அக்காவின் நீட்டிய கால்களில் படுத்திருந்து அவள் பிசைந்து ஊட்டிய மீன்பொரியல், சொதி, சோற்றைச் சாப்பிட்ட நாட்களில் மெல்லிய குரலில் அக்கா பாடியது என்ன பாடல் என்பதை உணரும் வயதில்லை. ஆனால் அவள் குரலும் இழுவையும் நினைவிலிருக்கிறது. மரணத்தை ஒரு குப்பி வழியாக அவள் ஊற்றிக் குடித்து இல்லாமல் போனபிறகும் ‘ங்….ங்…’என்ற கமகம் மனம் நொய்மையடைந்த பொழுதுகளில் ஒலித்து அழவைத்திருக்கிறது. அது மீன்பொரியல் வாசனையோடு கூடிய இசையாக இருந்ததென்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
பெரும்பாலும் பாடல்களும் புகைப்படங்களும் நாட்குறிப்புகளும்தான் இறந்தகாலத்தை மீள அழைத்துவந்தன; வருகின்றன. ஒரு புத்தகக் கடையில் அன்றேல் கண்காட்சியில் எவ்வாறு காலத்தைப் பற்றிய கவனம் அறுந்துபோகிறதோ அங்ஙனமே புகைப்பட ‘அல்பம்'களையும் நாட்குறிப்புகளையும் புரட்டும்போதும் கடிகாரம் நின்றுவிடுகிறது. அன்றேல் அவற்றின் மீது காலுந்தி ஒரே எட்டில் பின்னோக்கிப் போய் விழுந்துவிடுகிறோம்.
குறிப்பாக பாடல்கள் நம்மை நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எய்துவிடுகின்றன. தேங்கிய ஏக்கங்கள் வழிந்தோட மடைவெட்டிவிடுவன பாடல்கள்தாம். ஒலிக்கும் வரிகளில் தம்மைப் பொருத்திப் பார்க்காத உள்ளங்கள் ஏது? ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் மரங்கள் சூழ்ந்த பள்ளிக்கூட மைதானத்தில் காரணந் தெரியாத சோகத்துடன் அமர்ந்திருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. விஜயமாலினி என்றொரு தோழியின் நினைவு வருகிறது. நட்பு என்றால் என்னவென்ற விளக்கங்களும் விசாரணைகளும் இல்லாத வயதில் அவளுடைய சைக்கிளின் பின்னே அமர்ந்து வயல்வெளிக் காற்று தலை குழப்பப் போனது ஞாபகம் வருகிறது. மேலும் தொலைந்த ஒரு அடிமட்டத்திற்காக அழுததும். கறுப்பில் பளிச்சென்று அழகாயிருந்த விஜயமாலினியின் அக்காவும் அவளது செவிகளில் விழவேண்டுமென்பதற்காகவே நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்தபடியிருந்த பெடியங்களும் நினைவில் வருகிறார்கள்.
‘பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்’ (கீழே சுட்டியுள்ளது) என்ற இந்தப் பாட்டு உண்மையில் நாயகன் நாயகியை வர்ணித்துப் பாடுவதாக அமைந்தது. ஆனால், அந்தக் குரலில் இழையோடியிருக்கும் சோகத்தினால் அதை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/?done_detect
ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம், கரித்துண்டுகளால் பெயர்கள் எழுதப்பட்ட அதன் சுவர்கள், காதல், நண்பர்கள், மாட்டுப் பட்டி, சங்கக் கடை, சாண வாசனை... பாம்பு கொட்டாவி விடும்போது எழும் உழுந்து வாசனை... இவற்றையெல்லாம் எடுத்து வருவன ‘ஒரு தலை ராகம்’பாடல்கள். ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர வாசம்’என்ற பாடலுக்கு நீங்கள் அழுதால் அந்தக் காலத்தில் நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தீர்கள் என்று பொருள்:) டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் அதிகம் பேசுவதில் எனக்கு உவப்பில்லை. என்றாலும், அவரது பாடல்களின் கவித்துவத்திற்கு நானுமோர் விசிறி.
