2.19.2009

போர்க்களமானது சென்னை உயர்நீதிமன்றம்:வழக்கறிஞர்கள்-காவற்துறையினர் மோதல்

நேற்றிரவு இடப்பட்ட இந்தப் பதிவு என்ன காரணத்தினாலோ தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. எனக்கும் வைரசுக்குமான போராட்டத்தில் அது என்னைத் தோற்கடித்திருக்கலாம். மீள்பதிவாக முயற்சிக்கிறேன்.

முத்துக்குமார் தன்னைக் கொளுத்தி தமிழக மக்கள் மனங்களில் ஒரு சுடரை ஏற்றிவைத்துவிட்டுப் போனான். அது இத்தனை தூரம் பற்றிப்படருதல் கூடுமா என்பதில் அவனுக்கே கூட ஐயம் இருந்திருக்கும். ஆனால், நிறையப் புத்தகங்களில் அவன் அதிசயங்களை வாசித்திருப்பான். அதிசயங்கள் தமிழகத்திலும் நடக்கலாமென கனவு கண்டிருப்பான். அதனால்தான் அத்தனை தெளிவாய், தீர்மானமாய், அவ்வளவு நிதானமாய் திட்டமிட்டு ஒரு கடிதத்தை எழுதிவைத்து மிக அழகாய் செத்துப்போனான். சாஸ்திரி பவனின் முன்னால் தனதுடம்பில் முத்துக்குமார் வைத்த தீ, இன்று சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் பற்றியெரியப் பார்த்தோம்.

“காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டம் என்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதரவான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும் (சட்டக் கல்லூரி மாணவர்கள்) வழக்கறிஞர்களும்தான்” என்று எழுதிவைத்துப் போனான் முத்துக்குமார். ‘வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே’, ‘காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே’, ‘நம்பிக்கைக்குரிய ஒபாமாவே’ என்றெல்லாம் முத்துக்குமார் நிறையப்பேரை விளித்திருந்தாலும் நன்றாகக் காதுகேட்டதென்னவோ மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும்தான்.

இன்று நடந்தது போன்ற அல்லோலகல்லோலத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் என்றும் கண்டிராது. பெருந்தகையாளர் சுப்பிரமணியசுவாமி அவர்கள் மீது முட்டை வீசிய குற்றத்திற்காக வழக்கறிஞர்கள் பதினாறு பேர் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்யத் தேடியிருக்கிறது காவற்துறை. ‘சுப்பிரமணியசுவாமி மீது நான் ஒரு வழக்குப் போட்டிருக்கிறேன். அவரைக் கைதுசெய்துவிட்டு எங்களைக் கைதுசெய்ய வாருங்கள்’என்றிருக்கிறார் ஒரு வழக்கறிஞர். முதலில் சொற்கள் பறந்திருக்கின்றன. பிறகு இரு தரப்பிலிருந்தும் கற்களும் செருப்புகளும் பறக்கவாரம்பித்தன. உடனடியாக மேலதிக பொலிசார் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்த பொலிஸ் நிலையத்திற்கு வழக்கறிஞர்கள் தீ வைத்துவிட்டார்கள். நெருப்பிற்கு கைதுசெய்யப்படுவோமென்ற அச்சமில்லை. அது ஆயிரம் நாக்குகளால் எரியவாரம்பித்துவிட்டது. அணைக்க வந்த தீயணைக்கும் படையினரையும் வழக்கறிஞர்கள் ‘போங்கய்யா வேலையப் பாத்துக்கிட்டு’என்றுவிட்டார்கள். வழக்கறிஞர்கள் கல்லை விட்டெறிய பதிலுக்கு பொலிசார் கல்லை விட்டெறிய இடைநடுவில் கிடந்தது பதினைந்தடிக்கும் குறைவான தூரம். நீதிமன்ற வளாகத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றன பொலிசாரின் லத்தியால் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்கள் மட்டுமல்லாது வழக்கறிஞர்களின் மண்டைகளையும் பதம்பார்த்தன லத்திகள். போதாக்குறைக்கு செய்தியாக்க வந்த நிருபர்மீதும் சட்டம் பாய்ந்திருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் சேதுராமன், தமிழ்ச்சுடர் நிருபர், என்.டி.ரி.வி. செய்தியாளர் மதுபாரதி இவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த கல்லால் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு மண்டையில் காயம். எதிரெதிர் நின்று ஒருவரையொரு கற்களாலும் சொற்களாலும் தாக்கிக்கொண்டிருந்ததுபோய், திடீரென்று பொலிசார் வழக்கறிஞர்களை நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். பிறகு லத்திகள், காப்புத் தடுப்புகள் சகிதம் வழக்கறிஞர்களை நோக்கிப் பாய்ந்தோடினார்கள். வழக்கறிஞர்கள் பின்னடைந்து நீதிமன்றக் கட்டிடத்தினுள் புகுந்துகொண்டார்கள். அங்கு வைத்து வழக்கறிஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. துணை ஆணையர் உட்பட 20 பொலிசாருக்குக் காயம் என்று செய்தி சொல்கிறது. வழக்கறிஞர்களில் எத்தனை பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. உடைக்கப்பட்ட கார்களின் முன்நின்று ‘பொலிஸ் அராஜகம் ஒழிக’என்று சிலர் கத்திக்கொண்டிருந்தார்கள். ‘மக்களையோ செய்தியாளர்களையோ உள்ளே விடாமல் வாயில்களெல்லாவற்றையும் பொலிசார் மறித்துநிற்கின்றனர். எமர்ஜென்சி சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது போலிருக்கிறது’என்கிறார் ‘களத்திலிருந்து’ சகபதிவரும் நிருபருமான நண்பர் ஒருவர்.

