4.03.2008

ஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்“கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட” –நோம் சோம்ஸ்கி

ஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். அந்த அதிர்ச்சிக்கு நானும் விதிவிலக்கல்ல. அந்த நேர்காணலில் எனது பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து வியந்துபோனேன். 'ஊடக சுதந்திரம்' என்ற சொல்லாடல் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் 'ஊடகங்களின் வன்முறை'யைப் பற்றிப் பேசவேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது.

'பிரச்சனை' என்று எழுதும்போதெல்லாம் 'சுய இரக்கம்','கழிவிரக்கம்'போன்ற வார்த்தைகள் நினைவில் வந்து தடுக்கின்றன. ‘எனக்குக் கொஞ்சம் இரக்கம் தா’என்று கைதாழ்த்தி கண்ணீரைக் கறப்பது போன்றதொரு சலிப்பே மேலிடுகிறது. ஈழத்தமிழர்கள் மீதான முன்தீர்மானங்கள், விமர்சனங்களால் அழவேண்டிய சமயத்தில் கூட ஒருமுறை யோசித்தபின்னரே அழுகையைத் தொடரவேண்டியிருக்கிறது. எனினும், மேற்குறித்த நேர்காணலில் சொல்லப்பட்டிருந்த விடயங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கோழைகள்’என்ற அதிரடியான தலைப்பொன்றுடன் அந்த நேர்காணல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ‘உலகில் நடக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி பெண் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால், 25ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கும் படுகொலைகள் பற்றி அதிகமான பதிவுகள் இல்லையே… ஏன்?’என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘பெண் கவிஞர்கள் மட்டுமென்றில்லை. ஆண் படைப்பாளிகளில் கவிஞர் அறிவுமதி, இன்குலாப் போன்றோரைத் தவிர்த்து அநேகமானோர் எழுதுவதில்லை. காரணம் ஈழப்பிரச்சனையையும் பயங்கரவாதத்தையும் ஒன்றெனப் பார்க்கும் தமிழகத்து அரசியல் சூழ்நிலையால் இருப்புக் குறித்த அச்சம் (நான் உட்பட) யாவருக்கும் இருப்பதனால் அது பற்றி எழுதுவது குறைவு. ஆனால், சில கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்.’என்றே பதிலளித்திருந்தேன்.

மேலும் அவரோடு உரையாடும்போது ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ,சுபவீ போன்றவர்களுக்கு நேர்ந்த கதி உங்களுக்குத் தெரியுமல்லவா…?இவ்விதமிருக்க எழுத்தாளர்கள் எப்படி எழுத முன்வருவார்கள்?’ என்று கேட்டிருந்தேன். ‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கோழைகள்’என்ற பிரயோகம் என்னால் மேற்கொள்ளப்படவில்லை. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுதுமளவிற்கு அவர்கள் துணிச்சலற்றவர்களாக இருக்கலாம். ஆனால், அதை ஒரு வெகுஜன ஊடகத்தின் நேர்காணலில் சொல்வது எவ்வளவு அறிவுடைமை என்பது எனக்குத் தெரியும். ‘உண்மைகளை உரத்துப்பேச வேண்டியது எழுத்தாளர்களின் கடமை’ என்பது எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியம் என்பதை அறிந்தவர் அறிவர். ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று என் தலையை நானே கொண்டுபோய் தண்டவாளத்தில் வைக்கிற தைரியமுள்ள ஆளாக இருந்திருந்தால் ஈழத்திலேயே இருந்திருப்பேன். இப்படி உயிரை முடிந்துகொண்டு ஊரூராக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன். வாசகர்களைக் கவரக்கூடிய தலைப்புகளை வைக்கவேண்டுமென்பதற்காக நேர்காணலை அளித்தவர்களையே அதிரவைப்பது எந்த அறத்தைச் சார்ந்ததென்று எனக்குப் புரியவில்லை.

மேலும், “ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?”என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் முழுமையாக விழுங்கப்பட்டு, நேர்காணலைச் செய்தவர் என்ன சொல்ல விரும்பினாரோ, அதுவே பதிலாகப் பதியப்பட்டிருக்கிறது.அந்தப் பதிலில் பதிப்பகங்களுக்கும் எனக்கும் இடையில் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறார் என்னை நேர்கண்டவர்(?). புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் புத்தகம் போடவேண்டுமென்று தமிழகத்தின் பதிப்பகங்களை நாடும்போது, அவர்களிடம் ஒன்றுக்கு மூன்று மடங்காக காசைக் கறந்துகொண்டு புத்தகம் போடும் அநியாயம் இங்கு நடக்கிறது என்ற தகவலை(?) எனக்குச் சொன்னவரே அவர்தான். ‘எனது புத்தகங்களைப் போட்ட இரண்டு பதிப்பகங்களுமே அவ்வாறு என்னிடம் காசு பிடுங்கவில்லை. அதனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. நீங்கள் சொல்வது உண்மையெனில் எவ்வளவு வருந்தத்தக்கது. ஏனெனில், வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் அத்தனைபேரும் ‘வைற் காலர்’வேலை பார்க்கிறவர்கள் இல்லை. அங்கு கழிப்பறை கழுவி, கோப்பைகள் கழுவி உழைக்கிறவர்கள்கூட இருக்கிறார்கள். அப்படியாக உழைக்கும் பணத்தை இவ்வாறு பதிப்பகங்களிடம் இழப்பது வருந்தத்தக்கது’என்று நான் கூறியது எப்படித் திரிபுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். “புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன”என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஊடக ‘கவர்ச்சி’க்காக ஈழத்தமிழர்களின் வேட்டிகளை அவர் உருவியிருக்க வேண்டாம்.
குறிப்பிட்ட நேர்காணலை வாசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் கழிப்பறையும் கோப்பையும் கழுவிக்கொண்டிருப்பதான ஒரு சித்திரம்தான் தோன்றும். எத்தொழிலும் இழிந்தது அல்ல. எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே புலம்பெயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்ட பல ஈழத்தமிழர்களின் மனதில் இந்தப் பதில் எத்தகைய உணர்வலைகளை எழுப்பும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்ற கேள்விக்கு என்னால் அளிக்கப்பட்ட பதிலையும் அச்சியந்திரம் விழுங்கிவிட்டிருக்கிறது. பதிலாக, எனது வலைப்பூவில் பதியப்பட்டிருக்கும் 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற பதிவிலிருந்து சில வரிகளை எடுத்து அதையே பதிலாக்கியிருக்கிறார்கள். அதுவொரு கட்டுரையின் பகுதி. தலையையும் காலையும் துண்டித்துவிட்டால் முண்டம் எவ்வளவு அசிங்கமாகக் காட்சியளிக்குமோ அவ்வளவு கேவலமாகப் பல்லிளிக்கிறது அந்தப் பதில். எனது வலைப்பூவைப் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கேள்விகளுக்கான பதில் அதிலிருந்தும் எடுக்கப்படும் என்பது என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. நினைத்துப் பார்க்கும்போது, 'என்னே வஞ்சனை'என்றொரு கோபச்சிரிப்புத்தான் வருகிறது. பத்திரிகையாளர்களை இவ்வாறான சம்பவங்கள் தரமிறக்குகின்றன.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஆனந்த விகடன் ஈழத்தமிழர்கள் பற்றி ஓரளவிற்கேனும் கரிசனையோடிருக்கிற பத்திரிகை. தமிழ்நாட்டு வாசகர்களிடையே ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனங்காட்டிக்கொண்டிருக்கிற பத்திரிகை என்று சொல்வதுகூட தவறாக இருக்கமுடியாது. இனப்பிரச்சனையைப் பயங்கரவாதப் பிரச்சனையாகப் பார்க்கிற காலகட்டத்தில் துணிந்து சில விசயங்களைச் சொல்லவும் செய்திருக்கிறது என்ற வகையில் எங்களுக்கு ஆனந்த விகடன் மீது மதிப்பிருக்கிறது. ஆனால்,வளர்ந்துவரும் ஒரு படைப்பாளியை சக படைப்பாளிகளுடனும் பதிப்பகங்களுடனும் சிண்டு முடியும் வகையில் அந்த நேர்காணலில் அளிக்கப்பட்ட சில பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்தன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் எவர் மனமும் புண்படுத்தப்பட்டிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கான எதிர்வினையை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அதை முழுமையாகப் பிரசுரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
என்னை நேர்காணல் செய்தவர் ஓரளவிற்கு எனக்குப் பரிச்சயமானவர் என்பதால், அவரிடம் குறைந்தது பத்துத் தடவைகளாவது சொல்லியிருப்பேன். "தயவுசெய்து நான் சொல்லாததை எழுதி என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்."என்று. ஏனெனில், நான் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அதில் சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் சடாரென்று பிடித்துக்கொண்டு கண்கள் மினுக்கிட (அது அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்) 'நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று எழுதட்டுமா?'என்பார். இவர் என்னைச் சிக்கலில் மாட்டிவிடப்போகிறார் என்ற உள்ளுணர்வு எனக்கு அப்போதே இருந்தபடியாற்தான் நான் அவ்வாறு பலதடவைகள் கேட்கவேண்டியிருந்தது. நான் இவ்வாறு கோபத்துடன் எதிர்வினையாற்றுவதற்கு, 'இத்தனை சொல்லியும் இந்த மனிதர் இப்படிச் செய்துவிட்டாரே'என்ற விசனமும் காரணம். 'என்ன நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்களே...'என்று வரும் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிக்கும்போதெல்லாம்,
'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
வாடித் துன்பமிகவுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து.....
......................................................................
என்ற வரிகளே நினைவில் வருகின்றன. பாரதியாரின் வயிற்றெரிச்சலை எவரோ இதுபோன்றதொரு நாளில் கிளறிவிட்டிருக்கவேண்டும்.
“வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போல பரவிவிட்டது. வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு”
என்ற கனிமொழியின் வார்த்தைகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன். ஒருவரை அடிப்பதும் கொல்வதும் மட்டுமே வன்முறை ஆகாது. ஒருவரது உதடுகள் வாயிலாக தனது கருத்தைப் பேச முற்படும் ஊடகங்கள் செய்வதும் வன்முறைதான். அதைப் பார்த்துக்கொண்டு மறுப்புத் தெரிவிக்காது மௌனமாக இருப்பது வன்முறைக்குத் துணைபோவதாகிவிடும். பரபரப்புக்காக அடுத்தவரின் உணர்வுகளைப் பகடைக்காயாக்கும் மனச்சாட்சியற்ற ஊடக கலாச்சாரம் மாறும், மறையும் காலம் எப்போது? வணிக பத்திரிகைகளின் பெருந்தீனிக்கு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் இரையாக்கப்படுவது பற்றிய உரத்த உரையாடல் இனியேனும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ்நதி

48 comments:

லக்கிலுக் said...

கொடுமை :-(

நேர்காணலே தந்திருக்க வேண்டாம் என்ற அளவுக்கு உங்களை புலம்பவைத்துவிட்டாரே அந்த நேர்கண்டவர்?

