3.20.2009

பழைய கிறுக்கல்கள்-01



அவ்வப்போது கிறுக்கிவைத்த கிறுக்கல்களை பக்கம் நிரப்புவதற்காக வலைப்பூவில் பதிகிறேன்.


யாரோ போலவும்
பிரிவு சொல்வதற்கிடையில்
நகரவாரம்பிக்கிறது புகையிரதம்.
நிலவு பிம்பம் விழுத்திய நீரேரிகளில்
தொடரமுடியாமல் பின்தங்கும் பறவைகளில்
பின்னகரும் மரங்களில்
என்ன பார்க்கிறாய்?
பால்வாசனை முகரும் சாக்கில்
இறுக்கியணைத்து முகம் புதைக்கும்
உன் குழந்தையின் சுருள் முடியில்
பிரிவைச் சொரிந்து போகிறாய்.
ஆளற்ற இம்மேடையில்
சற்றே அமர்ந்து
நெகிழ்த்திவிட்டுப் போகிறேன்
கெட்டித்த துக்கத்தை.
முறையற்ற உறவின்
முடிவற்ற கண்ணீரில்
மூழ்க வேண்டாம்
என் வீடும்.
------------------

தொலைதூர நீல மலைகளைப்போல
துயரம் கிளர்த்துவது ஞாபகம்
எனினும் வசீகரமானது.
எனது காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறேன்
அது அணையாத கானகத்தீ.
எனது கண்களைத் தாண்டி இறங்குமொருவனிடம்…
இந்த அகாலத்தில்
பூங்கொத்தோடு வருபவனிடம் சொல்கிறேன்
‘துயரங்களுக்கு வாழ்க்கைப்பட்டு
முடிந்துபோனவளிடம் இனித் தருவதற்கு ஒன்றுமில்லை’

------------------

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில.
ஈரமனைத்தும் உறிஞ்ச வெயில் வெறிகொண்ட
இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள்
இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

------------------
செல்லும் வழி
கொண்டையூசி வளைவு
குறுக்குப் பாதை
சேர்ந்தபின்
திரும்பிவர ஒரே வழிதான்
காதல் காமம்
எதற்கும்.

6 comments:

யசோதா.பத்மநாதன் said...

உங்கள் அழகிய நேர்மையை முன்னொரு போதில் கண்டேன்.ஞாபகங்கள் தாங்கிய கவி வண்ணம் இங்கு கண்டேன்.

நதி, நீங்கள் திறமையும் கம்பீரமும் கொண்ட பெண் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

நதியினால் வளம் கொழிக்கட்டும் கவிதா சாகரம்.

sooryakumar said...

கிறுக்கல்கள் தானெனினும், ஒரேகவிதைபோல வாசிக்கவும் தோன்றுகிறது. பிரித்து அவ்வப்போது அவரவர்க் கேற்றபடி தனித்தனியாகவும் பார்க்கத் தோன்றுகிறது.
இறுதியில் பெருமூச்சை மட்டும் ஏனோ இழைத்துவிடுகின்றன வரிகள்.
கவியின் சக்தி இதுதானோ.....?

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

பனி நாட்டை ஓர் காலம் கலக்குகிற கவிப்பனியாய் இருந்தீர்கள்.
இடைப்பட்ட காலத்தில் அடடா...
இங்கிருந்த கல்விக் கடவுள்
எங்கே என்று ஏங்கிய நாட்கள் உண்டு. நல்ல நண்பர்களை நாளும் இழக்கின்ற தொல்லைகளே இத் துருவில் தொடர்வதனால் நின்று நிதானிக்க நேரமில்லை. மீண்டும் இன்று
தமிழ்நாட்டில் தாங்கள்
தமிழ்நதியாய்ப் பாய்தல் கண்டு
உல்ளம் மகிழ்கிறது.
வளமான எழுத்தால் வையத்தை செழிக்க வைக்க வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்.

ஆ.சுதா said...

தமிழ்ந்தி நீங்கள் பக்கங்களை நிரப்புவதற்க்காக உங்கள் கிறுக்கள்களை பதிவதாக முன்னுறையிட்டிருந்தீர்கள்
ஆன்னால் உங்கள் கவிதையை படித்து விட்டு அசந்து விட்டேன்
அவ்வப்போது கிறுக்கியவைகளே இப்படியா..
நன்றாக உள்ளது உங்கள் கவிதைகள்

யாத்ரா said...

நெஞ்சு கனக்கிற உணர்வுகளாயிருக்கிறது கவிதைகள், மிகநன்று

அமிர்தவர்ஷினி அம்மா said...

பழைய கிறுக்கல்களாயெனினும் என்ன புளித்துப்போகுமா என்ன எனக்கு உங்கள் எழுத்துக்கள்.

இது பக்கங்கள் நிரப்ப எழுதப்படவில்லை, இன்னும் சற்று இதயத்தோடு நெருங்கி வர எழுதப்பட்டவைப்போலத்தான் தோன்றுகிறது.

கடைசி கவிதை
அருமையெல்லாம் சொல்லமுடியாது அதுக்கும் மேல....

இளவேனிலின் அர்த்தம் ந.குமாரனுக்கு மாதங்கி எழுதுவது படித்தபின் தான் புரிந்தது. கலங்கிப்போனேன் தமிழ்.

உங்களின் ஒவ்வொரு சிறுகதையும் படிக்கும் முன்பு என் மனத்தை கனக்கச்செய்ய தயார்படுத்திக்கொண்டே பின்பு படிக்கத்தயாராகுகிறேன்.