‘தி.மு.க. அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துபோய்விட்டது’என்று வருந்துவதற்கு ஜெயலலிதா அம்மையாருக்கு மேலும் ஓர் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
‘வழக்கறிஞர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும்’என்று ஆட்சியாளர் தரப்பில் சொல்லப்படலாம்.
‘பயங்கரவாதத்திற்கு வழக்கறிஞர்கள் துணை போகிறார்கள்’என்று நாளை ஹிந்து எழுதும்.
நான்கைந்து பதிவுகள் இதுதொடர்பாய் இடப்படும்.
அனைத்து பத்திரிகைகளிலும் நாளை தலைப்புச் செய்தியாக இதுவே இடம்பெறும்.
தொலைக்காட்சிகள் கொஞ்ச நாட்களுக்கு தத்தம் சார்புநிலைக்கேற்ப இப்பிரச்சனையைப் பேசிக்கொண்டிருக்கும்.
இப்படித்தான் இது நடக்கும் என்று எல்லாவற்றையும் எழுதிவிட முடிகிறது முத்துக்குமார் போன்ற அசாதாரணர்கள் வந்து அசைக்கும்வரை.

9 comments:

kalyani said...

நன்றி அக்கா.இப்போதெல்லாம்.பாடுவதை விட பாடலை இரசிப்பதே பிடித்திருக்கு. அதுபோல இணையத்தில் எழுதுவதை விட வாசிப்பதே மிகப் பிடித்திருக்குது.மனதில் சொல்ல நினைப்பவற்றை எல்லாம் அழகாக ஒரு மாலையைப் போல தொடுக்கும் கலையை உங்களைப் போல என்னால் செய்யமுடியாது.ஆம் அக்கா நிறைய ஒற்றுமைகள் தான் அதனால் தான் உங்களையும் இராஜன் அண்ணாவையும் மிகவும் பிடிக்கும்.

இந்திய காவல் துறையினரின் போக்கு அதிகார வர்க்கத்தின் கைகளிலேயே எப்போதும் தங்கியிருக்கும்.ஆனால் சட்டத்தை கற்றறிந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருப்பது முத்துக்குமாரின் கனவைக் களங்கப்படுத்தி விடுமோ என்று கலக்கமாக இருக்கிறது.

தமிழ்நதி said...

"அழகாக ஒரு மாலையைப் போல தொடுக்கும் கலையை உங்களைப் போல என்னால் செய்யமுடியாது."