நீரில் ஒரு தாமரை
என்ற பாட்டு ராஜகுமாரனுக்கு (கணவர்) மிகப் பிடித்த பாட்டு. அதனாலோ என்னவோ எனக்கும் பிடிக்கும். அந்தப் பாடல் கடைசியாக ஒரு விசும்பலுடன் முடியும்.
‘பட்டு வண்ண ரோசாவாம்
இந்திய இராணுவத்தின் முற்றுகையுள் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் இந்தப் பாட்டை அடிக்கடி நாங்கள் கேட்கநேர்ந்தது. வாசற்படியோரம் இருந்த மல்லிகை அவிழ்ந்து மயக்கும் வாசனையை வீசிக்கொண்டிருக்க, இருள் கவிந்த மாலை நேரங்களில் கதவு நிலையின் இந்தப்புறம் நானும் அந்தப்புறம் ராஜகுமாரனும் (அப்போது காதலர்கள்) அமர்ந்திருக்கும்போது நான் அவரைப் பாடும்படி கேட்பேன். மறுக்காமல் ‘பட்டுவண்ண ரோசாவாம்’பாடுவார். ரோந்து வரும் இராணுவத்தின் கடலை எண்ணெய் மணமும் மல்லிகைப்பூ வாசமும் இந்தப் பாடலும் பயமும் கலந்ததான ஒரு வாசனை அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எழுகிறது. நாம் விரும்பிக் கேட்கிற எல்லாப் பாடல்களுக்கும் ஏதோவொரு வாசனை இருக்கத்தான் செய்கிறது.
‘நட்பு’என்ற சொல்லுக்கு எதிரில் ஒரு பெயரைப் பொருளாக எழுதமுடியுமானால் நான் ‘சுகி’என்றே எழுதுவேன். ஆண்டுகள் கடந்தாலும் மாறாத அன்பு அவளுடையது. திருமணமாகி, புலம்பெயர்ந்து பிரிந்து, குழந்தைகள் பிறந்தபிறகும் நீடித்திருக்கிறது எங்களது நேசம். அவளைப் பற்றி எழுதுவதென்றால் தனிப்பதிவுதான் போடவேண்டியதாயிருக்கும். ஒருகாலத்தில் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாயிருந்தோம். அப்போது இருவருக்கும் திருமணமாகியிருக்கவில்லை.
பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)
என்ற பாடல் எங்கே ஒலிக்கக் கேட்டாலும் நினைவில் வருவது சுகியின் உணர்ச்சி ததும்பும் பெரிய கண்கள்தான்.
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா (வருசமெல்லாம் வசந்தம்)
என்ற பாடல் இலண்டன் நகரத்து வேகநெடுஞ்சாலைகளில் சுகியின் குடும்பத்தோடு பயணித்த ஞாபகங்களுள் ஏந்தியெடுத்துச் செல்கிறது.
செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே
என்ற பாட்டை என்ன காரணத்தினால் விரும்பினேன் என்று தெரியாது. எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் :) இப்போதுதான் வந்திருக்கிறது. திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் அது ஒன்றாயிருக்கிறது.
தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள எங்களது சொந்த ஊரில் இருந்தோம். எங்காவது போராளிகள் வீரச்சாவடைந்தால் சந்தியில் ஒலிபெருக்கி வழியாக சோக இசை அன்று முழுவதும் வழிந்துகொண்டே இருக்கும். அதைக் கேட்கக் கேட்க சாப்பிடவும் மனம்வராது. ஒரு வேலையும் ஓடாது. அந்தக் காலகட்டத்தில் விடுதலை தொடர்பான பாடல்களே எங்களை அதிகமாக ஈர்த்திருந்தன. பாடல்கள் ஒருவகையில் உணர்ச்சிவழி செலுத்துபவை. விடுதலைப் பாடல்களைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்களுள் எனது நண்பர்களில் சிலரும் அடங்குவர்.
‘காகங்களே… காகங்களே…காட்டிற்குப் போவீங்களா?- காட்டினிலே எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீங்களா?’
என்று ஆரம்பிக்கும், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் வெளிவந்த பாடல் அன்று குழந்தைகளின் உதடுகளில் உலவித்திரிந்த பாடலாகும்.
