2.26.2009

தடுப்பு முகாம்கள்


சூரியன் மஞ்சளாய் சரியும்வேளையில்
கொலைக்களத்திலிருந்து புறப்படும் இராணுவ வாகனங்கள்
உயிருள்ள பிணங்களை
வீதியோரத்தில் கொணர்ந்து கொட்டுகின்றன.
இரவானதும்
தடுப்புமுகாம்களின் கம்பிவேலிகளுள்
இடமாற்றப்படுகின்றவர்களின்
அகலவிரிந்துறைந்த கண்களுள்
விழுந்துகொண்டிருக்கின்றன
சடலங்கள் மேலும் பல சடலங்கள்

‘மீட்கப்பட்டவர்களை’ஓளியிழை நாடாக்கள்
அவசரமாய் விழுங்குகின்றன.
நியாயப்படுத்தல்களுக்கு
முற்கூட்டியே தயாராயிருக்கும் பெருந்தகையீரின்
நிறைவான தலையசைப்பினை
புகைப்படக்காரனே! கவனத்திற் கொள்க.
ஒரு குழந்தையை கிச்சுக்கிச்சு மூட்டியேனும் சிரிக்கவை.
உணவருந்திக்கொண்டிருக்கும்
வயோதிப மாதொருத்தியின்
நன்றிப்பெருக்கில்
குவியட்டும் காமெராக்கண்.

கம்பிச்சுருள்களாலும் ஆட்காட்டிகளாலும்
வடிகட்டப்பட்ட சொற்களிலிருந்து
மகனைக் குறித்தொரு
தகவலும் கிட்டாமல்
நடைதளர்ந்து திரும்புகிறாள் தாயொருத்தி!

விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்
தேவதைகளின் முன்
முதலில் நீட்டப்படுவன துப்பாக்கிகள்
பிறகு....
உளியாய் பிளந்திறங்கும் குறிகள்!

தடுப்புமுகாம் சுவர்களின் சுற்றளவுக்குள்
தாயக எல்லைகளைச் சுருக்கிவிடும் சிரிப்பு
கன்னக்கதுப்புள் ஒளிந்திருக்க
தொலைக்காட்சியில் அழுதுவடிகின்றன நரிகள்.

அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும்
அரச நிருபத்தை
கவனமாய் மிகக் கவனமாய்
பரிசீலி்த்துக்கொண்டிருக்கிறது சர்வதேசம்.

நன்றி: உயிரோசை

5 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கவிதையை உயிரோசையில் படித்தபோதே பதறித்தான் போனேன்.

அதுவே இங்கும்.

எப்போதும் நெஞ்சம் கனக்கச் செய்யும், வலியுரிக்கும் வார்த்தை சாட்டைகள்.

ம்ஹீம்
ஒரு பெருமூச்சைத் தவிர, ஏதும் செல்ல இயலாதவளாய்.

தமிழ்நதி said...

அமித்து அம்மா,

இது நீங்கள் போட்ட பின்னூட்டத்தைப் பற்றியதல்ல. அதெப்படி அலுக்காமல் சலிக்காமல் எனக்கு வந்து பின்னூட்டம் போடுகிறீர்கள். தருவதைத் திருப்பித் தராமலேயே... மகிழ்ச்சியாக இருக்கிறது... உங்களைப் போல வாசிக்கிறவர்களைப் பார்த்தால். உங்கள் அமித்துவை யாராவது புகழ்ந்து கொஞ்சும்போது உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல...

வலிகளையன்றி வேறு வரிகளை எழுத முடிவதில்லை இப்போதெல்லாம்.

சந்தனமுல்லை said...

மனம் கனமாகிப் போனது...:(

Anonymous said...

//விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்
தேவதைகளின் முன்//

அவர்கள் பெண்களாகவே இருக்கட்டுமே அம்மா?

தமிழ்நதி said...

நன்றி சந்தனமுல்லை,
என்ன சொல்வது? மனம் கனக்க வைக்கும் பதிவுகளை எழுதும் காலமாயிற்று இது.

அனானி,

"அவர்கள் பெண்களாகவே இருக்கட்டுமே அம்மா?"

என்று சொல்லியிருந்தீர்கள். 'தேவதை'என்ற சொல்லை எழுதும்போது நானும் சிறிது யோசித்தேன். ஆனால், முகாம்களில் அழகாக இருக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்து இராணுவத்தினர் விசாரணைக்கென அழைத்துப் போவதாக என்னோடு பேசியவர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால்தான் சிறிது யோசித்தபின் 'தேவதை'என்ற சொல்லைப் பிரயோகித்தேன். ஆனால், தேவதைகள் அழகாக இருக்குமா? அவலட்சணமாக இருக்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை:) தேவதை என்றால் அழகு என்று சொல்லிவைக்கப்பட்ட பொருளையே நானும் தொடர்ந்தேன். தவிர,அழகு என்பது அவரவர் பார்வையில் மாறுபடுமாகையால் 'அழகு'ம் விவாதத்திற்குரியதே. நீண்ட கூந்தல், உயரம், நிறமாக இருப்பது இப்படிச் சிலவற்றைக் காலகாலமாகச் சுட்டுகிறார்கள். கறுப்பில் அழகான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பழகும் தன்மையே அழகு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. கூர்ந்த விமர்சனத்துக்கு நன்றி.