பார்த்து... யாராவது வந்து வாசித்தால், 'இவிய்ங்க இப்பிடித்தான் மாத்தி மாத்தி புகழ்ந்துக்குவாய்ங்க போல'என்று சொல்லிவிடப் போகிறார்கள்:)

"ஆனால் சட்டத்தை கற்றறிந்தவர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருப்பது முத்துக்குமாரின் கனவைக் களங்கப்படுத்தி விடுமோ என்று கலக்கமாக இருக்கிறது."

அவ்வாறு கலங்கவேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன். வழக்கறிஞர்கள் நம்மைவிடச் சட்டம் தெரிந்தவர்கள். தெளிவாகத்தான் இருக்கிறார்கள். தமிழர்களுக்கெதிராகத் தொடர்ந்து பேசிவருகிற சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசித் தமது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்துவதா என்று அரசாங்கம் கடமையை(?)ச் செய்யப் புறப்பட்டிருக்கிறது. அதற்கெதிரான தமது உணர்வுகளை வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தினார்கள். அப்போது அவர்கள் நடந்துகொண்டதை வன்முறைக்குள் வரையறுக்க முடியவில்லை. ஏனெனில், அநீதிக்கெதிரான ஆவேசம் வன்முறையாகாது. அப்படிப் பார்த்தால் நசுக்கப்படுகிறவர்களின் போராட்டங்களெல்லாம் வன்முறையாக அன்றோ பொருள்கொள்ளப்படும்? மேலும், அதிகாரம் தோற்றுப் போகவேண்டுமென்றே நாமெல்லோரும் விரும்புகிறோம். அதனால் மக்கள் எல்லோரும் நலிந்தோர் பக்கமே இருப்பர். முத்துக்குமார் மூட்டிய தீ உயர்நீதிமன்றம் வரை பரவியிருக்கிறது. இதைத்தான் அந்த உன்னதமான இளைஞன் எதிர்பார்த்தான். எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது:) (உங்கள் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் வாசகம்தான் கல்யாணி)

காந்தனும் நீங்களும் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? தனிமடலிடுங்கள். tamilnathy@gmail.com

kalyani said...

ஆனாலும் சுப்பிரமணியசுவாமி போன்ற மட்டமான அரசியல்வாதியிடம் ஆவேசத்தைக் காட்டுவது எம் மீது நாமே சேறை வாரி இறைப்பது போல் ஆகாதா?இதில் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ப இவ்விடயத்தை பயன் படுத்திக்கொள்வார்கள்.அடக்கப்பட்ட இனமாகிய நாங்கள் எம் ஆவேசத்தை இம் முறையில் வெளிப்படுத்துவதை, அதிகாரவர்க்கம் வன்முறை என்ற பிரிவுக்குள் அடக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.முத்துக்குமார் மூட்டிய தீ உயர்நீதிமன்றம் வரை எரிந்தால் மட்டும் போதுமா?அந்த விடுதலைத்தீ உலக நாடுகள் எங்கும் மூண்டெரிய வேண்டும்.அதற்காகதானே எங்கள் தலைவர் இத்தனை பொறுமை காக்கின்றார்.அவரது ஆவேசத்தை வெளிப்படுத்தி இருந்தால் இன்று இராணுவம் நினைத்ததை சாதித்திருக்குமே?ம்ம்,எங்கள் போராட்டத்தை எவ்வகையிலும் யாரும் திசை திருப்பிவிடக்கூடாது என்ற ஆதங்கம் தான்.

தமிழ்நதி said...

கல்யாணி,

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எழுச்சி பெறவேண்டுமென்பதற்காகவும் அங்கீகாரத்திற்காகவும் தலைவர் காக்கும் பொறுமையில் நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அநீதிக்கெதிராக பொறுமை காப்பது என்பது அடங்கிப்போகவும் அடக்கப்படவுமே வழிவகுக்கும். ஏனென்றால், இத்தகைய எழுச்சி தமிழகத்தைப் பொறுத்தளவில் 'வாராது வந்த மாமணிபோல'ஒரு அபூர்வமாக வந்திருக்கிறது. என்ன வகையிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை இல்லாதொழிப்போம், முத்துக்குமார் மூட்டிய தீயை அணைத்தே தீருவோம் என்று திட்டமிட்டு, கங்கணம்கட்டிக்கொண்டு சிலர் செயற்படுகையில் வன்முறையைப் பிரயோகித்தேனும் அந்நெருப்பை அணைந்துவிடாமல் காப்பதன்றி செய்வதற்கொன்றுமில்லை.