‘வீசும் காற்றே தூது சொல்லு-தமிழ்நாட்டில்
இங்கு குயிலினம் பாட மறந்தது
என்ற வரிகளுடன் வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த பாடல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் நாங்கள் சேதி சொல்லிக்கொண்டுதானிருக்கிறோம். தமிழகத்தின் செவிகளில் அரிதாகத்தான் விழுந்துகொண்டிருக்கிறது.
‘தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என்ற பாடலையும் வாணி ஜெயராம்தான் பாடியிருந்தார். அவரது கணீரென்ற குரலில் மனசுள் இறங்கிய பாடல் அது. மேற்கண்ட மூன்று பாடல்களும் ஒரே இசைப்பேழையில் இடம்பெற்றிருந்தன. அதன் பெயர் நினைவின் தடங்களிலிருந்து அழிந்துபோயிற்று. அறியத் தந்தால் மகிழ்வேன்.
‘அடைக்கலம் தந்த வீடுகளே
போன்ற பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோய் போராளிகளை அரவணைத்த வீடுகள் அநேகம். ‘எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதரர்கள்’ என்ற பிணைப்பைத் தந்ததில் பாடல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘பிள்ளைகள் வருவார்கள்’என்று சோறு குழைத்து வைத்துவிட்டு இருளை வெறித்தபடி இரவிரவாகக் காத்திருக்கும் இரத்த உறவில்லாத அன்னையர்களையும் சகோதரிகளையும் கொண்ட மண் அது.
வன்னியிலிருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை-பாடகர் சாந்தன், கவிஞர் காசி ஆனந்தன் - பாடகர் தேனிசை செல்லப்பா என்ற இரண்டு பேர் இசையிணைவில் அற்புதமான பாடல்கள் பிறந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் முருகன்மேல் எழுதப்பட்ட நிந்தாஸ்துதிப் பாடல்களை உள்ளடக்கிய ‘நல்லை முருகன் பாடல்கள்’என்ற இசைத்தட்டு மிகுந்த வரவேற்பை புலம்பெயர்ந்த ஈழத்தவர் மத்தியில் பெற்றிருந்தது.
புலம்பெயர்ந்து குளிரில் கொடுகி சொற்பகால வெயிலில் உலர்ந்து வாழ்ந்திருந்த காலங்களில் விடுதலைப் பாடல்கள் சோறும் தண்ணியுமாயிருந்தன. இசை எங்கள் தாயகத்தை வரிகளாய் காவி வந்தது.
‘மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்தடையில்லை
……………………………...
ஊருக்குத் திரும்பிச் செல்லமுடியாத ஆற்றாமையுடன் மேலைத்தேசங்களிலும் அயல்நாடுகளிலும் வாழ்ந்திருந்த இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்தான் பாடலாக வழிந்தது. அந்தப் பாடலை கவிஞர் காசி ஆனந்தன் எழுதியிருந்தார். எங்கள் பிரியத்திற்குரிய தேனிசை செல்லப்பா பாடியிருந்தார்.
நூற்றாண்டுகளாய் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் வழிமறித்துக் கிடந்த ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து ‘ஆனையிறவு’என்றொரு இசைப்பேழை வெளியிடப்பட்டது.
'வந்தார்கள் வென்றார்கள் என்றார்கள் அந்நேரம்
என்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் மெய்சிலிர்த்தோமென்றால், அது சற்றும் மிகையன்று. ‘புல்லரிச்சு… மெய்சிலிர்த்து…’என்றெல்லாம் தேய்ந்த சொற்களை மேலும் தேய்க்க மனதில்லாதபோதிலும் கட்டாயத்தேவை நிமித்தம் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.