Kasi Arumugam said...

தமிழ்நதி,

உண்மையிலேயே இத்தனை தூரம் திரிக்கமுடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. ஊடகங்களின் மேல் இருந்த நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து இன்று முழுதும் கரைந்துவிட்டன. நிதானமாக உங்கள் தரப்பை இங்கெ முன்வைத்திருக்கும் உங்கள் பொறுமைக்கு ஒரு சபாஷ்.

இரண்டாம் சொக்கன்...! said...

இது என்ன கொடுமை....ஏன் இப்படி ஒரு கோணங்கித்தனம், நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

விகடன் குழுமம் நமது மறுப்பினை பதிவுசெய்ய என்ன செய்யலாம்...ஆலோசனை கூறுங்கள்...இதை சும்மா விடக்கூடாது...ம்ம்ம்ம்ம்

முத்துகுமரன் said...

//பரபரப்புக்காக அடுத்தவரின் உணர்வுகளைப் பகடைக்காயாக்கும் மனச்சாட்சியற்ற ஊடக கலாச்சாரம் மாறும், மறையும் காலம் எப்போது? வணிக பத்திரிகைகளின் பெருந்தீனிக்கு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் இரையாக்கப்படுவது பற்றிய உரத்த உரையாடல் இனியேனும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.//

சத்தியமான வார்த்தைகள். இத்தைகைய ஊடக வன்முறையை கண்டிப்பாக அனைவரும் கண்டிக்க வேண்டும். வெறும் பரபரப்பிற்காகவும், வியாபார இச்சைக்காகவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள் முகத்தில் அனைவரும் காறி உமிழ வேண்டும்.

தமிழ்நதி said...

அக்கறைக்கு நன்றி நண்பர்கள் லக்கிலுக்,காசி ஆறுமுகம், இரண்டாம் சொக்கன். இதை நான் இந்தக் கோணத்தில்தான் பார்க்கிறேன். அதாவது இந்த நேர்காணலை திரித்து வழங்கியவருடைய தவறே அன்றி இது ஒட்டுமொத்தமாக ஆனந்தவிகடனைச் சாடுவதாக இருக்கக்கூடாது. பரபரப்பான செய்தி வழங்கவேண்டும் என்ற ஒருவரது ஆர்வக்கோளாறாக இதை எடுத்துக்கொள்வதே பொருந்தும். ஆனந்த விகடனால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால்,ஒருவரது பிழை ஒரு நிறுவனத்தின் தவறாகப் பார்க்கப்படக்கூடாது. ஆனந்த விகடனிலிருந்து இதற்கு என்ன எதிர்வினை வரப்போகிறது என்பதை அறிய ஆவலோடிருக்கிறேன். சம்பந்தப்பட்டவரை நியாயப்படுத்துவார்களா அன்றேல் நியாயத்தைப் பேசுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஊடகத்தின் வழியாக -ஊடகங்களின் விழியூடாக மக்கள் பார்ப்பதும்,அதன்வழி கருத்துருவாக்கம் நிகழ்வதும் நிறுத்தப்படவேண்டும்.மக்களே சுயமாகச் சிந்திக்கும் நிலை வர வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:-( அடப்பாவமே! மிக வருத்தமாக இருக்கிறது... சொல்லாததை சொன்னதாக சொல்வது என்பது வழக்கம் தான் இந்த பத்திரிக்கை என்று இல்லை எல்லா இடத்திலும் இத்தகைய தந்திரம் கொண்ட வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.. தலைப்பை வைத்து படிக்க ஆரம்பித்தால் உள்ளே அப்படி அவர்கள் சொல்லாததை நாமே சில சமயம் கண்டுபிடிக்கலாம்..

ILA (a) இளா said...

கொடுமை, கொடுமையிலும் கொடுமை...

மலைநாடான் said...

தமிழ்நதி!

உங்கள் எதிர்வினையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்திருப்பது நல்லது.

//நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
விகடன் குழுமம் நமது மறுப்பினை பதிவுசெய்ய என்ன செய்யலாம்... ஆலோசனை கூறுங்கள் //

இணையப்பதிப்புச் சந்தாதாரர், அக்கட்டுரை வரும் பக்கதிலேயே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

தமிழ்நதி said...

நன்றி முத்துக்குமரன்,முத்துலெட்சுமி,இளா, மலைநாடான்.
ஊடகங்களின் பொறுப்பற்ற செய்திகள் குறித்து ஏற்கெனவே எனக்கு எரிச்சல் உண்டு. அவர்களுக்கு அது செய்தி.சம்பந்தப்பட்டவர்களுக்கோ அது தீ. தமிழக எழுத்தாளர்கள் ஈழப்பிரச்சனை பற்றி எழுதாதிருப்பது உண்மையில் வேதனை தரத்தக்கது. ஆனால்,அவர்களை கோழைகள் என்று 'நான்' சொல்வது நாகரிகமல்ல என்பதே என் வாதம். அதை இங்குள்ளவர் ஒருவர் சொல்லியிருந்தால் என் எதிர்வினை வேறு விதமாகவும் இருந்திருக்கலாம்.

ramachandranusha(உஷா) said...

கொஞ்சம் காண்ட்ராவர்ஷியல் சப்ஜெட் என்பதால், உங்களைப் போன்றோர், அச்சுக்குப் போகும் முன்பு சரி பார்த்துவிட்டு,
ஓகே சொல்வது சரியாய் இருக்கும் என்றுதோன்றுகிறது. அல்லது கேள்விகளை வாங்கிக் கொண்டு பதில் எழுதி தந்தும் விடலாம். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்று தெரியவில்லை.

boopathy perumal said...

தமிழ்நதி!

உங்கள் எதிர்வினையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வத்திருக்கிறேன், அதை வெளியிடுவார்களா என்று தெரியாது, இதற்கு முன்பு இதுபோன்ற விமர்சனங்களை அனுப்பிய போது ஆனந்த விகடன் பின்னூட்டங்களை வெளியிடவில்லை

பூபதி துபை

thiru said...

தமிழ்நதி,

விகடன் இப்படி செய்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. திருமாவளவன் தனது பேட்டியில் குறிப்பிட்ட வார்த்தையை பிய்த்து எடுத்து தலைப்பாக தொங்கவிட்டது ஜூனியர் விகடன். திருமாவளவன் ஈழத்திற்கு ஆயுதம் கடத்துவேன் என்று சொன்னதாக பொருள் கொள்ள வைத்த தலைப்பிற்கும், உள்ளடக்கத்திற்கும் கனத்த வேறுபாடு இருந்தது. 'படித்த' கந்தசாமிகளது கருத்து திருமாவளவனை 'தீஈஈஈஈஈஈவிரவாதியாக்கி' புல்லரித்துப் போனது.

சமூகத்தைப் பற்றிய எந்த பொறுப்பும் இல்லாமல் திரிக்கப்படும் இவர்களது அரசியலை ஒவ்வொருமுறையும் மறுப்பு சொல்வதில் நமக்கு நேரம் வீணாவதும், ஊ....டகங்கள் மீண்டும் அதே குழியை வெட்டி காத்திருப்பதும் வேதாளமும், விக்கிரமாதித்தனும் கதை போல தொடரும் நிகழ்வு. உங்கள் விளக்கத்தை விகடன் கட்டுரை யில் வாசகர் எழுதும் பகுதியில் ஒட்டிவிடுங்கள்.

dondu(#11168674346665545885) said...

இவ்வளவு நடந்தபிறகு நீங்கள் ஏன் அமைதி காக்கிறீர்கள். பேட்டி எடுத்தவர் பெயர், முகவரி எல்லாவற்றையும் எழுதுங்கள். அவர் தவறுக்கு ஆனந்தவிகடன் நிறுவனத்தை பொறுப்பாக்க விரும்பாத இந்த நோக்கமும் நிறைவேறினால் போல ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பத்திரிக்கை (அ)தர்மம் இதுதாங்க. அவுங்களுக்கு வேணுங்கரமாதிரி திரிப்பாங்க. முந்தி இப்படித்தான் சிங்கை எழுத்தாளர் ஒருத்தர் (நம்ம நெருங்கிய நண்பர்) கட்டுரையை எடிட்டிங் என்ற பெயரில் ( கவர்ச்சியா ஆக்கறாங்களாம்) திரிச்சுப்போட்டு, அது சிங்கை அரசாங்கத்துக்கு எதிராச் சொன்னமாதிரி செஞ்சுட்டாங்க. அதுக்கப்புறம் வழக்கறிஞர்களையெல்லாம் பார்த்து இவுங்க அனுப்புன ஒரிஜனல் கட்டுரையின் காப்பியைக் காமிச்சு ஏகப்பட்ட கஷ்டமா ஆச்சு அதுலே இருந்து விடுபட்டுவர.

இதுபோன்ற நிகழ்வுகளால்தான் அச்சு ஊடகங்கள், வெகுஜனப் பத்திரிக்கைகள் மேலேயெல்லாம் ஒரு வெறுப்பு வந்துருச்சு எனக்கு. ச்சீன்னு கிடக்கு. பிரபலப் பத்திரிக்கைன்னு ஏமாந்துறாம நாம் கவனமா இருக்கணும்.

தமிழ்மணமே கதின்னு கிடக்குறதும் இதாலேதான்.

Enjay said...

இந்த பதிவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆனந்த விகடன் போன்ற இதழ்களின் மீதான என்போன்றவர்களின் மதிப்பீடு மிக நல்ல விதமாகவே இருந்து வருகிறது. (அதே சமயம் ஜூ.வி அதன் தரத்தை மற்ற பத்திரிகைகளின் தரத்தில் தான் வைத்துள்ளது) ஆனால் அங்கும் கூட இத்தகைய சாத்தியக்கூறுகள் உண்டு என்பது வேதனை தருவதாக உள்ளது. தாங்கள் தொடர்ந்து செல்லுங்கள் உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பாம்பாட்டிச் சித்தன் said...

ஆனந்த விகடன் எனும் கசாப்பு கடைக்கு இப்போதைய பலி நீங்களா?அது உங்களின் "அன்னை இல்லம்"ஆயிற்றே? (எனெனில் உங்களை தமிழகம்,கடல் கடந்து தமிழ் பரவிய பகுதிகளுக்கும் உங்களை கொண்டு சேர்த்தவர்கள்,"அவள் விகடனில்" உங்களை "இணைய அரசி"யாக உலவ விட்டவர்கள்)உங்களின் கவிதையை இனி வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வாரத்தில் அதன் உடலத்தின் பக்கங்களில் தொங்கவிட்டு நற்பெயர்,அரவணைக்கும் மாண்பு,கோபத்தின் சுடர் தணிக்கும் நீர் பீய்ச்சல்...இவையெல்லாம்"அன்னையின் அன்பு" நீங்கள் அறியாததல்ல!.அவர்களுக்கு பிரியமானவர்களுடன் தான் அவர்களின் "அலகிலா விளையாட்டு"தொடரும்.ஊடகஅரசியலில்
இது சகஜம்.
வெகுசன,வணிகப்பத்திரிக்கைகள் என்ற பெயரில் தமிழகத்தில் இயங்குபவை "மஞ்சள் பத்திரிக்கைகளே"நிறையப் பேருக்கு பட்டுத்தான் தெரிய வரும்,சிலருக்கு மாத்திரம் இது வாய்ப்பதில்லை.

