்ததுதானே... சின்ன முட்களாயிருக்கும்வரை மகிழ்ச்சி.தொடர்ந்து வாசிப்பதற்கும் வந்து கருத்துச்சொல்வதற்கும் நன்றி.

படிச்சிட்டு வரதாச் சொன்ன 'பங்காளி'யக் காணோம். அந்தப் பேப்பர் வீதில காத்தோட போறதா யாரோ சொன்னாங்க:)

"பல வரிகளை நானும்.. நானும் என்றோ இல்லை எனக்கும் இதுதான் என்றோ அனுபவ பங்களிப்புக்களை கொணர்கிறது."
நன்றி கிருத்திகா!எனக்கும் இது நேர்ந்ததுண்டு. அந்தக் குறிப்பிட்ட பதிவினைப் போட்டால் எனக்கு நினைவூட்ட மறக்க வேண்டாம் தோழி.

நொந்துகொள்ள வேண்டாம் நவன். சிலருக்குப் படிப்படியாகப் படியும்.சிலருக்கோ படிக்கப் படிக்கக் படியும்.

அவசரம் ஒன்றுமில்லை அரசரே!

மிதக்கும்வெளி said...

நல்ல மொழிநடை (வழக்கம்போல்). எண்ணுவான் எப்போது வரவை எண்ணுபவள் ஆனது? சொல்லவேயில்ல, ((-

ரசிகன் said...

அருமையான சிந்தனை...
கவிதை எழுதுவர் மட்டும்மல்ல.. அதனை ரசிப்பவர் கூட தன் மனதில் ,மறைந்திருந்த விளக்கமுடியா உணர்வுகளுக்கும் வரி வடிவம் கிடைத்ததை உணர்கின்றார்கள்.

கலக்கல்.. தொடருங்க...

தமிழ்நதி said...

என்ன 'மிதக்கும் வெளி'யை நீண்டநாட்களாகக் காணோமே என்று பார்த்தேன். இனி மிதக்க முடியாதுதானே:)ஒரு கயித்துல கட்டிப் போட்டுடப் போறாங்க. 'நல்ல மொழிநடை' - தன்யளானேன். எல்லோரும் வந்து 'எண்ணுவான்'என்று ஏன் இருக்கிறது என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள். வியாபகன், நீங்கள்... இப்படி... சரி அதைப் பெண்பாலுக்கு மாற்றிவிடுவோமே என்று மாற்றியாயிற்று. இனி 'ஏன் மாற்றினீர்கள்' என்று யாராவது வந்து கேட்பார்களாக்கும்:)


"கவிதை எழுதுவர் மட்டும்மல்ல.. அதனை ரசிப்பவர் கூட தன் மனதில் ,மறைந்திருந்த விளக்கமுடியா உணர்வுகளுக்கும் வரி வடிவம் கிடைத்ததை உணர்கின்றார்கள்."-ரசிகன்.

அப்பிடீங்கிறீங்களா...? மகிழ்ச்சி. இப்படி எல்லார் மனசையும் படிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.

கோகுலன் said...

அன்பு தமிழ்நதி,

//மணிக்கட்டுவரை உள்ள எலும்புக்கை
எழுதியிருக்கக்கூடும் காதலூறிய கவிதைகளை
பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை
நடுங்கும் விரல்களால் பற்றுகிறேன்
ஐயோ என் சிறுமொட்டே! //

சமீபமாகத்தான் வாசித்தேன் 'சூரியன் தனித்தலையும் பகல்'.

ஒவ்வொரு கவிதையும் வாசித்தபின் புத்தகத்தை மூடி அசைபோட ஆரம்பித்துவிடுவேன் சிலையாக..

சில கவிதைகள் வாசிக்க வாசிக்க உடம்பே நடுங்கியதையும் சொல்லியாக வேண்டும்..

//பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை//

என்ற வரிகளில் ஐயோ என்று கத்தவேண்டும் போலவும் இருந்தது..

எம்மை ஏன் மறந்து போனீர் --காதுகளில் இன்னும் கேட்கிறது

நல்ல கட்டுரை..