வெளியே பனிகொட்டிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் நாங்கள் ஒரு பாடலைக் கேட்டோம். பத்திரிகையை விடியற்காலையில் பதிப்பகத்திற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் எழுத்துக்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பாடல் சூடான கோப்பியைப் போல உள்ளே இறங்கியது. அதைக் கேட்டதும் நாங்கள் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்பதான ‘மிதப்பு’ எங்களுக்கு வந்துவிட்டது. நித்திரையும் களைப்பும் பறந்துபோயிற்று. பிறகு கொஞ்சநாட்களுக்கு அந்தப் பாடல் எங்களோடு பத்திரிகை அலுவலகத்தில் வாழ்ந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடலை எழுதியிருந்ததாக ஞாபகம். (தவறெனில் திருத்தவும்)
நண்பா நண்பா நலந்தானா…
என்னை ஈர்த்த பாடல்கள் பற்றி பொதுவாக ஒரு பதிவெழுத வெளிக்கிட்டு ஈழப்பாடல்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நிற்பதை உணரமுடிகிறது. நீரோட்டத்தின் திசையில் பூ ஓடுவதைப்போல… நினைவின் திசையில் எழுத்தும் பயணிக்கிறது போலும்.
நாடிழந்து அன்றேல் நாட்டைப் பிரிந்து அலையும் துயரினாலோ என்னவோ அவ்வாறான பாடல்களில் ஒட்டிக்கொண்டுவிடுகிறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், அதில் இடம்பெற்ற ‘விடைகொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே’என்று ஆரம்பிக்கும்போதே (கவிஞர் வைரமுத்து எழுதியது) இமையோரம் கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. கைத்தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டால் அந்தப் பாடலே முதலில் பதிலளிக்கும். அதேபோன்று துயரைக் கிளர்த்தும் பாடலொன்று ‘அரண்’ படத்தில் (கவிஞர் பா.விஜய் எழுதியது) இடம்பெற்றிருக்கிறது. அதையும் பாடியவர் மாணிக்க விநாயகம் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கிராமிய மணம் வீசும் கரகரத்த அந்தக் குரல் மனசைக் கரைக்குந் தன்மையது.
‘அல்லாவே எங்களின் தாய்தேசம்
கவிஞர் பா.விஜயின் தடித்தடியான புத்தகங்களைப் பார்த்து (ஒரே சமயத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன) ‘பயந்து’போயிருந்த நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்தப் பாடலைக் கேட்டபிறகு அவர் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றொரு நம்பிக்கை வந்திருக்கிறது.
‘எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ விதவைகள் பார்த்து அழத்தானா?’
என்ற வரி சில நண்பர்களால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டது.
இப்போது கவிஞர் தாமரையின் வரிகளில் கரையும் காலமாயிருக்கிறது. கேட்கும்போதே ஒரு பாடல் பிடித்துப்போனதென்று அதன் நதிமூலம் அறியப் புகுந்தால் அதை எழுதியவர் கவிஞர் தாமரையாக இருக்கக் காண்கிறேன். இது என்னளவில் இனிய வியப்பாகத்தான் இருக்கிறது. அதை இரண்டாகப் பெருக்குகிற இன்னொரு விடயம் யாதெனில், அதை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பதுதான். எனக்கு குரல்களைப் பிரித்தறியத் தெரியாது என்ற வகையில், அதெப்படி தாமரையின் வரிகளும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும் இணையும் பாடல்கள் பிடித்துப்போகின்றன என்பது இன்றுவரை தீரா வியப்புத்தான்.
பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)
ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே… (காக்க காக்க)
கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்)
வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)
இவ்வாறாக பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, எப்போதும் சாத்தியமற்ற ஆதர்ச உலகை விரும்பி சில பாடல்களைக் கேட்பதுமுண்டு. அவற்றுள் ‘மாயாவி’படத்தில் இடம்பெற்ற ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’என்ற பாடல் மிக மிக நேசத்திற்குரியதாக இருக்கிறது.
பாடல்கள் மாற்றி மாற்றி எறியும் நிலவெளிகளுள் விழுந்து அந்தப் போதையில் கண்கிறங்கிப் பின் எழுந்து தெளியும்போது விரியும் உலகம் பயந்தருவதாகவும் குரூரமானதாகவும் பாதுகாப்பாற்றதாகவும் வஞ்சனை நிறைந்ததாகவும் இருக்கிறது. இசை ஒரு தற்காலிக தப்பித்தல்தான். புத்தகங்கள் மற்றும் எழுத்தும்கூட. பாடல்கள் மீது பிரியம்தானென்றாலும் மலையிலிருந்து வழியும் தண்ணீரின் ஓசைக்கு இணையான ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை.