8.07.2008

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே.
முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் சந்திப்பில் நிகழ்ந்ததுபோல – அரசுசாரா நிறுவனங்களின் புள்ளிவிபரங்களினையொத்த விமர்சனக்கட்டுரையன்று இது. ஆதலால் நேரடியாகவே விடயத்திற்குள் இறங்குகிறேன்.

புலிகள் புனிதர்கள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் எனக்கில்லை. ஆனால், ஈழம் குறித்த எந்தவொரு அரசியல் அறிவும் தெளிவும் அற்ற ஒருவர் பெண்கள் சந்திப்பிற்குச் சமூகமளித்திருப்பாரேயாகில் கீழ்க்காணும் முடிவுகளுடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கியிருப்பார்.
1.வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தங்கள் கருத்துக்களுடன் முரண்படுபவர்களைக் கொன்றுகுவிப்பதன்றி வேறெந்தப் பணிகளும் இல்லை.
2.இலங்கையில் நடந்துகொண்டிருப்பது சகோதரச் சண்டையன்றி இனப்பிரச்சனையல்ல.

3.புலிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் சிங்கள பௌத்த அரச அதிகாரத்தின் கீழ் வாழ்வது எளிது.

4.அரசியல், சமூக அறிவற்ற முட்டாள்களை போராட்டம் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

‘பெண்கள் சந்திப்பு’என்று இவ்வொன்றுகூடலுக்குப் பெயரிட்டதன் பொருத்தப்பாட்டினை என்னவென்பது?

இலங்கையிலிருந்து நிவேதா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, சுவிசிலிருந்து ‘ஊடறு’றஞ்சி,இலண்டனிலிருந்து நிர்மலா ராஜசிங்கம், அமெரிக்காவிலிருந்து மோனிக்கா, பிரான்சிலிருந்து தேவதாஸ், குறமகள், ஜானகி பாலகிருஷ்ணன், ஜோதி பிரபாகரன், சுதா குமாரசாமி, பார்வதி கந்தசாமி, விஜி, யுவனிதா நாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கங்களை வழங்கிய இக்கூட்டத்தின் ‘கட்டுப்பாட்டாளராக’த் தொழிற்பட்டவர் நிர்மலா ராஜசிங்கமே.

அரசியல் ‘ஞானம்’ பொருந்திய அறிவுஜீவியும்- பெண்ணிய ஆய்வாளரும்- தனது கருத்துக்களை வெளிப்படுத்துமளவிற்கு தமிழ் தகைமையுடைத்ததன்று என்ற கருத்தினாலோ என்னவோ அடிக்கடி மேட்டுக்குடி மொழியென நம்பப்படும் ஆங்கிலத்திற்குத் தாவிவிடுகிறவருமான நிர்மலாவின் ‘உரத்த’ குரல் பலருடைய கேள்விகளை விழுங்கிச் செரித்தது. ‘பேச்சுரிமை’, ‘கருத்துரிமை’, ‘வாழ்வுரிமை’ இன்னபிற புண்ணாக்குகளைப் பற்றி இத்தகையோர் பேசிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. நேர மட்டுறுத்தல் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென இக்கூட்டத்தை ஒழுங்கமைத்த சுமதி ரூபனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல அதை அவரே மறந்துவிட்டதாகத் தோன்றியது. குறிப்பாக நிர்மலா பேசியபோதெல்லாம் கடிகார முட்கள் அசையாது நின்றன. தனது சகோதரியின் கவிதைகளை ஆனந்தித்து வாசித்தபோதும், ஒரு நொடியில் பதில் சொல்லியிருக்கக்கூடிய ‘எத்தனையாம் ஆண்டு நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள்?’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்?” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யாரையா கவலைப்படப்போகிறார்கள்? நிர்மலாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்’என்ற பாணியிலேயே அவரது பதில்கள் அமைந்திருந்தன.

ஆகஸ்ட் 3ஆம் திகதிய அமர்வில் நிர்மலா தனது உரையை ஆரம்பித்த விதமே அலாதியானது. ‘இந்தச் சந்திப்பானது ஒருபக்கச்சார்பாகப் போய்க்கொண்டிருக்கிறது@ இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.

மேலும், புலிகள் பெண்களை அரசியல் ஞானமற்ற அறிவிலிகளாக, ஆயுதங்களாகப் பாவிக்கிறார்கள் என்பதையிட்டுக் கலங்குகிறார். ‘ஆண்களுக்கு நிகரான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டபோதிலும்’என்று மெச்சியதன் வழி நடுநிலை நகர்வொன்றினை மேற்கொண்டுவிட்டு தன் நோக்கத்திற்குத் திரும்புகிறார். புலிகளிடமிருந்து தப்பி அன்றேல் விலகி வந்த பெண்கள் சொல்லும் கதைகள் நெஞ்சை அதிரவைக்கும் தன்மையன என மிகவருந்தும் அவர், இத்தனை ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தின்போது, அத்தகைய தமிழ் பெண்களுக்கான ஒரு அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குத் தொண்டாற்றாமல் இருப்பது வியப்பினை அளிக்கிறது.

‘புலிகள் இயக்கத்தில் காதல், திருமணம் போன்றனவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இயல்பான உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன’ என்று அவர் ஆதங்கப்பட்டதைப் பார்த்தபோது, எண்பதுகளின் ஆரம்பப் பகுதியிலேயே அவரது ஞாபகம் நகராமல் உறைந்துகிடக்கிறதோ என்றெண்ணத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறை புலிகள் இயக்கத்தில் இருப்பதை அறிவுஜீவியும் பெண்ணியவாதியுமாகிய அவர் மட்டும் அறியாமற் போனது துரதிர்ஷ்டமே. இரண்டு தசாப்தங்களின் முன்னர் இருந்த இயக்கமில்லை அது என்பதை அவர் தெரிந்தே மறுக்கிறார். ‘உனக்காக நான் அழுகிறேன் பார்’என்ற போலிப் பெருந்தன்மையுடன் கூடிய மேட்டுக்குடி முதலைக் கண்ணீரில் வழுக்கிவிழுவது தொலைக்காட்சிகளில் ‘கோலங்கள்’போன்ற நெடுந்தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், பெண்களை முன்னிறுத்தி புலிகளைச் சாடுவதே அவரது நோக்கம் என்பது வெளிப்படை.

இயக்கத்திலிருந்து வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் இன்னமும் பொட்டையும் பூவையும் புடவையையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு பழமை பேணுவதாகச் சொன்னதைக் கேட்டபோது ‘என்னே அறிவு’என்று மெச்சத் தோன்றியது. ஆடைகள் ஒருவரின் மனதையும் ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன என்பதே பொதுப்புத்திசார் புண்ணாக்குத்தனந்தான். அவ்வாறெனில் பொட்டைத் துறந்து ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லோரும் அறிவானவர்கள் என்றல்லவா ஆகிறது? ஜீன்ஸ் அணிந்த, பொட்டு வைக்காத ‘அறிவுக்குஞ்சு’கள் எத்தனை பேரை நாம் நமது நாளாந்த வாழ்வில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து-பார்வையிலிருந்து புரிதல்கள் மாறுபடலாம். ஆனால், தவறான தகவல்கள் வெளியுலகிற்குச் சென்று சேரலாகாது. தவிர, கூட்டங்களுக்கியைபுற நோக்கங்கள் இருக்கலாமேயன்றி, நோக்கங்களுக்கேற்றபடி கூட்டங்களைத் திசைதிருப்பலாகாது. பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது.

பிரான்சிலிருந்து வந்து கலந்துகொண்ட தேவதாஸ் ‘தேசியப் போராட்டமும் சாதியமும்’என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வழங்கினார். அதன் சாராம்சமானது ‘தேசியப் போராட்டம் தலித்துகளை மேலும் பின்னடையச் செய்துவிட்டது’என்பதாக இருந்தது. அவர் தனது உரையை முடித்தபின் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஈழத்தில் நடக்கும் போராட்டம் தலித்துகளைப் மேலும் பின்னடையவே செய்கிறது என்பதை, வன்னியோடு தொடர்புடைய-அங்கு போய் வந்துகொண்டிருக்கிற- தமிழகத்து தலித் தலைவர்கள் அறிந்திருக்கவில்லையா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் “ஒன்றில் அவர்கள் ஈழத்தின் உண்மை நிலையை அறியாதிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள்.” இந்தப் பதிலுக்காக அவர் தனது முதுகில் ஒரு தடவை தானே தட்டிக்கொள்ள வேண்டும்.

வேறொருவர் தேவதாசைப் பார்த்து “நீங்கள் அங்கே இப்போது இருக்கும் நிலையைப் போய்ப் பார்த்தீர்களா? இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நான் அண்மையில் அங்கிருந்தவன்”என்று சொன்னார். அதற்கு அசரீரியாக ஒரு குரல் “அவர் போனால் திரும்பி வரமாட்டார்” என்றது. கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. சிறுபிள்ளைகளின் கூட்டத்தில் இருப்பதான ஒரு உணர்வு தோன்றியது. அப்படியானால், ‘போடப்பட்டவர்கள்’ எல்லோரும் வன்னிக்குப் போன இடத்தில் வைத்துத்தான் போடப்பட்டிருக்கிறார்கள் என்ற நகைச்சுவைத் துணுக்கிற்கு ஜோராக மீண்டும் ஒரு தடவை கைதட்டிக்கொள்ளலாம்.

23ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைவிட, அண்மைய காலங்களில் அங்கிருந்தவள் என்றவகையில் எனக்கு நிலைமைகள் தெரியும். கக்கூசுக்குப் போகும் பாதையையும் புலிகளின் துப்பாக்கிக்குழல் அடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பேய்க்கதைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனத் தெரியவில்லை.

இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய சுமதி ரூபன் தெரிந்து அல்லது தேர்ந்து அழைத்திருந்த பேச்சாளர்கள் மாற்றுக் குரல்களை முடக்க வல்லவர்கள். வலுவான குரல்கள் ஒலிக்கும் ஏனையவை தொண்டைக்குள் இறுக்கப்படும் என்பதை கையுயர்த்தியவர்களை கையமர்த்தியவர்கள் அறிவர். ‘பேசினால் கொல்கிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களுக்கு மற்றவர்களின் குரல்களையும் செவிமடுக்க வேண்டும் என்று தோன்றாமற் போனது ஏன்? ஆக, பேச்சுரிமை என்பது அவ்வவ்விடங்களின் அதிகாரமும் அபிமானமும் சார்ந்ததாகிறது.

பெண்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் என்னென்ன பிரேரணைகள் எடுத்தார்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் கற்றுக்கொண்டவை:

1.பொருந்தாத இடங்களில் பிரசன்னமாகாதிருத்தல்

2.பேசும் நேர மட்டுறுத்தல் என்பது ஆட்களையும் அவர்தம் அதிகார மற்றும் அவர்மீதான அபிமானத்தைப் பொறுத்தது

3.உரிமைகளைப் பேசுமிடங்களிலும் அசமத்துவம் நிலவும்.

4. ‘பெண்’என்ற தலைப்பின்கீழ் நீங்கள் ‘புலி’யைப் பற்றியோ ‘நரி’யைப் பற்றியோ பேசலாம்.

நண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.

29 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சுமதி ரூபன் என்றவர் பிரசன்னமாகியிருப்பார் என்றால், அவர் சந்திப்பில் முக்கிய பிரமுகர் என்றால் அந்த சந்திப்பில் புலியெதிர்ப்பு காய்ச்சல் தான் மிகுந்திருக்கும் என்பது வலைப்பதிவில் இருக்கும் குழந்தைகூட சொல்லுமே.

தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகள் நடனமாடினால் அவர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடுவார்கள் என்ற அரிய கண்டு பிடிப்பை செய்தவர் அல்லவா அவர்.

:) :)

அற்புதன் said...

தமிழ் நதி,
அய்ரோப்பாவில் அம்பலப் படுத்தப்பட்ட பெண்கள் சந்திப்பை இப்போது அங்கு அரங்கேற்றுகிறார்களா? இது தமிழ் நாட்டில் நடந்ததா அல்லது கனடாவில் நடந்ததா?
இவர்களைப் பற்றி உண்மையிலையே நீங்கள் அறியவில்லையா? பதிவர் நிவேதாவும் சென்றாரா?

இவர்களின் அரசியலை அறியாத உங்களை அரசியற் குழந்தைகளாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

தமிழ்நதி said...

வி.ஜெ., சுமதி ரூபன்மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. மேலும், தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் நான் கனடாவில் இல்லாதபடியால் நீங்கள் சொன்ன அந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் ஒரு கட்டுரை வாசிக்கும்படியாக அவரால் அழைக்கப்பட்டிருந்தேன். கட்டுரை வாசிப்பது எனக்கு உவப்பானதல்ல என்பதால் தமிழகத்திலுள்ள சில பெண் கவிஞர்களை -பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக - நேர்காணல் செய்து ஒளியிழை நாடாவாக எடுத்துச் சென்றிருந்தேன். அதன் ஒலி என் காலை வாரிவிட்டமையால் அக்கூட்டத்தின் கடைசி நிகழ்வாகவே அதை அரங்கேற்ற முடிந்தது. நேரப் பற்றாக்குறை காரணமாக மாலதி மைத்ரியின் நேர்காணலை மட்டுமே ஒளிபரப்ப முடிந்தது. அதுவும் நல்லதற்கே என்று இப்போது தோன்றுகிறது:) எனது பிரச்சனையெல்லாம் 'பெண்கள் சந்திப்பு'என்ற பெயரில் கூடி இவர்கள் பேசியதென்ன என்பதைக் குறித்ததே.

அற்புதன், கனடாவில், ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஆகஸ்ட் 1-3 வரை கூட்டமும், நான்காம் நாள் நாடகங்களும் இடம்பெற்றன. எனது மீள்திரும்புகையும் அக்கூட்டமும் ஒருசேர சந்தித்துக்கொண்டதனால் நான் அதில் இணைந்துகொண்டேன். இக்கூட்டத்தி்ல் கலந்துகொள்வதற்காக நான் கனடா திரும்பவில்லை.

ஆம். நிவேதாவும் வந்திருந்தார். "எங்களுடைய கடைசி நம்பிக்கை அவர்கள்தான் என்பதை மறுக்கமுடியுமா?"என்ற தொனியிலான கேள்வியை அவர் அக்கூட்டத்தில் நிர்மலாவிடம் கேட்டார். அதற்கு வழக்கமான மழுப்பலுடன்கூடிய பதில் அளிக்கப்பட்டது.

'அரசியற் குழந்தைகள்'... ம்... இருக்கலாம். அதனால்தான் இப்போது அழுதுகொண்டிருக்கிறோம்:)

வி. ஜெ. சந்திரன் said...

//வி.ஜெ., சுமதி ரூபன்மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை. மேலும், தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் நான் கனடாவில் இல்லாதபடியால் நீங்கள் சொன்ன அந்த விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. //

அவர் அந்த கட்டுரையை வலைப்பதிந்து 2- 2 1/2 வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். :)

சுமதி ரூபன் மீது எனக்கும் கூட தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. அவருடைய தனிபட்ட விருப்பு வெறுப்புகள் பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஆனால் அவரும் இன்னும் ஒரு சிலரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒரு சமூகத்தின் இருத்தல் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்படும் சமூகத்தை இன்னும் மேலும் பாதிக்க செய்யும் வகையில் செயற்படுவது தான் வருத்தம்.

மலைநாடான் said...

தமிழ்நதி!

ம்..என்னத்தைச் சொல்ல...இவர்களின் அரசியலை அறியாத உங்களை அரசியற் குழந்தைகளாகவே பார்க்க வேண்டி இருக்கிறது என அற்புதன் சொன்னதையே திருப்பிச் சொல்லலாம் போலுள்ளது.

சென்றவருடம் நடந்த பெண்கள் சந்திப்பின் பின் ஒரு கூத்து, தமிழ்மணத்தில் நடந்தது ஞாபகமில்லையா?

தோழர்களும் தோழிகளும் நல்ல நண்பர்களாக இருக்கலாம் ஆனால்....

தமிழ்நதி said...

வி.ஜெ. உண்மையில் நான் அந்தக் கட்டுரையை வாசித்திருக்கவில்லை. நான் அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பதை வைத்தே அக்கட்டுரையை எழுதினேன். அவரவர் பின்னணிகளுக்கிணங்க அவர்களைப் பார்க்கவில்லை என்பதை விளக்கவே சில வார்த்தைகளைப் பிரயோகித்தேன். அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

"அவரும் இன்னும் ஒரு சிலரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை ஒரு சமூகத்தின் இருத்தல் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்படும் சமூகத்தை இன்னும் மேலும் பாதிக்க செய்யும் வகையில் செயற்படுவது தான் வருத்தம்."

என்ற உங்கள் வரிகளுடன் முற்றுமுழுதாக உடன்படுகிறேன். இப்பதிவினை எழுதத் தூண்டியதே அவ்வருத்தந்தான்.

மலைநாடான்! நீங்கள் கட்டுரையின் கடைசி வரிகளை (நண்பர்களுக்கு என விளித்திருப்பது) தயவுசெய்து வாசிக்கவும்.
மேலும், 'தோழி'என்ற பதத்திற்கு ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறேன். 'அறிமுகம்'என்பதற்கும் 'தோழமை'என்பதற்கும் பாரிய இடைவெளி இருப்பதாகவே நினைக்கிறேன். புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

அற்புதன் said...

புலிக்கும் புல் பசிக்கிறது …….. : சபா நாவலன்

≡ Category: ::பெண்ணியம், சபா நாவலன் | ≅

(ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுவதாக நிர்மலா எழுதிய கட்டுரைக்குப் பதில்.)

விமானப் பணிப்பெண்ணிடம் முலைப்பால் கேட்ட ஞான சம்பபந்தப் பெண்ணிலை வாதிகளதும், கூட்டுக்கலவி என்ற குறளிக் கூத்திற்கும் எதிரான பெண்ணியம் தொடர்பான எனது கருத்துக்களை முதலாளித்துவ மேட்டுக்குடிப் பெண்ணியத்துடன் ஒப்பு நோக்கில் முன்வைத்த போதும், முலைப்பால் சமாச்சாரம் பற்றியோ கூட்டுக்கலவி பற்றியோ மூச்சுக்கூட விடாமல் ஆத்திர உணர்வோடு என்மீது கொட்டித்தீர்த்த்ருகிறீர்கள் நிர்மலா.

காதல் கொண்டாலும் நான் முலைப்பால் கேட்கும் அளவிற்கு ஆணாதிக்கக் கருத்தமைப்பைக் கொண்டிருப்பவனல்ல. சரி போகட்டும் 13 வயதுப் பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக ஒரு காமுகனின் நச்சுப் பேனாக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சுழலில் பெண்ணியத்தின் பிறழ்வுகள் பற்றிப் பேசிய எனது கட்டுரைக்கு அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அடிபோட்டிருக்கிறீர்கள். இந்த வக்கிரங்களை எல்லாம், ஆணாதிக்க அசிங்கங்களை எல்லாம்விட எனது குட்டிக் கட்டுரை உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டிருபது, நிர்மலா, உங்கள் சமூக உணர்வு மீதும், நீங்கள் பேசும் பெண்ணியம் மீதும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இவற்றை எல்லாம் நான் பேசமுற்படுகிற போது அது பெண்ணிய வெறுப்பாகவும் பெண் வெறுப்பாகவும் உங்களுக்குப் படுகிறதென்றால், நான் உங்களுக்காக அனுதாபப்படுவதை விட வேறென்ன செய்யலாம்? இதைத்தான்; நீங்கள் பெண்ணிய வாதிகள் மீது நான் அவதூறு செய்வதாகக் கருதினால், எனது அவதூறுக்காக நான் மட்டுமல்ல பெண் விடுத்லைக்காகப் போராடும் பெண்ணியவாதிகள் எல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

பெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றும் முதலாளித்துவ தந்திரத்திற்குப் பெண்ணியவாதம் துணை போவதாகவும் நான் திட்டி தீர்த்திருப்பதாக விசனப்பட்டுக்கொள்ளும் நீங்கள்; முதலாளித்துவ தந்திரம் கோட்பாடற்ற பெண்ணிய வாதத்தைத் தனது தேவைக்காக தனது ஆணாதிக்க வாத மனோனிலையின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்வதக நான் கூறவந்ததை தோசை புரட்டியது போல புரட்டிப்போட்டு புத்திஜீவித்தனமான பொய்யொன்றை வலையேற்றி உள்ளீர்கள். உங்கள் தமிழறிவைக்கண்டு மூக்கில் விரல் வைத்து வியந்துபோன எனக்கு நான் கூறவந்த சாதாரண பாமர வசனத் தொடரைப் புரிந்து கொள்ள முடியாமற் போனதென்னவோ ஏமாற்றமாகவே இருக்கிறது. இங்கு நான் திட்டித் தொலைக்கவந்ததோ முதலாளித்துவ ஆணாதிக்க வாதத்தை ஆனால் நீங்கள் குறி வைத்ததோ என்னை. இது உங்கள் தமிழறிவின் பற்றாக்குறையா, எனது எழுத்துக்களின் தரமின்மையா அல்லது முதலாளித்துவ ஆணாதிக்க வாதிகளில் உங்களுக்குள்ள விசுவாசமா என்பதில் எனது மூளைக்குள் குழப்பம் வந்து குந்தியிருந்து கொண்டு குடைகிறது.

இனி உங்கள் பால பாடத்தைப் பற்றி கைகட்டி வாய்பொத்தி வேண்டுமானல் முட்டுக்காலில் நின்றுகூடப் பேசிக்கொள்வோம். தமிழ்ப் பெண்ணியத்தின் உத்தியோக பூர்வ அறிவுஜீவியான நீங்கள் கற்றுதரும் பால பாடத்திற்குள் புகுந்து கொள்ளும் முன்னர் இந்த அடக்கமான மாணவனுக்கு ஒரு சந்தேகம்.

நீங்கள் சொல்லித்தர முயலும் பால பாடத்தைத் எனது கட்டுரையில் நான் தந்திரமாகத் தவிர்த்திருப்பதாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தந்திரமாகத் தவிர்பதென்றால் தெரிந்திருந்தும் திட்டமிட்டு மறைத்திருப்பதாகவே பொருள்படும். ஆனால் சற்றுப் பின்னதாக இவைபற்றி நான் திட்டமிட்டு மறைக்கவில்லை மாறாக என்னிடம் எந்த அறிவும் கிடையாது என்று நீங்களே உங்களோடு முரண்பட்டுக் கொள்கிறீர்கள்.

முரண்பாடுகளுடனேயே ஆரம்பிக்கும் பால பாடம் சுவாரஷ்யமானதாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் ஏமாற்றம்தான் மிச்சம்.

உங்கள் முதலாவது பால பாடம் சொல்வதெல்லம் இதுதான் ‘முதலாளித்துவ சமூக ஆரம்பத்திற்கு முன்னரே வரலாறு தெரிந்த காலத்திலிருந்து பெண்கள் பாலியல் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வருகிறார்கள். ஆண்களே பெண் அடக்குமுறையின் பிரதான இயக்கிகளாகச் சமூக கட்டமைப்பில் பங்கேற்றுகிறார்கள்.’. நிர்மலா நான் எழுதிய கட்டுரையை நீங்கள் வாசித்தீர்களா அல்லது செவிவழியாகத் தான் கேள்விப்படீர்கள? சரி விடுங்கள்.

உங்களைப் போறுத்தவரை வரலாறு தெரிந்த காலம் முதல் தான் பெண் ஒடுக்கப்படுகிறாள். நான் எனது கட்டுரையில் பெணொடுக்குமுறை என்பது வரலாற்றிகு முற்பட்ட காலப் பகுதியில் இருந்தே ஆரம்பமானதாகப் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறேன். வரலாறு தொடர்பான இவ்வகையான பார்வை என்பதை மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் மறுப்பது இது முதல் தடவையல்ல. இதோ எனது கட்டுரையில் இருந்து இது தொடர்பான பகுதிகளில் ஒன்று.

‘பெண் கணவனைத் தவிர இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால் வாரிசை அடையாளப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்ற நிலையில், மனிதகுல வரலாற்றில் பெண்கள் மீதான முதலாவது அடக்குமுறையானது பாலியல் அடக்குமுறையாக உருவாகிறது. இந்த அடக்குமுறைக் கருத்தைச் சுற்றி சமூக ஒழுக்கங்கள் உருவாகின்றன. சமூகம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக மாறிப் போகிறது. தாய்வழிச் சமுதாயத்தின் அழிவில் உருவான இந்தத் தந்தைவழி ஆணாதிக்க சமூகமானது, பெண்கள் மீதான சமூக அடக்குமுறையை சமூக ஒழுக்கமாக்கி இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.’

நிர்மலா, ஏனிந்தத் திரிபு? பால பாடம் என்றால் நீங்கள் பால்குடியாக மாறி அடம்பிடிப்பதோ? இவ்வாறான குழந்தைப் பிள்ளைத்தனமான திரிபுகளெல்லாம் உங்களைப் போல வளர்ந்த அறிவுஜீவிகளுக்கு அழகானதல்ல.

சரி இபோது பால பாடம் இலக்கம் இரண்டைப் பார்ப்போம். ‘’இவ்வகையான அடக்குமுறை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரத்தியேகமாகக் காணப்பபடுவதில்லை. மாறாகத் தமிழ் சமூகம் உட்பட மற்றைய சமூக அமைப்புகளிலும் இது ஊறிக்கிடக்கிறது.’’ என்று பொறுப்புள்ள பாலர் வகுப்பு ஆசிரியர் போல ஆதங்கப் படுகிறீர்கள்.

முதலாவது பால பாடத்திலேயே நான் உங்கள் சிறுபிளளைத்தனத்திற்குச் சொன்ன பதிலில் இரண்டாவதிற்கும் பதில் அடங்கியுள்ளது. ஆதிமனிதர்கள் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாகக் குடியேறிய நாளிலிருந்தே பெண்ணடக்குமுறைச் சமூக அமைப்பு ஆரம்பித்து விட்டதாக எனது கட்டுரையில் வரிக்குவரி சொல்லியிருப்பதை இனியாவது படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் வசதிக்காக இதோ எனது கட்டுரையிலிருந்து சிறுபகுதி: ‘’இந்தச் சமூகவொழுக்கமென்பது சமூகத்தின் வெள்வேறு சமூகப் பிரிவுகளுக்கேற்ப அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலைகளிற்கேற்ப மாறுபடினும் பெண்களுக்கு எதிரான பொதுவான ஒடுக்குமுறையாக பாலியல் ஒடுக்குமுறை காணப்படுகிறது.’’

இரண்டு பால பாடங்களிலும் எனக்கு பாஸ் போடப்படுகிறதோ இல்லையோ நீங்கள் வகுப்பேற்றப்படவில்லை. இந்த இரண்டு விடையங்களையும் நான் தந்திரமாகவோ அல்லது தெரியாமலோ மறைக்கவில்லை என்பது உங்களுக்குப் புரியாவிட்டாலும் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.