வாழ்த்துக்கள்,இனி நீங்கள் "சர்ச்சையின் அரசி"யாகவும் அறியப்படுவீர்களா(க)?


இதை வெளியிடுவது உங்கள் விருப்பம்!!!நன்றி

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தமிழ்நதி,

நான் உங்க நேர்காணலை ஆனந்தவிகடன் On-line இல் வாசித்தேன். உடன், நீங்க இங்க எழுதியிருக்கிறதைப் பற்றி அங்கேயும் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

ம்ம்ம்..ஆ.வி யில இருக்கிற நம்பிக்கையும் தொலைந்து போகிறது

தமிழ்நதி said...

வருகைக்கு நன்றி உஷா,

என்னை நேர்காணல் செய்தவரிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். 'தயவுசெய்து என்னிடம் காட்டிவிட்டு அச்சுக்கு அனுப்புங்கள்'என்று. ஆமெனத் தலையாட்டினார். தவறிவிட்டார். இனி வருந்தி என்ன பயன்?

அவர்களுக்கு'லிங்க்'அனுப்பியமைக்கு நன்றி பூபதி. எனது மறுப்பு அடுத்தவாரம்தான் வெளியாகும். அதற்கிடையில் எல்லாம் ஆறிப்போய்விடும். இருக்கவே இருக்கிறது மறதி.

"ஒவ்வொருமுறையும் மறுப்பு சொல்வதில் நமக்கு நேரம் வீணாவதும், ஊ....டகங்கள் மீண்டும் அதே குழியை வெட்டி காத்திருப்பதும் வேதாளமும், விக்கிரமாதித்தனும் கதை போல தொடரும் நிகழ்வு."

உண்மைதான் திரு. வேறு எவ்விதமும் நிகழ்வதற்கில்லை.

டோண்டு அவர்களுக்கு,,,அப்படிச் செய்ய மனதில்லை. அந்த மனந்தான் அதன் நொய்மைதான் அவரை அவ்விதம் நடந்துகொள்ளத் தூண்டியதோ...

துளசி!இது எனக்கு முதல் அனுபவம். இனி கவனமாக இருக்க முயற்சிப்பதல்லால் என்ன செய்யவியலும்:(

தொடரும் அன்பிற்கு நன்றி கிருத்திகா.

பாம்பாட்டிச் சித்தன்!அடையாளப்படுத்தப்படும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது..இல்லையெனில் அது பொய். ஆனந்த விகடன் எனது கவிதையைப் பிரசுரித்தது என்பதற்காக அதில் தவறுகள் நேரும்போது மெளனமாக இருப்பது மடமை. ஒருவரின் துன்பம் கண்டு 'உனக்கு வேண்டும்... வேண்டும்'என எக்களிப்பது இனிய பண்பு:( சர்ச்சைகளின் அரசியாக இனி உலாவருவேன் எனும் தங்கள் ஆசி பலிக்கட்டும். வெளியிடுவதற்காகத்தானே பின்னூட்டமிட்டீர்கள். பிறகெதற்கு ஐயம்?வெளியிடப்படக்கூடாத அளவிற்கு எழுதிவிட்டோமே என்று உங்களுக்கே உறுத்தலாக இருந்ததோ....?

நன்றி கெளபாய்மது!இவ்வேளையில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பெறுமதியானது.

dondu(#11168674346665545885) said...

//டோண்டு அவர்களுக்கு,,,அப்படிச் செய்ய மனதில்லை. அந்த மனந்தான் அதன் நொய்மைதான் அவரை அவ்விதம் நடந்துகொள்ளத் தூண்டியதோ...//
அப்படியில்லை ஆனந்த விகடனின் பலான நிருபர் டேஞ்சர் பேர்வழி என்பதை அடையாளம் காட்டினால்தான் இன்னொரு தமிழ் நதியோ அல்லது சிங்கை எழுத்தாளரோ ஏமாறாது இருப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஊடகங்கள் தத்தம் பரபரப்புக்காக படைப்பாளிகளின் மனங்களை நோகடிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நதியின் எதிர்வினையை அதே ஊடகத்தில் தெளிவாகப் பதிந்து எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.

தமிழ்நதி, காலநதியில் ஈழத்து உறவுகள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறவுகள் திசைக்கொன்றாய் தேங்கி, தோள்சாயமுடியாப் பெருநெருப்பில் தீய்கிறது. காலம் எமக்கானதாக வரும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்கள் நாட்களைக் காவிச் செல்கின்றன. காத்திருக்கும் பொழுதுகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. விழியோரக் கசிவிலெல்லாம் அனல் பிறக்க ஆரம்பித்துவிட்டன. நெஞ்சக் கூட்டறைக்குள் நிலவு கொஞ்சி விளையாடும் கனவுகள் கூடக் காணாமல் போய் சூரிய நெருப்பு சீறிக் கனல்கிறது. இப்போது இந்த வலைப்பின்னலும் வார்த்தைகளும் மட்டுமே எம்மை ஆற்றுப்படுத்தும் நம்புகிறேன்.

சுகுணாதிவாகர் said...

தமிழ்

உங்கள் தன்னிலைவிளக்கத்தில் எனக்குச் சில மறுப்புகள் உண்டு.

/பெண் கவிஞர்கள் மட்டுமென்றில்லை. ஆண் படைப்பாளிகளில் கவிஞர் அறிவுமதி, இன்குலாப் போன்றோரைத் தவிர்த்து அநேகமானோர் எழுதுவதில்லை/

இல்லை. தணிகைச்செல்வன், பச்சியப்பன், இளம்பிறை, பிரேம் ரமேஷ் (இருபது கவிதைகளும் இருநூற்றாண்டுகளும் என்று நினைக்கிறேன்.), இளவேனில், அஷ்வகோஷ் (எ) ராசேந்திரசோழன் எனப் பட்டியல் நீளும். அரசியல் செயற்பாட்டாளர்களிலும் மய்யநீரோட்ட அரசியல்வாதிகளை நாம் கழித்துவிட்டுப் பார்த்தால் தியாகு, மணியரசன், பொழிலன், தோழர்கள் கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன் எனப் பெரும்பட்டியல் நீளும். பிரச்சினை என்னவெனில் ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள் மீது அதிகம் விழுவதில்லை என்பதால் இவர்களின் பணி குறித்துப் பெரும்பாலான தமிழர்கள் அறியமாட்டார்கள். ஈழத்தமிழர் ஆதரவிற்காகவே தங்கள் வாழ்வைப் பணயம் வைத்த எவ்வளவோ பெரியாரியக்கத்தவர்களை என் தனிப்பட்ட வாழ்க்கையில் அறிவேன்.

/ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஆனந்த விகடன் ஈழத்தமிழர்கள் பற்றி ஓரளவிற்கேனும் கரிசனையோடிருக்கிற பத்திரிகை/

இதில் எனக்கு உடன்பாடில்லை. விகடனைப் பொறுத்தவரை தமிழ்ப்புத்தக விற்பனைச் சந்தையில் ஈழத்தமிழர்கள் குறிப்பான தீர்மானகரச் சக்திகள். அதனாலேயே அது அடிக்கடி ஈழப்பிரச்சினை பற்றி எழுதுகிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக எப்படியும் மூன்றுமாதங்களுக்கு முறை தோழர்.திருமாவளவனின் நேர்காணல் விகடனில் வந்துவிடும். கிருஷ்ணசாமி, அதியமான், சந்திரபோஸ் போன்ற தலித் தலைவரகளை அது கண்டுகொள்வதில்லை. திருமாவிடம் ஒப்புக்குத் தலித் பிரச்சினைகள் குறித்துச் சில கேள்விகள் கேட்டுவிட்டு ஈழப்பிரச்சினை குறித்தே அதிகம் கேள்வி கேட்கும். எப்படியிருந்தபோதும் இந்த வியாபாரத்தந்திரமும் கூட ஈழத்தமிழர்களின் வலிகளைச் சர்வதேசச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுபோக உதவுமென்றால் அது மகிழ்ச்சியானதே.

சரி விடுவோம். இப்போது பிரச்சினை அதுவல்ல. மேலும் ஒரு ஊடக அநீதியால் பாதிக்கப்பட்டு மனம் புண்பட்டிருக்கும் உங்களிடம் 'கருத்துவிவாதம்' நடத்திக்கொண்டிருப்பது பண்புமல்ல. ஆனால் எனக்கு இன்னொரு சந்தேகம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஞாநி விகடனில் எழுதிய கட்டுரையைக் கண்டித்து கவிஞர்.தமிழச்சி ஒரு கண்டனக்கூட்டம் நடத்தினார். அதில் சல்மாவும் கலந்துகொண்டார். பின்னணியில் இருந்தது கனிமொழிதான் என்பது யாரும் அறியாத ரகசியமல்ல. அக்கூட்டத்தில் விகடனும் அறிவுமதி உள்ளிட்ட பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒருவேளை அந்தக் கோபத்தைத் தீர்ப்பதற்கும் பழிவாங்குவதற்கும் கூட விகடன் உங்கள் நேர்காணலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் குறிப்பாக மேற்கண்ட மூன்று பெண்கவிஞர்கள் குறித்தே 'அந்தக்' கேள்வி வந்திருக்கிறது. இது ஒரு யூகம்தான்.

ஆனால் எப்படியிருந்தபோதும் இதில் பெரிதாகப் பாதிக்கப்படப் போவது நீங்கள்தான். சக பெண் எழுத்தாளர்களிடமும் வேறு சிறுபத்திரிகையாளர்களிடமும் உங்கள்மீது ஒரு கோபமேற்படலாம். அது அனைத்துப் படைப்பாளிகளிடமும் இணக்கத்தையே பேண விரும்பும் உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்குத் துன்பத்தையே தரும். மேலும் சர்ச்சைகளைத் தவிர்த்து அனைத்துப் படைப்பாளிகளிடமும் உறவு பாராட்ட விரும்புபவர்கள் நீங்கள். இப்போது இந்த 'சர்ச்சை' அதைத் தடை செய்து தனிமைப்படுத்தக்கூடும்.

பத்திரிகையாளர்களை விடுங்கள். நான் சிறிதுகாலம் பத்திரிகைத்துறையில் வேலைபார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். எல்லா வலிகளும் மரணங்களும் துயரங்களும் பாலியல் பலாத்காரங்களும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு 'மேட்டர்'. 'நியூஸ்', 'ஸ்டோரி'தான். (சமூகப்பொறுப்போடு செயல்படும் பத்திரிகை நண்பர்களும் உண்டு. ஆனால் அவர்கள் மிகச்சிறுபான்மை.) மற்றவர்களின் பாதிப்பு குறித்துக் கவலைப்படாமல் பரபரப்பை மட்டுமே கவனத்தில் கொள்வதே 'இதழியல் அறம்'.

உங்கள் மறுப்பு எடிட் செய்யாப்படாமல் விகடனில் வெளியிடப்படாவிட்டால் குமுதம், குங்குமம் போன்ற பிற பத்திரிகைகளை நாடுங்கள். (ஆனால் நேர்காணல் அச்சிற்கு வருமுன்பு அவற்றைப் பார்த்துத்தான் அனுமதிப்பேன் என்று நிபந்தனை விதியுங்கள் (அ) நேர்காணலை நீங்களும் ஒலிப்பதிவு செய்துகொள்ளுங்கள் (அ) கேள்விகளை முன்பே வாங்கி பதிலை உங்கள் கைப்பட எழுதிக்கொடுத்து ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள்.)

இது சாத்தியமில்லையென்று தோன்றினால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். அச்சந்திப்பிற்கு சக பதிவர் நண்பர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன் மற்றும் விரும்புகிறேன். உங்களுக்கு என் வருத்தங்கள்.

தமிழ்நதி said...

மன்னிக்கவும் டோண்டு அவர்களே!அவ்வாறு இனங்காட்டுவதற்கில்லை. குறிப்பிட்ட நபரே இதை வாசிக்கவும் கூடும். ஆனந்த விகடன் வட்டாரத்தில் அவர் யாரென அறிவார்கள். நான் ஒரு பொதுத்தளத்தில் அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு ஆர்வக்கோளாறினால் இவ்வாறு நடந்திருக்கலாம். அவருக்கு ஒரு மனமும் குடும்பமும் இருக்கும். அவர்மீது எனக்கு வேறு கோபமோ விரோதமோ இல்லை. இப்போதுகூட இது தர்மமில்லை என ஊடக வட்டாரங்களை உணரவைக்கவும் சக படைப்பாளிகள் என்னைத் தலைக்கனம் பிடித்தவள் என்று கருதாதிருக்கவுமே இப்பதிவைப் போட்டேனேயன்றி வேறெந்த நோக்கமும் இல்லை. ஊடகங்களின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகம் இனி அனைவர் மனங்களிலும் சிலகாலம் இருக்கும். சிலகாலம் என்பதை அழுத்தித்தான் சொல்லவேண்டும். ஏனெனில் மறதி மறுபடி மக்களை முட்டாளாக்க காத்திருக்கிறது.

அனானி நண்பருக்கு,
"தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்"

உங்கள் நம்பிக்கை என்னை நெகிழவைக்கிறது. தீங்கிழைக்காதிருக்கும் மனம் தொடர்ந்து நிலைக்கவேண்டும். ஆம்... எங்கோ தொலைவில் தெரியும் ஒளிப்பொட்டினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று நம்பித் தொடர்கிறது வாழ்வு. உங்கள் தமிழினிது.அனானி ஆனாலும் அழகு தமிழ். மறுமுறையேனும் உண்மைப்பெயரில் வாருங்கள்:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்நதி!
அறிமுகமானவரா இப்படிச் செய்தார். நம்பக் சிரமமாகத் தான் இருக்கிறது.
எனினும் உங்கள் தன்னிலை விளக்கம் உடனே அனுப்பியது. நன்று.
அனுபவம் இல்லை அதனால் தான் கேட்கிறேன்.அச்சுக்குப் போகுமுன் காட்டி ஒப்புதல் பெறமாட்டார்களா?? அப்படி நடைமுறை ஏற்படுத்தக் கூடாதா??
எதிர்காலத்தில் பேட்டிகளை ஒலி ஒளிப் பதிவும் செய்தால் என்ன?? அப்படிக் கேட்கக் கூடாதா?
நான் இணையத்தில் படித்து பின்னூட்டுகிறேன்.

Anonymous said...

Anonymous said...
தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஊடகங்கள் தத்தம் பரபரப்புக்காக படைப்பாளிகளின் மனங்களை நோகடிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நதியின் எதிர்வினையை அதே ஊடகத்தில் தெளிவாகப் பதிந்து எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.

தமிழ்நதி, காலநதியில் ஈழத்து உறவுகள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறவுகள் திசைக்கொன்றாய் தேங்கி, தோள்சாயமுடியாப் பெருநெருப்பில் தீய்கிறது. காலம் எமக்கானதாக வரும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்கள் நாட்களைக் காவிச் செல்கின்றன. காத்திருக்கும் பொழுதுகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. விழியோரக் கசிவிலெல்லாம் அனல் பிறக்க ஆரம்பித்துவிட்டன. நெஞ்சக் கூட்டறைக்குள் நிலவு கொஞ்சி விளையாடும் கனவுகள் கூடக் காணாமல் போய் சூரிய நெருப்பு சீறிக் கனல்கிறது. இப்போது இந்த வலைப்பின்னலும் வார்த்தைகளும் மட்டுமே எம்மை ஆற்றுப்படுத்தும் நம்புகிறேன்.

அனானி நண்பருக்கு,
"தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்"

உங்கள் நம்பிக்கை என்னை நெகிழவைக்கிறது. தீங்கிழைக்காதிருக்கும் மனம் தொடர்ந்து நிலைக்கவேண்டும். ஆம்... எங்கோ தொலைவில் தெரியும் ஒளிப்பொட்டினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று நம்பித் தொடர்கிறது வாழ்வு. உங்கள் தமிழினிது.அனானி ஆனாலும் அழகு தமிழ். மறுமுறையேனும் உண்மைப்பெயரில் வாருங்கள்:)

மன்னிக்கவேண்டும் தோழி!
அனானியாக வர எண்ணவில்லை ஏதேச்சையாக முகமற்றுப் போய்விட்டது.
கனடாவிலிருந்து வல்வை சகாறா

boopathy perumal said...

உங்கள் எதிர்வினையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வத்திருக்கிறேன், அதை வெளியிடுவார்களா என்று தெரியாது, இதற்கு முன்பு இதுபோன்ற விமர்சனங்களை அனுப்பிய போது ஆனந்த விகடன் பின்னூட்டங்களை வெளியிடவில்லை

''வழக்கம்போல் உங்கள் கருத்து ஆதரவான எனது பின்னூட்டத்தை விகடன் நெறியாளர் ''கழுத்தை நெறித்து விட்டார்''
பூபதி துபை

தமிழ்நதி said...

சுகுணா திவாகர்,தகவல்களுக்கு நன்றி.

"எப்படியிருந்தபோதும் இந்த வியாபாரத்தந்திரமும் கூட ஈழத்தமிழர்களின் வலிகளைச் சர்வதேசச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுபோக உதவுமென்றால் அது மகிழ்ச்சியானதே." என்பதே எனது நிலைப்பாடும். வணிக சஞ்சிகைகளில் நாம் ஓரளவுக்குமேல் புனிதத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. எனது நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டமையின் பின்னணியில் நீங்கள் சொல்வது போன்ற பெருமெடுப்புகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். அவ்வளவு பெரிய நோக்கங்களுக்கெல்லாம் என்னைப்போன்ற 'சிறியவளை'ப் பயன்படுத்த மாட்டார்கள்; இது தற்செயல் நிகழ்வு அல்லது விபத்து என்பதே எனது எண்ணம்.இத்தகைய எதிர்வினை எதிர்பார்க்கப்பட்டுமிராது.

"உங்கள் மறுப்பு எடிட் செய்யாப்படாமல் விகடனில் வெளியிடப்படாவிட்டால் குமுதம், குங்குமம் போன்ற பிற பத்திரிகைகளை நாடுங்கள்" - யோசிக்கிறேன்.

"உங்களுக்கு என் வருத்தங்கள்" -இத்தனைக்கிடையிலும் என்ன பகிடியென்றால் சும்மா சிவனே என்று இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த என்னை 'பரபரப்பிற்காக'ஏதோ எழுதி பிரபலமாக்கிவிட்டார்கள்:)இனி 'ஆனந்தவிகடனில் பேட்டியை மாற்றிப் போட்டார்களே அந்த தமிழ்நதியா..'என்று அடையாளப்படுத்தப்படுவேனோ என்று பயமாக இருக்கிறது..

யோகன்!பரிச்சயமானவரென்றால் ஊடகப்பரிச்சயம்தான்.வழக்கமாக நேர்காணல் என்றால் பதிவுசெய்வார்கள். நான் கனடாவில் பத்திரிகையில் பணியாற்றியபோது அப்படித்தான் செய்தோம்.இவர் பேப்பரில் குறிப்பெடுத்துக்கொண்டார்..நான் வாங்கிப் பார்த்துவிட்டு 'இதிலிருந்து என்ன தெரிந்துகொள்வீர்கள்'என்று கேட்டேன்.அத்தனை கிறுக்கல்.துரதிர்ஷ்டவசமாக எனது recorder பதிவுசெய்ய இயலாதபடி பழுதுபட்டிருந்தது. 'ஏன் பதிவு செய்யவில்லை?'என்ற என் கேள்விக்கு ''அரசியல்வாதிகளின் பேட்டிகளை மட்டுமே பதிவு செய்வோம். அவர்கள்தான் மாற்றி மாற்றிப் பேசுவார்கள்'என்பது அவருடைய பதிலாக இருந்தது. பெரிய எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்றால் அச்சுக்குப் போகும் முன் காட்டி ஒப்புதல் பெறுவார்களாயிருக்கும். நாங்கள்தான் 'பிள்ளைப்பூச்சி'களாயிற்றே... வாய் திறக்க மாட்டோமென்று நினைத்திருப்பார்கள். அரசியல் செல்வாக்கு பொருந்தியவர்களுக்கு இவ்விதமெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.

விமலா said...

tamilnathy!..I feel really sorry for what has happened to you!There is an ample chance that people would mistake you,about your interview in A.V..It is really wise that you immediately responded to it..and it has to reach atleast to certain level.This has to be condemned for sure...

This shows that media is losing its
trustworthiness and social responsibility.
"Long live democracy"???

Unknown said...

அன்பின் தமிழ்நதி,

மிகவும் அநியாயமாகவும் எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமற்று பத்திரிகை தர்மம் இங்கு மீறப்பட்டிருக்கிறது.
விகடன் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகை.தரமான எழுத்துக்களை அங்குதான் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையும்,இலகுவில் எல்லா இடத்திலும் கிடைக்கக் கூடிய வார இதழாக இருந்தமையும் காரணமாக இருந்ததெனலாம்.

இதனைச் சொல்வதற்கு மன்னிக்கவும்.
உங்கள் விளக்கத்தினை இங்கு பதிந்திருக்காவிட்டால் அந்தப் பேட்டியை மட்டும் பார்த்துவிட்டு உங்களைக் கோபித்திருப்பேன்.

இந்தத் தன்னிலை விளக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இணையம் படிக்கமுடியாத விகடன் வாசகர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.அவர்களையும் இந்த விளக்கம் சென்றடைய வேண்டும்.

விகடனின் இந்த அநீதிக்கெதிரான எனது கருத்தை பின்னூட்டமாக அவர்களுக்கும் அனுப்பிவிட்டேன்.
அனேகமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அடுத்த இதழொன்றில் உங்களது மறுப்புக்கடிதம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.அதுதான் விகடனின் அனைத்து வாசகர்களிடமும் போய்ச்சேரும்.

எதிர்காலங்களில் உங்கள் எழுத்துப் பற்றிப் பேசப்படும்போது இந்தத் திரிபு படுத்தப்பட்ட பேட்டியானது கரும்புள்ளியாகிவிடும் அபாயமிருக்கிறது.

இதற்காக எதுவும் நடவடிக்கைகள் எடுக்கும் எண்ணங்களிருப்பின் முதல் ஆளாக நான் தயார் சகோதரி.

தமிழ்நதி said...

பூபதி, மீண்டும் மீண்டும் விகடனின் கவனத்திற்குக் கொண்டுவர முனைவதற்கு நன்றி.

சகாறா!நாம் கனடாவில் இருந்தபோது சந்தித்திருக்கிறோம். தொடர்பற்றுப் போயிருந்தது. இந்நேரம் வந்து பேச நேர்ந்திருக்கிறது. தொலைவிலிருந்தாலும் எழுத்தாலும் நோக்கத்தாலும் அருகிலிருக்கிறோம் என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.

This shows that media is losing its
trustworthiness and social responsibility.

சமூகப்பொறுப்புணர்வைக் காட்டிலும் மக்களை கேளிக்கையூட்டுவதில்தான் அவை அக்கறையோடிருக்கின்றன. அதற்கு ஊடகங்கள் மட்டும் பொறுப்பன்று. சகமனிதர்கள் குறித்து அக்கறையற்றுப் போய்க்கொண்டிருக்கும் மக்களும் காரணம். அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு அவர்களையறியாமலே புன்னகை அரும்பும் முகங்களைப் பார்த்திருக்கிறேன். .குரூரம் மிகுந்து கருணை வற்றிக்கொண்டிருக்கிறது
தோழி.

ரிஷான்!நீங்கள் கோபித்திருந்தால் அதில் நியாயம் இருக்கும்.ஒரே தளத்தில் இயங்கும் சக படைப்பாளிகளைப் பற்றி நான் 'கோழைகள்'என்று சொல்வது அநாகரிகம். ஒருவேளை ஈழத்தில் இருந்துகொண்டு குண்டுச்சத்தங்களுக்கிடையில் அப்படி ஒரு பேட்டியைக் கொடுத்திருந்தால் அதிலொரு நியாயம் இருந்திருக்கலாம். இப்போது அருகதையற்றவளின் ஆணவமான சொல்லாடலாக அது நோக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எப்போதும் 'சகோதரி'என்றழைக்கும் வாஞ்சைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Anonymous said...

விகடன் இணையத்தில் கருத்துக்கள் வந்திருக்கிறதே, கவனித்தீர்களா?

தென்றல் said...

தமிழ்நதி,

இன்னும் நேர்காணலை பார்க்கவில்லை என்றாலும் விகடன்கூட பரபரப்புக்கு இந்தளவுக்கு 'மசாலா' போடுவது ஆச்சரியமாதான் இருக்கிறது...

எனது கண்டனங்களையும் விகடன் குழுமத்திற்கு இங்கு பதிவு செய்கிறேன்.

Anonymous said...

Hi Nathy,

I can't believe that AV did such a thing. Because it is a respected weekly and always made sure the contents published are accurate & true, but here it is, showing a different face.

Idon't know but had heard some people say that AV pretends to shed tears for Elam Tamils; and behind the scene is commercial tricks (to make money)

Anyway what had happened to the real interview was unacceptable. It makes me think that if the media has lost its trustworthyness and responsibility.

I hope they will publish your response and act as a sensible media group.

Regards,
Vino

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் மறுப்பை ஆ.வி. வெளியிடாவிட்டாலும் இங்கு பதிந்திருப்பதன் மூலம், குறைந்த பட்சம், உங்கள் வாசகர்கள் உணர்வார்கள் என்ன நடந்திருக்கும் என.

ஆனந்த விகடனுக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

தமிழ்நதி said...

அன்புள்ள அனானி, விகடன்.கொம் போய்ப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அடுத்த விகடனுக்காக ஆவலோடும் பதைப்போடும் காத்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

தென்றல்,எதிர்பாராதவை சிலசமயம் நிகழ்ந்துவிடுகின்றன. இன்று காலையில் நான் ஒருவரோடு பேசும்போது சொன்னதையே நான் உங்களிடமும் சொல்ல விரும்புகிறேன். "ஏதோ ஒரு கணம் நம்மைச் சரித்துவிடுகிறது. விபத்துக்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காக சாலைகளைச் சபித்துப் பயனில்லை.அந்தக் கணம் அவ்வாறு நிகழ விதிக்கப்பட்டிருந்தது அவ்வளவே. சரிசெய்துகொண்டு பயணிக்கவேண்டியதுதான்"

வினோ!நானும் உங்கள் எல்லோருடனும் இணைந்து விகடன் அடுத்த இதழுக்காகக் காத்திருக்கிறேன். என் பக்க நியாயத்தைப் பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தோழி... பார்க்கலாம்.

பரபரப்பிற்காட்படலோ பழிவாங்குதலோ எதுவும் என் நோக்கமில்லை. நான் வளர்ந்துவரும் எழுத்தாளர்தான்... எங்கோ மூலையில் கிடக்கும் பிள்ளைப்பூச்சிதான். ஆனால், நான் சொல்லாத சொல்லுக்குப் பொறுப்பாக முடியாது. அவ்வளவே. 'நீங்கள் சொன்னது - அல்லது உங்களால் சொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டிருப்பது சரிதானே...'என்கிறார்கள் சிலர். தகுதியற்ற புகழுக்கு ஆசைப்படுவதுபோன்றதே சொல்லாத சொல்லுக்கு உரிமை கொண்டாடுவதும். "கட்டியணைத்தாலும் எட்டியுதைத்தாலும் சொல்லவில்லை என்றால் சொல்லவில்லைதான்."(இது பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு இல்லையா:) )

பாம்பாட்டிச் சித்தன் said...

தமிழ்நதி வணக்கம்,

உங்களின் பதில் எனது பின்னூட்டத்தை எவ்வளவு கருத்துப் பிசகாக அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பரவாயில்லை. எனது இந்தப் பின்னூட்டம் சற்று நீண்டதாக இருப்பினும், தெளிவாக என் நிலையை உணர்த்தப் பயன்படும் என எண்ணுகிறேன்.

நீங்கள் கடந்த இரண்டு வருடங்களாகத் தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஒரு படைப்பாளியாக இந்தப் பரப்பில் சுழலும் இலக்கிய சர்ச்சை,அரசியல்,ஊடக வன்முறை இவற்றையெல்லாம் அவதானித்து வந்திருப்பீர்கள். 'ஆனந்த விகடன்'போன்ற சமூக நலன் பற்றிய அக்கறையும் பொறுப்பும் கொண்ட வணிகப் பத்திரிகைகள் அரசியல்வாதிகளுக்கும் சினிமாவுக்கும் பாடும் துதிபாடல்கள் தாங்கள் அறியாததல்ல. ஒரு படைப்பாளி படைப்புகளால் அடையாளம் காணும் விதம் விடுத்து, படைப்பாளி சொல்லாத (அல்லது வேறு நோக்கில் பிரயோகித்த சொற்களை) பதிப்பித்து அதனால் மனம்வெம்பும் படைப்பாளியின் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் குளிர்காய்பவர்கள். முதலிலிருந்தே இவர்கள் இப்படித்தான். வியாபாரம்,சுயலாபத்திற்காக எதையும் செய்பவர்கள்.
இவர்கள்தான் உங்களை அடையாளப்படுத்துபவர்களா? சரி.

தமிழில் சிறுபத்திரிகை இயக்கம், நடுநிலை ஏடுகள் இவற்றில் அடையாளம் தேடாது ஆனந்த விகடனில் அடையாளம் தேடியதற்கும் அல்லது ஆனந்த விகடன் உங்களைத் தக்கமுறையில் 'அடையாளப்படுத்திய' விதத்திற்கும் வாழ்த்துக்கள்.

மேலும், சிறுபத்திரிகைகள் உங்கள் கதவைத் தட்டமாட்டா. ஆனால், அங்கு பத்திரிகை தர்மம் பாதுகாக்கப்படும். விகடன் போன்ற பெரும் பத்திரிகைகள்தான் கதவைத் தட்டி காலரா,வாந்திபேதியை விநியோகிப்பவர்கள். இந்த நேர்காணலுக்கு முன்னமே இது போன்ற வணிகப் பத்திரிகைகள் படைப்பாளிகளுக்கு கொடுத்த,கொடுத்துக்கொண்டிருக்கிற மரியாதைகளும் இணையோட்டத்தில் உங்களுக்குப் பார்க்கக் கிடைப்பவை. ஆகையால்
1.உங்கள் உள்ளுணர்வின் எச்சரிக்கைக்கு செவிமடுத்து இந்த நேர்காணலை ஒலிப்பதிவு செய்திருக்க வேண்டும்.
2.பேட்டி அச்சாகும் முன் கண்டிப்பாக அதை உங்கள் பார்வைக்குத் தரும்படி கேட்டிருக்க வேண்டும். இல்லையேல், பேட்டிக்கு நீங்கள் உடன்பட்டிருக்கக் கூடாது.
3.கேள்விகளை கைப்பிரதியாக வாங்கி வைத்துக்கொண்டு, பதில்களை உங்கள் கைப்பட எழுதி பிரதியை அனுப்பிவிட்டு மூலத்தை உங்கள் வசம் வைத்திருந்திருக்க வேண்டும். மேற்சொன்ன எந்தச் செயலையுமே நீங்கள் செய்ததாகத் தெரியவில்லை.

அனுபவங்கள் தரும் பாடமே அலாதியானது. கண்ணீராகட்டும் களிப்பாகட்டும். இந்த நேர்காணல் வரும் முன் உங்கள் நண்பர்கள் யாரேனும் முன்னெச்சரிக்கை செய்திருந்தால் நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருப்பீர்களோ என்னவோ...(கண்டிப்பாக யாரேனும் அறிவுறுத்தியிருப்பார்கள். இல்லையோ...? அவர்களுக்கு எனது கண்டனங்கள்)இப்போது சர்ச்சைகளின் வாயிலாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்.

மேலும், ஈழத்தமிழர்களுக்காக இங்குள்ள இலக்கியவாதிகள் தங்கள் குரலைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதே நேர்காணல் ஒரு அரசியல் பின்புலம் வாய்ந்த இலக்கியவாதிக்கோ சினிமா பிரபலங்களுக்கோ நிகழ்ந்திருக்க வாய்ப்பே கிடையாது.

வலைப்பதிவில் தங்களுக்கு சாதகமான பின்னூட்டங்களை வெளியிட்டும், பாதகமாக பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்தும் பின்னூட்டங்களை வெட்டியும் ஒட்டியும் பிரசுரிக்கும் வலைப்பதிவர்கள் அநேகம். இந்தப் பின்னூட்டம் எப்பக்கமும் சாராது நடுநிலைமையில் இருந்து நோக்கிய விதமே அன்றி, 'உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்'என்ற எக்காளத்திலிருந்து எழுந்தது அல்ல. அதைத் தாங்கள் புரிந்துகொண்டாலும் கொள்ளாவிட்டாலும் சரி.

நன்றி.

தமிழ்நதி said...

//உங்கள் மறுப்பை ஆ.வி. வெளியிடாவிட்டாலும் இங்கு பதிந்திருப்பதன் மூலம், குறைந்த பட்சம், உங்கள் வாசகர்கள் உணர்வார்கள் என்ன நடந்திருக்கும் என.//
சுந்தர்!இணையத் தொடர்புடையவர்களுக்குத்தான் எனது நிலைப்பாடு தெரியவரும். ஏனைய வாசகர்கள் மனதில் பதியும் சித்திரத்தை மாற்றவியலாது என்பதுதான் எனது வருத்தம். குறைந்தபட்சம் மறுப்பைத் தெரிவிக்க இப்படியொரு தளம் இருப்பதில் மகிழ்ச்சியே.


வணக்கம் பாம்பாட்டிச்சித்தன்,

இரண்டாண்டுகளாக நான் சென்னையில் இருந்தாலும் கடந்த ஓராண்டாகத்தான் தமிழ் இலக்கியப் பரப்பை அவதானிக்க முடிகிறது. விஷயங்களையோ விஷங்களையோ கவனிக்க முடியாதபடி இருப்பிற்கான ஆரம்ப அலைச்சல் அமைந்திருந்தது. ஆனால்,அதையொரு காரணமாகக் கூறித் தப்பித்துக்கொள்ள இயலாதுதான். ஒரு தகவலுக்காகச் சொன்னேன்.

//தமிழில் சிறுபத்திரிகை இயக்கம், நடுநிலை ஏடுகள் இவற்றில் அடையாளம் தேடாது ஆனந்த விகடனில் அடையாளம் தேடியதற்கும் அல்லது ஆனந்த விகடன் உங்களைத் தக்கமுறையில் 'அடையாளப்படுத்திய' விதத்திற்கும் வாழ்த்துக்கள்.//

நண்பரே!நானாக அடையாளம் தேட முற்படவில்லை. அது எனது இயல்புமல்ல. என்னை அறிந்தவர் அறிவர். ஆனால்,ஆனந்த விகடன் போன்றதொரு நிறைந்த வாசகர்களைக் கொண்ட பத்திரிகையில் என் நேர்காணல் வெளிவருவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை வேண்டாமென்று புறந்தள்ள நான் 'இலக்கியத் துறவி'யல்ல. நான் சாதாரணள். அடையாளப்படுத்தப்படும் ஆசை அடிமனதில் எல்லோருக்குமே இருக்கும். ஏன்... இந்தப் பின்னூட்டத்தை எழுதிய உங்களுக்கே கூட இருக்கும். என்னதான் மறுத்தாலும், எழுத்தின் நோக்கங்களில் ஒன்றாக 'இந்த உலகில் எனது இருப்பை அடையாளப்படுத்தவேண்டும்'என்ற உள்ளர்ந்த அவாவும் இருக்கிறது. நீங்கள் இதை மறுக்கக்கூடும். அவ்வாறு வந்து மறுக்குமிடத்தில் நீங்கள் பொய்யுரைப்பதாகவே நான் கருதுவேன்.

நான் நேர்காணலை ஒலிப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனது ஒலிப்பதிவுக் கருவி பழுதாகியிருந்தது. தவிர,நான் எழுத்து சார்ந்த அறத்தை நம்பினேன். அதில் தவறு நேர பெரிதும் வாய்ப்பில்லை என்று கருதினேன்.
குறிப்பிட்ட நபரிடம் "அச்சுக்குப் போவதன் முன் என்னிடம் காட்டிவிட்டு அனுப்புங்கள்"என்று ஒன்றல்ல பத்துத் தடவைகளுக்கு மேல் சொல்லியிருந்தேன். அதற்கு என் வீட்டவர்கள் சாட்சி(வேலிக்கு ஓணான்தான்)

அவர் எழுதியிருந்த குறிப்புகள் கிறுக்கலாக புரிந்துகொள்ள சிரமமாக இருந்ததைப் பார்த்தவுடன் எனக்குப் புரிந்துபோயிற்று. இட்டுக்கட்டல் நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று. அதனால் முக்கியமான கேள்விகளை எனது மடிக்கணனியில் தட்டச்சி அதற்கான பதில்களையும் அடித்து 'பிறின்ற் அவுட்'ஆக அவரது கையில் கொடுத்தேன். அந்த மூலம் என்னிடம் இருக்கிறது. இவ்வளவும் நடப்பதன் முன் "உங்கள் கேள்விகளை என்னிடம் தாருங்கள். நான் பதில்களை எழுதித் தருகிறேன். பிறகு வந்து வாங்கிச் செல்லுங்கள்"என்றும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் சிரித்தார். சாத்தியப்படாது என்பது எனக்குப் புரிந்தது.

பின்னூட்ட விடயத்தில் நான் பெரும்பாலான பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதே வழக்கம். அது எனக்குச் சார்பானாதோ இல்லையோ. நான் ஒரு விடயம் முக்கியமாகக் கவனிக்கிறேன். சில விஷமிகள் அனானியாக வந்து 'நீ ஈழத்தமிழச்சி... ஓடிப்போ'என்பது மாதிரியான பின்னூட்டங்களைப் போடுவார்கள். அதேபோல சிலர் வந்து 'இவங்களைத் தெரியாதா'என்று போடுவார்கள். அவ்வகையானவற்றை நான் பிரசுரிப்பதில்லை. காரணம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் சமூகப்பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதனால். இந்தச் சின்ன விடயங்கள் நாளை மறந்து, மறைந்து போய்விடலாம். ஆனால், அத்தன்மைய பின்னூட்டங்களைப் பிரசுரிக்கும்போது இந்தியர்கள்-ஈழத்தமிழர்கள் என்ற பிரிவினை மனங்களில் வளரக்கூடும். நாம் அனைவரும் தமிழர்கள்; எமக்குள் அந்த ஒற்றுமையுணர்வு இருக்கவேண்டும் என்பதனால் அதற்கு வழிகோலும் எந்தப் பின்னூட்டங்களையும் பிரசுரிப்பதில்லை.

நண்பரே!பின்னூட்டங்கள் ஆட்களைப் பற்றியதாக இல்லாமல் ஆக்கங்களைப் பற்றியதாக இருந்தால் நான் பிரசுரிக்கத் தயார். நன்றி.

மிதக்கும்வெளி said...

நண்பர் பாம்பாட்டிச்சித்தனின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.

/'ஆனந்த விகடன்'போன்ற சமூக நலன் பற்றிய அக்கறையும் பொறுப்பும் கொண்ட வணிகப் பத்திரிகைகள் அரசியல்வாதிகளுக்கும் சினிமாவுக்கும் பாடும் துதிபாடல்கள் தாங்கள் அறியாததல்ல/

என்ன ஒரு முரண்பாடு? சமூகநலனும் பொறுப்பும் விகடனுக்கு இருக்கிறதென்றால் அது ஏன் சித்தன் சொல்கிறபடி அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் துதிபாடவேண்டும். மேலும் அவர் ஆராதிக்கும் சிறுபத்திரிகைகள், நடுநிலை இதழ்களும் கூட 'புனித'மானவையல்ல. (தமிழ், இந்தப் 'புனித'த்தை நீங்கள் எனக்குப் பதில் சொன்ன பின்னூட்டத்திலுள்ள 'புனிததை'யும் சேர்த்துப் பகிடியாக எடுத்துக்கொள்ளவும்).

உயிர்மை இதழின் அட்டைப்படத்தில் கனிமொழி இடம்பெறுவதாயிருக்கட்டும், அல்லது ஒவ்வொரு இதழிலும் அல்லது குறைந்தது இரன்டு இதழ்களுக்கு ஒருமுறை சினிமாப் புகைப்படங்கள் அட்டையில் இடம்பெறுவதாயிருக்கட்டும், அதெல்லாம் மாற்றுச்சினிமா குறித்த உயிர்மையின் அக்கறை என்று பாம்பாட்டி நினைத்தால் 'அய்யோ பாவம்' என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

அப்புறம் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும் துதி பாடுவதுதான் தவறு, எழுத்தாளர்களைத் துதி பாடுவதற்குப் பெயர் இலக்கிய விசாரம், அப்படித்தானே?

/தமிழில் சிறுபத்திரிகை இயக்கம், நடுநிலை ஏடுகள் இவற்றில் அடையாளம் தேடாது ஆனந்த விகடனில் அடையாளம் தேடியதற்கும் அல்லது ஆனந்த விகடன் உங்களைத் தக்கமுறையில் 'அடையாளப்படுத்திய' விதத்திற்கும் வாழ்த்துக்கள்./

இது ஏதோ தமிழ்நதி ஆனந்தவிகடனில் கவிதை இடம்பெறுவதற்கு 'அலைந்ததைப்' போலச் சித்தரிக்கிறது. எனக்குத் தெரிந்து எங்களுக்கு வலைப்பதிவுகளின் மூலமாகத்தான் 'அடையாளப்பட்டார்' தமிழ்நதி. ஆ.வி வாரம் ஒரு படைப்பாளிகளை அறிமுகம் செய்யும்போது தமிழ்நதியும் 'அடையாளப்படுத்தப்பட்டார்'. மேலும் சிறுபத்திரிகைகள் வழியாகவே 'அடையாளப்படுத்தப்பட்ட' புனிதஸ்நானம் செய்யப்பட்ட புண்னியவாண்கள் விகடன் மாதிரியான 'தீட்டுப்பட்ட' வெகுஜன இதழ்களின் பக்கம் கரையொதுங்கியதேயில்லையா? யார் எந்தவழியாகச் சென்று 'அடையாளப்படல்' என்னும் இடத்தை அடைவது என்று ஒழுங்குபடுத்தும் டிராபிக் கான்ஸ்டபிளா பாம்பாட்டிச்சித்தன்?