"எம் ஆவேசத்தை இம் முறையில் வெளிப்படுத்துவதை, அதிகாரவர்க்கம் வன்முறை என்ற பிரிவுக்குள் அடக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்."என்று சொல்லியிருந்தீர்கள்.

சீமான் என்ன வன்முறையில் ஈடுபட்டார்? கண்மூடித்தனமான தேசியத்தைக் கண்டித்துப் பேசினார். அவரைக் கைதுசெய்யவில்லையா? வைக்கோ தடியெடுத்து அடித்தாரா? அவரை பத்தொன்பது மாதங்கள் சிறையிலிடவில்லையா? சில இடங்களில் வன்முறைதான் வலியைக் களைகிறது. இளைத்தோரின் மெளனம் கொழுத்தோரின் வெற்றியாகிவிடும். உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதிகாரம் என்ன நினைத்திருக்கிறதோ அதிலிருந்து பெயர்த்துத் திசைதிருப்ப இவ்வகைப் போராட்டங்கள்தான் வழிசெய்யும் என்பது எனது நிலைப்பாடு.

Anonymous said...

if u justify lawyers action what's the point of having a law.

do u think all lawyers have the same stance?

Srilankan war is going on for a long time. y these people shouting a lot now a days.

தமிழ்நதி said...

ராஜசூரியன்,

உங்களுக்கு வலைப்பூ கிடையாது.அறிமுகமற்றவர் என்றவகையில் பதிலளிப்பதில் எனக்குத் தயக்கம் இருக்கவே செய்கிறது. என்றாலும் பதிலளிக்காமல் விடுவது நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்குவதாக அமையும் என்பதால் சொல்கிறேன்.

"if u justify lawyers action what's the point of having a law."

என்று கேட்டிருந்தீர்கள். அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கலாமல்லவா? சட்டத்தையும் நீதியையும் காப்பாற்றவேண்டியவர்கள் காவற்துறையினரும் வழக்கறிஞர்களும்தான். இருதரப்பினருக்கும் அந்தக் கடமை இருக்கிறது. வழக்கறிஞர்களின் வாகனங்களை தங்கள் கைகளிலிருந்த லத்தியினால் பொலிசார் தாக்கியதை சாதாரண மக்களாகிய நாங்கள் கண்டோம். வழக்கறிஞர்களைத் துரத்திக்கொண்டு அவர்களைத் தாக்க ஓடியதையும் கண்டோம். நையப்புடைக்கப்பட்ட நிலையில் சில வழக்கறிஞர்கள் இரத்தம் ஓடத் தரையில் கிடந்த கோலத்தையும் காணமுடிந்தது. (இது பொலிசாருக்கும் நடந்ததே) பார்வையாளர்களாகிய எங்கள் மனதில் என்ன பிம்பம் படிகிறது... ஈழத்தில் தினந்தோறும் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள், அதற்கு மாறாகப் பேசிய சுப்பிரமணிய சுவாமியை முட்டைகளால் தாக்கினார்கள் என்பது சரியானதாகவே எங்களுக்குத் தோன்றியது. அவர் ஒரு அரசியல் பிரமுகராக இருக்கும் காரணத்தால் அவரைத் தாக்கிய வழக்கறிஞர்களைச் சிறைப்பிடிக்க அரசாங்கம் நினைக்கிறது. அதற்கு காவல்துறை துணைநிற்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் பெரும்பாலானோர் நலிந்தோர் பக்கம் சாய்வதே இயல்பு. அது சாதாரண கணக்கு. குறிப்பாக, ஈழத்தவராகவும் இருக்கும்பட்சத்தில் எங்களுக்காகப் பேசியவர்கள் அடிவாங்குகிறார்கள் என்ற மனோநிலை ஏற்படுவது இயல்பே அல்லவா?

ஒரு கேள்வி கேட்கிறேன்... இங்கு எல்லாம் சட்டத்திற்கியைபுறவே நடக்கின்றதென நீங்கள் கருதுகிறீர்களா? 'சட்டம் இருப்பது எதற்காக?'என்றொரு கேள்வியை நீங்கள் ஒரு பொருளில் கேட்கிறீர்கள். நான் வேறொரு பொருளில் கேட்கிறேன். 'நியாயமற்றதெனத் தெரிந்தும் அதிகாரத்தின் பால் சாயத் தலைப்படுமாயின் அந்தச் சட்டம் எதற்காக இருக்கிறது?'

do u think all lawyers have the same stance?

தெரியவில்லை நண்பரே! பெரும்பாலானோர் காவற்துறையின் நடத்தையை அராஜகமானதென்றே கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

Srilankan war is going on for a long time. y these people shouting a lot nowa days.

எதற்கும் ஒரு ஆரம்பப் புள்ளி வேண்டும். முத்துக்குமாரின் மரணம் அந்தப் புள்ளியாக அமைந்ததும், முன்னரைக் காட்டிலும் இனவெறி இராணுவத்தின் தாக்குதலுக்கு இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் பலியாவதன் உறுத்தலும் காரணமாக இருக்கலாம்.

அபி அப்பா said...

தமிழ்நதி!

நான் அபிஅப்பா! உங்கள் எழுத்தை இத்தனை நாள் படிக்காமல் இருந்தமைக்கு கொஞ்சம் வெட்கமாகவே உணர்கின்றேன். ரொம்ப அழகா தெளிவா எழுதி இருக்கீங்க. இந்த பிரச்சனையில் யார் மேலே தப்பு என்பது அடுத்தபடி இருக்கட்டும். ஆனா அதை அழகா நீங்க சொன்னவிதம் நல்லா இருக்கு!

அன்புடன்
அபிஅப்பா

சுரேகா.. said...

மிகத்தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

வழக்கறிஞர்கள்- இலங்கைப்பிரசனையில் தீவிரம் காட்டாமலிருப்பதற்காகத்தான் - அவர்களைக்குற்றவாளிகளாக்கி- மக்கள்முன்னால் அவர்கள் போராட்டம் பிசுபிசுக்கவைக்கும் பச்சை அரசியல்தான் நடந்திருக்குமோ என்று பெரும்பான்மையினர் அஞ்சுகிறோம்.

தமிழ்நதி said...

அபி அப்பா,

எனது எழுத்தைப் படிக்காததனால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. வருத்தப்படவேண்டாம். வலைப்பூ என்பது நமக்கெல்லாம் ஒரு வடிகாலாக இருக்கிறது. நானும் சிலரைத்தான் தேர்ந்தெடுத்துப் படிப்பேன். முதல்முதலாக வந்து வருத்தப்பட்டுக்கொண்டா போகவேண்டும்:)

சுரேகா,
"வழக்கறிஞர்கள்- இலங்கைப்பிரசனையில் தீவிரம் காட்டாமலிருப்பதற்காகத்தான் - அவர்களைக்குற்றவாளிகளாக்கி-" ஆம் அதுதான் உண்மை. அவர்களைக் குற்றவாளிகளாக்குவதன் வழியாக அவர்களை இருட்டடிப்புச் செய்யலாம். அவர்கள்மீதான மக்களின் மதிப்பைக் குறைக்கலாம். சில சமயங்களில் அரசியல்வாதிகளின் கூர்மதியை(அது குத்துவதாக இருந்தாலும்) நினைத்து வியக்காமலிருக்கமுடியவில்லை.

facebook இல் வந்து உங்களை எங்கோ பார்த்திருக்கிறேன் பார்த்திருக்கிறேன் என்றேனே... வலைத்தளத்தில் பார்த்திருக்கிறேன். அங்கே மைக்ரோ சுந்தர் என்ற பெயரில் இருப்பது நீங்கள் அல்லவா?