மேற்கத்திய சமூகத்தின் ‘பாலியல் சமூக சீரழிவை’ சதா சிந்தித்து ஏதோ ஒரு மன வெப்பியாரத்தில் சஞ்சரிக்கின்றனர் நாவலன் போன்றோர். என்று நீங்கள் குறிப்பிடும்போது எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. இனிமேல் எங்காவது சீரழிவு நடந்தால் மூச்சுக்காட்டாமல் கப்சிப் என்று அடங்கிப் போய்விடச் சொல்லி ஆணையிடுகிறீர்களா? முடியாது நிர்மலா! சமுதாயத்தைச் சீரழிவைத் தட்டிக்கேட்க முயன்ற ஒரே காரணத்திற்காக அன்னிய தேசத்தில் அகதியாக முளைத்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் தேசிய இனம் பேரினவாத அடக்குமுறைக்குப் பலியானபோது போர்க்குரலை உயர்த்திய ஆயிரக்கணக்கனவர்களில் நானும் ஒருவன். எனது முற்றத்திலேயே ஜனனாயகம் மறுக்கப்பட்ட போது தெருவுக்கு வந்து, திமிரோடு எதிர்த்த நூற்றுக்கணகானவர்களில் நானும் ஒருவன். சாதிரீதியாக எனது சுற்றம் தாழ்த்தப்பட்ட போது அவர்களின் துயருக்கு அரசியல் சொன்ன பலருள் நானும் ஒருவன். இயக்கங்கள் பெண்களமைப்புக்களை வைத்திருப்பது பெண் விடுதலையாகாது, பெண்கள் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் தலைமையில் பெண்களாமைப்பை உருவாக்கிய சிலருள் நானும் ஒருவன்.

நிர்மலா நீங்கள் ஆணையிட்டே பழக்கப்பட்டவர்கள் அதற்காக மற்றவர்கள் அடங்கிப் போவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.

ஒரே பல்லவியைத்தான் எனது கட்டுரையில் கோபம் கொண்டது போல நடிக்கும் நீங்கள் கட்டுடைப்பிற்க்கு வருவதாகக் கூறும் கட்டம் வரை கலர் கலராகப் பேசுகிறீர்கள்.

‘தமிழ் பெண்ணிய செயற்பாட்டாளர்களிடம் இவர் போன்றவர்களுக்கு இருக்கும் அச்சம் தமது ஆணதிகாரத்தை இழந்துவிடுவோமோ எனும் கிலி போன்ற காரணிகளே இவரது வசவுத்தனமும் வம்புத்தனமும் சிந்திய அரைவேக்காட்டு கட்டுரையின் அடிப்படைகள். இதுவே ஒரு வெற்று ஆய்வாக வெளிவந்திருக்கிறது.’ என்றேல்லாம் மொத்தப் பிரம்புடன் நின்று பாலர் வகுப்பு வாத்தியார் மிரட்டுவது போல் மிரட்டுகிறீர்கள்.

பாலியல் புரட்சி!
ஏங்கல்சைப் பற்றிப் பேசும் நீங்கள் உங்கள் பாலியற் புரட்சி தொடர்பான பார்வையையே மார்க்சிய மறுப்பிலிருந்து தான் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் குழம்பிப் போயுள்ளீர்களா அல்லது குழப்பமே நீங்கள் தானா என்பது தொடர்பான ஆய்வுகளுக்கெல்லம் வரு முன்னர், உங்கள் பாலர் பாடசாலைக்கு வெளியேவந்து சற்று பெரியாள் தனமாகப் பேசுவோம்.

இங்கு நீங்கள் சுற்றி வளைத்துப் பேசுவதெல்லாம்
1. பாலியற் சுதந்திரமும் அதற்கான போராட்டத்தில் பெண்களின் சுதந்திரமும் ஒன்றல்ல.
2. பாலியற் புரட்சி பெண்களால் முன்னெடுக்கப்படவில்லை.
3. பாலியற் சுதந்திரம் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை என்று 70 களின் ஐரோப்பியப் பெண்கள் பேசினார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.
இவற்றினுடனெல்லாம் பிற்பகுதியில் உங்களுடன் நீங்களே முரண்பட்டுக் கொள்கிறீர்கள் என்பதையெல்லம் இறுதிப் பகுதிக்கு சமர்ப்பித்திவிட்டு இப்போது உங்கள் ஐரோப்பியப் பெண்ணியத்தின் நியாயத்திற்கு வருவோம்.

நீங்கள் குறிப்பிடும், ஐரோப்பியப் பெண்ணியத்தின் இரண்டாவது அலைக்காலம் அல்லது நவ-பெண்ணியம் என்பது 1960 களில் ஆரம்பித்து 1980 களின் நடுப்பகுதி வரைக்குமான காலகட்டம் என்பதே பொதுவாக சமூகவியலாளர்கள் வரையறுப்பர்.

அமெரிக்கப் பெண்ணியப் போராட்டங்களை விட பிரஞ்சுப் பெண்ணியப் போராட்டங்கள் ஐரோப்பாவில் பொது இயல்பானதாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்ததாலும் அதன் உதாரணத்தை ஆராய்வோம்.

1968ம் ஆண்டில் நடைபெற்ற பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் அதன் சி.எவ்.ரி தொழிற் சங்கத்தாலும் தலைமை தாங்கப்பட்ட பொது வேலை நிறுத்தத்தின் பின்னதான நிகழ்வுகளின் தொடர்ச்சியான சிந்தனை மாற்றங்களின் ஒரு பகுதியாகவே பெண்களின் போராட்ட இயக்கங்கள் பிரான்ஸ் முழுவதும் உருவாகின. பொதுவேலை நிறுத்தக் காலகட்டத்தில் பெண்களைச் சமையலுக்கும் தட்டச்சு வேலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தியதனை எதிர்த்து சிறிது சிறிதாக உருவான பெண்ணமைப்புக்களின் தொடர்ச்சியான எழுச்சியே பிரஞ்சுப் பெண்ணியத்தின் இரண்டாவது அலை என மொனிக் ரெமி தனது ‘ஹிஸ்துவார் தே மூவ்மென் து வ்பம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். பிரான்சுவார், லூ மொந் போன்ற பிரபல வலதுப் பத்திரிகைகளின் முதற் பக்கங்களைகூட நிரப்பிக் கொண்ட பெண்ணியப் போராட்டங்கள் எம்.எல்.எவ் என்ற அமைப்புக்குக் கீழ் ஒருங்கிணைந்து நாடு தழுவிய பெண்ணியக்கமாக வலுவடைந்தது. எம்.எல்.எவ் நடத்திய மிகப் பிரபலமான போராட்டமாக வைகாசி 1972 இல் மூயுத்துவாலிதே இல் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டம் கருதப்படுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து முழுக்க முழுக்க பெண்களாலேயே தலைமை தாங்கபட்ட இந்தப் போராட்டம் 70 களுக்குப் பின் பிரஞ்சுப் பெண்ணியப் போராட்டங்களின் முதல் வெற்றியாகும்.

எம்.எல்.எப் இல் மூன்று வேறுபட்ட போக்குகள் தெளிவாக பெண்ணிய வாதிகளாலும் சமூகவியலாளர்களாலும் முன் வைக்கப்படுகின்றன.

http://thesamnet.co.uk/?p=686

sathiri said...

பிரான்சில் பெண்கள் சந்திப்பு நடக்கமன்னரேயே அது பெண்கள் சந்திப்பு அல்ல புலியெரிர்ப்புத்தான் என்று அதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியும் அது நடந்து முடிந்த பின்னர் அடுத்த வருடம் சுமதிறூபன் ஏற்பாட்டில் கனடாவில் நடக்க இருக்கிறதுஇங்கும் இதுதான் நடக்கும் என்றும் எழுதியிருந்தேன் தமிழ் மணத்தில் படிக்கவில்லையா?? தமிழ்நதி. நிர்மலா . ராஜேஸ்வரி.தேவதாசன் .சுமதிறூபன் போன்றவர்கள் என்றாலே இலங்கையரசின் கச்சேரிகளிற்கு தாளம் போடுபவர்கள் என்று உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தெரிந்த விடயம் உங்களிற்கு தெரியாமல் போய்.. நீங்கள் அங்கை போய்... இதை எழுதப்போய்... இப்ப எல்லாமே போய்.... என்னத்தை போய்.....உலகம் தெரியாத ஆள் எண்டு சொல்லுறதா அல்லது உங்களிற்கும் மைக்(ஒலிவாங்கி) கிடைக்கும் எண்டதும்ஓடிப்போனனீங்களா எண்டு தெரியேல்லை

தமிழ்நதி said...

சாத்திரி,நான்தான் அவர்களை முற்றுமுழுதாக அறியாமல் போய் (உங்கள் கட்டுரையை தமிழ்மணத்தில் வாசிக்கவில்லை)அடிவாங்கினேன் என்றால், நீங்களும் என்னை அறியாதிருக்கிறீர்கள். ஒலிவாங்கிக்கு ஆசைப்படும் அளவிற்கு நான் தரம்தாழ்ந்தவளல்ல, எனக்கென சில அறங்கள் உண்டென்பதை நீங்கள் என் பக்கத்தைத் தொடர்ந்து வாசித்திருந்தால் அறிந்திருக்கக்கூடும்.

தவிர,'உனக்கு இது வேணும். உனக்கு இன்னும் வேணும்'என்பதான வார்த்தைப் பிரயோகங்களை வீழ்ந்து கிடப்பவர்களைப் பார்த்து வீசுவதும் முறையல்ல.

Anonymous said...

மீரா பாரதியும் புலிக்காய்ச்சலையிட்டு புழுங்கிறார்.
தேவதாஸ் பெண்ணா? பெயரைப் பார்க்க ஆண்போலுள்ளதே. இவர் எப்படி பெண்கள் சந்திப்புக்கு வந்தார்?

தேசியவாதமும் பெண்ணியமும்’ என்ற தலைப்பிலா நிர்மலா பேசினார்.
பின்காலனித்துவமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பேசுவதாக பெண்கள் சந்திப்பு அறிவிப்பில் இருந்தது?

ஜெனி

Anonymous said...

தமிழ்நதி,
மாற்றுக்கருத்து,மாற்றுக்கருத்து என்பவர்களே தமக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களின் தொண்டைக்குழியை நசிப்பவர்களாக இருக்கிறார்கள். கூட்டத்தில் பார்த்தீர்களா? கருத்துச்சொல்ல வந்த எத்தனை பேரை பேசவே விடவில்லையென்று.
/அவர்களுடைய பின்புலம் அவர்களாலேயே கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது/ என்பதுதான் சரியானது.


போன பெண்கள் சந்திப்பில் பெண்ணியத்தின் வகைகள் – சோசலிச பெண்ணியம், மிதவாத பெண்ணியம், தீவிரவாத பெண்ணியம் என்று அடிப்படை வகுப்பு எடுத்ததாக தகவல். நிர்மலா 1990கள் உடன் தமிழ்ச்சமூகம் (பெண்ணிய அரசியலில்) உறைந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். நிலமை அப்படியல்ல என்பதை வெளிநாட்டு தமிழ்ப் பெண்ணியர்கள் யாராவது சொல்லக் கூடாதோ? இப்படிப்பார்க்கும் போது நிலுபர் டி மெல், சித்திரா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன், கமலினி, நதிரா, குமாரி ஜெயவர்தனா, சுமதி ராஜசிங்கம் போன்றவர்கள் சில நல்ல கட்டுரைகளாவது எழுதியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ரசிக்கா சுகனிடம் கேட்டிருக்கிறார்.
/நிர்மலாவை ‘தமிழ்ச் சூழலில் பெண்ணிய அரசியற் கோட்பாடுகளில் சிந்தனைத் தூண்டல்களையும் விவாதங்களையும் நீண்டகாலமாக நிகழ்துபவரும்’ என்று அறிமுகஞ்செய்றியள் எத்தனை பெண்ணிய கட்டுரைகள் உவ வெளியிட்டவ, என்ன பெண்ணிய அரசியற் கோட்பாடுகள தமிழில் முன்னெடுத்தவ (ஜீன்ஸ் போட்டது ஒரே ஓரு உதாரணந்தான்) என்ன பெண்ணிய விவாதங்களில் ஈடுபட்டவ என்று சொல்லுங்கோ சுகன்.
ரசிகா/
லிங்க் http://www.satiyakadatasi.com/archives/175. சுகன் மூச். (சுகன் காணேல்லை விளம்பரம் வருமோ!)


/நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்./ அப்படிப் பேசினால் மட்டுமே இவர்கள் பிழைத்திருக்கலாம். அரசியல்வாதிகளோடு பத்திரிகையாளர் நடத்தும் பேட்டிகளை நீங்கள் கேட்கவில்லையா?


ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். I want that எச்சுப்பீரியன்ஸ், this எச்சுப்பீரியஸ் என்று ஆளாளுக்கு அலைகிறார்கள். உங்களுக்கு கிடைத்த பிரீ எச்சுப்பீரியன்ஸை வைத்திருந்தால் யாழ்ப்பாணத்தில் மாமர நிழலுக்குள் இருந்து பிற்காலத்தில் கதை சொல்லலாம்:-)
சுதா

Ayyanar Viswanath said...

france ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..

மு. மயூரன் said...

இதற்குச்சமமான பல அனுபவஙளை இங்கேயும் "அறிவு ஜீவி மேட்டுச்சாதியினர்" கூடிகதைக்கும் இடங்களில் பெற்றுத்தொலைத்திருக்கிறேன்.

தகவல்களுக்கு நன்றி.

நீங்கள் போயிருக்கக்கூடாது என்றவாறு என்னால் சொல்ல முடியவில்லை. போவதில் ஒன்றுமில்லை.

நிவேதா போன்றவர்கள் இத்தகைய சாக்கடை அரசியலின் பிரதிநிதிகளும் இல்லை. ஆனால் இளம் சமூக அக்கறையாளர்களான அவர்கள் பயன்படுத்தப்படுவதுதான் கவலை.

தமிழ்நதி said...

ஜெனிற்றா,முதல் இரண்டு நாட்கள் பெண்கள் மட்டும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்தது. மூன்றாவது நாள் ஆண்களும் அனுமதிக்கப்பட்டார்கள். தேவதாஸ் ஆண்தான். பிரான்சிலிருந்துதான் வந்திருந்தார்.

நிர்மலா முதல்நாள் பேசியது 'பின்காலனித்துவமும் பெண்ணியமும்' என்ற தலைப்பில். பிறகு பேசியது 'தேசியவாதமும் பெண்ணியமும்'என்ற தலைப்பில். எல்லாவிதமான பெண்ணியங்களையும் தெரிந்துவைத்திருக்கும் ஒருவரைத்தானே பேச அழைக்க முடியும்!!!!!!!

சுதா! நீஙகள் அந்த சுதாவா? கூட்டத்திற்கு நீங்களும் வந்திருந்தீர்கள் போல...:)

'எச்சுப்பீரியன்ஸ்'எடுக்கப் போனபடியால்தானே இப்படியொரு பிச்சுப்பிடுங்கல் வெளியில் வந்திருக்கிறது. இனியும் போவேன் என்றுதான் நினைக்கிறேன். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாமர நிழலில் இருந்து கதைக்கமாட்டேன். எனக்கு வேப்பமரம்தான் பிடிக்கும். இல்லையென்றால் புளியமரம்-அதில்தான் பேய்கள் இருக்கும் என்றபடியால்.

அய்யனார்,அந்தப் பிரமுகருக்கு 'விசா'கிடைக்கவில்லையென்பதால் வரவில்லை என்று சொன்னார்கள்:)

தகவல்: இந்தப் பதிவு 'ஒரு பேப்பர்'இல் வருகிறது.

sukan said...

தமிழ் நதி யின் விமர்சனம் நேர்மையானதாக இருக்கின்றது.

இவ்வாறான சந்திப்புகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தலைப்புகள் பெண்ணியம் தலித்தியம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் நோக்கமும் பினாத்தலும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. மருந்தில்லாத இந்த வியாதியாளர்களிடம் இருந்து விலகியிருப்பது ஆரோக்கியமானது.

ஸ்வாதி said...

புலி எதிர்ப்பாளர்கள் தைரியமாக புலி எதிர்ப்புப் பிரச்சாரம் என்று சொல்லி சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாமே? ஏன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. பெண்ணியத்தின் முக்கிய அம்சமான பேச்சுரிமை அங்கு மறுதலிக்கப்பட்டிருப்பின் அங்கு ஒரு பக்க சார்பான பிரச்சாரம் மட்டுமே நடந்திருக்கிறது. கருத்துப் பரிமாறலில் சமத்துவமும் , விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அல்லது எதிர் கருத்துகளை செவிமடுப்பதில்லை என்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட செவிட்டுத் தன்மையும் கொண்டவர்களால் புனையப்படும் பேய் (காட்டுக்) கதைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. ஈழத்தில் இலங்கை - இந்திய இராணுவங்களினால் வயது வித்தியாசமில்லாமல் கற்பழிக்கப்பட்ட பெண்களின் மானத்துக்கும், அனாதைகளாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் ஈடு காட்டக் கூடியவர்கள் மட்டுமே போராட்டத்தைப் பற்றியும், போராளிகளைப் பற்றியும் பேச வரவேண்டும். வேலிக்கு வெளியில் நின்று கொண்டு விடுப்புப் பார்ப்பவர்களுக்கு விமர்சனம் செய்ய தகுதியில்லை. தரமான நடுநிலையான பதிவுக்கு நன்றி! பாவம் தமிழ் நதி தன்னுடைய வாழ்கையின் 4 நாட்களுக்கான நேரத்தை வீணலுக்கு விரயமாக்கிவிட்டார் என்பதில் எனக்கு வருத்தமே.!

அற்புதன் said...

நதி,

போவதும் போகாமல் விடுவதும் உங்கள் உரிமை என்பதற்கு அப்பால் எனது கருத்தைச் சொல்ல விழைகிறேன்.மயூரன் எழுதியதைப் போல் போனால் ஒன்றும் ஆகி விடாது என்பது தவறானது.உங்களைப் போன்றவர்கள் போவதால் இவர்களுக்கு ஒரு அங்கீகாராம் கிடைக்கிறது. நீங்கள் போய்ப் பங்கு பற்றுவதன் மூலம் அவர்களின் மோசடி அரசியலுக்கும் அவர்கள் பெண்ணியம் என்னும் லேபிளில் நடத்தும் புலி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களின் கையில் நிகழ்ச்சி நிரலும் மட்டுறுத்தலும் இருக்கும் வரையில் உங்கள் கருதுக்களை உங்களால் எவ்வாறு அங்கு சொல்ல முடியும்?

ஏன் உங்களைப் போன்றவர்களால் ஒரு பெண்ணிய ஒன்று கூடலை நடாத்த முடியாது? ஏன் நீங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணிய அமைப்பாக இயங்க முடியாது? புலத்தில் பெண்களின் பிரச்சினைகள் பற்றி களத்தில் பெண்களின் நிலை பற்றிப் பேச முடியாது? உங்களுக்கான அரசியலையும் களத்தையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.

சமூகப் பிரஞ்சை உள்ள நீங்கள் அவ்வாறு இயங்குவதும் இயங்காது விடுவதும் உங்களின் சுய தேர்வு என்பதைக் கருத்தில் கொள்ளும் அதே வேளை, நீங்களோ நிவேதாவோ சாக்கடைகளின் அரசியலில் கலக்க வேண்டியதில்லை, உங்களுக்கான அரசியற் தளத்தை உருவாக்க வல்ல ஆளுமையும் மன உறுதியும் உங்கள் இருவரிடமும் இருக்கிறது.இவை உங்கள் எழுதுக்களை வாசித்தன் மூலம் நான் பெற்ற உணர்வு மட்டுமே.:-)

கறுப்பி said...

வி.ஜெ. சந்திரன்

//சுமதி ரூபன் என்றவர் பிரசன்னமாகியிருப்பார் என்றால், அவர் சந்திப்பில் முக்கிய பிரமுகர் என்றால் அந்த சந்திப்பில் புலியெதிர்ப்பு காய்ச்சல் தான் மிகுந்திருக்கும் என்பது வலைப்பதிவில் இருக்கும் குழந்தைகூட சொல்லுமே.

தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகள் நடனமாடினால் அவர்கள் வன்முறையாளர்களாக மாறிவிடுவார்கள் என்ற அரிய கண்டு பிடிப்பை செய்தவர் அல்லவா அவர்.\\

மிகப் பெரிய கண்டு பிடிப்பு. தாங்கள் எங்கு வசிக்கின்றீர்கள் என்பதை யான் அறியேன். நிற்க நான் கனடாவில் வசிப்பவள். விளையாட்டாக துவக்கு என்று எழுதியதற்கான அச்சிறுவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துக் கதைத்தார் பாடசாலை அதிபர். கனடாவில் வன்முறை இப்படியாகக் கண்டிக்கப்படுகின்றது. தமிழ் திரைப்படங்கள் தரப்படுத்தப்படுவதில்லை. அனைத்து வன்முறைத் திரைப்படங்களையும் எம் சிறுவர்கள் பார்க்கின்றார்கள். மாவீரர் காலங்களில் துவக்கு ஏந்தி மேடையில் தமது குழந்தைகள் நடனமாடுவதை பெற்றோர் பெருமையாகக் கொள்கின்றார்கள். இது ஒன்றையும் கனேடிய அரசு அறியாது. இதை எப்போது எங்கோ நான் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் தாங்கள் ஞாபகம் வைத்துக் குழந்தைகள் துவக்குப் பாடலுக்கும் துவக்குத் தூக்கி நடனமாடுவதும் தவறு எனும் என் கருத்தை சுளுவாக இதற்குள் அமுக்கிவிட்டீர்கள். பலே கெட்டிக்காறர் தாங்கள்.

சாத்திரி,
//நிர்மலா . ராஜேஸ்வரி.தேவதாசன் .சுமதிறூபன் போன்றவர்கள் என்றாலே இலங்கையரசின் கச்சேரிகளிற்கு தாளம் போடுபவர்கள் என்று உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தெரிந்த விடயம் உங்களிற்கு தெரியாமல் போய்\\

மின்தளம் கிடைத்துவிட்டது எதையும் எழுதித்தள்ளலாம் என்ற நினைப்பில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவது நாகரீகமற்றது. மனித உரிமை மீறல்கள் குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை கண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் என்னை அரசு சார்பென்று எழுந்தமானத்திற்கு விமர்சிக்காதீர்கள். உம்மை எனக்குத் தெரியாது. உமக்கும் என்னைத் தெரியாது. தெரிந்தவர்களை வேண்டுமானால் விமர்சியும், சும்மா பிறருடைய கவனத்தைப் பெறுவதற்காகச் சின்னத்தனமாகக் கருத்துத் தளத்தில் கொட்டி வைக்க வேண்டாம்.

மயூறன், ஸ்வாதி, நர்மாதா, அற்புதன்

தமிழ்நதி அனைத்து ஆய்வுகளையும் மூடி மறைத்து, தனக்குப் பிடிக்காத ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். இது ஒரு பெண்ணே பெண்கள் மீதான வன்முறையை கொண்டாடிக் கொச்சைப்படுத்துகின்றாரோ என்று என்னை எண்ண வைக்கின்றது. தாங்களும் பெண்கள் சந்திப்பில் வேறு என்ன ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன என்று கேட்காமல் ஒரே முடிவிற்கு வந்து விட்டீர்கள். நன்றாக இருக்கின்றது ஜனநாயகம்.

King... said...

அய்யனார் said...
\\\
france ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..
\\\\


:)

King... said...

நான் சின்னப்பெடியன்...
இதுல கதைக்கிறக்கு ஒன்றுமில்லை என்பதைக்குறிக்கிறது என்னுடைய உணர்வுக்குறிப்புகள்...

King... said...

\\\
நண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.
\\\
?!

வல்வை சகாறா said...

]தமிழ்நதி,
எங்கள் இனமே ஒரு இனவாத அரசின் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடந்து,
வாழ்க்கைக்காகத் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,
புலம் பெயர் தேசங்களில் வந்து எங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவுடன்
தாயகமக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வுபற்றித் தெரிந்த விடயந்தானே,
ஆதலால்,
நாம் பெண்களுக்கு எதிரான இனவாத அரசபடைகளின் வன்முறைகளைப்பேசாது,
பெண்களுக்கெதிரான மற்றைய வன்முறைகளைப் பேசுவோம் என்று
கண்ணெதிரே ஒவ்வொரு மணித்துளியும் தமிழீழப்பகுதியில்,
இனவாத அரசின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுக்காது விட்டுவிட
நாங்கள் ஒன்றும் புண்ணாக்குத் தின்னிகள் அல்ல,
மனிதர்கள் அதிலும் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் உயிர்ச்சிதறல்கள்.

மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்
சிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்
மார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்
மானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க!!!
எங்களுக்கு அவசியம் இல்லை.

ஒருவேளை,
பெண்ணியம் என்பதற்கு எமக்கு அர்த்தம் தெரியாமல் உள்ளது என்று எவரேனும் நினைக்கக் கூடும்.
நினைத்தாலும் எம்போன்றவர்கள் கவலைப் படப்போவதில்லை.
வேதங்களை ஓதிக் கொண்டு வீதியிலே அம்மனை அம்மணமாக விடுவதற்கு
நாங்கள் நாகரீமற்ற காட்டுமிராண்டிகள் அல்ல.

பேச்சளவில் மாநாடு வைத்து ஒப்புக்குக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவிட்டு,
அக்கையும், தங்கையும் பக்கத்துவீட்டுப் படித்த தோழியும்
எம்நாட்டில் இனவாத சிங்கள இராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை அல்லாடி அல்லாடி
வாழ்க்கைச்சுழலில் மாய்வதைத் தடுக்கக் காப்புச் சுவர்களாய் எழுவதே எங்களுக்கானதான இன்றையநிலை.

எம் வீட்டில் சாவு.... எதிர் வீட்டில் போய் நிர்வாணக்கூத்துப் பார்க்க எம்மால் முடியாது.

இனம், மொழி, நாடு என்று அத்தனையையும் அப்பால் தள்ளிவிட்டு,
அம்மணமாய் திரிவதற்கு நாங்கள் நிர்வாணிகள் அல்ல.

விடுதலைப்புலிகள் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஏதோ ஒருசில வேதாளங்கள்
27பேர் உள்ள அவையில் கூக்குரலிடலாம்.
வேதாளங்களுக்கு முருங்கைகளைத் தவிர வேறென்ன தெரியும்?

விடுதலைப் புலிகளின் தாயகப் போராட்டமே,
நீண்ட காலமாக அடுப்படியில் நெருப்பிற்குள் தீய்ந்தும்,
படுக்கையறையில் ஆணியத் திமிருக்குள் மிதியுண்டும் கிடந்த பெண்களை
வெளியே தலைநிமிர்த்தி ஆண்களுக்கும் ஆணையிடும் ஆளுமையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது
என்பது இந்த உலகமே அறிந்த உண்மை.

இந்நிமிர்வைப் பற்றி அறியாத அல்லது
அறியவில்லை என்று அடம் பிடிக்கும் சிலரின் ஊனக்கண்களை என்ன என்பது?
கட்டுரைகளை எழுதத் தெரியும் என்பதற்காக யதார்த்தங்களை மூடி மறைத்து
தத்தமக்குச் சாதகமாக எழுத நினைத்தலே அவர்களை அடையாளங்காட்டும் கண்ணாடி என்பதே உண்மை.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் 'தலித்" அண்மைக் காலங்களில் எம்ஈழத்து மாற்றுக் கருத்தாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.
இவர்கள் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?
இந்தியாவில் உள்ளது போன்று எம் ஈழத்தில் சாதிப்பிரிவினைகள் அதிகம் இல்லை.
அதிலும் இன்றைய ஈழப்போராட்டம் சாதிகள் என்கின்ற
இழிநிலைகளைக் கடந்து எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இதை உணராமல் எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர்
ஏதோ புலம்புகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நதி,
இந்த ஆரோக்கியமிழந்த சிலரின் அலட்டல்களை கேட்பதற்காக உங்களின் நேரத்தையும்,
நல்ல மனநிலையையும் பறி கொடுத்துள்ளீர்கள் அதற்காக அனுதாபப்படுகிறேன்.

வல்வை சகாறா said...

முன்பு அனுப்பிய மடலில் ஒரு வரியைத் தவறவிட்டுவிட்டேன் இதில் இணைத்துள்ளேன்



தமிழ்நதி,
எங்கள் இனமே ஒரு இனவாத அரசின் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடந்து,
வாழ்க்கைக்காகத் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,
புலம் பெயர் தேசங்களில் வந்து எங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவுடன்
தாயகமக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வுபற்றித் தெரிந்த விடயந்தானே,
ஆதலால்,
நாம் பெண்களுக்கு எதிரான இனவாத அரசபடைகளின் வன்முறைகளைப்பேசாது,
பெண்களுக்கெதிரான மற்றைய வன்முறைகளைப் பேசுவோம் என்று
கண்ணெதிரே ஒவ்வொரு மணித்துளியும் தமிழீழப்பகுதியில்,
இனவாத அரசின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுக்காது விட்டுவிட
நாங்கள் ஒன்றும் புண்ணாக்குத் தின்னிகள் அல்ல,
மனிதர்கள் அதிலும் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் உயிர்ச்சிதறல்கள்.

மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்
சிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்
மார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்
மானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க!!!
எங்களுக்கு அவசியம் இல்லை.

ஒருவேளை,
பெண்ணியம் என்பதற்கு எமக்கு அர்த்தம் தெரியாமல் உள்ளது என்று எவரேனும் நினைக்கக் கூடும்.
நினைத்தாலும் எம்போன்றவர்கள் கவலைப் படப்போவதில்லை.
வேதங்களை ஓதிக் கொண்டு வீதியிலே அம்மனை அம்மணமாக விடுவதற்கு
நாங்கள் நாகரீமற்ற காட்டுமிராண்டிகள் அல்ல.

பேச்சளவில் மாநாடு வைத்து ஒப்புக்குக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவிட்டு,
காணாமல் போய் மீண்டும் இன்னொரு சந்திப்பில் எத்தகைய கட்டுரையை எழுதலாம் என்றிருப்பவர்களல்ல நாம்.
அக்கையும், தங்கையும் பக்கத்துவீட்டுப் படித்த தோழியும்
எம்நாட்டில் இனவாத சிங்கள இராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை அல்லாடி அல்லாடி
வாழ்க்கைச்சுழலில் மாய்வதைத் தடுக்கக் காப்புச் சுவர்களாய் எழுவதே எங்களுக்கானதான இன்றையநிலை.

எம் வீட்டில் சாவு.... எதிர் வீட்டில் போய் நிர்வாணக்கூத்துப் பார்க்க எம்மால் முடியாது.

இனம், மொழி, நாடு என்று அத்தனையையும் அப்பால் தள்ளிவிட்டு,
அம்மணமாய் திரிவதற்கு நாங்கள் நிர்வாணிகள் அல்ல.

விடுதலைப்புலிகள் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஏதோ ஒருசில வேதாளங்கள்
27பேர் உள்ள அவையில் கூக்குரலிடலாம்.
வேதாளங்களுக்கு முருங்கைகளைத் தவிர வேறென்ன தெரியும்?

விடுதலைப் புலிகளின் தாயகப் போராட்டமே,
நீண்ட காலமாக அடுப்படியில் நெருப்பிற்குள் தீய்ந்தும்,
படுக்கையறையில் ஆணியத் திமிருக்குள் மிதியுண்டும் கிடந்த பெண்களை
வெளியே தலைநிமிர்த்தி ஆண்களுக்கும் ஆணையிடும் ஆளுமையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது
என்பது இந்த உலகமே அறிந்த உண்மை.

இந்நிமிர்வைப் பற்றி அறியாத அல்லது
அறியவில்லை என்று அடம் பிடிக்கும் சிலரின் ஊனக்கண்களை என்ன என்பது?
கட்டுரைகளை எழுதத் தெரியும் என்பதற்காக யதார்த்தங்களை மூடி மறைத்து
தத்தமக்குச் சாதகமாக எழுத நினைத்தலே அவர்களை அடையாளங்காட்டும் கண்ணாடி என்பதே உண்மை.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் 'தலித்" அண்மைக் காலங்களில் எம்ஈழத்து மாற்றுக் கருத்தாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.
இவர்கள் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?
இந்தியாவில் உள்ளது போன்று எம் ஈழத்தில் சாதிப்பிரிவினைகள் அதிகம் இல்லை.
அதிலும் இன்றைய ஈழப்போராட்டம் சாதிகள் என்கின்ற
இழிநிலைகளைக் கடந்து எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இதை உணராமல் எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர்
ஏதோ புலம்புகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நதி,
இந்த ஆரோக்கியமிழந்த சிலரின் அலட்டல்களை கேட்பதற்காக உங்களின் நேரத்தையும்,
நல்ல மனநிலையையும் பறி கொடுத்துள்ளீர்கள் அதற்காக அனுதாபப்படுகிறேன்.

Anonymous said...

1.
//
‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்'
//
தேவதாசன் என்ற கட்டுரையாளரின் ஈழத்து தலித்துக்களைப் பற்றி பார்வையை காலவதியான பார்வையென்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள். அவரது பதில்கள் கிண்டல் தொனியில் விமர்சித்திருக்கிறீர்கள். சரி.

நீங்கள் உதராணமாகத் தந்திருக்கும் கூற்றில் சாதித் துவேசம் மேலேங்கியிருப்பதை உங்கள் கவனிக்க முடியவில்லை. இங்கே 'அப்பன்' என்பது கடவுளை. 'சுப்பன்' என்பது யாரை? ... சாதாரணன மனுசரை என்று மழுப்பலாம். ஆனால், சாதித் துவேசத்தை காட்டிமிராண்டித்தானமாக கடைப்பிடித்த/கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தின் ஆழ் மனதில் இருந்து வரும் கூற்றில் 'சுப்பன்' என்பது ஒரு தலித் என்பதே எனது புரிதல். ஆகா, கடவுளைப் பற்றிக் கதைக்கச் சொன்னால், ஒரு தலித்தைப் பற்றி போய்க் கதைகிறாயே என்பதன் கூற்றில் இருக்கும் துவேசத்தையும் கீழ்மையையும் எந்தவித மீள்பரிசீலனையும் செய்யாமல், போன போக்கில் உங்களது புள்ளிகளுக்கு 'சுவராசியமூட்டுவதுக்கு' காலவதியான சொற்பிரயோகத்திலிருக்கும் கூற்று உங்களுக்கு தேவைப்படுகிறது. ம்..

2.
//இலட்சக்கணக்கான கொலைகளை//

இந்தத் தரவை எங்கே இருந்து பெற்றீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமர்சகர்களின் விமர்சனங்களில் உள்ள மிகைப்படுத்தலை சாடிக்கொண்டே இப்படி மிகைப்படுத்த பட்ட தரவை போனபோக்கில் தருகிறீர்கள். ம்..

சுட்டா விரல்கள் தெரிகிறதா?

தமிழ்நதி said...

பின்னூட்டம் இட்ட நண்பர்களோடு சனி,ஞாயிறு ஓட்டம் முடிந்துதான் பேச முடிகிறது மன்னிக்கவும். கிழமை நாட்களே எனக்கு ஓய்வு:)

மயூரன்,

"நிவேதா போன்றவர்கள் இத்தகைய சாக்கடை அரசியலின் பிரதிநிதிகளும் இல்லை. ஆனால் இளம் சமூக அக்கறையாளர்களான அவர்கள் பயன்படுத்தப்படுவதுதான் கவலை.

என்பதை வழிமொழிகிறேன். ஆனால், அவர்கள் எங்களைவிடத் தெளிவு என்பதால் யோசிக்கவேண்டியதில்லை:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்மதா. என்ன சொல்ல... அவரவர் நிலைகளில் அழுங்குப்பிடி எனும்போது.

"புலி எதிர்ப்பாளர்கள் தைரியமாக புலி எதிர்ப்புப் பிரச்சாரம் என்று சொல்லி சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாமே? ஏன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை."

அதுதான் என் கேள்வியும் ஸ்வாதி. போர்ச்சூழலி்ல் வாழும் தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்க, அதைப் பற்றியெல்லாம் பேசாமல் தவிர்த்தது ஏன்? எது பிரதானமோ அதையல்லவா பேசியிருக்கவேண்டும்?