/மேலும், சிறுபத்திரிகைகள் உங்கள் கதவைத் தட்டமாட்டா. ஆனால், அங்கு பத்திரிகை தர்மம் பாதுகாக்கப்படும்/

(((((((((((((((-. கொஞ்சமாவது விகடன் பேட்டியால் தமிழ்நதி மனம் புண்பட்டிருந்தால் மேற்கண்ட வாக்கியத்தைப் படித்து இப்படியாகச் சிரித்து மனம் ஆற்றிக்கொள்ளலாம். அ.மார்க்ஸ் அசோகமித்திரன் குறித்தும் சுஜாதா குறித்தும் எழுதியதை வெளியிடமுடியாது என்று மனுஷ்யபுத்திரன் மறுத்ததால்தான் அ.மா உயிர்மையை விட்டு வெளியேறியதாக எழுதியிருக்கிறார். அ.மா மாதிரியான பிரபலமான எழுத்தாளர்களுக்கே இந்தக் கதி. அப்புறம் நல்லிகுப்புசாமி செட்டியான், தினமலர் ரமேஷ் இவர்களைப் பற்ரியெல்லாம் கட்டுரை எழுதிச் சிறுபத்திரிகைகளுக்கு அனுப்பிப் பாருங்களேன். அப்புறம் தெரியும் பத்திரிகாதர்மமும் பருத்திக்கொட்டைப்புண்ணாக்கும். (சசிகலா) நடராசன் என்னும் கேடுகெட்ட அரசியல் பொறுக்கியின் நாலுபக்க உளறல்கள் இடம்பெறாத 'இடைநிலை இதழ்' புதியபார்வையை நீங்கள் படித்துவிட முடியுமா என்ன?

பை தி பை இந்த ஞாயிறை இப்படியாகப் பொழுதுபோக்க உதவியதற்கு பாம்பாட்டிச்சித்தனுக்கு நன்றி.

Anonymous said...

எதோ ஆனந்தவிகடந்தான் முதற்தடவை இந்த தவறு செய்வது போன்று அலறுவது எனக்கு ஆச்சரியம் தருகின்றது. தற்காலத்தில் பக்கம் சாராமல் செய்தி வெளியிடும் ஒரு பத்திரிகை நிறுவனத்தை உங்களால் காட்ட முடியுமா?

பணத்த திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு பொய்களையும் அவதூறுகளையும் எழுதும் பத்திரிகைகளத்தான் நாம் பணம் கொடுத்து வாங்குகின்றோம்.

நான் சில பத்திரிகையாளர்களைச் சொன்னால் ‍‍" இங்கு பதிவிட்டவர்களே" அவர்கள் அப்படியில்லை என வாதிடத் தொடங்குவார்கள்.


பத்திரிகையாளர்களை சில சமயங்களில் தாக்குவதில்கூட தர்மம் நிறைய உண்டு.
எத்தனை நடிகைகளை பத்திரிகைகள் விபச்சாரிகளாக்கி விட்டார்கள்.
எத்தனையோ ஊழல் மன்னர்களையெல்லாம் தலைவர்களாக்கிவிட்டார்கள்.

பல பொய்யர்களை பார்த்துவிட்டேன்.

ஒரு ஈழத் தமிழன்

பாம்பாட்டிச் சித்தன் said...

வணக்கம் தமிழ்நதி,

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. சுகுணா திவாகரின் வார்த்தைகளுக்கும் நன்றி. அடையாளங்களை நீங்கள் தேடாமல் அடையாளங்கள் உங்களைத் தேடிவருவது நல்ல விஷயமே. ஆனந்த விகடனில் நீங்கள் மேலும் மேலும் உங்கள் எழுத்தின் அடையாளத்தை நிரூபியுங்கள். ஏனெனில், இலக்கியமும் விகடனும் ஒன்று. இலக்கியத்திற்கு அது ஆற்றிய சேவைகள் மகோன்னதமானவை. அதில் வாய்ப்புக் கிடைக்கும்போது நீங்கள் புறந்தள்ளக் கூடாதுதானே! (இந்தப் பகிடியையும் சுகுணா திவாகர் மிகத் தீவிரமாக முன்னெடுத்து அடுத்த பின்னூட்டத்தைத் தயார் செய்யக்கூடும். இனி நீங்களாகவே பேசிக்கொள்ளுங்கள். இதற்கு மேல் பின்னூட்டமிட நேரமோ பொறுமையோ எனக்கில்லை. மன்னியுங்கள்)

ஆனந்த விகடன் போன்ற எந்தவொரு வணிகப் பத்திரிகையும் என்னை அணுகாது. நானும் அவர்களை என் வாழ்நாளில் அணுகமாட்டேன். அதற்கான தேவையும் எனக்கில்லை. நான் சிறுபத்திரிகையாளன். அதில் கிடைக்கும் அடையாளம் எனக்குப் போதுமானது.

சுகுணா திவாகருக்கு,

எனக்கு நிரந்தரமாக ஒரு வேலை உண்டு. இலக்கிய டிராஃபிக் போலீஸ் முத்திரை எதுவும் எனக்கு இடவேண்டாம்.

/'ஆனந்த விகடன்'போன்ற சமூக நலன் பற்றிய அக்கறையும் பொறுப்பும் கொண்ட வணிகப் பத்திரிகைகள் அரசியல்வாதிகளுக்கும் சினிமாவுக்கும் பாடும் துதிபாடல்கள் தாங்கள் அறியாததல்ல/

என்று நான் பகடியாக சொன்னதை உங்களைப் போன்ற மேதாவிகள் வந்து ஏதேனும் வாய்மொழிய நேர்ந்துவிடுகிறது. இதே பதிவில் எனது முந்தைய பின்னூட்டத்தில் ஆனந்த விகடனை எத்தகைய பத்திரிகை எனச் சொல்லியிருந்தேன். அதையாவது வாசித்திருக்கலாம்.

இதே நேர்காணல் எந்தவொரு நடுநிலை ஏட்டிலோ சிற்றிதழிலோ வெளிந்திருந்தால் இத்தகைய 'திரிபு'நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லவந்தேன். அதுவும்கூட உங்களுக்கு நிகழ வாய்ப்பில்லை போலும். ஏனென்றால், அவைகளின் மேலான உங்களின் காழ்ப்பும் விரோதமும் சொல்லி மாளாதவை. கண்டிப்பாக இதே பேட்டி உயிர்மை, உயிரெழுத்து, தீராநதி, காலச்சுவடு, புதிய பார்வை இவற்றில் இப்படி வந்திருக்காது. நீங்களோ உங்களால் விதந்தோதப்படுபவர்களோ ஆனந்தவிகடனில் கரையொதுங்கினால் என்ன... வேறெங்கும் கரையொதுங்கினாலென்ன... அது குறித்து எனக்குத் துளியும் கவலை கிடையாது.

உயிர்மையில் அ.மார்க்ஸ் எழுதியதை வெளியிடவில்லை என்றால், அவருக்கு பிற நடுநிலை ஏடுகளோ சிறுபத்திரிகைகளோ அதே மரியாதையைத்தான் அளித்தனவா? கடைசியில் அவரும் 'ஆனந்த விகடனில்'தான் தனது கருத்தை வெளியிட்டாரா? எனக்குத் தெரியாது. நடுநிலை, சிறுபத்திரிகை இவற்றில் ஆசிரியரின் கருத்து ஏதாவது சில பக்கங்களில் வந்து மாட்டிக்கொள்வதுண்டு. அது உங்களுக்கு உளறலாகப் பட்டால் அந்தப் பக்கங்களைக் கிழித்தெறிந்துவிட்டுப் படிக்கலாம். அல்லது படிக்காமலே தூக்கிப்போட்டுவிடலாம். நானோ நீங்களோ படிக்கவில்லை என்று எந்த நடுநிலை ஏடோ, சிறுபத்திரிகையோ தங்களின் இலக்கியசோகத்தைப் பகிரப்போவதுமில்லை.

மேதாவிகள் கதைக்கும் இந்தப் பதிவில் இனி வந்து என் கருத்துக்களை இடவோ சர்ச்சையில் ஈடுபடவோ நான் விரும்பவில்லை. முக்கியமாக எனது அடையாளத்தை நான் யாருக்கும் நிரூபிக்கத் தேவையும் இல்லை. பொழுதுபோக்க என்னிடம் ஞாயிற்றுக்கிழமைகள் இல்லை. எல்லா நாட்களும் வேலை நாட்களே. நன்றி.

தமிழ்நதி said...

விவாதங்கள் களைகட்டுகின்றன என்பதா...? களைமண்டுகிறது என்பதா...? வாசிப்பவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.

ஈழத்தமிழன்,உங்களுக்கு வலைப்பூ இல்லையா...? ஆரம்பிப்பது வெகு சுலபம். உங்களால் கூறப்பட்ட ஒரு விடயம் என்னையும் வெகுநாட்களாக உறுத்திக்கொண்டிருந்தது.

//எத்தனை நடிகைகளை பத்திரிகைகள் விபச்சாரிகளாக்கி விட்டார்கள்.//

ஆம்.அவர்களது வாழ்வு,தொழில்,குடும்பம்,மனம் இவையெல்லாம் எவ்விதம் பாதிக்கப்படும் என்பதறியாமல்(அல்லது அறிந்தும்)'சூடான'செய்திகளுக்காக அவ்வாறான விடயங்களை பத்திரிகைகளில் பரகசியப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் அறையொன்றில் தனித்திருக்கக் கண்டால் அதை 'விபச்சாரம்'என்று பெயர்சூட்டி அழைப்பதையே மீள்பரிசீலனை செய்யவேண்டும். தனிப்பதிவிடவேண்டிய, விவாதத்திற்குட்படுத்த வேண்டிய விடயம். ராமர்களும் சீதைகளும் மட்டும் வாழும் நாட்டில் அபவாதம் நேர்ந்துவிட்டதாக அலறுவதானது மிகப்பெரிய நகைச்சுவை.

சுகுணா திவாகர்! 'கிடக்கிறது கிடக்க கிழவியைத் தூக்கி மணையிலை வை எண்டானாம்'என்று எங்கள் பக்கங்களில் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னை அடையாளப்படுத்தியது யார் என்பதா இப்போதைய தலையாய பிரச்சனை:)

பாம்பாட்டிச் சித்தன்! 'ஆனந்த விகடன்'மகோன்னதமானது,அப்பழுக்கற்றது என்று உங்களுடன் நான் வாதிட வரவில்லை. ஆனால்,உலகமெங்கும் நிறைந்த வாசகர்களைக் கொண்ட பத்திரிகை; அதில் நேர்காணல் வெளிவருவதென்பது என்னைப் போன்ற 'ஒண்ணாப்பு'களுக்கு பெரிய விசயந்தான் என்பதற்குமேல் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

சுகுணா திவாகர்! பாம்பாட்டிச் சித்தன் உங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார். நீங்களும் பதிலுக்கு விளக்கம் அளிக்கலாம். ஆனால், நேரத்தை அழிக்கும் வேலை அது. வீண் சர்ச்சைகள்தான் வளரும். எனக்கென்ன பின்னூட்டப்பெட்டி நிறையும்:)

சுரேகா.. said...

அடடே இது ரொம்பக்கொடுமை!

நான் கூட படித்துவிட்டு
இவ்வளவு துணிச்சலாகக்கூறியிருக்கிறாரே,
அடுத்த இதழில் யார் காட்டமாக
பதில் சொல்லப்போகிறார்களோ
என்று நினைத்தேன்.

ஆனந்த விகடன் இப்படி
செய்திருக்கவேண்டாம்
அவர்கள், தங்கள் நிருபர்களுக்கு
ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தவேண்டிய சூழல்
ஏற்பட்டு விட்டது.
நேர்மையாய் எழுதுவது பற்றி!

உண்மையை அறியச்செய்த துணிச்சலுக்கு
வாழ்த்துக்கள்!

தமிழ்நதி said...

discussions not available on என்று புதிதாக ஒரு செய்தி வருகிறது. சும்மா சோதனையாக ஒரு பின்னூட்டம் போட்டுப் பார்க்கிறேன்.

N Suresh said...

வணக்கம்

உங்களுடைய வலைப்புவில் பல வாசித்தேன்.

நன்றாக உள்ளது.

வாழ்த்துகள்

தோழமையுடன் என் சுரேஷ்

லக்கிலுக் said...

//அப்படியில்லை ஆனந்த விகடனின் பலான நிருபர் டேஞ்சர் பேர்வழி என்பதை அடையாளம் காட்டினால்தான்//

டோண்டு சார்! இதுக்கு வேற அர்த்தம் வருதே? :-(

சுகுணாதிவாகர் said...

தமிழ்நதி பொதுவாக நான் அதிகமாகப் பின்னூட்டமிடுவதில்லை. எனவே உங்கள் பின்னூட்டப்பெட்டியை நிரப்ப நான் பயன்படமாட்டேன். ((-

பாம்பாட்டிச்சித்தனுக்கு..

விகடனுக்கும் சிறுபத்திரிகைகளுக்குமிடையில் வித்தியாசங்கள் உண்டு என்பதை நானும் அறிவேன். ஆனால் இப்போது சிறுபத்திரிகை மற்றும் பெரும்பத்திரிகைக்கிடையிலான வித்தியாசங்கள் அழிந்துவருகின்றன (அ) குறைந்துவருகின்றன என்பதையும் தாங்கள் அறியாதவர்களல்ல.

மேலும் தூய இலக்கியம், அரசியலற்ற இலக்கியம் என்றெல்லாம் பேசிவந்த காலம் முடிந்து இலக்கியத்திலுள்ள அரசியல் குறித்துப் பேசவந்த காலம் வந்தபோது 'தூய இலக்கியங்களின்' பின்னுள்ள அதிகாரமும் வன்முறையும் அரசியலற்ற பாசாங்கும் கட்டவிழ்க்கப்பட்டன. ஆனாலும் நீங்கள் இன்னமும் தூய இலக்கியம் என்பதிலேயே நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

வெகுஜன இதழ்களில் பங்கெடுப்பது குறித்த விவாதங்கள் மாற்று அரசியலைப் பேசியவர்களிடம் எழுந்தபோது இருவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

1. பொதுப்புத்தி என்பது பெரும்பாலும் வெகுஜன ஊடகஙகளாயே கட்டமைக்கப்படுகிறது மற்றும் பொதுக்கருத்தியல் வினியோகிக்கப்படுகிறது. எனவே பொதுப்புத்தி குறித்த புரிதலுக்கு வெகுஜன ஊடகங்கள் குறித்த அவதானிப்பு அவசியம். அதேநேரத்தில் தங்களைத் 'தூய்மையாகக்' காட்டிக்கொள்ளும் தூய இலக்கியக்களங்களும் உண்மையில் அதிகாரத்தின் கறைபடிந்தவையே. ஆனால் இந்த அதிகாரம் மிகவும் நுட்மானது. எனவே, வெகுஜன இதழ்களையும் சிறுபத்திரிகைகள் மாதிரியான தூய இலக்கிய வெளிகளையும் குறிப்பிட்ட விவாதங்களில் சமதூரத்திலேயே வைத்துக்கவனிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வெகுஜன இதழ்கள் தங்கள் ஜனரஞ்சகத்திற்காகவும் பரந்துபட்ட வாசகர் தளத்தை உருவாக்குவதற்காகவும் அவ்வப்போது மாற்றுக்கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டியிருக்கிறது. ஜனரஞ்சகம் என்பதின் சாதக மற்றும் பாதகங்கள் தமிழ்ச்சூழலில் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்தை முன்வைத்தவர்களால் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன.

2. வெகுஜன இதழ்களில் மாற்று அரசியலாளர்கள் பங்கெடுக்கும்போது அதனோடு சமரசப்படாமலிருக்கவேண்டும்.

/ஆனந்த விகடன் போன்ற எந்தவொரு வணிகப் பத்திரிகையும் என்னை அணுகாது. நானும் அவர்களை என் வாழ்நாளில் அணுகமாட்டேன். அதற்கான தேவையும் எனக்கில்லை. நான் சிறுபத்திரிகையாளன். அதில் கிடைக்கும் அடையாளம் எனக்குப் போதுமானது.
/

இதை நீங்கள் தமிழ்நதிக்குச் சொல்லும் பதிலாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நானும் கவிதாசரண் என்னும் சிறுபத்திரிகையின் வழியாக, 'பெரியார் - ஒரு பன்முக வாசிப்பு' என்னும் கட்டுரையின் வழியாகத்தான் அடையாளப்பட்டேன். நானும் ஒரு சிறுபத்திரிகையாளன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். இதுவரை விகடன் மாதிரியான ஊடக வெளிச்சங்கள் என்மீது விழுந்தது கிடையாது. ஆனால் விகடனில் எழுதும் வாய்ப்புக்கிடைத்தால் அதை மறுத்து என் கன்னித்தன்மையைக் 'காப்பாற்றிக்கொள்ள' விரும்பவில்லை. அதில் எவ்வளவுதூரம் சமரசமற்று இருக்கிறோம் என்பதே முக்கியமென்று நம்புகிறேன்.

/ ஏனென்றால், அவைகளின் மேலான உங்களின் காழ்ப்பும் விரோதமும் சொல்லி மாளாதவை/

எனக்குத் தனிப்பட்டமுறையில் எந்தச் சிறுபத்திரிகைவாதிகளின் மீதும் காழ்ப்போ சண்டையோ கிடையாது. காசுகண்ணன் தான் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாரே தவிர அவருக்கு நான் அனுப்பவில்லை. எப்போதும் எழுத்திற்காக போலீஸ், நீதிமன்றம் மாதிரியான ஆளும் வர்க்க நிறுவனங்களுக்குக் காட்டிக்கொடுக்கும் வேலை செய்வதாயில்லை.

மேலும் விவாதத்தை நீட்டிக்க நானும் விரும்பவில்லை. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் என் கவனத்திற்குபட்ட இரண்டு விசயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1. உங்கள் பின்னூட்டம் முழுக்க 'நான்' துருத்தி நிற்கிறது.

2. நடுநிலை இதழ்கள் என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை middle magazine என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்கள் என்றால் 'இடைநிலை இதழ்கள்' என்பதே சரி. நடுநிலை என ஒன்று இருக்கவும் முடியாது. நடுநிலை இதழ்களும் கிடையாது.

Thekkikattan|தெகா said...

"எடிட்டிங்" என்ற பெயரில் முழுக் கட்டுரையுமே தன்னுடைய பத்திரிக்கைக்கு எப்படித் தேவையோ அப்படியாக்கிக் கொள்வதனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இது தமிழ்நதி கொஞ்சம் ட்டூ மச்தான், பரபரப்பு வியாபாரத்திற்கு நீங்கள் பலிகிடாயாகிப் போனது.

அடுத்த வார இதழில் தங்களின் விளக்க கட்டுரை வெளியாகுமென நம்புவோமாக!

ரா.நாகப்பன் said...

அன்பு தோழி,
வலைத்தளம் மூலம் சில நாட்களாக உங்களை தெரியும். ஆனந்த விகடனில் நேர்முகம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தேன். பிறகு ஒரு படைப்பாளியாய் வெட்கபடவும் செய்தேன். ஆனால், தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த மறுப்பு செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு பிரபலமான் வார இதழ் இப்படி நடந்து கொண்டதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி தப்பித்து கொள்ள விரும்பவில்லை. கேவலமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நிருபர் கேட்ட கேள்வியும் உங்களின் பதிலும் அதற்கான உங்களின் மறுப்பும் என்னதான் பிரசுரிக்க பட்டாலும் நடந்தது என்னவோ துக்கமான நிகழ்வு தான்.
விகடனில் ஒரு படைப்பு வர தவம் கிடக்கும் தமிழ் படைப்பாளிகள் கொஞ்சம் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே ஜெயமோகன் பிரச்சனை (திலகம் தொப்பி) ஓய்வதற்குள் தமிழ்நதி உங்களின் வருத்தம்....எதற்காக இப்படி தொடர் செய்திகளை வெளியிடுகிறது விகடன் என்று தான் புரியவில்லை. பரபரப்பிற்காக பாரம்பரியமிக்க ஒரு இதழ் இப்படி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது தான்.
ஒரு வானொலி தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் ஒரு படைப்பாளியாகவும் இருக்கிற நான் இந்த நிகழ்விற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்.
நிச்சயம் அந்த நிருபர் தவறை உணர்வார் என்றே தோன்றுகிறது.
தங்களின் இந்த வேதனை தீர காலம் துணை செய்யட்டும்....

ஈரமன்னின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.

TBCD said...

நீங்கள் என்று நீங்கள் நினைக்கும் நீங்கள்
நீங்களாகிய நீங்கள்
அவர் நினைத்து நீங்கள் என்ற மூன்று இருக்கிறதே..

இதில் அந்த மூன்றாவது கருத்து அச்சேறியிருக்கும்மோ... :)

சிண்டு முடிவதுப் போல் போட்டால் தானே அதிர அதிர தலைப்பு போடலாம்

தெரிந்தே தீக்குழிக்குள் இறங்குவது தான் இந்த பத்திரிக்கைப் பேட்டிகள்.

கேலிச் சித்திரம் வெளியிட்டமைக்கு, ஆசிரியர் தானே கூண்டில் ஏற்றப்பட்டார்.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.

இப்படி, மறுப்பறிவிப்பு, எத்தனையாவது என்ற கேள்வியின் விடை, அதன் தரத்தை சொல்லிவிடும்.

இந்த மறுப்பு, அந்த பத்திரிக்கைக்கு மீண்டும் ஒரு நல்ல விளம்பரம். நிறைய பேர் வாங்கி படிப்பாங்க.

நிறைய பேர், பேட்டிகளை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆதரப்பூர்வமாக சொல்லலாமே பிரச்சனைகள் வந்தால்.