அற்புதன்,

"ஏன் உங்களைப் போன்றவர்களால் ஒரு பெண்ணிய ஒன்று கூடலை நடாத்த முடியாது?"

சிந்திக்கிறோம். செயலாக்கும் நாள் விரைவில்.

வி.ஜே. சந்திரனுக்கான பதிலில்

"விளையாட்டாக துவக்கு என்று எழுதியதற்கான அச்சிறுவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துக் கதைத்தார் பாடசாலை அதிபர்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவா? அவ்வாறானால் கடைகளி்ல் விளையாட்டுத் துப்பாக்கிகள் பல வடிவங்களில் விற்பனையாகின்றனவே... அவற்றுக்குத் தடையில்லையா? அவை வன்முறையைத் தூண்டாதா?(உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.)

சுமதி,
"தமிழ்நதி அனைத்து ஆய்வுகளையும் மூடி மறைத்து, தனக்குப் பிடிக்காத ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து பதிவு போட்டிருக்கின்றார்கள். இது ஒரு பெண்ணே பெண்கள் மீதான வன்முறையை கொண்டாடிக் கொச்சைப்படுத்துகின்றாரோ என்று என்னை எண்ண வைக்கின்றது."

நீங்கள் என் கட்டுரையை கோபத்தில் சரியாக வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் 'பெண்கள் சந்திப்பை'ப் பற்றி விமர்சனக் கட்டுரை எழுத வரவில்லை. இந்த கலைவிழாக்கள் நடந்து முடிந்தவுடன் 'நாடகத்தில் நடித்தவர் பாத்திரமாகவே மாறியிருந்தார்'என்ற ரீதியில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஒரு நிகழ்ச்சி நிறைவுற்றவுடன் அது உங்கள் மனதில் என்ன உணர்வை விட்டுச் செல்கிறதோ அதை எழுதுவதே முறை. என் மனதில் தங்கியதும் உறுத்தியதும் நான் எழுதியவைதானன்றி வேறில்லை.

"பெண்ணே பெண்கள் மீதான வன்முறையைக் கொண்டாடிக் கொச்சைப்படுத்துகிறாரோ..."என்று சொல்லியிருக்கிறீர்கள். போரில் பெண்ணுடலும் அவர்தம் உணர்வுகளும் அதிகார வர்க்கத்தால் பலியாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் செல்வதுதான் குரூரமான கொண்டாட்டம். 'பெண்'என்ற பொதுமைப்படுத்தலினால் கீழ்மைகளை மூடிமறைக்கலாகாது. நான் இனம் சார்ந்தே சிந்திக்கிறேன். எங்கள் மண்ணில் உள்ள பெண்கள் இரவுகளில் எந்த நம்பிக்கையில் உறங்க முடிகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (அதையும் மீறி வன்கொடுமைகள் நடப்பதுமுண்டு) நீங்கள் நோயை மறந்துவிட்டு மருந்தைக் குறைசொல்கிறீர்கள். 'நாமெல்லோரும் பெண்கள்'என்ற சென்டிமென்ட்டை விட்டுவிடலாம். நாம் கணவர்களின் மனைவிகளும், தந்தைகளின் மகள்களும், மகன்களின் தாய்களும்கூட.

என்ன கிங், நிறைய நேரம் இருக்கிறதா? திரும்பத் திரும்ப வந்திருக்கிறீர்கள். பிரான்ஸ் பிரமுகரைப் பற்றி என்ன எல்லோரும் இவ்வளவிற்கு அக்கறைப்படுகிறீர்கள்:)

சகாறா,

பெயரில் வெப்பம் இருக்கிறதென்றால் குரலிலுமா?

"மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்
சிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்
மார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்
மானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க!!!"

என்று சொல்லியிருக்கிறீர்கள். அவரவர் வசதிப்படி இருப்பதுதானே சுதந்திரம்:) ஓரிரண்டு வரிகளை எடிட் பண்ணிப் போட முயன்றேன். முடியவில்லை.

தர்சன்,

நான் "அப்பனைப் பற்றிக கேட்டால் சுப்பனைப் பற்றிப் பேசுவார்" என்பதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு 'அப்பன்'என்பது உயர்ந்தவனையும் 'சுப்பன்'என்பது சாதியால் தாழ்த்தப்பட்டவனையும் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு எதிர் சந்த ஓசை நயத்திற்காக, அவர் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தரமாட்டார் என்பதை விளக்கக் குறித்ததை இப்படியும் விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்க... ம்... வாசிப்பவர்க்கேற்றபடி விரிவுகொள்கின்றன வார்த்தைகள் இல்லையா தர்சன்? நீங்கள் சொல்கிறபடி எனது அடிமனதில் 'சுப்பன்'என்ற வார்த்தை தலித்தைக் குறிப்பதாகத் தங்கியிருந்து வந்திருக்குமேயானால்.... இல்லை. என்னை எனக்குத் தெரியும். நான் அப்படிச் சொல்லவில்லை.

நான் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறவில்லை. அரச தரப்பின் புள்ளிவிபரங்களுடன் உடன்படுகிறீர்களா? இறந்தவர்கள்(பொதுமக்கள்+போராளிகள்) காணாமற் போனவர்கள் எல்லாவற்றையும் கூட்டினால் இலட்சத்தைத் தாண்டும் என்றே நம்புகிறேன்.

Anonymous said...

// france ல இருந்து ரொம்ப 'முக்கியமான' ஒருத்தரை யாரும் அழைக்கலியே...அவரும் வந்திருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்குமே..//


தமிழ்நதி

இந்த கேள்விக்கு நீங்கள் "அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால் வரமுடியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரோ பெண்கள் சந்திப்பை கடுமையாக
விமர்சித்து பதிவுகள் போட்டிருக்கிறார். உங்களுடைய பதிவின் கீழே இனணப்பும் உள்ளது. அப்படி இருக்க நீங்கள் சொல்வது உண்மையா? அவர் சொல்வது உண்மையா? என்று புரியவில்லை.

குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.

தெளிவு படுத்தவேண்டுகிறேன்.

தமிழ்நதி said...

அனானி நண்பருக்கு,

அந்தப் பிரமுகர் வேறு. இந்தப் பிரமுகர் வேறு. அவர் ஆண். இங்கே எனது பதிவில் இணைப்புக் கொடுத்திருப்பவர் பெண். பார்க்கப்போனால் பிரான்ஸ்தான் தமிழின் பிரதான பிரமுகர்களின் அல்லது பிதாமகர்களின் (பிதாமகள்களினதும்) புகலிடம்போல தோன்றுகிறது இல்லையா?:)

கொழுவி said...

அனானி குறிப்பிட்ட அந்தப் பெண் பிரமுகர் சென்ற வருடம் சந்திப்புக்கு போயிட்டு வந்து தனது விசனத்தை கொட்டியவர். சந்திப்பு குறித்து யாரோ தேனியிலயோ நெருப்பிலயோ எழுதிய கட்டுரையில் பெண்பிரமுகர் தனக்கு புலிகளால் ஆபத்து என சந்திப்பில் சொன்னார் என எழுதியிருந்தவை. அதை வாசித்து அம்மணி சரியா கோவப்பட்டு கண்ணை கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் இனி செத்தாலும் வரமாட்டன் என எழுதியிருந்தவ.

ஆனா ஆரோ ஒருவன் இலங்கைத்தமிழில தன்னை திட்டியதை தனக்கு இயக்கத்தால் ஆபத்து எண்டு அம் மணி சொல்லித்திரிந்தார்.(மாநாட்டில் சொன்னாரா தெரியாது)

அவருக்கு பேசுறதுக்கு மைக் கொடுக்கவில்லையென்ற கோவம் எண்டும் பேசிக் கொண்டார்கள்.

Theepachelvan said...

பெண்கள் சந்திப்பு என்பதை புலிகள் எதிர்ப்பு கூட்டமாக சில பத்திரிகைகள் இங்கு வர்ணிக்கின்றன. அது இன்று நிகழும் போர் துயரங்கள் மீது கவனமற்று அரச பயங்கர வாதத்தை நியாயப்படுத்துவதாய் காட்டுகிறது.

//இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.//
தமிழ்நதி உங்களிடம் அந்த தெளிவு இருந்ததைக் கண்டு நன்றியிடுகிறேன்.

//பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது//

மரணமுகங்களை இன்று இலங்கை அரச பயங்கரவாதம் எமக்கு குத்திவிடுகிறது. புலிகளும் மக்களும் வேறுபாடீன்றி பலி கொள்ளப்படும் குரூர யுத்தத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பதுங்குகுழிகளிலும் துப்பாக்கிமுனைகளிலும் அடங்கி வாழ்கிற ஈழமக்களுக்காக இவர்கள் மௌனமாய் இருந்தலே போதும். மரணத்தைவிட விடுதலை நிம்மதியானது. போர் திணிக்கப்படும் வரை ஈழத்தமிழர்கள் போராடியாக வேண்டும்.

குருதி கசியும் வாழ்விலிருந்து நான் எழுதுகிறேன்


தீபச்செல்வன்